Advertisement

ஆக சிறந்த துன்பம் என்பது எதுவெனில், நமது அன்புக்கு உற்றவர் வருந்தும் போது, அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல், மூன்றாம் மனிதர் போல தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது தான்.

செழியனும் அப்படி பட்ட, அடிபட்ட மனநிலையில் தான் இருந்தான்.

தேவி பாட்டியிடம் தன் கோவத்தை காட்டிவிட்டு வந்து இருந்தாலும், நங்கை தான் அதை ஒரு விஷயமாக கருதவில்லை என்பதை போல பேசி இருந்தாலும், செழியனுக்கு தன் மீதே ஆத்திரமாக வந்தது.

நங்கைக்காக பேச முடியாத சூழலில் நிற்கும் தன் நிலையை, அறவே வெறுத்தான் செழியன்.

தன்னவள் பட்ட அவமானத்தை, தான் பட்ட அவமானமாக கருதி, அதை சகித்து கொள்ள முடியாமல், குறுக்கும் நெடுக்கும் நடந்து, தன்னை நிலைப்படுத்தி கொண்டிருந்தான் செழியன்.

கீழே நங்கையோ சமையலைறையில் இருக்க, நன்மாறனோ புத்தகத்தை விரித்து வைத்து, படிக்காமல் அதை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.

அப்போது கையில் ஒரு பையுடன் உள்ளே வந்தார் தேவி பாட்டி.

உள்ளே வந்தவர், புத்தகத்தில் கண்ணை மட்டும் வைத்து கொண்டு, கருத்து எல்லாம் எங்கோ இருக்க, முகம் வாடி இருந்த நன்மாறனை பார்த்துவிட்டு, அவனிடம் சென்றார்.

அவனின் முகத்தை, தன் சுருங்கிய கை கொண்டு பாசத்துடன் வருடி விட்டவர், அவனிடம்,

“ராசா மாறா, இன்னும் அதையே நினைச்சி கிட்டு இருக்கியா, அவனை நல்லா திட்டிட்டேன்யா நானு”

என்று அவனை சமாதானப்படுத்த, நன்மாறனோ வாயை திறந்து ஏதும் சொல்லாமல்,

“ம்ம்ம்ம்”

என்று தலையை மட்டும் ஆட்டினான். வாலிப பருவத்தில் இருந்த நன்மாறனுக்கு, அவ்வளவு எளிதாக, அதை கடக்க முடியவில்லை என்பது தான் நிஜம்.

தேவி பாட்டியின் பேச்சு குரல் கேட்டு, சமையலறையில் இருந்து வெளியே வந்த நங்கையோ,

“வாங்க ஆயா”

என்று வரவேற்றவள், கண்கள் கலங்கி, முகம் வாடி போய் இருந்த பாட்டியை பார்த்து பதறி,

“என்ன ஆயா, என்ன ஆச்சு, உங்க முகம் ஏன் இப்படி இருக்கு”

என்று கேட்க, அப்போது தான் நிமிர்ந்து தேவி பாட்டியை பார்த்த நன்மாறன், அவனும் என்னவென்று கேட்க, அவரோ கண்ணீர் குரலில்,

“அந்த எடுபட்ட பய அப்படி வெடுக்குன புள்ளை கையில இருந்த துணிய புடுங்குவானு நான் நினைக்கல மாறா, நான் சுதாரிச்சு என்னனு கேட்குறதுக்குள்ள, வார்த்தையை கொட்டிட்டான் அந்த பய”

என்று பொரிய, அக்கா, தம்பி இருவருமே அவரை தேற்ற அவரோ தொடர்ந்து,

“இந்த ஆயா உங்களுக்காக பேசலனு நினைக்காதீங்க பசங்களா, நீங்க வந்ததும் அவனை நல்லா திட்டிட்டு, இனிமே இந்த பக்கமே வர கூடாதுன்னு சொல்லிட்டு தான் வந்து இருக்கேன்”

என்று சமாதானப்படுத்த, நங்கையோ அதற்கு அவசியமே இல்லை என்பது போல,

“ஆயா, எதுக்கு அவரை இனிமே இங்க வர கூடாதுன்னு சொன்னீங்க, இது தானே அவர் பொழப்பு ஆயா, ஒருவேளை ட்ரெஸ் அஹ வாங்கி நான் யூஸ் பண்ணிட்டு, தவணையை என்னால கொடுக்க முடியலைனா அவருக்கு நஷ்டம் தானே, அவரு அப்படி யோசிச்சி இருப்பாரு ஆயா”

என்று அவரின் இடத்தில் நின்று அவருக்காக பேச, அவளை ஆதுரத்துடன் பார்த்த தேவி பாட்டி,

“என் ராஜாத்தி, உன்னை கஷ்டபடுத்தின அவனுக்காக கூட யோசிக்கிற பாரு, இந்த நல்ல மனசுக்கே, நீ நல்லா இருப்ப”

என்று சொல்ல, நங்கையின் அதரங்கள் ஒரு மென்னகையை சூடி கொள்ள, நன்மாறனோ இப்போதும் அமைதியாக தான் இருந்தான்.

