பணியில் சேர்ந்தது முதல் நந்தினி நேர்மையாக இருந்ததோடல்லாமல், தனக்கு கீழ் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்களையும் அப்படியே இருக்க அறிவுறுத்தினாள்.
“நான் இங்க சர்வீஸ்ல இருக்குற வரையிலும் அன்பளிப்பு, கையூட்டு, லஞ்சம் இப்பிடி வாங்குறவங்க, எல்லாத்தையும் மறந்துடுங்க. முடியாதுன்னா, தயவு செய்து ட்ரான்ஃபர் வாங்கிட்டு, இங்கயிருந்து போயிடுங்க.”
இப்படி சொன்னதோடல்லாமல் கடுமையாகவும் கண்டிப்பாகவும் அவள் பணியிடத்தில் நடந்துகொள்ள, ஏற்கனவே கையூட்டு அன்பளிப்பு என்று செழித்து வளர்ந்திருந்த ஒரு சிலருக்கு நந்தினியின் கட்டுப்பாடுகள் எரிச்சலைக் கொடுத்தது. அதன் பிரதிபலிப்பே உன் கணவன் என்ன யோக்கியமா என்ற ரீதியிலான அந்த காவலரின் இன்றைய பேச்சு.
ஆக, மொத்த கோபத்தையும் சுமந்துகொண்டு வீட்டுக்கு வந்தவள், சம்மந்தப்பட்டவனிடம் அதை இறக்கி வைக்க முயன்றாள்.
“விபத்துல பாதிக்கப்பட்டது நானும் சுரேந்தரும். எங்ககிட்ட கலந்துக்காம நீங்க மட்டும் எப்படி இப்படியொரு முடிவெடுக்கலாம்? சொல்லுங்க, ஏன் இப்படி செஞ்சீங்க?” நந்தினியிடமிருந்து கோபமாக வந்தது கேள்வி.
“அந்த பையனோட சிச்சுவேஷன் அப்பிடி நந்து. அதோட உங்களுக்கும் பெருசா பாதிப்பு எதுவும் இல்லையே. அதான், பாவம் பொழைச்சி போகட்டும்னு விட்டுட்டேன்.” அவனுடைய அன்றைய மனநிலை என்னவாக இருந்ததோ அதை அப்படியே மனைவியிடம் சொன்னான்.
“விட்டீங்கல்ல, ஏன் அதை எங்கிட்ட சொல்லலை? அப்பிடி சொல்லியிருந்தா இன்னைக்கு இப்பிடியொரு சூழ்நிலையை நான் ஃபேஸ் பண்ணியிருக்க வேண்டாமே? எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்டு நின்னுருக்க வேண்டாமே?” நடந்த நிகழ்விலிருந்து வெளியே வரமுடியாமல் முகம் கசங்கியது பெண்ணுக்கு.
“ஒருவேளை நான் சொல்லுறதைப் புரிஞ்சிக்காம அந்த பையன் மேல ஆக்ஷன் எடுத்தே ஆகணும்னு நீ பிடிவாதம் பிடிச்சா, அவனோட நிலமை கஷ்டமாகிப் போகுமே. அதான், சூழ்நிலையை காம்ப்ளிகேட் ஆக்க வேண்டாம்னு உங்கிட்ட சொல்லல.” மனைவியிடம் சொல்லாமல் விட்டது தன்னுடைய தவறு என்பதால் தன்மையாகவே பதில் சொன்னான்.
“ஓ… பரவாயில்லயே! பொண்டாட்டியை தவிர வேற எல்லார் மேலயும் ரொம்பவே அக்கறை இருக்கு உங்களுக்கு.” அதிகப்படியான நக்கலை குரலில் குழைத்துச் சொன்னவள்,
“அப்போ உங்களைப் பொறுத்தவரை நான் கோவக்காரி, கொடூரமானவ, தேவையில்லாம பிடிவாதம் பிடிக்கிற முட்டாள், அப்படித்தானே?” என்றாள் ஒருமாதிரிக் குரலில்.
