Advertisement

இன்று பேருந்து நிறுத்தத்தில், அந்த ரவுடி கூட்டத்தை குறித்த பயம் எழும் போது தான், நேற்றைக்கு செழியன் செய்த உதவியும், நங்கைக்கு நினைவுக்கு வந்தது.

விரும்பதகாத அந்த சம்பவத்தை பற்றி, அவள் யோசிக்க விழையாததாலோ அல்லது அடுத்தடுத்து அணி வகுத்து காத்திருந்த அவளின் கடமைகளோ, அவள் அறியாள்….

ஆனால், ஏதோ ஒன்று நங்கை, இந்த நிமிடம் வரை, அந்த சம்பவம் பற்றியோ, செழியன் பற்றியோ, நங்கை மீண்டும் யோசிக்கவே இல்லை.

இப்போது மீண்டும் அதை நினைவு கூறும் போது தான், தான் செழியனின் உதவிக்கு,’ நன்றி’ என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றது, குற்றமாக குறுகுறுக்க செய்தது நங்கைக்கு.

ஆனால் அதற்காக எல்லாம், வீட்டின் வாசலில் செழியனிடம் நின்று பேச விரும்பவில்லை நங்கை. அது வெறும் நன்றி சொல்வதற்கு என்றால் கூட.

அக்கம்பக்கத்தினர், அதற்கு எப்படி கண், காது, மூக்கு வைப்பார்களோ, யார் அறிவார்.

பெற்றோர் துணையின்றி, தம்பியுடன் தனியே வசிக்கும் பெண் என்ற முறையில், நங்கையின் மீது எப்போதுமே ஏகப்பட்ட கண்களின் கண்காணிப்புகள் உண்டு.

சிலர் அக்கறையாய், சிலர் சந்தர்ப்பம் கிடைத்தால் அவளையே கபளீகரம் செய்ய, சிலர் வாய்ப்பு கிடைத்தால் அவளில் களங்கம் கற்பிக்க என்று அபாயகரமான மனிதர்கள் மத்தியில் தான் அவளின் வாழ்க்கை.

அவள் பெற்றோரை இழந்து தவிக்கும் போது, உதவிக்கு வரதா சமூகம், அவளின் செயல்களை விமர்சிக்க ஒருபோதும் தவறியதே இல்லை.

அக்கா, தம்பியின் மீதான தேவி பாட்டியின் பாசமும், வீட்டின் உரிமையாளர் என்ற முறையில், அவர் மீதான மற்றவரின் பயமுமே, இவர்களுக்கு ஒரு அரண் என்றால் மிகையில்லை.

வீண் வம்புகளையும், கேள்விகளையும் தவிர்க்கவே நங்கை, தேவி பாட்டியை தவிர அக்கம்பக்கத்தில் அதிகம் யாரிடமும் பேசுவதில்லை.

அவர்களின் பிள்ளைகள், நங்கையிடம் பயில, அவர்களின் படிப்பு சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு சரி.

ஆரம்பத்தில் “என்ன இது, இந்த பொண்ணு யாரு கிட்டவும் பேச மாட்டுது”, என்று பார்த்தவர்கள் கூட, இத்தனை ஆண்டுகளில், இது தான் இந்த பெண்ணின் இயல்பு, என்று கடந்து போக பழகி இருந்தார்கள்.

இப்போது செழியனுடன் நின்று பேசி, அவர்களுக்கு தன்னை பற்றி பேசுவதற்கு ஒரு வாய்ப்பை கொடுக்க பிரியபடவில்லை நங்கை.

எதிர்காலத்தில் என்றேனும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது, செழியனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று மனதிற்குள் குறித்து கொண்டாள்.

விஜய்யிடம் அந்த கூட்டத்தின் கைது பற்றி, கேட்டு உறுதி செய்து கொண்ட செழியன், இன்னமும் மருந்து தொழிற்சாலையின் மர்மத்தை கண்டுபிடிக்கவே ஓடி கொண்டிருந்தான்.

அன்று இரவு முழுக்க ஆழ்ந்த உறக்கம் இல்லாமல், விழிப்பும் இல்லா உறக்கமும் இல்லாமல், அலைமோதி கொண்டிருந்தான் செழியன்.

