Advertisement

இரவு மணி எட்டை தாண்டி ஓடி கொண்டிருக்க, செழியன் அப்போது தான் வீட்டிற்கு வந்தான். அவன் மாடியேற போக, நங்கை வீட்டிற்குள் இருந்து, அவனுக்காகவே காத்திருந்தது போல, வெளியே வந்தார் தேவி பாட்டி.

தேவி பாட்டியை பார்த்ததும், நேற்று அவரிடம் வலிய சென்று வாங்கியது எல்லாம் நினைவு வர,

“ஏன் கிழவி, என்னை பார்த்தா உனக்கு கொலைகாரன் மாதிரியா இருக்கு”

என்று பொருமி கொண்டு செழியன், அவரை பார்க்காதது போல, மாடி படியேற போக, அவரோ,

“செழியா இங்க வா”

என்று அழைக்க, செழியன் எதுவும் பேசாமல் போய், அவர் முன்னால் நின்றான்.

“கோவமாக இருக்கிறானாம், என் கிட்ட பேச மாட்டானாம், பொடி பயன்”

என்று செழியனை நினைத்து உள்ளுக்குள் சிரித்து கொண்ட தேவி பாட்டியோ,

“இந்தா பிடி, உனக்கு தான் ஏதோ வந்து இருக்கு”

என்று ஒரு கவரை அவனிடம் நீட்ட, கையை நீட்டி அதை வாங்காத செழியனோ,

“எனக்கா????”

என்று யோசனையுடன் உறுதி படுத்தி கொள்ள மீண்டும் கேட்க, தேவி பாட்டியோ,

“அட ஆமாம்டா, ஏதோ முக்கியமானது இருக்காம், உன் கிட்ட கொடுக்க சொல்லி தான் கொடுத்துட்டு போனாங்களாம்”

என்று தனக்கு தெரிந்த விவரத்தை சொல்ல, அதை வாங்கி பார்த்த செழியனோ, அதில் அனுப்புனர், பெறுநர் முகவரி எதுவுமே இல்லாமல் இருக்க,

“இந்த பார்சல் அஹ யாரு வாங்குனது ஆயா”

என்று அதை ஆராய்ந்து கொண்டே தன் பொய் கோபம் மறந்து கேட்க, அவரோ இவனின் யோசனை முகத்தை கண்டு என்ன நினைத்தாரோ, வீட்டின் உள் பக்கம் திரும்பி,

“நங்கை இங்க கொஞ்சம் வந்துட்டு போயேன்”

என்று குரல் கொடுத்தவர், செழியனிடம்,

“நங்கை தான் வாங்குனா, இரு அவளே வரட்டும்”

என்று சொல்லவும், நங்கை வீட்டிற்குள் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

நங்கையை கண்டதும், செழியனின் கண்களுக்கு அவளை தவிர மற்றது எல்லாம் மறைந்து போக, அவளையே இமைக்காமல் பார்த்தது பார்த்த படியே நின்றான்.

உள்ளிருந்து வந்த நங்கை ஏதோ யோசனையில், செழியனின் பார்வையை அறியாமல் போக, இவனை கவனித்த தேவி பாட்டியோ, நங்கை இவர்களை நெருங்கும் முன், இவனின் கையை வலிக்க கிள்ளி வைத்தார்.

தேவி பாட்டி கையை கிள்ளியதும் தான், இந்த உலகத்துக்கு, தேவி காலணிக்கு வந்தான் செழியன். பக்கத்தில் நின்று தன்னை முறைத்து கொண்டிருந்த தேவி பாட்டியை பார்த்தவன்,

“இப்படியா செழியா, இந்த கிழவி பக்கத்துல நிக்கிற சுரனை கூட இல்லாம, பஞ்சத்துல அடிப்பட்டவன் பால்கோவாவை பார்க்குற மாதிரி நங்கையை பார்த்து வைப்ப, பக்கி, பக்கி “

என்று தன் தலையில் மானசீகமாக அடித்து கொண்டவன், அவரை நோக்கி ஒரு அசட்டு புன்னகையையும் சிந்தினான்.

