Advertisement

செழியன் சொற்ப பொருட்களையே கொண்டு வந்து இருந்தாலும், அதை அந்த சிறிய வீட்டில் ஒதுக்கி வைக்கவே, அவனுக்கு மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது.

மதிய உணவை வீட்டிற்கே தருவித்து உண்டவன்,  முன்மாலை பொழுதில் வெளியே செல்ல கிளம்ப, சரியாக அந்த நேரம், தேவி பாட்டியின் கணவர் முத்தையா தாத்தா வந்து சேர்ந்தார்.

அந்த வயதிலும் சிறு தடுமாற்றம் இல்லாமல், மாடியேறி வந்தவர், கதவை தட்டிவிட்டு, இவன் கதவை திறந்ததும், வெகு பவ்யமாக வெளியே நின்று கொண்டே,

“எல்லா பொருட்களும் அடுக்கிவச்சாச்சா சார்”

என்று கேட்க, செழியனோ அவருக்கு பதில் அளிக்காமல், அவரை உள்ளே அழைத்து, கூடத்தில் போடப்பட்டிருந்த இரண்டு, பிளாஸ்டிக் நாற்காலியில் ஒன்றில் அவரை அமர்த்திவிட்டு, இன்னொரு நாற்காலியில் தானும் அமர்ந்தான்.

அந்த பாட்டி ‘ரவுடி’ என்று வர்ணித்த அவரின் கணவர், தன்னிடம் இப்படி பவ்யமாக பேசுவதை பார்த்தால், தேவி பாட்டியின் முகம் எப்படி போகும் என நினைக்கையிலே, இவனுக்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்தது.

செழியன் இந்த யோசனையில், தாத்தாக்கு பதில் அளிக்காமல் இருக்க, அதற்குள் வீட்டிற்குள் பார்வையை ஓட்டிய அந்த முதியவரோ மீண்டும்,

“வீடு சின்ன வீடு தான் சார், நான் எவ்ளோ சொன்னேன் நீங்க தான் கேட்கலை, நீங்க பெரிய ஆளு, நீங்க போய் இந்த வீட்டுல….” 

என்று பேசி கொண்டே போக, அவரின் ‘சார்’ என்ற விளிப்பு, மரியாதை, அதோடு அவர் சொல்ல முற்பட்ட விவரங்கள் என, எல்லாவற்றையும் கேட்ட செழியன் அதிருப்தியுடன்,

“உங்க வயசு என்ன, என் வயசு என்ன, என்ன போய் சார்னு எல்லாம் சொல்லிக்கிட்டு, எனக்கு உங்க பேரன் வயசு தான் இருக்கும், சும்மா செழியனே கூப்பிடுங்க தாத்தா”

என்று சொல்ல, தாத்தாவோ,

“அது எப்படி உங்களை போய் நான் பேரு சொல்லி கூப்பிடுறது, மரியாதைன்னு ஒன்னு இருக்கு இல்ல” 

என்று தயங்க, இவரிடம் இப்படி பேசினால் வேலைக்கு ஆகாது என்று புரிந்து கொண்ட செழியனோ,

“நீங்க இப்படி சார், சார்னு கூப்பிட்டு, எல்லாருக்கும் நீங்களே நான் யாருன்னு சொல்லிடுவிங்க போல, சொல்லுங்க ஒருவேளை அதான் உங்க திட்டமா”

என்று சற்று கடுமை பூசப்பட்ட குரலில் கேட்க, அரண்டு போன முத்தையா தாத்தாவோ,

“அச்சோ அப்படி எல்லாம் இல்லை சா…, தப்பு, தப்பு சார் இல்ல, செழியன்,செழியன் “

என்று சார் என்று கூப்பிட வந்தவர், இவனின் முறைப்பில் செழியன் என்று முயன்று மாற்றினார். அவரை ஒரு பார்வை பார்த்த செழியன் அவரிடம்,

