“நீங்க சொன்னதை செய்ய நான் என்ன நீங்க வச்ச ஆளா? நான் கவர்மெண்ட் சர்வெண்ட், நீங்க ஆடச்சொன்ன கூத்துக்கெல்லாம் என்னால ஆட முடியாது.” அழுத்தம் திருத்தமாக பதில் வந்தது நந்தினியிடமிருந்து.
“அப்போ அதன் பின்விளைவுகளை சந்திக்க தயாரா இருந்துக்கோ.”
“பின்விளைவு, முன்விளைவு எல்லாத்தையும் சந்திக்க தைரியம் இருக்குறதாலத் தான் இந்த போலீஸ் வேலைக்கே வந்தேன். உன்னால என்ன முடியுமோ, பாத்துக்கடா.” என்றவள் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
நந்தினியின் கைபேசியில் அவள் பேசுவதை தானாகவே பதிவு செய்யும் வசதி இருந்தது. அதிலிருந்து நேற்றும் இன்றும் இந்த நபரோடு பேசிய ஆடியோவை எடுத்து இணைத்தவள், பிரபல செய்தி சேனலுக்கு அதை அனுப்பி வைத்துவிட, சற்று நேரத்தில் அந்த செய்தி காட்டுத்தீயாக பரவியது.
************
“ம்மா… எவ்வளவு நேரமா வெயிட் பண்ணுறது? சீக்கிரம் கிளம்பி வாங்க.” வீட்டு ஹாலில் அமர்ந்துகொண்டு சத்தம் கொடுத்தான் ஜகத்ரட்சகன்.
இளையவனோடு அவ்வப்போது மனைவியும் மகளும் வெளியே போவது வழக்கம் என்பதால் நடப்பதை பார்த்துக்கொண்டு அமைதியாக ஹாலில் உட்கார்ந்திருந்தார் வைரவமூர்த்தி. பாலகிருஷ்ணனும் கூட அங்கேதான் இருந்தான்.
“நான் ரெடி மாமா, மற்ற லேடீஸ் எல்லாம் சோம்பேறிங்க.” கொஞ்சும் குரலில் சொல்லியபடி ஓடிவந்த ஐஸ்வர்யா, அங்கே தாத்தனையும் மூத்த மாமனையும் எதிர்பாராமல் லேசாக தயங்க, அக்கா மகளை இழுத்து தன்னருகே அமர்த்திக் கொண்டான் ஜகத்ரட்சகன்.
“அவ்வளவு பொறுமையில்லாதவன் பொண்ணுங்ககூட ஜவுளிகடைக்கு வர ரெடியாக கூடாதுடா பேராண்டி.” ஒரு முதியகுரல் கேலி செய்ய, அந்த குரலுக்குரிய நபரோடு வந்து கொண்டிருந்தார்கள் ஜகத்ரட்சகனின் அம்மா லக்ஷ்மியும், அக்கா பூங்கோதையும்.
அந்த முதியகுரலுக்கு சொந்தக்காரர் ஜகத்ரட்சகனின் பாட்டி ஞானவல்லி. அதாவது லக்ஷ்மியின் அம்மா.
வருடத்திற்கு ஒன்றிரண்டு தடவையாவது பாட்டி, அக்கா, அம்மா மூவரையும் ஜவுளிக்கடைக்கு அழைத்து சென்றுவிடுவது ஜெகனின் வழக்கம். அதற்காகவே பக்கத்து ஊரிலிருந்து பாட்டியை நேற்றிரவே தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான்.
வைரவமூர்த்திக்கு குறையாத செல்வாக்கு உள்ள குடும்பம் தான் ஞானவல்லியின் குடும்பமும். ஞானவல்லியின் கணவர் இளமையிலேயே தவறிவிட, அவருக்கு பிறகு தொழில்களையும் சொத்துக்களையும் ஒற்றைப்பெண்ணாக திறமையாக நிர்வகித்தார் அந்த பெண்மணி.
அவர் தவறிய இடம் தன் பெண் பிள்ளைகளுக்கான வரனாக வைரவமூர்த்தியை தேர்ந்தெடுத்தது தான். அதுவும், இரண்டு பிள்ளைகளை தவிக்க விட்டு விட்டு மூத்தமகள் தவறிப்போக, உணர்ச்சிவேகத்தில் இரண்டாவது மகளையும் வைரவமூர்த்திக்கே திருமணம் செய்து கொடுத்து மறுபடியும் ஒருமுறை திருத்தவே முடியாத தவறை செய்துவிட்டார்.
