“எப்பிடின்னா? ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சு பத்து வயசு பெண்குழந்தையோட இருக்குற பொண்ணை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு யோசிக்கிறீங்களா? இல்ல, வைரவமூர்த்தியோட பொண்ணை எப்படி கல்யாணம் பண்ணிகிறதுன்னு யோசிக்கிறீங்களா?” எதிரில் இருப்பவனின் மனதை அறிந்து கொள்ள அவனை அதிகப்படியாகவே உரசிப் பார்த்தாள் நந்தினி.

“ம்ஹ்ம்… நீங்க சொன்ன எதுவுமே என்னைக் கட்டுப்படுத்த முடியாதுன்னு நிரூபிக்க, என் கோதையோட சம்மதம் மட்டும் போதும் மேடம் எனக்கு. ஆனா, எங்கோதை சம்மதிப்பாளா மேடம்?” ஏதோ நந்தினிக்கு தான் இந்த கேள்விக்கான விடை தெரியும் என்பதுபோல உயிரைக் கையில் பிடித்து வைத்துக்கொண்டு கேட்டான். 

தன் காதலுக்காக மறுகி நிற்கும் ஆணவனின் தோற்றம் நந்தினியை திருப்திகொள்ள வைக்க போதுமானதாக இருக்க,

“அவ்வளவு ஈஸியா உங்க கோதையை சம்மதிக்க வைக்க முடியாது தான். ஆனா முயற்சி செய்தா முடியாதது எதுவுமே கிடையாது. அப்புறம், ஆள்பலம் கிடையாது, பணபலம் கிடையாதுன்னு என்னவோ எல்லாம் அன்னைக்கு சொன்னீங்களே? இன்னைக்கு எல்லாத்தையும் மிஞ்சிய சட்டபலம் இருக்கு உங்ககிட்ட. அப்படியே நானும் இந்த விஷயத்துல உங்ககூட துணையா நிக்க முடிவு செய்துட்டேன். இந்த தடவை நிதானமா முயற்சி செய்து, உங்க கோதையை கல்யாணம் செய்யுறீங்க.” என்றாள்.

“கண்டிப்பா மேடம், அன்னைக்கு ஈஸியா அடிச்சு தூக்கி போட்ட இருபத்திநாலு வயசு சபேசன் இல்ல நான். இந்த தடவை கண்டிப்பா என் வாழ்க்கையை நான் காப்பாத்திப்பேன்.” கண்கள் உறுதியில் மின்ன சபேசன் பேசிக்கொண்டிருந்த நேரம், தச்சநல்லூருக்கு அருகே மூண்டிருக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த கூடுதல் போலீஸாரோடு செல்லுமாறு உயரதிகாரியிடமிருந்து தகவல் வந்திருந்தது நந்தினிக்கு.

தகவல் கிடைக்கவும் நிமிட நேரம் கூட தாமதிக்காமல் காவலர்களோடு கிளம்பிவிட்டாள். செல்லும் வழியிலேயே கலவரத்தை பற்றிய முழு விவரங்களையும் திரட்டிக் கொண்டாள்.

வேறொன்றுமில்லை, குறிப்பிட்ட கிராமத்தின் குளத்தில் மண் வெட்டி எடுக்கும் கும்பலுக்கும், கிராமத்து மக்களுக்குமிடையே பிரச்சினை வெடித்திருக்க, மண் லோடு ஏற்றியிருந்த ட்ராக்டர்களையும், மணல் தோண்ட உபயோகப்படுத்திய ஜேசிபி வண்டிகளையும் அங்கிருந்து நகர விடாமல் சுற்றி வளைத்திருந்தார்கள் மக்கள்.

அந்த பகுதிக்கு உட்பட்ட காவலர்கள் வந்தும் பிரச்சினை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே சென்றதோடு, முன்பைவிட வீரியமாக சென்று கொண்டிருக்க, இதோ நந்தினியின் தலைமையில் கூடுதல் போலீஸார் செல்கிறார்கள்.

காவல்துறை வாகனம் சம்பவ இடத்திற்கு சென்று நிற்கவும், பொதுமக்கள் அதை முற்றுகை இட்டுக்கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

“இப்பிடி ஆளாளுக்கு கத்தினா, பிரச்சினைக்கு தீர்வு எப்படி கிடைக்கும்? கொஞ்சம் அமைதியா இருங்க.” கூட்டத்தைப் பார்த்து கைகளை உயர்த்தி அமைதிப்படுத்தியபடியே சத்தமாக பேசினாள் நந்தினி.