“நான் சொன்னதுக்கு அர்த்தம் அது இல்ல நந்து. உன்னோட வேலையில நீ ரொம்பவுமே பெர்பெக்ட்டா இருக்குற ஆளு. உனக்கு யாருக்காகவும் எதுக்காகவும் வளைஞ்சு குடுக்கத் தெரியாது. அது எனக்காகவே இருந்தாலும் கூட. அதான் உங்கிட்ட சொல்லாம விட்டேன். ஆனா அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு இப்போ புரியுது.” பேசியபடியே மனைவியை ஆறுதல்படுத்த அவளுடைய கைகளை பிடிக்க முயன்றான்.
அதற்கு அனுமதிக்காதவள், “ஆமா… நாம எதையும் இனாமா செய்யுற ஆள் இல்லையே… அந்த பையன்கிட்ட இருந்து இதுக்காக எவ்வளவு வாங்குனீங்க? சும்மா எங்கிட்ட மட்டும் சொல்லுங்க.” என்றாள் குரலைத் தழைத்து.
அவ்வளவு தான், இத்தனை நேரமும் கடைபிடித்த அமைதியை காற்றில் பறக்கவிட்டிருந்த கண்ணன், “என்ன பேசுற நந்தினி…” கோபத்தில் குரலை உயர்த்தி அதட்டினான். அவன் கண்கள் இரண்டும் கூட கோபத்தில் சட்டென்று சிவந்து போய்விட்டன.
“ஹ்ம்ம்… இந்த ரூம்ல நாம ரெண்டுபேர் மட்டும் தான் இருக்கோம். நான் உங்க மனைவி, அப்பிடியிருந்தும் என்னோட கேள்வி உங்களுக்கு இவ்வளவு கோபத்தைக் கொண்டுவருது. பாருங்க, உங்க கண்ணெல்லாம் கூட சிவந்து போச்சு. இதேக் கேள்வியை கொஞ்சம் மாத்தி என்னைப் பாத்து நட்டநடு ரோட்டுல வச்சி யாரோ ஒருத்தன் கேக்குறான். எனக்கு எப்பிடி இருந்திருக்கும் சொல்லுங்க? இதெல்லாம் யாரால? உங்களால, உங்களால மட்டும் தான் இன்னைக்கு நான் அசிங்கபட்டுப் போய் வந்துருக்கேன். அதுக்கு என்னப் பண்ணப் போறீங்க, பதில் சொல்லுங்க?” கணவனின் மார்பில் கைவைத்து தள்ளியபடி கேட்டவளின் குரலில் மிதமிஞ்சிய கோபம் இருந்தது.
நந்தினி சொன்ன விஷயத்தில் கண்ணனின் நெஞ்சமே குலுங்கிவிட்டது. தன்னுடைய வேலையில் மனைவி எத்தனை நேர்மையானவள் என்று கணவனாக அவனுக்கு தெரியும் தானே. அப்படிபட்டவளை யாரோ கேள்வி கேட்டிருக்கிறார்கள் என்றால், எல்லாம் அவனால், அவனுடைய முடிவால் அல்லவா?
“என்ன நந்து சொல்லுற? சொல்லு, என்ன நடந்ததுன்னு எங்கிட்ட சொல்லு?” அப்படியே மனைவியின் கையை தன்னுடைய மார்போடு சேர்த்து பிடித்தபடி கேட்டான்.
“நீங்க எங்கிட்ட எதுவும் சொன்னீங்களா? நான் மட்டும் எதுக்கு உங்களுக்கு சொல்லணும்? ஹாங்…” திமிராக சொல்லியபடி அவன் மார்பிலிருந்து கைகளை உருவிக்கொண்டாள்.
“ஏய், சொல்லுடி, என்ன நடந்தது? அந்த பையனை எங்க வச்சி நீ பாத்த?” விடாமல் கண்ணன் கேட்க, நன்றாக கத்திக்கொண்டிரு என்பது போல அவனைக் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர ஆரம்பித்தாள்.