நங்கை இவர்கள் இருவரிடமும் வர, எடுத்துகொண்ட இரண்டு நிமிட இடைவெளியில் இவ்வளவும் நடந்து இருக்க, நங்கை வந்ததும், செழியன் எதுவுமே நடக்காதது போல,

“நங்கை நீங்க தான் பார்சல் வாங்குனீங்களா”

என்று அவளின் பெயரை வெகு இயல்பாக, ஒரு சிறு உரிமை இழையோட விளித்து கேட்க, அதை எல்லாம் கவனிக்காத நங்கை,

“ஆமா செழியன் சார், சாயந்திரம் ரெண்டு பேரு வந்தாங்க, இந்த பார்சல்ல நீங்க கேட்ட முக்கியமான பொருள் ஏதோ இருக்காம், அதனால் மறக்காம உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க, நேம் கூட தமிழ், வெற்றினு சொன்னாங்க சார்”

என்று கர்மமே கண்ணாக விளக்க, செழியனோ இரண்டு விதமான உணர்வுகளில் சிக்கி தவித்து கொண்டிருந்தான்.

யாரோ வந்து எதையோ கொடுத்து சென்று இருக்கிறார்கள் என்றதும், கொஞ்ச நேரத்தில் செழியனின் மனம், இருக்கும் எல்லா சாத்திய கூறுகளையும் அலசி ஆராய்ந்து பார்த்து விட்டது.

தன் எதிரிகள் யாராவது, தான் இங்கு இருப்பது அறிந்து ஏதேனும் செய்ய வந்து இருப்பார்களோ….

அல்லது

அந்த மந்திரி தான், தங்கள் சந்தேகம் மற்றும் கண்காணிப்பை அறிந்து, ஏதேனும் செய்து வைத்தாரோ….

இப்படி எல்லா திசைகளிலும் செழியனின் மனம் அதிவேகத்தில் பயணப்பட, கடைசியில் வந்தது அவனின் உடன்பிறவா அருமை தம்பிகள்.

ஐந்து மணியளவில் வெற்றியும், தமிழும் ஏதோ வேலை இருக்கு என்று இவனிடம் சொல்லிவிட்டு கிளப்பி சென்றது, இப்போது தான் செழியனுக்கு நியாபகம் வந்தது.

தன்னிடம் சொல்லாமல் இங்கு வந்து சென்ற, அவர்கள் மேல் கொள்ளை, கொள்ளையாக கோவம் வந்து தொலைத்தது செழியனுக்கு.

தன்னிடம் சொல்லி இருந்தால், நிச்சயம் தான் அவர்களை இங்க வர அனுமதித்து இருக்க மாட்டோம், என்பதையும் செழியன் அறிந்து தான் இருந்தான்.

அவர்கள் மிகவும் முக்கியம், முக்கியம் என்று தந்துவிட்ட சென்ற அந்த பார்சலில், அப்படி எதுவுமே இருக்காது என்பதும் செழியனுக்கு மிக தெளிவு.

இங்கு நங்கையை காண வர அந்த பார்சல், வெற்றியும், தமிழும் அவர்களாக ஏற்படுத்தி கொண்ட ஒரு காரணம் அவ்வளவே.

தன் மேல் கொண்ட பாசத்தில், இந்த மாதிரி சிறு பிள்ளைகளை போல நடக்கும், அவர்களை நினைத்து சிரிப்பும் வந்து தொலைத்தது.

இப்படி பலதும் யோசித்த செழியன், நங்கையிடம்,

“ஓ சரிங்க நங்கை, தேங்கஸ்”

என்று தன் கையில் இருந்த ‘அந்த முக்கியமான’ பார்சலோடு படியேற போக,

“செழியன் சார்”

என்று அவனை கொஞ்சம் தயக்கத்துடன் கூப்பிட்டு தடுத்தால் நங்கை. இதை சற்றும் எதிர்பார்க்காத செழியனோ, ஆச்சர்யத்தோடு திரும்ப நங்கை,

“அன்னைக்கு நீங்க பண்ண ஹெல்ப்கு ரொம்ப ரொம்ப தேங்கஸ் செழியன் சார்”

என்று உணர்ந்து சொல்ல, இடவலமாக தலையசைத்து அதை மறுத்த செழியன்,

“தேங்கஸ் சொல்ற அளவுக்கு எல்லாம், நான் ஒண்ணுமே பண்ணல நங்கை, ஆன் அப்புறம் கேட்க மறந்துட்டேன், இப்பவும் அந்த பஸ் டிப்போல அந்த ரவுடிங்க பிரச்சனை இருக்கா என்ன”

என்று ஒன்றும் அறியாதவன் போலவே கேட்டு வைக்க, உண்மை அறியாத நங்கை,

“இல்லை சார், ஏதோ போலீஸ் ரீலேஷன் கிட்ட வம்பு பண்ணதால, அவங்களை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்”

என்று அவள் அறிந்த விதத்தில் சொல்ல, உண்மை அறிந்த செழியனோ, தன் வாய்க்குள் சிரித்து கொண்டான்.

