அத்தியாயம் 20
ஒரு மாதம் கடந்திருந்தது. வாழ்க்கை இருவருக்கும் இனிமையாக நகர்ந்திருந்தது.
அன்று காலையில் இருவரும் அலுவலகத்திற்கு கிளம்பும் போதே முக்கியமான வேலை இருப்பதால் தாமதமாகவே வீட்டுக்கு வருவேன் என்று மனைவியிடம் சொல்லிவிட்டே சென்றிருந்தான் கண்ணன்.
வழக்கமான காலைநேர ரோந்துப் பணியை முடித்து விட்டு அலுவலகத்திற்கு வந்திருந்த நந்தினிக்கு, உயரதிகாரியிடமிருந்து அலுவலக தொலைபேசியில் அழைப்பு வந்தது.
“குட் மார்னிங் சர்.” அவர் பதவிக்கான மரியாதையை நந்தினி கொடுக்க,
“லாயர் கமலகண்ணன் உங்க ஹஸ்பெண்ட் தானே?” எடுத்த உடனே விசாரணையில் இறங்கினார் அந்த மனிதர்.
“ஆமா சர்.”
“அவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை மேடம்?” சட்டென்று உயர்ந்த அதிகாரியின் குரலில் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது.
“என்ன விஷயம் சர்?”
“சுத்தம்… இன்னுமே உங்களுக்கு விஷயம் தெரியாதா? உங்களை எல்லாம் கட்டி மேய்க்கணும்னு என் தலையில எழுதியிருக்கு. மொதல்ல நியூஸ் சேனலைப் போட்டு விஷயத்தை தெரிஞ்சிகிட்டு எனக்கு ஃபோன் பண்ணுங்க.” கட்டளை இட்டுவிட்டு அழைப்பை துண்டித்துக் கொண்டார் அந்த உயர் அதிகாரி.
அந்த அதிகாரியின் அலட்சியமான பேச்சில் சுர்ரென்று கோபம் ஏறியது நந்தினிக்கு.
‘நான் என்ன இவர் வைத்த ஆளா? அவர் சொன்ன உடனே நான் கேட்டுவிட வேண்டுமா என்ன?’ அவளுடைய முசுட்டுக்குணம் இயல்பாக தலை தூக்கினாலும், கணவனுடைய பெயர் அவளை அப்படியே இருக்கவிடவில்லை.
அறையிலிருந்த தொலைக்காட்சியை இயக்குவதற்காக அதன் ரிமோட்டை கையிலெடுத்த நேரம், “மேடம்…” என்று கையில் அலைபேசியோடு பரபரப்பாக சபேசன் அறைக்குள் வந்தான்.
“என்ன விஷயம் சபேசன்?” நந்தினியின் கவனம் சபேசனிடம் திரும்பியது.
“சேரன்மகாதேவி பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிச்சு வீடு கட்டியிருக்குறதை அகற்ற போன அரசு அதிகாரிகளை, வேலை செய்ய விடாம மக்கள் தடுத்து போராட்டம் செய்யுறாங்க. அதுக்கு தலைமை தாங்குறது நம்ம சார் மேடம்.” விஷயத்தை சொல்லியபடியே அலைபேசியை நந்தினியிடம் நீட்டினான்.
அதில் யூடியூப் பக்கம் திறந்திருக்க, சபேசன் கூறிய விஷயங்களை செய்தியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தது ஒரு செய்திச் சேனல்.
வீடுகளை இடிக்க பொக்லைன் இயந்திரம் தயாராக நிற்க, அதை தங்கள் வீடுகளுக்கு அருகே செல்ல விடாமல் மறித்தபடி கூட்டமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களுக்கு தலைமையேற்று நிற்பது போல எல்லோருக்கும் முன்னால் நின்று கொண்டிருந்தான் கமலகண்ணன்.
“எங்க எல்லோரையும் கொன்னுட்டு எங்கவீட்டு மேல கையை வைங்க.” உணர்ச்சிவசப்பட்டு பெருங்குரலெடுத்து கத்திக் கொண்டிருந்தார்கள் நடுத்தர வயது பெண்மணிகள். அவர்களை பார்க்கும் போதே பாமர மக்கள் என்பது தெளிவாக தெரிந்தது.
