Advertisement

இரவு முழுக்க சரியாக தூங்காமல், ஏதோ எதோ புரியாத கனவுகள் பயத்தை தர, எழும் போதே, தலை வலியுடன் தான் எழுந்தாள் நங்கை.

இருந்த போதும் தன் வழக்கமான நேரத்திற்கு எழுந்து, தன் அன்றாட வேலைகளை பார்த்து கொண்டிருக்க, அவளின் மனமோ, தன்னவனின் வரவுக்காக காத்திருந்தது.

ஆனால் அவள் அலுவலகம் கிளம்பும் நேரம் வந்த பிறகும், அவளின் கணவன் வராமல் போக, ஏனோ தன்னவனின் குரலையாவது கேட்க வேண்டும் என்று தோன்ற, கைபேசியை எடுத்து அவனுக்கு அழைத்து விட்டாள் நங்கை.

ஆனால் அவளின் அழைப்பு முழுமையாக சென்று, அவளவன் ஏற்கமலே முடிய, மனதின் ஓரம் பாரம் இன்னும் கூட, மீண்டும், மீண்டும் தன் தலைவனுக்கு விடாமல் அழைப்பு விடுத்தால் நங்கை.

அங்கு பொற்செழியனோ இரவு நடுநிசி தாண்டி, ஒரு கையால் வேலை பார்த்துவிட்டு, அதன் பிறகு, மருத்துவர் கொடுத்திருந்த வலிநிவாரணியை எடுத்து கொண்டதால், ஆழந்த உறக்கத்தில் இருந்தான்.

அவனின் கைப்பேசி விடாமல் அடித்த சத்தத்தில், அருகில் உறங்கி கொண்டிருந்த வெற்றி தான் உறக்கம் கலைந்து எழுந்தான்.

அழைப்பவரின் பெயரை பார்த்தவன், அழைப்பை ஏற்பதா, வேண்டாமா என்ற யோசனையிலே இருக்க, கைப்பேசியோ விடாமல் அலறி கொண்டிருக்க, வேறு வழி இல்லாமல்,

“ஹெலோ அண்ணி”

என்று அழைப்பை ஏற்று மரியாதையாக விளிக்க, அழைப்பு ஏற்க பட்டதும், தன்னவனின் குரலுக்காக காத்திருந்த நங்கைக்கு வெற்றியின் குரல் ஏமாற்றத்தை தர, தன்னை சமாளித்து கொண்டு,

“நீங்க…..”

நேரில் இருமுறை பார்த்திருந்தாலும், குரலை வைத்தே அது வெற்றியா இல்லை தமிழா என்று கண்டுபிடிக்கும் அளவுக்கு அவர்கள் இவளுக்கு பரிச்சயம் இல்லையே, எனவே யாரென்று தெரியாமல் இழுக்க, அவனோ,

“நான் வெற்றி அண்ணி, உங்க மேரேஜ்கு கூட வந்து இருந்தனே”

என்று சொல்ல, நங்கை,

“ஹான் வெற்றி நல்லா இருக்கீங்களா”

என்று சம்பிரதாயமாக கேட்க, வெற்றியோ,

“நான் நல்லா இருக்கேன் அண்ணி, நைட் ரொம்ப லேட்டா தான் ஒர்க் முடிச்சிட்டு தூங்குனோம், அண்ணா அசந்து தூங்குறாங்க, அதான் நான் போன் அட்டெண்ட் பண்ணேன்”

என்று தான் அழைப்பை ஏற்றதற்கான காரணத்தை விளக்க, நங்கையோ,

“ஓஓஓ அப்படியா”

என்றவள், அடுத்து எதுவும் பேசவும் இல்லை, அதே நேரம் அழைப்பை துண்டிக்கவும் இல்லை. அந்த பக்கம் இருந்த வெற்றியோ, என்ன செய்வது என்று புரியாமல்,

“எதாவது முக்கியமான விஷயமா அண்ணி, நான் வேணா அண்ணாவை எழுப்பட்டுமா”

என்று ஒருவேளை காலை வேளையில் விடாமல் அழைத்ததால், ஏதும் அவசரமோ, தன்னிடம் சொல்ல தயங்குகிறார்களோ என்று நினைத்து கேட்க, நங்கையோ,