செழியன் நங்கையிடம் பேச்சை வளர்க்க நினைத்து, இன்னும் ஏதோ கேட்க வர, இவ்வளவு நேரம் பேசியதே அதிகம் என்பது போல நங்கை,

“சரிங்க சார், அப்புறம் பார்க்கலாம்”

என்று அவனிடம் சொன்னவள், அவனுக்கு பக்கத்தில் நின்ற தேவி பாட்டியிடம்,

“நீங்க உள்ள வாங்க ஆயா”

என்று சொல்ல, அப்போது தான் இவ்வளவு நேரம், தன் அருகில் நின்றிருந்த தேவி பாட்டியின் இருப்பை உணர்ந்தான் செழியன்.

இத்தனை நேரம், தானும், நங்கையும் பேசியதை இவரும் கேட்டு கொண்டு இருந்தாரா, என்ற அதிர்ச்சியுடன்,

“கிழவி நீ இன்னுமா இங்க நிக்கிற, உன் வீட்டுக்கு போகலையா நீ”

என்று கேட்க, அவனை வழக்கம் போல இலக்கார பார்வை பார்த்த தேவி பாட்டி ஏதோ சொல்ல வர, அதற்குள் உள்ளிருந்து மீண்டும் அவரை அழைத்திருந்தாள் நங்கை.

அதனால் அவர் உள்ளே செல்ல, செழியனின் மனசாட்சியோ,

“எப்படியோ நங்கை புண்ணியதுல, இன்னைக்கு கிழவி கிட்ட வாங்குற பல்ப் கணக்குல ஒன்னு குறைஞ்சிடுச்சு செழியா”

என்று அவனை கிண்டல் செய்ய, மனசாட்சி பேசுவதை கவனிக்காத செழியனோ,

“இந்த கிழவி பக்கத்துல நிக்காமா இருந்து இருந்தா, இன்னும் கொஞ்ச நேரம் நங்கை பேசி இருப்பாளோ”

என்று யோசித்து கொண்டிருக்க, அவனுக்கு தெரியவில்லை. நங்கை அவனிடம் நின்று பேசியதே, அருகில் தேவி பாட்டி இருந்த காரணத்தினால் தான் என்று.

இப்படி சிந்தனையிலே தன் அறைக்கு சென்ற செழியன், உடை மாற்றி, முகம் கழுவி வர, அவனின் அலைபேசி அழைத்தது.

அழைப்பவரின் பெயரை பார்த்தவன், கோவத்துடன் அழைப்பை ஏற்று,

“ஹலோ”

என்று கடுப்புடன் பேச ஆரம்பிக்க, இவன் அழைப்பை எடுப்பதற்காகவே காத்திருந்தது போல, அந்த பக்கம் இருந்த தமிழ் அவசரமாக அவசரமாக,

“அண்ணா, நீங்க உடனே கிளம்பி இங்க வாங்க, முக்கியமான விஷயம்”

என்று சொல்ல, அவனின் குரலில் இருந்த பாவத்தில் ஏதோ முக்கியமான விஷயம் என்று புரிந்து கொண்ட செழியனும், வேற எதுவும் பேசாமல்,

“இப்போவே வரேன்”

என்று அழைப்பை துண்டித்துவிட்டு, மீண்டும் உடை மாற்றி கொண்டு, வந்த வேகத்திலே கிளம்பினான்.

செழியன் அங்கு செல்லும் போது, ஏற்கனவே விஜய்யும் வந்து இருந்தான். தமிழும், வெற்றியும் சற்று பரபரப்புடன், இவனுக்காக காத்திருப்பது புரிந்தது.

செழியனும் வந்ததும், நால்வரும் அவர்களின் கண்காணிப்பு அறைக்கு செல்ல, அங்கு இருந்த பெரிய கணினியில், பதிவு செய்ய பட்ட காணொளியில் குறிப்பிட்ட ஒரு பகுதியை ஓட விட்டான் வெற்றி.

அதில் மருந்து தொழிற்சாலையில் இருந்து, மருந்துகளை ஏற்றுமதி செய்ய செல்லும் கனரக வாகனம், அது செல்ல வேண்டிய குறிப்பிட்ட பாதையை தவிர்த்து, வேறு பாதையில் திரும்புவது தெரிந்தது.

