அத்தியாயம் 17
“கிளம்பலாமா ம்மா?” கண்ணன் கேட்க,
“சாப்பிட்ட உடனே கிளம்ப இது ஒன்னும் அடுத்த வீட்டு கல்யாணம் இல்லடா, உன் தங்கச்சியோட புகுந்த வீட்டு கல்யாணம். கொஞ்சநேரம் உக்கார்ந்துட்டே போவியாம்.” என்றார் லீலாவதி.
“வேலையிருக்கு நீங்க மட்டும் போயிட்டு வாங்கன்னு சொன்னவனை தலையை மட்டும் காட்டிட்டு வந்துடுன்னீங்க, அடுத்து சாப்பிடாம போனா நல்லாயிருக்காது. இப்போ சாப்பிட்ட உடனே கிளம்பினா நல்லாயிருக்காது, நல்லா பண்ணுறீங்கம்மா.” அலுத்துக் கொண்டே நாற்காலியை இழுத்து போட்டுக்கொண்டு அமர்ந்தான் கண்ணன்.
“உனக்கு வேற தனியா சொல்லணுமா நந்து? உக்காரு, போகலாம்.” வீட்டுக்கு போய் உடையை மாற்றிக்கொண்டு மதியத்துக்கு மேலாவது அலுவலகம் போய்விடலாம் என்று நினைத்தபடி, நின்றிருந்த மருமகளிடம் லீலாவதி சொல்ல, மறுபேச்சில்லாமல் அமர்ந்து கொண்டாள்.
நாதன், லீலாவதி, கண்ணன், நந்தினி என்று குடும்பமாகத்தான் வந்திருந்தார்கள். இளையவன் அருள் வேலை விஷயமாக சென்னைவரை சென்றிருப்பதால் வரவில்லை.
திலகத்திற்கும் அழைப்பு உண்டு தான். ஒரு திருமண ஆர்டர் டெலிவரியில் கடைசிகட்ட வேலைகள் மீதம் இருப்பதால் வர இயலாமல், மணமக்களுக்கு வாழ்த்துகளையும் பரிசையும் லீலாவதி மூலம் அனுப்பியிருக்கிறார்.
வேலை இருக்கிறது என்று வரமறுத்த மகனையும் மருமகளையும், “இப்பிடியே வேலை வேலைன்னு ஓடிட்டு, திரும்பி பார்த்தா உங்களுக்கு சொந்தம்னு யாரும் இருக்கமாட்டாங்க. எல்லார் வீட்டு விசேஷத்துக்கும் போகலைன்னாலும், முக்கியமானவங்க வீட்டுக்கு போயே ஆகணும்.” இப்படிச்சொல்லித் தான் அழைத்து வந்திருந்தார் லீலாவதி.
இரண்டு ஜோடியும் அவரவர் இருசக்கர வாகனத்தில் தான் வந்திருந்தார்கள்..
“நானும் வந்த நேரத்துலயிருந்து பாத்துட்டேதான் இருக்கிறேன். உங்களுக்குள்ள என்னவோ மிஸ் ஆகுதே? ரெண்டு பேருக்குள்ளயும் எதுவும் மனஸ்தாபமா?” இருவரும் அமர்ந்திருந்த நாற்காலியின் இடைவெளியை உற்றுப் பார்த்தபடி லீலாவதி கேட்க,
“லீலா… எங்கவச்சி, என்ன கேக்குற?” அதட்டினார் நாதன்.
“கேக்கணும்னு நினைச்சா உடனே கேட்டுறணும்ங்க, நாள் நட்சத்திரம் எல்லாம் பாத்துட்டு இருக்கக்கூடாது.” பளிச்சென்று கணவனுக்கு பதில் சொன்னவர், “என் கேள்விக்கு இன்னும் பதில்வரல” என்றார் மகனையும் மருமகளையும் பார்த்து.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல ம்மா.” கண்ணன் சொல்ல,
“ஆமா” என்றாள் நந்தினி.
“என்னடா? ஒரு கேள்விக்கு இரண்டு பதில் வருது?” மகனை லேசாக முறைத்த லீலாவதி,
“என்னாச்சு நந்து?” என்றார் மருமகளிடம்.
கணவனை சவாலாக பார்த்த நந்தினி, நடந்தது அத்தனையும் அத்தையிடம் சொல்ல, மகனை வெட்டவா குத்தவா என்று பார்த்தார் லீலாவதி.