இப்போது வைரவமூர்த்தியோடான உறவு மகள், பேரன், பேத்தியைக்கொண்டு மட்டும் தான். மற்றபடி வைரவமூர்த்தி என்னும் மதம் பிடித்த யானைக்கு பயப்படாத நபர் ஒன்று உண்டென்றால் அது ஞானவல்லி அம்மா தான்.
உருவத்தில் நரை திரையோடி இருந்தாலும், கம்பீரம் மட்டும் இன்னமும் குறையவில்லை அந்த பெண்மணிக்கு. அவருடைய உடையும் கூட தூய வெள்ளை நிறத்தில் தான் இருந்தது.
“என்னமோ பட்டும் பவுசுமா அள்ளிட்டு வரப்போறது மாதிரி தான், எடுக்கப்போறது நாலு வெள்ளச்சீலை, அதை ஜவுளி கடைக்கு போய்தான் எடுக்கணுமா என்ன?” அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்த அந்த வீட்டின் மூத்த மருமகள் ராஜேஸ்வரி ஏளனமாக முணுமுணுக்க,
“ஏய்… இங்க பாருடியம்மா, நில்லு… இந்த தடவை பட்டும் பவுசுமா அள்ளிட்டு வந்துட்டோம்னா அந்த சுவத்துல உன் தலையை முட்டிக்கிறியா?” பளிச்சென்று பதிலுக்கு கேட்டிருந்தார் ஞானவல்லி.
“இல்லப் பாட்டி, வொயிட் சாரி எடுக்க எதுக்கு ஜவுளிக்கு கடைக்கு வீணா அலையணும்… ஆன்லைன்லயே ஆர்டர் போட்டுடலாமேன்னு நினைச்சு தான்…” ஹாலில் மாமனாரும் கணவனும் இருக்கும் தைரியத்தில் சொல்லிவிட்டாள் ராஜேஷ்வரி.
“நாங்க என்ன செய்யணும்னு, நீ எங்களுக்கு சொல்லித்தர வேண்டாம்.” ராஜேஸ்வரியை முறைத்து பார்த்தபடி சொன்ன ஞானவல்லி,
“இந்த வீட்டுலதான் தலையிருக்கும் போதே வால் ஆடுது. எல்லாம், யார் யாரை எங்க வைக்கணும்னு தெரியாத உன்னைச் சொல்லணும் லஷ்மி “ என்று மகளையும் அதட்டினார்.
பொதுவாகவே ஞானவல்லியிடம் ஒதுங்கிப் போய்விடுவாள் ராஜேஸ்வரி. காரணம் பெரியவரின் சொத்துக்கள் அத்தனையும் பிரிக்கப்படாமல் இன்னமும் அவர் பெயரிலேயே இருப்பது தான்.
ஒருவேளை கிழவி தங்கள் மீது பிடித்தமில்லாமல் சொத்துக்களை இளைய பேரன் மீதும் பேத்தி பெயரிலும் எழுதி வைத்துவிடக் கூடாதே. அதற்காகவே வேறு வழியில்லாமல் ஞானவல்லியிடம் பம்முவது.
இப்போது மாமனாரும் கணவரும் இருக்கும் தைரியத்தில் வார்த்தைகளை விட, யார் இருந்தால் எனக்கென்ன என்று வார்த்தைகளாலேயே விளாசிவிட்டார் பெரியவர்.
பாட்டிக்கும் மனைவிக்கும் வார்த்தை முட்டல் போல ஏற்படவும் பாலகிருஷ்ணன் மனைவியைப் பார்த்து முறைத்து வைக்க, மறுபேச்சில்லாமல் அங்கிருந்து நகர்ந்திருந்தாள் ராஜேஸ்வரி.
“நம்ம ஜெகன் கூட போத்தீஸ் வரைக்கும் போய்ட்டு வர்றோம்.” கணவனுக்கு லக்ஷ்மி தகவல் சொல்ல, மனைவியை நிமிர்ந்து பார்த்த வைரவமூர்த்தி பெயரளவுக்கு கூட தலையாட்டவில்லை.
