அத்தியாயம் 16
“எது சொல்லுறதா இருந்தாலும் புரியும்படியா சொல்லு நந்து,” கண்டிப்பான குரலில் சொன்னான் கண்ணன்.
“ம்ம், சொல்லிட்டா போச்சு. கொஞ்சநாளைக்கு முன்னாடி எனக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சுதே, அது உங்களுக்கு ஞாபகம் இருக்குதா?” கணவனை ஊடுருவும் பார்வை பார்த்தபடியே நந்தினி கேட்க, திக்கென்றானது கண்ணனுக்கு.
என்றாலும், எதுவரைக்கும் மனைவிக்கு விஷயம் தெரியும் என்பது தெரியாமல் வார்த்தைகளை விட தயாராக இல்லாதவனாக, “ம்ம்…” என்று தலையசைத்தான்.
“அப்போ, இப்பக்கூட விஷயத்தை எங்கிட்ட மறைக்கணும்னு நினைக்கிறீங்க, அப்படித்தானே?” மனைவி குரலை உயர்த்த, விஷயம் தெரிந்து தான் வந்திருக்கிறாள் என்பது உறுதியானது கண்ணனுக்கு.
“சாரி நந்து, நான் உங்கிட்ட சொல்லியிருக்கணும்.” தான் செய்தது ஒருவகையில் தவறு என்று அவன் மனதிற்குமே தெரியும் என்பதால், எந்தவித தயக்கமும் இன்றி மனைவியிடம் மன்னிப்பு கேட்டான்.
“மண்ணாங்கட்டி, உங்க சாரியால இன்னைக்கு எனக்கு நடந்த அவமானத்தை துடைக்க முடியுமா?” கோபத்தில் மூக்கு விடைத்தது நந்தினிக்கு.
வேறொன்றுமில்லை, நந்தினியின் விபத்து நடந்த இரண்டாவது நாளே, அதை செய்த நபரை கண்டுகொண்டிருந்தான் கண்ணன்.
அது ஒரு இளைஞன்.
உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பனைக் காணச்சென்றிருந்த இடத்தில் அந்த இளைஞனை கண்டுகொண்டிருந்தான்.
நண்பனின் நலனை விசாரித்து விட்டு மருத்துவமனைப் படிகளில் கண்ணன் இறங்கிக்கொண்டிருக்க, அதே படிகளில் ஏறிக்கொண்டிருந்தான் அந்த இளைஞன்.
அவனைக் காணவும் ஏதோ ஒரு பொறி தட்டியது கண்ணனுக்கு. அந்த இளைஞனை கூர்ந்து பார்த்தபடி கண்ணன் படியிறங்க, கண்ணனை நிமிர்ந்து பார்த்த இளைஞனிடம் பதட்டம். மறுவினாடியே ஏறிய படிகளிலிருந்து அந்த இளைஞன் வேகமாக இறங்கத் தொடங்க, சற்றும் தாமதிக்காமல் அவனுடைய கையை எட்டிப் பிடித்துக்கொண்டான் கண்ணன்.
“நீதானே அன்னைக்கு ஆக்ஸிடென்ட்…” கண்ணன் கேட்கத் தொடங்கவுமே, மிரண்டு போனான் அந்த இளைஞன்.
“சார்… சார்… அப்பாவுக்கு சீரியஸ்னு ஹாஸ்பிடல்ல இருந்து அம்மா ஃபோன் பண்ணுனாங்க சார். மனசெல்லாம் அப்பாவுக்கு எதுவும் ஆகிடுமோங்கிற டென்ஷன். என்னோட எண்ணம் முழுசும் அப்பா மேல இருந்ததால ரோட்டை சரியா கவனிக்கல போல. தப்பு நடந்து போச்சு, எங்கிட்ட லைசென்ஸ் வேற கிடையாது. மாட்டிக்கிட்டா கேஸ் அது இதுன்னு உள்ள போயிடுவோமோங்குற பயம். இந்த வருஷம் தான் ப்ளஸ் ட்டூ எக்ஸாம் வேற எழுதப்போறேன். எல்லாம் சேர்ந்து என்னை அந்த இடத்துல நிக்கவிடலை.”
