“எதுக்காக சீக்கிரம் கிளம்பிவரச் சொன்ன பாலா?” வீட்டுக்குள் நுழைந்தபடியே பெரிய மகனிடம் கேட்ட வைரவமூர்த்தியின் கண்களில் ஹாலில் அமர்ந்திருந்த மொத்த குடும்பமும் விழ,
“என்ன ஆச்சுடா?” என்றார் குழப்பமாக.
ஏனென்றால் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மொத்தமும் இப்படியெல்லாம் சேர்ந்து உக்காரும் ரகம் கிடையாது.
“இந்த ஜெகன் நமக்கு குழிபறிக்க பாக்குறான் ப்பா.” தம்பி தான் இந்த விஷயத்தில் சூத்திரதாரி, அவன் இல்லாவிட்டால் இத்தனையும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை புரிந்திருந்த பாலகிருஷ்ணன், ஜெகனிலிருந்து பேச்சை தொடங்கினான்.
“என்னடா சொல்லுற?” சட்டென்று முகம் தீவிர பாவனைக்கு மாறியிருக்க, இளைய மகனை கண்களைச் சுருக்கி பார்த்தபடி கேட்டார் வைரவமூர்த்தி.
“ம்ம்… அந்த சபேசன் இருக்கான்ல, அதான் அன்னைக்கு கூட அந்த எஸ்பி கூட நம்ம வீட்டுக்கு வந்துட்டு போனானே, அந்த பயலை பாத்துப்பேச நம்ம வீட்டு அம்மணிகளைக் கூட்டிட்டு போயிருக்கான். இந்த பூங்கோதையும் வெக்கமே இல்லாம அவன்கூட உக்காந்து பேசிட்டு இருக்குறா.” படபடவென்று பாலகிருஷ்ணன் சொல்லிக்கொண்டே செல்ல,
“உண்மையாவா? நீ பாத்தியா?” குரலில் ஒரு கடினத்தன்மை வந்திருக்க புருவத்தை நெறித்தார் வைரவமூர்த்தி.
“ஆமா…நானே எங்கண்ணால பாத்தேன். நீங்க மத்தியான சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டு வெளியப் போகவும், நானும் ராஜியும் பசங்களைக் கூட்டிகிட்டு லஞ்சுக்கு ஹோட்டல் போய்ட்டு வரலாம்னு கிளம்புனோம். உண்மையில் அப்படி போனது எவ்வளவு நல்லதா போச்சு தெரியுமா? அதனாலத்தான் இவங்க களவாணித்தனம் தெரிஞ்சது.” முன்கதை சுருக்கம் போல தாங்கள் ஹோட்டலுக்கு போன கதையை பாலகிருஷ்ணன் சொல்ல,
“நம்ம பூங்கோதையும் அந்த பயலும் ஒரு டேபிள்ல உக்காந்து பேசிட்டு இருந்தாங்க, மத்தவங்க எல்லாம் இன்னொரு டேபிள்ல உக்காந்திருந்தாங்க. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிப் போச்சு. நீ எப்பிடிடா என் தங்கச்சிகிட்ட பேசலாம்னு அந்த சபேசனை சட்டையைப் பிடிக்கப்போனா… இவ குறுக்கால வந்து நிக்குறா.” நடந்ததை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் தந்தையிடம் ஒப்பிக்க ஆரம்பித்தான் அந்த வீட்டின் மூத்த மகன். பார்வையோ தங்கையை முறைத்தபடி இருந்தது.
ஆமாம்… தங்கையையும் தம்பியையும் அதட்டிய பாலகிருஷ்ணன், “நாயே, வாங்குன அடியெல்லாம் அதுக்குள்ள மறந்து போச்சா உனக்கு? எவ்வளவு தைரியம் இருந்தா எங்க வீட்டு பொண்ணு கூட உக்காந்து பேசிட்டு இருப்ப?” என்றபடி சபேசனை நோக்கி பாய, இருவருக்குமிடையே வந்து நின்றிருந்தாள் பூங்கோதை.
