சில சந்தேகங்களை சம்யுக்தா காதிற்கு கொண்டு வந்திருந்தார்கள் எம்பையர் ஊழியர்கள்.

சம்யுக்தா அதை பற்றிய சந்தேகத்தில் ஆழ்ந்திருக்க, “மேம். ஈவ்னிங் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. இப்போதான் இன்வைட் பண்ணியிருக்காங்க” என்று சம்யுக்தாவின் உதவியாளர் அவசரமாக வந்தார்.

“என்ன மீட்டிங்?” என்று சம்யுக்தா பார்த்தவள், நெற்றியை நீவிவிட்டு கொண்டாள்.

அரசாங்கம் புதிதாக கொண்டு வந்துள்ள சட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம். தொழில் அதிபர்கள் அதிகபேர் வருவார்கள்.

எம்பையர் இருப்பதால் சம்யுக்தாவும் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம்.

“மேம். கவர்மெண்ட் கொடுத்திருக்கிற சில வழி காட்டு முறையில எம்பையரும் பாதிக்கப்படும். நீங்க டிஷ்கஷனில் இருக்கணும்” என்றார் உதவியாளர்.

குணா இல்லை! இந்த சில மாதங்களில் இரண்டு, மூன்று முறை சம்யுக்தா இது போன்ற கலந்தாய்வுக்கு சென்றிருக்கிறாள். குணா உடன் இருந்ததால் கடினமாக இல்லை. ஆனால் இன்று அப்படி இருக்க போவதில்லை என்று சம்யுக்தாவிற்கு புரிந்தது.

“மேம். நம்ம பக்கம் இருந்து ப்ரெசன்ட்டேஷன் கொடுக்க சொல்றாங்க” என்று உதவியாளர் பதட்டத்துடன் திரும்ப வந்தார்.

வேண்டுமென்றே செய்கிறார்கள், அந்த போர்டில் இருக்கும் ஆட்கள் யார், யார்? சம்யுக்தா புருவம் சுருங்கியது.

“மேம். ரெடி பண்ணிடலாமா?” என்று அவர் கேட்க,

“ஆல்ரெடி நாம அதைப்பத்தி நம்ம கம்பெனிஸ் கூட டிஸ்கஸ் பண்ணியிருக்கோம் தானே? அதை எடுத்துட்டு வாங்க” என்ற பெண் அதில் சில மாற்றத்தை செய்து, சிலதை புதிதாக சேர்த்தாள்.

“நேரம் ஆச்சு மேம். நாம தயாராகணும்” என்று உதவியாளர் சொல்ல,

“ம்ம்” என்று நேரம் பார்த்த சம்யுக்தா, “நீங்க இரண்டு பேர் கூட ரெடியாகிட்டு வந்துடுங்க” என்றவள் வீட்டை நோக்கி சென்றாள்.

வழியில் குருமூர்த்திக்கு அழைத்து, மீட்டிங் செல்ல வேண்டும் என்று மட்டும் சொன்னாள்.

“நமக்கு எப்போ சொன்னாங்க?” என்று நேராக பாயிண்டுக்கு வந்தார்  குருமூர்த்தி.

“ப்பா. நாம ரெடியா தான் இருக்கோம், ஒன்னும் பிரச்சனையில்லை” என்றாள் மகள்.

“ம்ம்” என்ற குருமூர்த்திக்கு இந்த அரசியல் பெரிய தலைவலியை கொடுத்தது.

அவர் நேருக்கு நேர் சண்டை போடுவது போல் இது இல்லையே!

தாக்குதல் உண்டு. ஆனால் பலது முதுகுக்கு பின்னால் தான் நடக்கிறது.

யார், எவர் என்று கண்டுபிடித்து சண்டையிட்டு கொண்டே இருக்க முடியுமா?

“இங்க இப்படித்தான்ப்பா, என்னால் ஹாண்டில் பண்ண முடியும்ன்னு தான் நினைக்கிறேன்” என்றாள் சம்யுக்தா.

