“அத்தான்…” நந்தினி அழைக்க,
“சொல்லு நந்தினி.” அலைபேசியின் திரையிலிருந்து பார்வையை விலக்கிக் கொள்ளாமலேயே பதில் வந்தது.
“எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” மெதுவாக சொன்னாள்.
“எனக்கு கூட உங்கிட்ட பேசணும் நந்தினி, ஆனா இப்போ வேண்டாம்.”
“அப்போ நாளைக்கு பேசலாமா? இரண்டு பேரும் லீவ் போடுவோமா?” ஆர்வமாக கேட்டாள்.
“நாளைக்கு எனக்கு முக்கியமான கேஸ்ல வாய்தா இருக்கு, அதனால என்னால லீவ் போட முடியாது. ஈவ்னிங் எப்பவும் வர்ற நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடுவேன், அப்போ பேசலாம். இப்போ தூங்கு.” படுக்கையில் தனது பக்கத்தில் கையால் தட்டியபடியே கண்ணன் சொல்ல, அமைதியாக வந்து படுத்துக்கொண்டாள்.
‘இப்படியெல்லாம் சொன்ன உடன் கேட்டுவிடுபவளா அவனுடைய மனைவி?’ ஆச்சர்யமாக இருந்தது கண்ணனுக்கு.
பக்கவாட்டு சுவரில் இருந்த பொத்தானை அழுத்தி அறையின் விளக்கை அணைத்தவன் தானும் தூங்குவதற்கு தயாராக, எங்கே, அவன் மனைவி புரண்டு புரண்டு படுத்து அவன் தூக்கத்திற்கு வேட்டு வைத்தாள்.
சிறிது நேரம் அமைதியாக அவளை அவதானித்தவனுக்கு, அதற்கு மேலும் முடியவில்லை.
“என்ன ஆச்சு?” என்றான் மெல்லிய குரலில்.
“தூக்கம் வரல.” உடனே வந்தது பதில்.
அடுத்த வினாடியே அறை விளக்கொளியில் குளித்திருக்க, படுக்கையில் எழும்பி அமர்ந்திருந்தான் கண்ணன்.
அவன் கூடவே எழும்பி அமர்ந்தவளும், “நீங்க தூங்கலையா?” என்றாள் கண்களைக் கசக்கியபடி.
“பக்கத்துல நீ புரண்டு புரண்டு படுத்தா எப்பிடி தூங்குறது? எப்படியும் நீ நினைச்சதை பேசாம உனக்கு தூக்கம் வரப் போறதில்ல, நீ தூங்காம எனக்கும் தூக்கம் இல்ல. ரெண்டு பேரும் தூங்காம இருக்குறதுக்கு, பேச நினைச்சதை பேசிடலாமே.” நாசூக்காக கொட்டாவியை கையால் மறைத்தபடியே சொன்னான்.
அவ்வளவு தான், கணவனின் கைகளை சட்டென்று பிடித்துக்கொண்ட நந்தினி, “எல்லாத்துக்கும் சாரி த்தான்.” என்றாள் வேகமாக.
மனைவியின் குணத்திற்கு பக்கம் பக்கமாக விளக்கம் சொல்லி தன்னை நியாப்படுத்த முயல்வாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு, இந்த மன்னிப்பு ஆச்சரியமாக தான் இருந்தது. மனதிலிருந்த கோபம் எல்லாம் மனைவியின் செயலில் நொடியில் வடிந்திருக்க,
“நானும் உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.” கொஞ்சம் கூட யோசிக்காமல் மனைவியிடம் மன்னிப்பு கேட்டவன், அவள் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.
“நீங்க என்ன பண்ணுனீங்க? அதிகப்பிரசங்கித்தனமா பேசுனது எல்லாம் நான் தான்.” நந்தினியின் குரல் கொஞ்சம் கம்மிப் போய் வந்தது.
