Advertisement

பொற்செழியன், நங்கை திருமணம் முடிந்த இரண்டாம் நாள் அதிகாலை, நங்கையின் சித்தி தன் குடும்பத்தோடு, ஊருக்கு கிளம்பி கொண்டிருந்தார்.

நங்கையின் சித்தப்பாவிற்கு இதற்கு மேல், அவருடைய அலுவலகத்தில் விடுப்பு எடுக்க முடியாத நிலை. அவர்களின் பிள்ளைகளும் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் இருக்க, பள்ளி சென்றாக வேண்டிய கட்டாயம்.

கற்பகம் சித்தி இங்கு வந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்டதால், பிள்ளைகளும் அவரை தேட, அவர்களுடனே அவரும் கிளம்ப வேண்டிய அவசியம்.

திருமணம் நடந்த இரண்டு நாளில், நங்கையை தனியாக விட்டு செல்ல, அவருக்கும் வருத்தமாக தான் இருந்தது.

என்ன தான் பொற்செழியன் மீது நம்பிக்கை இருந்தாலும், உண்மை இன்னும் நங்கைக்கு தெரியாததால், அதை நினைத்து, நெஞ்சம் கொஞ்சம் கலங்க தான் செய்தது அவருக்கு.

மனமே இல்லாமல் கற்பகம் சித்தி, அவளிடம் பிரியா விடைப்பெற, அவர்களை வாசல் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்த நங்கைக்கு, அந்த சிறிய வீடே வெறிச்சோடியது போன்ற எண்ணம்.

பேருந்து நிலையம் வரை உடன் வருகிறோம் என்று கிளப்பிய நன்மாறனையும், பொற்செழியனையும் அவர்கள் தடுத்து விட, நன்மாறன் மீண்டும் உறங்க சென்று விட்டான்.

நங்கை வீட்டின் கூடத்தில் தரையில் அமர்ந்து, சுவரில் சாய்ந்திருக்க, பொற்செழியனும் சென்று அவளின் அருகிலே அமர்ந்தான்.

அமர்ந்தவன் தன் கண்ணம்மாவை தன் தோளில் வளைவில் வைத்து கொண்டவன், தன்னவளின் மருதாணியிட்ட செங்காந்தள் நிற விரல்களோடு விளையாடியப் படியே,

“பொதுவா எல்லாரும் மேரேஜ்க்கு, முழங்கை வரைக்கும் மெகந்தில டிசைன்ஸ் தானே வைப்பாங்க, நீ ஏன் அந்த மாதிரி வைக்காம, இப்படி வச்சி இருக்க”

என்று கேட்க, அவனின் அருகாமையில் அழகான புன்னகையை சூடி, அதிகாலையில் புது மலரென மலர்ந்திருந்த அவனின் மங்கையோ,

“ஏன் இது நல்லா இல்லையா என்ன, மெகந்தி கோன் எல்லாம் ஆர்டிபிஷியல் தானே, அதுவும் மருதாணி மாதிரி சேம் எபெக்ட் கொடுக்குமா???”

என்று அவனை பதில் கேள்வி கேட்டு வைக்க, கொஞ்சம் குழம்பி போன பொற்செழியன்,

“மெகந்தி, மருதாணி எல்லாம் அழகுக்கு தானே வைப்பாங்க, கை, கால் எல்லாம் சிவந்து பார்க்க அழகா இருக்குனும்னு”

என்று கேட்க, அவனை பார்த்து இளநகை சிந்திய அவனின் கண்ணம்மா,

“அழகு, அதுவும் ஒரு காரணம், ஆனா கல்யாணம், புது வீடு, புது மனிஷங்கனு கல்யாண பொண்ணுக்கு பயம், பதற்றம் எல்லாம் இருக்கும். மருதாணில இருக்கிற இரசாயனம் மனசை இலவகுவாக்கி, பயம் பதற்றம் எல்லாம் குறைக்கும், இது தான் முக்கியமான காரணம் “

என்று அவனுக்கு மருதாணியை பற்றி ஒரு சிறு சொற்பொழிவு ஆற்றியவள், தொடர்ந்து

“பொதுவா எனக்கு மருதாணி இலையை அரைச்சி, இப்படி புள்ளி, தொப்பி வைக்க தான் பிடிக்கும், அதுவும் இந்த வாசனை எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும்”

என்று இரசித்து சொல்ல, அதே இரசனையுடன் தன்னவளை குனிந்து பார்த்த பொற்செழியன்,

“ஓ, எங்க காட்டு பார்க்கலாம்”

என்று அவளின் மருதாணியால் சிவந்த இரு கைகளையும் பிடித்து தன் முகத்தருகே எடுத்து செல்ல, கூச்சத்தில் அவனிடம் இருந்து தன் கையை விடுவித்து கொள்ள முயன்றாள் நங்கை.

