Advertisement

செழியன் தேவி பாட்டியிடம் பேசிவிட்டு வெளியே கிளம்பி செல்ல, சரியாக அதே சமயம், வீட்டிற்கு திரும்பி வந்தான் நன்மாறன்.

காலையில் வெயிலுக்கு முன்பே தன் நண்பர்களுடன், மட்டை பந்து விளையாட என்று சென்றிருந்த நன்மாறன், கலைத்து போய் அப்போது தான் வந்து சேர்ந்தான்.

வார நாட்களில் அலுவலகம் செல்வதால், வாரம் முழுதும் உடுத்திய தங்கள் இருவரின் துணிகளை, மொத்தமாக ஊறவைத்து துவைத்து கொண்டிருந்தாள் நங்கை.

துவைத்த துணிகளை உலர்த்தி விட்டு நங்கை ஓய்வாக உட்கார, தேவிப்பாட்டியின் வீட்டில், எல்லாரும் சலவென, சலவென பேசும் குரல் கேட்டது.

இது வாடிக்கையானது தான்.

மாசத்தில் முதல் வரும் ஞாயிறு அன்று, புடவை, சுடிதார்களை எடுத்துக்கொண்டு வியாபாரி ஒருவர் வருவார் தேவி காலனிக்கு.

அவரிடம் கிட்டத்தட்ட எல்லா விலையிலும், பல ரகங்களிலும் உடைகள் இருக்கும்.

பிடித்த உடையை மொத்தமாக சில ஆயிரங்களுக்கு எடுத்து கொண்டால், வார தவணையாகவோ அல்லது மாத தவணையாகவோ, சிறுக சிறுக தொகையை செலுத்தி கொள்ளலாம்.

அதையும் அந்த துணிகளை விற்பவர், வீட்டிற்கே வந்து வாங்கி சென்று விடுவார். அதுப்போக நூறுகளில் செலுத்தும் போது சிரமம் இல்லாமலும், இவ்வளவா என்ற மலைப்பு இல்லாமலும் இருக்கும் அல்லவா.

இதுவும் ஒரு வகையான வியாபார தந்திரம் தான்.

கடைகளை விட இவர்கள் நூறு, இருநூறு அதிகம் வைத்து விற்பனை செய்வது தெரிந்தாலும், தரம் மற்றும் தவணை காரணமாக, இப்படியான வியாபாரிகளிடம் வாங்குவதே இவர்களுக்கு வசதி.

அப்படி இவர்களின் காலணிக்கு, எப்போதும் வரும் வியாபாரி, தன் கையோடு கொண்டு வந்திருக்கும் கடையை, தேவி பாட்டியின் வீட்டில் விரிப்பது தான் வழக்கம்.

பொதுவாக நங்கை, அவரிடம் உடைகளை வாங்க மாட்டாள். தவணை என்றாலும், அதுவும் ஒரு வித கடன் தானே என்ற எண்ணம் அவளுக்கு.

ஆனால் இன்று நன்மாறன், நங்கையிடம் அங்கு செல்லலாம் என்று சொல்லி, வம்பு வளர்த்து கொண்டிருந்தான்.

“அக்கா”

“என்னடா”

“நாமளும் அங்க போய் ஒரு ட்ரெஸ் எடுக்கலாமா”

என்று கெஞ்சலாக கேட்க, நங்கையோ,

“ஹே அவரு லேடீஸ் ட்ரெஸ் தான் எடுத்துட்டு வருவாருடா, உனக்கு எல்லாம் அங்க ட்ரெஸ் இருக்காது”

என்று சிரித்து கொண்டே சொல்ல, நன்மாறனோ,

“எனக்கு ஒன்னும் இல்ல, உனக்கு தான் சொன்னேன்”

என, தன் புருவங்களை உயர்த்தி நங்கை அவனை கேள்வியாக பார்க்க, நன்மாறனோ,

“இல்ல இன்னும் ரெண்டு மாசத்துல உன்னோட பர்த் டே வருது இல்ல, அதான்……”

என்று இழுக்க, தம்பியின் பாசம் இதமாக இருந்தாலும், நங்கையின் மனதோ வேறு சிலவற்றை கணக்கு போட்டு கொண்டிருந்தது.

நன்மாறனோ பன்னிரண்டாம் வகுப்பில் இருக்கிறான். அடுத்த வருடம் அவனை கல்லூரியில் சேர்க்க வேண்டும்.

