Advertisement

எப்பொழுதும் இரவு பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு வரும் செழியன், அன்று அதிசயமாக மாலை ஆறு மணி அளவிலே, அவர்களின் அந்த தனி வீட்டில் இருந்து கிளம்பி இருந்தான்.

அவன் அந்த வீட்டில் இருந்து தேவி காலனிக்கு வரும் வழியும், நங்கை அலுவலகத்தில் இருந்து வரும் வழியும் நேர் எதிர் எதிர் பக்கங்கள்.

அவர்களின் எதிர், எதிர் பாதைகள் ஒரு இடத்தில் இணையும். அங்கு இருந்து தேவி காலனியை நோக்கிய அவர்களின் பாதை ஒன்று தான்.

வீட்டில் இருந்து கிளம்பும் நங்கை, முதலில் ஒரு பேருந்து பிடித்து, இருவருக்கும் பொதுவான அந்த நிறுத்தத்தில் இறங்கி, பிறகு அங்கிருந்து, வேற பேருந்து பிடித்து, அலுவலகம் செல்ல வேண்டும்.

இன்று அவனும் முன்னதாகவே, அதாவது நங்கை அலுவலகத்தில் இருந்து கிளம்பும் நேரமே கிளம்பி இருக்க, செல்லும் வழியில் எல்லாம், செழியனின் கண்கள், அவனின் காதல் கண்ணாட்டியை தேடி கொண்டிருந்தது.

செழியனுக்கு, அவனின் நங்கையை காணும் வாய்ப்பு, நூற்றில் ஒரு பங்கு தான் என்று நன்கு தெரியும்.

இருந்தும் ஏனோ அவனால், அவனை கடந்து செல்லும் மக்களில், அவனின் மனதிற்கு இனியவளின் முகத்தை தேடுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த எண்ணவோட்டத்திலே செழியனின் பயணம் இருக்க, வழியில் ஒரு இடத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, செழியனின் வாகனம் ஊர்வலம் போல, ஆடி அசைந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது செழியன் கண்கள் இதற்சியாக, தனக்கு முன்னால் இருந்த, பயணியர் நிறுத்தத்தை பார்க்க, அங்கோ அவனின் நங்கை, நின்று கொண்டிருந்தாள்.

நங்கையை கண்ட செழியனின் மனதோ, அங்கு இருந்த இரைச்சல், போக்குவரத்து நெரிசல் தந்த எரிச்சல், எல்லாம் நொடியில் மாயமாய் மறைய, குத்தாட்டம் போட தொடங்கியது.

தினமும் காலையில் நங்கையை பார்த்தாலும், அவனின் காதல் கொண்ட மனம், இப்போது எல்லாம் அதில் நிறைவது இல்லை.

அவனின் மனது, அநியாயத்திற்கு அவனவளின் அருகாமைக்காக ஏங்கி கொண்டிருந்தது.

எங்கோ கண் காணா தூரத்தில் கழித்த நாட்களை விட, இங்கு கண் முன்னாடி அவளை வைத்து கொண்டு, எந்த உரிமையும், உறவும் இல்லாமல், அவளை விட்டு விலகி இருப்பது, செழியனுக்கு கொடுமையாக இருந்தது என்றால் மிகையில்லை.

அவளை அங்கு கண்ட அடுத்த நொடி, செழியன் அந்த நெரிசலில் இருந்து தன் இருசக்கர வாகனத்தை, ஒதுக்கி, நங்கை நிற்கும், பயணியர் குடையை அடைந்தான்.

அப்போது தான், நங்கையை கண்ட முதற்கட்ட மனதின் ஆரவாரம் குறைய, அவனின் மூளை விழித்து கொண்டது.

“இது நங்கை வேலை விட்டு, வீட்டுக்கு போகும் வழி இல்லையே”

என்று ஆலோசிக்க, ஆரம்பிக்க அவளின் முகத்தை பார்த்தவனுக்கு, ஏதோ சரி இல்லை என்று மட்டும் நன்கு புரிந்தது.

