கண்ணே முத்து பெண்ணே 23

எப்படி நடந்தது இது? எப்படி, எப்படி? என்று அண்ணாச்சி திணறி கொண்டிருந்தார். அவருக்கு நடந்ததை ஏற்று கொள்ளவே முடியவில்லை.

திடீர்ன்னு சொத்தை என் பேர்ல எழுதுற அளவுக்கு, என்ன நடந்திருக்கும்? யார் பார்த்த வேலை இது? சுத்தி உள்ள அனைவரையும் யோசித்தார். நாராயணன், செல்வம் உட்பட. எவ்வளவு யோசித்தும் பதில் மட்டும் தெரியவில்லை.

அமைச்சர் மட்டும் சொல்லவில்லை என்றால் நிச்சயம் கம்பி நீட்டி இருப்பார். அவர் சொல்லி, அவரை மீற முடியுமா?

கட்சி தனி, அவர் தனி என்றால் கூட பரவாயில்லை. கட்சியோட சேர்ந்தவர், பதவியிலும் இருப்பவர். மேலிடத்தை பகைத்து கொள்ளும் தைரியம் எல்லாம் அவருக்கு இல்லை.

மறுத்து பேசாமல் கையெழுத்திட்டு வந்துவிட்டார். விசுவாசிகளும் நடந்ததை ஆராய்ந்து கொண்டிருக்க, நாராயணன் வீட்டிற்கு கிளம்பாமல் அங்கேயே தான் இருந்தார்.

அவருக்குள் ஒரு அற்ப சந்தோசம். என் பொண்ணையவா இழுத்து பேசின? இப்போ அனுபவி. என்று அண்ணாச்சி மாட்டி முழிப்பதை தான் கண்ணார கண்டிருந்தார்.

உள்ளே எல்லாம் நல்ல விதத்தில் முடிந்ததில் அகிலன் நிம்மதியாக இருந்தான். “சார்” என்று வந்தான் அங்கு வேலை செய்யும் ஒருவன்.

“வாங்க, இவர் தான் நமக்கு ஹெல்ப் பண்ணது” என்று அகிலனுக்கு அறிமுகம் செய்து வைத்தான் செல்வம்.

“சூப்பர் சார். இவ்வளவு சரியா எல்லாத்தையும் மாத்திட்டீங்க, கொஞ்சம் கூட சந்தேகம் வராத அளவு. நானே நினைச்சு பார்க்கலை” என்று அகிலன் கை குலுக்கி பாராட்ட,

அவனோ, “சார் மாத்த எல்லாம் இல்லை. முதல்லே இருந்தே இது தான்” என்றவன், செல்வத்துக்கு தலை அசைத்து சென்றுவிட்டான்.

அகிலனுக்கு பிரமை பிடித்தது போல் இருந்தது. “என்னடா சொல்லிட்டு போறான்?” என்று செல்வத்திடம் கேட்க, அவன் சொன்ன பதிலில் சிலை போலாகிவிட்டான்.

இருவரும் வெளியே வர, அண்ணாச்சி வேகமாக அகிலனை நெருங்கியவர், “என்ன இது, எதுக்கு என் பேர்ல சொத்து?” என்று கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டார்.

“இங்கேயே பேசணுமா? இல்லை ஆபிசுக்கு போலாமா?” அகிலன் கண்டிப்பான பார்வையுடன் கேட்க,

“இல்லை, சரி நாம அங்க போயிடலாம்” என்று அண்ணாச்சி பின் வாங்கிவிட்டார்.

“நீங்க கிளம்புங்க” என்று நாராயணனிடம் சென்று அகிலன் சொல்ல,

“நானும் கட்சி ஆபிசுக்கு வரேனே” என்றார் அவர்.

அகிலன் அவரை கேள்வியாக பார்க்க, செல்வம் உதட்டுக்குள் புன்னகைத்தான்.

“திடீர்ன்னு எல்லாம் மாறிடுச்சு இல்லை, அதான் தெரிஞ்சுக்கலாமேனு” என்று நாராயணன் சொல்ல,

“உங்க வேலை அவ்வளவு தான் முடிஞ்சது. கிளம்புங்க” என்றுவிட்டான் முடிவாக.

உடன் ரவிக்கும் அழைத்து, இவரை மருத்துவமனைக்கு பேக் செய்துவிட்டே காருக்கு வர, “ஸ்ட்ரிக்ட் ஆபிசர் தான் நீங்க” என்றான் செல்வம்.