“கொஞ்சம் அமைதியா இருங்க, மேடம் என்னதான் செய்யுறாங்கன்னு பாப்போம்.” கூட்டத்திற்கு தலைவன் போல இருந்த இளைஞன் ஒருவன் முன்னே வந்து தன் மக்களை கட்டுப்படுத்த, சலசலப்பு சற்றே அடங்கியிருந்தது.

“என்ன பிரச்சினை சர்? சொல்லுங்க.” அங்கேயிருந்த அந்த பகுதி காவல்துறை கண்காணிப்பாளரிடம் நந்தினி கேட்க,

“அதுகூட தெரியாமத்தான் ஜீப்ல ஏறி வந்தீங்களாக்கும்?” கூட்டத்திலிருந்து யாரோ நக்கலாகச் சொன்னார்கள். அதைத்தொடர்ந்து,

“என்ன பிரச்சினைன்னு நம்மகிட்ட கேக்காம, போலீஸ் கிட்ட கேட்டா, அவங்களுக்கு என்ன தெரியும்?” என்ற சலசலப்பும் எழுந்தது.

அது மக்களின் தார்மீக கோபம், அதை ஒன்றும் சொல்லுவதற்கில்லை. எனவே அவர்களின் வார்த்தைகளை கண்டுகொள்ளாமல், காவல்துறை கண்காணிப்பாளரிடம் தன் கவனத்தை செலுத்தினாள் நந்தினி.

“பாசனத்துக்கான குளத்துல இருந்து மண்ணை வெட்டி எடுக்குறாங்க. அதுவும் அனுமதிச்ச அளவையும் தாண்டி வெட்டி எடுக்குறாங்க, இதுதான் பொதுமக்களோட புகார் மேடம், ஆனா…”

“உங்களுக்கு தெரியுமா, அனுமதிச்ச அளவை விட அதிகமா வெட்டி எடுக்குறோம்னு?” காவல்துறை அதிகாரியின் பேச்சை அத்தனை திமிரோடு இடைவெட்டினான் ட்ராக்டர் ட்ரைவர்களோடு நின்றிருந்த டிப்டாப் ஆசாமி ஒருவன்.

அவனை ஊடுருவும் பார்வை பார்த்த நத்தினி, “ஓ… நீங்க தான் மண்ணை வெட்டி எடுக்க பெர்மிஷன் வாங்கியிருக்கீங்களா? அப்போ கண்டிப்பா உங்களுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கும், நீங்க சொல்லுங்க, கேட்போம்.” அமைதியாக கேட்பதுபோல இருந்தாலும் அந்த குரலில் இருந்த கட்டளையில்,

“அது…” என்று இழுத்தான் அந்த நபர்.

“அடடே! உங்களுக்கும் தெரியாதா? பரவாயில்ல, மண்ணை வெட்டி எடுக்க அரசாங்கத்துலயிருந்து அனுமதி வாங்கியிருப்பீங்களே, அதையாவது காட்ட முடியுமா?” நக்கலாக கேட்டாள்.

“இந்த மண்ணை யார் சொல்லி வெட்டி எடுக்குறோம்னு தெரிஞ்சா, அதை எல்லாம் நீங்க கேக்க மாட்டீங்க மேடம்.” அலட்சியமாக வந்தது பதில்.

“அந்த அப்பாடக்கரை எல்லாம் அப்புறமா தெரிஞ்சிக்கலாம், இப்போ பெர்மிட் பேப்பரைக் காட்டுங்க.” நந்தினியின் கட்டளையில் அந்த சீட்டு அவள் கைவசம் வந்திருந்தது.

அதைப் படித்து பார்த்தவளின் புருவங்கள் இரண்டும் கோபத்தில் நெரிய, “வச்சிருக்கிறது காலாவதியான அனுமதி, இதுல உனக்கு சவுண்ட் வேற” என்றவள் கொத்தாக அந்த நபரின் சட்டையை பிடித்திருந்தாள்.

“ஒன்னும் பிரச்சினை இல்லை, மண்ணை அள்ளிக்கோங்கன்னு தாசில்தாரே சொல்லியிருக்காங்க. நீங்க வேணும்னா அவங்களுக்கு ஃபோன் பண்ணி விசாரிச்சுக்கோங்க.” நந்தினியின் கையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடியபடியே பேசினான் அந்த நபர்.