கடைசி ஆண்டு வரை மிக நன்றாக படித்த நன்மாறனோ, இந்த ஆண்டு சுமாராகவே படிக்க, ஒரு நல்ல கல்லூரியில் அவனை சேர்க்க, கண்டிப்பாக அதிக தொகை தேவைப்படும்.

தாய், தந்தையின் காப்பீட்டு தொகை கொஞ்சமும், இவளின் இத்தனை வருட சேமிப்பு கொஞ்சமும் வங்கியில் இருந்தாலும், இவனுக்கு உடைகள், கல்லூரி செல்ல தேவையான பொருட்கள் வாங்க என, நிச்சயம் அதிக பணம் வேண்டும்.

இன்னும் ஆறு மாதத்திற்கு மேலாக நேரம் இருந்த போதிலும், நங்கை இப்போது முன்னினும் முனைப்பாக சேமிக்க ஆரம்பித்திருந்தாள்.

அத்தியாவசம் தவிர, தன் சம்பந்தப்பட்ட அனைத்து செலவுகளையும், கணிசமாக குறைத்து கொண்டிருந்தாள்.

இந்த நிலையில் உடையில், அதுவும் தனக்காக, சில ஆயிரங்கள் எனும் போது, அவள் அதைப்பற்றி யோசிக்க கூட தயாராக இல்லை.

எனவே நன்மாறனிடம் இதமாகவே,

“நான் என்ன சின்ன பிள்ளையா பிறந்த நாள் கொண்டாட, போடா போய் வேலை பாரு”

என்று சொல்ல, நன்மாறனோ முகம் சுருங்க,

“எனக்கு நல்லா நியாபகம் இருக்கு, அப்பா, அம்மா இருந்த வரைக்கும், உனக்கு எல்லா பிறந்த நாளுக்கும் புது ட்ரெஸ் எடுப்பாங்க, நீ இந்த அஞ்சு வருஷமா தான் எடுக்க மாட்டுற”

என்று சொல்ல, நங்கையின் நினைவு பெற்றோரோடு வாழந்த அந்த மகிழ்ச்சியான நாட்களுக்கு சென்றது.

அது எல்லாம் முற்பிறவி நியாபகம் போல என்றோ நடந்தது போல, மங்கலாக நினைவுக்கு வந்தது.

பணக்காரர்களை போல ஆடம்பரமாக வளர்க்கவில்லை என்றாலும், தேவையான எல்லாவற்றையும் கொடுத்து மகிழ்ச்சியாக தான், இவர்கள் இருவரையும் வளர்த்தனர்.

ஆனால் ஒரே நாளில் எல்லாம் மாறியது.

தாய், தந்தை எனும் பாசக்கூட்டில் பாதுகாப்பாக உலகம் அறிந்தும், அறியாமல் மகிழ்ச்சியாக இருந்த இருபத்திமூன்று வயதான பெண்ணை, தனியாக நிர்கதியாக நிற்க வைத்தது.

தன்னை சுற்றி நடப்பதை புரிந்து கொள்ள முடியாத, பதின்மூன்று வயது சிறுவனின் பொறுப்பையும் கொடுத்து அழகு பார்த்தது விதி.

செல்லமாக வளர்க்கப்பட்ட நன்மாறன், திடீரென ஏற்பட்ட இழப்பில் அதிகம் துவண்டு போக, அவனை தேற்றி என்று இறந்த பெற்றோரை நினைத்துஅழ கூட, நேரம் இருக்க வில்லை நங்கைக்கு.

அதற்கு பிறகு நங்கையின் வாழ்க்கையில் ஓட்டம், ஓட்டம் மட்டும் தான்.

அப்போது நங்கை வாங்கி கொண்டிருந்த சம்பளம் இருவருக்கும் போதாமல் போக, வேறு அதிக சம்பளத்தில் வேலை தேட வேண்டிய சூழல்.

வேலி இல்லா பயிரென, மேய நினைத்த சில மனித மிருங்களின் தொல்லை வேறு. அவர்களிடம் இருந்து தப்பிக்க, பாதுகாப்பாக ஒரு இடம் பார்க்க வேண்டிய கட்டாயம்.

அதிக சம்பளத்தில் வேலை பார்த்து, கொஞ்சம் வாடகை அதிகம் என்றாலும், பாதுகாப்பு காரணமாக தேவி காலனியில் வீடு மாற்றி, அப்பப்பா நரகம் அந்த நாட்கள்.

அதுப்போக, இங்கு அருகில் இருக்கும், அரசு உதவி பெறும் பள்ளியில், நன்மாறன் முன்னாள் படித்த பள்ளியை விட அதிக கட்டணம்.