“அதெப்பிடிடா பொண்டாட்டிக்கு தெரியாம ஒரு விஷயத்தை செய்வ? அவ்வளவு தான் நீ அவளுக்கு குடுக்குற மரியாதையா? நீயெல்லாம் லாயர்னு வெளிய சொல்லிக்காதடா? இதுக்கு மேல அவளுக்கு தெரியாம ஒரு விஷயத்தை செய்யணும்னு நினைச்சிகூட பாக்கக்கூடாது நீ.” மகனை அதட்டியவர், அறிவுரைகளை போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு அள்ளி தெளித்துவிட்டார்.
தன் பங்குக்கு நாதனும் மகனுக்கு அறிவுரை சொல்ல, “போதுமா? உனக்கு இப்போ சந்தோஷமா?” கண்ணன் கேட்க, பளிச்சென்ற புன்னகை நந்தினியிடம். கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகிறது நந்தினி இப்படி சிரித்து.
இந்த ஒரு வாரத்தில் எப்போதும் போல தான் கண்ணன் மனைவியிடம் நடந்து கொள்கிறான். ஆனால் இன்னமும் மெல்லிய கோபம் நந்தினிக்கு கணவன் மீது இருந்துகொண்டு தான் இருக்கிறது.
“சரி… கடைசியில என்ன ஆச்சு? அந்த பையனை மன்னிச்சு விட்டியா? இல்ல, கேஸ் எதுவும் ஃபைல் பண்ணுனியா? அதை மொதல்ல சொல்லு.” லீலாவதி மருமகளை அவசரப்படுத்த,
“அந்த பையனுக்கு நம்பிக்கை குடுத்ததுக்கு அப்புறம் ஏமாத்த முடியாதே அத்த, அதான் போனாப் போகுதுன்னு வார்ன் மட்டும் பண்ணி விட்டுட்டேன்.” என்றாள்.
“அதாவது, உம்புருஷனோட சொல்லை காப்பாத்திட்டன்னு சொல்லுற, அப்பிடித்தானே?”
“இந்த ஒருதடவை மட்டும் தான் அத்த, இதுக்கு மேல இப்பிடி நடந்தா யாருக்காகவும் பார்க்க மாட்டேன்.” ஒருமாதிரி குரலில் உறுதியாக சொன்னாள்.
“நல்லா கேட்டுக்கடா.” மகனிடம் லீலாவதி சொல்ல,
“என்னவோ என்னை குற்றவாளி ரேன்ஜ்ஜுக்கு பாக்குறதை விட்டுட்டு உங்க மருமகளுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்கம்மா.” முகத்தைச் சுளித்தான் கண்ணன்.
“என் தங்கத்துக்கு அட்வைஸ் எல்லாம் தேவையில்லடா, அவளே புரிஞ்சு நடந்துக்குவா? உனக்கு தான் வாரம் தோறும் வந்து அட்வைஸ் செய்யணும் போல.” லீலாவதி கேலியாக சொல்ல, நந்தினியிடம் வாய் கொள்ளா சிரிப்பு.
“சரி… சரி…இந்த சிரிப்போடே இரண்டு பேரும் கிளம்புங்க. நாங்க கொஞ்சநேரம் கழிச்சு கிளம்புறோம்.” லீலாவதி சொல்லவும், தங்கையிடம் சொல்லிவிட்டு மனைவியோடு கிளம்பிவிட்டான் கண்ணன்.
இருவரும் கண்ணனின் இருசக்கர வாகனத்துக்கு அருகே வந்திருந்தார்கள். பட்டுப்புடவை அணிந்திருந்த மனைவியைப் பார்த்தபடியே, “ஒரு பக்கமா கால் போட்டு உக்காந்துடுவியா?” சந்தேகமாக கேட்டான் கண்ணன்.
“ஏன் கேக்குறீங்க? வரும்போது உக்கார்ந்திருந்தேன் தானே?”
“அதனாலத்தான் கேக்குறேன், வேணும்னா டாக்ஸி புக் பண்ணுறேன் போறியா?” கண்ணன் கேட்க, அவனை முறைத்தாள்.
“சின்சியர் சிகாமணி மேடம்… நீங்க ஆபீஸுக்கு தானே போகப்போறீங்க, அதான் சொன்னேன்.” தன் பேச்சுக்கு கண்ணன் விளக்கம் சொல்ல,
“பட்டுப்புடவையை கட்டிகிட்டு ஆபீஸுக்கு போக முடியுமா? வீட்டுல கொண்டு விடுங்க, நான் இன்னைக்கு லீவ் போடப் போறேன்.” என்றாள்.
“உண்மையாவா? அப்போ இன்னைக்கு மழை வரப்போகுது.” கேலி செய்தவன்
“சரி, ஏறி உக்காரு” என்று சொல்ல, கணவனின் தோளைப் பிடித்துக்கொண்டு ஏறிய நந்தினியின் வலது கை பிடிமானத்திற்காக அவன் தோளிலேயே தங்கிவிட்டது.