அவனோ அவளின் முயற்சியை சிறிதும் இலட்சியம் செய்யாமல், தன் மீசை, அவளின் கைகளில் உரச, நிறுத்தி நிதானமாக வாசனை பிடித்தவன்,

“வா…வ் நை…ஸ் அரோமா”

என்று சிலாகிக்க வேறு செய்ய, நங்கையோ அவனின் செயலில் சிவந்து போய் அமர்ந்திருந்தாள்.

அவளவனோ ஒன்றுமே நடக்காதது போல, சாவகாசமாக மீண்டும் அவளின் விரல்களோடு விளையாட ஆரம்பித்தான்.

அங்கு நிலவிய அமைதியில், அசௌகர்யமான நங்கை, ஏதாவது கேட்க வேண்டுமே என்று,

“உங்களுக்கு எது எல்லாம் ரொம்ப பிடிக்கும்”

என்று தான் இத்தனை நாட்களாக கேட்க நினைத்திருந்த கேள்வியை கேட்க, கள்ள சிரிப்புடன் அவளை பார்த்த பொற்செழியன், அக்மார்க் கணவனாக,

“எனக்கு என்னோட கண்ணம்மாவை தான் ரொம்ப பிடிக்கும்”

என்று அவளின் கன்னம் பிடித்து சொல்ல, அவனின் பதிலில் உள்ளுக்குள் மகிழ்ந்தாலும், வெளியில் பொய்யாக அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்த நங்கை,

“பச், ஒழுங்கா பதில் சொல்லுங்க”

என, அவளின் பொய்யான முறைப்பில் அரண்டவனை போல பொற்செழியன்,

“நீ கேட்ட கேள்விக்கு தானே பதில் சொன்னேன்”

என்று பாவனை செய்த, நங்கையோ உண்மையில் பொற்செழியனின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டிருந்தாள்.

திருமணத்திற்கு முன்பு, அவர்களுக்கு பேசி கொள்ள வாய்ப்பே இல்லை. பத்து நாளில் திருமணம் முடிவாகி இருக்க, அதற்கான ஏற்படுகளை பார்க்கவே, இருவருக்கும் நேரம் சரியாக இருந்தது.

திருமணம் முடிந்த இரண்டு நாட்களில், பகலில் இவர்களுக்கு பேச தனிமை வாய்க்க வில்லை. இரவின் தனிமை, பேச அனுமதிக்க வில்லை.

ஒருவேளை பொற்செழியனின் தாயார், இருந்து இருந்தால், மகனுக்கு பிடித்தது, பிடிக்காதது எல்லாம் சொல்லி இருப்பாரோ என்னவோ.

இதை எல்லாம் இரண்டு நாட்களாகயோசித்து கொண்டிருந்தன் விளைவு தான், சற்று முன்பு நங்கை கேட்ட கேள்வி.

அதற்கு பொற்செழியன் பதில் அளித்த விதத்தில், நங்கை தன் கேள்வியை கொஞ்சம் மாற்றி,

“உங்களுக்கு சாப்பாடுல எது ரொம்ப பிடிக்கும்”

என்று உணவில் அவனின் விருப்பத்தை முதலில் தெரிந்து கொள்ள நினைத்து கேட்க, ஏதோ ‘பெர்மோடா முக்கோண’ மர்மத்தை விளக்க சொன்னது போல, வெகு தீவிரமாக யோசித்த பொற்செழியன்,

“அப்படி எதுவுமே இல்லையே”

என்று உதட்டை பிதுக்க, அவனை ஆச்சர்யமாக பார்த்த நங்கை,

“பேவரட்னு எதுவுமே இல்லையா”

என்று கேட்க, பொற்செழியனும் ‘ஆமாம்’ என்று தலையசைக்க, அவனை ஒரு மார்க்கமாக பார்த்த நங்கை,

“சரி பிடிச்சதுனு தான் எதுவும் இல்லை, பிடிக்காததுன்னு ஏதாவது இருக்கா”

என்று கேட்க, இப்போது சற்றும் யோசிக்காத பொற்செழியன்,

“சாப்பாடுல பிடிக்கும் பிடிக்கதுன்னு எல்லாம் எனக்கு எதுவுமே இல்லை கண்ணம்மா, பசிக்கும் போது சாப்பிட எது கிடைச்சாலும், எப்படி இருந்தாலும் நான் சாப்டுடுவேன்”

