Advertisement

இன்னும் திருமணத்திற்கு நான்கு நாட்கள் என்னும் நிலையில், தன் வழக்கம் போல, இரவின் ஏகாந்த அந்தகாரத்தில், தன்னை தொலைத்து கொண்டிருந்தான் செழியன்.

சோகமோ அல்லது மகிழ்ச்சியோ இப்படி விண்மீன்களோடு பகிர்ந்து கொள்வது செழியனின் வழக்கம்.

இந்த வழக்கத்தை செழியனுக்கு, அறிமுகப்படுத்தியது கூட நங்கை தான்.

நமது சோகத்தையோ அல்லது மகிழ்ச்சியையோ, வாய் விட்டு யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத போது அல்லது பகிர யாருமே இல்லாத போது, இந்த விண்மீன்கள் நமக்கு ஆறுதலாக இருக்குமாம்.

நாம் சோகத்தில் இருக்கும் போது, சோபையுடன் ஒளிரும் விண்மீன்கள், நமக்கு ஆறுதல் சொல்வது போல இருக்குமாம்.

நாம் மகிழ்ச்சியில் இருக்கும் போது, கண் சிமிட்டி சிரிக்கும் விண்மீன்கள், நம் மகிழ்ச்சியை நம்மோடு சேர்ந்து கொண்டாடுவது போல இருக்குமாம்.

நங்கை இப்படி தன் தோழியிடம், விண்மீன்களை பற்றி பேசியதை கேட்க நேர்ந்த போது தான், செழியனின் கவனம் நங்கையின் பக்கம் திரும்பியது.

முழுதாக இருள் கவிழாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக நட்சத்திரம் எட்டி பார்க்க ஆரம்பித்திருந்த, அந்தி மாலையில் தான் முதல், முதலாக நங்கையை பார்த்தான் செழியன்.

அன்று செழியனும் ஒரு பெரிய வருத்தத்தில் உழன்று கொண்டிருக்க, நங்கை தன் தோழியிடம் பேசியது, தனக்காகவே சொல்லியது போல இருந்தது அவனுக்கு.

அப்போது நங்கையின் பெயர் செழியனுக்கு தெரியாது. ஏனோ அவனுக்கு, “எவன்ஜெலின்” என்ற பெயரை தான் நங்கைக்கு சூட்ட தோன்றியது.

அதற்கு பிறகு அங்கே, இங்கே என்று கிட்டத்தட்ட தினமும் இவன் நங்கையை பார்க்க, ஏதோ ஒரு புள்ளியில், அவளுடன் தன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று பேராவல் கொண்டான் செழியன்.

தான் சூட்டிய பெயரை போலவே, அவளும் தன் கைக்கு எட்டாத நிலவாக போகிறாள் என்றோ, தான் அவளுக்காக ஏங்கி தவிக்க போகிறோம் என்றோ அன்று செழியன் அறிந்திருக்கவில்லை.

எதை, எதையோ நினைத்து கொண்டிருந்த செழியனுக்கு, இன்று புடவை எடுக்க கடைக்கு சென்றிருந்த போது, அங்கு நடந்தது நினைவில் காட்சி போல விரிந்தது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், செழியன், நங்கை திருமணம் செய்வது என்று, தேவி பாட்டியும், கற்பகம் சித்தியும் முடிவு செய்து இருந்தனர்.

அன்று அனைவர் முன்னிலையிலும், நங்கையிடம் சம்மதம் வாங்கிய பிறகு, தேவி பாட்டி பத்து வயது குறைந்தது போல, ஓடியாடி கல்யாண வேலைகளை பரபரவென பார்த்து கொண்டிருந்தார்.

செழியனை அழைத்து கொண்டு, கோவிலுக்கு சென்று, அங்கு திருமணத்திற்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்துவிட்டு, பணமும் செலுத்தி முன் பதிவு செய்து வந்தார்.

இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் கோவிலில் நடந்ததாலும், முறையாக பதிவு செய்தால் தானே, திருமணம் சட்ட ரீதியாக செல்லும்.

ஆனால் திரைப்படத்தில் காட்டுவது போல, நினைத்த மாத்திரம் எல்லாம் சென்று, பதிவு திருமணம் செய்ய முடியாதே.

அதற்கு குறைந்தது ஒரு மாதம் முன்பே, அவர்கள் கேட்கும் சான்றிதழ்கள் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.

அது போக ஒரு வாரம் அறிவிப்பு பலகையில், திருமணத்திற்கு சமர்ப்பித்த விண்ணப்பம், மணமகன், மணமகள் புகைப்படத்துடன் ஒட்டப்படும்.

