ஆனால், அது சந்தோசத்திற்கு பதில் எரிச்சலைத் தான் கொண்டு வந்தது. இதுவே என்னுடைய இடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தால் இத்தனை கேள்விகளும் அறிவுரைகளும் அவனுக்கு இருந்திருக்குமா என்ற கேள்விவேறு எழ, கணவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

வான வீதியில் சுதந்திரமாக பறக்கும் பட்டத்தை தரையில் இருந்தபடியே அதன் நூலை கையில் வைத்திருக்கும் நபர் கட்டுப்படுத்துவாரே, அப்படியே கணவன் தன்னைக் கட்டுப்படுத்த முயல்வது போலவும் தோன்றியது. கடைசியில், தன் கற்பனை செல்லும் திக்கு அவளுக்கே பிடிக்காமல் போக, கவிழ்ந்தடித்து படுத்துக் கொண்டாள்.

 நந்தினி யோசிக்கும் அளவிற்கு எல்லாம் எதுவும் இல்லை. வழக்கறிஞராக இருக்கும் கண்ணனுக்கு இந்த சமுதாயத்தின் கறுப்பு பக்கங்கள் அத்தனையும் அத்துப்படியாக இருக்க, மனைவியின் வேகமும், அதிரடியும், அவள் எதிராளியின் மீது வார்த்தைகளை உபயோகப்படுத்தும் விதமும் அவனை பயம் கொள்ளச் செய்கிறது.

அதைக்கொண்டே அவளை நிதானப்படுத்த அவன் முயற்சி செய்கிறான். அது தெரியாமல் ஏதோ தன்னை கட்டுப்படுத்த முயல்கிறான் கணவன் என்று அவனிடம் முறுக்கிக்கொண்டு நிற்கிறாள் நந்தினி. சொல்லப்போனால், நலன் கருதியே என்றாலும் கூட கண்ணனின் செயல்களும் தவறுதான்.

வேண்டுமென்றே தன்னை விட்டு சற்று நகர்ந்து படுத்திருந்த மனைவியைப் பார்த்தான் கண்ணன். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தபடி இருந்தாள்.

அதற்கு மேலும் தாமதிக்காமல், கையை நீட்டி தன்னருகே அவளை இழுத்தவன், தன் மார்போடு அணைத்துக்கொள்ள,

“என்ன செய்யுறீங்க? விடுங்க என்னை, நீங்க கோஸ்ட், என்னை விழுங்க பாக்குறீங்க.” இன்னும் ஏதேதோ சொல்லி கணவனுடைய மார்பில் சட்சட் என்று தன் கைகளால் அடித்தாள் நந்தினி.

“பரவாயில்ல… நான் கோஸ்ட்டாவே இருந்துட்டு போறேன், நீ இப்போ தூங்கு” என்றான் கிசுகிசுப்பாக.

“ஏன்? அதைக்கூட நீங்க சொல்லித்தான் நான் செய்யணுமா? முடியாது… நான் இப்போ தூங்க முடியாது. என்ன செய்வீங்க?” என்றாள் சட்டமாக அவன் கைகளுக்குள் இருந்தபடியே.

“ம்ம்… என்னென்னவோ செய்யலாம், ஆனா அதையும் உன் பெர்மிஷன் இல்லாம செய்தா, என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடமாட்ட? என்னோட செல்ல அராத்து, ராட்சஷி” என்றபடியே மனைவியை இறுக்கமாக தன்னோடு அணைத்துக் கொண்டு அவள் தேன் இதழ்களை ஈரமாக்கினான்.

“எதே… நான் ராட்சஷியா உங்களுக்கு? அப்போ கண்டிப்பா என்னைப்போல நாலு பொண் குழந்தைகளை பெத்துப்போட்டு வீடு முழுக்க ராட்சஷிகளா ஆக்கிடுறேன்…” வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து தன் இதழ்களை விடுவித்துக்கொண்டு சூளுரைத்தாள் நந்தினி.