செழியன் அதை உறுதி படுத்தி கொள்ள, வெற்றியை பார்க்க, அவனும் ஆமோதிப்பாக தலையசைத்து, செழியனின் சந்தேகத்தை உறுதி செய்தான்.

செழியன் கொஞ்சம் பரபரப்பாக அதை கவனிக்க, அந்த கனரக வாகனம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று, பதினைந்து நிமிடங்கள் கடந்த பிறகு அங்கிருந்து கிளம்பி, சில நிமிட பயணதிற்கு பிறகு, வழக்கமான பாதையை அடைந்தது.

இதை பார்த்த விஜய்,

“அப்போ நமக்கு இனிமே தான் வேலைன்னு சொல்லு”

என்று செழியனை பார்க்க, அதை அமோதித்த செழியன் வெற்றியை நோக்கி,

“கன்டெய்னர் ஸ்டாப் ஆன, அந்த லொகேஷன்ல என்ன இருக்குனு செக் பண்ணிங்களா”

என்று கேட்க, வெற்றி,

“பார்த்தோம் அண்ணா, அந்த லொகேஷன்ல ஏதோ ஒரு குடோன் இருக்குற மாதிரி இருக்கு, யாரோட குடோன், என்ன ஸ்டோர் பண்ண யூஸ் பண்றாங்க, அந்த டீடெயில்ஸ் எல்லாம் இன்னும் தெரில, பார்த்துக்கிட்டே இருக்கேன்”

என்று சொல்ல, அடுத்து தமிழை நோக்கி திரும்பிய செழியன்,

“இன்னைக்கு கம்பனில என்ன என்ன ப்ரோடியூஸ் பண்ணாங்கனு லிஸ்ட் வினோத் அனுப்பி இருப்பான் இல்ல, அதை ஒரு காபி எனக்கு அனுப்பு, கம்பனி சி.சி.டிவி புட்டேஜோட அந்த லிஸ்ட் அஹ கிராஸ் செக் பண்ணு, லிஸ்ட்ல இல்லாதது ஏதாவது ப்ரோடியூஸ் பண்ணி இருக்கங்களானு பாரு”

என்று சொல்லி ஒரு இடைவெளி விட்டவன், ஏதோ யோசித்தவனாக மீண்டும் தமிழை அழைத்து,

“அப்புறம் தமிழ், இன்னைக்கு கன்டெய்னர்ல போன எல்லா மெடிசன் சாம்பிலும் வினோத் கொடுத்து இருப்பான் தானே, அதை எல்லாம் நமக்கு தெரிஞ்ச அந்த லேப்கு அனுப்பி டெஸ்ட் பண்ண சொல்லு, எதாவது ஸ்ரேஞ்சா இருக்கானு பாரு”

என்று ஆள் ஆளுக்கு ஒரு வேலை கொடுத்தவன், இவர்களை வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்த விஜய்யிடம்,

“அப்புறம் விஜய், நீ வெற்றி சொல்ற லொகேஷன்ல எங்கையாவது சி.சி.டிவி இருக்கானு பாரு, இருக்க சான்ஸ் ரொம்ப கம்மி தான் பட் செக் பண்ணிடு, ஒருவேளை இருந்தா நமக்கு யூஸ் ஆகும்”

என்று சொல்ல, காவல்துறை அதிகாரியான விஜய்க்கு அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அவனும் சம்மதமாக தலையாட்டினான்.

ஆள், ஆளுக்கு ஒரு வேலையை பிரித்து கொடுத்த செழியனோ, தன்னுடைய மடி கணினியை எடுத்து கொண்டு அமர்ந்து, மும்மரமாக ஏதோ வேலை பார்க்க ஆரம்பித்தான்.

மூவரையும் மாறி, மாறி பார்த்த விஜய்க்கு, ஏதோ வித்தியாசமாக தோன்ற, வேலை பார்த்து கொண்டிருந்த தமிழையும், வெற்றியையும் நெருங்கி, கிசுகிசுப்பான குரலில்,

“நீங்க ரெண்டு பேரும் என்னமோ பண்ணி இருக்கீங்க, என்னடா பண்ணீங்க உண்மையை சொல்லுங்க, அவனை பார்த்து பம்புற மாதிரியே இருக்கே”

என்று கேட்டு, தான் ஒரு காவல்துறை அதிகாரி என்று நிருபித்தான் விஜய். வெற்றியும், தமிழும் முதலில் நிமிர்ந்து செழியனை தான் பார்த்தனர்.