“நீ பேசுறதுக்கு, ஆரம்பத்துலயிருந்தே தூண்டுகோலா இருந்தது என்னோட பேச்சு தானே, இனிமே இப்பிடி நடந்துக்காம நானும் பாத்துக்குறேன். இப்போ நீ தூங்கு.” என்றான் மென்மையாக.
“அவ்வளவு தானா? நம்ம பேச்சுவார்த்தை முடிஞ்சுதா?” இயல்புக்கு திரும்பியிருந்த நந்தினியிடம், கேலியும் இயல்பாகவே வந்திருந்தது.
“ஏன்? பக்கம் பக்கமா டயலாக் பேசுனா தான் உன்னால நம்ப முடியுமா? வேண்டாம் நந்தினி, நீ என்ன தப்பு செய்தன்னு உனக்கு தெரியும், நான் எங்க தவறுனேன்னு எனக்கும் தெரியும். இனிமே அந்த தவறை செய்யாம ரெண்டு பேருமே கவனமா இருப்போம்.” என்றான் தெளிவாக.
அவன் வார்த்தைகளை ஆமோதிப்பது போல சில வினாடிகள் அமைதியாக இருந்தவள், “இப்பிடிபட்ட ஒரு ஆளை எதுக்காக இவ்வளவு நாளா அவாய்ட் பண்ணுனேன்னு இப்போ யோசிக்க தோனுது த்தான்.” மெல்லிய குரலில் சொன்னாள்.
“என்ன சொன்ன? என்ன சொன்ன?” உடம்பில் பரபரப்பு வந்து ஒட்டிக்கொள்ள வேகமாக கேட்டான் கண்ணன்.
“சூழ்நிலை மட்டும் சரியா அமைஞ்சிருந்தா, எப்பவோ நம்ம கல்யாணம் முடிஞ்சு, இரண்டு மூனு பிள்ளைக்குட்டிக்கு அம்மா, அப்பாவா ஆகியிருப்போம்னு சொல்லுறேன்.”
இப்படியொரு வார்த்தையை மனைவி வாயிலிருந்து கேட்டுவிடக் காத்துக்கிடப்பவன் தானே கண்ணன். முகமோடு மனதும் சேர்ந்து அந்த ஆடவனுக்கு மலர்ந்து போக, மனைவிக்கு மிக அருகே நெருங்கி அமர்ந்து கொண்டவன்,
“அதாவது என்னை லவ் பண்ணியிருப்பன்னு சொல்லுற, அப்படித்தானே.” அவள் முகவாயைப் பற்றி தன்னை நோக்கி உயர்த்தியபடி மென்குரலில் கேட்க, அவன் பார்வையோடு தன் பார்வையைக் கலந்தவள், “ஆமாம்.” என்று தலையசைத்தாள்.
அவ்வளவு தான், மனைவியை தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டவன், அவள் முகமெங்கும் முத்தம் வைக்க, தன்னை அவனுக்கு ஒப்புக்கொடுத்து அமைதியாக இருந்தாள்.
“ஆனாலும் எனக்கு உம்மேல கோபம் இருக்கு நந்து.” முத்தாய்ப்பாக அவள் இதழ்களில் முத்தமிட்டபடியே சொன்னவனின் வார்த்தைகளிலோ கிஞ்சித்தும் கோபம் இல்லை.
“என்னவாம்?” அவளையும் மீறி குரல் குழைந்து வந்தது.
“என்னதான் இருந்தாலும், இந்த அத்தானை நீ சந்தேகப்பட்டு ஒதுக்கியிருக்கக் கூடாது நந்து.” கண்ணன் சொல்ல, கண்களை அழுந்த மூடித் திறந்தவளின் முகத்தில் இப்போது அப்பட்டமான வேதனை.
“என்னாச்சு நந்தினி? உன்னை காயப்படுத்திட்டேனா?” பதறிப்போய் கேட்டான்.