“இல்ல, இல்ல வேணாம் வெற்றி, அவரு எழுந்ததும் எனக்கு கால் பண்ண சொல்லுங்க, நான் வைக்கிறேன் வெற்றி”

என்றவள் அழைப்பை துண்டித்து விட்டு, தன்னை பார்த்துக் கொண்டிருந்த நன்மாறனிடம்,

“உன்னோட மாமா நைட் ஒர்க் பண்ணிட்டு இன்னும் தூங்குறாங்க போல, நீ எப்பவும் போல சாவியை ஆயா வீட்டுல கொடுத்துடு மாறா”

என்று சொல்ல, நன்மாறனும் வேறு எதுவும் கேட்காமல், ‘சரி’ என்று சம்மதமாக தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

வீட்டின் சாவி ஒன்று நங்கையிடம் இருக்க, நன்மாறன், பொற்செழியன், இவர்கள் இருவரில் யார் கடைசியாக கிளம்புகிறார்களோ, அவர்கள் தேவி பாட்டியிடம் வீட்டின் சாவியை கொடுத்து செல்வது தான் அவர்களின் வழமை.

நங்கையும் தன் மன கலக்கத்தை எல்லாம், வழக்கம் போல சின்னவனிடம் வெளிக்காட்டி கொள்ளாமல், வேலைக்கு கிளம்பி விட்டாள்.

ஒருவேளை பொற்செழியனை பார்த்து, அவனின் நலத்தை தன் கண்களால் உறுதி செய்து இருந்தால், அவள் சரியாகி இருப்பாளோ என்னவோ.

அதற்கு வழி இல்லாமல் போக, நங்கை தீரா தலைவலியுடன் அலுவலகம் சென்றடைய, அதேநேரம் அங்கு துயில் கலைந்தான் பொற்செழியன்.

அவன் எழுந்ததும், நங்கை அழைத்ததை சொன்ன வெற்றி, முதல் வேலையாக பொற்செழியனை அவளுக்கு அழைத்து பேச சொன்னான்.

பொற்செழியனோ அதிகமாக பேசி, நேற்று நடந்ததை பற்றி தன்னவள் கேட்டால், அவளிடம் பொய்யுரைக்கவும் முடியாது, அதே சமயம் இப்போது உண்மையை சொல்லவும் முடியாது.

எனவே அவளுக்கு அழைத்தவன், பொதுவாக இரண்டு வார்த்தை பேசி, அவளின் நலத்தை உறுதி செய்து கொண்டு, அதிகம் பேசாமல் வைத்து விட்டான்.

அழுவலகத்தில் இருந்த நங்கைக்கும் பெரிதாக எதுவும் பேச முடியாமல் போக, அவனின் வாஞ்சையான குரலே, அவளை அமைதியடைய செய்ய, அதன் பிறகே தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

இங்கு பொற்செழியனோ, அவளிடம் பேசி முடித்தவன், தன் இரத்தம் தோய்ந்த சட்டையை அங்கேயே போட்டு விட்டு, வெற்றியின் சட்டை ஒன்றை வாங்கி அணிந்து கொண்டான்.

கைக்கு அதிகம் வேலை கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர் சொன்னதால், இருசக்கர வாகனத்தை தமிழ் ஓட்ட, இவன் பின் அமர்ந்து வீட்டிற்கு கிளம்பினான்.

வந்தவன் தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, வேறு உடை அணிந்து, மடிக்கணினியை எடுத்து கொண்டு, நங்கை அவனுக்காக தயார் செய்து வைத்திருந்த உணவு டப்பாவையும் மறக்காமல் எடுத்து கொண்டான்.

அந்த நாள் முழுக்க, முழுக்க நால்வருக்கும் பரபரப்பாகவே செல்ல, நாளைக்கு செய்ய வேண்டியது எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து விட்டு, பொற்செழியன் இரவு வீட்டிற்கு வரும் போது மணி பத்து.

உறங்காமல் இவனுக்காக காத்திருந்த நங்கை, இவன் உள்ளே நுழைந்ததும், இவனின் தலை முதல் கால் வரை பார்வையால் அலசி, அவனுக்கு ஒன்றும் இல்லை என்பதை தான் முதலில் உறுதி செய்து கொண்டாள்.

அவன் அணிந்திருந்த முழுக்கை சட்டை, அவனின் தோள் பட்டையில் இருந்த கட்டை மறைக்க, நங்கைக்கு அவனுக்கு அடிபட்டது தெரியவில்லை.