அதை சமாளிக்க, சிறார்களுக்கு அலுவலக வேலை முடித்து, சிறப்பு வகுப்பு என நங்கைக்கு சமாளிக்க ஏகப்பட்ட விஷயங்கள் அணிவகுத்து நின்றன.

இன்று ஏனோ நன்மாறன் பெற்றோரை பற்றி பேச, ஒருவேளை அவர்களின் நினைவு வந்துவிட்டதோ என்ற எண்ணத்தில் நங்கை,

“என்னடா அப்பா, அம்மா நியாபகம் வந்துடுச்சா”

என்று பரிவாக கேட்க, மறுப்பாக தலையசைத்த நன்மாறனோ,

“இல்ல அக்கா, நான் உனக்கு அண்ணனா பொறந்து இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது”

என்று சம்பந்தம் இல்லாமல் பேச, நங்கை அவனை புரியாமல் பார்க்க, நன்மாறன் தொடர்ந்து,

“அப்படி இருந்து இருந்தா, நான் உன்னை பார்த்துகிட்டு இருந்து இருப்பேன், இப்போ நீ தான் என்ன பார்த்துகிற, எனக்கு எல்லாமே பார்த்து பார்த்து பண்ற, ஆனா உனக்குனு எதுவுமே பண்ணிக்க மாட்டுற, எனக்கு…, எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா”

என்று வருத்ததுடன் பேச, அவனை
வியப்புடன் பார்த்த நங்கை,

“என்ன ஆச்சு என் குட்டி தம்பிக்கு”

என்று அவனின் தலையை கலைத்துவிட, சிலிர்த்து கொண்ட நன்மாறனோ,

“இன்னைக்கு நாம உனக்கு ட்ரெஸ் எடுக்க போறோம் அவ்ளோ தான் டாட், வா, வா”

என்று கையை பிடித்து இழுக்க, நங்கைக்கு இன்று அவளின் குட்டி தம்பி வளர்ந்து பெரியவனாகி விட்டதாக தான் தோன்றியது.

தன் பொருட்டு அவன் வருந்துவதும் பிடிக்க வில்லை நங்கைக்கு. சரி ஒரே ஒரு ஆடை தானே, கொஞ்சம் மலிவான விலையில் வாங்கி கொள்ளலாம், என்ற முடிவுடன் அவனுடன் கிளம்பினாள்.

ஆனால் அன்று அவர்கள், அங்கு செல்லாமலே இருந்து இருக்கலாம், இருக்கலாம்….

நங்கையும், நன்மாறனும் தேவி பாட்டியின் வீட்டிற்கு செல்ல, அங்கு அந்த வியாபாரி அதற்குள் அவரின் கடையை விரித்து இருந்தார்.

தேவி காலனியில் குடியிருக்கும் பெண்கள் எல்லோரும் ஆர்வமாய், துணிகளை பார்வையிட்டு கொண்டிருக்க, இவர்களை பாசத்துடன் வரவேற்றார் தேவி பாட்டி.

இதுவரை வராத நங்கை வந்திருக்க, மற்ற பெண்மணிகள் அவளை வித்தியாசமாக பார்த்தாலும், உடையை தேர்வு செய்வதில் ஆர்வமாக ஈடுபட்டனர்.

நங்கையும் அவர்களுடன் அமர்ந்து, அங்கு இருந்த உடைகளை பார்த்தாள். அப்போது அவளின் கவனத்தை, வெள்ளையில் மயில் வண்ணத்தில் பூக்களோடு இருந்த ஒரு சுடிதார் கவர்ந்தது.

நங்கை அந்த சுடிதாரை தன் கையில் எடுத்து பார்க்க, அப்போது தான் அவளை பார்த்தார் அந்த வியாபாரி.

செய்த வேலையில் உடை வேர்வையில் குளித்து இருக்க, நலுங்கிய உடையில், உச்சியில் வெகு சாதரணமாக ஒரு கொண்டை போட்டிருந்த நங்கை, அவரின் கண்களுக்கு எப்படி தெரிந்ததாலோ,

“இந்தம்மா”

என்று சற்று இலக்காரமான குரலில் நங்கையை விளித்தவர், அவளின் கையில் இருந்த அந்த சுடிதாரை வெடுக்கென பிடிங்கி கீழே வைத்துவிட்டு,

“இதோட விலை என்னனு தெரியுமா, ஆயிரத்து சொச்சம், நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு எதுக்கு பாக்குற”

என்று கேட்க, சுற்றி இருந்த அனைவரும் அமைதியாகி நங்கையை பார்க்க, அவளோ அவமானத்தில் முகம் கருக்க அமர்ந்திருக்க, அந்த வியாபாரியோ ஒரு படி மேலே சென்று,

“இந்தா இது தான் ஐநூறு ரூபாய்க்கு கீழ இருக்க துணி, இதை பாரு”

என்று ஒரு கட்டு துணியை எடுத்து அவள் முன்னால் போட, நங்கையோ இத்தனை பேர் முன்னணியில் பட்ட அவமானத்தில், எதுவுமே சொல்லாமல், அமைதியாக எழுந்தாள்.