“ம்ம்… இதுவும் நல்லாத்தான் இருக்கு, இதுக்காகவே மாசத்துல ஒருதடவை பைக்ல லாங் ட்ரைவ் போலாம் போல.” வண்டியை நகர்த்தியபடியே ரசனையாக சொன்னான் கண்ணன்.
“ஏன்? வாரத்துல ஒருநாள் போனா குறைஞ்சு போயிடுவீங்களா என்ன?”
“வாரத்துல ஒருநாள்? அதுவும் நீ… அப்படியே கூப்ட உடனே வந்துடுவ பாரு?” நக்கலடித்தான்.
“மொதல்ல கூப்பிட்டு பாருங்க லாயர் சர்.” நந்தினியும் சளைக்காமல் பதிலுக்கு பேச,
“நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?” என்று உற்சாகமாக சீட்டியடித்தான்.
“ஏன்? வேற யாரும் பேசுவாங்கன்னு எதிர்பாத்தீங்களா என்ன?” இடது கையால் கணவனின் முதுகில் பொத்தென்று அடித்தபடி நந்தினி கேட்க,
“அப்பிடியொரு எண்ணம் இருந்தாலும், இதுக்கு மேல வரும்னு நினைக்கிற?” ஒற்றைக் கையால் முதுகைத் தடவியபடி சொன்னான்.
“ம்ம்… அந்த பயம் இருக்கணும்.” கேலியாக சொன்னவளுக்கு, இந்த ஒருவாரகாலமாக கணவனோடு சரிவர பேசாததால் மனதில் இருந்த இறுக்கம் தளர்ந்து மனம் லேசானது போல இருந்தது.
கேலியும் கிண்டலுமாக இருவரது பயணமும் தொடர, மார்க்கெட் பகுதியும் வந்திருந்தது.
“தோ, அந்த கடைல என்னை விட்டுட்டு நீங்க கிளம்புங்க த்தான், நான் கொஞ்சம் ப்ரொவிஷன்ஸ் வாங்கிட்டு வீட்டுக்கு போறேன்.” விரலை நீட்டி ஒரு பெரிய பலசரக்கு கடையைக் சுட்டிக் காட்டினாள் நந்தினி.
“என்னென்ன வேணும்னு எனக்கு லிஸ்ட் அனுப்பு, நான் வீட்டுக்கு வரும்போது வாங்கிட்டு வரேன்.” அக்மார்க் கணவனாக கண்ணன் சொல்ல,
“ஏன்? நீங்க தான் வீட்டுச்செலவை பாக்கணுமா? பொண்டாட்டி நான் பாத்தா குத்தமா என்ன?” முசுட்டுக்குரலில் வந்தது கேள்வி.
“குத்தமா? யாரு சொன்னா? இப்போ மட்டும் இல்ல, மாசா மாசம் வீட்டுச்செலவை நீ பாத்துக்கிட்டா கூட சுமார் வருமானம் உள்ள அப்பாவி வக்கீலான எனக்கு சந்தோஷம் தான். அப்பிடியே எனக்குகூட கொஞ்சம் திங்க்ஸ் தேவைப்படுது, அதையும் வாங்கிக்கொண்டு தந்தா உனக்கு ரொம்ப புண்ணியமா போகும்.” கேலியாக சொன்னபடியே மனைவி சுட்டிக் காட்டிய கடைக்கு முன்னால் பைக்கை கொண்டு நிறுத்தியவன், தனக்கு தேவையான பொருட்களையும் சொன்னான்.
“அப்பாவி வக்கீல்? சுமார் வருமானம்? நம்பிட்டோம்.” கேலியாக உதட்டைப் பிதுக்கிய நந்தினி, கணவன் சொன்ன பொருட்களை மனதில் குறித்துக் கொண்டு கடைக்கு சென்றாள்.
அவளைத் தெரிந்திருந்த கடை உரிமையாளரிடமிருந்து நந்தினிக்கு வரவேற்பு பலமாகவே இருந்தது. அதுவே அசௌகர்யமாக இருக்க, தேவையான பொருட்களை எல்லாம் வேகமாக வாங்கி முடித்தவள் பில் கேட்டாள்.
“ஹிஹி… பரவாயில்ல மேடம், நம்ம வீட்டுக்கு தானே, இருக்கட்டும்.” தலையைச் சொரிந்தபடி அசட்டுச் சிரிப்பு சிரித்தார் கடையின் முதலாளி.
