Advertisement

தன் மணவாளன் காவல்துறை அதிகாரியா, அதுவும் ‘ஐ.பி.எஸ்’ அஹ என்பதே மீண்டும், மீண்டும் மனதில் ஓட, கண்கள் பார்த்ததை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தாள் நங்கை.

அன்று பேருந்து நிறுத்தம் பிரச்சனையில், காவல்துறையில் புகார் அளிக்க வேண்டியது தானே, சாதரணமாக சொன்ன பொற்செழியன் அவளின் கண் முன் வந்து சென்றான்.

இரண்டு நாள் முன்பு, யாரோ தொடர்ந்து வருவது போல, பின்னால் திரும்பி, திரும்பி பார்த்தபடி வந்து, தங்களை மட்டும் தனியாக வாடகை காரில் அனுப்பி வைத்த கணவனின் பிம்பம் தோன்றினான்.

குரல் உயர்த்தாமல் எப்போதும் தன்னிடம் வாஞ்சையுடன் உரையாடும் தன் தலைவன்.

தேவி பாட்டியிடம் சரிக்கு சமமாக கிண்டலாக பேசி, அவரை கலாய்க்கும் தன்னவன்.

சமையலுக்கு உதவி, தான் மறுக்க மறுக்க துணி துவைக்கும் தன் சரிபாதி.

என பொற்செழியனை பற்றி யோசிக்க யோசிக்க, முதல் இரண்டு நிகழ்ச்சியை தவிர, அவன் காவல்துறை அதிகாரியாக இருக்காலம் என்பதற்கு சாதகமாக அவளுக்கு எதுவுமே தோன்றவில்லை.

காவல்துறையினர் என்றால் இப்படி தான் என்று நமக்கு நாமே ஏற்படுத்தி வைத்திருக்கும் இரும்பு போல விரைப்பான, சிரிப்பை மறந்து இறுகி இருக்கும், எந்த தோற்றமும் பொற்செழியனோடு பொருந்த வில்லை.

இன்று தொலைக்காட்சியில் கம்பீரமாக பேட்டி அளித்த பொற்செழியன், தன் கணவன் என்பதை நம்பவே அவளுக்கு நிரம்ப நேரம் பிடித்தது.

தன் தமக்கை உறைந்து அமர்ந்து இருக்க, அவளை நெருங்கி அவளின் தோளில் கை வைத்த நன்மாறன்,

“அக்கா, அக்கா”

என்று உலுக்க, கனவில் இருந்து விழிப்பவள் போல மலங்க மலங்க விழித்த நங்கை, இன்னமும் ஓடி கொண்டிருந்த தொலைகாட்சியை பார்க்க, அவளின் நிலை உணர்ந்தவன் போல நன்மாறன்,

“மாமா நல்லவங்க அக்கா, அவர் சைட்ல ஏதாவது ரீசன் இருக்கும், வந்ததும் பொறுமையா கேளுங்க அக்கா”

என்று சொல்ல, தன்னிடமே தன்னவனுக்கு வக்காலத்து வாங்கும் தம்பியை நிமிர்ந்து பார்த்த நங்கைக்கு, தன்னை போல இவன் அதிர்ச்சி அடையவில்லை என்பது தாமதமாகவே புரிய,

“உனக்கு முன்னாடியே தெரியுமா”

என்று மட்டும் கேட்க, தலையை குனிந்து கொண்ட நன்மாறன்,

“ம்ம் ஆமா அக்கா, உங்க மேரேஜ் அன்னைக்கு தான் தெரியும், அதுவும் சர்ட்டிபிகேட்ல நேம் பார்த்து தான், உன் கிட்ட சொல்றேன் சொன்னதுக்கு, சித்தி தான், மாமாவே சொல்லுற வரைக்கும் சொல்ல வேண்டாம் சொல்லிட்டாங்க”

என்று நடந்தது எல்லாவற்றையும் விளக்க, ஆக தன்னை தவிர மற்ற அனைவருக்கும் தெரியும் என்பதில் கோபம் கபகபவென ஏற, அவனை உறுத்து விழித்தாளே ஒழிய எதுவும் பேசவில்லை.