“போய்ட்டு வர்றோம் ப்பா.” தயங்கித் தயங்கி பூங்கோதையும் தகப்பனிடம் சொல்லிக்கொள்ள,
“அதான் உங்க அம்மா சொல்லியாச்சுல்ல, எல்லாரும் அவர்கிட்ட எழுதணுமா என்ன?” அந்த மூதாட்டி பேத்தியை அதட்ட, அப்போதும் கண்டும் காணாத பாவனை தான் வைரவமூர்த்தியிடம்.
எல்லோரையும் காரில் அமர வைத்து அங்கிருந்து காரை கிளப்பியிருந்தான் ஜெகத்ரட்சகன்.
“இந்த தடவை பட்டும் பவுசுமாக எடுத்தால் என்ன செய்வாய்?” ஞானவல்லி அம்மா ஒன்றும் ராஜேஸ்வரியிடம் சும்மா கேட்கவில்லை. ஜெகத்ரட்சகன் அம்மாவிடமும் பாட்டியிடமும் சபேஷனோடு அக்காவின் மறுமணத்தைப் பற்றிப் பேசி சம்மதமும் வாங்கியிருக்கிறான். அவருக்கு பேத்தியை எப்படியாவது இந்த இருண்ட உலகத்திலிருந்து வெளியே கொண்டுவந்துவிட வேண்டும் என்ற ஆசை மூச்சு முட்ட இருக்கிறது.
ஆரம்பத்திலேயே இந்த கட்டுப்பெட்டியான சம்பிராயத்துக்குள் பேத்தியை நுழையவிட அந்த மூத்த பெண்மணி எதிர்ப்பு தான் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் வைரவமூர்த்தியிடம் எதுவும் எடுபடாமல் போயிற்று.
“புருஷன் செத்தபிறகு நம்ம சமுதாயத்து பொண்ணுங்க இப்பிடித்தான் இருக்கணும், அதுவும் எம்பொண்ணு இப்பிடித்தான் இருக்கணும்.” சட்டமாக அந்த மனிதர் சொல்லிவிட,
“அப்போ பொண்டாட்டியை இழந்த நம்ம சமுதாயத்து ஆண்பிள்ளைங்களும் இப்படித்தானே இருக்கணும்? ஆனா இரண்டு பிள்ளைங்களை வச்சிகிட்டு நீங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணுனீங்களே? அது எந்தவகையில மாப்ள நியாயம்?” இப்படி கேட்டு மருமகனோடு மல்லுக்கு நின்றிருக்கிறார்.
பதிலுக்கு, “நான் ஆம்பிள்ள” என்று நெஞ்சை நிமிர்த்தியபடியே சொல்லியிருக்கிறார் வைரவமூர்த்தி.
“அப்போ ஆம்பிள்ளைக்கு ஒரு நியாயம் பொம்பிள்ளைக்கு ஒரு நியாயமா?”
“ஆமா… ஆம்பிள்ளை எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணிக்கலாம், அதையே உங்க இனம் பண்ணினா அதுக்கு பெயர் வேற” என்று திமிராக சொல்லியிருக்கிறார்.
அப்படியும், “நம்ம பொண்ணுக்கு சின்ன வயசுங்க, இப்படியே அவ வாழ்க்கையை விட்டுற முடியுமா? வேற வாழ்க்கை அமைச்சு குடுக்க வேண்டாமா? இப்பிடி அவளை முடக்குனா ரொம்ப கஷ்டம் ங்க.” தைரியமாக மகளின் மறுமணத்தைப் பற்றி லக்ஷ்மி கணவரிடம் பேசிவிட, பொங்கிவிட்டார் மனிதர்.
“நான் இத்தனை சொல்லியும் இதை எங்கிட்ட பேச உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? அவ கழுத்துலயிருந்து இறங்குன தாலி இறங்குனது தான், இன்னொரு தடவை இப்பிடி கேணத்தனமா பேசிக்கிட்டு எங்கிட்ட வந்தா கொன்னே போட்டுருவேன் உன்னை.” என்று அடிக்கவே பாய்ந்துவிட்டார்.
அவரைப் பொறுத்தவரை தன் குடும்பத்தின் மானம் மரியாதை முழுவதும் தான் பெற்றுவளர்த்த ஒற்றைப் பெண்ணிடமே இருப்பதாக எண்ணம். அதனால் தான் மகளின் விருப்பத்துக்கு மாறாக ஒரு திருமணம். இப்போது காலம் முழுவதும் மகள் தனியாக நின்றாலும் பரவாயில்லை, மறுமணம் கூடவே கூடாது என்ற எண்ணம்.
