Advertisement

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் நங்கை, சிறப்பு வகுப்பு பிள்ளைகளுடன் ஒன்றிவிட, நன்மாறனும் பாடத்தை எடுத்து வைத்து கொண்டு உட்கார்ந்து விட்டான்.

மடிக்கணினியை திறந்து வைத்து கொண்டு அமர்ந்திருந்த பொற்செழியனுக்கு தான், நங்கை கேட்டதே ஓடி கொண்டிருந்தது.

எப்படியும் இந்த மருந்து தொழிற்சாலை வேலை முடியும் வரை தான், நங்கையிடம் தன் அடையாளத்தை மறைக்க முடியும்.

அதன்பிறகு தான் சொல்ல வில்லை என்றாலும், எப்படியும் நங்கைக்கு தெரிந்து விடும். அதை இன்றே சொல்லி விட்டால் என்ன தீவிரமாக யோசித்தப்படி இருந்தான்.

வகுப்பும் முடிந்து பிள்ளைகளும் வீடு திரும்பி விட, காலை வைத்த குழம்பை, குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து சூடு பண்ணி, இட்லி சுட்டு மூவரும் இரவு உணவையும் முடித்தனர்.

கல்யாணம் முடிந்த கையோடு, மாடியில் இருந்த தன் சொற்ப பொருட்ளையும், கீழ் வீட்டிற்கு மாற்றி இருந்தான் பொற்செழியன்.

அந்த வீடு இப்போது காலியாக இருக்க, புதுமண தம்பதிகளை அங்கேயோ அல்லது நன்மாறனை தங்கள் வீட்டில் இரவு உறங்கவோ சொன்னார் தேவி பாட்டி.

சில நாட்களுக்கேனும் புதுமண தம்பதிகளுக்கு தனிமை தரும் எண்ணம் கொண்டு, அவர் சொல்ல, பொற்செழியனோ இரண்டையும் மறுத்து விட்டான்.

இந்த திருமணத்தால், எந்த இடத்திலும் நன்மாறன் தனிமையை உணர கூடாது என்பதில் பொற்செழியன் உறுதியாக இருந்தான்.

தான் அவனுக்கு அன்பான இன்னொரு உறவாக வேண்டுமே ஒழிய, அவனின் ஒரே உறவான தமக்கையை அவனிடம் இருந்து பிரித்தாக இருக்க கூடாது என்பதில் திண்ணமாக இருந்தான்.

வேறு வழி இல்லாமல், அந்த வீட்டின், சிறிய அறையை நன்மாறன் எடுத்து கொள்ள, உணவு முடிந்ததும், தன் அறைக்கு சென்று படுத்து விட்டான்.

நங்கையும் கதவை எல்லாம் பூட்டி விட்டு வர, மடிக்கணினியை திறந்து ஏதோ செய்து கொண்டிருந்த பொற்செழியன்,

“கண்ணம்மா”

என்று அழைக்க, எப்பொழுதும் போல இப்பொழுதும் அந்த விளிப்பு தித்திப்பாய் உள்ளுக்குள் இறங்க, அவனை நெருங்கிய நங்கை,

“என்னங்க”

என, அவளின் கை பிடித்து, அருகில் அமர்த்தி கொண்ட பொற்செழியன்,

“நீ கோவில்ல இருந்து வரும் போது என்னோட பேங்க் பாஸ் புக் கேட்ட இல்ல, எவ்ளோ சேவிங்ஸ் நான் வச்சி இருக்கேனு பார்க்க”

என்று சொல்ல, அதை பற்றி சுத்தமாக மறந்தே போய் இருந்த நங்கை ஏதோ சொல்ல வர, அவளை பேசவிடாத பொற்செழியன்,

“என்னோட பாஸ்புக்ல எங்க இருக்குனு தெரில, ஏனா நான் அக்கவுண்ட் அஹ நெட் பேங்கிங்ல தான் மெயின்டெயின் பண்றேன், அக்கவுண்ட் லாகின் பண்ணி இருக்கேன், இந்தா பாரு”

என்று தன் பக்கம் இருந்த மடிக்கணினியின் திரையை அவள் பக்கம் திருப்ப, அந்த திரையின் பக்கம் கண்ணை கூட திருப்பாத நங்கை,

“நான் சும்மா உங்களை கிண்டல் பண்ண தான் கேட்டேன், விளையாட்டுக்கு பேசுறது எது, உண்மையா பேசுறது எதுன்னு கூட உங்களுக்கு தெரில, அய்யோ பாவம்”

என்றவள் பாவனையாக அவனின் கன்னத்தை வேறு வருடி விட, பறக்க துடித்த மனத்தை இழுத்து பிடித்த பொற்செழியன்,