செய்தி பார்த்த அக்கம்பக்கத்தினர் எல்லாம் வியக்க, தேவி பாட்டியும் வந்து அவர் பங்குக்கு,

“இங்க பாரு நங்கை, அவன் போலீஸோ என்னவோ, எதுவோ வேணா இருந்துட்டு போகட்டும் , அதனால் எல்லாம் அவ உன் புருஷன்றது மாற போகுதா என்ன”

என்று கேட்க, நங்கையோ அமைதியாக அமர்ந்து இருக்க, அவள் என்ன யோசிக்கிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தேவி பாட்டி,

“நம்மை உண்மையா நேசிக்கிற ஒருத்தர் கணவனா அமைய கொடுத்து வச்சி இருக்கணும் நங்கை, புத்தி உள்ள புள்ளையா பொழச்சிக்க பாரு, அவ்ளோ தான் நான் சொல்லுவேன்”

என்று சொல்லி விட்டு செல்ல, அடுத்து அவளின் சித்தி அழைத்தார். இவள் அழைப்பை ஏற்று பேசாமல் இருக்க அவரோ,

“உன்னோட கோபம் எனக்கு புரியுதுடா, மாப்பிள்ளை பேருல எந்த தப்பும் இல்ல, அவரு எல்லாம் சொல்லித்தான் பொண்ணு கேட்டாரு”

என்று ஒரு இடைவெளி விட்டவர், இவள் அப்போதும் எதுவும் பேசாமல் இருக்க, தொடர்ந்து,

“அவர் அப்பா, அம்மா இல்லாதவர்டா, சின்ன வயசுல இருந்து ஆசிரமதுத்துல தான் வளர்ந்து இருக்காரு, தானே படிச்சி இந்த அளவுக்கு உயர்ந்து இருக்காரு” என்று சொல்ல,

“பிடிச்சதுன்னு எதுவும் இல்லை, சாப்பாடு எப்படி இருந்தாலும் சாப்பிடுடுவேன், மீன் சாப்பிட மட்டும் சேன்ஸ் கிடைக்கல, அதனால் சாப்பிட தெரியாது”

என்ற சொன்ன தன்னவனின் குரல் இப்போதும் துள்ளியமாகி காதில் கேட்க, அதற்கான அர்த்தம் எல்லாம் இப்போது தான் புரிந்தது நங்கைக்கு. தொடர்ந்த அவளின் சித்தி,

“நானுமே ரொம்ப தயங்குனேன் தான், அவர் போலீஸ்னு சொன்னதும், ஆனா அவர் என் கிட்ட பேசும் போதே, உன் மேல வச்சி இருந்த காதல் தெரிஞ்சுது, அதோட மாறனையும் அவர் பிரிச்சி பார்க்கவே இல்லை”

என்று சொல்ல, அவர் சொன்னதில் உள்ள உண்மையை இவளும் தான் அறிவாளே. இருந்த போதிலும் அமைதி எனும் போர்வையிலே தொடர, சித்தியோ,

“எங்க போலீஸ்னு தெரிஞ்சா நீ வேண்டாம்னு சொல்லிடுவியோனு தான் உன்கிட்ட முன்னாடியே சொல்லல, உன்னோட நல்லதுக்காக தான் சித்தி பண்ணேன்டா”

என்று அவள் கோவப்பட கூடதே என்று தன்னால் முடிந்த வரை விளக்க, இவளோ சாதாரணமாக,

“சரிங்க சித்தி, நான் அப்புறமா பேசுறேன்”

என்று அழைப்பை துண்டித்து விட்டு, தன் காதல் கண(ள்)வனின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

எல்லாவற்றையும் ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து, விசாரித்து செய்யும் தெளிவான நங்கை, தனக்கு கணவனாக போகிறவனின் வேலை பற்றி ஏன் ஒன்றுமே கேட்கவில்லை.