“மரியாதையா நீ ஒதுங்கி நில்லு பூங்கோத, இந்த நாயை பொளந்துட்டு தான் மறுவேலை இன்னைக்கு.” அதீத கோபத்தில் கண்களை உருட்டியபடி பாலகிருஷ்ணன் தங்கையை விலக்க முயற்சி செய்ய,
“பழைய எண்ணத்துலயே இன்னும் இருந்தா அதை மறந்துடு ண்ணா, அவர்மேல கையை வச்சாலோ, மரியாதைக் குறைவா பேசினாலோ நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.” எச்சரிக்கும் குரலில் சொல்லியிருந்தாள் பூங்கோதை.
உண்மையில் இப்படியொரு வார்த்தையை அவளிடமிருந்து எதிர்பார்க்காத அங்கிருந்த அத்தனை பேரும் அதிர்ந்து தான் போனார்கள். இவ்வளவு ஏன்? பூங்கோதைக்கே தானா இப்படி எதிர்வினையாற்றியது என்று நம்ப முடியவில்லையே!
ஆனால் நடந்திருந்தது. காரணம், தன் பொருட்டு மறுபடியும் சபேசன் பந்தாடப்படுவதை துளியும் விரும்பவில்லை அந்த அன்புகொண்ட நெஞ்சம்.
“ஏய், என்ன? திமிரெடுத்து போச்சா உடம்பு? இவ்வளவு தைரியம் உனக்கு யார் தந்தது?” கோபம் கண்களை மறைக்க, நெருப்பென வார்த்தைகளை கக்கியபடி, தனக்கு முன்னால் நின்றிருந்த தங்கையை அடிக்க பாலகிருஷ்ணன் கையை ஓங்க,
அக்காவுக்கு அருகே பாய்ந்து வந்திருந்த ஜெகத்ரட்சகனும், “அறிவுகெட்டத்தனமா பேசாதடா” என்று உடன்பிறந்தவனை அதட்டியிருந்தான்.
“என்னடா? இதெல்லாம் உன் வேலை தானா? இப்பிடி செய்ய உனக்கு வெக்கமா இல்ல?” சபேசன் தன் முயற்சியை தடுத்து நிறுத்தியதை அவமானமாக உணர்ந்த பாலகிருஷ்ணன், தம்பியின் நெஞ்சில் கைவைத்து தள்ளியபடி அதட்ட,
“ஆமா… எல்லாம் என் வேலை தான், அதுக்கு என்ன இப்போ?” என்றான் ஜெகன் அழுத்தமாக.
“அதுக்கு இப்போ என்னவா? வா, வீட்டுக்கு வந்து இதே கேள்வியை அப்பாகிட்ட கேட்டுப்பாரு, எல்லோரையும் கண்டந்துண்டமா வெட்டிப் போட்டுட்டு தான் மறுவேலை பாப்பாரு.” பற்களைக் கடித்தபடி பாலா உறுமினான்.
“என்னமோ ஆட்டுத்தலையை வெட்டுற மாதிரி அவ்வளவு ஈசியா சொல்லுற பேராண்டி, நாங்க எல்லாம் மனுஷங்க, அதை முதல்ல நீயும் உங்க அப்பனும் ஞாபகம் வச்சிக்கோங்க,” இப்போது பதில் ஞானவல்லி பாட்டியிடமிருந்து வந்திருந்தது.
“வயசுல பெரியவங்களா இருந்தா மட்டும் போதாது பாட்டி, நம்ம குடும்பத்தோட மானம், மரியாதையை காப்பாத்தணுங்குற எண்ணமும் இருக்கணும். இப்பிடி சின்னப்பிள்ளைங்க கூட சேர்ந்து கூத்தடிக்கக் கூடாது.” கோபத்தில் பாட்டியிடமும் எகிறினான் பாலா.
“அப்பனும் மகனும் அடுத்த தலைமுறையையாவது நல்லா வாழ விடுங்க டா. கண்டதையும் சொல்லிக்கொடுத்து அவங்க வாழ்க்கையும் கெடுத்துடாதீங்க.” நடப்பவற்றை புரிந்து கொள்ள முடியாமல் பார்த்தபடி நின்றிருந்த பாலகிருஷ்ணனின் மகன்களைப் பார்த்து சொன்னார்.
‘கிழம் என்னப் பேச்சு பேசுது பாரேன்? ஏற்கனவே திட்டம் போட்டுட்டு தான் பட்டும் பவுசுமா அள்ளிட்டு வந்தா என்ன செய்வன்னு அவ்வளவு திண்ணக்கமா எங்கிட்ட கேட்டுருக்குது.’ அங்கு நடப்பதை உள்வாங்கியபடி மனதுக்குள் நொடித்துக் கொண்டு நின்றிருந்தாள் ராஜேஸ்வரி.
