Advertisement

முன் பக்க கதவுக்கு அருகே பேசும் குரல் கேட்க, ஒருவேளை அவர்கள் உள்ளே வந்தால் என்ன செய்வது என்று பொற்செழியன் யோசிக்க, அந்த குரல் கொஞ்சம், கொஞ்சமாக தேய ஆரம்பித்தது.

தான் நின்ற இடத்திலே நின்று, அந்த குரல் முன் கதவை விட்டு விலகி செல்வதை உறுதி செய்து கொண்டு, மீண்டும் அந்த அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் பொற்செழியன்.

அந்த அறையை அடைந்தவன், கதவின் குமிழில் கைவைக்க கதவு திறந்து கொண்டது. கதவை திறந்தும், சில்லென ஏசி காற்று அவனை தீண்டியது.

அதில் ஆச்சர்யமானவன், அந்த அறையை தன் கூர்மையான கண்களால், வெகு கவனமாக நோட்டம் விட்டான்.

அந்த குறிப்பிட்ட மருந்து, பெரிய பெரிய அட்டை பெட்டிகளில் அடைத்து, அறையில் முக்கால்வாசி இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

தான் கொண்டு வந்திருந்த மிக சிறிய இரகசிய கேமராவை, அந்த அறை முழுதும் தெரியும் படியான ஒரு உயரமான இடத்தில், ஒட்டினான் பொற்செழியன்.

அதோடு பார்த்தவுடன் கண்ணுக்கு தெரியாத அளவு இருந்த சிறிய மைக் ஒன்றையும், அறையின் மூலையில் பொறுத்தினான்.

தான் வந்த வேலை முடிந்ததும், சுற்றி ஒருமுறை பார்த்து சரியாக பொருந்தி இருப்பதை உறுதி செய்து கொண்டவன், வந்த மாதிரியே சத்தம் எழுப்பாமல், அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

முன் பக்கம் இன்னமும் பேசும் குரல் கேட்க, பொற்செழியன், தான் வந்த பின் பக்க கதவை நோக்கி நகர, மீண்டும் முன் பக்க கதவின் அருகில் குரல் கேட்டது.

நேரத்தை பார்த்த பொற்செழியனுக்கு, இது அவர்கள் கிடங்கின் உள்ளே கண்காணிக்க வரும் நேரம் என்று புரிந்தது.

இவர்களையும், இந்த கிடங்கையும் நோட்டம் விட்டதில், அவர்களின் உணவு நேரம், கண்காணிக்க செல்லும் நேரம் எல்லாம் பொற்செழியனுக்கு அத்துபடி.

இன்று அந்த இருவருக்கும் காலை உணவு சற்று தாமதமாக வந்து இருக்க, அவர்கள் உணவு இடைவேளையை கணக்கிட்டு, எப்படியும் இன்னும் பதினைந்து நிமிடங்கள் ஆகும் என்று பொற்செழியன் கணித்திருந்தான்.

ஆனால் அவர்களோ, கடமை கண்ணாயிரமாக வழக்கமான நேரத்திற்கு, கிடங்கின் உள்பகுதியை, கண்காணிக்கும் தங்களின் பணியை செய்ய ஆயத்தமாகி இருந்தனர்.

பேச்சு குரலோடு, இப்போது கதவின் பூட்டை திறக்கும் ஓசையும் கேட்க, அவர்கள் உள்ளே வர நேரத்தை கணக்கிட்டு கொண்ட பொற்செழியன், வேக எட்டு வைத்து, நடக்க ஆரம்பித்தான்.

பொற்செழியன் கிடங்கின் மைய பகுதியை தாண்டி, கடைக்கோடியை அடையவும், கதவு திறக்கவும் சரியாக இருந்தது.

தரையில் கிடந்த சிறுதும், பெரியதுமான பொருட்களோடு, இருளை போர்வையாக்கி, தரையோடு தரையாக படுத்து விட்டான் பொற்செழியன்.

பொற்செழியனின் இருதயம் லப்டப் என்று அதி வேகத்தில் துடிக்க, அதற்கு சுருதி சேர்ப்பது போல,
டப் டப் என்று அந்த பெரிய கிடங்கில், வரிசையாக விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன.

மூச்சை இழுத்து பிடித்து கொண்டு, சிலையென இருந்தான் பொற்செழியன். சரியாக கடை கோடியில் இருந்த அவனுக்கு சற்று முன்னால், இருந்த விளக்கோடு ஒளிர்வது நின்றது.