அதிகாலையே அந்த சொற்ப உறக்கமும் விடைபெற்று ஓட, கண்கள் எல்லாம் தீயாய் தகிக்க, படுக்கையில் இருந்து எழ முடியாமல், சோர்ந்து படுத்து கிடாந்தான் செழியன்..

கிட்டத்தட்ட இரண்டு வாரம் ஆன நிலையில், இன்னமும் செழியனால், மருந்து தொழிற்சாலையில் என்ன தவறு என்று கண்டு பிடிக்க முடியவில்லை.

எங்கே எதை தவிற விடுகிறோம் என்ற எண்ணமே மூளையை பிராண்டி கொண்டிருக்க, உறக்கம் எங்கிருந்து வரும்.

அப்போது கீழ் வீட்டில் இருந்து, மெல்லிய வீணை இசை காற்றில் கசிந்து வந்து, தளர்ந்து போய் இருந்த செழியனின் செவியையும், மனதையும், நிறைத்தது அந்த இன்னிசை.

அதை கேட்க, கேட்க, மனதின் அலைப்புறுதல், எல்லாம் குறைந்து, உடலின் செல்களில் எல்லாம் புத்துணர்வு பெறுவதை, செழியனால் உணர முடிந்தது.

நெருப்பு துண்டுகளாய் எரிந்த தன் நயனங்களை மூடி, அந்த இசையில் ஆழுந்து, அதில் மூழ்கி திளைக்க முயன்று கொண்டிருந்தான் செழியன்.

இந்த சில நாட்களில், செழியன் அதிகாலையில் எழும் நாட்களில், இப்படிபட்ட இசைக்கருவிகளின் இசை, நங்கை வீட்டில் இருந்து வருவதை செழியன் கவனித்திருக்கிறான்.

சில சமயம் புல்லாங்குழல், சில சமயம் பியானோ, சில சமயம் வெறும் பறவைகளின் சத்தம், அருவியின் நீர் கொட்டும் சத்தம் கூட கேட்கும்.

காலையில் அரக்கப்பறக்க சமைத்து, அலுவலகம் கிளம்பும் வேலையில், இப்படி மெல்லிசைகளை கேட்பது, வித்தியாசமான இரசனை தான், என்று செழியன் மனதிற்குள் அவனின் நங்கையை சிலாகித்தும் கொண்டான்.

அன்றும் தன் வழக்கம் போல, நங்கையை பார்த்து விட்டு வந்தவனின், எண்ணம் முழுவதும் அவள் அலுவலகம் சென்ற கோலத்தில் தான் இருந்தது.

வழக்கம் போல, ஒரு சாதாரண சுடிதார் தான், ஆனால் நுனி முடியில் நீர் சொட்ட, சொட்ட, வேலைக்கு கிளம்பி சென்றிருந்தாள் நங்கை.

இப்படி தலையை உலர்த்த கூட நேரம் இல்லாமல் நங்கை ஓடி, ஓடி உழைப்பது எல்லாம், நன்மாறனுக்காக தான் என்று செழியனுக்கு புரியாமல் இல்லை.

ஆனால் இது எல்லாம் நன்மாறனுக்கு புரிகிறதா, என்று தான் செழியனுக்கு சந்தேகமாக இருந்தது. செழியன் கேட்க நேர்ந்த நன்மாறனின், உரையாடல் அப்படி.

செழியனின் எண்ணங்கள், ஒரு வாரம் முன்பு, நன்மாறனுக்கும், அவனின் நண்பனுக்குமான உரையாடலை நினைவு கூர்ந்தது.

அந்த சனிக்கிழமை, நங்கை ஏதோ காரணமாக அலுவலகம் சென்று இருக்க, செழியன் வெளியே செல்ல எத்தனித்து வீட்டை பூட்டி கொண்டு இருந்தான்.

அப்போது கீழே நன்மாறனும், அவனின் நண்பனும் வீட்டிற்கு வெளியே நின்று பேசியது தெளிவாக, செழியனின் காதில் விழுந்தது.