அப்படி தோன்றியதும், தலை கவசத்தின் உள் இருந்த முகத்தில் இருந்த மகிழ்ச்சி அப்படியே வடிய, முகத்தை சீராக்கி கொண்டு, நங்கையை நெருங்கி, தன் தலை கவசத்தை கழற்றினான் செழியன்.

அருகில் வந்து நிற்பது யாரோ என்ற எண்ணத்தில், யார் என்று நிமிர்ந்து கூட பார்க்காமல், பேருந்து வரும் வழியையே பார்த்து கொண்டிருந்தாள் நங்கை.

நங்கை இவன் பக்கம் திரும்பவில்லை என்றதும், இன்னும் அரை மணி நேரம் நின்றாலும், அவள் இவனை திரும்பி பார்க்க போவது இல்லை என்பதும் புரிந்து போனது செழியனுக்கு.

எனவே செழியன் மெதுவாக,

“நங்கை”

என்று அழைக்க, தன் பெயரை, தான் அறிந்த குரல் விளிக்க, நிமிர்ந்து பார்த்து, அது செழியன் என்று உறுதி செய்து கொண்ட நங்கையின் கண்களில், ஒரு சிறு ஆசுவாசம், கூடவே ஒரு ஆச்சர்யம்.

நங்கை ஆச்சர்யத்தை மட்டும் கண்களில் நிறுத்தி,

“செழியன் சார், நீங்க”

என்று இழுக்க, நங்கையின் முக தாமரையிலே கண் பதித்திருந்த செழியன்,

“நான் ஒர்க் முடிச்சிட்டு, வீட்டுக்கு போய் கிட்டு இருக்கேன், ஆமா நீங்க எங்க இங்க”

என்று கேட்க, செழியன் அந்த வீட்டில் குடி வந்த இரவுக்கு பிறகு, இன்று தான் செழியனிடம் பேசுகிறாள் நங்கை.

அதற்கு பிறகு பார்க்கும் போது எல்லாம், ஒரு நட்பான புன்னகையோடு, இருவரும் கடந்து இருக்க, அதிகம் பழக்கம் இல்லாத, அவனிடம் என்னவென்று சொல்வது என்று புரியவில்லை.

அவளின் தயக்கம், அவளின் வெளிறிய முகம், செழியனை ரொம்பவே தொந்தரவு செய்ய, அவளின் தயக்கத்தை கவனிக்காதவன் போல,

“உங்க ஆபீஸ் இந்த பக்கம் இல்ல, இல்ல, நீங்க அ..ப்…பு..ற..ம் இங்க எப்படி”

என, என்ன நடந்தது என்று அறிந்து கொண்டே ஆக வேண்டும் என்று கேட்க, நங்கைக்கும், இவன் பதில் சொல்லாமல் விட போவது இல்லை என்று புரிய, பொய்யும் சொல்ல விருப்பம் இல்லாமல்,

“இல்ல அந்த பஸ் டிப்போல, பஸ்காக வெய்ட் பண்ணி கிட்டு இருந்தேன், எப்பவும் ஒரு கும்பல் அங்க இருக்கும், போற வர பொண்ணுங்களை எல்லாம் கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்பாங்க”

என்று சொல்லி நிறுத்த, செழியனோ, நங்கை இன்னும் சொல்லி முடிக்க வில்லை என்பதை புரிந்து கொண்டு அமைதியாக இருக்க, அவனை பார்த்த நங்கை தொடர்ந்து,

“இன்னைக்கு கொஞ்சம் ஓவரா போய் குடிச்சிட்டு வந்து, ரொம்ப ரொ..ம்.ப.. மோசமா கமெண்ட் பண்ணி கிட்டு, வேணும்னே மேல விழற மாதிரி வந்தாங்க, அதான் வீட்டுக்கு போற பஸ்க்கு வெய்ட் பண்ணாம, வந்த பஸ்ல ஏறி, இங்க வந்து இறங்கிட்டேன்”

என்று மெல்லிய சங்கடமான குரலில் சொல்ல, அப்போது செழியனின் கண்ணில் பட்டது, நங்கையின் கைகள்.

