“உங்களை சமாதான பேச்சுவார்த்தைக்கா அனுப்பி வைச்சேன். சீக்கிரம் அந்த கூட்டத்தை கலைச்சு வேலையை முடிக்கிற வழியைப் பாருங்க மேடம்.” கட்டளை பறந்து வந்தது நந்தினிக்கு.

“சர், இங்க பிரச்சினை வேற மாதிரி இருக்குது…” களநிலவரத்தை நந்தினி சொல்ல முயற்சிக்க,

“எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை, நான் சொன்னதை மட்டும் செய்யுங்க.” விஷயம் தெரியாமல் இருந்தால் தானே தெரிந்து கொள்ளும் ஆர்வம் வரும். எல்லாம் தெரிந்து உள்நோக்கத்தோடு தன் பதவியை உபயோகப்படுத்துபவர் நந்தினியை பேசவிடாமல் இடைமறித்தார்.

ஆமாம்… கண்ணன் சொன்னது போல அந்த மக்களின் வீடுகளுக்கு அருகே உள்ள இடம் அரசியல் பெரும்புள்ளிக்காகத் தான் அவருடைய பினாமி பெயரில் பட்டா ஆகியிருந்தது. மக்களின் வீடுகள் இருக்கும் இடங்களையும் சேர்த்து அந்த மனிதர் தனக்கே கேட்க, கண்ணனை அங்கிருந்து அகற்ற முயற்சி செய்ததில் இருந்து, அந்த மக்களை கலைக்க நந்தினியைக் கட்டாயப்படுத்துவது வரை நடக்கும் வேலைகள் அத்தனையும் அந்த அரசியல் வியாதிக்காகத் தான்.

“என்னால முடியாது சர், நீங்க என்மேல எந்த நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை.” சட்டென்று மேலதிகாரியிடம் சொல்லியவள், அவருடைய பதிலுக்கு காத்திராமல் அந்த தொலைத்தொடர்பு சாதனத்தின் இணைப்பை முற்றிலும் துண்டித்துவிட்டு தாசில்தார் முன்னால் வந்து நின்றாள்.

“அதெப்பிடி சர், அந்த பக்கத்து நிலத்துக்கு மட்டும் உங்களால இலவச பட்டா கொடுக்க முடிஞ்சது?” எதிரில் நிற்பவரின் பதவியின் மரியாதையைக் கருதி தன்மையாகவே கேட்டாள் நந்தினி.

“என்னையே என்கொயரி பண்ணுவீங்களா நீங்க? உங்களுக்கு அவ்வளவு பவர் இருக்கா?” தன்னுடைய சாயம் வெளுத்துவிடுமோ என்ற பயத்தில் கோபமாக குதித்தார் அந்த மனிதர்

“இதை விசாரணைன்னு ஏன் நினைக்கிறீங்க? மக்கள் ஒரு விஷயத்தை முன் வைக்கிறாங்க, அதோட உண்மைத்தன்மை தெரிஞ்சா தானே அடுத்து அவங்ககிட்ட நான் பேசமுடியும். அதுக்காக கேக்குறேன்னு நினைச்சுக்கோங்க.” சமாதானமாகவே பேச்சைத் தொடர்ந்தாள் நந்தினி.

“உங்களை இங்க பேச்சு வார்த்தை நடத்தவா கூப்பிட்டிருக்கு மேடம்?” பதிலுக்கு மரியாதையின்றி வந்தது கேள்வி.

“வேற எதுக்கு கூப்பிட்டுருக்கீங்க? நீங்க சொல்லுறதை மட்டும் கேட்டுட்டு மக்களை விரட்டி அடிக்கவா? என்னை என்ன உங்க அடியாள்னு நினைச்சிகிட்டீங்களா?” நந்தினியின் பேச்சில் இப்போது சூடு ஏறியிருந்தது.

“அது… அந்த இடம் கிராம நத்தம் மேடம், அதனாலதான் சார் பட்டா போட்டு குடுத்தாங்க.” இந்த மாதிரியான சூழ்நிலைக்கு அங்கே நின்றிருந்த கிராம நிர்வாக அதிகாரி புதியவர் போலும். எங்கே தானும் மாட்டிக் கெள்வோமோ என்ற பதட்டத்தில் தன்னை மறந்து வார்த்தைகளை விட்டுவிட்டார்.