“ஓ… தாசில்தாரே சொல்லிட்டாரா? இந்த குளம் அவரோட பரம்பரை சொத்துல்ல, அதனால சொல்லத்தான் செய்வார்?” என்று நக்கலடித்த நந்தினி,

“இன்ஸ்பெக்டர், அத்தனை வெகிக்கிளையும் மண்ணோடு ஸ்டேஷனுக்கு கொண்டு போங்க, அனுமதி இல்லாம சட்டத்தை மீறி மண் அள்ளுனதா கேஸ் ஃபைல் பண்ணுங்க. அப்படியே அந்த தாசில்தார் யாருன்னு விசாரிச்சு அவரையும் கேஸுக்குள்ள கொண்டுவாங்க. எந்த கொம்பன் சொன்னாலும் என்னோட அனுமதி இல்லாம, எந்த வாகனமும் ஸ்டேஷனை விட்டு வெளியப் போகக்கூடாது. அப்படியே இவனுங்களையும் அரெஸ்ட் செய்து கஸ்டடியில வைங்க, எந்த நாய் இவங்களை ஜாமீன் எடுக்க வருதுன்னு பாக்கலாம்.” என்றாள் கோபமாக.

இத்தனை நேரமும் தங்களுக்கும், போலீஸுக்கும் தண்ணிகாட்டிய நபர் நந்தினியின் கைகளுக்குள் திணறுவதைப் பார்த்ததும் கூட்டத்தில் உற்சாகம் பீறிட்டது.

“இப்பிடியே ஆறு, குளம், மலைன்னு மிச்சம் வைக்காம கொஞ்சம் கொஞ்சமா சுரண்டிகிட்டே இருந்தா, வருங்கால தலைமுறைக்கு நாம எதை மேடம் மிச்சம் வச்சிட்டு போகப்போறோம்?” அந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கியிருந்த இளைஞனிடமிருந்து ஆதங்கமாக கேள்வி வர, சந்தோஷமாக இருந்தது நந்தினிக்கு.

ஆமாம்… இளம் தலைமுறையினர் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்களே, இனிமேல் சமுதாய மாற்றங்கள் படிப்படியாக நிகழ்ந்துவிடும் என்ற நம்பிக்கை தான் அவளிடம்.

“மேடம், மாவட்ட செயலாளர் உங்ககிட்ட பேசணும்னு சொல்லுறார்.” ஆளும் கட்சியின் பெயரைச் சொல்லியபடி தன் கையிலிருந்த ஃபோனை நந்தினியின் பிடியிலிருந்த நபர் நீட்ட,

“அவர் சொன்னா, நான் பேசிடணுமா? அவருக்கு தேவைன்னா நேர்ல வந்து பேசச் சொல்லு டா.” என்றபடியே அந்த நபரின் பின்னந்தலையில் ஓங்கி தட்டிய நந்தினி, காவலர்களிடம் அவனை ஒப்படைக்க, சிந்தாமல் சிதறாமல் அத்தனை பேரையும் அள்ளிக்கொண்டு பறந்திருந்தார்கள் காவலர்கள்.

“இதேபோல எப்பவும் உங்களுக்குள்ள ஒற்றுமையா இருங்க, எங்க தப்பு நடந்தாலும் தயங்காம தட்டிக்கேளுங்க.” அந்த கூட்டத்தில் இருந்த இளைஞர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பியிருந்தாள் நந்தினி.

அன்று பணியிலிருந்து நந்தினி வீட்டுக்கு திரும்பி வரும்போது இரவு எட்டு மணி கழிந்திருந்தது.

“சிங்கப் பெண்ணே… சிங்கப் பெண்ணே… ஆணினமே உன்னை வணங்குமே…” நந்தினி வீட்டுக்குள் நுழையவும் கண்ணன் ராகமாக பாடினான். விஷயம் அவன் வரைக்கும் தெரிந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டவள்,

“ஆணினம் எங்களை வணங்க வேண்டாம், மனுஷியா மதிச்சா போதும். இப்போ நீங்க எனக்கு சூடா ஒரு கப் டீ குடுக்கலாமா த்தான்?” என்றபடியே இருக்கையில் தளர்வாக அமர்ந்தாள்.