நங்கையின் சிரிப்பை பதிலாக பெற்றுக்கொண்டு, தன் பேச்சை தொடர்ந்த தேவி பாட்டி,

“இந்தா ராஜாத்தி நீ ஆசையா எடுத்த சுடிதார், நான் மொத்தமா காசு கொடுத்து வாங்கிட்டேன்”

என்று கையில் திணித்தார். வேண்டாம் என்று சொல்லி பாட்டிடைய வருத்தப்பட வைக்க விரும்பாமல், அதோடு சுடிதாரை வைத்து கொண்டு தேவி பாட்டி ஒன்னும் செய்ய போவதில்லை என்பதால்,

“சரி கொடுங்க”

என்று வாங்கி கொண்டவள், அதை நன்மாறனின் கைகளில் திணித்து,

“இந்தா நீ ஆசைப்பட்ட மாதிரி, எனக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸ் வாங்கியாச்சு, இப்போவாது சிரியேன்டா”

என்று அவனின் தலையை கலைத்து விட்டவள், தனது அறைக்கு சென்று, அந்த சுடிதாருக்கான தொகையை எடுத்து வந்து, தேவி பாட்டியின் கைகளில் திணித்தாள்.

தேவி பாட்டியும் இதை எதிர்பார்த்து இருந்தால், மறுப்பேதும் சொல்லாமல் வாங்கி கொண்டார்.

அவருக்கு நங்கையிடம் பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று. அவளின் சுயமரியாதை.

இந்த வீட்டுக்கு வந்து, ஆரம்பத்தில் செலவை சமாளிக்க திணறிய போதும் சரி, அவள் யாரிடமும் உதவி என்று நின்று தேவி பாட்டி பார்த்தது இல்லை.

செலவை சமாளிக்கவும், அதே நேரம் பாதுகாப்பும் முக்கியம் என்பதால் தான், அக்கப்பக்கம் பக்கத்தில் இருக்கும் பள்ளி படிக்கும் பிள்ளைகளுக்கு, வீட்டிலே வகுப்பு எடுக்க ஆரம்பித்தாள்.

உழைப்புக்கு கொஞ்ச கூட அஞ்சாவதள். எல்லாவற்றையும் தெளிவாக திட்டமிட்டு, தனி பெண்ணாக நின்று இந்த பொல்லாத உலகத்தை சமாளிக்கும், நங்கையின் அந்த கம்பீரம் நிரம்ப பிடிக்கும் தேவி பாட்டிக்கு.

தேவி பாட்டி வந்த வேலை முடிந்தது, என்று கிளம்ப போக, அவரை தடுத்த நங்கையோ,

“இருங்க ஆயா, இன்னைக்கு சங்கரா மீன் தான் வாங்குனேன், குழம்பை இன்னும் கொஞ்ச நேரத்துல அடுப்புல இருந்து இறக்கிடுவேன், சூடா கொஞ்சம் எடுத்து கிட்டு போங்க, தாத்தாக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல”

என்றவள், அவரின் கையை பிடித்து பேசியபடியே சமையலறைக்கு அழைத்து சென்று விட்டாள்.

செல்லும் தன் தமக்கையையே பார்த்து கொண்டிருந்த நன்மாறனின் மனமோ, “தன் தமக்கையை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும்” என்று தான் முன்பு எடுத்த தீர்மானத்தில், இன்னும் உறுதியானான்.

அடுத்த நாள் திங்கள் கிழமை ஆரம்பிக்க, செழியன் தன் வழக்கம் போல, தன் காதல் மங்கை, உள்ளங்கவர் நங்கையை பார்வையால், தொடர்ந்து கொண்டிருந்தான்.

ஆனால் தேவி பாட்டியை பார்க்கும் போது எல்லாம், அவனின் பார்வையில் அடித்த, அனல் மட்டும் கொஞ்சமும் குறையவே இல்லை.

பொறுத்து, பொறுத்து பார்த்த தேவி பாட்டி, இரண்டு நாட்கள் ஆகியும், செழியன் தன் பார்வையை மாற்றாமல் இருக்க, கடுப்பாகி விட்டார் தேவி பாட்டி.

