Advertisement

பகலவன் யாருக்கும் காத்திருக்காமல், வழக்கம் போல தன் பவனியை கிழக்கில் தொடங்க, பல சிந்தனைகளில் மூழ்கி, நான்காம் சாமத்தின் இறுதியிலே உறங்க ஆரம்பித்த செழியனுக்கோ இன்னும் விடிந்ததிருக்கவில்லை.

நங்கையோ, இரவு நடந்த சம்பவத்தின் தாக்கமோ, அல்லது சந்தித்த செழியனின் தாக்கமோ கிஞ்சித்தும் இல்லாமல், தன் வழக்கம் போல, அதிகாலை ஐந்தரை மணிக்கு எல்லாம் எழுந்திருந்தாள்.

தனக்கு முன்பே எழுந்து படித்துக் கொண்டிருந்த, நன்மாறனுக்கு மட்டும் காபி கலக்கி கொடுத்தவள், நின்று காபி குடிக்க கூட நேரம் இல்லாமல், பரபரவென சமையலில் மூழ்கிவிட்டாள்.

சாதம் வடித்து, சாம்பார் வைத்து, பருப்போடு வேகவைத்திருந்த உருளை கிழங்கை, வெங்காயம், தக்காளி, பூண்டு தட்டி போட்டு வறுவல் செய்து, காலைக்கு இட்லியும் செய்திருந்தாள்.

கீழ் வீட்டின் மீது பொதிர்ந்திருந்த செழியனின் புலன்கள், கீழே நங்கை, பாத்திரங்களை உருட்டும் சத்தத்தை அவனின் மூளைக்கு எடுத்து சென்று, அவனை துயில் எழுப்ப முயன்று, முயன்று தோற்று கொண்டிருந்தன.

மனம் மங்கையின் மீது கொண்ட ஈடுப்பாட்டால், அவளின் தரிசனம் காண விழைந்து விழிக்க முயற்சிக்க, துவண்டு கிடந்த உடலோ உறக்கத்திற்கு கெஞ்சி கொண்டிருந்தது.

உடலுக்கும், மனதிற்கும் அநேக பேருக்கு, அன்றாடம் காலையில் நடக்கும் வழக்கமான போராட்டம் தான், இன்று செழியனுக்கு நடந்து கொண்டிருந்தது.

சமையலை முடித்து, தனக்கும், நன்மாறனுக்கும் தாங்கள் உணவு கொண்டு செல்லும் டப்பாக்களில் உணவை அடைத்துவிட்டு, நங்கையும் குளித்து தயராக சென்று விட்டாள்.

கீழ் வீட்டில் இருந்து வந்து கொண்டிருந்த சத்தம் நின்றதை, தாமதமாகவே உணர்ந்தான், பாதி உறக்கத்திலும், பாதி விழிப்பிலும் உழன்று கொண்டிருந்த செழியன்.

“இன்று ‘உன் எவன்ஜெலினை’ நீ பார்த்த மாதிரி தான், அவ இந்நேரம் கிளம்பி போய் இருப்பாள்”

என்ற மனதின் குரலில், அடித்து, பிடித்து, ஒட்டியிருந்த கொஞ்ச நஞ்ச உறக்கத்தையும் உதறி எழுந்தான் செழியன்.

எழுந்தவன் நேரத்தை பார்க்க, அதுவோ ஏறரையாக ஐந்து நிமிடம் என்று காட்ட, இரண்டு நிமிடத்தில் பல் விளக்கி, முகம் கழுவியவன், கலைந்து இருந்த தலை முடியை கையால் கோதியவாறே, அவனின் பால்கனிக்கு விரைந்தான்.

பால்கனிக்கு வந்தவன், ஒரு கையை சுவரில் ஊன்றி தளர்வாக நின்று கொண்டு, பரபரப்பாக இருந்த தேவி காலனியை தான் பார்த்து கொண்டிருந்தான்.

ஆனால் செழியனோ, கீழ் வீட்டில் இருந்து வர போகும், மெல்லிய கொலுசொலிக்காகவும், அதை அணிந்த மங்கையின் வரவிற்காகவும் காத்திருந்தான்.

அவனை ஏமாற்றாமல், அடுத்த இரண்டு நிமிடத்தில், அவனின் கண்களுக்கு காண கிடைத்தால், அவனின் நங்கை.

நங்கையை கண்ட நொடி, மனதின் இருந்த சோர்வு எல்லாம் பறந்தோட, உடலின் செல்கள் எல்லாம் புத்துணர்ச்சியை உணர, முகம் ஒளிர, பரவசத்துடன் பார்த்திருந்தான் செழியன்.