செழியனின் கவனம் முழுதும் அவனின் மடிக்கணினியில் இருப்பது உறுதியானதும், தமிழும் விஜய்யை போன்றே கிசுகிசுப்பான குரலில்,

“அது ஒன்னும் இல்ல அண்ணா, செழியன் அண்ணா கிட்ட சொல்லாம நானும், வெற்றியும் போய் அண்ணிய பார்த்துட்டு வந்தோம், அதான்”

என்று சொல்ல, அதை கேட்டு அதிர்ச்சியான விஜய்,

“எது நங்கையை போய் பார்த்தீங்களா, என்ன ஏன்டா விட்டுட்டு போனீங்க”

என்று தன்னை மறந்து குரலை உயர்த்தி உச்சஸ்தாயில் கேட்க, அதில் செழியன் இவர்களை நிமிர்ந்து முறைத்து பார்க்க, வெற்றியும், தமிழும்,

“அண்ணாவே அதை மறந்து இருந்தாரு, இப்படி கத்தி, எங்களை மாட்டி விட்டுட்டீங்களே”

என்று விஜய்யை முறைக்க, விஜய்யோ அவர்கள் மூவரையும் பார்த்து, இப்போது என்ன செய்வது என்று திருதிருவென முழித்தான்.

இருந்தாலும் நொடியில் தன்னை சமாளித்து கொண்ட விஜய், செழியன் பேசுவதற்கு முன்பு முந்தி கொண்டு,

“நீங்க ரெண்டு பேரும் பண்ணது பெரிய தப்பு, அங்க போறதுக்கு முன்னாடி செழியன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கணுமா இல்லையா”

என்று கண்டிக்க, விஜய் உண்மையாக கண்டிக்கிறான் என்று நம்பி செழியனும்,

“நல்லா கேளு விஜய், இதுல ப்ரம் அட்ரஸ், டூ அட்ரஸ் எதுமே இல்லாத ஒரு டம்மியா ஒரு பார்சல் வேற, எப்படி எப்படி அதும் ரொம்ப முக்கியமான பார்சல், அஹான்”

என்று அவர்களை திட்ட, தந்தை முன்பு தவறு செய்து மாட்டி கொண்ட சிறுவர்கள் என வெற்றியும், தமிழும் தலை குனிந்து நிற்க, செழியன் சொல்லியதை கேட்ட விஜய்,

“என்னடா இது வேறையா, இப்படி எல்லாம் மாட்டிக்கிற மாதிரி முட்டாள் தனமா எல்லாம் தப்பு பண்ண கூடாது பசங்களா, புரிஞ்சுதா”

என்று வெகு அக்கறையாக அறிவுரை கூற, அதை கேட்டு அந்த இருவரும் வாய்க்குள் சிரிக்க, செழியனோ விஜய்யின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்து,

“அட்வைஸ் பண்ற லட்சனத்தை பாரு, இப்படி சொன்னா அவங்க ரெண்டு பேரும் உருபட்ட மாதிரி தான், எருமை, எருமை”

என்று விஜய்யை திட்டிய செழியனும் சிரிக்க, இப்போது விஜய் மீண்டும் தான் முதலில் கேட்ட கேள்வியையே திரும்ப கேட்டான்,

“என் கிட்ட சொல்லி இருந்தா நானும் வந்து இருப்பேன் இல்ல”

என்று ஆர்வமாக கேட்க, விஜய்யை குரும்பாக ஒரு பார்வை பார்த்த வெற்றி,

“உங்க முகத்திலையே நீங்க போலீஸ்னு எழுதி ஒட்டி இருக்கு, உங்களை பார்த்து அண்ணி பயந்துட்டா என்ன பண்றது”

என்று சொல்ல, அவனை முறைத்த விஜய்,

“ஏன்டா உங்க அண்ணி என்ன பார்த்து பயப்பட நான் என்ன பூச்சாண்டியா, போலீஸ் தானேடா”

என்று ஆதங்கத்துடன், அங்கு இருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவாறே கேட்க, தமிழோ,

“நீங்க பார்க்க பூச்சாண்டி மாதிரி தான் இருக்கீங்கனாலும், அதை நாங்க எங்க வாயால சொல்றது மரியாதையா இருக்காது, இல்லையா அண்ணா”

என்று சிரிக்காமல் அவனை கலாய்க்க, விஜய் அவனை துரத்த, தமிழோடு சேர்ந்து வெற்றியும் ஓட, அவர்கள் மூவரையும் புன்னகையுடன் பார்த்தபடி நின்றிருந்தான் செழியன்.

காந்தன் வருவான்……….

Advertisement