“நான் இந்த வீட்டுல இருக்கிற வரைக்கும், உங்க வீட்டுல குடி இருக்க ஒரு சாதாரண ஆளு தான், மத்தவங்க கிட்ட எப்படி நடந்துக்குவிங்களோ, அப்படியே என் கிட்டயும் நடந்துக்கோங்க சரியா, எனக்குன்னு எந்த தனி கவனிப்பும் வேண்டாம், அது வீணான சந்தேகத்தை கிளப்பும்”

என்று தெளிவாக சொல்ல, அவரோ இவன் சொல்லிய எல்லாவற்றிற்கும், புரிந்தது என்று நன்றாகவே, நாலாபக்கமும் தலையை ஆட்டி வைத்தார்.

அதோடு மீண்டும் அவனின் சௌகர்யத்தை பத்து முறை உறுதி செய்துகொண்டு, ஏதாவது தேவைப்படும் பட்சத்தில் தயங்காமல் தன்னிடம் கேட்கும் படி இருபது முறை கூறிவிட்டே விடைபெற்றார் முத்தையா தாத்தா.

அப்படி ஒரு சகலகலாவல்லி, ஜகதால ஜித்தி, தேவி பாட்டிக்கு, இப்படி ஒரு அப்பாவி கணவனா, என்று செழியனால் ஆச்சர்யப்பட தான் முடிந்தது.

இருந்தாலும் இதுவரை தாத்தா, பாட்டி என்ற உறவுமுறையே அறிந்திராத செழியனுக்கு, இவர்கள் இருவரையும் பிடிக்க தான் செய்தது.

அவர் கிளம்பி சென்ற பிறகு, உடைமாற்றி தானும் வெளியே செல்ல கிளம்பி,நான்கு மணியளவில்  கீழே இறங்கி வந்த செழியன், பூட்டிய கீழ் வீட்டை முழுதாக ஒரு நிமிடம் பார்த்த பிறகு, ஒரு பெரு மூச்சுடன் கிளம்பி சென்றான்.

நாளை முதல் தன் வேலையை துவங்க திட்டமிட்டிருந்த செழியன், அதற்கான ஏற்பாடுகள் எல்லாவற்றையும் சரி பார்த்தவன், இரவு பத்து மணி அளவிலே தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

இப்போது கீழ் வீடு பூட்டி தான் இருந்தது, ஆனால் உள்பக்கமாக. உள்ளே ஒளிர்ந்த விளக்குகள், உள்ளே ஆள் இருப்பதை பறைசாற்றி கொண்டிருந்தது.

இப்போதும் பூட்டிய வீட்டை பார்த்து கொண்டே செல்வதை தவிர, செழியனுக்கு வேறு வழி இருக்கவில்லை. 

தேவி பாட்டி சொன்ன அவரின் பேத்தியை, இவன் கண்ணால் காணும் வழியும், இவனுக்கு புலப்படவில்லை.

களைப்புடன் மாடியேறிய செழியன், தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, இரவு உடைக்கு மாறிய பின், வரும் போது வாங்கி வந்து இருந்த இரவு உணவை உண்டான்.

அவன் செய்ய வேண்டிய வேலைகள், முடிக்க வேண்டிய கடமைகள் கண் முன் விரிய, எப்படி எங்கு இருந்து தொடங்குவது என்பதை பற்றிய சீரிய சிந்தனையில் இருந்தான் அவன்.

இன்று செய்த அதிகப்படியான வேலைகள், இடைவிதாத சிந்தனைகள் கொஞ்சம் அழற்சியை தர, சுத்தமான காற்று கொஞ்சம் புத்துணர்ச்சி தரும் என்ற எண்ணத்தில், நடுநிசியை நெருங்கிய அந்த நேரத்தில் தன் வீட்டை விட்டு வெளியே வந்தான் செழியன்.

தன் வீட்டின் முகப்பில், பால்கனி போல இருந்த, அந்த சிறிய இடத்தில் நின்று, இருளை வெறித்து கொண்டிருந்தான் செழியன்.