நேற்றைய இரத்த விரயம், தொடர்ந்த வேலை என்று பொற்செழியன் வதங்கி போய் இருக்க, அவனின் சோர்வை வேலை பளு என்று நினைத்த நங்கை,

“கை கால் கழுவிட்டு, சாப்பிட வாங்க”

என்று சொல்ல, அவனும் மறுபேச்சு இல்லாமல் அவள் சொன்னதை செய்து விட்டு வந்து, உண்ண அமர்ந்தவன், ஒரே ஒரு தட்டு மட்டும் இருக்க,

“நீ சாப்டியா கண்ணம்மா”

என, ஒரே ஒரு நாள் அவனை பார்க்காதது, ஏதோ பல நாள் பிரிவை போல தோற்ற மயக்கம் தர, அவனின் பிரேத்யேக அழைப்பான ‘கண்ணம்மா’ கண்களை கலங்க செய்ய, சமாளித்து கொண்டு,

“ஹ்ம்ம் மாறன் சாப்பிடப்போ அவன் கூடவே சேர்ந்து சாப்பிட்டுட்டேன்”

என்று நங்கை சொல்ல, அமைதியாக உண்டு முடித்து எழுந்த பொற்செழியன், நங்கையை பார்த்து,

“செம டையர்ட் அஹ இருக்கு கண்ணம்மா, நான் போய் தூங்குறேன்”

என்றவன், நங்கையின் பதிலுக்கு காத்திருக்காமல், அவர்களின் அறைக்குள் சென்று மறைந்து இருந்தான்.

நங்கை எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு, அவர்களின் அறைக்கு வரும் போது, பொற்செழியன் நித்ரா தேவியிடம் அடைக்கலம் புகுந்து இருந்தான்.

அவனின் அருகில் அமர்ந்து, அவனின் தலை கோதிய நங்கைக்கு, கேட்க கேள்விகள் நிறையவே இருந்தன.

தன்னுடைய கேள்விகளை தவிர்க்க பொற்செழியன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் என்று அவளுக்கு புரியாமல் இல்லை.

ஆனால் இப்படி எத்தனை நாள் தவிர்க்க முடியும் என்பது தான் புரியவில்லை. அது போக, அப்படி என்னவாக இருக்கும் என்ற யோசனையும் ஒரு பக்கம் நீண்டது.

பதில் சொல்ல வேண்டியவன் ஆழந்த உறக்கத்தில் இருக்க, கேள்விகளோடு தான் விழித்திருப்பதால் எதுவும் மாற போவதில்லை என்பது புரிய, ஒரு பெரு மூச்சுடன் அவளும், அவன் அருகே படுத்து உறங்கி விட்டாள்.

மறுநாள் தன் வழக்கமான நேரத்திற்கு கண் விழித்த நங்கை எழ முயல, அவளை தடுத்து தன் அணைப்பில் கொண்டு வந்த பொற்செழியன், கண்களை திறக்காமலே,

“கண்ணம்மா, இன்னைக்கு ஆபிஸ்க்கு லீவ் போட முடியுமா”

என்று கேட்க, அவனை யோசனையுடன் பார்த்த நங்கை,

“ஹ்ம்ம் லீவ் சொல்லனும்னா சொல்லலாம், ஆனா ஏன்”

என்று காரணம் கேட்க, தன் அணைப்பில் இருந்த மனைவியின் நெற்றியில் இதழ் ஒற்றிய பொற்செழியன், இன்னமும் கண்களை திறக்காமல்,

“உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் அதான்”

என்று புதிர்போட, அதற்கு எதற்காக அலுவலகம் விடுப்பு எடுக்க வேண்டும் என்று புரியாமல்,

“அதுக்கு எதுக்கு ஆபிஸ் லீவ் போடணும், இப்போவே சொல்லுங்க”

என்று கேட்க, தன் அணைப்பை இறுக்கிய பொற்செழியன், ஒரு நிமிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தவன், பின்பு,

“இல்லடா இப்போ சொல்ல முடியாது, மார்னிங் எனக்கு முக்கியமான வேலை ஒன்னு இருக்கு, அதை முடிச்சிட்டு வந்து சொல்றனே, நீ லீவ் போடேன்”