இப்படி ஏகப்பட்டது இருக்க, திருமணத்தை பதிவு செய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை எல்லாம் முறைப்படி செய்தான் செழியன்.

இன்று நல்ல நாள் என்று, செழியனையும், நங்கையையும் புடவை எடுக்க அழைத்து வந்து இருந்தனர், இரு பெண்மணிகளும்.

கூடவே நன்மாறனையும் அழைத்து வந்து இருந்தான் செழியன். முகூர்த்த புடவை எடுக்கும் பிரிவிற்கு வந்ததும், செழியனை பார்த்த தேவி பாட்டி,

“செழியா முகூர்த்த புடவை எவ்ளோல வாங்கனும்”

என்று கேட்க, புரியாமல் அவரை பார்த்த செழியன்,

“எனக்கு புடவை பற்றி ஒன்னும் தெரியாது ஆயா, என் கிட்ட கேட்டா நான் என்ன சொல்றது”

என்று விழிக்க, தேவி பாட்டியோ,

“அடேய் உன்னை ஒன்னும் புடவை எப்படி எடுக்கணும்னு கேட்கலை, முகூர்த்த புடவை பொண்ணுக்கு, மாப்பிள்ளை வீட்டுல தான் எடுக்கணும், அதான் முறை, புடவைக்கு நீ எவ்ளோ பட்ஜெட் வச்சி இருக்கனு கேட்குறேன்”

என்று விளக்கமாக சொல்ல, இது எல்லாம் ஒரு விஷயமா என்று அவரை பார்த்த செழியன்,

“நங்கைக்கு பிடிச்ச புடவையா எடுங்க, விலை எவ்ளோவா இருந்தாலும் பரவாயில்லை”

என்று சொல்ல, தன் வழக்கம் போல அவனிடம் வம்பு வளர்க்கும் விதமாக,

“செழியா புடவை விலை பத்தி தெரியாம பேசாத, ஒன்னரை லட்சம், ஏன் அதை விட அதிகமான விலைல எல்லாம் முகூர்த்த புடவை இருக்கு”

என்று சொல்ல, செழியனோ,

“என்னது ஒரு புடவை ஒன்னரை லட்சம் அஹ”

என்று வாயை பிளக்க, அவனின் பாவம், இப்போதும் நங்கைக்கு புன்னகையையே தர, தேவி பாட்டியிடம்,

“ஒரு ஐந்துல இருந்து ஏழுல பார்க்கலாம் ஆயா”

என்று சொல்ல, தன் மலைப்பில் இருந்து வெளியே வந்த, செழியன் நங்கையிடம்,

“ஆயா சொன்ன புடவை விலை எங்க இருக்கு, நீங்க சொல்ற விலை எங்க இருக்கு, நல்ல புடவையாவே வாங்குங்க நங்கை”

என்று சொல்ல, அவனை முதன் முதலில் கண்ணோடு கண் பார்த்து புன்னகை செய்த நங்கையோ,

“ஆயிரம் ரூபாய்ல கூட புடவை இருக்குங்க, இந்த காசுக்கு புடவை நல்லாவே இருக்கும், பட்டு புடவை எல்லாம் அதிகமா யூஸ் பண்ண மாட்டேன், முக்கால்வாசி நாள் பீரோல தூங்க தான் போகுது, அதுக்கு எதுக்கு பத்தாயிரம், இருபதாயிரத்துக்கு எடுக்கணும்”

என்று செழியனிடம் சொன்னவள், கடைக்காரரிடமும் தான் சொன்ன விலையில் புடவை எடுத்து போட சொல்லி, பார்க்க ஆரம்பித்தாள்.

நங்கையின் பொறுப்பை நினைத்து மகிழ்ந்த பெரியவர்கள் இருவரும், அதை வெளிக்காட்டி கொள்ளாமல், “இதை எடுங்க, அதை எடுங்க ” கடைக்காரை ஒரு வழி பண்ண ஆரம்பித்தனர்.

இதுவரை புடவை வாங்கவே வந்து இருக்காததால், அதை பற்றி ஒன்றும் தெரியாததால், விலையை கேட்டு செழியன் மலைத்து இருக்க, நங்கையோ அவன் விலையை கேட்டு மிரண்டு விட்டதாக நினைத்து கொண்டாள்.

நடுத்தரவர்க்கத்தில் இருக்கும் மக்கள் எல்லாம், இலட்சத்தில் புடவை எடுக்க ஆசை பட முடியுமா என்ன….