“டைம் ஆகிடிச்சி, இப்போ டீ குடிச்சா சாப்பிட முடியாது. போய் குளிச்சிட்டு வா, சாப்பிடவே செய்துடலாம்.” என்றபடியே மனைவியின் கையைப் பிடித்து இருக்கையிலிருந்து எழுப்பி விட்டான்.

“ம்ம்… அதுவும் சரிதான்…” என்றபடியே தங்களுடைய அறைக்குள் சென்ற நந்தினி அடுத்த பத்தாவது நிமிடத்தில் குளித்து முடித்து வேறு உடை அணிந்து வந்து நின்றாள்.

“நந்து, இங்க கிச்சனுக்குள்ள வா.” கணவனின் குரலில் நந்தினி சமையலறைக்குள் வர, தோசை வார்த்தபடி நின்றிருந்தான் கண்ணன்.

“ஹ்ம்ம்… பொண்டாட்டியை நல்லாவே அசத்துறீங்க அத்தான் “ என்றவள் ஒரு தட்டை எடுக்க, அதில் சிக்கன் கிரேவியை வைத்து இன்னும் கொஞ்சம் அசத்தினான் அவளுடைய கணவன்.

“ஈவ்னிங் வீட்டுக்கு வரும்போது கொஞ்சம் சிக்கன் வாங்கிட்டு வந்தேன். நாளைக்கு காலைலயும் யூஸ் பண்ணிக்கலாம் பாரு” என்றபடியே தோசையை அவளுடைய தட்டில் கண்ணன் வைக்க,

“அத்தான், நீங்க முழு குடும்ப இஸ்திரியன் ஆகிட்டீங்க, என்ன பொறுப்பு? என்ன பதவிசு?” என்று கிளுக்கிச் சிரித்தவள், “நீங்க சாப்டாச்சா?” என்று கேட்க, “இனிமேல் தான்” என்றான்.

அதன்பிறகு தட்டில் கணவன் வைத்த தோசையை அவனுக்கும் கொடுத்து, தானுமாக சாப்பிட ஆரம்பித்தாள் நந்தினி. அவனும் சளைக்காமல் தோசை சுட்டுப்போட,

“நான் ஈவ்னிங் வீட்டுக்கு வர்ற டைம் இப்படித்தான் இருக்கும். அதனால நைட் சமையல்ல எந்த அளவுக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்னு என்னால சொல்ல முடியாது த்தான். வேணும்னா வேலைக்கு யாரையாவது வச்சிடலாமா?” தான் ஒருவனாக இரவு சமையலை பார்க்க வேண்டியிருக்கிறது என்று கணவன் நினைத்து விடக்கூடாதே என்று மெதுவாக கேட்டாள்.

“வேலைக்கு ஆள் வச்சா இப்பிடி மனைவி கையால ஊட்டிவிட்டு சாப்பிடுற சுகம் கிடைக்காதே?” தோசையோடு சேர்த்து மனைவியின் விரல்களையும் சுவைத்தவன்,

“ஹ்ம்ம்… இந்த அனுபவமும் நல்லா தான் இருக்கு. இப்படியே போகட்டும், எனக்கு எப்போ முடியாதுன்னு தோணுதோ, அப்போ வேலைக்கு ஆள் வைக்கிறதைப் பற்றி யோசிக்கலாம்.” என்று கண்சிமிட்டியபடி சொல்லி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளியை வைத்தான்.

இருவரும் சாப்பிட்டு முடிக்கவும் சமையலுக்கு உபயோகப்படுத்திய பாத்திரங்கள் அத்தனையும் கழுவி சுத்தப்படுத்தினாள் நந்தினி.

இருவரும் படுக்கை அறைக்குள் வந்தார்கள். படுக்கையை தட்டிப்போட்டு தலையணைகளை சரியாக வைக்க ஆரம்பித்தாள் நந்தினி.

“இந்த விஷயத்துல நீ ஒருத்தி அதிரடியா நடவடிக்கை எடுக்குறதால பிரச்சினை முடிவுக்கு வந்துடும்னு நினைக்கிறியா நந்து?” மனைவிக்கு சாப்பிட அவகாசம் கொடுத்து இத்தனை நேரமும் தள்ளிவைத்திருந்த கேள்வியை கேட்டான் கண்ணன்.

கணவனின் இந்த திடீர் கேள்வியில் நந்தினியின் பார்வை யோசனையாக அவனுடைய முகத்தில் பதிந்தது.