பக்கத்தில் இருந்த வீடுகள் ஒன்றிரண்டில் இருந்து  தொலைக்காட்சியின் ஓசை கலவைகயாக கொண்டிருந்தாலும், அது எல்லாம் செழியனின் கவனத்தை கவரவில்லை.

ஆனால் கீழ் வீட்டிலிருந்து கேட்ட, கதவை திறக்கும்  மெல்லிய சத்தம், தனியாக, அட்சரசுத்தமாக கேட்டது செழியனுக்கு.

அவனின் புலன்கள் எல்லாம் கூர்மையாக, தான் நின்றிருக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் தெரிய கூடிய, கீழ் வீட்டின் பிரதான இரும்பு கதவை ஒட்டிய பகுதியையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் செழியன்.

கதவு திறந்த சத்தம் கேட்டு கொஞ்ச நேரத்திற்கு எல்லாம், ஒரு மெல்லிய கொலுசொலி கேட்க, அதை தொடர்ந்து, அவன் எதிர்பார்த்த மங்கையின் தரிசனம் கிடைத்தது செழியனுக்கு.

வீட்டின் பிரதான கதவிற்கும், இரும்பு கதவிற்கும் இடைப்பட்ட அந்த பத்துக்கு பத்துக்கு இடைவெளியில், விளக்கை போடாமல், யாரையோ எதிர்பார்ப்பது போல, நடைபழகி கொண்டு இருந்தாள் அந்த தையல்.

வீட்டின் கதவை மட்டும் திறந்து வைத்திருக்க வேண்டும். வீட்டின் உள்ளே எரியும் விளக்கின் வெளிச்சம், கொஞ்சம் வெளியேயும் பாய, அந்த சொற்ப வெளிச்சத்தில், அப்பெண்ணின் முகத்தை கண்டான் செழியனுக்கு.

அப்பெண்ணின் முகத்தை கண்ட செழியனின் உணர்வுகளை, வார்த்தையில் வடிக்க முயல்வது என்பது ஆகச்சிறந்த முட்டாள் தனம். 

அவனின் கண்கள், அவளின் முகத்தை கண்ட நொடி, வறட்சியால் வெடித்த நிலத்தில், விழுந்த முதல் மழை துளியை, அந்த நிலம் எந்த அளவுக்கு ஆனந்தமாக, பொக்கிஷமாக தன்னுள் இழுத்து கொள்ளுமோ, அதற்கு சற்றும் குறையாத பரவசத்துடன், அந்த நொடியை தன்னுள் பொக்கிஷமாய் சேமித்து கொண்டான் செழியன்.

அவனின் கண்கள் அந்த மங்கையை தலை முதல்,  கால் வரை வருட, அவனின் உலகமோ அந்த நொடியில் அப்படியே, அக்காரிகையில் உறைந்து போன உணர்வு செழியனுக்கு. 

அவனின் கண்கள் அப்பெண்ணையே பார்த்து கொண்டிருக்க, அவனின் உதடுகளோ, நெகிழ்வுடனும், மென்மையுடனும், ‘மை எவன்ஜெலின்’ என்று முணுமுணுக்கவும் செய்தது.

மேலே ஒருவன் தன்னிலை மறந்து நிற்பதை அறியாத மங்கை இவளோ, தன் கோபத்தை எல்லாம், தன் அழுத்தமான காலடிகளில் வெளிப்படுத்தியவாறு, வெகு நிதானமாக நடந்து கொண்டிருந்தாள். 

அவளின் மேலே கண்களை நிலைக்க விட்டிருந்த செழியனினோ, ஏழை கண்டெடுத்த புதையல் என இமைக்காமல் அப்பெண்ணையே பார்த்து கொண்டிருந்தான்.