“ஹலோ, நம்ம வீட்டுக்கு இல்ல, என் வீட்டுக்கு வாங்கியிருக்குறேன். பில்லைக் கொடுங்க.” அதட்டினாள்.
“உங்ககிட்ட போய் எப்பிடி மேடம் பணம் வாங்குறது?” அந்த மனிதர் சொல்ல, ஜிவ்வென்று கோபம் ஏறியது நந்தினிக்கு.
“லஞ்சம் வாங்குறது மட்டுமில்ல, கொடுக்க முயற்சி செய்யுறதுமே குற்றம் தான். எனக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்யுறீங்கன்னு உங்களைப் பிடிச்சு உள்ள தூக்கி போடலாம். எப்பிடி வசதி?” என்றாள் கண்டிப்பான குரலில்.
“மேடம்…” அந்த ஆள் பதறிப்போக,
“ஐயோ பாவம்னு இந்த முறை விட்டுட்டு போறேன். இனிமேலாவது யாரையும் தப்பு செய்ய தூண்டாதீங்க.” எச்சரிக்கும் குரலில் சொன்னவள், வாங்கிய பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு திரும்பி நடந்தாள்.
“மேடம்… பில் கொடுக்குறேன், பணத்தை கட்டிட்டு பொருள்களை எடுத்துக்கோங்க.” அந்த கடைக்காரர் சொல்ல,
“உங்கப் பொருள் உங்ககிட்டயே இருக்கட்டும், எனக்கு வேண்டாம்.” அலட்சியமாக சொல்லியபடி அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
‘போலீஸ் என்றால் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இவர்களிடம் கையேந்துபவர்கள் என்றா?’ நினைக்க நினைக்க நந்தினிக்கு கோபம் அதிகரித்ததேயன்றி குறையவில்லை.
ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே பக்கத்தில் இருந்த டீ ஷாப்பில் நுழைந்து ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள். கண்கள் இயல்பாக சுற்றுப்புறத்தை அளவிட, அவளுக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு யுவதிகள் மீது பதிந்தது பார்வை.
‘இதில் ஒரு பெண், அந்த வரதட்சணை வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் தானே?’ நந்தினி கண்டுகொள்ள,
“என்ன யுவா? ரொம்ப ஹேப்பியா இருக்காப்போல இருக்கு?” அந்த பெண்ணோடு இருந்த மற்றொரு பெண் பேசத் தொடங்கினாள்.
“இருக்காதா பின்ன, நான் நினைச்சது நடக்கப் போகுதே?” கண்களை சிமிட்டியபடி உற்சாகமாக பதில் சொன்னாள் அந்த யுவா. அந்த உற்சாகமும் பேச்சும் ஏதோ சரியில்லாதது போலவே நந்தினிக்கு தோன்ற, தன்னுடைய மொபைல் போனில் அந்த யுவதிகளுக்கிடையே நடைபெறப் போகும் உரையாடலை வீடியோவாக எடுக்க தயார் செய்த நந்தினியின் காதுகள் அவர்களின் பேச்சை கூர்மையாக கேட்க தயாரானது.
“என்ன இருந்தாலும் உம்புருஷன் பாவம்டி.” தோழிப்பெண் சொல்ல,
“புருஷனாம் புருஷன், புல்ஷிட்…” என்று பற்களைக் கடித்த அந்த யுவா,
“அப்பிடி யாரும் என்வாழ்க்கையில தேவையில்லன்னு என்னை பெத்ததுங்ககிட்ட சொன்னா கேக்கல. கல்யாணம் பண்ணிக்கலைன்னா சொத்து தரமாட்டோம் அது இதுன்னு மிரட்டுனாங்க. நமக்கு கல்யாணம் தான் வேண்டாம், ஆனா சொத்து வேணுமே. அதான் அவங்க விருப்பத்துக்கு தலையாட்டுனது போல நடிச்சேன்.”
“கல்யாணமும் நடந்தது. அந்த மாப்பிள்ளை மண்ணாந்தைகிட்ட எனக்கு மேரேஜ் ஃபியர், கொஞ்சம் டைம் வேணும்னு கேட்டேன், அவனும் நம்பிட்டான். என்னை பெத்ததுங்ககிட்ட கூடுதல் வரதட்சணை கேக்குறாங்கன்னு ஓன்னு போன்ல அழுதேன். அலறி அடிச்சிகிட்டு வந்து நின்னாங்க. அந்த மாமியார் கிழவியை வச்சிகிட்டே கூடுதல் வரதட்சணை பணம் தந்தா தான் எம்மகனோட வாழவிடுவேன்னு சொன்னதா என் அம்மாகிட்ட சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது, அந்த கிழவிக்கு கோபம் வந்து என் அம்மா முன்னாடியே என்னை அடிச்சிடிச்சு. வலிதான், ஆனாலும் என்னோட கல்யாண வாழ்க்கைக்கு என்ட்கார்ட்டு போட ட்ரம்கார்ட்டா அதுதான் யூஸ் ஆச்சுது. இனி நான் அந்த வீட்டுக்கு போறேன்னு சொன்னாகூட என்னை பெத்தவங்க அந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம்னு சொல்லி டிவோர்ஸ் வாங்கி குடுத்துட்டு தான் மறுவேலை பாப்பாங்க.” மூச்சு விடாமல் உற்சாகமாக பேசி முடித்தாள் அந்த யுவா.