“கிட்டத்தட்ட முப்பது வருஷமா இந்த மக்கள் இங்கதான் குடியிருக்காங்களாம். இது அரசாங்க இடம்னா மக்கள் வீடுகட்ட எப்பிடி அனுமதி தந்தீங்க? மின்கட்டணம், வீட்டுவரி, தண்ணீர் வரின்னு எல்லாம் முறையா கட்டியிருக்காங்க, அதுக்கான ரசீதும் வச்சிருக்காங்க. இவ்வளவு ஏன், இந்த விலாசத்தை வச்சி ரேஷன் கார்டு கூட வாங்கியிருக்காங்க. இந்த விஷயத்துல அரசாங்க நிலத்தை காப்பாற்ற தவறிய அதிகாரிகள் தான் குற்றவாளிகள். அப்படியிருக்கும் போது தங்களோட வாழ்நாள் சம்பாத்தியத்தை போட்டு வீடுகட்டி வாழுற மக்களை தண்டிக்கிறது எந்த வகையில நியாயம்?” உரத்த குரலில் கண்ணன் சட்டம் பேச, பார்த்துக் கொண்டிருந்த அவனது மனைவிக்கு சபாஷ் என்று கை தட்டத்தான் தோன்றியது.
“நாங்க வரி கட்டும் போதெல்லாம் ஒன்னும் சொல்லாம, இப்போ வெளியப்போன்னு சொன்னா எங்க போவோம்? என்ன தப்பு செய்தோம்னு எங்க வாழ்க்கையை நாசமாக்க பாக்குறீங்க?”
“நாங்களும் பல வருஷங்களா இந்த இடத்துக்கு எங்களுக்கு பட்டா தாங்கன்னு மனு போட்டு மனு போட்டு சோர்ந்து போனோம். ஆட்சி மாறுது, அதிகாரிகள் மாறுறாங்க, ஆனா யாருக்குமே எங்க கோரிக்கையை நிறைவேற்ற மனசில்ல. இதே ஒரு பணக்காரனை எங்க அளவுக்கு அலைக்கழிக்க முடியுமா உங்களால? அப்போ இந்த நாட்டுல ஏழைக்கொரு நியாயம், பணக்காரனுக்கு ஒரு நியாயமா?”
“யாரு சொல்லி இதெல்லாம் நடக்குதுன்னு எங்களுக்கும் தெரியும்.” கூட்டத்தில் இப்படி பல்வேறு விதமான குரல்களும், வாக்குவாதங்களும், கோஷமும் எழும்ப, கொஞ்சம் பதட்டமாகத் தான் இருந்தது சூழ்நிலை.
“இதைத்தான் முக்கியமான வேலை இருக்கிறது என்று அத்தான் சொன்னாரா?’ நந்தினி யோசித்து கொண்டிருக்கும் போதே மேலதிகாரியிடமிருந்து அவளுக்கு அழைப்பு.
“நியூஸ் பாத்தீங்கல்ல? உங்க ஹஸ்பெண்டை அங்கயிருந்து கிளம்பச் சொல்லுங்க.” இப்போதும் கட்டளைத் தொனியே அந்த அதிகாரியிடம்.
“என்ன சர் சொல்லுறீங்க?” அதிர்ச்சியாக கேட்டாள் நந்தினி.
“அந்த காட்டுமிராண்டி கூட்டத்துக்கு சப்போர்ட் பண்ணுறதை விட்டுட்டு லாயரை கிளம்பச் சொல்லுங்க மேடம்.”
“ஏன் சர்?”
“நான் சொல்லுறதை மட்டும் செய்யுங்க, எங்கிட்ட கேள்வி கேக்குற வேலை எல்லாம் வச்சிக்காதீங்க.” எரிந்து விழுந்தார் அந்த மனிதர்.
“சாரி சர், என்னால முடியாது.” பளிச்சென்று பதில் வந்தது நந்தினியிடமிருந்து.