“நான் செய்தது தப்பு தான். அந்த பையனை உம்முன்னாடி கொண்டுவந்து நிறுத்தியிருக்கணும். அவனோட சிச்சுவேஷனை எடுத்து சொல்லியிருந்தா ஒருவேளை நீயே கூட அவனை மன்னிச்சு விட்டுருக்கலாம். இல்லையா, அவனுக்காக உங்கிட்ட நான் ஃபைட் பண்ணியிருக்கலாம். இதோ இப்போ போடுற சண்டையை விடவா நாம பெருசா போட்டுற போறோம்? அதை விட்டுட்டு நானா முடிவெடுத்து, அதையும் உங்கிட்ட சொல்லாம உன்னை சிக்கல்ல மாட்டி விட்டது என்னோட தப்பு தான். எவன் என்ன சொன்னான்னு சொல்லு, அவன் வாயை உடைச்சிடுறேன்.” மனைவியின் கையைப் பிடித்திழுத்து நகரவிடாமல் செய்தவனின் தாடை கோபத்தில் இறுகியிருந்தது.
“ஏன்? எஸ்பியோட புருஷன் ரௌடி வக்கீல்னு சொல்லவா?” இப்போது மட்டும் தாராளமாக வாயைத் திறந்து நக்கலடித்தாள்.
“நீ சொல்லலைன்னா பரவாயில்ல, நான் சபேசன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குறேன்.” என் மனைவியை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாமா என்ற தார்மீக கோபம் கண்ணனை சுழற்றியடிக்க, அலைபேசியை கையிலெடுத்தான். அதற்காகவே காத்திருந்தது போல, அதுவும் ஓசை எழுப்பியது.
தெரியாத எண்ணிலிருந்து தான் அழைப்பு வந்திருந்தது. யோசனையோடே அழைப்பை ஏற்று கண்ணன் காதுக்கு கொடுக்க,
“தேங்க் காட், ஒருவழியா உங்க நம்பரை கண்டுபிடிச்சிட்டேன் சர்” என்ற குரல், தன்னை ராகுல் என்றும் அறிமுகம் செய்து கொண்டது.
“ராகுலா?” கண்ணன் யோசிக்க,
“ம்ம்… சர், நான் அந்த விபத்து பார்ட்டி” என்றான் தயக்கத்தோடு.
‘‘யப்பா டேய், உன்னால தான்டா இங்க வீடே ரணகளமா இருக்குது.’’ என்றவன், மனைவியைப் பார்த்தபடியே,
“இன்னைக்கு என்ன நடந்தது? ஒன்னு விடாம சொல்லு.” என்றான் கட்டளையாக.
அந்த ராகுலும் ஒன்றுவிடாமல் அத்தனையையும் கண்ணனிடம் ஒப்பித்துவிட்டான். அதில் அந்த காவலர் சொன்ன வார்த்தைகளும் அடக்கம்.
உடன் பணிபுரியும் காவல் அதிகாரியிடமிருந்தே விமர்சனம் வந்திருக்கிறது என்று தெரிந்தபோது அதிர்ச்சியாகத் தான் இருந்தது கண்ணனுக்கு. மனைவியின் பணிச்சூழல் அவனுக்கும் ஓரளவிற்கு தெரியும். நந்தினியின் நேர்மையை மாவட்ட மக்கள் கொண்டாடும் அளவுக்கு, அவளுடன் பணிபுரியும் சில சகஅலுவலர்களுக்கு பிடித்தம் இல்லை என்பதுவும் தெரியும்.
ஆனால் இந்த அளவுக்கு அவளுடைய முகத்துக்கு நேரே கேலி செய்ய வேண்டும் என்றால் மனதில் எவ்வளவு வன்மம் இருக்க வேண்டும்? உள்ளுக்குள் கொதித்தது.
“அந்த ஆளை உன்னால அடையாளம் காட்ட முடியுமா?” ராகுலிடம் கேட்க,
“கண்டிப்பா, ஆனா ஏன் சர்?” என்றான்.