குடும்பத் தலைவனை எதிர்த்து அந்த பெண்களாலும் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை. அதைவிட, பூங்கோதை எந்த எதிர்ப்பும் இல்லாமல் விரும்பியே அந்த சட்டதிட்டங்களுக்குள் தன்னை நுழைத்துக்கொள்ள, இருவருக்கும் கையறு நிலை தான்.
அதன் பிறகும் சில தடவைகள் மகளின் மனதை கரைக்க முயன்றிருக்கிறார் லக்ஷ்மி. ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான்.
விட்டபடிப்பை தபால் மூலம் அக்காவை தொடர வைத்திருந்தான் ஜெகத்ரட்சகன். அப்படியே மேல்படிப்பையும் முடிக்க வைத்திருந்தான். அதற்கே,
“காலம் முழுக்க நாம அவளைப் பாத்துக்கப் போறோம், அப்புறம் அவளுக்கு எதுக்கு படிப்பு?” என்று வைரவமூர்த்தி அவனிடம் குதிகுதியென்னு குதித்திருக்கிறார்.
ஆனால் அவருடைய பருப்பு இளைய மகனிடம் வேகவில்லை. அதைவிட பூங்கோதைக்கும் படிப்பில் ஆர்வம் இருந்ததால் தம்பி ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை பிடித்துக் கொண்டாள்.
ஆனால் அந்த படிப்பைக் காரணம்காட்டி பள்ளி நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ள தமக்கையை ஜெகத்ரட்சகன் அழைத்தபோது உறுதியாக வர மறுத்துவிட்டாள்.
“நான் படிச்சா, எம்பிள்ளை படிப்பை யாரை நம்பியும் விடவேண்டாமே, அதுக்காகத் தான் படிச்சேன், மற்றபடி எனக்கு வேறெதிலும் ஆர்வம் இல்ல ஜெகா.” என்று தன்னுடைய கூட்டுக்குள்ளேயே அடைந்து கொண்டாள்.
அப்படியிருந்தும் அவளுடைய தம்பி விடவில்லை அவளை. ஆமாம்…
“எனக்கு வேலை கழுத்தை நெறிக்குது க்கா. இதை யாரை நம்பியும் கொடுக்க முடியாது, கொஞ்சம் பாத்துக்கொடு.” பள்ளி கணக்கு வழக்குகளை வீட்டுக்கே கொண்டுவந்து குடுத்துவிட, வேறுவழியில்லாமல் பார்க்க ஆரம்பித்தவள், இப்போது விரும்பி செய்ய ஆரம்பித்திருக்கிறாள். வீட்டிலிருந்து தான். சமீபகாலமாக ஏதாவது காரணம் சொல்லி அவ்வப்போது பள்ளிக்கு அழைத்துச் செல்கிறான் ஜெகன்.
அப்படி பள்ளிக்கு அழைத்துச் சென்றபொழுது ஒன்றில், சபேசனைப் பற்றியும், இதுவரையிலும் அவன் திருமணம் செய்து கொள்ளாததையும் பற்றிச் சொல்லியவன், இருவரும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற தங்களது ஆசையையும் சொல்ல, அதிர்ந்து போனாலும் தன்னுடைய மறுப்பை உடனடியாக சொல்லிவிட்டாள் பூங்கோதை.
“ஏன் க்கா? உன் மனசுக்கு பிடிச்சவர் தானே? தயவுசெய்து அவரைக் கல்யாணம் பண்ணிக்கோ க்கா.” வேண்டுதலாக தன் விருப்பத்தை ஜெகன் சொல்ல,
“எம்மனசுக்கு பிடிச்சவர் தான் டா, நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா அப்போ நான் வைரவமூர்த்தியோட பொண்ணு மட்டும் தான். இப்போ நான் பத்து வயசு பொண்ணுக்கே அம்மா. தயவுசெய்து இதைப்பத்தி இனிமே எங்கிட்ட பேசாத.” கண்டிப்பாக சொல்லிவிட, ஒருவகையில் இப்படித்தான் பதில் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் ஏமாற்றமாக உணர்ந்தாலும் சோர்ந்து போகவில்லை ஜெகன்.
அதன்பிறகு வந்த நாட்களில் லக்ஷ்மியும் ஞானவல்லியும் தங்கள் பங்குக்கு முயற்சி செய்ய, அசைந்து கொடுக்கவில்லை பூங்கோதை.