பொற்செழியனின் தலை மேல் இருந்த நீள்குழல் விளக்கின் முனைகள் செந்நிறமாக இருக்க, அது ஒளியை கொடுக்காமல் கருப்படித்து போய் இருந்தது.

அதன் புண்ணியத்தில், இன்னமும் அவன் இருந்த இடம் இருளிலே மூழ்கி இருக்க, அந்த கிடங்கை சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு, அந்த அறையின் உள்ளே சென்றனர் காவலாளிகள் இருவரும்.

அந்த பெரிய அறையையும் ஒரு முறை பார்த்துவிட்டு வந்த இருவர்களில் ஒருவர், பொற்செழியன் இருந்த இடத்தை கூர்ந்து பார்த்தவாறு, அவனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அந்த இருவரும், இவனை கண்டுபிடித்து, நெருங்கினால் அவர்களை சமாளிப்பது பொற்செழியனுக்கு ஒன்றும் பெரிய காரியம் இல்லை தான்.

ஆனால் அவர்களை அடித்து போட்டு விட்டு சென்றாலோ அல்லது கட்டி தூக்கி சென்றாலோ, இங்கே யாரோ வந்து சென்றது அவர்களுக்கு தெரிந்துவிடும்.

வந்தது யாரு, எதற்கு வந்தார்கள் என்று அவர்கள் தோண்டி, துருவினால் பொற்செழியனும் அவனின் குழுவும், அந்த மந்திரிக்கு எதிராக வேலைபார்ப்பது தெரிந்துவிடும்.

போதை மருந்து முழுக்க முழுக்க மந்திரியின் வேலை. அதனால் அவரை சட்டத்தின் முன் முழு முதல் குற்றவாளியாக நிறுத்த தேவையான ஆதாரத்தை திரட்டும் வரை, அவருக்கு இவர்களை பற்றி தெரியாமல் இருப்பது அவசியம்.

எனவே பொற்செழியன், என்ன செய்து சூழ்நிலையை சமாளிப்பது என்று தீவிரமாக யோசிக்க, இவனை நோக்கி வந்து கொண்டிருந்த காவலரை, கை பிடித்து தடுத்த சககாவலாளி,

“அங்க எங்கடா போற”

“இல்லப்பா லாஸ்ட்ல இருக்கிற லைட் பியூஸ் போய்டுச்சி போல, என்னனு பார்த்துட்டு வரேன்”

“அதை இப்போவே மாத்தக்கணுமா என்ன, இட்லியை பாதி சாப்பிட்டு மீதியை அப்படியே வச்சிட்டு வந்தோம், அந்த பி.ஏ-க்கு போன் பண்ணி சொல்லிட்டு, மொத போய் சாப்பிடுவோம்”

“ஹ்ம்ம் அதுவும் சரி தான், அந்த ஆளு சரியான நொச்சு, ஒரு நாள் சரியான நேரத்துக்கு போன் பண்ணலானாலும் லோபோ திபோனு கத்துவான், இம்சை”

என்று சொன்னப்படி பொற்செழியனை நோக்கி நடந்து வந்த காவலாளி, தன் சகாவுடன் திரும்பி முன் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அவர்கள் செல்லுவதை, மெதுவாக தன் தலையை தூக்கி பார்த்து உறுதி செய்து கொண்ட பொற்செழியன், அவர்கள் கதவை பூட்டி விட்டு வெளியே செல்லும் வரை, தன் நிலையில் மாற்றம் இல்லாமல் அப்படியே இருந்தான்.

அவர்கள் வெளியே சென்றதும், மீண்டும் முன் பக்க கதவின் அருகே சென்றவன், அந்த துருப்பிடித்த கதவில், மிக சிறிய கருப்பு மைக் ஒன்றையும் வைத்தான்.

மீண்டும் மின்னல் விரைவில் பின் பக்க கதவின் அருகில் சென்று, வெளியே ஏதும் சத்தம் கேட்கிறதா என்று உற்று கேட்டவன், இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, கதவின் இடுக்கில் நுழைந்து வெளியே வந்தான்.

அடுத்த நிமிடம் ஒரே ஓட்டமாக ஓடி, சுற்று சுவரில் இரண்டு எட்டு வைத்து தாவி, அந்த பக்கம் குதித்தான்.

அந்த கிடங்கை விட்டு வெளியே வந்தவன், நொடியும் தாமதிக்காமல் மறைவில் வைத்திருந்த தன் இருசக்கர வண்டியை தள்ளி கொண்டு, சிறிது தூரம் சென்ற பின்பு, வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.