தன் அலுவலக மடிக்கணினி பையை, பள்ளி படிக்கும் சிறுமியென இருபக்கமும், தோளில் மாட்டிக்கொண்டு, கையில் மதிய உணவு பையுடன் வெளியே வந்தாள் நங்கை.

இரும்பு கதவை தாண்டி வெளியே வந்தவள், திரும்பி கதவை மூடி, உள்ளே நின்றிருந்த நன்மாறனிடம் ஏதோ பேச, செழியனோ அவளின் முகத்தை தான் பருகி கொண்டிருந்தான்.

தோலை தாண்டிய, இடை தாண்டா சுருள் குழல்.

சொற்ப விலையில் ஒரு சுடிதார். ஆனால் அதை அணிந்து இருந்த விதம், மிக கண்ணியமாக இருந்தது.

ஒடிசலான தேகம், உடைத்த கோதுமையின் நிறம்.

முகத்திலோ அவள் செய்த அதிகபட்ச ஒப்பினையின் சாயலாய், ஒரே ஒரு பொட்டு, அதற்கு மேல் மெல்லிய சந்தன கீற்று.

புதினங்களில் குறிப்பிடும் பேரழகி கதாநாயகியோ அல்லது திரைப்படங்களில் நாம் காணும் அப்பழுக்கில்லாத அழகியோ இல்லை தான் நங்கை.

அன்றாடம் நாம் கடந்து போகும் ஆயிரம் கணக்கான பெண்களில் ஒருத்தி.

ஆனால் அவள் செழியனின் கண்களுக்கு பேரழிகியாக தான் தெரிந்தாள்.

ஒருவேளை, நாமும் செழியனின் காதல் கண் கொண்டு பார்த்தால், நங்கையின் அழகு நம் கண்களுக்கும் தெரியுமோ என்னவோ…….

சித்திரத்தின் அழகு பார்ப்பவரின் கண்ணில் அல்லவோ……

நங்கையை செழியனின் பார்த்து கொண்டிருக்கும் போதே, நன்மாறனிடம் பேசியவள் திரும்பி வீதியில் இறங்கி நடக்க ஆரம்பிக்க, அவளின் உடல்மொழியில் அப்படி ஒரு மாற்றம்.

தலை நிமிர்ந்து, நேர் கொண்ட பார்வையுடன், ‘என்னை நெருங்காதே’ என்று எச்சரிக்கும் இறுக்கமான உடல் மொழியுடன், வேகமான ஆனால் அழுத்தமான நடையுடன் நடக்க ஆரம்பித்தாள்.

அவளையே பார்த்து கொண்டிருந்த செழியனோ, அவளின் இறுக்கத்தில் மனம் கலங்க, கண்களில் வலியுடன் அவளை பார்த்து கொண்டிருந்தான்.

செழியன் பால்கனிக்கு வந்ததில் இருந்து, அவனின் கண்கள் காட்டிய, ஒவ்வொரு பாவத்தையும் கவனமாக உள்வாங்கி கொண்டிருந்தார் அவர்.

யார் பார்க்க கூடாதோ அவரே பார்த்துவிட, இதை அறியாத செழியனோ, நங்கை கண்ணில் இருந்து மறையும் வரை அவளை பார்த்திருந்துவிட்டு, தன் வீட்டின் உள்ளே சென்றான்.

அதற்கு பிறகு செழியனின் நேரம் இறக்கை கட்டிக்கொண்டி பறக்க, தன் படுக்கையை எடுத்து வைத்துவிட்டு, குளித்து முடித்து வந்தான்.

வந்தவன் நேற்று வாங்கி வந்திருந்த மாவில் இரண்டு தோசை வார்த்து, மாவுகடையில் வாங்கிய இட்லி பொடியுடன் உண்டவன், காலை உணவை எளிமையாக முடித்துவிட்டு, தன் வேலைக்கு கிளம்பினான்.

செழியன் கிளம்பி, கீழே தன் இருசக்கர வாகனத்தை எடுக்க வர, அவனுக்காக காத்திருந்தது போல, தன் வீட்டின் வெளியே நின்று அவனை அழைத்தார் தேவி பாட்டி.

வேலைக்கு செல்ல கிளம்பியதில் இருந்து, செய்ய வேண்டிய வேலைகளை பற்றிய எண்ணத்திலேயே உழன்று கொண்டிருந்த செழியன், தேவி பாட்டி அழைத்ததும், அதே யோசனையுடன் அவரிடம் சென்றான்.