என்று சாதாரணமாக சொல்ல, விழிகள் தெறித்து விடும் அளவுக்கு, கண்ணை விரித்து நங்கை அவனை பார்க்க, ஏதோ நினைவு வந்தவனாக பொற்செழியன்,

“ஆன் நான்-வெஜ்ல மீன் மட்டும் சாப்பிட மாட்டேன்”

என்று சின்ன குரலில் சொல்ல, அதில் இருந்த பாவத்தில், அவனை குழப்பத்துடன் பார்த்த நங்கை,

“ஏன் மீன் மட்டும், அது மட்டும் என்ன பாவம் பண்ணுச்சாம்”

என்று கேட்க, அவளை ஒரு அசட்டு புன்னகையுடன் பார்த்த பொற்செழியன்,

“எனக்கு முள்ளு எடுத்து சாப்பிட தெரியாது”

என்று உள்ளே சென்று விட்ட குரலில், சிறுவன் என சொல்ல, இப்போது இன்னமும் அவனை விசித்திரமாக பார்த்த நங்கை,

“இவ்ளோ பெருசா வளர்ந்து இருக்கீங்க, உங்களுக்கு மீன் சாப்பிட தெரியாதா”

என்று தான் சரியாக தான் கேட்டோமா என்று உறுதிப்படுத்தி கொள்ள கேட்க, அவனோ,

“ம்ம்ம் ஆமா, சின்ன வயசுல மீன் சாப்பிடுற சேன்ஸ் கிடைக்கல, அப்புறம் வளர்ந்து வெளிய ஹோட்டல்ல சாப்பிடும் போது, மீன் பக்கமே போகல நான்”

என்று விளக்க, பொற்செழியன் வளர்ந்த இடம் நங்கைக்கு தெரியாது என்பதால், அவளோ அது எப்படி, வீட்டில் மீன் சமைக்காமல் இருந்திருப்பார்கள், என்று யோசித்து கொண்டு இருந்தாள்.

அப்போது தான் அவளுக்கு, தனக்கு பொற்செழியனுக்கு யாரும் இல்லை என்று தெரியுமே தவிர, அவன் எங்கே வளர்ந்தான், படித்தான், என எதுவுமே தெரியாது என்பது நினைவுக்கு வந்தது.

பொற்செழியனின் சிறு வயதை பற்றி கேட்க நினைத்து, நங்கை வாயை திறக்க, பொற்செழியனோ அதற்குள்,

“நெஸ்ட் மண்டே உன்னோட லீவ் முடியுது இல்ல”

என்று வேறு ஒரு கேள்வி கேட்க, அவனின் கேள்விக்கு பதிலாக,

“ஹ்ம்ம் ஆமாங்க”

என, பொற்செழியன் யோசனையுடன்,

“பொதுவா ஐ.டி கம்பனில மேரேஜ்க்கு பதினைந்து நாள் லீவ் கொடுப்பாங்க இல்ல”

என்று கேட்க, அதற்கு ‘ஆமாம்’ என்று தலையசைத்த நங்கை,

“பட் நம்ப மேரேஜ் சடன் அஹ பிக்ஸ் ஆனதால், லீவ் பிளான் பண்ண முடியல, ஒரு வாரம் தான் லீவ் கிடைச்சது, நீங்க என்னைக்கு ஆபிஸ் போகணும்”

என்று அவனை கேட்க, அவளின் தலையை மெதுவாக வருடிவிட்டு, நங்கையை சுற்றி கையை போட்டு தன்னுடன் மெதுவாக அணைத்துக் கொண்ட பொற்செழியன்,

“நானும் மண்டே ஆபிஸ் போகலாம்னு தான் இருக்கேன் கண்ணம்மா”

என்று சொல்ல, இப்படியாக இவர்களின் பேச்சுகள் நீண்டு கொண்டே சென்றது. அன்றிலிருந்து நன்மாறனும் பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்க, பொற்செழியன், அந்த சிறிய கூட்டில் தன்னையும் இணைத்து கொண்டான்.

அந்த ஒரு வாரமும், நங்கைக்கு அவளவனின் விருப்பங்களை புரிந்து, தெரிந்து கொள்ளும் முயற்சியில் சென்றது என்றால், பொற்செழியனுக்கோ, நங்கையை தெரிந்து கொள்ளும் ஆவலிலே சென்றது.