அதேநேரம் தேவி பாட்டியுடன் பேசி கொண்டே, பேருக்கு துணிகளை பார்த்து கொண்டிருந்த நன்மாறன், முதலில் அந்த வியாபாரி பேசியதை கவனிக்கவில்லை.

பின்பு அவர் பேசிய பேச்சில், அவமானத்தில் முகம் சிவந்து, சுருங்க அவனும் இருந்த இடத்தில் இருந்து எழுந்து விட்டான்.

நன்மாறன் அவரிடம் சண்டையிட போக, சண்டையிட்டு மேலும் அவமானப்பட விரும்பாத நங்கை, அவனின் கையை பிடித்து தடுத்து விட்டாள்.

அதோடு நன்மாறனின் கையை பிடித்து இழுத்து கொண்டு, யாரையும் நிமிர்ந்து பார்க்காமல், பார்க்க முடியாமல், வாசலில் நின்ற செழியனையும் கவனிக்காமல், வீட்டிற்கு சென்று விட்டாள்.

செல்லும் அவர்களை இலக்காரமாக பார்த்த அந்த வியபாரியோ,

“இதை வாங்கவே காசு இல்லாம எழுந்து போயாச்சு, இதுல கையில எடுத்து பாக்குற ட்ரெஸ் அஹ பாரு”

என்று ஏகத்தாளத்துடன் சொல்ல, தன்னை வெகு சிரமப்பட்டு கட்டுப்படுத்தி கொண்டு நின்ற செழியன், வெளியில் இருந்து உரக்க தேவி பாட்டியை அழைத்தான்.

அவரோ அந்த வியாபாரியின் பேச்சில் அதிர்ச்சியில் இருக்க, அந்த இடைவெளியில் அக்காவும், தம்பியும் கிளம்பி சென்று இருந்தனர்.

“இப்போது செல்லும் அவர்களை சென்று சமாதானப்படுத்தவா, இல்லை இந்த வியாபாரியை நாலு கேள்வி கேட்கவா எதை முதலில் செய்ய”

என்று தேவி பாட்டி தடுமாற, அப்போது தான் செழியன் அவரை அழைத்தான்.

அந்த ஆளை ஒரு முறை முறைத்தவிட்டு, வெளியே செழியனிடம் செல்ல, அவனோ அதிக பட்ச கோவத்தில்,

“சும்மா பேச்சுக்கு பேத்தி, பேரன்னு சொன்னா போதாது, இதே உங்க சொந்த பேத்தியா இருந்தா இப்படி கண்டவன் எல்லாம் பேச விடுவிங்களா”

என்று வார்த்தைகளை கடித்து துப்ப, அவனின் கேள்வியில் தேவி பாட்டி அவனை திகைத்து பார்க்க, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் செழியன்,

“அது என்ன இலட்ச ரூபாய் அஹ நங்கையால வாங்க முடியாம போறதுக்கு, மாசம் முப்பதாயிரம் சம்பளம் வாங்குற அவளுக்கு, இந்த ட்ரெஸ் அஹ வாங்க முடியாத என்ன, பார்க்க சாதாரணமா இருந்தா, இவன் என்ன வேணா பேசுவானா”

என்று அவனை முறைத்து கொண்டே பாட்டியிடம் எகிறியவன்,

“எனக்கு வர ஆத்திரத்துக்கு அவனை அடி வெளுக்கனும் போல இருக்கு, ஆனா நங்கைக்காக நான் பேசுனா, இங்க இருக்குற மீதி பேரு எல்லாம் அவளை தப்பா பேசுவாங்களேனு தான், அமைதியா இருக்கேன்”

என்று படப்படவென பொரிந்து தள்ளிய செழியன், அப்படியும் தன் கோவம் தனியாமல் போக, பாட்டி கேட்டிருந்த வெற்றிலையை அவரின் கையில் திணித்து விட்டு, தன் வீட்டை நோக்கி சென்றான்.