“இல்ல த்தான், நான் தான் தெரிஞ்சே உங்களைக் காயப்படுத்தியிருக்கேன். ஆனா, என் சூழ்நிலை அப்பிடி அமைஞ்சு போச்சு. பதினைந்து வயசு வரைக்கும் எங்கிட்ட பாசம் காட்டுன, நான் பெருமையா பார்த்த, நம்பிக்கை வச்சிருந்த ஒரு ஆணோட துரோகத்தை நேரடியா அனுபவிச்ச பிறகு, நான் எந்த ஆணை நம்ப முடியும், சொல்லுங்க?” கொஞ்சம் கரகரப்பாக வந்தது வார்த்தைகள்.
இப்படியெல்லாம் தன்னிடம் பேசியே இராத மனைவி பேசவும், அவள் மனதிலிருக்கும் வலிகள் வார்த்தைகளாக வெளியே வரட்டும் என்று அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தான் கண்ணன். அவன் கைகளோ மனைவியின் கைகளை ஆதரவாக பற்றி இருந்தன.
“ஆண்கள் எல்லோரும் நம்பிக்கை துரோகிகள். இந்த எண்ணம் என்மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. அதால என் வாழ்க்கையில மட்டும் இல்ல, என் தங்கச்சிங்க வாழ்க்கையிலக்கூட ஆம்பிள்ளைங்களை நுழைய விடவேக் கூடாதுன்னு முடிவெடுத்திருந்தேன் தெரியுமா?” கடைசி வாக்கியத்தைச் சொல்லும்போது நந்தினியிடம் மெல்லிய சிரிப்பு.
“அதோட எதிரொலி தான் உங்களை எங்கிட்ட இருந்து பிடிவாதமா தள்ளி வச்சது. ஆனா எங்க அம்மாவோட கண்ணீருக்கு முன்னாடி என்னோட கொள்கையை என்னால தூக்கிபிடிக்க முடியல. உங்களை கல்யாணம் செய்ய முடிவெடுத்து கல்யாணமும் பண்ணிகிட்டேன்.” உன் கேள்விக்கு இதுதான் என்னுடைய பதில் என்பது போல நந்தினி சொல்ல,
“இது தெரிஞ்ச விஷயம் தானே.” மனைவியின் பேச்சை முடித்து வைத்தான் கண்ணன்.
“ஆனா உங்களுக்கு தெரியாத விஷயமும் இருக்கு.” குரலில் உற்சாகம் மீண்டிருக்க கண்களைச் சிமிட்டினாள்.
“தெரியாத விஷயமா? அது என்ன?”
“இல்ல… கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுற அந்த செகண்ட் வரைக்கும் ஆண்கள் மேல நம்பிக்கை இல்லைன்னு சொன்னவ, திடீர்னு எப்பிடி உங்களை கல்யாணம் செய்ய சம்மதிச்சேன்னு எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா?”
“அதான் சொன்னியே என்மேல பப்பி லவ்னு.”
“ம்ஹும்…” மறுப்பாக தலை அசைத்தவளின் விழிகளில் குறும்பு கூத்தாடியது.
“அப்போ வேற என்னதான் காரணம்?” கேட்டவனிடமோ கட்டுக்கடங்காத ஆர்வம்.
“சின்ன வயசுலயிருந்தே தெரிஞ்ச ஆளு, எங்க போயிடுவார், என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் அப்பிடிங்குற தைரியத்துல தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்.” சொல்லிவிட்டு வெடித்து சிரித்தாள் நந்தினி.
“அதாவது, தப்பு செய்தா குனிய வச்சி கும்மாங்குத்து குத்தலாம்னு என்னைக் கல்யாணம் செய்துருக்க. அப்பிடித்தானே?” மனைவியின் சிரிப்பில் மனம் குளிர்ந்து போய் அவளுக்கு ஈடுகொடுத்து பேசியவன்,
“அம்மா தாயே, இதுக்கு மேல உன் கதையை கேட்க நான் தயார் இல்ல.” பயந்தவன் போல பின்வாங்கினான்.
“இருங்க த்தான், மிச்ச கதையையும் சொல்லி முடிச்சிடுறேன்.”