“நாலு என்ன, ஐந்து கூட பெத்துக்கோ. ஆனா அதெல்லாம் என்னோட தேவதைங்க டி.” கண்கள் கனவில் மின்னியது கண்ணனுக்கு.

“அந்த அஞ்சு பேரையும் அப்பாவைப் போல பயந்துருணியா வளக்காம, என்னைப் போல துணிச்சலா வளப்பேன்.” பேச்சு அத்தோடு முடியவில்லை என்பது போல நந்தினி தொடர,

“என்னது? உன்னைப் போலவா?” அலறினான் கண்ணன்.

“ஆமா… அச்சு அசலா என்னப் போலவே தான். தைரியமா…” கணவனின் பயம் உற்சாகத்தை கொண்டுவந்திருக்க, அவன் மீசையை இழுத்து பிடித்து முறுக்கி விட்டபடியே உல்லாசமாக சொன்னாள்.

“ஷ்ஷ்…ஆத்தாடி… ஆத்தா… உன் ஒருத்தியை சமாளிக்கவே என்னால முடியல, இதுல உன்னப் போல அஞ்சு பேரா? என்னால முடியாது.” சட்டென்று பின்வாங்கினான் கண்ணன்.

“அதெல்லாம் முடியாது, நான் சொன்னா சொன்னது தான்.”

“இல்ல…வேணும்னா உன்னைப்போல ஒன்னைப் பெத்துக்கலாம், மீதி எல்லாம் என்னைப்போல பெத்துக்கலாம்.” மனைவியை அப்படியே தன் மார்பில் அள்ளிப் போட்டுக்கொண்டு சமாதான உடன்படிக்கையில் ஈடுபட்டான்.

“நோ வே… உங்களை மாதிரி வேண்டவே வேண்டாம்…”

“இல்ல… உன் ஒருத்திக்கே ஆயுசு முழுக்க செக்யூரிட்டி வேலை பாத்து முடியாது என்னால, இதுல உன்னைப் போலவேன்னா… முடியவே முடியாது…”

கண்ணன் கெஞ்ச, நத்தினி மிஞ்ச என்று போய்க்கொண்டிருந்த உரையாடலில், எப்போது இருவருமே கெஞ்சி, கொஞ்சி, மிஞ்ச ஆரம்பித்திருந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை.

மறுநாள் காலையில் முதலில் கண்விழித்தது கண்ணன் தான். பூனைக் குட்டி போல தன்னை உரசிக்கொண்டு படுத்திருந்த மனைவியின் முகத்தை ஆதூரமாக பார்த்தான். இறுக்கங்கள் எதுவுமின்றி பளிச்சென்று நிர்மலமாக இருந்தது முகம்.

இந்த பெண்ணிடமா இத்தனை அதிரடி என்று யோசிக்க வைக்கும் முகவடிவு தான். சிறுவயதில் நந்தினி இத்தனை அதிரடியெல்லாம் இல்லை. அதற்காக பயந்த சுபாவம் என்றும் சொல்லிவிட முடியாது.

தகப்பனின் துரோகத்திற்கு பிறகு தான் அவளிடம் ஏகத்துக்கும் மாற்றங்கள். தன் மனதுக்கு நெருக்கமான கண்ணத்தானையே தள்ளி நிறுத்தும் அளவிற்கு மாற்றங்கள்.

கண்ணனும் எத்தனையோ முறை அவளை நெருங்க முயற்சி செய்திருக்கிறான். தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு அதற்குள் அவனை நுழைய அனுமதிக்கவே இல்லை அவள்.

அப்படியானவள் அம்மாவுக்காக என்றாலும் சட்டென்று திருமணத்திற்கு சம்மதித்து விட, கண்ணனுக்கு ஆச்சர்யம் தான். அதனால் தான் முடிவெடுக்க நேரமெடுத்துக் கொள் என்று நந்தினியிடம் சொன்னது.