“நியூஸ் பேப்பர் பாத்துதான், நான் ஆக்சிடெண்ட் பண்ணுனது எஸ்பி மேடம்னு தெரிஞ்சிகிட்டேன். நீங்களும் லாயர், என்னோட பயம் இன்னும் கூடிப்போச்சு. அதோட அப்பாவுக்கும் நான் ப்ளட் குடுக்க வேண்டி இருந்தது. இப்போக்கூட அப்பா இங்க ஐசியூல தான் இருக்காங்க. வீட்டுலக்கூட நான் இன்னும் இதைப்பத்தி யார்கிட்டயும் சொல்லலை. எனக்கு என்ன செய்யணும்னு கூட தெரியல.” யாரிடம் சொல்லலாம் என்று வார்த்தைகள் தொண்டைக்குழியில் முட்டிக்கொண்டு நின்றதோ என்னவோ, நீதானே என்று கண்ணன் கையைப் பிடித்ததும் அத்தனையும் கொட்டித் தீர்த்துவிட்டான் அந்த இளைஞன்.
“அடடே… அப்போ டென்ஷன்ல இருந்தா ஆக்ஸிடென்ட் பண்ணலாமோ?” கண்ணன் நக்கலாகக் கேட்க,
“இல்ல சர், தெரியாம செய்தாக்கூட தப்பு தப்பு தான். எம்மேல கேஸ் எதுவும் போட்டுடாதீங்க, ப்ளீஸ் சர்… ஸ்கூல்ல டிசியைத் தந்து அனுப்பி வச்சிடுவாங்க, என்னோட படிப்பு வீணாப் போகும். நான் வேணும்னா எஸ்பி மேடத்துகிட்ட மன்னிப்பு கேக்குறேன்.” தழுதழுத்த குரலில் சொன்னவன், நிற்கும் இடத்தைப் பற்றிக்கூட யோசிக்காமல் கையெடுத்து கும்பிட்டான்.
அவனைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது கண்ணனுக்கு. கூடவே, அவனுடைய சூழ்நிலையையும் புரிந்துகொள்ள முடிந்தது. ‘மனைவிக்கும் மைத்துனனுக்கும் பெரிதாக பாதிப்பு எதுவும் இல்லையே. பாவம், அவனை மன்னித்து விட்டுவிடலாம்.’ முடிவை அந்த நிமிடமே எடுத்தவன், அந்த இளைஞனோடு சென்று அவனது தந்தையைப் பார்த்தான். அவன் சொன்னது போல ஐசியூவில் தான் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவனுடைய அம்மாவும் சோகமே உருவாக அங்கே தான் இருந்தார்.
இந்த நிலைமையில் அந்த தாயிடம் மகன் செய்த விஷயத்தை சொல்லி அவரை மேலும் துன்பத்திற்கு ஆளாக்க வேண்டுமா என்ற எண்ணம் தான் கண்ணனுக்கு. ஆனாலும் அவருக்கு விஷயம் தெரிந்தே ஆகவேண்டுமே. எனவே சொல்லிவிட்டான்.
நடந்ததை கேட்டதும் பதறிப்போனார் அந்த அன்னையும்.
“உங்களை பயப்படுத்தவோ, பதட்டப்படுத்தவோ நான் இதை சொல்லலை ம்மா. இன்னைக்கு விஷயம் ஓரளவுக்கு சின்னதாப் போச்சு. அதனால நானும் பரவாயில்லைன்னு விட்டுட்டு போறேன். இதுவே எதுவும் ஏடாகூடமா நடந்திருந்தா என்னவாகியிருக்கும்னு யோசிச்சு பாருங்க. இந்த சின்ன வயசுலயே இவ்வளவு பெரிய வண்டியை உபயோகப்படுத்த அனுமதிக்காதீங்க. ஒரு அம்மாவா நீங்க தான் உங்க பிள்ளையை கண்டிக்கவும், சரியா வழிநடத்தவும் முடியும். அதுகாகத்தான் உங்ககிட்ட சொல்லுறேன்.” என்று அவரை அமைதிப்படுத்தியவன்,
“உன்னோட சூழ்நிலை இப்போ ரொம்ப மோசம். அதனாலத்தான் உம்மேல எந்த ஆக்ஷனும் எடுக்காம விடுறேன். அதுக்காக நீ செய்தது தப்பு இல்லைன்னு கிடையாது. இதுக்கு மேல, நல்லா வண்டி ஓட்ட கத்துகிட்டு லைசென்ஸ் எடுத்தப்புறம் தான் ரோட்டுக்கு வரணும்.” கண்டிப்பான குரலில் அறிவுரை சொல்லியே கிளம்பியிருந்தான்.
நடந்தவற்றை மனைவியிடம் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம் தான் கண்ணனுக்கு. ஆனால் எப்படி எதிர்வினையாற்றுவாளோ என்ற பயமும் இருந்தது. ‘ஒருவேளை சட்டம், ஒழுங்கு, நேர்மை, நியாயம் என்று அந்த இளைஞன் மீது வழக்கு தொடர்ந்து விட்டால்?’ இந்த எண்ணம் வரவும் மனைவியிடம் சொல்லாமல் மறைத்து விட்டான்.