“யாரு நானு. ஆனா நீ என்னையே ஏமாத்திட்ட இல்லை. கொஞ்ச நேரத்துக்காவது என்கிட்ட பேசிடாத” என்றான் அகிலன் கோவமாகவே.

“என்ன ஏமாத்திட்டாங்க இப்போ? உங்களுக்கு நல்லது தானே செஞ்சிருக்கேன்” என்றான் செல்வம் அப்பாவியாய்.

“சத்தியமா உன்னை கொன்னுடுவேன்டா. வெளியே பார்க்க நல்ல பையன் மாதிரி இருந்துட்டே, உள்ளுக்குள்ள அத்தனை கள்ள வேலையும் பார்த்திருக்க. எப்படிடா உனக்கு இந்த தைரியம் வந்துச்சு. விஷயம் மட்டும் வெளியே தெரிஞ்சா நீ காலி தெரியுமா?” என்றான் மிரட்டலாக.

“தெரிஞ்சிடும். அதை நான் பார்த்துகிறேன். பணம் வேணும்” என்றான் செல்வம் சாதாரணமாக.

“எதுக்கு இப்போ உனக்கு பணம்?” அகிலன் சந்தேகமாக கேட்க,

“உள்ள நம்ம ஆளு வேலை பார்த்ததுக்கு பணம் கொடுக்கணும் இல்லை”

“அவன் உன் ஆளுன்னு சொல்லுடா. காலையில வரைக்கும் கூட எனக்கே தெரியலைடா” என்று மாய்ந்து கொண்டிருக்க, ரவி அழைத்துவிட்டான்.

“அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே” என்று கவலையுடன் கேட்க,

“அதெல்லாம் நல்லா முடிஞ்சது. நீ முதல்ல நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு. இவன், இந்த நல்லவன் உண்மையாவே உன் தோஸ்தா?” என்று அகிலன் அவனிடம் கேட்டான்.

“என்னடா இப்படி சொல்ற, நாங்க டவுசர் காலத்துல இருந்து ப்ரெண்ட்ஸ்” என்று ரவி சொல்ல,  செல்வம் கெத்தாக காலரை தூக்கி விட்டு கொண்டான்.

 அகிலன் இன்னும் கடுப்பாகி போனவன், “உங்க டவுசரை அப்போவே உருவி விட்டிருக்கணும்டா. இவனை பத்தி தெரியாமலே, வாய் பேசிட்டு இருக்க நீ” என்று ரவியை காய்ந்தான்.

“என்னடா ஆச்சு, ஏதாவது பிரச்சனையா? செல்வா,  என்ன மாப்பிள்ளை?” என்று ரவி பதட்டம் கொள்ள,

“பிரச்சனை எல்லாம் ஒன்னுமில்லை, நீ நாச்சி முன்னாடி ஒழுங்கா பேசு. அப்புறம் அவ டென்ஷனாகிட்டு இருப்பா” என்று அதட்டினான் செல்வம்.

அதேபோல் தான் அங்கு முத்து பெண் அண்ணனை பதட்டத்துடன் பார்த்திருக்க, “அது அவங்களுக்குள்ள ஏதோ சண்டை நாச்சி. செல்வா தான் உனக்கு மெசேஜ் அனுப்பிட்டான் இல்லை. அப்புறம் என்ன? நீ போய் அப்பா கிளம்பிட்டார்ன்னு அம்மாகிட்ட சொல்லு. போ” என்று தங்கையை அனுப்பிவைத்தான்.

“இப்போ சொல்லுடா, என்ன?” என்று ரவி கேட்க,

“சொல்றாங்க கதை. இவன் என்ன பண்ணியிருக்கான் தெரியுமா? நான் பத்திர பதிவுக்கு முதல்ல இருந்தே கொடுத்த டாகுமெண்ட் எல்லாம், அப்போ அப்போவே மாத்தியிருக்கான். அண்ணாச்சி பேருக்கு சொத்து எழுதுறது போல பக்காவா பண்ணியிருக்கான்”

“என்னடா சொல்ற” ரவி அதிர,

“எனக்கு அவன் சொல்லவும் அல்லு விட்டுருச்சு. சாட்சிக்கு அண்ணாச்சியை சேர்த்துருன்னு சொன்னப்போவே நான் சுதாரிச்சிருக்கணும்டா. ரெஜிஸ்ட்ரேஷனுக்கு தேவையான அவரோட எல்லா பேப்பரையும் அது மூலமா எடுத்திருக்கான்”

“அதோட விட்டானா நான் நேத்து கிளம்பிறப்போ கூட, எனக்கு இங்க ஆள் இருக்கு. நீ என்ன பண்ணனும்ன்னு  சொல்லு நான் பார்த்துகிறேன்னு சொன்னான். நானும் அதை நம்பி மாங்கு, மாங்குன்னு எல்லாம் ரெடி பண்ணி அனுப்பினா, இவன் முதல்லே எல்லாம் முடிச்சு என்னை மொட்டையடிச்சு இருக்கான்”

“ஏண்டா செல்வா? மாட்டியிருந்தா என்ன ஆகியிருக்கும்? அண்ணாச்சி, அமைச்சர் காதுக்கு விஷயம் போயிருந்தா வேற வினையே வேணாம்” ரவி அச்சத்துடன் கேட்டான்.