அவ்வளவு தான், உன்னை யாரடா இதைச் சொல்லச் சொன்னது என்பது போல அந்த மனிதரை தீப்பார்வை பார்த்து வைத்தார் தாசில்தார்.

“ஓஹ்… கிராம நத்தமா?! அப்பிடின்னா அதைத் தொட்டு இருக்குறதா சொல்லுற இந்த இடமும் அந்த வகையின் கீழத்தானே வரும்? அப்போ அதை பட்டா போட்டுக் குடுக்கிறதுல உங்களுக்கு என்ன கஷ்டம் சர்?” நந்தினியின் குரல் லேசாக உயர்ந்திருக்க, அவர்களையே கவனித்துக் கொண்டிருந்த மக்களிடமிருந்து உற்சாக கூச்சல் பலமாக எழுந்தது.

கிராம நத்தம் என்னும் பெயருக்கு கீழ் வரும் இடம் அரசாங்கத்துக்கு கூட சொந்தமில்லாத இடம் தான். அதாவது மக்கள் குடியேற்றத்துக்கு அனுமதி கோரும் போது, எந்தவித தடங்கலும் செய்யாமல் அரசாங்கம் மக்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

கிராம நத்தம் என்றதும் தனக்கு அருகே அமர்ந்திருந்த நபரின் கையிலிருந்த ரசீதின் பதிவுஎண் மூலம் அதனுடைய வலைத்தளத்தில் கண்ணன் முறையாக ஆவணங்களைத் தேடிப்பார்க்க, அந்த நிலம் கிராம நத்தத்தின் கீழ் உள்ளது சிறிது நேரத்திலேயே தெரியவந்தது.

“யெஸ்… இது கிராம நத்தம் தான். அப்புறம் ஏன் இவங்களுக்கு பட்டா குடுக்க மாட்டேங்குறீங்க? யாருக்காக இந்த மக்களை இந்த இடத்துலயிருந்து அப்புறப்படுத்த பாக்குறீங்க?” கோபமாக கேட்டபடியே உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து வேகமாக எழும்பினான் கண்ணன்.

கண்ணன் இந்த மக்களுக்கு தலைமை போல மாறியது எல்லாம் எதேச்சையாக நடந்தது தான். தான் நடத்தும் வழக்கு சம்மந்தமாக ஒருவரை பார்க்க சென்று கொண்டிருந்தவனின் கவனத்தை, ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக சென்று கொண்டிருந்த அரசு வாகனங்களும், பொக்லைன் இயந்திரமும் ஈர்க்க, ஆர்வக்கோளாறு காரணமாக அதன் பின்னால் வந்து விட்டான்.

வந்த இடத்தில் சூழ்நிலையை புரிந்து கொண்டவனுக்கு, அந்த அப்பாவி பாமர மக்களை அப்படியே விட்டுவிட்டு செல்ல மனதில்லாமல் அவர்களோடு போராட்டத்தில் இணைந்துவிட்டான். தங்களுக்காக தைரியமாக சட்டம் பேசியவனை சிறிது நேரத்திலேயே அந்த மக்களும் தலைவன் போலவே ஏற்றுக்கொண்டார்கள்.

அரசு அதிகாரிகளின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தவனும், ஆவணங்களை ஆராய்ந்து பாத்திருக்கவில்லை. இப்போது கிராமநத்தம் என்ற ஒற்றை வார்த்தையில், அந்த சொத்தின் தன்மையை ஆதிமுதல் அந்தம் வரை அலசி ஆராய்ந்து விட்டான். இதற்காகத் தானே அவனை இந்த இடத்திலிருந்து அவர்கள் அகற்ற நினைத்ததும்.

“சொல்லுங்க சர், ஏழைங்கன்னா அவ்வளவு இளக்காரமா உங்களுக்கு? எதுக்கு இல்லாதவங்ககிட்டயிருந்து பிடுங்கி இருக்குறவன்கிட்டயே குடுக்க துடிக்கிறீங்க?” நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கண்ணன் முன்னால் வர,

“சர்…” என்று அவனைப் பிடித்து நிறுத்திவிட்டான் சபேசன்.

