Advertisement

நங்கையின் சித்தி, நங்கைக்கு அவள் சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்ட வரனுடன் தான் வந்திருப்பதாக சொல்ல, அதை கேட்ட, தேவி பாட்டி தான் அதிக அதிர்ச்சியில் இருந்தார்.

தேவி பாட்டி இரண்டு நாள் முன்னர் தான் முத்தையா தாத்தாவிடம், செழியனை பற்றிய தகவலை கறந்து இருந்தார்.

நாற்பதைந்து வருடத்திற்கு மேலான, அந்நியோன்யமான திருமண வாழ்க்கையில், முத்தையா தாத்தா இவ்வளவு நாள், செழியனை பற்றிய உண்மையை மறைத்ததே, பெரிய விஷயம் தான்.

தேவி பாட்டிக்கு செழியனை பற்றிய உண்மை தெரிஞ்சதும் கொஞ்சம் மலைப்பு தான். ஆனால் தான் கண்ணால் கண்ட, நங்கையின் மீதான அவனின் காதல், அவரை யோசிக்க வைத்தது.

இத்தனை வருட அனுபவத்தில், செழியனின் காதல் உண்மை என்று முன்பே அவர் அறிந்து இருந்தாலும், அவனின் பின்புலம் தெரியாததால் தான் அவர் யோசித்தது.

இப்போது அதுவும் தெரிந்து விட, அது கொஞ்சம் யோசனையை தந்த போதிலும், அவர் நங்கையின் சித்தியிடம், செழியனை பற்றி பேச சந்தர்ப்பம் எதிர் பார்த்திருக்க, இந்த சம்பந்தம் அவருக்கு பேரதிர்ச்சி.

சமூகத்தில் தன்னுடைய உயரத்தை காட்டி அலட்டி கொள்ளாமல், தன்னுடன் சரிக்கு சமமாக உரையாடும் செழியனின் முகமும், நங்கைக்காக தன்னிடமே சண்டையிட்ட செழியனின் முகமே கண் முன் வந்தது அவருக்கு.

நங்கைக்கோ இப்படி ஒரு வரனோடு தான் சித்தி வந்து இருப்பார் என்று எதிர்பார்க்காததால், இப்போது என்ன சொல்லி தவிர்ப்பது என்ற திகைப்பு.

முதலில் தன்னை சுதாரித்து கொண்ட தேவி பாட்டி, நங்கையின் சித்தியிடம்,

“என்ன கற்பகம் என் கிட்ட கூட சொல்லலேயே”

என்று சிறு மனத்தாங்களுடன் கேட்க, அவரை நோக்கி மன்னிப்பு கேட்கும் விதமாக, கெஞ்சலான பார்வை பார்த்த கற்பகம் சித்தி,

“இந்த பொண்ணு, என்ன சொல்லுவாலோ, ஏதோன்ற டென்ஷன்ல சொல்ல மறந்துட்டேன், மன்னிச்சிடுங்க தேவிமா”

என்று தேவி பாட்டியிடம் சொன்னவர், நங்கையிடம் வெகு உற்சாகமாக,

“மாப்பிளை பேரு வசந்த், உன்ன மாதிரி ஐ.டில தான் வேலை, மாப்பிள்ளை அப்பா, அம்மா எல்லாம் சிதம்பரம்ல இருக்காங்க, மாப்பிள்ளை மட்டும் இங்கே தனியா வீடு எடுத்து தங்கி இருக்கார்”

என்று சொல்ல, அவரின் உற்சாகம் துளி கூட இல்லாமல், நங்கை கடனே என்று அவர் சொல்லுவதை கேட்டு கொண்டிருந்தாள்.

அவர் மூச்சுக்கு தடவை மாப்பிள்ளை என்ற விளிக்க, அதில் கடுப்பான தேவி பாட்டி,

“நங்கைக்கு பையனை பிடிக்கணும், அவங்களுக்கு பொண்ணை பிடிக்கணும், எல்லாம் முடிவு ஆகுறதுக்குள்ள மாப்பிள்ளை, அது இதுன்னு எல்லாம் எதுக்கு சொல்லற கற்பகம்”

என்று பெரியவராக சற்று அதட்டலுடன் கேட்டவர், கற்பகம் சித்தி ஏதோ பதில் சொல்ல வர, அவருக்கு வாய்ப்பே கொடுக்காமல்,