நன்மாறனின் நண்பன், அவனிடம் ஒரு தொகையை கொடுத்து,

“இந்தா மாறா, நாம லாஸ்ட் வீக் பார்த்த வேலைக்கான காசு”

என்று நீட்ட, அந்த நூறு ரூபாய்களை நோட்டுகளை வாங்கிய நன்மாறன், சரியாக இருக்கிறதா என்று எண்ணி பார்க்க, அவனின் நண்பனோ,

“ஹே என்ன எண்ணி எல்லாம் பார்க்கிற, என் மேல நம்பிக்கை இல்லையா”

என்று பாவமாக கேட்க, நன்மாறனோ,

“அது எல்லாம் இல்லடா, நீ அவங்க கொடுத்ததை அப்படியே வாங்கிக்கிட்டு வந்து இருப்ப, அதான் அவங்க நாம பார்த்த வேலைக்கு, சரியா கணக்கு பண்ணி தான் காசு கொடுத்து இருக்காங்களானு செக் பண்றேன்”

என்று நன்மாறன் சொல்ல, அதை அமோதிக்கும் விதமாக, அவனை ஒட்டியே பேசினான் அவனின் நண்பன்,

“அதுவும் சரி தான், நான் அவங்க கொடுத்ததை அப்படியே வாங்கிக்கிட்டு வந்திட்டேன், எண்ணி பாக்கலா”

என்று தலையை சொரிந்து கொண்டே சொன்னவன், தொடர்ந்து நன்மாறனிடம்,

“எனக்கு தான், இப்படி இந்த வேலை பார்க்க வேண்டிய கட்டாயம், உனக்கு என்ன தலையெழுத்தா, நீ ஏன்டா இந்த வேலைக்கு எல்லாம் வர, காசு வேணும்னா உங்க அக்கா கிட்ட கேட்டா கொடுக்கமாட்டேன்னா சொல்ல போறாங்க”

என்று சொல்ல, மறுப்பாக தலையசைத்த நன்மாறன்,

“மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க தான், ஆனா என்னனு சொல்லி காசு கேட்க முடியும், இதை விடுடா நான் பார்த்துகிறேன், அப்புறம் நாளைக்கு வேலை இருக்கு தானே”

என்று பேச்சின் திசையை மாற்ற, அவனின் நண்பனும்,

“ஆமா இருக்கு, ஆனா என்னனு சொல்லிட்டு வருவ, அக்கா நாளைக்கு வீட்டுல தானே இருப்பாங்க”

என்று கேட்க, ஆமோதிப்பாக தலையசைத்த நன்மாறன்,

“கிரிக்கெட் விளையாட போறேன்னு சொல்லிட்டு தான் வரணும், நாளைக்கு நாம, எப்பவும் மீட் பண்ற இடத்துல பார்க்கலாம்”

என்று தன் நண்பனுக்கு விடை கொடுத்து அனுப்பி இருந்தான் நன்மாறன்.

இந்த உரையாடல் முழுதும் வீட்டை பூட்டிவிட்டு, படிகளில் இறங்கி கொண்டிருந்த செழியனின் காதில் அச்சுரசுத்தமாக விழுந்தது.

செழியன் கீழே வந்தவுடன், நன்மாறனின் முகத்தை கூர்ந்து பார்க்க, அவனோ வழக்கம் போல, செழியனை ஆராய்ச்சி பார்வை தான் பார்த்து வைத்தான்.

நன்மாறனின் முகத்திலோ, அவனின் நடத்தையிலோ, எதுவுமே தவறாக தெரியவில்லை செழியனுக்கு.

ஆனால் நங்கையிடம் சொல்லி கேட்க முடியாத அளவுக்கு, சின்னவனுக்கு என்ன செலவு இருக்க முடியும் என்று தான் செழியனுக்கு விளங்கவில்லை.

அதோடு நன்மாறன் என்ன வேலை பார்க்க கூடும், என்றும் செழியனின் யோசனை விரிந்து கொண்டிருந்தது.

உலகின் நல்லது கெட்டது புரியாத வயது. ஏதேனும் பிரச்சனைகளிலோ, தவறான கைகளிலோ இளையவன் சிக்கி கொள்ள கூடாதே என்ற கவலையும் சேர்ந்து கொண்டது செழியனுக்கு.

