“அப்போ நீங்க அவர்கிட்ட தான் கேட்கணும்” என்றான் இவன்.
“நீங்க என்கிட்ட பேச வந்தப்போ நான் உங்ககிட்ட பேசலை. எனக்கு வேற டென்சன். இப்போ நாம பேசலாமா?” என்று குருமூர்த்தி பொறுமையுடன் கேட்டார்.
“எனக்கு இப்போ பேச மூட் இல்லையே”
“என்கிட்ட சொல்ல வேண்டாம். உங்க அம்மா, அப்பாகிட்ட பேசுறீங்களா?” என்று குருமூர்த்தி கேட்க,
“எனக்கு யார்கிட்டேயும் பேச வேணாம். நீங்க போகலாம்” என்று கண்களை மூடி கொண்டான்.
சட்டென அவனிடம் ஓர் கோவம் தென்பட்டதை குருமூர்த்தி கவனித்திருக்க, “அவங்க இல்லைன்னா வேற யாரும்! உங்க தாத்தா, இல்லை உங்க குடும்பத்துல இருந்து, உங்க நண்பர்கள்கிட்ட”
படுத்திருந்தவன் எந்த மாயத்தில் எழுந்தனோ இவரின் அருகில் வந்துவிட்டவன், “உங்களை வெளியே போக சொன்னேன். போங்க, வெளியே போங்க” என்று கத்தினான்.
“நான் சொல்றதை”
“யோவ் போயா. வெளியே போ. போயிடு. இங்க நிக்காத. போ” என்று அப்படி ஒரு ஆக்ரோஷத்துடன் அவரின் நெஞ்சிலே கைவைத்து தள்ளிவிட்டான்.
“ஏய் தம்பி என்ன பண்ற நீ. அண்ணா மேல கைவைக்கிற?” என்று மாசிலாமணி வேகமாக அறைக்குள் வந்தவர், குருமூர்த்தி மேல் வைத்திருந்த கையை பற்றி திருப்பிவிட்டார்.
“ஆஹ்” வலியில் அவன் சத்தமிட,
“மணி என்ன பண்ணிட்ட நீ?” என்று குருமூர்த்தி மறுபக்கம் சத்தமிட்டார்.
“அண்ணா உங்க நெஞ்சுமேல கைவைக்கிறான்” என்று மணி குறையாத கோபத்துடன் குதித்தார்.
“கிறுக்கா” என்று அவரை தள்ளிவிட்ட குருமூர்த்தி, இந்த நல்லவனை நெருங்க,
“உன்னை வெளியே போக சொன்னேன்” என்றான் அந்த வலியிலும்.
“மணி டாக்டரை கூப்பிடு” என்று குருமூர்த்தி அவன் கைவீக்கம் ஏறுவதை கவனித்து சொல்ல, மாசிலாமணி அப்படியே நின்றார்.
“மணி” என்று குருமூர்த்தி அவரை முறைத்த பின்னே, மருத்துவரை அழைத்தார் மாசிலாமணி.
மருத்துவர் வரும் வரை குருமூர்த்தியை அருகில் சேர்க்கவில்லை. வலியிலிலும் கோவத்தை பிரதிபலித்து அமர்ந்திருந்தான்.
அடுத்த சில நிமிடங்களில் மருத்துவர் வந்துவிட, “இந்த மனுஷன் வெளியே போனாதான் ட்ரீட்மெண்ட் எடுத்துப்பேன்” என்றான் நல்லவன்.
“அண்ணா. நாம போலாம்” என்று மாசிலாமணி அழைக்க,
“நீ இங்கேயே இருந்து அவருக்கு உதவி பண்ற” என்று குருமூர்த்தி கண்டிப்புடன் சொல்லி சென்றார்.
அதன்பின்னே அவனுக்கு வைத்தியம் நடந்தது. கட்டு போட்டவர், “ஒரு வாரத்துக்கு கை அசைக்க கூடாது” என்று மருத்துவர் சொல்லிவிட்டு சென்றார்.
“உனக்கு அப்படி கோவம் வருமா மணி? அவர் யார், என்னன்னு தெரியும் இல்லை. இன்னொரு முறை அவர்மேல் கைவைச்ச உன் தோலை உறிச்சிடுவேன் பார்த்துக்கோ” என்று மாசிலாமணியை கண்டித்தார் குருமூர்த்தி.
மாசிலாமணியோ, “மீட்டிங்குக்கு சரி சொல்லிட்டேன்” என்றார். இவனை திருத்த முடியாது!
இருள் சூழ்ந்த வேளையில் சந்திப்பு தயாராகி இருந்தது. சண்முகம் சொன்ன இடத்திற்கே குருமூர்த்தி சென்றார்.