இதற்கிடையில் நன்மாறனும், தன் தயக்கங்களை விட்டு வெளிவந்து, நங்கை மீது பொற்செழியன் காட்டும் பாசத்தில் கரைந்து, அவனிடம் முன்போல சகஜமாக, அதேநேரம் மாமா என்றழைத்து பேசவும் ஆரம்பித்து இருந்தான்.

அன்று திங்கள் கிழமை வழக்கம் போல, காலை நங்கை எழ, அவளின் அருகில் முதல் நாள் போலவே, முகம் மலர, சிறு குழந்தை போல உறங்கி கொண்டிருந்தான் பொற்செழியன்.

ஒரு சுண்டு விரலால், தலைவனின் முக வடிவை அளந்த நங்கை, புன்னகையுடனே எழுந்து, குளித்து சமையறைக்கு சென்றாள்.

வாடா புன்னகையுடன் இருந்த நங்கை, தன் வழக்கம் போல புல்லாங்குழல் இசையை இசைக்க விட, அந்த ஓசையில் துயில் கலைந்தான் பொற்செழியன்.

எப்போதும் மிக மெலிதாக கேட்கும் இசை, இன்று வெகு அருகில் கேட்க, அதைப்போலவே தன்னவளும், தனக்கு அருகில் இருப்பதை புரிய, அவனின் அதரங்கள் புன்னகையில் விரிந்தது.

தானும் வேக வேகமாக குளித்தவன், படித்து கொண்டிருந்த நன்மாறனிடம் இரண்டு வார்த்தை பேசியவன், நங்கைக்கு உதவிக்கு செய்யவென சமையலறைக்குள் நுழைந்தான் பொற்செழியன்.

விடிந்ததும் விடியாத பொழுதில், அந்த சின்ன சமையலறையில், ஒருவரோடு ஒருவர் பேசி கொண்டு, இப்படி அப்படி நகரும் போது, தோள் உரச சமைப்பது கூட, சுக அனுபவமாக தான் இருந்தது அவனுக்கு.

நங்கை சமைத்து முடித்து, அலுவலகத்திற்கு உடைமாற்றி கிளம்ப செல்ல, நங்கை எடுத்து வைத்திருந்த டப்பாக்களில், நங்கைக்கு இரண்டு வேளை உணவையும், நன்மாறனுக்கும், தனக்கும் மதிய உணவை எடுத்து வைத்தான் பொற்செழியன்.

நங்கை கிளம்பி வந்ததும், எப்போதும் வழியில் தூரமாக நின்று பார்த்து ஏங்குபவன், இன்று உரிமையாக, தன் இருசக்கர வாகனத்திலேயே அழைத்து சென்றான்.

பொதுவாக நன்மாறனும் பள்ளிக்கு கிளப்பி சென்ற பின், தாமதமாக கிளம்பும் பொற்செழியன் அன்று நங்கை கிளப்பியதும், தனக்கும் வேலை இருக்கிறது என்று சின்னவனிடம் சொல்லி விட்டு, தயாராக ஆரம்பித்தான்.

கையில் நங்கை அவனுக்காக சமைத்து கொடுத்திருந்த மதிய உணவு பை வேறு. நேற்றே பொற்செழியனை கடைக்கு அழைத்து சென்று, அவனுக்கு ஏற்ற மாதிரி உணவு பையை வாங்கி இருந்தாள் நங்கை.

இத்தனை வருடங்களில் பொற்செழியனுக்கு இதுவே முதல் முறை. இப்படி உணவு, அதுவும் வீட்டில் சமைத்த உணவை எடுத்து செல்வது.

அதுவும் தான் இப்போது போகும் இடமும், செய்ய போகும் வேலையும் நினைவுக்கு வர, தன்னை மீறி புன்னகைத்தவன், மாடிக்கு தன் வீட்டிற்கு சென்று, தான் பத்திர படுத்தியிருந்த பொருளை எடுத்து கொண்டு கிளம்பினான்.

நேராக வெற்றி, தமிழ் இருக்கும் தனி வீட்டிற்கு செல்லாமல், அந்த மருந்தை பதுக்கி வைத்திருக்கும் கிடங்கிற்கு சென்றான் பொற்செழியன்.

ஊரின் ஒதுக்கு புறமான அந்த கிடங்கிற்கு, பின் புறமாக சென்றவன், வாகனத்தின் ஓசை கேட்கும் தொலைவிலேயே, தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டான் பொற்செழியன்.