“என்னைக்கா இருந்தாலும் இது நீ தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் தானே”

என்று எல்லாவற்றையும் மனதில் வைத்து சொல்ல, நங்கையோ அதன் உட்பொருள் அறியாமல்,

“இப்போவே தெரிஞ்சிக்கணும்னு என்ன அவசரம், இதை எல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம், லேப்டாப் அஹ எடுத்து வச்சிட்டு வாங்க, தூங்க போகலாம்”

என்று சொல்ல, ‘ஒருவேளை இதற்கு இன்னும் நேரம் வரவில்லையோ’ என்ற எண்ணம் தோன்ற, பெருமூச்சு விட்ட படி, மடிக்கணினியை மூடி விட்டு, தூங்க சென்றான் பொற்செழியன்.

மறுநாள் வழக்கம் போல, நங்கைக்கு சமையலில் உதவியவன், அவளை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு வந்து, நேராக குளியலறைக்கு தான் சென்றான்.

சென்றவன் சிறிது நேரத்தில், ஏற்கனவே தான் துவைத்து வைத்திருந்த துணிகளை எடுத்து கொண்டு, வீட்டின் வெளியே இருந்த கொடியில் உலர்த்த ஆரம்பித்தான்.

அவனின் செயலை காலை நேர பரபரப்பில் இருந்த அக்கம்பக்கத்தினர் எல்லாம், தத்தம் அவசரத்தை மறந்து, அவனையே ஆச்சர்யமாக பார்த்தப்படி நின்றனர்.

பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்த நன்மாறன், துணியும் கையுமாக வந்த பொற்செழியனை, பின்பற்றி வெளியே வந்தவன், அவனின் செயலை பார்த்து ‘ஆ’வென நின்றான்.

பொற்செழியனோ, சுற்றத்தாரையோ, நன்மாறனையோ கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. மும்பரமாக தன் வேலையையே பார்த்து கொண்டிருந்தான்.

பொற்செழியனின் உண்மையான அடையாளம் அறிந்த நன்மாறனோ, அவனின் செயலில் கிட்டத்தட்ட அதிர்ச்சி அடைந்தவனாக, அவனை நெருங்கி,

“என்ன மாமா இது எல்லாம்”

என்று அவன் பிழிந்து கொண்டிருந்த நங்கையின் உடைகளை சுட்டிகாட்டி கேட்க, பொற்செழியனோ கிஞ்சித்தும் அலட்டி கொள்ளாமல்,

“ஏன்டா பார்த்தா தெரியலையா, துணி காய வச்சி கிட்டு இருக்கேன்”

என்று இலகுவாக சொல்ல, இன்னமும் தம் நிலையில் இருந்து மாறாமல் நின்றிருந்த அக்கம்பக்கத்தினரை பார்த்த நன்மாறன்,

“அது தெரியுது, இதை எல்லாம் அக்கா பார்த்துக்க மாட்டாங்களா, நீங்க ஏன் பண்றீங்க”

என்று கேட்க, அப்படி கேட்ட நன்மாறனை புரியாமல் பார்த்த பொற்செழியன்,

“டேய் எனக்கு நிஜமா புரில, இதை உங்க அக்கா தான் பண்ணனும்னு எழுதி வச்சி இருக்கா என்ன, நான் பண்ணா ஆகாதா”

என்று கேட்க, நன்மாறனோ இந்த நூற்றாண்டின் ஆண்களின் பிரதிநிதியாக,

“இது எல்லாம் லேடீஸ் வேலை மாமா, ஜாப்க்கு போறது, பணம் சம்பாரிக்கிறது தான் நம்ப வேலை”

என்று பொற்செழியனுக்கே பாடம் எடுக்க, அவனை நிமிர்ந்து பார்த்த பொற்செழியனின் பார்வையில் அப்பட்டமான ஏமாற்றம்.

தன் தமக்கையை நல்லபடியாக பார்த்து கொள்ள வேண்டும், பெரிய காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற சொன்ன நன்மாறன் பொற்செழியன் கண்முன் வந்து சென்றான்.

நம் சமுதாயத்தை பார்த்து, ‘இது எல்லாம் பெண்களின் வேலை’ என்று மனதில் பதிந்து கொண்டிருக்கும், ஒரு சராசரி ஆண் வர்க்கமாக தான் தெரிந்தான் நன்மாறன், பொற்செழியனின் கண்களுக்கு.