“இவர் சஞ்சீவ் குப்தா” என்று ஒருவரை அறிமுகம் செய்து வைத்தனர்.
“வணக்கம்” என்று அவர் தமிழில் சொல்லி கைகுவித்தார்.
“எனக்கு சில மொழிகள் தெரியும். உட்காருங்க. பேசலாம்” என்றார் அவர்.
குருமூர்த்தி, மாசிலாமணி இருவர் மட்டுமே வந்திருக்க, இவர்கள் புறமோ சிறு கூட்டம்.
உபசரிக்கப்பட குருமூர்த்தி எதையும் எடுக்கவில்லை. மாசிலாமணியும் மறுத்துவிட்டார்.
நம்பிக்கை என்பது சிறிதும் இல்லா இடத்தில் தண்ணீர் கூட குடிக்க முடியாதே!
குருமூர்த்தி நீயே பேசு என்பதாக கைகட்டி அமர்ந்திருக்க, “உங்களை பத்தி கேள்விப்பட்டேன். நல்ல பைட்டர் நீங்க” என்றார் சஞ்சீவ்.
சகஜமாக பேச நினைக்கிறார்! குருமூர்த்தி சிறிதும் இளகவில்லை.
“ம்ம். உங்க இடதுக்குள்ள என் பசங்க வந்திருக்க கூடாது. தப்பு தான். ஆனா எங்களுக்கு வேற வழி இல்லை” என்றார் சஞ்சீவ்.
“அப்படியென்ன அவசரம் அவரை கண்டுபிடிக்க?” என்று கேட்டார் குருமூர்த்தி.
“உங்களுக்கான சேதாரம் சொன்னீங்கன்னா கொடுத்துட்டு பசங்களை மீட்டுப்பேன்” என்று சஞ்சீவ் சொல்ல,
“சேதாரம்! ம்ம். என்னை பற்றி முழுசும் தெரிஞ்சு தான் வந்திருக்கீங்க. வசுந்தரா மேடம் எனக்கு எவ்வளவு முக்கியம்ன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்குமே” என்று குருமூர்த்தி கேட்க,
“புரியாம இல்லை குருமூர்த்தி சார். ஆனா இது வேற கணக்கு. நீங்க இதுல கண்டிப்பா நுழைய முடியாது. ட்ரை பண்ணாதீங்க” சஞ்சீவ் சொன்னார்.
“என் நன்றி கடனை நான் தீர்க்கணுமே! சர்வாச்சார்யா எங்க இருந்தாலும் பாதுகாப்பா இருக்கணும். அதுக்கு எதாவது டிமாண்ட் இருந்தா சொல்லுங்க” குருமூர்த்தி நிதானமாக சொல்ல,
சஞ்சீவ் உடனே மறுக்கவில்லை. சில நொடிகள் அவரிடம் ஓர் அலைப்புறுதல்!
“இல்லை. அது சரிப்பட்டு வராது. உங்க வரை மட்டும் நீங்க பேசுங்க” என்றார் சஞ்சீவ்.
சில நொடி என்றாலும், அவரின் அலைப்புறுதலை கண்டு கொண்ட குருமூர்த்தி, “வசுந்தரா மேடம் மகன் பிரச்சனை என் பிரச்சனை” என்றார்.
“என் பொண்ணை நான் பார்த்துப்பேன் சார். அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்” குருமூர்த்திக்கு ஆத்திரம்.
எல்லாம் என் மகளை ஏன் இழுக்கிறார்கள்!
“உங்க முதலாளிகிட்ட நான் பேசணும்” குருமூர்த்தி சொல்ல,
“நான் தான் முதலாளி. எனக்கு மேல யாரும் இல்லை” சஞ்சீவ் வேகமாக ஆரம்பித்து, சட்டென நிதானத்துக்கு வந்தார்.
“சின்ன ஹால்ல தான் எல்லாரையும் அடைச்சு வைச்சிருக்கேன். உங்க பசங்களுக்கு ஒரு நேரம் மட்டும் தான் சாப்பாடு கொடுக்கிறேன். மருத்துவ வசதி எல்லாம் கொடுக்க மாட்டேன். மூச்சு முட்டி போய் சேர்ந்தா நான் பொறுப்பில்லை” என்றார் குருமூர்த்தி.
“என்ன மிரட்டுறீங்களா?” என்று கூட்டத்தில் குரல் ஒன்று பாய்ந்து வந்தது.
“ஆமா. மிரட்டுறேன் தான்” என்றார் குருமூர்த்தி.