பின்பு அதை அடர்ந்த செடிகளின் மறைவில் நிறுத்தியவன், தான் கொண்டு வந்த அந்த முக்கியமான பொருளை மட்டும் எடுத்து கொண்டவன், கருப்பு நிற முகமூடி ஒன்றையும் அணிந்து கொண்டான்.

பட்ட பகலில், அவனை யாரேனும் இப்படி பார்த்தால் என்ன அனர்த்தம்வெல்லாம் விளையுமோ என்னவோ….

ஆனால் கிடங்கில் சதி வேலைகள் பெரும்பாலும் இரவில் நடப்பதாலும், இருளும், சுற்றிலும் இருக்கும் செடி, கொடிகளும் எதிரிகள் மறைந்திருக்க தோதாக இருக்கும் என்பதாலும், இங்கு இரவில் காவலுக்கு ஆட்கள் அதிகம்.

பகலில் யாரேனும் வந்தாலும் சுலபமாக தெரிந்து விடும் என்பதால், இருவர் மட்டுமே காவலுக்கு. அவர்களும் பெரும்பாலும், கிடங்கை சுற்றி நடந்து கொண்டே தான் இருப்பார்கள்.

காலை நேரத்தில் அவர்கள் சாப்பிட அமரும் நேரம் தான் தனக்கு சாதகமான நேரம் என்பதை முன்பே கணித்து, சரியாக அந்த நேரத்திற்காக வந்து காத்திருந்தான் பொற்செழியன்.

இரு சக்கர வாகனம் வரும் ஓசை கேட்க, அது காவலர்களுக்கு உணவு என்பது புரிய, உணவை தந்து விட்டு, அந்த இருசக்கர வாகனம் திரும்பி செல்லும் ஓசை கேட்க, அது மறையும் வரை அப்படியே நின்றான் பொற்செழியன்.

பின்பு சத்தம் வராமல் பதுங்கி, பதுங்கி கிடங்கின் பின்பக்க சுவரின் அருகில் சென்றவன், சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்து கொண்டான்.

பின் பக்கம் எந்த சத்தமும் இல்லை, யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவன், நிமிர்ந்து சுவரின் உயரத்தை கண்களால் கணக்கிட்டான்.

பின்பு இரண்டு எட்டு பின்னால் எடுத்து வைத்தவன், ஓடி வந்து சுவற்றில் கால் வைத்து, ஒரே தாவாக தாவி, சுவற்றின் மேல் ஏறினான்.

அந்த பக்கம் யாரும் இல்லை என்பதை ஒருமுறை உறுதி செய்து கொண்டவன், சத்தம் எழுப்பாமல் தரையில் மெதுவாக குதிக்கவும் செய்தான்.

குதித்த வேகத்திலேயே உள்ளே இருந்த, செடியின் மறைவுக்கு உருண்டு சென்றவன், மீண்டும் ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு, இரும்பு தகரத்தால் ஆனா அந்த கிடங்கை சுற்றி கண்களை ஓட்டினான்.

கிடங்கின் பின் பக்கம் இருந்த, பெரிய துருப்பிடித்த தகர கதவுக்கு கீழ், சிறிய இடைவெளி இருக்க, அதில் நுழைந்தவன், தகரம் தன்னை பதம் பார்க்காமல், கவனமாக நழுவி உள்ளே சென்றான்.

உள்ளே சென்று பார்க்க, அந்த பகல் பொழுதிலும், அந்த கிடங்கு இருண்டு கிடந்து. சற்று நேரம் நின்று, பார்வையை அந்த இருட்டுக்கு பழகி கொண்டான் பொற்செழியன்.

அந்த பெரிய கிடங்கு முழுதும், தடுப்புகள் எதுவும் இன்றி, ஒரே அறைப் போல இருக்க, அங்கங்கு இருட்டில் இன்னதென்று இனம் காண முடியாத, பல பொருட்களும் கிடந்தன.

அந்த கிடங்கு இருந்த இருப்புக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல், அதன் மறு கோடியில் ஒரு பெரிய அறை, பளிச்சென இருந்தது.

தனக்கு வேலை அங்கு தான் என்று புரிய, பொற்செழியன் அந்த அறையை நோக்கி நடக்க ஆரம்பிக்க, யாரோ கிடங்கின் முன் பக்க கதவின் அருகே பேசும் சத்தம் கேட்டது.

அதை கேட்ட பொற்செழியனோ, ஒருவேளை அவர்கள் உள்ளே வந்தால் எப்படி சமாளிப்பது, என்று மின்னல் விரைவில் நிலைமையை அலசியப்படியே நின்றிருந்தான்.

காந்தன் வருவான்……….

Advertisement