பயந்துபோன ஐஸ்வர்யாவைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு தட்டிக் கொடுத்தபடி நின்றிருந்த அனிதா, ராஜேஸ்வரியின் கண்களில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை. அவளுடைய பார்வை எல்லாம் பூங்கோதையின் மேல் தான்.
“சர், உங்க பிரச்சினையை வீட்டுல போய் பேசித் தீத்துக்கோங்க. இது வியாபார நேரம்.” அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து வேண்டுதலாகச் சொன்னார் ஹோட்டலின் மேனேஜர். அவருக்கும் அங்கே நிற்பது வைரவமூர்த்தியின் குடும்பம் என்பது தெரிந்திருந்தது. அதனாலேயே இந்த பவ்யமும் பதவிசும்.
சுற்றுப்புறம் கருத்தில் பதிய, அதற்கு மேலும் அங்கே நிற்க விரும்பாமல், “வா… வீட்டுக்கு போகலாம்.” தங்கையின் கையைப் பிடித்து இழுத்தான் பெரியவன்.
சட்டென்று அண்ணனிடமிருந்து கையை விடுவித்து கொண்ட பூங்கோதை, பிடிவாதமாக நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
ஆனால் சம்மந்தப்பட்டவளோ அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அவளுடைய அமைதியை யாரும் கலைக்கவும் முற்படவில்லை. சபேசனையும் தங்களோடே அமரவைத்து சாப்பிட வைத்திருந்தான் ஜெகன்.
எப்படி என்றாலும் வைரவமூர்த்திக்கு தெரியவரும் போது பிரச்சினைகளை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்ததாலோ என்னவோ அப்போதைய சந்தோஷத்தை யாரும் இழக்க முன்வரவில்லை.
ஆனால் நடந்தவற்றைப் பார்த்து கலவரமாகிப் போயிருந்த அனிதாவின் முகம் வெளிறிப்போய் இருந்தது.
“என்ன, சரியான காட்டுமிராண்டி கூட்டமா இருக்கே, இப்பிடியே தப்பிச்சு ஓடிடலாம்னு எண்ணமா?” புருவத்தை உயர்த்தியபடி அனிதாவை ஜெகத்ரட்சகன் கேலிசெய்ய, பூங்கோதை உட்பட எல்லோருடைய முகத்திலும் மெல்லிய சிரிப்பு. அந்த சிரிப்போடே வீட்டுக்கு கிளம்பினார்கள்.
வந்தது போலவே தன்னுடைய ஸ்கூட்டியிலேயே கிளம்பி சென்றுவிட்டாள் அனிதா.
“நான் உங்ககூட வீட்டுக்கு வரவா ஜெகன்?” அவர்களை தனியேவிட மனமின்றி கேட்டிருந்தான் சபேசன்.
“இல்ல… நான் சமாளிச்சுப்பேன்.” புன்னகையோடு ஜெகன் சொல்ல,
“உங்க அக்கா கிட்ட என் நம்பரைக் கொடுங்க ஜெகன். எதுவாயிருந்தாலும் எனக்கு கால் பண்ண மறக்காதீங்க, நீயும் எதுவும் அவசரம்னா ஃபோன் பண்ணு கோத.” என்ற சபேசன், ஐஸ்வர்யாவின் தலையை வாஞ்சையாக தடவி விட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
இவர்கள் வீட்டுக்கு வரும்போது கூண்டுபுலியாக ஹாலில் அங்குமிங்கும் நடைபோட்டபடி இருந்தான் பாலா. வந்தவர்களின் புன்னகைமுகம் அவனை வெறுப்பேற்ற, அவர்களோடு சபேசன் வரவில்லை என்பதையும் குறித்துக்கொண்டான்.
“ஏங்க, ஹோட்டல்ல இவங்ககூட ஒரு பொண்ணு நின்னுதே? ஐஸ்வர்யாவைக் கூட தூக்கி வச்சிட்டு நின்னா.” சட்டென்று ஞாபகம் வர, கணவனிடம் முணுமுணுத்தாள் ராஜி.