அப்போது அவனின் புலன்கள் அவனுக்கு ஏதோ எச்சரிக்கை சமிக்ஞை தர, அதை அசட்டை செய்ய விரும்பாமல், விருப்பமே இல்லாமல் அக்காரிகையின் மீதிருந்து கண்களை பிரித்தெடுத்தான் செழியன்.

அவனின் ஐம்புலன்களும் கூர்மையாக சுற்றுப்புறத்தை ஆராய, இவன் பார்த்து கொண்டிருக்கும் போதே, தேவி காலனியின் பிரதான இரும்பு கதவை தாண்டி, சத்தமே வராமல் இலாவகமாக தரையில் குதித்தது ஒரு உருவம்.

செழியன் அவ்வுருவத்தையே உற்று கவனித்து கொண்டிருக்க, உள்ளே குடித்த அந்த உருவம், பதுங்கி பதுங்கி, இவர்களின் வீட்டை குறிவைத்து முன்னேற, செழியன் துணுக்குற்றான்.

கீழே இருக்கும் அவனவளின் நினைவு வர, அவளின் பாதுபாப்பு பற்றிய பயம் எழுந்ததும், இதயம் பந்தய குதிரையின் வேகத்தில் ஓட ஆரம்பித்தது.

அடுத்த ஒரு நொடியையும் வீணாக்க விழையாத செழியன், நான்கு நான்கு படிகளாக தாண்டி கீழே இறங்கி ஓடினான்.

அவன் அந்த இருபது படிக்கட்டுகளை கடந்து கீழே வரும் போது, அவனின் மனம் கவர்ந்த மங்கை கதவின் அருகே இருக்க, இரும்பு கதவுக்கு அந்த புறம் வெகு அருகில் அந்த உருவம்.

இவன் வந்த வேகத்தில், அது தந்த சத்தத்தில் திரும்பி பார்த்த அப்பெண் இவனை திகைத்து நோக்க, செழியனோ அவளின் திகைப்பை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.

வினாடி கூட தாமதிக்காமல் கதவின் அருகே நெருங்கியிருந்த, அவளின் கையை பிடித்து இழுத்து,  தன் முதுகுக்கு பின்புறம் மறைவாக நிற்க வைத்தவன், கதவுக்கு அந்த புறம் இருந்த உருவத்தை நோக்கி,

“யார் நீ, எதுக்கு வந்து இருக்க சொல்லு”

என்று மிரட்ட ஆரம்பிக்க, திகைப்பில் இருந்த அந்த  பெண்ணோ, செழியன் இழுத்த இழுப்புக்கு வந்தாலும், விரைவில் தன் திகைப்பில் இருந்து வெளிவந்துவிட்டாள்.

தன் கையை பிடித்திருந்த செழியனின் அழுத்தமான பிடியை உதற முயன்று முடியாமல் போக, தன் இன்னொரு கையால், அவனின் கையை பிடித்து விளக்கிவிட்டு, அவனின் முன்னாடி வந்து நின்றவள்,

“அதை நான் சொல்றேன், அது என்னோட தம்பி, நீங்க கொஞ்சம் வழிவிட்டா நான் கதவை திறப்பேன், அவனும் உள்ள வருவான்”

என்று அழுத்தமாகவே சொல்ல, அந்த சூழ்நிலையிலும், தன்னவளின் முதல் ஸ்பரிசம் என்று இவனின் மனது சிலிர்க்க  தான் செய்தது.

மனம் சிறகடிக்க, மெல்லிய புன்னகையுடன் வெளியே நின்ற உருவத்தை உற்று பார்க்க, அந்த உருவமோ இவனை முறையோ, முறையென முறைத்து கொண்டிருந்தது.