நங்கையின் கைகளில், ஓடி கொண்டிருந்த மெல்லிய நடுக்கத்தை, அருகில் நின்றிருந்த செழியனால் பார்க்கவும் முடிந்தது, உணரவும் முடிந்தது.

என்ன வார்த்தைகளை உபயோகபடுத்தினார்களோ…..

அதை சொல்ல கூட முடியாமல், அந்த வார்த்தையின் கணத்தில், நங்கையின் கைகள் நடுக்கம் கொள்கிறது என்றால்…….

அங்கு என்ன நடந்திருக்க கூடும் என்று அனுமானித்த, செழியனின் தாடைகள் கோவத்தில் இறுகியது.

தன் கோபத்தை மறைக்காமல், அதே நேரம் குரலை உயர்த்தாமல், பல்லை கடித்து கொண்டு,

“உங்களையா கமெண்ட் பண்ணாங்க”

என்று கேட்க, இதற்குள் தன் அழுத்தமான குரலை மீட்டு கொண்டிருந்த நங்கை,

“எல்லாரையும் தான் கமெண்ட் பண்ணாங்க, நானும் அங்க தான் இருந்தேன்”

என்று சாதாரணம் போல, ஆனால் அழுத்தமாக சொல்ல, செழியன் ஆத்திரத்துடன்,

“போலீஸ்ல ஈவ் டீஸிங்னு கம்ளைண்ட் பண்ணி இருக்கலாம் இல்ல, இந்நேரம் உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி இருப்பாங்க, இருங்க நான் இப்போவே போன் பண்றேன்”

என்று அலைபேசியை எடுக்க போக, அவனை தடுத்த நங்கை,

“செழியன் சார் புரியாம பேசாதிங்க, நாம எல்லாம் மிடில் கிளாஸ், கேஸ் கொடுத்துட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லாம் அலஞ்சிகிட்டு இருக்க முடியாது”

என நிதானமாக பேச, அவர்களை அடித்து நொறுக்கும் ஆத்திரத்தில் இருந்த செழியனோ,

“சரி வாங்க, வந்து யாருன்னு காட்டுங்க, நானே பார்த்துகிறேன் அவங்களை”

என, அவனை வித்தியாசமாக பார்த்த நங்கை,

“செழியன் சார், நீங்க ஒன்னும் படத்துல வர ஹீரோ இல்ல, அவங்களை தூக்கி போட்டு பந்தாட, அவங்க எல்லாம் அக்மார்க் ரவுடிங்க”

என்று மீண்டும் தன் அழுத்தமான குரலில் சொல்ல, செழியனோ அவளின் முகத்தை பார்க்காமல் வேறு பக்கம் தன் பார்வையை திருப்ப, நங்கை மீண்டும்,

“நீங்க எனக்காக போய் கேட்டாலோ, இல்ல நான் தான் கம்ளைண்ட் கொடுத்தேனு தெரிஞ்சாலோ, எனக்கு தான் பிரச்சனை, தினமும் நான் அதே ரூட்ல தான் ஆபிஸ் போகணும், அப்படியே நான் ஆபிஸ் போற ரூட் மாற்றினாலும், தேடி வந்து வம்பு பண்ணா என்ன பண்ண முடியும், தினமும் ஹெல்ப்கு போலீஸ் கூப்பிட முடியுமா, இல்ல நீங்க வருவிங்களா”

என்று இது தான் நிதர்சனம் என்று எதார்த்தத்தை பேச, செழியனால் தான் அதை ஏற்று கொள்ள முடியவில்லை.

செழியன் இன்னதென்று பிரித்தறிய முடியா பார்வை நங்கையை பார்க்க, இப்போது அவனை பார்க்க முடியாமல், நங்கை தன் பார்வையை திரும்பி கொண்டாள்.

அன்று அந்த புடவைக்காரர் கடினமாக பேசும் போதும் சரி, இன்றும் சரி, ஏன் இந்த பெண், அந்த நிகழ்வுகள் தன்னை பாதிக்கிறது என்று காட்டி கொள்ள மாறுக்கிறாள்.