உடை எல்லாம் அழுக்காகி இருக்க, நேராக தமிழ், வெற்றி இருக்கும் தனி வீட்டிற்கு சென்றவன், குளியலறை சென்று கை, கால்களை கழுவி சுத்தம் செய்து கொண்டான்.

தன் உடையில் இருந்த தூசியையும், அழுக்கையும் தன் ஈர கைக்குட்டை கொண்டு துடைத்தவன் வெளியே வர, வெற்றியும், தமிழும் அவனை கேள்வியாக பார்த்தனர்.

அவர்களை மொத்தமாக கண்டு கொள்ளாத பொற்செழியன், வெற்றியை இருக்கையில் இருந்து எழுப்பிவிட்டு, அங்கு இருந்த கணினியின் முன் அமர்ந்தான்.

ஒரு செயலியை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்தவன், அந்த செயலியை திறந்து, அதில் சில பல வேலைகளை பார்க்க, அந்த கிடங்கு கணினியில், இவர்களின் பார்வைக்கு தெரிந்தது.

கேமராவும், மைக்கும் சரியாக வேலை செய்வதை உறுதி செய்து கொண்டான் பொற்செழியன். அதை பார்த்ததும் தான் பொற்செழியன் வந்த கோலத்திற்கான காரணம், மற்ற இருவருக்கும் புரிய, அவனை அதிருப்தியுடன் பார்த்த வெற்றி,

“என்ன அண்ணா, அங்க போறதா இருந்தா எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போய் இருக்கலாம் இல்ல”

என்று கேட்க, அவனுக்கு ஒரு புன்னகையை பொற்செழியன் பதிலாக தர, தமிழோ,

“சரி எங்க கிட்ட சொல்ல வேண்டாம், விஜய் அண்ணா கிட்டயாவது சொல்லி இருக்கலாம் இல்ல, பேக்-அப்க்கு எதாவது ரெடி பண்ணி இருப்பாரு இல்ல”

என்று பொரிய, இருவரையும் பார்த்து மீண்டும் பெரிதாக புன்னகைத்த பொற்செழியன்,

“அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சி இல்ல, இப்போ எதுக்கு முடிஞ்சதை பத்தி பேசி கிட்டு”

என்று அவர்களில் கேள்விகளை புறம்தள்ளியவன் தொடர்ந்து,

“இதை மானிட்டர் பிளஸ் ரெகார்ட் பண்ணுங்க, கண்டிப்பா யூஸ் புல் அஹ ஆதாரம் கிடைக்கும், ஹான் அப்புறம் அந்த மினிஸ்ட்ர் பி.ஏ போன் அஹ டேப் பண்ணனும், அதுக்கு தேவையானதை பாருங்கடா”

என்று சொல்ல, பொற்செழியனின் மேல் அதிருப்தி இருந்தாலும், அவனிடம் இதற்கு மேல் கேள்வி கேட்க முடியாது என்பதால், உர்ரென்ற முகத்துடன் அவன் சொன்ன வேலையை பார்க்க ஆரம்பித்தனர் இருவரும்.

மாலை நங்கை வீட்டுக்கு கிளம்பும் நேரத்தை கணக்கிட்டு கிளப்பியவன், அவளின் அலுவலகத்திற்கே சென்று அவளுக்காக காத்திருந்தான்.

இவனை பார்த்த நங்கைக்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்க, அதோடு இது ஒரு புதுவித அனுபவமாகவும் இருக்க, மலர்ந்த புன்னகையுடன் அவனை நெருங்க, இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்.

இருசக்கர வாகனத்தில் வந்ததால், வழக்கத்தை விட நங்கை விரைவாக வீடு திரும்பியிருக்க, இருவரையும் பார்த்து, தனுக்குள் சிரித்து கொண்டான் நன்மாறன்.

நங்கை சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வரவும், கூடத்தில் உடை மாற்றாமல் அவளுக்காக காத்திருந்த பொற்செழியன்,

“நங்கை கோவிலுக்கு போகலாமா”

என்று கேட்க, நங்கையோ அவனை தர்மசங்கடமாக பார்த்தவள்,

“இல்ல டியூஷன் இருக்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல பசங்க வந்துடுவாங்களே”

என்று இழுக்க, நன்மாறன் தன் அக்காவுக்கு உதவும் விதமாக,

“நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க, நீ வர வரைக்கும் நான் பசங்களை பார்த்துகிறேன் அக்கா”

என்று சொல்ல, அவனை முறைத்த நங்கை ஏதோ சொல்ல வர, அதற்குள் இடையிட்ட பொற்செழியன்,

“நான், நாம மூணு பேரும் சேர்ந்து கோவிலுக்கு போகலாமானு தான் கேட்டேன்”