ஆனால் இது என்ன பிரமாதம், இன்னும் இருக்கிறது என்பது போல திருமணநாள் அன்று இரவு கண்ணனை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டுபோய் நிறுத்தியிருந்தாள் அவன் மனைவி.

ஆமாம்… திருமணத்தைத் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை தொடங்குவதைப் பற்றி கண்ணன் பெரிதாக எதிர்பார்ப்பு எதுவும் வைத்திருக்கவில்லை. ‘ஏதோ திருமணத்திற்கு சம்மதித்துவிட்டாள். கண்டிப்பாக, அதைத் தாண்டி தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு கொஞ்சம் காலஅவகாசம் எடுத்துக் கொள்வாள்’ என்று கண்ணன் மனைவியைப் பற்றி நினைத்திருக்க, அவனுடைய எண்ணத்தை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு அன்றிரவே தங்களது வாழ்க்கையை முழு மனதோடு தொடங்கிவிட்டாள்.

திருமணத்தை வேண்டுமானால் தாய் மீதான பாசத்தில் செய்து கொள்ளலாம். ஆனால் வாழ்க்கையை அப்படி யாருக்காகவும் வாழ்ந்துவிட முடியாதே. அவள் மனதின் அடியாழத்தில் தனக்கான இடம் அப்படியேதான் இருந்திருக்கிறது. அதனால் தான் திருமணத்தின் மீதான வெறுப்பையும் மீறி அத்தனை எளிதாக தன்னோடு ஒரு வாழ்க்கையை தொடங்க முடிந்திருக்கிறது.

அதுவும், நேற்றிரவு குழந்தையைப் பற்றிய பேச்சு, அதைத் தொடர்ந்த நிகழ்வுகள் என்று நினைவே சுகமாக இருக்க, அத்தனையும் காதல் இன்றி எப்படி சாத்தியம் என்ற எண்ணம் அவனிடம்.

“என்ன த்தான்… எந்த கோட்டையைப் பிடிக்க, காலையிலேயே யோசனை எல்லாம் பலமா இருக்கு?” நந்தினியின் கேலியில் கண்ணனின் யோசனை பின்னுக்கு சென்றது.

“கோட்டையைப் பிடிக்க தான் யோசிக்கணுமா? ஃபைனலி, என்னோட ராணியை பிடிச்சிட்டனே, அதைப்பத்தி நான் யோசிக்க கூடாதா என்ன?” என்று கேலி பேசியவன்,

“எழும்பு, அப்படியே வாக்கிங் போய்ட்டு வந்துடலாம்.” புன்னகையோடு மனைவியை அழைத்தான்.

“இல்ல த்தான்… பேசாம நான் தொப்பையை வளத்துடலாம்னு இருக்குறேன்.” சோம்பலாக புரண்டு படுத்தவள், கணவனின் மீது வாகாக கையைத் தூக்கி போட்டுக்கொண்டாள்.

“தொப்பை பிடிக்காதுன்னு நீ சொன்னதா எனக்கு நியாபகம்?” கண்ணன் கேலியாக புருவத்தை உயர்த்த,

“இது நான் சொன்ன தொப்பை இல்ல, நீங்க சொன்ன தொப்பை.” என்றாள் கண்ணடித்து.

நேற்றிரவும் குழந்தையைப் பற்றிய பேச்சு, இதோ இப்போது அதன் தொடர்ச்சி… அவ்வளவு தான்… பெயர் சொல்ல முடியாத உணர்வு ஒன்று கண்ணனின் மனதை வியாபித்து சட்டென்று பூத்து குலுங்கி நின்றது.

எல்லாம் தன்மீதான காதலினால் தான் இந்த திருமணத்திற்கு நந்தினி சம்மதித்தது என்ற ஆராய்ச்சியின் பலன் தான்.