“சொந்த ஊரு சிதம்பரம்னு தானே சொன்ன, அவங்க அப்பா, அம்மாவை உனக்கு தெரியுமா என்ன”

என்று நயமுடன் எந்த அளவுக்கு பேச்சு வார்த்தை சென்று இருக்கிறது என்று அறிய கேட்க, கற்பகம் சித்தியோ வெள்ளந்தியாக,

“வசந்த் அம்மா எனக்கு பிரின்ட் தேவிமா, ரொம்ப நாள் கழிச்சு அவங்களை கோவில்ல பார்த்த அப்போ தான், நங்கைக்கு வரன் பார்க்குறதா சொன்னேன், அவங்களுக்கு நங்கையை ரொம்ப பிடிச்சிடுச்சு”

என்று நங்கைக்கு ஒரு நல்ல வரன் அமைய போகும் உண்மையான மகிழ்ச்சியில் சொல்ல, தன் மனதில் வேறு கணக்கு வைத்திருந்த தேவி பாட்டியோ,

“கோவிலுக்கு போனமா, சாமி கும்பிட்டமா வந்தோமானு இல்லாம, அங்கு போய் மாப்பிள்ளை புடிச்சிக்கிட்டு வந்து இருக்கா, இவளை”

என்று மனதிற்குள் கற்பகம் சித்தியை தாளிக்க, இதை அறியாத கற்பகம் சித்தியோ நங்கையிடம்,

“அப்போ இன்னைக்கு சாயந்திரம் மா… ஹ்க்கும் வசந்த் வர சொல்லவா”

என்று மாப்பிள்ளை என்று சொல்ல வந்தவர், தேவி பாட்டியின் அதட்டல் நினைவில் அதை மாற்றி பெயரை சொல்லி கேட்க, அவரை முறையோ முறை என்று முறைத்த தேவி பாட்டி,

“எதுக்கு இப்போ இவ்ளோ அவசரம், ஆர அமர நல்ல நாள் பார்த்து வர சொல்லலாம், ஆமா அது என்ன பையன் மட்டும் வருவான்ற மாதிரி சொல்ற, பொண்ணு பார்க்க அப்பா, அம்மா எல்லாம் வர வேண்டாமா”

என்று கேட்க, கற்பகம் சித்தியோ,

“இன்னைக்கே நாள் நல்லா தான் இருக்கு தேவிமா, மா…. ஹுக்கும் வசந்த் இங்க தானே வேலை பார்க்குறாரு, அதனால் அவர் முதல்ல வந்து நங்கையை பார்க்கட்டும், பேசட்டும். அதுக்கு அப்புறம் முறைப்படி எல்லாம் பண்ணிக்கலாம்னு நான் தான் சொன்னேன்”

என்று சொல்லி ‘எப்படி என் திட்டம்’ என்று பெருமையாக, தேவி பாட்டியை ஒரு பார்வை பார்க்க, அவரோ அவரின் மீது ஏக கோவத்தில் இருந்தார்.

தேவி பாட்டியின் மீதிருந்து தன் பார்வையை நங்கையின் மீது திருப்பிய அவளின் சித்தி,

“சாயந்திரம் ஆறு மணிக்கு வசந்த் வருவாருடா, பேசி பாரு, உனக்கு கண்டிப்பா பிடிக்கும்”

என்று நம்பிக்கையுடன் சொல்ல, நங்கை எதுவுமே சொல்லாமல், ஒரு தலையாட்டலுடன் எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

அப்போது தானும் ஆறு மணிக்கு வருவதாக சொல்லி, கற்பகம் சித்தியிடம் விடைபெற்ற தேவி பாட்டியோ, பயங்கர யோசனையுடன் தன் வீட்டிற்கு சென்றார்.

நன்மாறனிடம் மாலை, கற்பகம் சித்தியின், தோழி ஒருவரின் மகன் சென்னையில் வேலை பார்ப்பதாகவும், அவர் கற்பகம் சித்தியை காண வர விருப்பதாகவும், மட்டுமே சொல்லி இருந்தாள் நங்கை.

சரியாக மாலை ஆறு மணிக்கு, கற்பகம் சித்தி, நங்கைக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை திருவாளர் வசந்த் வந்து விட்டார்.