“ஒருவேளை செகண்ட் மேரேஜுக்கு உன்னை ஃபோர்ஸ் பண்ணினா?”
“எதுக்கு டி இப்பிடியொரு கேள்வியைக் கேக்குற? நான் சந்தோஷமா இருக்குறது உனக்கு பிடிக்கலையா?” கோபமாக தோழியிடம் அலுத்துக்கொண்ட அந்த பெண்,
“மொதக்கல்யாணத்தோட காயமே இன்னும் ஆறலைன்னு கண்ணீர் விட்டே தப்பிச்சிடுவேன்ல.” என்று வில்லங்கமாக சிரிக்க, கேள்வி கேட்ட பெண்ணும் சேர்ந்து சிரித்தாள்.
“கல்யாணமாம் கல்யாணம். நான் பொறந்து, வளர்ந்து, படிச்சு வேலைக்கு போனது எல்லாம் ஒரு ஆம்பிள்ளைக்கு சமைச்சு போட்டு, அவனுக்கு பிள்ளை பெத்துப்போட்டு அடிமை வாழ்க்கை வாழவா? இல்ல, இல்லவே இல்ல. எந்த பொறுப்பும் கட்டுப்பாடும் என் வாழ்க்கையில இருக்கவேக் கூடாது. சுதந்திரமா என்னோட வாழ்க்கையை என் இஷ்டத்துக்கு நான் வாழணும்.” கண்கள் கனவில் விரியச் சொன்னாள் அந்த யுவா.
கேட்டுக்கொண்டிருந்த நந்தினி உண்மையிலேயே அதிர்ந்து போனாள். இப்போதைய தலைமுறையிடம், திருமணம், குழந்தை, குடும்பப் பொறுப்பு, இவை எல்லாவற்றையும் சுமையாக கருதும் மனப்பாங்கு வளர்ந்து வருவதை அவளும் அறிவாள் தான். ஆனால் திருநெல்வேலி போன்ற கிராமம் சார்ந்த நகரத்தில் அப்படியொரு மனநிலையை உடைய இளைய தலைமுறையை முதன்முதலாகப் பார்த்ததில் ஆடித்தான் போனாள்.
“உன்னோட எண்ணம் உனக்கு. அதை உன்னை பெத்தவங்களுக்கு நேர்மையான முறையில் புரிய வச்சிருக்கணும். அதை விட்டுட்டு இன்னொருத்தங்க வாழ்க்கையில கைவைக்க நீ யாரு?” அதட்டியபடியே அந்த பெண்களின் மேஜையில் வந்து அமர்ந்திருந்தாள் நந்தினி.
தான் நினைத்தது நடக்கப்போகும் உற்சாகத்தில் சுற்றுப்புறத்தை கவனிக்க மறந்திருந்த அந்த யுவா திகைத்து போனாள். அவளுக்கும் நந்தினியை தெரிந்திருக்கவே, “மேடம்…” என்றாள் காற்றாகிப்போனக் குரலில்.
“இவ்வளவு சீப்பா ப்ளான் பண்ணி ஒரு ஆளோட வாழ்க்கையை வீணாக்கியிருக்குறியே, உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தலையா?” கோபமாக நந்தினி கேட்க,
“என்ன… என்ன சொல்லுறீங்க மேடம்?”எதுவும் தெரியாதது போல அப்பாவியாக கண்களைச் சிமிட்டியது அந்த பெண்.
“உன் நடிப்பை உன்னைப் பெத்தவங்ககிட்ட வச்சிக்கோ, எங்கிட்ட இல்ல.” கண்டிப்பான குரலில் சொல்லிய நத்தினி, தன்னுடைய மொபைலை உயர்த்திக் காட்டியபடி,
“எல்லாம் ரெக்கார்டட், இப்போ வா போலாம்.” என்றபடி எழுந்தாள்.
“எங்க மேடம்?” தைரியமாகவே கேட்டாள் யுவா.