பெண்கள் அருகில் அவர்களுக்கு அரணாக நின்றபடி, அதே நேரம் அவர்களை தொந்தரவு செய்யாமல், நன்மாறனும், செழியனும் உரையாடி கொண்டு இருந்தனர்.

ஆழ்ந்த இளம்பச்சை நிறத்தில், தங்க நிறத்தில் உடல் முழுதும் புட்டா போட்டு, அடர் ரோஜா நிறத்தில் பாடர் கொண்ட புடவை ஒன்றை நங்கை எடுத்தாள்.

அதன் அழகில் கவரப்பட்டு, அதை எடுத்து பார்த்த நங்கை, அதை இப்படியும், அப்படியும் திருப்பி பார்த்துவிட்டு, எடுத்த வேகத்திலேயே, ஒரு ஓரமாக வைத்துவிட்டாள்.

அதன் பின்பு நங்கையின் கண்கள், அந்த புடவையின் பக்கம் போகவே இல்லை. தன் முன் இருந்த புடவையில் இருந்து, சித்தி, பாட்டி எடுத்து காட்டியவற்றில் அலசி, அரக்கு நிற புடவை ஒன்றை தேர்ந்தெடுத்தாள்.

கடையில் இருக்கும், பெண் ஊழியர் ஒருவர் வந்து, நங்கை அணிந்திருந்த சுடிதாரின் மேல், அந்த புடவையை உடுத்தி விட, ஆள் உயர கண்ணாடியில் ஒரு முறை தன்னை பார்த்த நங்கை, அடுத்து செழியனை தான் பார்த்தாள்.

செழியனின் விருப்பத்தை அறிய வேண்டி, அவனை பார்க்க, பேச்சு ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், கவனத்தை நங்கையின் மேல் வைத்திருந்த செழியனுக்கு, அவள் செயலுக்கான காரணம் புரியவில்லை.

புடவையை பற்றி ஒன்றும் தெரியாது என்ற போதும், நங்கை இப்போது உடுத்தியிருப்பதை காட்டிலும், முதலில் எடுத்து, பின்பு ஓரமாக வைத்த ஆழ்ந்த பச்சை நிற புடவை, நங்கைக்கு எடுப்பாக இருக்கும் என்று தான் தோன்றியது செழியனுக்கு.

நன்மாறனிடம், ஒரு நிமிடம் என்று சொன்னவன், முதலில் எடுத்த அந்த புடவையை எடுத்து, நங்கையிடம் நீட்டி,

“இதை விட, இந்த புடவை உங்களுக்கு எடுப்பா இருக்கும்னு தோணுது நங்கை “

என்று சொல்ல, அப்போது தான் அந்த புடவையை பார்த்த கற்பகம் சித்தி, அதை கைகளில் வாங்கி பார்த்தவாறு,

“ஆமா நங்கை இது இன்னும் நல்லா இருக்கு”

என்று சொல்ல, நங்கையோ மெல்லிய குரலில் முணுமுணுப்பாக,

“புடவை நல்லா தான் இருக்கு, விலை தான் நல்லா இல்ல”

என்று சொல்ல, அவளின் அருகில் நின்றிருந்த செழியனுக்கு நன்றாகவே நங்கை சொன்னது காதில் விழுந்தது.

கற்பகம் சித்தியின் கையில் இருந்த புடவையை வாங்கி, செழியன் விலையை பார்க்க, அதுவோ ஒன்பதாயிரம்.

இயல்பான ஆசை கூட இல்லாமல், விலை தான் யோசித்து வைத்ததை விட அதிகம் என்ற ஒரே காரணத்தினாலே, அதை கண் எடுத்தும் பார்க்காத நங்கையின் மனதிடம், செழியனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அதே சமயம், தன் வங்கி கணக்கில் இருக்கும் தொகையை நினைத்து பார்த்த செழியனுக்கு, வெறும் இரண்டாயிரம் ரூபாய்க்காக, பிடித்த ஒன்றை, நங்கை வாங்காமல் போவதும் பிடிக்காமல் போக,

“நீங்க தான் செவன் தவுசண்ட் பட்ஜெட் சொன்னிங்க, நான் சொல்லல, என்னோட பட்ஜெட் டென், இது என்னோட பட்ஜெட் விட, தவுசண்ட் கம்மியா இருக்கு, இதையே எடுத்துக்கலாமே நங்கை”