செல்லும் அவனையே பலவிதமான உணர்ச்சிகள் மேலோங்க பார்த்து கொண்டிருந்தார் தேவி பாட்டி.

இங்கு வீட்டிற்கு வந்த செழியன், மேலே தன் பகுதிக்கு செல்ல முடியாமல், நங்கையின் நிலையை அறிய முடியாமல் தவிக்க, உள்ளே அக்கா, தம்பி இருவரும் பேசும் குரல் கேட்டது.

கையில் இருந்த கைபேசியை காதிற்கு கொடுத்து, பேசுவது போல பாவனையில் உள்ளே நடக்கும் உரையாடலை செவி மடுத்தான் செழியன்.

உள்ளே நங்கை அமைதியாக இருக்க, நன்மாறனோ கண்ணீர் குரலில்,

“அக்கா என்னால தான் அந்த ஆளு அப்படி பேசிட்டேன், அப்போவே நீ வேண்டாம் தான் சொன்ன, நான் தான் கட்டாய படுத்தி கூட்டிகிட்டு போனேன், சாரி அக்கா, சாரி”

என்று கரைய, நங்கையோ,

“ஹே ஒன்னும் இல்ல விடுடா”

என்று அவனை தேற்ற நன்மாறனோ,

“உன் கிட்ட காசு இருக்கு இல்ல, கொடு இப்போவே மொத்த காசையும் அவன் முகத்துல தூக்கி எறிஞ்சிட்டு அந்த ட்ரெஸ் அஹ வாங்கிட்டு வரேன், அது என்ன நம்மாள வாங்க முடியாத விலையா???”

என்று இந்த இளம் வயதில் அத்தனை பேர் முன்னிலையில், தம் தமக்கை பட்ட அவமானம் வலிக்க, அந்த வலி குரலிலும் தெரிய பேச, நங்கையோ ஒரு பெரு மூச்சுடன்,

“வாங்கி என்ன ப்ரூப் பண்ண போற, யாருக்கு ப்ரூப் பண்ண போற, அப்படி பண்ண ஆரம்பிச்சா அதுக்கு முடிவே இருக்காது மாறா”

என்று அவனை சாந்தபடுத்தியவள்,

“இந்த உலகம் இப்படி தான், பகட்டா இருக்கிறவங்களை தான் மதிக்கும், ஏழைனா இலக்காரமா தான் பார்க்கும், இப்போ நம்ப கிட்ட காசு இருக்கு, போய் வாங்கலாம் சொல்ற, ஒரு வேளை காசு இல்லைன்னா”

என்று கேள்வி கேட்க, நன்மாறன் அமைதியாக இருக்க, தொடர்ந்த நங்கை,

“நாம ஏழையா இருக்குறதுல அவமானப்பட எதும் இல்லை மாறா, அதை முதல புரிஞ்சிக்கோ, ஏழையா பிறந்தது நம்ப தப்பு இல்லை”

என்று சொல்ல, நன்மாறனோ தன் தமக்கையை கண் எடுக்காமல் பார்க்க, நங்கையோ தொடர்ந்து,

“நாம முன்னேறனும்னா படிப்பு தான் ஒரே வழி, அது தான் சமுதாயத்தில நம்ப தரத்தை உயர்த்தும், நம்ப நிலைமையை பொய்யா உயர்த்தி காட்டிக்கிறதை விட, இது தான் என் நிலமைன்னு உண்மையை ஒத்துகிட்டு, உண்மையாவே அதை உயர்த்த முயற்சி பண்ணனும் மாறா”

என்று படிப்பு ஒன்று தான் அவனின் நிலைமையை மாற்றும் என்று இதமாகவே சொல்ல, நன்மாறனும் புரிந்தது என்னும் விதமாக தலையாட்டினான்.

நன்மாறனுக்கு ஒரு டம்ளரில் தண்ணீர் கொடுத்த அவனை இயல்புக்கு திருப்பிய நங்கை, எதுவுமே நடக்காதது போல சமையலறைக்கு சென்று விட்டாள், மதிய சமையலுக்காக.

வெளியே நின்று, நங்கையின் பேச்சை கேட்ட செழியன், மாறனுக்கான ஆறுதல் மொழிகளில், அவளின் முதிர்ச்சியான பேச்சில் ஆறுதல் படாமல், அவள் சொல்லாமல், வெளியில் காட்டாமல் முழுங்கும் வலியை நினைத்து வருந்தினான்.

காந்தன் வருவான்……….

Advertisement