“வேண்டாம்… என்னை ஆளை விட்டுடு, நான் தூங்கப் போறேன்.” தலையணையை சரியாகப்போட்டு தூங்குவதற்கு கண்ணன் தயாராக, “சும்மா ஃபன்னுக்கு தான் சொன்னேன், பயந்துடாதீங்க த்தான்.” என்று அவன் கன்னத்தை லேசாக தட்டியவள்,
“ஆனா நெஜமாவே இப்போ உங்களை குனிய வச்சு கும்முற அளவுக்கு உங்கமேல பயங்கர கோபம் இருக்கு எனக்கு” என்றாள் தீவிரமான குரலில்.
“எல்லாம் நல்லாத்தானே போகுது, இப்போ என்ன?” மனைவியின் கோபம் எதற்காக என்று தெரியாதவனிடம் லேசான தடுமாற்றம்.
“எப்பிடி எப்பிடி, என் சொல்லையும் மீறி அந்தாளு வீட்டுக்கு போனதும் இல்லாம, உங்க அம்மா வீட்டுல போய் உக்காந்திருப்பீங்க, பாத்துட்டு நான் சும்மா இருக்கணுமா?” கணவனின் மீசையை நீவி விட்டபடியே கேட்டவள், அப்படியே அதைப் பிடித்திழுத்தாள்.
“ஹேய் ரௌடி, வலிக்குது டி.” அலறியவன்,
“இப்பிடி எல்லாத்துக்கும் தனித்தனியா பஞ்சாயத்து வைக்கக்கூடாதுன்னு சொல்லித்தானே டெக்னிக்கலா வேர்ட்ஸ் யூஸ் பண்ணி சிம்பிளா பேச்சு வார்த்தையை முடிச்சேன். அதை நீ பிரேக் அப் பண்ணக்கூடாது செல்லம்.” என்றான் பாவமாக.
“அடடே, அதுல இப்பிடி ஒரு ராஜதந்திரம் வேற இருக்குதோ? நான் கூட நீங்க பேசுனதைப் பார்த்து உங்களை ரொம்ப நல்லவர்னு நினைச்சிட்டேனே…” என்றவள்,
‘நான் இன்னைக்கு அங்க வரலைன்னா, நீங்க இங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்க மாட்டீங்க ல்ல?” என்றாள் கணவனைக் குற்றம்சாட்டும் குரலில்.
“சீச்சீ… அப்பிடியெல்லாம் இல்ல நந்து, ஏதோ ஒரு கோபத்துல அங்க போயிட்டேன் தான். ஆனா கொஞ்சநேரத்துலயே நம்ம வீட்டுக்கு கிளம்பி வந்துருப்பேன். இல்லைன்னா என்னைப் பெத்தவங்களே துரத்தி விட்டுருப்பாங்க.”
“யாரு? மாமாவும் அத்தையுமா? அப்போ அவங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா? நான் வேற நமக்குள்ள எதுவுமே நடக்காத மாதிரி ஜம்பமா பேசிட்டனே. அவங்க என்னைப்பத்தி என்ன நினைச்சிருப்பாங்க?” தலையில் கைவைத்தபடி புலம்பினாள்.
“என்ன நினைச்சிருப்பாங்க? அவங்ககிட்ட கூட புருஷனை நீ விட்டுக்குடுக்க விரும்பலைன்னு நினைச்சிருப்பாங்க.” கணவனின் வார்த்தைகளில் நந்தினி தாராளமாக அவனை முறைத்து வைக்க, தொண்டையை லேசாக செருமிக்கொண்டவன்,
“ஹாங்…அப்பிடியே அவங்ககிட்ட நான் சொல்லியிருந்தா உன் பேச்சை டைவர்ட் பண்ணி விட்டுருக்க மாட்டேனா நந்து? விஷயத்தை அம்மாகிட்ட மட்டும் மேலோட்டமா சொன்னேன். அதுவும், சுரேந்தர் அந்நேரத்துக்கு பேசவும் சொல்லவேண்டியதா போச்சு.” என்றான்.