என்று நயமாக சொல்ல, நங்கையோ செழியன் எண்ணம் புரிந்தவளாக,

“எவ்ளோ சிம்பிள் அஹ பண்ணாலும், கல்யாணம்னு வந்துட்டா, செலவு நாம எதிர்பார்த்ததை விட அதிகமா தான் இழுக்கும், இப்படி அங்க, அங்க ஆயிரம், இரண்டாயிரம்னு தானேன்னு விட்டா, கடைசியில பெரிய அமௌண்ட் அஹ வந்து நிக்கும்”

என்று நிதர்சனத்தை சொல்ல, செழியனோ,

“என்னோட சேவிங்ஸ் இருக்கு நங்கை, சமாளிச்சுக்கலாம்”

என்று புன்னகையுடன் சொல்ல, அந்த புன்னகை நங்கையும் தொற்றி கொள்ள, அவளும் அதே புன்னகையுடன்,

“இருந்தா???? எல்லாத்தையும் கல்யாணத்துக்கே செலவு பண்ணனுமா என்ன, நீங்க இன்னும் நாளு நாள்ல பேமிலி மேன், அதனால எது பண்ணலாம் யோசிச்சி தான் பண்ணனும்”

என்று சொல்ல, இதுவரை நங்கை இப்படி உரிமையாக பேசி இராததால், செழியன் அவளை ஆச்சர்யமாக, அதே நேரம் உள்ளூர மகிழ்ச்சி முகிழ்க்க அவளை பார்த்தான்.

செழியனின் பார்வையை பார்த்த பின்பு தான், தான் பேசியது உரைக்க, நங்கை தன் தலையை குனிந்து கொள்ள, செழியனோ,

“கல்யாணம் வாழ்க்கையில் ஒரு தடவை நடக்க போற விஷயம், இதுல காம்ப்ரிமைஸ் பண்ண வேண்டாமே நங்கை”

என்று சொல்ல, இவ்வளவு தூரம் செழியன் சொல்ல, இதற்கு மேல் எப்படி மறுக்க, என்று நங்கை, அரைமனதாக தலையாட்ட, நங்கைக்கு தன் கையில் இருந்த புடவையை அணிவிக்க சொன்னான் செழியன்.

எல்லாருக்கும் இந்த புடவையே பிடித்து இருக்க, அதையே எடுத்து கொண்டனர். அதன் பின்பு இன்னும் சில சடங்குக்கு என நங்கைக்கு, குறைவான விலையில், இன்னும் இரண்டு, புடவைகளும் எடுத்தனர்.

பின்பு தேவி பாட்டியையும், கற்பகம் சித்தியையும் செழியன் புடவை எடுக்க சொல்ல, நங்கையின் சம்மதத்தோடு, ஓர் அளவுக்கு நல்ல விலையிலேயே எடுத்து கொண்டனர்.

செழியனுக்கு உடை எடுக்கும் போது, நன்மாறனுக்கு பிடித்த மாதிரி அவனுக்கும் உடை எடுத்தனர்.

எடுத்த உடைகளுக்கு பணம் செலுத்த செழியன் போக, அவனுக்கு எடுத்த உடைக்கு பணம் செலுத்த வேண்டும் என்பதால், நங்கையும் அவனுடன் சென்றாள்.

தனி, தனியாக பில் போட சொல்ல நங்கை போக , அவளின் கையை பிடித்து தடுத்த செழியன்,

“ஒரே பில் அஹ இருக்கட்டும் நங்கை, நானே பே பண்ணிடுறேன்”

என்று சொல்ல, நங்கை அமைதியாக நிற்க, செழியனுக்கு புரிந்துவிட்டது. தனியாக கணக்கு பார்த்து, அவள் தர வேண்டியதை, தனக்கு அனுப்பி விடுவாள் என்று.

இது அவளின் சுயமரியாதை, தான் இதில் தலையிட முடியாது என்பதால் செழியன் அமைதியாக இருக்க, இருவரும் பணம் செலுத்தும், வரிசையில் நின்றனர்.