என்று அவளின் கண்ணோடு கண் பார்த்து சொல்ல, அவனின் பாவத்தில், விஷயம் பெரியது என்று நங்கையின் உள்ளுணர்வு எச்சரிக்கை செய்ய, அவளும்,

“ஹ்ம்ம் சரிங்க லீவ் சொல்லிடுறேன்”

என்று சொல்ல, மீண்டும் அவளின் நெற்றியில் இதழ் ஒற்றியவன், ஏதோ யோசித்தவனாக மீண்டும்,

“ஹான் மாறனையும் ஸ்கூல் லீவ் போட சொல்லிடு கண்ணம்மா”

என்று சொல்ல, நங்கை அவனை கேள்வியோடு பார்க்க, அவனோ கண்களில் இறைஞ்சலோடு பார்க்க, எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்று விட்டாள் நங்கை.

நங்கை சென்றதும், விட்டத்தை பார்த்து கொஞ்ச நேரம் படுத்திருந்த பொற்செழியனும், பின்பு எழுந்து காயத்தில் தண்ணீர் படாமல் குளித்து விட்டு வந்தான்.

அடர் நீல நிற சட்டையை அணிந்து, மணல் நிற பேண்ட் அணிந்து தயாரானவன், வழக்கம் போல வெளியே செல்லாமல், அறையில் இருந்தே நங்கையின் பெயரை சொல்லி உரக்க அழைத்தான்.

இது வரை பொற்செழியன் இப்படி எல்லாம் அழைத்தது இல்லை என்பதால் நங்கை என்னவோ ஏதோ என்று வர, அவள் உள்ளே வந்ததும் கதவை சாற்றியவன், அடுத்த நொடி அவளின் அதரங்களில் புதைந்து இருந்தான்.

ஒரு நீண்ட நெடிய முத்தம்.

தன்னவளின் அழைப்புறுதலை குறைக்க கொடுத்தானா இல்லை தன் நெஞ்சின் ஓரம் இருக்கும் பயத்தை குறைக்க கொடுத்தானோ, அவன் மட்டுமே அறிவான்.

தன் எதிர்பாராத முத்தத்தில் திகைத்த நின்ற நங்கையை, இறுக்கமாக அணைத்து, அவளின் காதோரம் தன் மொத்த காதலையும் குரலில் குழைத்து,

“லவ் யூ கண்ணம்மா”

என்றவன், சிறிது நேரம் அவளை அணைத்தபடி அப்படியே நின்றான். பின் தன் அணைப்பை விடுவித்து, அவளின் நெற்றியோடு, நெற்றி முட்டியவன்,

“நான் கிளம்புறேன்டா”

என்று உரைத்துவன், அறையின் வாசல் வரை சென்று, ஒரு முறை திரும்பி பார்த்தவன், பின்பு விடு விடுவென வெளியே சென்று விட்டான்.

நங்கை தன்னை நிதானபடுத்தி கொண்டு வெளியே வரும் போது, பொற்செழியன் அங்கு இல்லை.

அடுத்த இரண்டு மணி நேரத்தில், சென்னையில் இருக்கும் பல மருந்தங்களில், ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட, எங்கும் ஒரே பரபரப்பு.

அதுவும் சோதனையில் மிக அதிக அளவில் போதை மருந்து சிக்கி இருப்பதாகவும், மந்திரிக்கு அதில் தொடர்வு இருப்பதாகவும் செய்திகள் வேறு கசிய, நிலைமை இன்னும் சூடு பிடித்தது.

தொலைக்காட்சிகள் அனைத்திலும் முக்கிய செய்தியாக, சோதனைக்குள்ளான மருந்தங்களே காட்டப்பட்டன.

வீட்டில் இருந்த வேலைகளும் முடிந்து விட, மனம் அதன் போக்கில் எதை எதையோ யோசிக்க, கவனத்தை திசை திருப்ப எண்ணி தொலைக்காட்சியை உயிர்பித்தால் நங்கை.

தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் எதிலும் மனம் இலயிக்காமல் போக, அலைவரிசையை மாற்றி கொண்டே வந்தவள் கண்ணில், முக்கிய செய்தி என்ற வாசகமும், அதற்குரிய பரபரப்பான இசையும் கேட்க, அந்த அலைவரிசையையே வைத்தாள்.