நன்மாறனிடம் இதை பற்றி பேசி பார்க்கலாமா, என்ற எண்ணம் தோன்றும் போதே, அப்படி பேசினால், அதிகம் பழக்கம் இல்லாத தன்னிடம் நன்மாறன் உண்மையாய் சொல்வானா என்பதும் கேள்வி குறியே என்றும் தோன்றியது.

ஏதாவது செய்ய வேண்டும், அதையும் சீக்கிரமாக செய்ய வேண்டும் என்று தனக்குள் குறித்து வைத்து கொண்டான் செழியன்.

எண்ணங்கள் இப்படி நங்கை, நன்மாறனை சுற்றி வர, அப்போது தான் செழியனுக்கு ஒன்று புலப்பட்டது.

கடந்த சில நாட்களாகவே தேவி பாட்டி, செழியனின் கண்ணிலும் படவில்லை, அவனிடம் வம்பும் வளர்க்க வில்லை .

அவனிடம் எப்போதும் வம்பு சண்டைக்கு வந்தாலும், தாத்தா, பாட்டி என்ற உறவுகள் இல்லாத செழியனுக்கு தேவி பாட்டி என்றால் பிரியம் தான்.

முதல் நாள் அவனை இங்கு தங்க விடாமல் இருக்க அவ்வளவு முயன்றவர், இவனுக்கு யாரும் இல்லை என்றவுடன், அவரே வீட்டிற்கு பால் காய்ச்சிய போதே செழியனுக்கு அவரை பிடித்து விட்டது.

அதற்கு பிறகும் உரிமையாக வெற்றிலை வாங்க சொன்னதாகட்டும், அந்த வியாபாரி விஷயத்தில் இவனின் கோவத்தை மதித்து, விளக்கம் சொல்லியதாகட்டும் தேவி பாட்டிக்கும் இவன் மீது பாசம் தான் என்று அவன் அறிவான்.

எனவே இப்போது தேவி பாட்டியை, தொடர்ந்து சில நாட்கள் பார்க்க வில்லை எனவும்,

“என்ன ஆச்சு இந்த கிழவிக்கு, இப்படி அமைதியா இருக்கிற ஆள் இல்லையே, என்னவா இருக்கும், போய் கிழவியை பார்ப்போமா”

என்று தீவிரமாக செழியன் யோசிக்க, அரண்டு போய் அங்கு ஆஜரான அவனின் மனசாட்சியோ,

“இப்போ எதுக்கு நீயா போய் வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கணும்னு நினைக்கிற, வேண்டாம் விட்டுடு அப்புறம் வருத்தபடுவ”

என்று சொல்ல, அதை எல்லாம் கேட்டால், அவன் செழியன் அல்லவே. வரவே மாட்டேன் என்று கதறிய மனசாட்சியை கட்டி இழுத்து கொண்டு, தேவி பாட்டியை பார்க்க கிளம்பினான்.

அவரின் வீடு வரை சென்றவனுக்கு, அப்போது தான் “எதற்காக வந்தாய்” என்று கேட்டால், என்ன சொல்வாய் என்று மனசாட்சி கேள்வி கேட்க, செழியனோ,

“எவ்வளவோ சமாளிச்சுட்டோம், இந்த கிழவியை சமாளிக்க முடியாத என்ன, தைரியமா வா,”

என்று தன் மனசாட்சிக்கு நம்பிக்கை ஊட்டி அழைத்து செல்ல, மனசாட்சியோ,

“நங்கையை பார்க்கிறதுக்காக இப்படி எதாவது பண்ணா கூட பரவாயில்லை, பல்லு இல்லாத பாட்டியை பார்க்க என்ன வலுக்காட்டயமா கூட்டிட்டு போறியே, உனக்கே இது நல்லா இருக்கா”

என்று மனசாட்சி பாவமாக கேட்க, செழியனோ,

“வாஸ்தவம் தான், எனக்கும் புரியுது, ஆனா எனக்கு இப்போ பாட்டியை தானே பார்க்கணும் போல இருக்கு”

என்று மனசாட்சியுடன் எடுத்து சொல்ல, அவனின் மனசாட்சியோ மனசாட்சி என்பதே இல்லாமல்,

“போற போக்க பார்த்தா, நீ பேத்தியை கரைக்ட் பண்ண மாட்ட போல, பாட்டியை தான் கரைக்ட் பண்ணுவ போல”

என்று அவனை கிண்டல் செய்ய, செழியனோ மனசாட்சி சொல்லியதை கேட்டு, “என்னது” என்று அதிர்ந்து நிற்கவும், தேவி பாட்டியின் வீடு வரவும் சரியா இருந்தது.