“எனக்கு இவங்க மேல நம்பிக்கை இல்லை. கடைசி நேரத்துல மாத்திறதும் எந்த அளவு சாத்தியப்படும்ன்னு தெரியலை. அதான் முதல்லே இருந்து சரியா பண்ணிட்டேன்” என்றான் சாதாரணமாக.

“சரிடா. சப்போஸ் நீ சொன்ன பிளானுக்கு நாங்க ஒத்துக்கலைன்னா என்ன பண்ணியிருப்ப? அமைச்சர் ‘பரவாயில்லை, உன் பேருக்கே எழுது, நான் பார்த்துகிறேன்னு சொல்லியிருந்தா?”

“பிளான் பி இருந்தது” என்றான் தோள் குலுக்கி.

“என்ன அது?” அகிலன் முழித்தே கேட்க,

“எதிர்க்கட்சி ஆளை அடிச்சு, ஸ்டேஷன்ல போய் உட்கார்ந்திருப்பேன்” என்றான் செல்வம்.

நண்பர்கள் தான் பேச்சு வராமல் திகைத்து, “அப்படி என்னடா?” என்று கேட்டான் ரவி.

“அண்ணாச்சி பினாமியா இருக்க மாட்டார். அவர் அந்த ரிஸ்க் எடுக்கிறதில்லைன்னு நீ சொன்னப்போவே நான் முடிவு பண்ணிட்டேன்டா, உங்க அப்பா பேர்ல இருக்க எல்லா சொத்தும் அவருக்கு தான் போகணும்ன்னு”

“மாப்பிள்ளை” ரவி தான் நொந்து போனான்.

“உன்னை பண்ணதுக்கா?” அகிலன் கேட்க,

“என்னையும், என் பொண்டாட்டியையும்” என்றான் செல்வம் இறுகி போய்.

“இது ஓகே. இனிமேல் அண்ணாச்சி உஷராகிட மாட்டாரா?” அகிலன் யோசித்து கேட்க.

“கண்டிப்பா உஷாராகிடுவார். ஆனா. ம்ஹ்ம் பார்ப்போம் இரு” என்று செல்வம் நிறுத்தி கொண்டான்.

“என்னமோ யோசிச்சிருக்க, எங்ககிட்ட சொல்ல மாட்டேங்கிற. எல்லாம் உனக்குள்ளே வைச்சு செய்வியா என்ன?” அகிலன் தாங்கலாக கேட்டான்.

“அப்படி இல்லை. உனக்கு இப்போ என்னை புரியவும் புரியாது. வெய்ட் பண்ணு. கொஞ்ச நாள் தான்” என்றான்.

அதற்க்கு மேல் கேட்டாலும் சொல்ல மாட்டான் என்று புரிந்து கொண்ட ரவி போனை வைத்துவிட, இவர்கள் இருவரும் கட்சி ஆபிசுக்கு சென்றனர்.

அண்ணாச்சி பரபரப்பாக இவர்களை அமர வைத்து கேள்விகளை ஆரம்பிக்க, அகிலன் தான் அவருக்கான பதிலை சொன்னான்.

செல்வம் சொன்ன அதே கதை தான். “வெளியே தெரிஞ்சிடுச்சு, அதான் உங்க பேர்ல. அமைச்சர் உங்களை தான் ரொம்ப நம்புறார். வேற யாரையும் கேட்க கூட அவர் விரும்பலை” என்று ஏதேதோ சொன்னான்.

அண்ணாச்சிக்கு அப்போதும் தெளிவேனா என்றது. மேலும் மேலும் கேட்க, “நீங்க தலைவர்கிட்டே பேசிக்கோங்க. இவ்வளவு தான் எனக்கு தெரிஞ்ச விஷயம்” என்று அகிலன் முடித்து கிளம்பினான்.

“சார் ஒரு நிமிஷம். உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்” என்று அகிலனை நிறுத்தி, செல்வம் வாய் திறந்தான்.