சித்தியின் வற்புறுத்தலின் பெயரில், கொஞ்சம் நல்ல சுடிதார் அணிந்து, தலை வாரி, முகம் கழுவி, இருந்தாள் நங்கை.

வசந்த் வந்ததும், அவனை வரவேற்று அந்த சிறிய வரவேற்பறையில் அவன் ஒரு இருக்கையில் அமர வைக்க, தேவி பாட்டியும் ஒரு இருக்கையில் அமர்ந்தார்.

நங்கை சமையலறையில் வாயிலில் நிற்க, நன்மாறன் அவளின் அருகில் நிற்க, கற்பகம் சித்தியோ, அமர்ந்திருந்த தேவி பாட்டியின் அருகில் நின்று வசந்த்துடன் பேசி கொண்டிருந்தார்.

எப்போதும் தாமதமாக வரும் செழியன், அன்று அந்த நேரத்திற்கு வீட்டிற்கு வந்து இருந்தான். அதுவும் உற்சாகத்துடன் விசில் அடித்து கொண்டு மாடியேற, தேவி பாட்டியும், நங்கையும் அவனை கவனித்தனர்.

தேவி பாட்டியோ,

“இங்க என்ன நடந்துகிட்டு இருக்குனு தெரியமா, சந்தோசத்துல விசில் அடிச்சிக்கிட்டு போறான் பாரு, இவனை”

என்று பல்லை கடிக்க, நங்கையோ நன்மாறனை கூப்பிட்டு,

“மாறா, நீ மேல போய், கொஞ்ச நேரம் உன்னோட பிரின்ட் செழியன் சார் கிட்ட பேசி கிட்டு இரு”

என்று சொல்ல, ஏனோ அக்கா தான் இங்கு இருப்பதை விரும்பவில்லை என்று புரிந்து கொண்ட நன்மாறனும்,

“சரி அக்கா”

என்று சொல்லி, வந்தவரிடம் ஒரு தலையசைப்புடன், செழியனின் வீட்டிற்கு படியேறி இருந்தான்.

நன்மாறன் இன்நேரம் செழியனின் வீட்டிற்குள் சென்று இருப்பான் என்று கணிக்கிட்ட நங்கை, வந்ததில் இருந்து ஓர பார்வையில் தன்னை பார்த்து கொண்டிருந்த வசந்த்திடம்,

“சித்தி என்னோட கண்டிஷன் என்னனு சொல்லி இருப்பாங்கனு நினைக்கிறேன்”

என்று எந்த பூச்சும் இல்லாமல், நேரடியாக விஷயத்தை ஆரம்பிக்க, இப்போது அவளை நேர் பார்வை, அதுவும் மிதப்பாக பார்த்த வசந்த்,

“நன்மாறனோட பொறுப்பு பற்றி தானே, ஹ்ம்ம் சொன்னாங்க, இப்போ டுவெல்த் படிக்கிறான் இல்ல, நெஸ்ட் இயர் காலேஜ், நாமளே ஒரு நல்ல ஹாஸ்டலோட இருக்குற காலேஜ் அஹ பார்த்து சேர்த்து விடுவோம்”

என்று நாசுக்காக, நன்மாறன் திருமணத்திற்கு பிறகு தங்களுடன் தங்க முடியாது என்று சொல்ல, வெற்று பார்வை அவனை பார்த்த நங்கை,

“காலேஜ் பீஸ் எல்லாம்”

வசந்த் அதை பற்றி என்ன யோசித்திருக்கிறான் என்று அறிய நினைத்து கேட்க, பெருந்தன்மையுடன் அவளை பார்த்த வசந்த்,

“உங்க பேரண்ட்ஸ் இன்சூரன்ஸ் மணி இருக்குனு ஆண்ட்டி சொன்னாங்க, அதுல நன்மாறனோட பங்கை, அவன் படிக்க கொடுத்துடுவோம்”

என்று சொல்ல, கற்பகம் சித்தியோ சங்கடமாக நங்கையை பார்க்க, தொடர்ந்து பேசிய வசந்த்தோ,

“நான் வாங்குற சேலரிக்கு, நிறைய நகை போட்டு, பைக் எல்லாம் வாங்கி கொடுக்குறோம்னு சொல்லி நிறைய வரன் வருது, ஆனா எனக்கு உன்னை பிடிச்சி இருக்கு நங்கை, அதனால தான் பெரிய மனசு பண்ணி நன்மாறன் பொறுப்பை ஏற்க கூட சம்மதிச்சி இருக்கேன்”

என்று ஏதோ நங்கையை போனால் போகிறது என்பது போலவும், நன்மாறனுக்கு அவனுக்குரிய பணத்தை அவனுக்கு கொடுப்பதே, தன் பெருந்தன்மை போலவும் பேசி வைத்தான் அவன்.