“நான் உங்க உயரதிகாரி மிஸர்ஸ் நந்தினி, அது ஞாபகம் இருக்கட்டும்.” இப்போது எச்சரிக்கும் தொனி அவளது உயரதிகாரியிடம்.
“நல்லாவே ஞாபகம் இருக்குது சர். ஆனா நீங்க அலுவலக வேலை விஷயமா மட்டும் தான் என்னை கட்டுப்படுத்த முடியும்.” தைரியமாகவே சொன்னாள்.
“ஓ… அப்போ நான் சொன்னதை நீங்க கேக்கமாட்டீங்க?” கோபமாக கேள்விவர பதிலில்லை நந்தினியிடம்.
“நான் உங்க கணவரோட நல்லதுக்காகத் தான் சொல்லுறேன் மேடம்.” இப்போது அந்த அதிகாரியின் குரல் லேசாக இறங்கியிருந்தது.
“உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி சர், ஆனா என் கணவருடைய தனிப்பட்ட உரிமைகள்ல நான் தலையிடுறது கிடையாது.” மறுப்பையே இப்போது வேறுவிதமாக சொன்னாள்.
“ஆக, என்னோட வார்த்தைகளை நீங்க மதிக்கப் போறது இல்ல, அப்படித்தானே?” ஒருமாதிரி குரலில் கோபமாக சலித்துக்கொண்டவர்,
“தேவையான ஃபோர்ஸ்ஸோட நீங்களே அந்த இடத்துக்கு போங்க. என்ன செய்வீங்களோ தெரியாது, அந்த காட்டுமிராண்டி கூட்டத்தை கலைச்சிட்டு, அரசாங்க நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகளுக்கு உதவி செய்யுறீங்க. இது என்னோட ஆர்டர். இப்போ ஒபே பண்ணுவீங்க தானே?” நக்கலாக அதிகாரி கேட்க,
“யெஸ் சர்.” என்று சொல்லுவதைத் தவிர வேறுவழியிருக்கவில்லை நந்தினிக்கு.
“சபேசன், ஸ்க்வாட் ரெடி பண்ணுங்க கிளம்பலாம்.“ சபேசனிடம் சொன்னவள், அடுத்த சில நிமிடங்களிலேயே தன்னுடைய அணியினரோடு கிளம்பியிருந்தாள்.
‘புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்தி வீடு கட்டுவது தவறுதான். என்றாலும் முப்பது வருடங்களாக அதில் வாழும் மக்களை திடீரென்று வெளியேப்போ என்று சொன்னால் எங்கே போவார்கள்? அந்த இடம் அரசாங்கத்துக்கு தேவைப்படுகிறது என்றால் இந்த மக்களை வேறு எங்காவது குடியேற்ற வேண்டியதும் அரசாங்கத்தின் கடமை தானே? அதை அந்த மக்களுக்கு புரியவைத்து வெளியேற்றுவதை விட்டுவிட்டு எதற்காக இப்படி அதிரடியாக செயல்பட வேண்டும்?’ இத்தனைக் கேள்விகள் மனதில் தோன்றிய அதே நேரம் தன்னுடைய உயரதிகாரிக்கு இந்த விஷயத்தில் அதிகப்படியான ஆர்வம் ஏன் என்ற கேள்வியும் நந்தினிக்கு எழாமல் இல்லை.
அடுத்த முப்பதாவது நிமிடத்தில் குறிப்பிட்ட அந்த கிராமத்தில் வந்து இறங்கியிருந்தார்கள். மலையடிவாரத்தில் இயற்கை எழில்சூழ அமைந்திருந்தது அந்த கிராமம்.
அதிகப்படியான காவலர்கள் வந்து இறங்கியதைக் கண்டதும் கூட்டத்தில் பரபரப்பு கூடியது.
ஏற்கனவே அங்கேயிருந்த அந்த எல்கைக்கு உட்பட்ட காவல் அதிகாரி நந்தினியிடம் ஓடிவந்தார்.