எல்லோருக்கும் அப்படித்தான் எண்ணம் போல, தங்களுடைய அறைகளுக்குச் செல்லாமல் ஹாலிலேயே அமர்ந்து விட்டார்கள். காரில் வரும்போது தூங்கிவிட்ட மகளை தங்களது அறையில் படுக்க வைத்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்து கொண்டாள் பூங்கோதை.
பாலகிருஷ்ணனின் பிள்ளைகளும் தூங்கியிருப்பார்கள் போல. அவர்களும் அங்கே இல்லை. எல்லோருடைய எதிர்பார்ப்பும் வைரவமூர்த்தியாக இருக்க, சற்று நேரத்தில் அந்த மனிதரும் வந்து சேர்ந்திருந்தார்.
தான் பார்த்தவற்றை, தங்களுக்குள் நடந்தவற்றை எல்லாம் ஒன்றுவிடாமல் தகப்பனிடம் பாலகிருஷ்ணன் ஒப்பித்து முடிக்க,
“பூங்கோத… என்ன இதெல்லாம்?” என்று அதட்டலாக உறுமியிருந்தார் வைரவமூர்த்தி.
உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அமைதியாக எழும்பிய பூங்கோதை, “நான் சபேசனை கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்திருக்கேன் ப்பா.” வார்த்தைகளில் எந்த நடுக்கமும் இன்றி தெளிவாகச் சொல்லியிருந்தாள்.
“சபாஷ் க்கா… இப்போதான் நீ சரியான முடிவெடுத்துருக்க, இந்த முடிவை செயலாக்க உன் தம்பி உங்கூடவே இருப்பேன் க்கா.” வாயெல்லாம் பல்லாக அக்காவின் கைகளைப் பற்றி குலுக்கினான் ஜெகத்ரட்சகன்.
“ரொம்ப சந்தோஷம், இதுக்கு மேலயாவது உன் வாழ்க்கை நல்லாயிருக்கணும்.” வைரவமூர்த்தி என்ற நபர் ஒருவர் அங்கே இருக்கிறார் என்ற எண்ணமின்றி பூங்கோதையை அணைத்துக் கொண்டார்கள் அவளுடைய அம்மாவும் பாட்டியும்.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த மற்ற மூவருக்கும் கோபம் சுறுசுறுவென ஏற, “ஏய்… என்ன விளையாடுறீங்களா எல்லோரும்?” தலையை ஒருமாதிரி ஆட்டிக்கொண்டே கேட்டார் வைரவமூர்த்தி.
“பத்து வருஷத்துக்கு முன்னாடி அக்கா வாழ்க்கையில் நீங்க தப்பா விளையாடியதை, நாங்க சரி பண்ணப் போறோம் ப்பா.” அலட்டிக்கொள்ளாமல் சொன்ன மகனை கொலை வெறியோடு பார்த்தார் மனிதர்.
அவருக்கு இப்போது மகனிடம் பாய்வதைவிட, மகள் வாயிலிருந்து “இல்லை, நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை” என்ற வார்த்தைகளைப் பெற்றுவிடுவதே முக்கியமாக இருக்க, தன் கோபத்தை மறைத்துக் கொண்டு,
“பத்து வயசுல, ஒரு பொண்குழந்தையை வச்சிகிட்டு பேசுற பேச்சா ம்மா இது? நாளபின்ன அதோட வாழ்க்கையில உன்னோட முடிவு ஒரு பிரச்சினையா வந்து நிக்கக்கூடாது, உன் மக வாழ்க்கையை விட உன் வாழ்க்கை பெருசா போச்சா இப்போ உனக்கு?” இடம் பார்த்து அடித்தார் அந்த பெரிய மனிதன்.
“ஆஹாஹா… அந்த பத்து வயசு பிள்ளை மேல என்னா அக்கறை? அந்த அக்கறைச் சக்கரையில தான் பிள்ளை உங்களைக் கண்டாலே நடுங்குது.” கிண்டலடித்தான் ஜெகன்.
“கண்டிப்பா இருந்தா பிள்ளை மேல பாசம் இல்லைன்னு ஆகிடுமா? பொட்டப்பிள்ள, அம்மாவைப்போல தறிகெட்டு போயிடக்கூடாதுன்னு கூட கண்டிப்பா இருக்கலாமே?” மாமனாருக்கு பாயிண்ட் எடுத்துக்கொடுக்கிறேன் பேர்வழி என்று பேச்சின் உள்ளே வந்தாள் ராஜி.