“குழந்தைக்கு இப்போ என்ன இவ்வளவு அவசரம் நந்து?” உன்மீது காதலாய் கசிந்துருகுகிறேன். இந்த வார்த்தையை தன் துணையின் வாயால் கேட்டுவிட அந்த ஆணின் மனது பேராவல் கொள்ள, கேள்வியால் கொக்கி இட்டு இழுத்தான்.

“கல்யாணத்துக்கு அப்புறம் குழந்தை தானே த்தான்? அதோட, எனக்கும் இருபத்தி எட்டு வயசாகுதே! அப்புறம், உங்க மாமியாரும் என் மாமியாரும் எப்போ பெத்துக்கப்போறன்னு என்னை நச்சரிக்குறதுக்கு முன்னாடியே பெத்து அவங்க கையில குடுத்துட்டா, நான் சேஃப் பாருங்க.” கண்ணன் எதிர்பார்க்காத பதில்களை எல்லாம் அவன் மனைவி அடுக்க, நொந்தே போனான் அந்த வழக்கறிஞன்.

‘உன் பொண்டாட்டியை நம்பி ரொம்ப ஆராய்ச்சி எல்லாம் செய்யாதே டா.’ மனம் எச்சரிக்கை மணி அடித்தது. சுதாரித்துக் கொண்டவன்,

“வாவ்… என்ன ஒரு தொலைநோக்கு சிந்தனை! அதெல்லாம் நடக்குறப்போ தானாவே நடக்கும். இப்போ நாம நடக்கப் போவோம், வா.” என்று மனைவியின் கையைப் பிடித்து எழுப்பினான்.

சற்று நேரத்துக்கு எல்லாம் இருவரும் வீட்டைவிட்டு கிளம்பியிருந்தார்கள். நந்தினிக்கு மிகவும் பிடித்த இருள் விலகாத காலைப்பொழுது.

“நல்லகாலம் எழுப்பி கூட்டிட்டு வந்தீங்க த்தான்.” கைகளை லேசாக விரித்து காலை நேரத்து ஏகாந்தத்தை ரசித்தபடியே நந்தினி சொல்ல, கண்ணனின் முகமெல்லாம் புன்னகை.

மெதுவான நடை முடிந்து இருவரும் நடையில் வேகத்தை கூட்டிய போது, தொப் தொப்பென்று பின்னால் யாரோ ஓடிவருவது போல சத்தம் கேட்டது. தம்பதியர் இருவருமே ஒரேநேரத்தில் திரும்பி பார்த்தார்கள்.

 சிவா சகிதமாக சுரேந்தர் தான் ஓடி வந்து கொண்டிருந்தான். இருவருமே ஓட்டப்பயிற்சிக்கான உடைதான் அணிந்திருந்தார்கள். சுரேந்தரைக் கண்டதும் நந்தினி சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“என்ன சிவா, இந்த பக்கம்?” கவனமாக மாமன் மகனைத் தவிர்த்து சிவாவிடம் கண்ணன் கேட்க,

“அக்காவைப்போல ஐபிஎஸ் ஆஃபீஸர் ஆகணும் த்தான். அதுக்கு மொதல்ல உடம்பை பிஃட்டா வச்சிக்கணும்ல? அதான் இன்னையிலயிருந்து ஓட்டப்பயிற்சி ஆரம்பிச்சாச்சு.” உற்சாகமாக பதில் வந்தது என்னவோ சுரேந்தரிடமிருந்து.

‘ஐயோடா… சும்மாவே இவன் அக்கா ஆடுவா, இதுல இந்த பயல் சலங்கை வேற கட்டிவிடுறானே?’ கண்ணன் உள்ளுக்குள் அலற, அவன் எதிர்பார்த்தது போலவே கணவனை முறைத்தாள் நந்தினி.

“பெரியவங்க பண்ணுன தப்புக்கு இவன் என்ன பண்ணுவான் நந்து? நம்ம கல்யாணத்தன்னைக்கு பாத்த தானே, அவன் எந்த அளவுக்கு ஃபீல் பண்ணுறான்னு. உன்னை ரோல் மாடலா எடுத்துருக்கான், உனக்கு இது பெருமை தானே?” சுரேந்தரின் பால் மனம் இளகியிருக்க, மெல்லிய குரலில் மனைவியை சமாதானப்படுத்த முயன்றான் கண்ணன்.