“சர்வாச்சார்யா உயிரை தவிர வேற எதாவது கேட்க சொல்லுங்க. நான் செய்றேன். ஆனா அவரை தொட மட்டும் விட மாட்டேன்” குருமூர்த்தி அழுத்தமாக சொல்ல,
“அவங்க அப்பாம்மா அதை பார்த்துப்பாங்க மூர்த்தி. நீங்க ஒன்னும் அவர் குடும்பம் இல்லை” என்று சண்முகம் சொன்னார்.
“நீ பேசாத” என்று மாசிலாமணி பாய்ந்தார்.
“சண்முகம் சொல்றது சரி. அவங்ககிட்ட பணம், பதவி எல்லாம் இருக்கு. நீங்க உங்களை தான் பார்க்கணும் குருமூர்த்தி. ஏற்கனவே உங்க மனைவியை இழந்துட்டீங்க. மகளையும் தவற விட்டுடாதீங்க” சஞ்சீவ் சொல்ல,
“எனக்கு மட்டும் பொண்ணு இல்லை. இங்க இருக்க எல்லோருக்கும் குடும்பம் இருக்கு” குருமூர்த்தி குரல் உயர்ந்து ஒலித்தது.
“என் பொண்ணு பத்தி பேசும் போது எங்க போயிருந்த நீ?” என்று குருமூர்த்தி கேட்டுவிட, பெரியவர் வாய் மூடி கொண்டார்.
“இன்னொரு முறை என் பொண்ணை பத்தி பேசுறவன் எவனா இருந்தாலும், அவன் அடுத்த நாளை பார்க்க மாட்டான்” என்று குருமூர்த்தி கர்ஜிக்க, அங்கிருந்தவர்கள் வாய் மூடி கொண்டனர்.
“உன் டிமாண்ட் என்னன்னு கேட்டுட்டு சொல்ற” என்று சஞ்சீவ்க்கு சொல்லி கிளம்பினார் குருமூர்த்தி.
“நாங்க இன்னொரு முறை மூர்த்திக்கிட்ட பேசுறோம்” என்று சஞ்சீவிடம் சமாதானமாக சொன்னார் சண்முகம்.
சஞ்சீவ் பதிலேதும் சொல்லாமல் அவரின் அறைக்கு வந்தார்.
உடனே அவருக்கு போன் வந்துவிட்டது. “குருமூர்த்தியை முடிச்சுட்டு கிளம்பு” என்றார் மறுபக்கம்.
“பாஸ்” என்று சஞ்சீவ் அதிர,
“குருமூர்த்தி நமக்கு நிச்சயம் தொல்லை தான்” என்றார் மறுபுறம் இருந்தவர்.
“நாம ஒருமுறை பேசி பார்க்கலாம். நமக்கு தேவையானதை கேட்டு”
“நோ. யாருக்கும் எதுவும் தெரிய கூடாது. சொல்றதை செய்” என்று வைத்துவிட, சஞ்சீவ் அவரின் ஆட்களை வர சொன்னார்.
குருமூர்த்தி, “காரை நம்ம ஆபிசுக்கு விடு” என்றார்.
“ண்ணா” என்ற மாசிலாமணி, “வீட்ல அவங்க” என்று கேட்டார்.
“அவங்களோட டார்கெட் நானாத்தான் இருப்பேன் மணி” என்றார்.
அன்றிரவு அவர்கள் வீட்டு கேட் சீக்கிரமாகவே மூடப்பட்டது. பாட்டி இரவு சமையலை விரைவாக முடிக்க, சம்யுக்தா தந்தைக்காக காத்திருந்தாள்.
“கண்ணு. சாப்பிட்டு தூங்க போ” என்று பாட்டி சொல்ல,
“அப்பா” என்று கேட்டாள் பெண்.
“அவர் நைட்டுக்கு வர மாட்டார். நீ லாக் போட்டுட்டு தூங்கு” என்ற பாட்டி, அவனுக்கான உணவுடன் சென்றார்.
சம்யுக்தா தனியாக உணவை உண்ண, “அந்த பையனுக்கு கட்டு போட்டிருக்கு” என்று வந்தார் கற்பகம் பாட்டி.
“ஏன்? என்னாச்சு?” என்று பெண் கேட்க,
“தெரியலை. கேட்டதுக்கு வாயே திறக்கலை. சாப்பிடவும் மாட்டார்ன்னு தான் நினைக்கிறேன். முகத்துலே கோவம் அப்படி தெரியுது” என்றார் பாட்டி.
“அதுக்குள்ள என்ன ஆச்சாம்?” என்று சம்யுக்தா முனகினாள்.