மனசாட்சியின் பதிலில் அரண்டு போன செழியன், தன் வீட்டிற்கு திரும்ப போக பார்க்க, அதற்குள் வீட்டின் வெளியே நின்றிருந்த செழியனை, தேவி பாட்டி பார்த்து விட்டார்.

வெளியே வந்தவர், அவனை சந்தேகமாக பார்த்து,

“என்ன இந்த பக்கம்”

என்று வழக்கம் போலவே எகத்தாளமாக ஆரம்பிக்க, அவரை மேலும் கீழுமாக பார்த்த செழியன்,

“தாத்தா இல்லையா, அவரை பார்க்கணும்”

என்று முத்தையா தாத்தா இருக்க மாட்டார் என்று தெரிந்தே அவரை பார்க்க வந்ததாக காட்டி கொள்ள, அவனை இலக்காரமாக பார்த்த தேவி பாட்டி,

“கிழவரு எப்போவோ வேலை இருக்குனு வெளிய கிளம்பி போயிட்டாரு, உன்னை மாதிரி அவரு என்ன சோம்பேறியா, பத்து மணிக்கு வேலைக்கு போக”

என்று அவனை பரபட்சமே பார்க்காமல் கலாய்க்க, செழியனின் மனச்சாட்சியோ,

“அப்பவே வேண்டாம்னு சொன்னனே, கேட்டியா, அனுபவி ராசா அனுபவி”

என்று அவனை இடித்துரைக்க, செழியனோ அவரை முறைத்து பார்க்க, அதை எல்லாம் கண்டுகொள்ளாத தேவி பாட்டியோ,

“ஏன் என்ன விஷயம்னு கிழவர் கிட்ட தான் சொல்லுவியோ, எங்க கிட்ட எல்லாம் சொன்னா ஆகாதா”

என்று அவன் வந்த விஷயத்தை அறிய முற்பட, விஷயம் இருந்தால் தானே செழியன் சொல்லுவான், என்ன சொல்வது என்று யோசித்தவன் சமாளிப்பாக,

“அதான் அவர் இல்லையே, நான் அவர் வந்ததும் அவர் கிட்டயே பேசிக்கிறேன்”

என்று விரைப்பாக சொல்ல, செழியனை தன் அருகே அழைத்த தேவி பாட்டி, தன் குரலை தழைத்து,

“உண்மையை சொல்லு, யார் நீ, உன்னை பத்தி எதாவது கேட்டலே கிழவர் அந்த மிரலு மிரல்ராறு, எதாவது கொலை பண்ணிட்டு, இங்க வந்து மறைஞ்சி இருக்கியா, அதான் தாடி எல்லாம் வச்சி முகத்தை மறைச்சிக்கிட்டு சுத்துரியா, உன்னை போலீஸ் எதும் தேடுதா”

என்று கேட்க, “எது கொலையா” என்று நெஞ்சை பிடித்த செழியன் கோபத்துடன்,

“இது வரைக்கும் பண்ணல, இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தேன், கொலை பண்ணிடுவேனு தான் நினைக்கிறேன், நான் வரேன்”

என்று கடுப்புடன் கிளம்ப, அவனின் மனசாட்சியோ, செழியன் வாங்கிய பல்பை நினைத்து, ‘கெக்க பிக்க’ வென்று உருண்டு பிரண்டு, சிரித்து கொண்டிருந்தது.

தேவி பாட்டியோ, வாய்விட்டே,

“இப்படி ஏதாவது கேட்டா, கோவப்பட்டாவது, “நான் யாரு தெரியுமானு”ஆரம்பிச்சு எதாவது சொல்லுவானு பார்த்தா, பட்சி சிக்காம பறந்துடுச்சே, ச்ச”

என்று அங்கலாய்த்தவாறே தன் வீட்டின் உள்ளே சென்றான்.

காந்தன் வருவான்……..

Advertisement