“சொல்லுறது எதையும் கேக்கமாட்டேங்குறாங்க மேடம். லேசா லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை கலைச்சிடுவோமா?” சல்யூட் வைத்தபடி நந்தினியின் அனுமதியைக் கேட்டவரிடமும் கடமை உணர்வு அதிகமாகத்தான் இருந்தது.
“இருங்க சர், நான் பேசிப் பாக்குறேன்.” என்றவள், “தாசில்தார்…” என்று இழுக்க,
“தாசில்தார், வருவாய் கோட்டாச்சியர், விஏஓ எல்லோருமே இங்க தான் இருக்குறாங்க மேடம்.” என்று தனித்தனியாக அந்த அரசு அதிகாரிகளை அடையாளம் காட்டினார் அந்த காவல் அதிகாரி.
அவருக்கு நன்றி சொல்லி அங்கிருந்து நகர்ந்தவள், தாசில்தார் முன்னால் வந்து நின்று, “என்ன பிரச்சினை சர்?” பிரச்சினையை அவர் வாய் மூலமாகவே அறிந்து கொள்ளும் பொருட்டு கேட்டாள்.
“புறம்போக்கு நிலத்துல வீட்டை கட்டியிருக்கானுங்க, காலி பண்ணச் சொன்னா பண்ணமாட்டேங்குறானுங்க.” அலட்சியமாக வந்தது அவருடைய பதில்.
அவர் பேசும் தொனியே அதிருப்தியாக இருந்தது நந்தினிக்கு. அதைக் காட்டிக்கொள்ளாமல், “அவங்களுக்கு காலி பண்ணச்சொல்லி முன்னறிவிப்பு எதுவும் குடுத்தீங்களா?” என்று கேட்டாள்.
“எதுக்கு மேடம் முன்னறிவிப்பு குடுக்கணும்? தனக்கு சொந்தமில்லாத இடத்துல இத்தனை வருஷங்களா இருக்குறவங்க, கிளம்புங்கன்னு சொன்னா கிளம்ப வேண்டியதுதானே.”
“உங்க அப்ரோச் தப்பு சர், நீங்க அவங்களுக்கு முன்னறிவிப்பு கொடுத்திருக்கணும்.”
“என்னை தப்பு சரின்னு சொல்லவா மேடம் நீங்க கிளம்பி வந்துருக்கீங்க? கொஞ்சம் க்ரௌடை க்ளியர் செய்து குடுங்க, எங்க வேலையை முடிச்சிட்டு கிளம்பி போய்ட்டே இருப்போம்.” அலட்சியத்தை அவர் ஒருத்தரே மொத்த குத்தகைக்கு எடுத்தது போலவே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் அந்த அதிகாரி.
அந்த அதிகாரியின் பதிலில் இது என்ன சர்வாதிகாரப் போக்கு என்று கோபம் வந்தது நந்தினிக்கு. அதற்கு மேல் அவரிடம் பேசினால் வாக்குவாதம் ஆகிப்போகும் என்பதால், தற்போது அதை விரும்பாதவளாக மக்கள் கூட்டத்திற்கு முன்னால் வந்து நின்றாள்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள அத்தனை குடும்ப உறுப்பினர்களும் வயது வேறுபாடு இல்லாமல் கண்ணன் பின்னால் ஒட்டுமொத்தமாக திரண்டு நின்றிருந்தார்கள்.
நந்தினி வந்து இறங்கிய நேரத்திலிருந்து அவளையே கவனித்திருந்த கூட்டம், என்ன சொல்லப் போகிறாள் என்பதாக அவள் முகத்தையே உற்று கவனித்தது. கண்ணனும் தான்.
போராடும் இடத்தில் கணவன், அதைக் கட்டுப்படுத்தும் இடத்தில் மனைவி. சூழ்நிலை புதிதாக இருக்க, தன்னுடைய பணியில் கவனத்தை குவித்தாள் நந்தினி.