“இப்பிடி அபத்தமா கேள்வி கேக்குறதை விட்டுட்டு எல்லோரும் அவங்கவங்க பொறுப்பை உணர்ந்து நடந்துகிட்டாலே இங்க எல்லா பிரச்சினைகளுமே முடிவுக்கு வந்துடும் த்தான்.” எல்லா என்ற வார்த்தைக்கு கூடுதலாக அழுத்தம் கொடுத்து பதில் சொன்னவள்,

“உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இன்னைக்கு நடந்த போராட்டத்தை வழி நடத்துனது இளைய தலைமுறை தான். எத்தனை தெளிவு தெரியுமா அவங்க கிட்ட?” என்றாள் முகம் புன்னகையில் மிளிர.

“ஆனா அப்படி கேள்வி கேக்குறவங்களையும், நியாயமா நடக்குறவங்களையும் யாரும் நிம்மதியா இருக்க விடமாட்டாங்க. அது உனக்கும் தெரியும் தானே?” ஒருமாதிரி குரலில் கண்ணன் கேட்க,

“பயப்படுறீங்களா த்தான்?” சட்டென்று கேட்டிருந்தாள் நந்தினி.

“வாழ்க்கையில் பயப்பட வேண்டிய விஷயத்துக்கு பயப்பட்டு தானே ஆகவேண்டியிருக்குது?” தன்னுடைய வாதத்தை நியாயப்படுத்தும் முயற்சி இருந்தது கண்ணனின் குரலில்.

“ஒரு லாயர், நீங்களே இப்பிடி பேசும் போது எனக்கு கோபம் வருது த்தான். இந்த வேலைக்கு வரும்போதே என்ன வேணும்னாலும் நடக்கலாம்னு தெரிஞ்சி தானே வர்றோம், அப்புறம் என்ன? பதவி வேணும், அதால வர்ற மரியாதையும் வருமானமும் வேணும். ஆனா, அந்த பதவிக்கு மட்டும் நியாயம் செய்யக்கூடாது. இது எந்த மாதிரியான மனநிலை த்தான்?” எத்தனை முயன்றும் வார்த்தைகளில் கோபம் எட்டிப் பார்த்ததை தவிர்க்க முடியவில்லை நந்தினியால்.

“அப்படி நம்ம உயிரையே தியாகம் செய்து வேலை பாக்குற அளவுக்கு இங்க எவனும் யோக்கியம் கிடையாது.” கண்ணனின் குரலும் கூட கோபத்தில் மெல்ல உயர்ந்திருந்தது.

“எத்தனைப் பெரிய தப்பை செய்தாலும், பணத்தை கொட்டித் தந்தா தண்டனையிலயிருந்து தப்பிக்க வச்சிடுவீங்கன்னு நினைக்கிற உங்க கட்சிக்காரங்களை மாதிரியான ஆட்களை மட்டும் மனசுல வச்சிட்டு பேசாதீங்க த்தான் நீங்க. தங்களுக்காக தோள் கொடுக்கவும், குரல் கொடுக்கவும் யாராவது முன்வர மாட்டாங்களான்னு ஏங்குற மக்களும் நிறைஞ்சது தான் நம்ம நாடு. சொல்லப் போனா அந்த மாதிரி மக்களோட எண்ணிக்கை தான் இங்க அதிகம். அந்த அப்பாவி மக்களுக்காக என்னோட வேலை எப்பவும் இப்படித்தான் இருக்கும். தப்பு செய்தா எவனா இருந்தாலும் தட்டித் தூக்குவேன். அதால எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்ல.” அத்தனை உறுதி பெண்ணவளின் குரலில்.

“நீ பேசுறது கேட்குறதுக்கு வேணும்னா நல்லாயிருக்கலாம், ஆனா நடைமுறைக்கு அது சாத்தியம் கிடையாது. சட்டத்துல இருக்குற அத்தனை ஓட்டைகள்லயும் நுழைஞ்சு வெளிய வந்து, பழையபடி அதே தப்பை தான் செய்வாங்க. உன்னால ஒன்னும் செய்ய முடியாது.” நாட்டு நடப்பை சொன்னான் கண்ணன்.