கடந்து போன நாட்களில் நிறைய விதமான மனிதர்களை பார்த்திருந்த நங்கை, இதற்குள் வசந்த்தை பற்றி கணித்து இருந்தாள்.

இந்த வரனை பற்றி, ஒரு முடிவுக்கும் வந்திருந்த நங்கை, வசந்த்தை நேராக பார்த்து,

“சாரி மிஸ்டர்.வசந்த், இ…து…., இந்த சம்பந்தம் சரியா வாரது”

என்று சொல்ல, இதை சற்றும் எதிர்பார்க்காமல் திகைத்து போய்,

“என்ன ஆண்ட்டி இது எல்லாம்”

என்று நங்கையை விட்டு, கற்பகம் சித்தியிடம் கேள்வி எழுப்பினான் வசந்த். அவனின் திட்டம் எங்கு தோற்று போய் விடுமோ என்ற பயம் அவனுக்கு.

பின்னே வசந்த் பலதும் யோசித்து அல்லவா இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருந்தான். பெற்றோர் இல்லை, அடித்தால் ஏன் என்று கேட்கவோ அல்லது கோவித்து கொண்டு செல்ல பிறந்தகமும் இல்லை.

அதோடு நல்ல சம்பளம் வேறு. பெருந்தன்மையாக காட்டி கொண்டு திருமணம் செய்து கொண்டால், அந்த நன்றியில் நங்கையையும், அவன் சொல் படி கேட்டு நடப்பாள் என்றல்லவா நினைத்து இருந்தான் வசந்த்.

இப்போது நங்கை இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லவும், அவன் பதறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே.

நங்கையின் சித்தியோ நங்கையின் பதிலில் அதிருப்தி அடைந்தவராக, வசந்த்தை சமாளிக்கும் விதமாக,

“அவ ஏதோ புரியாம பேசுற தம்பி, நான் பேசுறேன் அவ கிட்ட”

என்று சொல்ல, வசந்த்தோ, நங்கையின் மறுப்பை கணக்கிலே கொள்ளாமல்,

“எனக்கு நங்கையை பிடிச்சி இருக்குறதுனால தான் பொறுமையா பேசி கிட்டு இருக்கேன் ஆண்ட்டி, அப்போ நான் கிளம்புறேன், சீக்கிரமே அப்பா, அம்மாவோடு வரேன்”

என்று செல்லிவிட்டு கிளம்ப, அவன் சென்றதும் கற்பகம் சித்தி கோவமாக நங்கையிடம்,

“மாறன் பொறுப்பை ஏத்துகணும் சொன்ன, அதான் அந்த பையன் சரின்னு சொல்லிட்டான் இல்ல, அப்புறமும் வேணானு சொன்னா என்ன அர்த்தம் நங்கை”

என்று கேட்க, நங்கையோ,

“பொறுப்பை ஏத்துக்குறதுன்னா என்ன சித்தி, எப்படியே கேட்டு போனு விடாம, பொறுப்பா நல்ல ஹாஸ்டல பார்த்து சேர்த்து விடுறதா”

என்று அடக்க பட்ட கோவத்துடன் கேட்டவள், உள்ளத்தின் வலி குரலிலும் தெரிய,

“நான் இருபத்தி மூணு வயசு வரைக்கும் அப்பா, அம்மா அரவணைப்புல சுகமா இருந்து இருக்கேன் சித்தி, ஆனா மாறன் அதை பதிமூணு வயசுலயே இழந்துட்டான்”

என்றவள் தன் வழக்கமான அழுத்தமான குரலில்,

“அவனுக்கு அக்கான்னு ஒருத்தி நான் உயிரோட இருக்கும் போது, அவன் எதுக்கு அநாதை மாதிரி ஹாஸ்டல்ல தங்கி படிக்கணும்”