செழியனின் அருகில் நின்ற நங்கை, அவனிடம் ஏதோ கேட்க வருவதும், பின்பு தயங்குவதுமாக இருக்க, அதை உணர்ந்த செழியன்,

“என்ன கேட்கணும் நங்கை”

என்று கேட்க, தயக்கம் விரவிய குரலில் நங்கை,

“நீங்க கல்யாணம் பண்ற அன்னைக்கும், இப்படியே தான் வருவீங்களா”

என்று கேட்க, ‘எப்படி’ என்று கேட்க நினைத்து நிமிர்ந்த செழியன், நங்கையின் பார்வை தன் தாடியில் நிலைத்திருக்க, அவள் கேட்பது புரிய,

“இ…..து……”

என்று இடது கையால் தாடியை வருடியபடி இழுக்க, அவனை சந்தேகமாக பார்த்த நங்கை,

“உங்களுக்கு எதாவது லவ் பெய்லியர் அஹ என்ன”

என்று கேட்க, அவள் மறைக்க முயன்றும் எரிச்சல், அவளின் குரலில் தெரிய, அவளின் பாவனையில், கேள்வியில், உதடுக்குள் சிரித்து கொண்ட செழியனோ மனதிற்குள்,

“உன்னை மிஸ் பண்ணி இருந்தா தான், லவ், லைப் ரெண்டுலையும் பெயில் ஆகி இருப்பேன்”

என்று நினைத்தவன், நங்கையின் கேள்விக்கு பதிலாக,

“என்னோட முதல் காதலும், கடைசி காதலும் இந்த நங்கை தான்”

என்று சொல்ல, அவனை இன்னதென்று பொருள் விளங்காத பார்வையை நங்கை பார்க்க, இதற்குள் இவர்களின் முறை வந்து இருக்க, செழியன் பணம் செலுத்தி ரசீது பெற்று கொண்டான்.

நங்கையின் எண்ணம் முழுக்க ‘காதல்’ என்ற வார்த்தையை சுற்றி ஓடி கொண்டிருக்க, நங்கையின் அதரங்களில், ஒரு புன்னகை விரிய, அதை பார்த்த செழியன்,

“ஏன் நங்கை சிரிக்கிற”

இருவரும் மற்றவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தபடி இருக்க, செழியனின் கேள்வியை கேட்ட நங்கை, அவன் எங்கே தவறாக எடுத்து கொள்வானோ என்ற தயக்கத்துடன்,

“இல்ல இந்த ‘காதல்’, அதான் எனக்கு புரியல”

என்று சொல்ல, செழியன் அவளை புரியாமல் பார்க்க, நங்கை கவனமாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து,

“முன்ன பின்ன தெரியாத ஒருத்தங்களை எப்படி பார்த்ததும் பிடிக்குது, அதுவும் வாழ்க்கையை அவங்கள நம்பி ஒப்படைக்கிற அளவுக்கு”

என்று கேட்க, செழியனோ,

“பொண்ணு பார்க்க வரும் போது, ரெண்டு நிமிஷம் பார்த்து, பிடிச்சி இருக்குன்னு சொல்லி, எப்படி கல்யாணம் பண்றாங்க”

என்று பதில் கேள்வி கேட்க, நங்கையோ,

“அது ஆல்ரெடி அப்பா, அம்மா எல்லாத்தையும் விசாரிச்சு இருப்பாங்க, பார்த்து ரெண்டு நிமிஷத்துல பிடிச்சி இருக்குனு சொல்றது, மாப்பிள்ளை மேல வர நம்பிக்கையில் இல்ல, தன்னோட ப்ரேண்ட்ஸ் மேல இருக்குற நம்பிக்கையில்”

என்று விலாசி தள்ள, செழியனோ நங்கை மீதான தன் காதலில் உள்ளுக்குள் உருகி கொண்டே,

“ஹ்ம்ம் காதல் ஒரு மென்உணர்வு நங்கை, அதை வார்த்தையில் சொல்லி எல்லாம் புரிய வைக்க முடியாது”

என்று சொல்ல, அதை தலையாட்டி அமோதித்த நங்கை,

“நான் காதலை தப்புனு சொல்லல, எனக்கு அது புரில அவ்ளோ தான்”

என்று சொல்ல, இப்படி சொல்லிய நங்கையை வித்தியாசமாக பார்த்த செழியன்,

“லவ் அஹ புரிஞ்சிக்க முயற்சி பண்ண கூடாது, உணர முயற்சி பண்ணனும் நங்கை”

என்று சொல்ல, புரிந்தும் புரியாமலும் தலையாட்டி வைத்தாள் நங்கை. அதற்கு பிறகு, அனைவரும் கல்யாணத்திற்கு தேவையானவற்றை, வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்திருந்தனர்.

காதலே புரியவில்லை என்று சொல்லும் நங்கையை, இத்தனை வருட தன் காதலை எப்படி உணர வைப்பது என்ற யோசனையில் மூழ்கி இருந்தான் செழியன்.

காந்தன் வருவான்..…….

Advertisement