“ம்ம், உங்கிட்ட இருந்து ஸ்பெஷல் ஃபீஸ் எவ்வளவு வாங்குனேன்னு அந்த ஆளுக்கு சொல்லணும்ல, அதுக்கு தான்.” மீசையை முறுக்கிவிட்டவன், ஓரக்கண்ணால் மனைவியை பார்த்தபடியே சொல்ல, அலட்சியமாக உதட்டைச் சுளித்தபடி அறைக்குள் சென்று விட்டாள்.
அவளுக்கு யாரோடு கணவன் பேசிக்கொண்டிருக்கிறான் என்று புரியத்தான் செய்திறது. என்றாலும் அதற்கு மேலும் அங்கே நின்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்பதில் ஆர்வம் காட்டவில்லை.
“சொல்லு, எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு எனக்கு ஃபோன் பண்ணியிருக்க?” கண்ணன் விஷயத்துக்கு வர,
“மேடம் நாளைக்கு அப்பாவையும் கூட்டிட்டு என்னை எஸ்பி ஆஃபீஸுக்கு வரச் சொல்லியிருக்காங்க சர்.” என்றான் ராகுல் சோகமாக.
“போயிட்டு வா.” சாதாரணமாக கண்ணன் சொல்ல,
“சார்…” அலறினான் ராகுல்.
“என்னடா?”
“ஒருவேளை எம்மேல மேடம் கேஸ் ஃபைல் பண்ணிட்டா என்ன செய்யுறது?” அழுதுவிடுபது போலக் கேட்டான்.
“இப்போ உங்க அப்பாவுக்கு உடம்பு சரியாகியிருக்கும் தானே? சோ, செய்த தப்புக்கு தண்டனையை அனுபவி. அப்போ தான் உனக்கு புத்தி வரும்.”
“ஐயோ சர், இந்த இன்சிடென்ட் க்கு அப்புறம் நான் புல்லட்டையே தொடலை தெரியுமா? இ பைக் ஓட்டுறேன். அதுவும் ரொம்ப அவசியம்னா மட்டும் தான் பைக்ல போறது. ப்ளீஸ் சர், என்னைக் கைவிட்டுடாதீங்க, நீங்களும் எங்ககூட நாளைக்கு எஸ்பி ஆபீஸ் வந்தா எனக்கு தைரியமா இருக்கும்.” பரிதாபமாக கெஞ்சினான்.
‘நானா? நான் வந்தா தான் டா உனக்கு ஏழரையே ஆரம்பிக்கும்.’ மனதுக்குள் முணுமுணுத்தவன்,
“பயப்படாத, மேடம் கேக்குறதுக்கு ஒளிவு மறைவில்லாம பதில் சொல்லு. எல்லாம் நல்லதாவே நடக்கும்.” என்றான் குடுகுடுப்பைக்காரன் போல. எதிர்முனையில் இருப்பவனுக்கு வேறு எப்படி நம்பிக்கை கொடுப்பது என்று அந்த வழக்கறிஞனுக்கே தெரியவில்லை.
கண்ணன் பேசி முடிக்கவும், குளித்து உடைமாற்றி நந்தினி அறையை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
“குளிக்கவே செய்துட்டியா? வா, சாப்பிடலாம்.” தங்களுக்குள் எதுவுமே நடக்காதது போல மனைவியை அழைத்தான்.
அவளோ பதிலேதும் சொல்லாமல் சமையலறைக்கு சென்று, காலையில் செய்து குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருந்த சாம்பாரை எடுத்து சூடாக்க ஆரம்பித்தாள்.
“தோசையா, இட்லியா.” முயற்சியை கைவிடாதவனாக கண்ணன் தொடர்ந்து பேச, பதிலேதும் சொல்லாமல் தோசைக்கல்லை அடுப்பில் போட்டு தோசை வார்த்து சாப்பிட ஆரம்பித்தவள், உண்டு முடிக்கவும் அடுப்பை ஆஃப் செய்தாள்.