பொற்செழியனுக்காக, நங்கையிடம் வாதாடிய அனைவருமே இந்த ஒரு விஷயத்தை யோசிக்க மறந்து இருந்தனர்.

என்ன காரணமாக இருக்கும் மக்களே?????

பொற்செழியனுக்கோ அங்கு நிற்க கூட நேரம் இல்லாமல், நிறைய வேலைகள் வரிசை கட்டி காத்திருந்தன.

கைப்பற்றிய மருந்துகள், மந்திரியின் மச்சான் இதை பற்றி குடித்து விட்டு, வேறு ஒருவனிடம் உளரிய ஒலி பதிவு, தாங்கள் சேகரித்த மற்ற ஆதாரங்கள் என எல்லாவற்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தான்.

அந்த மருந்தகங்கள் எல்லாம் அவரின் பினாமி பெயரில் இயங்குபவை என்பதற்கும் ஆதாரம் சேகரித்து இருக்க, மந்திரிக்கு எதிரான வலுவான ஆதாரமாக நீதிமன்றத்தில் அதையும் சமர்ப்பித்தான் பொற்செழியன்.

எப்படியும் அந்த மந்திரி வாய்தா, வாய்தா என்று குறைந்து பத்து, இருபது வருஷம் இந்த வழக்கை இழுத்தடிக்க போவது உறுதி.

எனவே குறைந்தபட்சம், தன் தொழிற்சாலை என்றும் பாராமல், தவறை தடுக்க நினைத்த ‘பி.எஸ்’-க்காக, அவனின் தொழிற்சாலையை, இந்த வழக்கில் சிக்காமல் இருக்க தேவையானவற்றை செய்தான்.

இந்த வழக்கை ஏற்று வடமாநிலத்தில் இருந்து, பொற்செழியன் இங்கு வந்த போது விஜய்,

“பி.எஸ் என்னோட சைல்ட்குட் பிரின்ட் செழியா, இந்த பிராபளம் பத்தி என் கிட்ட டிஸ்கஸ் பண்ணான், ஆனா என் கிட்ட சொல்லாமலே உங்க டிபார்ட்மெண்ட்ல சீக்ரெட் அஹ கம்பிளையின்ட் கொடுத்ததுட்டான்”

என்று கோவம் தெறிக்க சொன்னவன், சிறுது இடைவெளி விட்டு,

“அந்த மினிஸ்டர் ஆளுங்க கிட்டத்தட்ட எல்லா இடத்துலயும் இருக்காங்க, அவன் கம்பிளையின்ட் கொடுத்தது உன்கிட்ட தானு தெரிஞ்சதும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு, வேற யாரையும் நம்ப முடியாது பாரு”

என்று சொல்லியது, இப்போதும் பொற்செழியனின் காதில் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.

இந்த வழக்கு மிக இரகசியமாக விசாரிக்கபட வேண்டியதால் தான், பொற்செழியன் இங்கு வந்ததை வெளிப்படையாக யாருக்கும் தெரிவிக்கவில்லை.

தன் துறையின் உதவியை நேரடியாக பெற முடியாத சூழல் என்பதால் தான், தன்னுடன் ஆசிரமத்தில் வளர்ந்த, கணினியில் புலிகளான வெற்றி மற்றும் தமிழின் உதவியை நாடினான் பொற்செழியன்.

பொற்செழியனை விட சிரியவர்களான அவர்கள் இருவருக்கும் அவனே முன்மாதிரி. அவர்களும் இப்போது இவனை போலவே சிவில் தேர்வு எழுதிவிட்டு, அதன் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே ஒரு முறை எழுதி தோற்று இருக்க, இந்த முறை எப்படியும் வெற்றி பெறுவார்கள் என்பது பொற்செழியனின் நம்பிக்கை.

அதுபோக பொற்செழியன், வெற்றி மற்றும் தமிழ் மூவரும் படித்தது, ‘பி.எஸ்’ குடும்பத்தின் தொண்டு நிறுவனம் மூலமாக தான்.