கைகள் நடுங்குகிற அளவுக்கு, பயமோ அல்லது தாக்கமோ இருக்கிறது. ஆனால் திடமாக, பிரச்சனையை விட்டு விலக என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து இருக்கிறாள்.

இது இந்த ஐந்து வருடம் தனிமையில், தானே எல்லாவற்றையும் சமாளித்ததால் வந்த தைரியமா…

இல்லை…

துணைக்கு யாரும் இல்லாமல், இளையவன் பயம் கொள்ள கூடாது என்று, தன் பயங்களை தனக்குள்ளே மறைத்து வைத்து கொண்டதன் விளைவா…..

அன்றும் சரி, இன்றும் சரி, அவனால் நங்கைக்காக எதுமே செய்ய முடியாத நிலை.

தன் நிலையை அறவே வெறுத்த செழியன், தன் சிந்தனைகளை ஒடுக்கிவிட்டு, இப்போதைக்கு நங்கைக்கு துணையாக அருகிலே அமைதியாக நின்றான்.

அடுத்தடுத்து வந்த பேருந்துகள் எல்லாம், கால் வைக்கவே இடமே இல்லாமல் வர, என்ன செய்வது முழித்து கொண்டு இருந்தாள் நங்கை.

ஒன்று, இரண்டு, மூன்று பேருந்துகள் சென்று கொண்டே இருக்க, அடுத்து வந்த பேருந்திலும் கூட்டம் அதிகம் என்ற போதிலும், ஏறலாம் என்று நங்கை செல்ல, கூட்ட நெரிசலில் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

அமைதியாக நின்று நங்கையின் செயல்களை பார்த்து கொண்டிருந்த செழியன், அலைபேசியை எடுத்து ஏதோ செய்தான்.

கொஞ்ச நேரத்தில் அவர்கள் நின்றிருந்த பேருந்து நிறுத்ததின் அருகே ஒரு வாடகை கார் வந்து நிற்க, செழியன், நங்கையை பார்த்து விட்டு, காரின் கதவை திறந்து விட்டுட்டான்.

தனக்காக தான் செழியன் அதை ஏற்பாடு செய்திருக்கிறான் என்று புரிந்து கொண்ட நங்கை, அமைதியாய் ஏறி அமர, காரோட்டியின் காதில் விழும் படி நங்கையிடம்,

“நீங்க முன்னாடி போங்க நங்கை, நான் பின்னாடியே பைக்ல வரேன்”

என்று சொல்லி, அவளின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டான் செழியன்.

நிச்சயம் தன்னுடன் இருசக்கர வாகனத்தில் நங்கை வரமாட்டாள், என்று தெரிந்து தான், செழியன் அவளுக்காக காரை ஏற்பாடு செய்தான்.

செழியன் பின்தொடர, நங்கை வீட்டை அடைய, நங்கையே காருக்கான தொகையை செலுத்திவிட்டு, செழியனிடம் ஒரு தலையசைப்புடன் விடை பெற்று உள்ளே சென்று விட்டாள்.

உள்ளே செல்லும் அவளையே பார்த்து கொண்டிருந்த செழியன், மாடியேறி தன் அறைக்கு சென்றான்.

உள்ளே நுழைந்த கையோடு, தன் அலைபேசியை எடுத்தவன், முதல் காரியமாக விஜய்க்கு தான் அழைத்தான்.

விஜய் எடுத்ததும், அவனை பேச விடமால்,

“நீ எல்லாம் என்னதுக்கு ஏ.சி அஹ இருக்க, உன்னோட தங்கச்சிய ஒரு கும்பல் கிண்டல் பண்ணி இருக்கு, தண்டதுக்கு நீ எல்லாம் அவளுக்கு ஒரு அண்ணன்”

என்று முழுதும் சொல்லாமல் பொரிந்து தள்ள, இரண்டு நாட்களாக தூங்காமல், ஒரு விசாரணை விஷயமாக அலைந்து திரிந்து விட்டு, இப்போது தான் உறங்க ஆரம்பித்திருந்தான் விஜய்.