“என்ன? கணவனும் மனைவியுமா சேர்ந்து என்னை அசிங்கப்படுத்தப் பாக்குறீங்களா?” கையும் களவுமாக மாட்டிக்கொண்டதை பொறுத்துக்கொள்ள முடியாமல் நந்தினியிடம் சீறினார் அந்த அதிகாரி.

அவருக்கு பதில் சொல்ல முயற்சி செய்யாமல், தன்னுடைய கைபேசி மூலம் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டாள் நந்தினி. கலெக்டரின் உதவியாளர் அழைப்பை ஏற்க, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவள், நடக்கும் பிரச்சினையை லேசாக கோடிட்டு காட்டி கலெக்டரிடம் பேச வேண்டும் என்று சொல்ல, ஒரு பத்து நிமிடங்களில் உங்களோடு தொடர்பு கொள்வார் என்று பதில் வந்தது.

இந்த தலைமுறையைச் சேர்ந்த துடிப்பான இளைஞன் தான் தற்போது நெல்லை சீமையின் கலெக்டர். சமீபத்தில் தான் பதவியேற்றிருந்தார். இதுவரையிலும் கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர். இப்படி அந்த கலெக்டரைப் பற்றிய நல்ல விஷயங்களை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். எனவேதான் தைரியமாக அழைத்து விட்டாள் நந்தினி.

அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே நந்தினிக்கு அழைப்பு கலெக்டர் அலுவலகத்திலிருந்து வந்திருந்தது. இப்போது கலெக்டர் இணைப்பில் இருந்தார்.

அவருக்கு வணக்கம் வைத்த நந்தினி, “இலவச பட்டா வழங்குறதுல பாரபட்சமும் முறைகேடும் நடந்திருக்குது சர்” என்று தொடங்கி நடந்த விஷயங்கள் அத்தனையும் சொன்னாள்.

அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த கலெக்டர், “கிராம நத்தம்னு சொல்லும்போது மக்களுக்கு இலவச பட்டா வழங்குறதுல எந்த பிரச்சினையும் இருக்கப் போறதில்லை, அதனால மக்களை தைரியமாகவே போராட்டத்தை கைவிடச் சொல்லுங்க. அதேபோல அரசாங்க அதிகாரிகளையும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாதுன்னு சொல்லி திரும்பி போகச் சொல்லுங்க.” என்று சொல்லி போராட்டத்தை முடித்து வைத்தார்.

சொன்னதோடல்லாமல் எழுத்துப்பூர்வமாகவே அவளுக்கு மெயில் அனுப்பி வைத்தவர், இந்த விஷயமாக விசாரணைக்கு நாளை காலை பத்து மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் கோட்டாச்சியர் மூவருக்கும் உத்தரவையும் அனுப்பியிருந்தார்.

விஷயத்தை மக்களிடம் நந்தினி சொல்ல பெரும் சந்தோஷ ஆர்ப்பரிப்பு அவர்களிடம்.

 “உங்களால தான் சார் எல்லாம் சரியா நடந்தது எங்களுக்கு.” கண்ணனை எல்லோரும் கொண்டாடி தீர்க்க, மூன்று அதிகாரிகளும் ஏமாற்றத்தோடு தலையை தொங்க போட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தார்கள்.

நந்தினியும் தன்னுடைய அணியினரோடு கிளம்ப தயாராக, அவளுடைய கையை வேகமாக வந்து பிடித்துக்கொண்ட பெண்மணி ஒருவர், “வக்கீல் சார்வாளோட வீட்டாளாமே நீங்க?! ஒருத்தொருக்கொருத்தர் பொருத்தமான சோடி தான். பிள்ளைக் குட்டியோட இரண்டு பேரும் நூறு வருஷம் நல்லா இருக்கோணும் தாயி.” உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

சீருடையில் இருக்கும் போது அம்மாதிரியான பேச்சை ஆதரிக்க விரும்பாத நந்தினி சிறு புன்னகையோடு அங்கிருந்து கிளம்ப, என்ன முயன்றும் கணவனை பெருமிதமாக பார்த்து வைத்த கண்களை அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை.

கண்ணன் எப்போதும் போல சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது அவன் மனைவி வீட்டிலிருந்தாள். தலைக்கு குளித்து தலைமுடியை க்ளிப்பில் அடக்கியிருந்தவள், அழகான காட்டன் சுடிதார் அணிந்திருந்தாள்.