பொற்செழியன் வார்த்தைகள் எதுவும் இன்றி வீசிய பார்வை, நன்மாறனை அசௌகர்யமாக உணர வைக்க,

“என்ன மாமா”

என்று உள்ளே சென்றுவிட்ட குரலில் கேட்க, சட்டென எப்போதும் போல புன்னகையை சூடி கொண்ட பொற்செழியன், விளையாட்டு போலவே,

“இது எல்லாம் லேடீஸ் வேலை, நான் பார்க்க கூடாது சரி, அப்போ நங்கை ஏன் வேலைக்கு போய் பணம் சம்பாரிக்கணும், அது ஆணோட வேலை தானே”

என்று கேட்க, யாரோ உட்சி மண்டையில் அடித்தது போல இருந்தது நன்மாறனுக்கு.

கடந்த ஐந்து வருடங்களில், இவர்களின் வாழ்க்கை சென்றது, நங்கையின் சம்பாத்தியத்தில் அல்லவா.

நன்மாறன் திகைத்து நிற்க, தன் வேலையை பார்த்து கொண்டே பொற்செழியன்,

“சரி நான் ஒரு கேள்வி கேட்குறேன் பதில் சொல்லு, இப்போ நீ உன்னோட பிரின்ட் கூட ஒரே ரூம்ல ஸ்டே பண்ணி இருக்க, சமைக்கிறது, துணி துவைக்கிறதுனு எல்லா வேலையும் உன் பிரின்ட மட்டும் செய்ய சொன்னா செய்வானா”

என்று கேட்க, இடவலமாக தலையசைத்த நன்மாறன்,

“அது எப்படி செய்வான், ரெண்டு பேரும் ரூம் அஹ ஷேர் பண்ணும் போது, வேலையும் ஷேர் பண்ணனும் தானே”

என்று கேட்க, அவனை அமர்த்தலான ஒரு பார்வை பார்த்த பொற்செழியன்,

“ஒரு பேச்சுக்கு சொல்றேன், இப்போ அந்த பிரின்ட் ஒரு பொண்ணுனு வச்சிக்குவோம், பொண்ணு அப்படின்ற ஒரே காரணத்துக்காக எல்லா வேலையும் அவங்களையே செய்ய சொல்லிடலாமா”

என்று கேட்க, நன்மாறனுக்கு அவன் சொல்லுவதில் உள்ள நியாயம் புரிய, தன் தவறை உணர்ந்து தலை குனிந்து நிற்க, பொற்செழியனோ தொடர்ந்து,

“லேடீஸ் அப்படின்னு அவங்களை ஸ்பெஷல் அஹ ட்ரீட் பண்ண வேண்டாம், சக மனிஷியா ட்ரீட் பண்ணாலே போதும் மாறா”

என்று சின்னவனுக்கு புரியும் விதத்தில் சொன்னவன்,

“குடும்ப சூழ்நிலையால வேலைக்கு போறவங்க, வேலைக்கும் போய் கிட்டு, வீட்டு வேலையும் பார்க்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா”

என்றவன், இப்போது தன்னுடைய சட்டையை கொடியில் போட்டவாறு,

“வெறும் ரூம் ஷேர் பண்ணாலே வேலையை பிரிச்சி செய்யணும்னு நீ தான் சொன்ன, நான் என்னோட லைப் அஹயே உன்னோட அக்கா கூட ஷேர் பண்றேன்”

என்றவன் ஒரு இடைவெளி விட்டு, பெரிதான புன்னகையுடன்,

“அதான் என்னோட சகதர்மினிக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப் அஹ பண்றேன், இதுல தப்பு என்ன இருக்கு”

என்று கேட்க, நன்மாறனுக்கோ வேலை முடித்து வந்து, அதே அலுப்புடன் இரவில் தனது பள்ளி சீருடையை துவைக்கும் நங்கை, கண் முன் வந்தாள்.

விடுமுறை தினமான ஞாயிறுகளில் இரண்டு மணிநேரம், அந்த வாரம் முழுதும் உடுத்திய உடைகளை துவைத்து விட்டு, கலைத்து போய் அமரும், தமக்கையின் உருவமும் நிழலாடியது.

இத்தனை வருடத்தில் இது எல்லாம் ஏன் ஒரு முறை கூட தான் யோசிக்க வில்லை என்று நினைத்து, தன்னை தானே நொந்து கொண்டான் நன்மாறன்.

இப்போது எல்லாம் பொற்செழியன், நங்கைக்கு சமையலில் உதவுவதால், அவள் சற்று தமாதமாக எழுவதும் உரைத்தது.