“சுரேந்தரா?!”
“ஹ்ம்ம்… அவனுக்கும் விஷயம் தெரிஞ்சு, உண்மையான்னு எங்கிட்ட விசாரிக்க கூப்பிட்டான்.”
“ஓ… என்ன சொல்லுறான் அவன்?” சிறிதுநேர மௌனத்திற்கு பிறகே கேட்டாள்.
“என்ன சொல்லுவான்? நம்பிக்கைத் துரோகத்தோட வலி என்னன்னு அவனைப் பெத்தவங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்லன்னு அக்காவைப் போலவே தத்துவம் பேசுறான்.”
“உண்மையாவா?” நந்தினியின் முகம் சட்டென்று பிரகாசமாகிப்போக, புருவம் ஆச்சர்யத்தில் உயர்ந்தது.
“ம்ம்… என்னைக் கேட்டா, அத்தைக்கு பிள்ளையா பிறந்துருக்க வேண்டியவன் அவன். பாவம்…” அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் பேச்சை பாதியிலேயே நிறுத்தி கொண்டான் கண்ணன்.
ஆனால் கணவன் சொல்லாமல் விட்டதின் அர்த்தத்தை சடுதியில் புரிந்து கொண்டவளுக்கு சுர்ரென்று கோபம் ஏற, “உங்க போனைக் குடுங்க, அந்த ஆளை உண்டு இல்லைன்னு ஆக்கிடுறேன்” என்றபடி கணவனுக்கு அருகிலிருந்த போனை எடுக்க முயன்றாள்.
“ப்ச்ச், விடு.” என்று அவள் கையைப் பிடித்து தடுத்தவன், “இந்த கேஸ் விஷயமா இதுக்கு மேல என்னைக் கூப்பிடாதீங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.” என்றான்.
“ஹ்ம்ம்… பட்டாதானே புரியுது உங்களுக்கெல்லாம்.” என்று பற்களைக் கடித்தாள்.
“போதும் டி, சமாதானம்னு சொல்லிட்டு மறுபடியும் இரண்டு பேரும் சண்டை போட்டுக்க போறோம்.” மனைவியின் உதடுகளை ஒற்றை விரலைக் கொண்டு கண்ணன் மூட, அதை கடித்து வைத்தவள்,
“எப்பிடி சண்டைப் போட்டாலும் உடனே சமாதானம் ஆகிடணும், ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரியணும்னு மட்டும் நினைக்க கூடாது. கல்யாணத்துக்கான மரியாதையை நாம குடுத்தே ஆகணும்.” கண்டிப்பான குரலில் சொல்ல, சத்தமாகச் சிரித்தான் கண்ணன்.
“ஏன்? நான் என்ன ஜோக்கா சொன்னேன், இப்பிடி சிரிக்கிறீங்க?” நந்தினி முறைக்க,
“நீ சொல்லுற விஷயத்தை இதமா, பதமா, ஏன் ரொமாண்டிக்கா கூட சொல்லலாம். ஆனா நீயும் சொல்லுற பாரு… எஸ் மேடம்னு நானே சல்யூட் வச்சிடப் போறேன்.” கண்ணன் நக்கலடிக்க, அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாகக் கோர்த்து தன் முகத்தருகே அவன் முகத்தை இழுத்தவள்,
“நான் கொஞ்சம் கோவக்காரி தான். மற்றபடி ஐ லவ் யூ அத்தான்…” உதடுகள் கணவனின் உதடுகளோடு தாராளமாக உரச, ராகமாக சொன்னவள், “இவ்வளவு ரொமாண்டிக் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” கண்ணடித்தபடி கேட்டாள்.
அந்த உதடுகளை தனக்குள் எடுத்துக் கொண்டவன், “இதுக்கு பதில் இவ்வளவு வெளிச்சத்துல சொல்லக்கூடாது செல்லம்.” என்றபடி மனைவியோடு சேர்த்து விளக்கையும் அணைத்திருந்தான்.