என்று சொல்ல, நங்கை என்ன செய்வது என்று யோசிக்க, மணியை பார்த்த பொற்செழியன்,

“நங்கை இன்னைக்கு வழக்கத்தை விட நீ சீக்கிரமா தானே வந்துட்ட, பக்கத்து தெருல கோவிலுக்கு போய்ட்டு வர எவ்ளோ நேரம் ஆக போகுது, சும்மா கிளம்புங்க போய்ட்டு வந்துடுவோம்”

என்று சொல்ல, நன்மாறன் உடை மாற்றி வர, மூவரும் கோவிலுக்கு கிளம்பினர். பக்கத்து தெரு என்பதால், மூவரும் நடந்தே செல்வதென முடிவு எடுத்தனர்.

கோவிலின் கருவறையில் இறைவன் லிங்க வடிவில் காட்சி தர அவரை வணங்கி, தனியாக வீற்றிருக்கும் அவரின் துணைவியையும் வணங்கி, விபூதி, குங்குமம் வாங்கி கொண்டு, ஒரு ஓரமாக அமர்ந்தனர்.

பொற்செழியன் நங்கையை கண்டு கொள்ளாமல், நன்மாறனிடம் தீவிரமாக உரையாடிய படி இருக்க, நங்கையோ அவர்கள் இருவரையும், போவோர் வருவோரையும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.

சிறுது நேரம் கழித்து மூவரும் கோவிலில் இருந்து கிளம்ப, மணியை பார்த்த நன்மாறன்,

“மாமா டியூஷன் பசங்க இந்நேரம் வந்து இருப்பாங்க, நான் முன்னாடி வேகமா போறேன், நீங்களும், அக்காவும் பொறுமையாக வாங்க”

என்றவன், நங்கையிடம் இருந்து வீட்டின் சாவியையும் வாங்கி கொண்டு, பொற்செழியன் தடுக்கும் முன் கிளம்பி விட்டான்.

செல்லும் அவனை அதிருப்தியுடன் பார்த்த பொற்செழியன், நங்கையிடம்,

“ஏன் இப்படி ஓடுறான் இவன், ஒரு அஞ்சு நிமிஷத்துல என்ன ஆகிட போகுது, நம்ப கூடவே வரலாம் இல்ல”

என்று கேட்க, நங்கையோ சாதரணமாக,

“நமக்கு பேச தனிமை கொடுத்துட்டு போறான்”

என்று தன் தமையனை நினைத்து பெருமையுடன் சொல்ல, பொற்செழியனோ,

“இந்த வயசுக்கு ரொம்ப மெச்சுரிட்டியோட இருக்கான் இல்ல”

என்று அவனும் நன்மாறனை சிலாகிக்க, நங்கையும் ‘ஆமாம்’ என்று தலையாட்டி அதை அமோதித்தாள்.

தன் அருகில் நடந்து வரும் நங்கையை பார்த்த பொற்செழியனுக்கு, ஒரு வார திருமண வாழ்க்கை தன் கண்ணம்மாவில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம், அவ்வளவு நிறைவாக இருந்தது.

கண்களை இப்படி அப்படி திருப்பாமல், நேர் கொண்ட பார்வையுடன் விரைப்பாக செல்லும் நங்கை, இன்று இவனின் அருகில் இலகுவாக வேடிக்கை பார்த்தபடி நடந்து வர, பழைய நங்கையை பார்த்தது போல் இருந்தது அவனுக்கு.

பொற்செழியனுக்கு தான் அவள், அவனின் ஐந்து வருட காதல். ஆனால் அவனின் கண்ணம்மாவோ ஏதோ காலம், காலமாக அவனுடன் வாழ்ந்தது போல, வெகு சுலபமாக அவனுடன் ஒன்றி விட்டாள்.

தன்னவளின் எண்ணங்களில் திளைத்து, அவளோடு தோள் உரசு நடப்பதை இரசித்தப்படி பொற்செழியன் நடக்க, அப்போது அவர்களை கடந்து சென்றது ஒரு இருசக்கர வாகனம்.