இதற்குள் துணிகளை எல்லாம் கொடியில் போட்டு விட்டு பொற்செழியன் உள்ளே செல்ல, அவனின் பின்னோடு சென்ற நன்மாறன்,

“தேங்கஸ் மாமா”

என்று சொல்ல, எதற்கு என்று கேட்காமல் அவனின் தோளில் தட்டிய பொற்செழியன்,

“ஸ்கூலுக்கு டைம் ஆகுது, போய் சாப்பிட்டு, கிளம்பு போ”

என்று அனுப்பிவிட்டு அவனும் உடை மாற்ற, தன் அறைக்குள் நுழைந்து விட்டான். அதன் பிறகு நன்மாறன் பள்ளி சென்றதும், இவனும் கிளப்பி, தனி வீட்டிற்கு சென்றான்.

பொற்செழியன் செல்லும் போதே விஜய் உர்ரென்று அமர்ந்திருக்க, இது வெற்றி மற்றும் தமிழின் வேலை என்று புரிய, சிரித்து கொண்டே வீட்டின் உள்ளே சென்றான்.

இவனை ஏகத்துக்கும் முறைத்த விஜய், எடுத்த எடுப்பிலே வெகு மரியாதையாக,

“ஏன்டா அறிவு கெட்டவனே, குடோனுக்கு போறதா இருந்தா முன்னாடியே இன்பார்ம் பண்ணிட்டு போக மாட்டியா, உனக்கு எதாவாது ஆச்சினா சிஸ்டருக்கு யார் பதில் சொல்றது”

என்று கேட்க, அவன் நங்கையை குறிப்பிட்டதும் இன்னமும் பெரிதாக புன்னகைத்த பொற்செழியன்,

“அப்போ எனக்கு எதாவாது ஆனா உனக்கு பிரச்சனை இல்ல, உன்னோட பாசமலருக்கு என்ன பதில் சொல்றது அப்படின்றது தான் உன்னோட கவலை”

என்று விஜய்யை வம்புக்கு இழுக்க, கடுப்பாகி போன விஜய்யோ, இருக்கையில் இருந்து எழுந்துவன், பொற்செழியனின் முதுகில் சில பட்டாசுகளை வெடிக்க வைத்த வண்ணம்,

“எருமை எருமை எப்படி பேசுது பாரு, நீ இப்போ தனி ஆளு இல்ல செழியா, உனக்கு எதாவது ஒன்னுன்னா நங்கை தான் அதிகமா பாதிக்கப்படுவா, அதுக்கு தான் சொல்றேன் கேர்புல் அஹ இருன்னு”

என்று சொல்ல, அவனின் அக்கறையை பற்றி அறிந்திருந்த பொற்செழியனும் விளையாட்டு பேச்சை கை விட்டவனாக,

“புரியுதுடா, இனி கவனமா இருக்கேன் சரியா”

என்று அவனை சமாதானப்படுத்தியவன், வெற்றியின் பக்கம் திரும்பி,

“அந்த மினிஸ்டர் பி.ஏ போன் அஹ டேப் பண்ண சொன்னனே என்ன ஆச்சு”

என்று கேட்க, நேற்று நடந்ததை அறிந்திருந்த விஜய்யும் அவனை பார்க்க, தமிழ்,

“அந்த மினிஸ்டர் அவரோட மச்சானை தான் பி.ஏ-வா வச்சி இருக்காரு”

என்று சொல்ல, அவனை யோசனையுடன் பார்த்த விஜய்,

“டேய் அந்த ஆளோட வைப்-க்கு தம்பியே இல்லையேடா”

என்று சொல்ல, விஜய்யை குறும்பு பார்வை பார்த்த வெற்றியோ,

“உங்களுக்கு ஒண்ணுமே தெரில போங்க அண்ணா, மினிஸ்டர் இப்போ புதுசா, ஒரு பீச் ஹவுஸ் வாங்கி ஒருத்தரை குடி வச்சி இருக்காரே, அந்த லேடியோட தம்பி”

என்று சொல்ல, விஜய்யோ பொங்கும் புன்னகையுடன்,

“ஓ இல்லீகள் வேலை பார்க்க, இல்லீகள் வைப் ஓட தம்பி அஹ, சூப்பர் காம்பினேஷன் போ”

என்று சிரிக்க, பொற்செழியனோ காரியத்தில் கண்ணாக,

“போன் அஹ ஹேக் பண்ணிங்களா இல்லையாடா”

என்று கேட்க, வெற்றியோ,

“ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கேன், அதுல இருக்கிற லிங்க் மட்டும் அவன் கிளிக் பண்ணா போதும், அவனோட போன் அஹ புல் அஹ அலசிடலாம்”

என்று சொல்ல, அவனை யோசனையுடன் பார்த்த பொற்செழியன்,

“பண்ணுவனாடா, ஒருவேளை பண்ணலானா???”