நங்கை பார்த்து கொண்டிருக்கும் போதே, பல மருந்தங்கள் பல கோணத்தில் ஒளிபரப்பான காட்சி மாறி, நேரலையாக ஒருவருடைய பேட்டியை ஒளிபரப்ப ஆரம்பித்தனர்.

அசட்டையாக மீண்டும் தொலைக்காட்சியின் அலைவரிசையை மாற்ற போன நங்கையின் கண்கள், சட்டென திரையில் தோன்றிய பிம்பத்திலும், அதன் கீழ் வந்த வாசகத்திலும் அப்படியே நிலைத்து நின்றது.

தன் அறையில் படித்து கொண்டிருந்த மாறனும், தொலைக்காட்சியின் ஓசை கேட்டு, வெளியே வந்தான்.

வந்தவன் தொலைக்காட்சியையும், தன் தமக்கையையும் மாற்றி மாற்றி பார்த்தபடி, அப்படியே நின்றான்.

திரையிலோ காலை வீட்டில் இருந்து அணிந்து சென்றிருந்த அடர் நீல நிற சட்டையில் கம்பீரமாக, விஜய்யின் அருகில் நின்று கொண்டிருந்தான் பொற்செழியன்.

பத்திரிக்கை நிருபர்கள், தொலைக்காட்சியின் களப்பணியாளர்கள் அவன் முன் பல மைக்யை நீட்டி,

“சார் திடீர்னு மெடிக்கல் ஷாப்ல ரெய்டு பண்ண என்ன காரணம்”

என ஒருவர் கேட்க, பொற்செழியன் நிதானமாக,

“இல்லீகள் ட்ரக்ஸ் சேல் பண்றதா எங்களுக்கு வந்த இன்பர்மேஷன்ல தான் ரெய்டு பண்ணோம்”

என இன்னொருவர்,

“ஹெராயின், கொக்கையின் இந்த மாதிரி ட்ரக்ஸ் எதுவும் ரெய்டுல கிடைக்கலனு சொல்றாங்களே, உண்மையா”

என பொற்செழியன்,

“ஆமா, அந்த மாதிரி எதுவும் கிடைக்கல, பட் * பெயின் கில்லர் டேப்லெட் நிறைய சீஸ் பண்ணி இருக்கோம்”

என்று சொல்ல, இன்னொரு நிருபர்,

“எதிர்பார்த்த மாதிரி ட்ரக்ஸ் இல்லாம, வெறும் டேப்லெட் தான் கிடைச்சிருக்கு, உங்களோட பர்தர் மூவ் என்ன சார்”

என்று கேட்க, சுற்றி நின்ற அனைவரையும் ஒரு பார்வை பார்த்த பொற்செழியன்,

“அந்த டேப்லெட் அஹ பாரின்ல ட்ரக்ஸ்கு ஆல்டர்நெட் அஹ யூஸ் பண்றாங்க, இவங்களும் அந்த மோட்டிவ்வோட தான் அதை பதுக்கி இருப்பாங்கன்னு நாங்க சந்தேகப்படுறோம்”

என்று விளக்கமாக சொல்ல, அதற்குள் அந்த மருந்தை இணையத்தில் தேடி பார்த்த நிருபர் ஒருவர்,

“அது வெறும் சாதாரண பெயின் கில்லர், டாக்டர் பிரிஸ்கரைப் பண்ற மெடிசன் தானு நெட்ல போட்டு இருக்கே சார்”

என்று சொல்ல, கொஞ்சம் கடுப்பான பொற்செழியன்,

“அதையே தான் நானும் சொல்றேன் மிஸ்டர், டாக்டர் கொடுக்குற மெடிசன் தான், பட் தப்பாவும் யூஸ் பண்ண முடியும், அப்படி இல்லன்னா அதை கணக்கில் காட்டாமல் பதுக்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு”

என்று காட்டாமாக கேட்க, இன்னொரு நிருபரோ,

“சந்தேகம் தான் சொல்றிங்க, அப்போ ஏவிடன்ஸ் எதுவும் இல்லையா”

என, பொற்செழியனோ,

“சில ஆடியோ, வீடியோ புட்டேஜேஜஸ் கிடைச்சி இருக்கு”

என்று மட்டும் சொன்னவன், ஆதாரங்களை பற்றி விரிவாக ஏதும் சொல்லாமல் இருக்க, இன்னொரு நிருபர்,