நங்கையின் கண்கள் அந்த இருசக்கர வாகனத்தில் பசைபோட்டு ஒட்டி கொண்டது போல அதையே தொடர, அவளை யோசனையாக பார்த்த பொற்செழியன்,

“என்ன கண்ணம்மா, அந்த பைக்ல போறவங்க உனக்கு தெரிஞ்சவங்களா என்ன”

என்று கேட்க, தன் கணவனை திரும்பி பார்த்த நங்கையோ, கண்களில் ஒளியுடன்,

“பச் அது எல்லாம் இல்லைங்க, எனக்கு அந்த பைக் மேல ஒரு கிரேஸ், அதான்”

என்று சொல்ல, சென்ற அந்த ராயல் என்பீல்டை பார்த்த பொற்செழியன் சற்றும் யோசிக்காமல்,

“வேணும்னா நாமளும் ஒண்ணு வாங்குவோமா”

என்று ஏதோ பஞ்சுமிட்டாய் வாங்குவது போல சொல்ல, அவன் விளையாடுவதாக நினைத்து கொண்ட நங்கை,

“சும்மா காமெடி பண்ணாதீங்க, அந்த பைக் எப்படியும் ஒன்னு, ஒன்னரை இலட்சம் இருக்கும்”

என்று சொல்ல, பொற்செழியனோ தீவிரமாக,

“அதனால என்ன, என் கிட்ட மணி இருக்கு, உனக்கு என்ன கலர் பிடிக்கும் சொல்லு, ஆர்டர் பண்ணுவோம்”

என்று சொல்ல, அவனின் குரலில் இருந்த தீவிரத்தில் அவனை யோசனையுடன் பார்த்த நங்கை,

“அன்னைக்கு சேரி வாங்கும் போது டூ தவுசண்ட் அதிகமானதுக்கும் இப்படி தான் சொன்னிங்க, இன்னைக்கு ஒன்னரை லட்சம் பைக்கும் அதையே தான் சொல்றீங்க, எவ்ளோ சேவிங்ஸ் தான் வச்சி இருக்கீங்க நீங்க”

என்று கேட்க, திருத்திருவென முழித்த பொற்செழியன்,

“இல்லை நீ பிடிக்கும்ன்னு சொன்னதால தான்”

என்று இழுக்க, அவனின் இடது கரத்தோடு தனது வலகரத்தை கோர்த்து கொண்ட நங்கை,

“ஏங்க ஆசைப்பட்டதுக்காக எல்லாம் ஒன்னரை லட்சம் கொடுத்து பைக் வாங்க முடியுமா, அந்த காசுக்கு செகணண்ட்ல காரே வாங்கிக்கிடலாம்”

என்று சொல்ல, பொற்செழியனும் புரிந்தது எனும் விதமாக தலையாட்ட, அவனை குறும்புடன் பார்த்த நங்கை,

“வீட்டுக்கு போனதும் பஸ்ட் உங்க பேங்க் பாஸ் புக் அஹ கொடுங்க, அப்படி எவ்ளோ தான் சேவிங்ஸ் வச்சி இருக்கீங்கனு நானும் பார்க்கிறேன்”

என்று சொல்ல, பொற்செழியனின் மனசாட்சியோ,
“உன் கதை முடியும் நேரமிது” என்று அவனை கிண்டல் செய்ய, அவளை நோக்கி ‘ஈஈஈ’ என்று இளித்து சமாளித்து வைத்தான்.

இருவரும் வீட்டை நெருங்க, பொற்செழியனோ,

“கண்ணம்மா”

என்று இழுக்க, அவனின் இழுவையில் நங்கை அவனை நிமிர்ந்து பார்க்க, பொற்செழியனோ,

“நான் சொல்றத தப்பா எடுத்துக்காத சரியா”

என்று பீடிகையுடன் ஆரம்பித்தவன், நிறைய தயக்கங்களுடன் அவளை பார்த்து,

“நெஸ்ட் மண்ந்ல இருந்து டியூஷன் எடுக்க வேண்டாமே, இனிமே உன்னோட சேலரி கூட என்னோட சேலரியையும் சேரும் இல்ல, நமக்கு அது போதும் தானே”

என்றவன் நங்கைய யோசிக்கவும், தொடர்ந்து,

“மார்னிங் செவன் தேர்ட்டிக்கு ஆபிஸ்க்கு கிளம்புனா, அதோட ஆறு மணிக்கு தான் வீட்டுக்கு வருவ, இதுல வீட்டுல வேலை வேற, அதோட டியூஷன் உனக்கு கஷ்டம் தானே”

என்று தன் எண்ணத்தை விளக்க, நங்கையோ,

“ஹ்ம்ம் சரிங்க, பசங்க பேரண்ட்ஸ் கிட்ட பேசுறேன்”

என்று எந்த பிகுவும் பண்ணாமல் ஒத்து கொள்ளவும், அவர்கள் வீடு வரவும் சரியாக இருந்தது.

காந்தன் வருவான்….…..

Advertisement