“அடிப்படையில நீங்க செய்தது தவறு. அரசாங்கம் அவங்க இடத்தை கேட்கும் போது குடுத்து தானே ஆகணும். எந்த பிரச்சனையும் பண்ணாமல் கலைஞ்சு போங்க, வீணா பிரச்சினையை பெருசாக்காதீங்க.” தன்னுடைய வார்த்தைகளில் அவளுக்கே மாற்றுக் கருத்து இருந்த போதிலும் சட்டம் அப்படித்தான் அவளைப் பேச அனுமதித்தது.
“அரசாங்க இடம் தான். நாங்க மறுக்கல. அதே நேரம் இந்த மக்களோட வீடுகளைத் தொட்டு இருக்கும் ஒரு பெரும் நிலப்பரப்பு, அதுவும் அரசாங்கத்துக்கு சொந்தமான நிலம், ஒரு அரசியல் பெரும்புள்ளியோட பினாமிக்கு பட்டாவாக்கி சமீபத்துல குடுத்துருக்காங்களே, அதுமட்டும் எப்பிடி மேடம்?” தைரியமாக அந்த பெரும்புள்ளியின் பெயரைச் சொல்லியே கண்ணன் கேட்க, தன்னுடைய உயரதிகாரியின் அதிகப்படியான ஆர்வம் எதற்காக, யாருக்காக என்று இப்போது புரிந்தது நந்தினிக்கு.
“இப்பவும் இந்த மக்களை விரட்டி அடிச்சிட்டு, அந்த இடத்தை அப்பிடியே தூக்கி அந்த பினாமி கையில குடுக்கத்தான் இவ்வளவு அவசரமா எல்லாம் நடக்குது. இதுதான் களநிலவரம். உங்க மேலிடத்துக்கு எடுத்து சொல்லி, இந்த அப்பாவி மக்களுக்கான நியாயம் கிடைக்க உங்களாலான முயற்சியை செய்யுங்க மேடம். இல்லைன்னா எங்க போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவோம்.” எதிரில் நிற்பவளின் மனைவி என்ற பிம்பம் மறைந்து அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே கண்ணனுக்கு தோன்ற உறுதியான குரலில் பேசினான்.
“ஆமா… எங்க போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவோம்.” கண்ணனுக்கு பின்னால் நின்றிருந்தவர்களிடமிருந்து எழுச்சியாக வந்தது கோஷம்.
‘இவ்வளவு தைரியமாக பேசும், அதுவும் சட்டம் பேசும் தன்னுடைய கணவனை இங்கிருந்து அகற்றிவிட்டால், இந்த மக்களை எளிதாக சமாளித்து அவர்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும் என்று நினைத்திருக்கிறார்கள். அதனால் தான் என் மூலம் முயற்சி நடந்திருக்கிறது.’
‘மக்களுக்காகத் தானே அரசாங்கம். அந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், உரிமைகளை பாதுகாப்பதுவும் தானே என்னைப்போன்ற மக்கள் பணியாளர்களின் பணி. யாரோ ஒருசில பணமுதலைகளின் கைப்பாவையாக அரசு இயந்திரம் மாறிப்போக நானும் உடந்தையாக ஆகிவிடக்கூடாது.’ முடிவு செய்தவள் மறுபடியும் தாசில்தாரிடம் செல்ல திரும்பிய நேரம், பாக்கெட்டில் சொருகியிருந்த காவலர்களுக்கான தொலைதொடர்பு சாதனம் அழைப்பு வந்ததற்கான ஒலியை எழுப்பியது.
வேறு யார்? அவளது மேலதிகாரி தான். அழைப்பை ஏற்றுப் பேசுவதற்காக நந்தினி கூட்டத்திலிருந்து லேசாக விலகிச் செல்ல,
“இன்னைக்கு, இப்போ, இந்த இடத்துல உங்களுக்கான நியாயம் கிடைக்கலைன்னா எப்பவுமே கிடைக்காது. எல்லோரும் அப்பிடியே உக்காருங்க.” கூட்டத்தை பார்த்து சொன்னபடியே கண்ணன் தரையில் அமர, அவனோடு சேர்ந்து எல்லோரும் அமர்ந்து விட்டார்கள்.