அவன் வெளியே கிளம்பும் போது கூப்பிட்ட, கடனே என்று செழியன் வந்து நிற்க, அவனை ஏற இறங்க பார்த்த தேவி பாட்டி,

“என்னடா, என்னமோ நான் உன்னோட முறைப்பொண்ணு மாதிரி, முறைச்சி முறைச்சி பார்க்குற, என்ன விஷயம்”

என்று வழக்கம் போல அவனிடம் வம்பு வளர்க்க, செழியனோ கோவத்தில்,

“ஆமா என் கிட்ட மட்டும் நல்லா வாய் பேசுங்க, பேச வேண்டிய இடத்துல பேசாதிங்க”

என்று அவரை சரியாக தாக்க, தேவி பாட்டியோ அசராமல்,

“டேய் ரொம்ப பேசாத, நான் அவனை திட்டலனு உனக்கு தெரியுமா, அவனை இனிமே இந்த பக்கமே வர கூடாது சொல்லிட்டேன், நங்கை எடுத்த சுடிதாரையும் அவ கிட்ட கொடுத்துட்டேன்”

என்று சொல்லி, செழியனை சமாதான படுத்தியவாறே, அவனின் முகத்தை பார்த்து, அவனின் எண்ணங்களை அளவிட முயல, இப்போது ஓர் அளவு கோவம் குறைந்த செழியன்,

“ஓ, சரி, நான் கிளம்புறேன்”

என்று கொஞ்சம் வீராப்பாகவே சொல்ல, தேவி பாட்டியோ,

“இனிமேலாவது என்னை முறைக்கிறேன் பேர்வழினு கண்ணை சுருக்கி சுருக்கி பார்க்காத, ஏற்கனவே மூஞ்சி முழுக்க தாடி தான் இருக்கு, முழுசா தெரியுறது கண்ணு மட்டும் தான், அதையும் சுருக்குனா, கண்ணு இருக்கா இல்லையானே எனக்கு தெரிய மாட்டுது”

என்று அவனை கலாய்க்க, செழியன் வேண்டும் என்றே, கண்ணை சுருக்கி, அவரை ஒரு முறை முறைத்து விட்டு கிளம்பினான்.

நங்கை விஷயத்தில் எப்போதும் தன்னை விரட்டி கொண்டே இருக்கும் தேவி பாட்டி, இன்று அவரே கூப்பிட்டு நடந்ததை விளக்க, இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசனையில் இருந்தான் செழியன்.

செழியனுக்கு உண்மையில் நினைவு இல்லை தான், அன்று கோவத்தில், நங்கையின் சம்பளம் முதற்கொண்டு சரியாக சொன்னதும், நங்கையும், நன்மாறனும் தேவி பாட்டியின் சொந்த பேர பிள்ளைகள் இல்லை என்று தான் குறிப்பிட்டதும்.

இதோடு நங்கைக்கான அவனின் கோபமும், தேவி பாட்டிக்கு, செழியன் மீது ஏகப்பட்ட சந்தேகத்தை கிளப்பியது.

செழியன், இங்கு வந்து நங்கையை பார்த்த பிறகு, அவள் மேல் பிரியம் கொண்டு, அவளை பற்றி தகவல் சேகரித்தானா அல்லது, இங்கே வந்ததே நங்கைக்காக தானா என்ற தீவிரமாக யோசித்து கொண்டிருந்தார் தேவி பாட்டி.

இந்த விஷயத்தில், அவரின் சந்தேக பட்டியலில் இடம் பிடித்த இன்னொரு நபர், முத்தையா தாத்தா. இவர் மறுக்க,மறுக்க, அவர் தானே செழியனை பிடிவாதமாக இங்கு குடி வைத்தார்.

ஆக அவருக்கு ஏதோ தெரிந்து இருக்க வேண்டும் என்று, தேவி பாட்டி, முத்தையா தாத்தாவை முற்றுகையிட, அவரோ வாயை திறந்து, ஒரு வார்த்தை கூட உதிர்க்கும், வழியை காணோம்.

எது எப்படி இருந்தாலும், செழியனின் நங்கை மீதான காதல் தேவி பாட்டிக்கு தெள்ள, தெளிவாக புரிந்தது.

அதனால் தான், அவரே செழியனை வலிய அழைத்து, நடந்ததை கூறினார். அவனால் செய்ய முடியாததை, தான் செய்ததாக கூறிய போது, அவன் கொண்ட ஆசுவாசத்தையும் குறித்து கொண்டார்.

செழியனின் பின்புலத்தை பற்றி தெரிந்து கொள்ள, என்ன செய்வது என்ற சிந்தனையில் இருந்தார் தேவி பாட்டி.

அன்று இரவு ஒரு பத்து மணி இருக்கும். அந்த வீட்டின் கூடத்தில் செழியன், வெற்றி மற்றும் தமிழ் மூவரும் கூடி இருந்தனர்.