“என்னை கம்பெல் பண்ணி இங்க கூட்டிட்டு வந்தீங்க, இப்போ அந்த பயல் புகழ்பாடுறீங்க, அப்போ எல்லாம் ப்ளான் பண்ணி தான் செய்யுறீங்க, இல்ல?” வழக்கம் போல பற்களைக் கடித்தாள் நந்தினி.

“ஏய்… என்ன நீ? எப்போ பாத்தாலும் இப்பிடியே சொல்லுற?” இருவரும் எதிரெதிரே நின்றபடி மெல்லிய குரலில் வழக்கடித்துக் கொண்டு நிற்க,

“அக்கா…” என்ற சத்தத்தோடு நத்தினியை தள்ளிவிட்ட சுரேந்தர், “ஆ…” என்று அலறியபடியே பொத்தென்று தரையில் விழுந்தான் . அவனை உரசியபடி ஒரு புல்லட் அதிவேகமாக அங்கிருந்து சென்றிருந்தது.

ஆமாம்… நந்தினியை மோதுவது போல வந்த வாகனத்தை நொடிநேரத்தில் கணித்து அவளை பிடித்து தள்ளியிருந்தான் சுரேந்தர். அவன் விலகுவதற்கு முன்னரே அந்த இருசக்கர வாகனத்தின் புகைபோக்கி குழாய் இளையவனின் கால் ஆடுசதையில் நன்றாக பதிந்து இழுத்துச் சென்றிருந்தது.

இருவரையும் அங்கே வந்த ஆட்டோவில் அள்ளிப்போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு வந்திருந்தான் கண்ணன். கீழே விழும் போது கைகளை ஊன்றியிருந்ததால் உள்ளங்கைகளில் சிராய்ப்பு நந்தினிக்கு.

சுரேந்தரின் வலது கால் ஆடுதசை, சூடு வைத்தது போல பொங்கி நின்றதை பார்க்கவே சகிக்கவில்லை.

இருவருக்கும் உடனே சிகிச்சை அளித்தார்கள். வலி எதுவும் இல்லை என்று காட்டிக்கொள்ள முயன்றாலும், சுரேந்தரால் முடியவில்லை.

சுரேந்தரை வீட்டில் கொண்டு விடும் பொறுப்பை சிவாவிடம் ஒப்படைத்தான் கண்ணன்.

இத்தனைக்குப் பிறகும் எதுவும் பேசாமல் மௌனமாக நின்றிருந்த நந்தினியைத் திரும்பித் திரும்பி பார்த்தபடியே கண்ணனிடம் விடைபெற்றுக் கொண்டான் சுரேந்தர். ம்ம்… அத்தான் என்று அவனை அழைத்து தான்.

சுரேந்தர் ஆட்டோவில் ஏறுவதற்கு சில அடிகள் தூரமே இருக்க, “அவனைக் கொஞ்சம் நிக்கச் சொல்லுங்க த்தான்.” என்றிருந்தாள் நந்தினி கணவனிடம்.

“சுரேந்தர், அக்கா உன்னை நிக்கச் சொல்லுறா.” அப்படியே தகவலை கண்ணன் கடத்த, சந்தோஷமாக நின்று திருப்பிப் பார்த்த சுரேந்தர், “என்ன க்கா?” என்றும் கேட்டு வைத்தான்.

“இங்க பாரு, உன்னைப் பாக்கும் போதெல்லாம் என் இயல்பை மீறி நான் நடந்துக்குறேன். தயவுசெய்து இதுக்கு மேல என் கண் முன்னாடி வராத.” கண்டிப்பான குரலில் சொல்லிருந்தாள் நந்தினி…