“அந்த டேப்லெட் எல்லாம் கம்பனில ப்ரோடியூஸ் பண்ணதாமே, அப்போ அந்த கம்பெனிக்கு சீல் வைப்பீங்களா”

என்று கேட்க, பொற்செழியனோ,

“அந்த கம்பனி எம்.டி மிஸ்டர் பி.எஸ் எங்க டிபார்ட்மெண்ட்கு கொடுத்த புகார் அடிப்படையில் நாங்க இன்வெஸ்டிகேட் பண்ணதால் தான், இவ்ளோ பெரிய குற்றத்தை எங்களால கண்டுபிடிக்க முடிஞ்சது”

என்று சொல்ல, முன்னால் பேசிய நிருபர் மீண்டும்,

“அப்போ அந்த பார்மா கம்பெனி மேல எந்த ஆக்ஷனும் எடுக்க மாட்டிங்களா”

என்று இவனை சிக்க வைக்க கேள்வியை மாற்றி போட, பொற்செழியனோ எத்தனாக,

“அப்படி சொல்லல மிஸ்டர், கம்பனியோட பைவ் பெர்ஸன்ட் எம்ப்ளாய்ஸ், எம்.டி-க்கு தெரியாம, வேறு ஒருவருடைய தூண்டுதல் பேரில் இதை செய்து இருக்காங்க, தப்பு செய்ஞ்சவங்க, அதற்கு துணை போனாவங்கனு எல்லாரும் கண்டிப்பா தண்டிக்க படுவாங்க”

என்று மட்டும் சொல்ல, இன்னோரு நிருபர்,

“இதுல மினிஸ்டர் சம்பந்தப்பட்டு இருக்கிறதா சொல்றாங்களே சார் உண்மையா”

என்று கேட்க, பொற்செழியனோ மேலோட்டமாக,

“நாங்க கலெக்ட் பண்ண எவிடன்ஸ் அஹ கோர்ட்ல சமிட் பண்ணிடுவோம், கோர்ட் தான் முடிவு பண்ணனும், அவருக்கு அதுல சம்பந்தம் இருக்கா இல்லையான்னு”

என்றவன் பட்டும் படாமல் பேச, மற்றொரு நிருபர்,

“ஒரு வேளை அந்த ட்ரக்ஸ் சென்னைல யூஸ் பண்ண ஆரம்பிச்சு இருந்தா, அதோட தாக்கம் எப்படி இருந்து இருக்கும்னு சொல்ல முடியுமா சார்”

என பொற்செழியனோ,

“இந்தியால பஞ்சாப்ல தான் ட்ரக்ஸ் அபியூஸ்ல பர்ஸ்ட் பிளேஸ்ல இருக்கு, இதை இப்போ கண்டு பிடிக்காம இருந்து இருந்தா, நாம பர்ஸ்ட் ப்ளேஸ்கு வந்து இருப்போம், அதோட நிறைய உயிர் இழப்பும் நடந்து இருக்கும், ஏனா நாங்க சீஸ் பண்ணி இருக்குறது மெடிசன், அளவு கொஞ்சம் அதிகமானாலும் உயிரே போய்டும்”

என அவர்களின் கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாக பதில் அளித்தவன், அவர்களாக கேள்வியை நிறுத்துவார்கள் என்று தோணாமல் போக, விஜய்யும் அவனின் காதில் ஏதோ சொல்ல,

“ஓக்கே இதோட போதும், தேங்யூ”

என்ற பொற்செழியன், அங்கிருந்து விஜய்யுடன் கிளம்ப அதோடு நேரலை முடிவுக்கு வந்தது. நன்மாறன் தன் மாமனை பெருமையாக பார்த்து கொண்டிருந்தான்.

ஆனால் நங்கையோ இவ்வளவு நேரம் ஒளிபரப்பானது எல்லாம் காதில் விழுந்தாலும், அது எல்லாம் தன் கருத்தில் பதியாமல் போக, அவளின் எண்ணம் எல்லாம்,

“பொற்செழியன் ஐ.பி.எஸ், போதை மருந்து தடுப்பு துறை சிறப்பு அதிகாரி”

என்று தன்னவனின் பிம்பத்தின் கீழ், தான் பார்த்த தன்னவனின் பதவியிலே உறைந்து நின்றது.

கண்ணம்மாவின் காந்தன் (காவலன்)……..

Advertisement