அவரோ எந்த முகவுரையும் இல்லாமல், 

“என்ன செழியா, வேற வீடு பார்த்துட்ட போல இருக்கு”

என்று கேட்க, தன் யோசனையில் இருந்த செழியனோ, அவர் சொல்லுவது புரியாமல், 

“என்ன ஆயா, நான் ஏன் வேற வீடு பார்க்கணும்”

என்று உண்மையில் புரியாமல் கேட்க, அவனை கூர்மையாக பார்த்த தேவி பாட்டியோ,

“உன்கிட்ட நேத்து நான் அவ்ளோ தூரம் சொல்லியும், இன்னைக்கு நீ உன் இஷ்டதுக்கு வாலையாட்டுனா என்ன அர்த்தம்”

என்று கொஞ்சம் மிரட்டலுடன் கேட்க, இன்னமும் அவர் எதை பற்றி பேசுகிறார் என்று புரியாத செழியன்,

“நீங்க என்ன சொல்றிங்கனே எனக்கு புரில ஆயா, கொஞ்சம் தெளிவா தான் சொல்லுங்களேன், நான் அப்படி என்ன தான் தப்பு பண்ணேணு”

என்று சலிப்புடன் கேட்க, பொங்கி எழுந்த தேவி பாட்டியோ, அவனை முறைத்துவிட்டு,

“நேத்தே சொன்னனா இல்லையா, என் பேத்தி கிட்ட பிரச்சனை பண்ணா, வீட்டை காலி பண்ணனும்னு”

என்று கேட்க, நங்கை பற்றிய பேச்சு என்பதாலோ அல்லது தேவி பாட்டியை வம்புக்கு இழுக்க பிரியம் கொண்டதாலோ என்னவோ உல்லாச மனநிலைக்கு மாறிய செழியன்,

“இப்போ நான் என்ன பண்ணிட்டேனு என்ன கூப்பிட்டு விசாரிக்கிறீங்க, நான் என்ன உங்க பேத்தி கையையா பிடிச்சி இழுத்தேன்”

என்று விளையாட்டாக கேட்க, அவனின் மனசாட்சியோ சம்மனே இல்லாமல் ஆஜராகி, 

“ஐயா நேத்து நைட் நீங்க அதையும் தான் பண்ணி வச்சீங்க” 

என்று நியாபகப்படுத்த, செழியன் உதட்டை கடித்துக்கொண்டு தலை குனிய, இவனை கவனிக்காத தேவி பாட்டியோ, 

“நீ மட்டும் அப்படி பண்ணி பாரு, அவ கையை பிடிச்ச கையை வெட்டி, அந்தா போகுதே நாய் அதுக்கு போடல, நான் முத்தையா பொண்டாட்டி இல்லடா”

என்று முடியை அள்ளி முடிந்து கொண்டு சபதம் இட, தேவி பாட்டி காட்டிய திசையை செழியனின் பார்க்க, அங்கு நிஜமாகவே ஒரு நாய் இருந்தது.

அதற்கு தேவி பாட்டி சொன்னது புரிந்ததோ என்னவோ, இவனின் கையை ‘பாசமாக’ பார்த்து வைக்க, அரண்டு போன செழியனோ வலது கையை தன் பின்னால் மறைத்து கொண்டான்.

அதேநேரம்  செழியனின் இன்னொரு மனது,

“ஹப்பாட அப்போ நேத்து நடந்தது தெரியல, தெரிஞ்சது மகனே அந்த நாய்க்கு நீ தான் பாயா, அப்போ அது தெரியல இந்த ஆயாக்கு, அப்புறம் எதுக்கு இந்த விசாரணை”

என்று தீவிரமாக யோசிக்க, அந்த யோசனையுடனே இவன் தேவி பாட்டியை பார்க்க, இவனுக்கு உண்மையில் புரியவில்லை என்று புரிந்து கொண்ட பாட்டியோ,

“காலையில் பால்கனில நின்னு, எதுக்கு அப்படி என் பேத்தியை முழுங்குற மாதிரி பார்த்த”

என்று நேரடியாக கேட்க, இதுவும் இந்த பாட்டி கண்ணுல பட்டுடுச்சா என்று நொந்து போன செழியன் சற்று துடுக்குடன்,

“ஏன் பார்த்தா என்ன, உங்க பேத்தி என்ன காத்துல கரையுற கற்பூரமா, நான் பார்த்தாலே கரஞ்சி காணாம போக”