ஆனால் தண்ணீருக்குள் மறைத்துவைத்த காற்றடைத்த பந்தும், உண்மையும் ஒன்று, எப்போது வேண்டுமானாலும் வெளியே வந்துவிடும் அபாயம் உண்டு என்னும் பேருண்மை அந்த வழக்கறிஞனுக்கு மறந்து போனது அவனது துரதிஷ்டம் இன்றி வேறேது?
ஆமாம்… இன்று மாலைநேர ரோந்துப் பணிக்காக போலீஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்த நந்தினியின் கண்களில், ஒரு சிறிய பல்பொருள் அங்காடிக்குள் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த அந்த இளைஞன் விழுந்தான்.
விபத்து நடந்து நாட்கள் பல கடந்திருந்தாலும், பெரிதாக தடயம் எதுவும் இல்லாமல் இருந்தாலும், அந்த இருளில் மெல்லிய நிழலுருவமாக மனதில் பதிந்திருந்த வாகன ஓட்டியையும், அந்த வாகனத்தையும் நந்தினியின் கண்கள் இடைவிடாது அமைதியாக தேடிக்கொண்டுதான் இருந்தன.
அந்த இளைஞனைக் கண்டதும் அவளுடைய உள்ளுணர்வு ஏதோ சொல்லியது. அந்த குரலுக்கு பணிந்தவள், ட்ரைவரிடம் வாகனத்தை அவசரமாக நிறுத்த சொல்ல, ஓரம்கட்டி நிறுத்தினார்.
“என்னாச்சு மேடம்?” யோசனையாக சபேசன் கேட்க, அந்த இளைஞனை சுட்டிக்காட்டி, “அந்த பையனை இங்க கூட்டிட்டு வாங்க” என்றாள் பரபரப்பாக. அவர்களோடு இன்னும் சில காவலர்களும் இன்று வாகனத்தில் இருந்தார்கள்.
சபேசன் அந்த இளைஞனுக்கு அருகே செல்லும் போது, அவன் தன்னுடைய இபைக்கில் (E bike) உட்கார்ந்து ஹெல்மெட்டை அணிந்து கொண்டிருந்தான்.
“தம்பி, உங்களை எஸ்பி மேடம் கூப்பிடுறாங்க.” போலீஸ் வாகனம் நிற்கும் திசையை சுட்டிக்காட்டி சபேசன் சொல்ல, அந்த இளைஞனிடம் பதட்டம் அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக்கொண்டது.
“எதுக்கு?” தன்னையறியாமலேயே அவன் கேள்வி கேட்க,
“வந்தா தெரிஞ்சிக்கப் போகுது, வாங்க.” என்று அழைத்துச் சென்றான் சபேசன்.
வேறுவழியில்லாமல் சபேசனோடு சென்ற இளைஞனுக்கு நந்தினிக்கு அருகே வந்ததும் பயத்தில் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கி நின்றிருந்த நத்தினி, கைகள் இரண்டையும் பின்னால் கட்டிக்கொண்டு அந்த இளைஞனை தன்னுடைய துளைக்கும் பார்வையால் அளவிட ஆரம்பித்தாள். அந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினான் அந்த இளைஞன்.
“எந்த ஏரியாவுல இருந்து வர்ற? அதுதான் உன்னோட வெகிக்கிளா? இதுக்கு முன்னாடி என்ன வண்டி வச்சிருந்த? புல்லட் வச்சிருந்தியா? லைசென்ஸ் இருக்கா?” அதிரடியாக நந்தினி விசாரணையில் இறங்க, பயத்தில் வெலவெலத்துப் போனான் அந்த இளைஞன்.
அவனுடைய பயம் நந்தினியின் சந்தேகத்தின் அளவைக்கூட்ட, தனக்கு விபத்து நடந்த நாளையும் இடத்தையும் சொன்னவள், “நீதானே அன்னைக்கு ஆக்சிடென்ட் பண்ணுனது?” என்று கேட்டாள். எல்லாம் போட்டு வாங்கும் திட்டம் தான். அதில் அழகாக சிக்கிக்கொண்டவன்,
“எல்லாத்தையும் சார்கிட்ட சொல்லிட்டேன் மேம், அவங்ககூட என்னை மன்னிச்சு விட்டுட்டாங்க.” காக்கி சீருடைக்குள் இருப்பவளின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறோம் என்பது தெரியாமல் தன்னை கண்ணன் கண்டுகொண்டது முதல், தன்னுடைய கதையை கேட்டு மன்னித்து விட்டுச் சென்றதுவரை கதையாகச் சொன்னான். பதட்டத்தில் சத்தமாகவே வந்து விழுந்தன அவன் வார்த்தைகள்.