“அடிங்… யாரப்பத்தி, என்னப் பேசுற? வீட்டுக்கு வந்த பொண்ணை மக மாதிரி பாத்துக்கணும்னு உன்னை சகிச்சுகிட்டு நான் அமைதியா போனா, எம்பொண்ணையும் பேத்தியையுமே பேசுவியா நீ? தொலைச்சுபுடுவேன் தொலைச்சு.” இத்தனை நேரமும் தகப்பனும் மகனும் பேசுவதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மி, பிலுபிலுவென்னு பிடித்துக்கொண்டார் மருமகளை. மகளை திருப்தியாக பார்த்தபடி நின்றிருந்தார் ஞானவல்லி.
“மருமக சொன்னதுல என்ன தப்பு இருக்கு? ஏன், உம்பொண்ணு காதல் கத்திரிக்கான்னு என்னோட மானத்தை கப்பல் ஏத்த பாக்கல? ஏதோ நான் சுதாரிச்சதால தப்பிச்சேன். இப்போ பழையபடி என் மானத்தை வாங்க ரெடியாகுறாளே, அது உங்கண்ணுல விழலையா?” பதிலுக்கு மனைவியிடம் காய்ந்தார் வைரவமூர்த்தி.
பெற்ற மகளின் ஒழுக்கத்தைப் பற்றி வீட்டு மருமகள் வியாக்கியானம் செய்கிறாள், அதை தட்டிக்கேட்க வேண்டிய இடத்திலிருக்கும் தகப்பனோ, அவளோடு சேர்ந்துகொண்டு மகளையே விமர்சிக்கிறார்.
முகம் கசங்க, தகப்பனை அடிபட்ட பார்வை பார்த்தபடி நின்றாள் பூங்கோதை. அக்காவின் தோள்களில் கையைக் கொடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்ட ஜெகன்,
“ம்ஹும்… இந்த வீட்டு ஆட்களோட மெண்டாலிட்டியை பாத்தியா க்கா? நீ கல்யாணம் பண்ணுறியோ இல்லியோ எனக்கு தெரியாது, ஆனா ஒரு நிமிஷம்… ஒரே ஒரு நிமிஷம் கூட ஐஸு பாப்பாவோட இனிமே நீ இங்க இருக்கக்கூடாது, கிளம்பு.” பிடிவாதமான குரலில் சொன்னதோடல்லாமல், தமக்கையின் தோள்களை மென்மையாகப் பற்றி அங்கிருந்து நகர்த்தவும் செய்தான்.
“என்னடா, விட்டா உம்போக்குல பேசிட்டு போற?” பொறுமையை கைவிட்டிருந்த வைரவமூர்த்தி, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மகனை அடித்து விடுவது போல அவன் முன்னே வந்து நின்றார்.
“இப்பிடி சாக்கடை புத்தி இருக்குறவங்க மத்தியில வளந்தா அந்த சின்னப் பிள்ளையோட எதிர்காலம் என்னவாகும்? என் அக்கா வாழ்க்கையை நீங்க பாழாக்குனது போதும், அந்த பிஞ்சு வாழ்க்கையை கண்டிப்பா உங்க கையில தரமாட்டேன்.” தன்னுடைய வார்த்தைகளில் உறுதியாக நின்ற ஜெகனும்,
“பாட்டி, உங்க வீட்டுக்கு போயிடலாமா?” என்று ஞானவல்லியிடம் அனுமதி கேட்டு நின்றான்.
“அப்போ, எல்லோரும் சேர்ந்து எனக்கு எதிரா சதி செய்ய ரெடியாகிட்டீங்க, இல்ல? இந்த வைரவமூர்த்தி அவ்வளவு ஈஸியா போயிட்டனா உங்களுக்கு? எங்க, இந்த வீட்டுலயிருந்து என் அனுமதியில்லாம ஒரு அடி வெளிய எடுத்து வச்சிருங்க பாப்போம்.” முழு வில்லனாக மாறியிருந்த வைரவமூர்த்தியிடமிருந்து சவாலாக வந்திருந்தது வார்த்தைகள்.