விஜய் வருவதாக சொல்லி இருக்க, அவனுக்காகவே மூவரும் காத்திருந்தனர், அமைதியாக அவர் அவர் சிந்தனையில் மூழ்கியபடி.

அரக்கபரக்க விஜய்யும் வந்து சேர, தமிழ் தான் பேச்சை ஆரம்பித்தான்.

“இந்த ஒன் வீக்ல பர்மா கம்பனிய க்ளோஸ் அஹ வாட்ச் பண்ணதுல, தப்பா எதுமே இல்ல”

என்று சொல்லி நிறுத்த, அவனை தொடர்ந்த வெற்றி,

“மெடிசன் எடுத்துக்கிட்டு போற கன்டெய்னர் எல்லாம், பார்மா கம்பெனில இருந்து கிளம்பினா, எங்கேயும் நிக்கமா, நேரா வினோத் சொன்ன இடத்துக்கு அதாவது மெடிசன் டெலிவரி லொகேசேஷனுக்கு தான் போகுது”

என்று சொல்ல, யோசனையுடன் அதை கேட்டு கொண்ட விஜய்,

“கம்பனில எதாவது”

என்று இழுக்க, அவன் கேட்க வருவதை புரிந்து கொண்ட வெற்றி,

“ஹ்ம்ம் இல்ல அண்ணா, அங்கேயும் சந்தேக படுற மாதிரி நடக்கல, அதுபோக வினோத் தினமும் ப்ரோடியூஸ் ஆகுற டேப்லட் சாம்பில் கொடுக்குறாரு, அதையும் லேப்ல கொடுத்து செக் பண்ணியாச்சு, வித்தியாசமா ஏதும் இல்லை”

என்று உதட்டை பிதுக்க, இப்போது மூவரும் செழியனை தான் பார்த்தனர். அடுத்து என்ன செய்வது எனும் விதமாக.

தமிழ், வெற்றி இருவர் சொன்னதையும் செழியன் ஏற்கனவே அறிந்து தான் இருந்தான். அவனும் தானே அந்த வேலைகளை உடன் இருந்து, செய்து கொண்டிருக்கிறான்.

எனவே யோசனையுடன் குறுக்கும் நெடுக்கும் நடந்த செழியன்,

“இன்னும் ஒரு வாரம் இதே ப்ரோசிஜரை, இப்படியே பாலோ பண்ணலாம்”

என்று சொல்ல, அவர்கள் இருவரும் தயக்கத்துடன் தலையாட்ட, அதை புரிந்து கொண்ட செழியன்,

“நீங்க என்ன யோசிக்கிறீங்கனு புரியுது, அங்க தப்பு எதுமே இல்லயோனு சந்தேக படுறீங்க சரியா”

என்று கேட்க, இருவரும் “ஆமாம்” எனும் விதமாக தலையாட்ட, செழியன் தொடர்ந்து,

“அந்த மினிஸ்டரோட பேக் கிரவுண்ட் செக் பண்ணேன், அவரோட பினாமி அக்கவுண்ட்ல ரீசன்ட் அஹ நிறைய பணம் வந்து இருக்கு, யாரு கிட்ட இருந்து வந்து இருக்குனு இன்னும் கண்டு பிடிக்க முடில, நான் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன், சோ அவர் கிட்ட நிட்சயம் ஏதோ தப்பு இருக்கு”

என்று சொல்ல, மூவருக்கும் செழியன் சொல்லியது புது தகவல். அதும் இல்லாமல், செழியன் இவ்வளவு உறுதியாக சொல்லும் போது, அவன் சொல்லியதை செய்ய ஒப்பு கொண்டனர்.

இதுவரை, என்ன செய்வது என்று, பேச்சு தீவிரமாக சென்று கொண்டிருக்க, இதை தான் செய்வது என்று ஒரு முடிவு எடுத்ததும், சூழ்நிலை சற்று இலகுவானது.

தன் தொண்டையை கணைத்து, எல்லோரின் கவனத்தையும் தன் புறம் திரும்பிய விஜய், செழியனை அழைத்து,

“நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணுமே”

என்று இழுக்க, இன்னும் அந்த பிரச்சனை பற்றிய சிந்தனையில் இருந்த செழியன், தன் யோசனையில் இருந்து, அப்போது தான் வெளிவந்து தன்னை கேள்வி கேட்ட விஜய்யை பார்த்து,

“ஹ்ம்ம் கேளுடா”

என்று இலகுவாக சொல்ல, அடுத்து விஜய் கேட்ட கேள்வியை கேட்ட, தமிழ், வெற்றி யோசனையாய் செழியனை பார்க்க, செழியனோ வெகு எச்சரிக்கையுடன் விஜய்யை பார்த்தான்.

காந்தன் வருவான்……

Advertisement