இப்படியொரு திருப்பத்தை எதிர்பாராத நந்தினி அதிர்ந்து தான் போனாள். அவள் தன்னை சுதாரித்துக் கொள்ளும் முன்னரே,
“கோர்ட்டுக்கே கொண்டு போகாம கேஸை முடிச்சிட்டார் போலவே லாயர் சர். அதுக்கு ஸ்பெஷல் ஃபீஸ் எதுவும் வாங்குனாரான்னு கேட்டுச் சொல்லுங்க மேடம்.” உடன் வந்திருந்த ஒரு காவலரிடமிருந்து கேலியாக இந்த வார்த்தைகள் வந்திருந்தது. ட்ரைவர், சபேசன் இவர்கள் இருவர் தவிர மற்றவர்களின் இதழ்களில் லேசான கேலிப் புன்னகை.
அந்த வார்த்தைகள் நந்தினியின் சுயமரியாதையை உரசிச்செல்ல, “என்ன சொன்னீங்க?” கண்களால் அந்த காவலரை சுட்டெரித்தபடி கேட்டாள்.
“இல்ல மேம்… சும்மா, கேலிக்கு…” இழுத்தார் அந்த காவலர்.
“கேலியா? இங்க என்ன ஹியூமர் க்ளப் மீட்டிங்கா நடந்துட்டு இருக்குது நீங்க கேலி பேச? இதுக்கு மேல எப்போதாவது எங்கிட்ட தேவையில்லாத வார்த்தைகளை யூஸ் பண்ணுனீங்க, இப்பிடி பொறுமையா பேசிட்டு இருக்கமாட்டேன், மைண்ட் இட்.” கத்தி சொருகியது போல வார்த்தைகளைச் சொருகிய நந்தினி,
“சபேசன், பையன்கிட்ட அட்ரஸையும் போன் நம்பரையும் வாங்கிட்டு அனுப்பி வைங்க, நாளைக்கு காலைல அவனோட அப்பாவை கூட்டிட்டு நம்ம ஆஃபீஸுக்கு வரச்சொல்லுங்க.” என்றிருந்தாள்.
அந்த காவலர் கேலி என்ற பெயரில் கண்ணனின் நேர்மையை சந்தேகிக்கிறார் என்பது அந்த இளைஞனுக்கு கூட புரிந்தது.
“இல்ல… சர் அப்பிடி எங்கிட்ட எதுவும் வாங்கல… என்னோட சிச்சுவேஷன் புரிஞ்சதாலத் தான்…” தனக்கு உதவி செய்தவன் மீது விழுந்த களங்கத்தை துடைத்துவிடும் வேகத்தில் அந்த இளைஞன் பேசத் தொடங்கினான். அவன் வார்த்தைகளை இடைவெட்டிய நந்தினி,
“உங்கிட்ட அதைப்பத்தி யாராவது கேட்டாங்களா? மூடிட்டு போடா…” என்றாள் கோபமாக.
கோபத்தில் நந்தினியின் வார்த்தைகள் சற்றே தடித்து தான் வந்து விழுந்திருந்தது. அதை உணர்ந்தவள், தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
சபேசனும் வேலையை முடித்து வாகனத்தில் ஏறி அமர்ந்து கொள்ள, அங்கிருந்து நகர்ந்தது அந்த காவல் வாகனம். ஆனால் நடந்த நிகழ்விலிருந்து நகர மறுத்து அடம்பிடித்த நந்தினியின் மனம், அதிலேயே உழன்றபடி இருந்தது.
தனக்குச் சொல்லாமல் கணவன் இவ்வளவு பெரிய முடிவை எடுத்து செயல்படுத்தியது ஒரு பக்கம் கோபத்தை உண்டாக்கியது என்றால், அந்த காவலரின் நக்கல் பேச்சு இன்னொரு பக்கம் ஆத்திரத்தின் எல்லைக்கே நந்தினியைக் கொண்டுசென்று நிறுத்தியிருந்தது.
அந்த காவலர் சொல்லியது போல கேலிபேச்சு எல்லாம் இல்லை அது. நந்தினிக்கும் அது தெரியும். எல்லாம் நந்தினி மீதிருந்த துவேஷத்தின் காரணமாக வேண்டுமென்றே சொல்லப்பட்ட வார்த்தைகள் தான்.