முகத்தில் வழியும் அசடை, அவனின் முகக்காடுகளில் மறைத்தவாறு, செழியன் வழியை விட, அவனின் மனசாட்சியோ,

“நடுஜாமத்துல, நாளுக்காலு பாய்ச்சல ‘இதோ வந்துட்டேன்’ ரேஞ்சில் ஓடி வந்தது எல்லாம், இம்மா பெரிய பல்ப் வாங்க தானா கோ…பா…ல்… கோ…பா…ல்…” 

என்று பாரபட்சமே பார்க்காமல் கலாய்க்க, அதை துளிக்கூட முகத்தில் காட்டாமல் செழியன் நிமிர்ந்து நிற்க, அவனும் மனமோ இப்போது தான் நடந்தவைகளை சரியாக புரிந்து கொண்டது.

இரவு வெகுநேரம் ஆனதால், பிரதான கதவை தேவி பாட்டி பூட்டியிருக்க வேண்டும், அந்த கதவிற்கு இரண்டு சாவிகள் தான், ஒன்று தன்னிடம் தாத்தா தந்து இருக்க, இன்னொன்று பாட்டியிடம் மட்டுமே.

ஆக சாவியில்லாததால், இவன் கதவை தாண்டி குதித்து இருக்க வேண்டும், இவளும் யாரையோ எதிர்பார்த்த மாதிரி தானே நடந்து கொண்டிருந்தாள்……

இப்போது தான் மூளையில் பல்பு எரிய ஆரம்பிக்க, முட்டாள் தனமாக நினைத்து, அவளின் கையை பிடித்து இழுத்து, தான் செய்த செயலை நினைத்து தன்னை தானே, மானசீகமாக தலையில் அடித்து கொண்டான் செழியன்.

அதுவும் முதல்முறை அவளிடம் அறிமுகம் ஆகும் போது, இப்படி அசடு பட்டம் வாங்கி நின்றிருக்க வேண்டாம் என்று மனது கிடந்து அடித்துக் கொண்டது.

அதற்குள் அந்த பெண் ‘தன் தம்பி’ என்று அழைத்த அவனும் உள்ளே வர, வந்தவன் முதலில் சென்று, இவர்கள் நிற்கும் இடத்தின் விளக்கை தான் போட்டான்.

மீசை அரும்ப ஆரம்பிக்கும் விடலை பருவம். இன்னும் முற்று முழுதாக குழந்தைத்தனம் அகலாத பிஞ்சு முகம். ஆனால் முகத்திலோ வயதிற்கு மீறிய முதிர்ச்சி. 

செழியனை ஒருவிதமான எச்சரிக்கையுடன் பார்த்தவன்,

“யார் நீங்க, இங்க என்ன பண்றீங்க”

என்று அப்பெண்ணை மாதிரியே அழுத்தமாக கேட்க, இவ்வளவு நேரம் விளக்கின் ஒளியில் செழியனை பார்த்து கொண்டிருந்த அப்பெண்ணோ, முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல், ஆனால் கொஞ்சம் மென்மையான குரலில்,

“செழியன்”

என்று சொல்ல, அவளின் தம்பி கண்களில் கேள்விகுறியுடன் பார்க்க, செழியனோ கண்களில் ஆச்சர்யகுறியுடன் பார்க்க, அவளோ சற்றும் அலட்டிக்கொள்ளாமல், தன் வழக்கமான அழுத்தமான குரலில்,

“மேல் வீட்டுக்கு குடி வந்து இருக்காரு, ஆயா சொன்னாங்க”

என்று தன் தம்பியை பார்த்து சொல்ல, அவன் யோசனையுடன் தலையை ஆட்டிக் கேட்டு கொண்டான். 