“எனக்கு?” கண்ணன் அவசரமாக கேட்க,
“வேற எல்லாம் தன்னிச்சையா செய்யத் தெரியுதுல்ல, தோசை சுட்டு சாப்பிட தெரியாதா என்ன?” வெட்டினாற் போல பதில் சொல்லியவள், கையைக் கழுவினாள்.
“பொண்டாட்டி ராஜ்ஜியம் தான் நடக்குது, இங்கே புருஷனுக்கு மதிப்பு எங்கே இருக்குது.” சூழ்நிலையை மறந்து கண்ணனின் உதடுகள் சிச்சுவேஷன் சாங் பாடியது.
“எதே? செய்யுறதை எல்லாம் செய்துட்டு பொண்டாட்டி ராஜ்ஜியம் நடக்குதா? உங்களை…” என்றவள், அடிப்பதற்கு தோதாக கையில் ஏதாவது கிடைக்கிறதா என்று சுற்றுமுற்றும் பார்க்க, சட்டென்று பாடுவதை நிறுத்திக் கொண்டவன்,
“இன்னைக்கு எல்லாமே எனக்கு எதிரா திரும்பி நிக்குது, ப்ளீஸ் நந்து, நான் வேணும்னே பாடல, நீ தூங்கப் போ, நான் இதோ வந்துடுறேன்.” என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.
“தயவுசெய்து எதுவுமே நடக்காதது போல ஆக்ட் பண்ணாதீங்க, எனக்கு கோபம் கோபமா வருது.” பல்லைக் கடித்தவள், படுக்கை அறைக்கு சென்று விட்டாள்.
சாப்பிட்டு முடித்து கண்ணன் படுக்கை அறைக்கு வரும்போது வலதுகையை நெற்றியில் மடக்கி வைத்து, விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தாள் நந்தினி.
மனைவியை அப்படி பார்ப்பது ஏதோ போல இருக்க, “நந்து…” என்றழைத்தபடியே அவள் அருகில் அமர்ந்தான்.
“என்னை சமாதானப்படுத்துறேன்னு சொல்லிட்டு ஏதாவது தத்து பித்துன்னு பேசாதீங்க, அதையெல்லாம் கேட்குற மூடுல நான் இல்ல.” விட்டேற்றியாக சொல்லியவள், கணவனுக்கு முதுகுகாட்டியபடி திரும்பி படுத்துக்கொண்டாள்.
மனைவியின் குரலில் இருந்த சோர்வு, அவனை ஏதோ செய்தது. வேறெதுவும் பேச முயற்சி செய்யாமல் மனைவியின் முதுகையே பார்த்தபடி அமர்ந்திருந்தவனுக்கு, திருமணமான புதிதில் அவள் சொல்லிய வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.
“இனிமே நீங்க எதைச் செய்தாலும் அதை என்னோடு, என் பதவியோடு கனெக்ட் செய்து பேசுவாங்க. அதனால எதை செய்தாலும் நல்லா யோசிச்சு செய்யுங்க.” இப்படி மனைவி சொல்லியபோது தனக்கு கோபம் வந்தது கூட தவறாமல் ஞாபகத்துக்கு வந்தது.
ஆனால் அந்த வார்த்தைகள் எந்த அளவிற்கு உண்மை என்பது இப்போது அனுபவப்பூர்வமாகவே தெரிந்துவிட, இதற்கு மேல் கவனமாக இருக்க வேண்டும். தன்னைக் கொண்டு தன் சரிபாதிக்கு எந்தவிதமான தலை இறக்கமும் ஆகிவிடக்கூடாது. முடிவெடுத்துக்கொண்டவன், ஒரு பெருமூச்சோடு மனைவிக்கு அருகே படுத்தான்.
ஆனால் இதற்கு மேல்தான் தன்னைக் காரணியாக கொண்டு மனைவி சுழற்றியடிக்கப்படப் போகிறாள் என்பது அவனுக்கு தெரியவில்லை…