“அதுக்கு துணை போறது உங்களை மாதிரியான சட்டம் படிச்ச ஆட்கள் தானே? சமூக விரோதிகள் சார்பா வாதாடுறது இல்லைன்னு ஒட்டுமொத்தமா நீங்க முடிவெடுத்தாலே பாதி குற்றம் இங்க குறையுமே? ஆனா உங்க இனம் அதை செய்யுறது இல்ல. கேட்டா, நாங்க சம்பாதிக்கிறது எப்படின்னு திருப்பி கேப்பீங்க. எப்போ தேவைக்கு பணம் சம்பாதிக்கணுங்குறது போய், சம்பாதிக்கிற வெறி எல்லார்கிட்டயும் வந்ததோ, அப்பவே நியாயம் இங்க செத்து போச்சு. இதுக்கு மேல இதைப்பற்றி நாம பேசினா நமக்குள்ள வெட்டு குத்து ஆகிப்போயிடும் போல, அதனால இத்தோட முடிச்சிக்குவோம்.” விளையாட்டு போலவே அந்த பேச்சை முடித்து கட்டிலில் படுத்துக் கொண்டாலும், மனதின் ஓரத்தில் மெல்லிய ஏமாற்றம் சூழ்ந்ததை பெண்ணவளால் தவிர்க்க முடியவில்லை.

இப்படிப் பேசுவதால் கண்ணன் தவறானவன் என்று அர்த்தம் கிடையாது. தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் இந்த சமுதாயத்தில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் கொண்ட சாதாரண மனிதன் அவன். அவ்வளவு தான்.

“நிதர்சனத்தை காலம் உனக்கு காட்டி குடுக்கும். என் பேச்சோட அர்த்தம் அப்போ உனக்கு புரியும்.” பெருமூச்சோடு கண்ணனும் கட்டிலில் சாய, கணவன் மனைவி இருவருக்குமிடையே பெருத்த மௌனம்.

அந்த மௌனத்தை கலைப்பது போல நந்தினியின் அலைபேசி அலறியது. போலீஸ் அதிகாரியின் கைபேசியாகிப் போனபிறகு அதற்குத்தான் ஓய்வென்பது உண்டா என்ன?

தங்கள் பணியில் இதெல்லாம் சாதாரணம் என்பதால் அலுத்துக் கொள்ளாமல் ஃபோனை கையிலெடுத்து யாரிடமிருந்து அழைப்பு என்று பார்வையிட்டாள் நந்தினி. தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு. யோசனையோடே அழைப்பை ஏற்று காதுக்கு கொடுக்க,

“நான் மாவட்ட செயலாளர் பேசுறேன். ஏதோ உன் அப்பன் வீட்டு குளத்துல எங்காளுங்க மண் அள்ளுன மாதிரி குதிச்சியாமே? மரியாதையா கேஸை கேன்சல் பண்ண சொல்லிட்டு, எங்க ட்ராக்டர், ஜேசிபி எல்லாத்தையும் நாளைக்கே வெளிய விடச்சொல்லி அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு சொல்லுற.” கட்டைக்குரலில் அதிகாரமாக பேசிய ஆணின் குரலில், எதிர்முனையில் இருப்பது பெண் அதிகாரி தானே என்ற அலட்சியம் கலந்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது.

“ஆமா, அது உன் அப்பன் வீட்டு குளம் பாரு, அதனால மண் அள்ள விடலைன்னா உனக்கு கண்டிப்பா கோபம் வரத்தான் செய்யும். ராஸ்கல், மொதல்ல மரியாதையா பேசுறது எப்படின்னு கத்துகிட்டு, தைரியம் இருந்தா ஸ்டேஷனுக்கு வந்து நேர்ல பேசுடா.” பதிலுக்கு உறுமியவள், அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

“ம்ஹ்ம்… இதோ ஆரம்பிச்சிட்டாங்க ல்ல!” நக்கலடித்தான் கண்ணன்.

“இந்த சலசலப்புக்கெல்லாம் பயந்தா யூனிஃபார்ம் போட முடியாது. நேர்ல வாடான்னு சொன்னா, பேடிப்பயல் முகத்தை காட்ட பயந்துகிட்டு குரலை மட்டும் அனுப்புறான்.” நந்தினி கோபத்தில் பற்களை கடித்த நேரம் மறுபடியும் ஒரு அழைப்பு. இப்போதும் தெரியாத எண்ணிலிருந்து தான் அழைப்பு. ஆனால் சற்றுமுன்னர் அழைத்த எண்ணில்லை.

யோசனையோடே நந்தினி அழைப்பை ஏற்க, “நான் ஜெகத்ரட்சகன் பேசுறேன்.” என்ற குரல் நந்தினியின் செவியில் வந்து மோதியது…