தொலைக்காட்சி இயங்கிக் கொண்டிருந்தது. அதில் இலவச பட்டா முறைகேடு பற்றிய செய்தியே ஹைலைட்டாக ஓடிக்கொண்டிருக்க, இன்றைய நாயகன், நாயகி கண்ணனும் நந்தினியும் ஆகிப்போயிருந்தார்கள்.

“என்ன அதிசயம், எம்பொண்டாட்டி இன்னைக்கு சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டா? ஒருவேளை அத்தானை ஆரத்தி எடுத்து வரவேற்கிறதுக்காக சீக்கிரம் வந்துட்டாளா? எங்கே ஆரத்தி? எங்கே ஆரத்தி?” ஆர்ப்பாட்டமாக கேட்டபடியே தான் வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன்.

“ம்க்கும்… சம்மந்தப்பட்ட இடம் கிராம நத்தம்னு தெரியாம கூட்டத்தோடு கூட்டமா கும்மியடிச்சிட்டு இருந்த மக்கு லாயருக்கு எல்லாம் ஆரத்தி ரொம்ப தேவைதான்.” கேலியாக நொடித்துக் கொண்டாள் நந்தினி.

“உண்மையைச் சொன்னா, கிராம நத்தம்னு தெரியவந்ததும் எனக்குமே கொஞ்சம் வெட்கமா தான் போச்சு நந்து. ஆனா, நான் அங்க போய் சேர்ந்ததே எதேட்சையாத் தான். அந்த மக்களுக்கு அநியாயம் நடந்துடக்கூடாது, இதுதான் என்மனசுல ஓடிகிட்டே இருந்ததே தவிர வேற எதையும் அப்போ யோசிக்கல. ஆனா அந்த இடத்தோட டாக்குமெண்டை பாத்திருந்தா கண்டிப்பா கண்டுபிடிச்சிருப்பேன்.” பூசிமெழுக முயற்சி செய்யாமல் பேசினான்.

“நான் உங்களை அங்க பாத்ததும் அவங்களோட லாயர்னு நினைச்சேன் த்தான். அதனால என்னடா இது, இந்த விஷயம் கூட உங்களுக்கு தெரியலையான்னு சின்ன அதிருப்தி இருந்ததென்னவோ நிஜம். கடைசியில தான் நீங்க அவங்களோட லாயர் இல்லைங்குற விஷயமே எனக்கு தெரிய வந்தது. உண்மையிலேயே உங்களை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு மிஸ்டர் லோட்டஸ்.” என்றாள் புன்னகை முகமாக.

“மிஸ்டர் லோட்டஸ்ஸா?”

“ம்ம்… கமலகண்ணன், கமலம்னா தாமரை, தாமரை லோட்டஸ்… சோ, மிஸ்டர் லோட்டஸ்.” வாயெல்லாம் பல்லாக நந்தினி விளக்கம் சொல்ல,

“பார்றா… என்னோட காரமிளகா எப்பிடி எல்லாம் யோசிக்குது!” என்று சிரித்தவன், “நீ என்ன இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்ட?” தொடங்கிய இடத்திலேயே மீண்டும் வந்து நின்றான்.

“இனிமே பத்து நாளைக்கு இப்பிடித்தான், அதுவும் முழுநேரமும் உங்க காரமிளகா வீட்டுலயே தான் இருக்கப் போறா.” என்றாள் நந்தினி.

“ஏன்? என்னாச்சு?” கேள்வியாக புருவத்தை சுருக்கினான்.

“சஸ்பென்ஷன். உயரதிகாரியோட உத்தரவை மீறிட்டேனாம்.” கேலியாகவே நந்தினி சொல்ல, புரியாத பாவனையே கண்ணனிடம்.

அதைத்தொடர்ந்து உயரதிகாரிக்கும் தனக்குமிடையே நடந்த உரையாடல்கள் அத்தனையையும் நந்தினி சொல்ல,

“அந்த ஆளு தன்னோட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துட்டு உன்னை சஸ்பென்ஸ் பண்ணுவாராமா? நீயும் சரிங்க எஜமான்னு மண்டையை ஆட்டிகிட்டு சும்மா வந்துட்டியா?” கோபமாக கேட்டான்.