என்று கேட்டவள், ஏதோ நினைவில் முகம் மலர்ந்தவளாக,

“மாறனை முதன் முதலில் பயந்துகிட்டே கைல வாங்குனது, இன்னமும் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு சித்தி, அவனுக்கு எல்லாமே நான் தான் பண்ணனும் அடம் பிடிப்பான், அம்மாவை தேடுனதை விட, அவன் என்னை தான் அதிகம் தேடுவான்”

என்றவள் உணர்ச்சி மீதுறும் குரலில்,

“அவன் தான் என்னோட முதல் குழந்தை சித்தி, கல்யாணம் ஆகுறதுக்காக, என்னால அவனை தனியா விடவும் முடியாது, தள்ளி வைக்கவும் முடியாது புரிஞ்சிக்கோங்க”

என்றவள் தொடர்ந்து வெறுமையான குரலில்,

“இப்படி நடக்கும்னு தெரிஞ்சி தான் நான், இது எல்லாம் தேவையில்லைன்னு சொன்னேன், நீங்களே உங்க பிரின்ட்கு கால் பண்ணி, இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிடுங்க”

என்றவள் உள்ளே செல்ல, நங்கை பேசிய பேச்சில் இடியுடன் கூடிய மழை பெய்து, ஓய்ந்த உணர்வு கற்பகம் சித்திக்கு.

அவர் நங்கையின் நன்மைக்காக என்று செய்த ஒன்று இப்படி முடிந்திருக்க, சுருங்கி போன முகத்துடன், கவலை மீதுற அவரும் உள்ளே சென்றார்.

தேவி பாட்டியோ, தான் எதுவுமே செய்ய அவசியம் இல்லாமல் நங்கையை இந்த சம்பந்தம் வேண்டாம் என்று விட, செழியனை எப்படி நங்கையோடு ஜோடி சேர்ப்பது என்ற யோசனையில் இருந்தார்.

இங்கு இத்தனை நடந்திருக்க, என்றும் இல்லாத திருநாளாக தன் வீட்டிற்கு வந்த நன்மாறனை ஆச்சரியத்தோடு வரவேற்று உட்கார வைத்தவன்,

“என்ன சார் அதிசயமா வீட்டுக்கு எல்லாம் வந்து இருக்கீங்க”

என்று கிண்டலாக கேட்க, செழியன் சார் என்று விளித்த்தில், கூச்சதுடன் சிரித்த நன்மாறன்,

“இல்ல சார் சித்திய பார்க்க, அவங்க பிரின்ட் சன் வந்து இருக்காரு”

என்று சொல்ல, இனிமையான மனநிலையில் இருந்த செழியனோ, ‘என்னது நங்கையின் சித்தி வந்து இருக்காங்களா’ என்று திகைக்க, தொடர்ந்த நன்மாறன்,

“எனக்கு என்னமோ, அவர் அக்காவை அன்அபிஸியலா பொண்ணு பார்க்க வந்து இருப்பாருன்னு தோணுது”

என்று குரலை தழைத்து சொல்ல, விவரமான நன்மாறனுக்கு இது கூட புரியவில்லை என்றால் தானே ஆச்சர்யம். தொடர்ந்த நன்மாறன்,

“அக்கா இந்த தடவையாவது கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னா, ரொம்ப நல்லா இருக்கும் செழியன் சார்”

என்று ஏக்கத்துடன் சொல்ல, நன்மாறன் சொன்ன தகவலில் அதிர்ச்சியில் எழுந்தே விட்டான் செழியன்.

அவனின் அதிர்ச்சிக்கான காரணம் புரியாமல் நன்மாறன்,

“என்ன ஆச்சு செழியன் சார்”

என்று கேட்க, தன்னை சமாளித்து கொண்ட செழியன்,

“இல்ல மாறா, முக்கியமான ஒரு போன் பண்ணனும், இப்போ தான் நியாபகம் வந்துச்சு அதான், நீ இங்கேயே இரு பேசிட்டு வரேன்”

என்று சொல்லி, தன் அலைபேசியை எடுத்து கொண்டு, வீட்டின் வாசலுக்கு வந்தவன், கண் முன்னே இருந்த இருளை, இலக்கில்லாமல் வெறித்து கொண்டிருந்தான்.

காந்தன் வருவான்……..

Advertisement