இன்னும் தன் செய்கைக்கு, தான் விளக்கம் சொல்லவில்லை என்பதை உணர்ந்த செழியன், நலிந்த குரலில்,

“நான் தூக்கம் வரலனு வெளியே வந்தேன், அப்போ தான் நீங்க கதவை தாண்டி குதிச்சீங்க, இந்த வீட்டை நோக்கி தான் வந்தீங்க, கீழ பார்த்தா இவங்க தனியா இருந்தாங்க, உங்களை திருடன் நினைச்சி, இவங்களுக்கு ஹெல்ப் பண்ண நினைச்சி தான்…. நான் கையை….சாரி”

என்று செழியன் விளக்க, அதை ஒரு தலையாட்டலுடன், அக்கா, தம்பி இருவரும் ஏற்றுக்கொள்ள, தொடர்ந்த செழியன்,

“என்னை பத்தி ஆயா உங்க கிட்ட சொல்லி இருக்காங்க, ஆனா பாருங்க, நீங்க அவங்க பேரபசங்கனு மட்டும் தான் என்கிட்ட சொன்னாங்க, உங்க பேரு கூட எனக்கு தெரியாது, ஒரே வீட்டுல குடியிருக்கோம் பேரு கூட தெரிலனா நல்லா இருக்காது பாருங்க”

என்று நயமாக பேச, அக்கா, தம்பி இருவரின் பார்வையும் ஒரு நிமிடம் இணைந்து பிரிய, அந்த தம்பியாகப்பட்டவன் இவனை ஆராய்ச்சி பார்வை பார்க்க, அப்பெண்ணோ அவளின் முகத்தில் எவ்விதமான பாவனையும் காட்டாமல்,

“என் பேரு நங்கை, இவன் என் தம்பி நன்மாறன்” 

என்று அவன் கேட்ட பெயரை மட்டும் சொன்னவள், செழியனின் கண்களை கூர்ந்து பார்த்தவாறே,

“இதுக்கு முன்னாடி உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே, நாம இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கோமா”

என்று கேட்க, அவளை பின்பற்றி நன்மாறனும்,

“ஆமா அக்கா, எனக்கும் அப்படி தான் இருக்கு, ஆனா எங்கன்னு தான் தெரில”

என்று சொல்ல, இதை கேட்ட செழியனோ, “கெட்டது குடி” என்று நினைத்து கொஞ்சம் அதிர்ந்தாலும், அதை வெளிக்காட்டி கொள்ளாமல்,

“நான் சென்னையை விட்டு போய் ஐந்து வருஷம் ஆகுது, இப்போ தான் இங்க மறுபடியும் திரும்பி வந்து இருக்கேன், நீங்க என்ன பார்த்து இருக்க வாய்ப்பேயில்லை”

என்று அவர்கள் செய்திகளில் எப்போதாவது பார்த்த முகத்தை, தாடி வைத்தும் இவ்வளவு தூரம் அடையாளம் கண்டிருக்க வேண்டாம் என்ற பொருமலுடன் கூற, 

இருவரும் இவன் சொல்லியதை கேட்டு கொண்டாலும், மாறன் இன்னும் யோசிக்கும் பாவனையிலே இருக்க , நேரம் ஆவதை உணர்ந்த நங்கை தன்னை சுதாரித்து கொண்டு, தன் தம்பியிடம்,

“மாறா உள்ள போகலாம்”

என்று அழைத்தவள், செழியனிடம் ஒரு தலையசைப்புடன் விடைபெற்று உள்ளே சென்று விட்டாள். 

மாறனும் அவளை பின்தொடர்ந்தாலும், அவனின் கண்கள் நொடிக்கொருமுறை செழியனை தொட்டு தொட்டு மீண்டு கொண்டிருந்தன.

அவன் அவனின் நியாபக அடுக்கை, வெகு தீவிரமாக துழலுவதை உணர்ந்த செழியனின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.

“வந்திருக்கும் காரியும் முடியும் வரை அவன் நான் யாருனு கண்டுபிடிக்காமல் இருக்கனும், இல்லைன்னா, அது இன்னும் பல பிரச்சனைகளை தான் உருவாக்கும், என்ன செய்யலாம்”

என்று செழியனின் மனம் தீவிரமாக யோசிக்க, அந்த சிந்தனைகளுடனே மாடியேறி கொண்டிருந்தான் அவன்.

காந்தன் வருவான்…….

Advertisement