என்று கேட்க, உனக்கு நான் சலைத்தவள் இல்லை எனும் விதமாக தேவி பாட்டி,

“அவ கற்பூரம் இல்ல தான், அதுக்குன்னு அவ பொருள்காட்சில இருக்குற பொருளும் இல்லை, போற வரவங்க எல்லாம் பார்த்துட்டு போக”

என்று ஒரே போடாக போட, செழியனோ,

“ஈகுவல பேசுதே இந்த கிழவி” 

என்று பல்லை கடிக்க, அந்நேரம் தேவி பாட்டியை உள்ளே இருந்து அழைத்தார் முத்தையை தாத்தா.

செழியன் தப்பித்தோம் என்று செல்ல போக, அவனை அழைத்த தேவி பாட்டியோ,

“இந்தா பாரு பொடியா, இன்னொரு தடவை நீ நங்கையை பார்க்கிற பார்த்தேன், உன் கண்ணா முழியை தோண்டி, அந்த நாய்க்கு போட்டுடுவேன் பார்த்துக்கோ”

என்று மீண்டும் இவனை எச்சரிக்கை செய்துவிட்டு உள்ளே செல்ல, செழியனோ, ‘இன்னுமா நீ போகல” எனும் விதமாக திரும்பி, அந்த நாயை பார்த்தான்.

அதுவோ இவனை ‘ஒரு புல் மீல்ஸாக’ நினைத்து, நாக்கில் எச்சியூற பார்த்து வைக்க, செழியனோ மனதிற்குள்,

“எம்மாடி இந்த பாட்டி வெரி டேன்ஜரஸ் லேடி, யாருக்கிட்ட கோர்த்துவிட்டுட்டு போகுது பாரு”

என்று நினைத்தவாறு, அந்த நாயை பாசத்துடன் பார்த்தவாறே பின் நோக்கியே நடந்தவனின் மனதோ, 

‘இனி தினமும் பிஸ்கட் போட்டு இந்த நாயை நண்பனாக ஆக்கணும், ஒரு வாலிபனோட காதலுக்கு தான் எவ்வளவு பிரச்சனை”

என்று நொந்து கொள்ள, அவனின் இப்போது மீண்டும் ஆஜரான திருவாளர் மனசாட்சியோ,

“ஐயா நீங்க வாலிபனா, உங்களுக்கு முப்பது வயசுக்கு மேல ஆகுது, நீங்க அங்கிள் ஆகிட்டீங்க சாமி, அங்கிள் ஆகிட்டீங்க”

என்று உண்மையை ஏற்ற இறக்கத்துடன் போட்டு உடைக்க, சிலிர்த்து கொண்ட செழியனோ,

“நான் அங்கிள் ஆனாலும், நன்மாறனுக்கு தான் அங்கிள் ஆவேன்”

என்று ஜொள்ளி கொள்ள, அவனை மகா கேவலமாக அவனின் மனசாட்சி பார்த்து வைக்க, அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், ஒரு சீட்டியுடன் தன் வண்டியை கிளப்பினான் செழியன்.

அடுத்த நாற்பத்தைந்து நிமிடத்தில், போக்குவரத்து நெரிசலில் நீந்தி, மக்கள் அதிகம் வசிக்காத புறநகர் பகுதிக்கு வந்து சேர்ந்தான் செழியன்.

இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும், அந்த பகுதியில், ஆங்காங்கே ஒன்று இரண்டு வீடுகளே இருக்க, அதில் ஒரு வீட்டை நெருங்கி கதவை தட்டினான் செழியன்.

கதவு இடுக்கின் வழியே, இவனை பார்த்த பின்பே உள்ளிருந்து கதவை திறந்தான் ஒருவன். செழியன் உள்ளே நுழைந்ததும், கதவை திறந்தவனும், உள்ளே இருந்த மற்றொருவனும் இவனை அணைத்து கொண்டனர்.

அணைத்து விடுவித்ததும், பாசமும் மரியாதையும் கலந்த கலவையான குரலில்,

“எப்படி இருக்கீங்க அண்ணா”

என்று இருவரும் ஒருசேர கேட்டனர். இருவரையும் பெருமிதத்தோடும், வாஞ்சையோடும் பார்த்த செழியன் புன்னகையுடன்,

“நான் நல்லா இருக்கேன்டா, நீங்க எப்படி இருக்கீங்க”

என்று கேட்க, இருவரும் பவ்யமாக தலையசைத்து வைத்தனர்.