“எங்க? நேரடியா ஆர்டரை கையில குடுத்தா ஏதாவது கேக்கலாம், மெயில்ல வரும் போது என்ன செய்ய?” அலுத்துக் கொண்டாள்.

“நாம தப்பே செய்யாதப்போ, தண்டனையை ஏத்துக்குறது தப்பை ஒத்துக்குறது போல ஆகிடுமே நந்து. கண்டிப்பா இதை நீ சும்மா விடக்கூடாது, சஸ்பென்ஷன் ஆர்டரை எதிர்த்து மேலிடத்துக்கு புகார் பண்ணியே ஆகணும்.” சொல்லியவன் அப்போதே மடிக்கணினியை கையிலெடுத்துவிட்டான்.

அவளுக்குமே சஸ்பென்ஷன் ஆர்டரைப் பார்த்ததும் கோபம் தான் வந்தது. இவ்வளவு ஏன்? இந்த தற்காலிக வேலை நீக்க உத்தரவை எதிர்த்து புகார் செய்தால் என்ன என்றுகூட எண்ணத் தோன்றியது.

இப்போது தனக்கு குறையாத கோபத்தோடு, தன்னுடைய எண்ணத்தையே கணவனும் பிரதிபலிக்கவும், ஒருத்தருக்கொருத்தர் பொருத்தமான ஜோடி தான் என்று அந்த பெண்மணி சொன்னது ஞாபகத்திற்கு வர, இதழ்கள் புன்னகையில் விரிந்தன.

“என்ன இளிப்பு வேண்டிக்கிடக்கு? வளைச்சு வளைச்சு கேள்வி கேக்குறது எல்லாம் எங்கிட்ட மட்டும் தான் போல.” சத்தமாக முணுமுணுத்தபடியே மனைவி புகார் செய்வது போல டைப் செய்ய ஆரம்பித்தவன், முடித்து நந்தியின் பக்கமாக லேப்டாப்பை நகர்த்தி,

 “போதுமா? வேற எதுவும் சேர்க்கணுமா, வாசிச்சு பாத்து சொல்லு.” என்றான்.

அதை வாசித்து பார்த்தவளுக்கு, புகார் விசாரணைக்கு வரும்போது இலவச பட்டா முறைகேடு வழக்கில் தன்னுடைய உயரதிகாரியும் மாட்டிக் கொள்வதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு என்றே தோன்றியது. அதைக் கணவனிடம் சொல்லவும் செய்தாள்.

“உப்பு தின்னா தண்ணி குடிச்சே ஆகணும், அது யாரா இருந்தாலும்.” தீவிரமான குரலில் சொல்லியபடியே கண்ணன் ஆன்லைன் மூலம் புகாரை பதிவு செய்ய ஆரம்பிக்க, அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

“என்ன, பார்வையெல்லாம் ஒரு தினுசா இருக்கு?”

“இல்ல, யாருன்னே தெரியாத மக்களுக்காக எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காம களத்துல இறங்கி வேலைப்பாக்குறீங்க, தப்பை பொருத்துக்க மாட்டேங்கிறீங்க, உங்களைப் போய் என்னல்லாம் பேசிட்டேன்? என்னையே என்னால மன்னிக்க முடியல தெரியுமா?” வீட்டுக்கு வந்த நேரத்திலிருந்து தனது மனதை அரித்துக் கொண்டிருந்த விஷயத்தை சொன்னவளின் குரல் உடைந்துவிடும் அபாயத்தில் இருந்தது.

“ஆஹா… இந்த ஒரு விஷயத்தை வச்சி என்னோட கேரெக்டரை கணக்கு போட முயற்சி செய்யாதீங்க மேடம்… ஐயா வேற, வேற மாதிரி.” காலரை தூக்கி விட்டபடி கண்ணன் கண்களைச் சிமிட்ட,

“கொய்யால, இப்பிடி பேசிப் பேசியே என்னைக் குழப்பி, எனக்குள்ள அமைதியா தூங்கிகிட்டு இருந்த மிருகத்தை எழுப்பி விட்டு ஒரு களேபரத்தை உண்டாக்குனது பத்தாதுன்னு, மறுபடியுமா? ஒழுங்கா பேசலைன்னா பிச்சி புடுவேன் பிச்சி.” கணவனின் காதை எட்டிப் பிடித்தபடி கண்களை உருட்டி மிரட்டினாள் நந்தினி…