எனவே தாங்கள் பெற்ற உதவிக்கு கைமாறு செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்க, ‘பி.எஸ்’- இன் தொழிற்சாலையை காக்கும் பொறுப்பை, மனம் உவந்தே ஏற்று கொண்டனர் மூவரும்.

கிட்டத்தட்ட மூன்று மாதமாக போராடி, தன் கடமையை நிறைவாக முடித்த திருப்தியுடன் பொற்செழியன் வீட்டிற்கு திரும்பும் போது, மணி ஏழு.

சிறப்பு வகுப்பு பிள்ளைகளும் இல்லாமல், வீட்டில் நிறைந்து இருந்த அமைதி கொஞ்சம் கிலியை தர, சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே உள்ளே நுழைந்தான் பொற்செழியன்.

கூடத்தில் யாரும் இல்லாமல் போக, தங்களின் அறைக்கு செல்ல அங்கு நங்கை, மடிக்கணினியில் எதையோ தீவிரமாக பார்த்து கொண்டிருந்தாள்.

இவன் உள்ளே நுழைந்ததும் நிமிர்ந்து இவனை ஒரு பார்வை பார்த்தவள், மீண்டும் மடிக்கணினியை பார்க்க, பயத்தில் எச்சில் விழுங்கிய பொற்செழியன்,

“கண்ணம்மா”

என்று விளிக்க, வெறும் காற்று மட்டும் தான் வந்தது. ஆனால் இவன் அழைத்ததை உணர்ந்து நிமிர்ந்து பார்த்த நங்கை, பார்வையிலே ‘என்ன’ என்று கேட்க, அதில் தடுமாறியவன்,

“அது வந்து, அது வந்து, ஹான் ஏன் டோர் அஹ லாக் பண்ணாம, இங்க உள்ளே இருக்க, யாராவது வந்தா கூட தெரியாது இல்ல”

என்று வாயில் வந்ததை கேட்டு வைக்க, அவளோ வெகு நிதானமாக,

“போலீஸ் வீட்டுக்குள்ள வர யாருக்கு தைரியம் இருக்கு”

என்று கேட்க, பொற்செழியன் உதடு கடித்து தலைகுனிய, அவனை ஒரு நிமிடம் நின்று பார்த்த நங்கை ஒரு பெருமூச்சுடன்,

“போய் பிரெஷ் ஆகிட்டு வாங்க, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”

என்று குரலில் எதுவும் காட்டாமல் சொல்ல, இன்று முழுக்க உணவு உண்ண கூட நேரம் கிடைக்காமல், கலைத்து வந்து இருந்த பொற்செழியனும், நல்ல பிள்ளையாக அவள் சொன்னபடி செய்து வந்தான்.

உணவு உண்ண கூடத்தில் அமர, அப்போது தான் நன்மாறனும் வீட்டில் என்பது உரைக்க, மெதுவாக,

“மாறன் எங்க கண்ணம்மா”

என அவளோ, கையில் வைத்து ஆட்டி கொண்டிருந்த கரண்டியை பார்த்தவாறு,

“ஆயா வீட்டுக்கு போய் இருக்கான், அவனுக்கு சாப்பாடு கொடுத்து அங்கேயே தூங்கு சொல்லிடுறதா ஆயா சொன்னாங்க”

என்று சொல்ல, அதை கேட்ட பொற்செழியனின் மனசாட்சியோ,

“ரை…ட்..டு அய்யோ, அம்மானு கத்துனாலும் காப்பாத்த யாரும் இல்லை, இன்னைக்கு நம்ப கதை ஓ..வ..ர், ஓ..வ..ர்”

என்று புலம்ப, அதை கேட்ட பொற்செழியனுக்கு தொண்டை குழியில் உணவு சிக்க கொள்ள, ‘லொக், லொக்’ என இரும்ப ஆரம்பித்தான்.