செழியன் அழைக்கவும், அழைப்பை ஏற்றவன், அர தூக்கத்திலேயே கண்ணை விழிக்காமல் பேச, செழியன் தங்கை என்றதும், உணர்ச்சிவச பட்டு,

“யாருக்கு அவ்ளோ தைரியம் ஏ.சி தங்கச்சியை கிண்டல் பண்றதுக்கு, யாருன்னு சொல்லு உள்ள தூக்கி போட்டு, முட்டிக்கு முட்டி தட்டுறேன்”

என்று வீரவேசமாக பேச, அப்போது உள்ளே நுழைந்த விஜய்யின் மனைவி மகதி, இவன் பேசுவதை கேட்டுவிட்டு,

“விஜய் என்ன துக்கத்துல எழுந்து ஏதோ கண்டபடி உளறி கிட்டு இருக்கீங்க, உங்களுக்கு ஏது தங்கச்சி”

என்று புரியாமல் கேட்க, தீயாய் எரிந்த கண்களை திறந்த விஜய், அப்போது தான், தான் பேசியதை யோசித்து பார்த்தவன்,

“அதானே, எனக்கு ஏது தங்கச்சி”

என்று மகதியிடமே கேட்டவனுக்கு, அப்போது தான் நங்கையின் நினைவு வர, தூக்கம் முற்று முழுதும் விடைபெற்று ஓட, அந்த பக்கம் இருந்த செழியனிடம்,

“எந்த ஏரியா, டீடெயில்ஸ் சொல்லு”

என்று அவனிடம் விவரத்தை கேட்டு கொண்டவன், தான் கவனித்து கொள்வதாக சொல்ல, செழியனோ இன்னமும் அடங்கா கோபத்துடன்,

“நானே என்ன பண்ணணுமோ பண்ணி இருப்பேன், ஆனா அது வேற மாதிரி ஆகிடும்னு தான் வந்துட்டேன், ஒருத்தன் கூட மார்க் மை வர்ட் விஜய், அங்க இருந்த ஒருத்தன் கூட மிஸாக கூடாது, பார்த்துக்கோ”

என்று பல்லைகடித்து கொண்டு பேச, அவனின் மனநிலமையை புரிந்து கொண்ட விஜய், அவனை சமாதானப்படுத்தி அழைப்பை வைத்தான்.

கையோடு, அவர்களை கவனிக்க, செய்ய வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து முடித்தான்.

அடுத்த நாள் நங்கை, அலுவலகம் விட்டு வரும் போது, நேற்று பிரச்சினை நடந்த இடத்தில் இறங்கலாமா, வேண்டாமா என்று யோசனையில் நிறுத்தத்தை பார்க்க, அங்கு அந்த ரவுடிகள் யாருமே இல்லை.

என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் நங்கை இறங்க, பக்கத்தில் சிலர் பேசி கொண்டிருந்த செய்தி, அவளின் முயற்சியே இல்லாமல், அவள் காதில் விழுந்தது.

“யாரோ ஒரு போலீஸ் காரரோட, ரிலேடிவ் அஹ கிண்டல் பண்ணி இருப்பாணுங்க போல, கிரகம் பிடிச்சவனுங்க, அதான் நேத்து போலீஸ் வந்து, அவனுங்களை மொத்தமா அள்ளி போட்டுக்கிட்டு போய்டுச்சி”

என்று ஒரு பெண்மணி சொல்ல, இன்னொரு பெண்மணியோ,

“எப்படியோ இனிமே நமக்கு, அவங்க தொல்லை இல்லை”

என்று பெருமூச்சு விட, நங்கைக்கும் ஏக நிம்மதி. அந்த கும்பலின், தொல்லைக்கு முற்று புள்ளி வைத்த அந்த ‘காவல்துறையின் சொந்தத்திற்கு’ மனதிற்குள்ளே ஒரு நன்றி சொல்லி கொண்டாள் நங்கை.

அந்த ‘குழந்தையை நீங்க தான்’ தான், அப்படின்ற மாதிரி, அந்த ‘காவல்துறையின் சொந்தமே, நீ தான்’னு, இந்த நங்கை பிள்ளைக்கு, நான் எப்படி சொல்ல…….

காந்தன் வருவான்………

Advertisement