அங்கிருந்த சோபாவில் செழியன் சாய்ந்து அமர, ஒருவன் சென்று தண்ணீர் கொணர்ந்து கொடுத்தான்.

செழியன் அமைதியாக நீரை பருக, இருவரும் இவனின் முகத்தை தான் பார்த்த படி அமர்ந்து இருந்தனர்.

நீரை பொறுமையாக அருந்தி முடித்த செழியன், தன் தொண்டையை கனைத்து கொண்டு,

“ரெண்டு பேருக்கும் ரொம்ப தேங்க்ஸ்டா, எனக்காக உங்க வேலையை எல்லாம் விட்டுட்டு, இங்க வந்ததுக்கு”

என்று பொதுவாக சொல்ல, அவர்களில் ஒருவன்,

“எங்களுக்கும் இந்த பார்மா கம்பனியை காப்பாத்துற கடமை இருக்கு அண்ணா, நாங்களும் ட்ரஸ்ட் மூலமா படிச்சவங்க தானே”

என்று உணர்ந்து சொல்ல, அதை தலையாட்டி கேட்டு கொண்ட செழியன்,

“நான் சொன்னதை பத்தி யோசிச்சிங்களா,  பார்மா கம்பனில என்ன தப்பு நடக்குதுனு நினைக்குறீங்க”

என்று இருவரையும் பார்த்து கேட்க, அந்த இருவரில் ஒருவன்,

“அண்ணா, எனக்கு என்னமோ இல்லீகல் ட்ரக் டீலிங் அஹ தான் இருக்கும்னு தோணுது”

என்று சொல்ல, அவனை யோசனையுடன் பார்த்த செழியன்,

“எந்த மாதிரியான ட்ரக் டீலிங் அஹ இருக்கும்னு நினைக்கிற தமிழ்”

என்று கேட்க, செழியனால் தமிழ் என்று அழைக்கப்பட்டவனோ,

“ஹெராயின், கொக்கயின் இப்படி தான் அண்ணா”

என்று சொல்ல, இடவலமாக தலையாட்டி அதை மறுத்த செழியனோ, அமைதியாக இருந்த இன்னொருவனை பார்த்து,

“நீ என்ன நினைக்கிற வெற்றி”

என்று கேட்க, அவனோ,

“தமிழ் சொல்ற மாதிரியான ட்ரக் அஹ இருக்க வாய்ப்பு கம்மி அண்ணா, அதை இவங்களால கண்டிப்பா இங்க ப்ரோடியூஸ் பண்ண முடியாது, ஒரு வேளை கடத்த மட்டும் கம்பனிய யூஸ் பண்றாங்கன்னு வச்சிக்கிட்டா, அதுக்கு கம்பனி நேம் போட்ட வண்டி மட்டும் போதுமே, கம்பெனியை கண்ட்ரோல வசிக்க வேண்டிய அவசியம் என்ன”

என்று கேட்க, வெற்றி சொல்லியதை ஏற்று கொள்ளும் விதமாக தலையசைத்த செழியன்,

“எனக்கும் வெற்றி சொல்றது தான் சரின்னு தோணுது, வேற என்னமோ பண்றாங்க தமிழ்”

என்று சொல்லியவன் இருவரையும் பொதுவாக பார்த்து,

“நான் வினோத் கிட்ட பேசி இருக்கேன், தினமும் பார்மா கம்பனில அவங்க ப்ரோடியூஸ் பண்ற டேப்லெட் சாம்பிள், அப்பறம் அதை அவங்க எந்த லொகேஷனுக்கு அனுப்புறாங்க அப்படின்ற டீடெயில்ஸ் கேட்டு இருக்கேன்”

என்று சொல்ல இருவரும் கவனமாக அவன் சொல்லியதை கேட்க, தொடர்ந்த செழியன்,

“வினோத் கொடுக்கிற டீடெயில்ஸ் அஹ க்ளோஸ் அஹ வாட் பண்ணி அதை கிராஸ் செக் பண்ணுங்க, அதுல எதாவது நமக்கு க்ளு கிடைக்குதானு பார்ப்போம்”

என்று சொல்ல, இருவரும் தலையசைத்து அமைதியாக கேட்டுக்கொண்டனர்.

அந்த நேரம் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

அவர்களின் கண்களில் ‘வந்திருப்பது யாராக இருக்கும்’ என்ற கேள்வி தொக்கி நின்றது.

காந்தன் வருவான்…….

Advertisement