என்று கேட்க, வெற்றியோ உறுதியாக,

“கண்டிப்பா பண்ணுவான் அண்ணா, கோடி ரூபாய் பரிசு, இந்த லிங்க் அஹ கிளிக் பண்ணி, டீடெயில் பில் பண்ணா போதும்னு, பேங்க்ல இருந்து அனுப்புற மாதிரி அனுப்பி இருக்கேன்”

என்று கண்ணடிக்க, பொற்செழியன் அவனை மெச்சுதலாக பார்க்க, விஜய்யோ,

“சரி அந்த குடோன்ல வச்ச மைக்ல எதாவது யூஸ் புல் இன்போர்மேஷன் கிடைத்ததா”

என்று கேட்க, வெற்றியும், தமிழும் பொற்செழியனை பார்க்க, அவனோ,

“இப்போ வரைக்கும் எதுவும் இல்லை, ஆனா அதுல நமக்கு கண்டிப்பா முக்கியமான ஹிண்ட் கிடைக்கும்னு, என்னோட உள்மனசு சொல்லி கிட்டே இருக்கு, பார்ப்போம்”

என்று சொல்ல, மற்ற மூவரும் வெறுமனே தலையை மட்டும் ஆட்டினர்.

பொற்செழியன் இன்னமும் யோசனையில் இருக்க, பதுங்கி, பதுங்கி, சென்று அவனின் உணவு பையை கைப்பற்றினான் விஜய்.

அதை திறந்து, என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தவன், அதில் இருந்த உணவை உண்டபடி,

“சும்மா சொல்ல கூடாதுடா, சிஸ்டர் சமையல் சூப்பர்”

என்று சிலாகிக்க வேறு செய்ய, கடுப்புடன் அவனை பார்த்த பொற்செழியன்,

“டேய் எருமை, நீ இப்போ அதை சாப்பிட்டா, நான் லன்ச்-க்கு என்ன சாப்பிடறது”

என்று பல்லை கடிக்க, தான் உண்ணுவதை ஓர கண்ணால் பார்த்து கொண்டிருந்த வெற்றிக்கும், தமிழுக்கும், மூடியில் வைத்து கொடுத்து அவர்களையும் தன்னுடன் இணைத்து கொண்ட விஜய்,

“என்னமோ இவ்ளோ நாள் வீட்டு சாப்பாடு சாப்பிட மாதிரி பில்டப் கொடுக்காதடா, உன்னோட கல்யாணத்துக்கு தான் கூப்பிட்டல, ஒரு வேளை சாப்பாடு கூட கொடுக்க மாட்டியா”

என்று ஒரு பக்கம் குறைபட, இன்னொரு பக்கமோ உணவை ஒரு கை பார்த்து கொண்டிருந்தான்.

அவனை சிரிப்புடன் பார்த்த பொற்செழியனோ,

“ஒரு வேளை சாப்பாடுக்கு நீ பேசுற பேச்சு உனக்கே ஓவரா இல்ல, சாப்பாடு தானே வேணும், தின்னு, தின்னு, நல்லா தின்னு”

என்று சொல்ல, வாய் முழுக்க சாப்பாடோடு விஜய், பொற்செழியனை பார்த்து புன்னகைக்க, அதை பார்த்து மிரண்டு போன அவனோ,

“தயவு செஞ்சி சிரிக்க மட்டும் செய்யாத, ஆஞ்சநேயர் வாயில் வெண்ணை பூசுன மாதிரி இருக்கு, அடைச்சிக்க போகுது, மெதுவாடா மெதுவா”

என்றவன், உண்ணும் மூவருக்கும் தண்ணீர் எடுத்து வர எழுந்து சென்றான்.

அவன் தண்ணீர் எடுத்து வருவதற்குள், உணவு பாத்திரத்தை கழுவ வேண்டிய அவசியமே இல்லாமல், சுத்தமாக்கி வைத்திருந்தனர் மூவரும்.

அதை பார்த்து பொற்செழியனுக்கு சிரிப்பு பொத்து கொண்டு வர,

“லன்ச் பாக்ஸ்யும் சேர்த்து சாப்பிட்றாதீங்கடா, அதையாவது மிச்சம் வைங்க”

என்று சொல்ல, விஜய், வெற்றி மற்றும் தமிழ் அவனை பார்த்து, அசடு வழிய சிரித்து வைக்க, அவர்களின் முகத்தை பார்த்த பொற்செழியனோ, வெடித்து சிரித்தான்.

காந்தன் வருவான்…………….

Advertisement