கையில் இருந்த கரண்டியை சுத்தமாக மறந்து போன நங்கை, அதை கொண்டே அவனின் தலையில் தட்ட முனைய,

“அய்யோ, அம்மா”

என்று அலறியபடி பொற்செழியன் நகர்ந்து அமர, அப்போது தான் தன் கையை பார்த்த நங்கை,

“எதுக்கு இப்படி கத்தி மானத்தை வாங்குறீங்க, மூச்”

என்று மிரட்டல் போட, இருமலோடு பொற்செழியன் வாயில் கை வைத்து மூடி, அப்பாவியாய் பார்க்க, அவனின் பாவனையில் நங்கைக்கு ஒரு பக்கம் சிரிப்பு வர, மறு பக்கம் பாவமாக வேறு இருந்தது.

என்றபோதிலும் எந்த பாவத்தையும் வெளிக்காட்டாமல், தன்னை இறுக்கமாக காட்டி கொண்டவள், தன் கையை கொண்டு அவனின் தலையில் தட்ட, கொஞ்சம் கொஞ்சமாக இருமல் நின்றது.

ஒரு வழியாக பொற்செழியன் உண்டு முடிக்க, எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு வந்த நங்கை, அவன் முன் வந்து அமர்ந்தாள்.

அமர்ந்தவள் கண் எடுக்காமல் இவனின் முகத்தையே பார்க்க, எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது புரியாமல் குழம்பி தான் போய் விட்டான் பொற்செழியன்.

இருந்தும் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் சொல்ல முடிவு செய்தவன்,

“பைவ் இயர் முன்னாடி நீ டெக் பார்க்ல, **** கம்பனில தானே ஒர்க் பண்ண, அப்போவே எனக்கு உன்னை தெரியும்”

என்று சொல்ல, அதில் ஆச்சர்யமான நங்கை,

“உங்களுக்கும் என்னை தெரியுமா”

என்று வாயை விட, அவளின் கேள்வியில் வியப்பான பொற்செழியன்,

“உங்களுக்குமானா என்ன அர்த்தம், அப்போ உனக்கும் என்னை தெரியுமா”

என்று கேட்க, மானசீகமாக தன் தலையில் கொட்டி கொண்ட நங்கை, வெளியில் விரைப்பாக,

“ஹ்ம்ம் ஆமா, நீங்க அன்னைக்கு கேட்கும் போது சொன்னேன் இல்ல, ஒருத்தரை சைட் அடிச்சி இருக்கேன், அது நீங்க தான்னு, அது இப்போ இல்ல, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி”

என்று சொல்ல, பொற்செழியன் சந்தோஷ மிகுதியில், அவளின் கன்னம் பற்றி முத்தமிட போக, அவளோ அவனின் கையை தட்டிவிட்ட நங்கை,

“பேசி முடிக்கிற வரைக்கும் அங்கேயே உட்காருங்க, கிட்ட வந்திங்க கொன்னுடுவேன்”

என்று மிரட்ட, பொற்செழியனோ அவளை பாவமாக பார்த்து வைத்தான். எத்தனை நாள், தான் அவளுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை என்று வருந்தி இருப்பான்.

இப்போது யோசிக்கும் போது, அன்று அவள் சொல்லும் போதே, தான் தெளிவாக கேட்டு இருக்க வேண்டும் என்று தோன்றியது.

ஏனெனில் அவன் இங்கு வந்த நாட்களில், அவள் யாரையும் நிமிர்ந்து பார்த்ததே கிடையாது. அன்று அவள் தன்னை பார்த்ததாக சொல்லியதும், அதில் மகிழ்ந்து போய், எவ்வளவு பெரிய விஷயத்தை கோட்டை விட்டு இருக்கிறான்.

அதுவும் இல்லாமல், நங்கை யாரிடமும், அவனின் வேலை பற்றி விசாரிக்க வில்லை என்பதையும் அவன் அறிந்து தான் இருந்தான்.

அதற்கான காரணமும் அவனுக்கு இப்போது தான் புரிந்தது. அவளவள் அவன் முன்பு பார்த்த வேலையில், வேறு நிறுவனத்தில் பணி புரிகிறான் என்று நினைத்திருக்கிறாள்.

Advertisement