இனி பின்னால் போக முடியுமா? எம்பையர் கட்டியாகிவிட்டது. விரிவாக்கத்திற்காக அடுத்த இரண்டு கட்டிடமும் கூட எழும்பி கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடத்த தான் வேண்டும்.

“நீங்க நிலையா நிக்கிற வரைக்கும் இப்படி தான் நடக்கும். அடிச்சு ஆடணும். உன்கிட்ட கொஞ்சம் தயக்கம் தெரிஞ்சாலும் ஏறி மிதிச்சிடுவாங்க” என்றார் சிவப்பிரகாசம்.

ஆம் அவர்தான் சம்யுக்தாவின் ஆலோசகர்!

தேவை என்றால் எம்பையருக்கு அவர்தான் வருகிறார்.

சம்யுக்தா காரில் சென்று கொண்டிருக்கும் போது சிவப்பிரகாசம் அழைத்தவர், “என்னமா? ப்ரசன்டேஷன் கொடுக்க சொல்றாங்களா?” என்று கேட்டார்

“ஆமா சார்” என்று சம்யுக்தா சோர்வாக சொல்ல,

“என்ன பண்ணலாம்?” என்று கேட்டார் சிவப்பிரகாசம்.

“என்ன போய் பண்றது சார்? கொடுத்து தானே ஆகணும்” என்றாள் சலிப்பாக.

“ஹாஹா. அப்படியெந்த கட்டாயமும் இல்லை பொண்ணே! நீ சொல்லு, மீட்டிங்கையே கேன்சல் பண்ணிடவா?” என்று கேட்டார் சிவப்பிரகாசம்.

“சார். வேணாம், வேணாம். நான் ரெடி பண்ணிட்டேன்” என்றாள் சம்யுக்தா.

“கடைசி நேரத்துல சொல்றாங்க, நீயும் கொடுக்கிறேன்னு சொல்ற? முடியாதுன்னு சொல்லு”

“முன்ன பின்ன இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணித்தான் பிஸ்னஸ் நடத்தணும்ன்னு நீங்க தானே சொன்னீங்க? இப்போ நீங்களே இப்படி கேட்கிறீங்க”

“அதுக்காக இவங்க அதிகாரத்துக்கு ஆட முடியுமா என்ன? அதென்ன இவங்க அப்பன் வீட்டு சொத்தா? டிஸ்கஷன் தானே? என்னமோ சட்டத்ததையே மாத்தி எழுத போற மாதிரி ஓவரா போறாங்க”

“எதுக்கு இப்போ இவ்வளவு கோவம் சார்? ப்ரேசெண்டேஷன் தானே, கொடுத்துடலாம்”

“அது அப்படி இல்லை. சின்ன பொண்ணு தானேன்னு உன்கிட்ட ஆடி பார்க்க துடிக்கிறாங்க. எங்க வந்து யார்கிட்ட எதை செய்றதுன்னு அவங்களுக்குக்கு தெரிய வேண்டாம், இன்னைக்கு தெரிய வைச்சிடுறேன். நானும் மீட்டிங் வரேன். வா. பார்த்துக்கலாம்” என்று வைத்துவிட்டார் சிவப்பிரகாசம்.

சம்யுக்தாவிற்கு மெலிதான புன்னகை.

தனிமனிதனாக சிவபிராகசம் மீது பெண்ணுக்கு பெரிதான அபிப்ராயம் இருந்தது இல்லை. ஆனால் ஒரு பிஸ்னஸ் மேனாக அறிமுகம் ஆனபின் மனிதர் வேறு மாதிரி தெரிகிறார்.

எக்கச்சக்க மரியாதை, மதிப்பு அவர் மேல் வந்திருந்தது.

பயங்கர மூளைக்காரர்! சம்யுக்தா அடிக்கடி மெச்சி கொள்கிறாள்.

மின்னலாக அவரின் ராஜா மகன் பெண்ணுக்குள் வெட்டி சென்றான்.

மூச்சடைப்பது போல் இருக்க, கார் கண்ணாடியை இறக்கி விட்டு கொண்டாள் சம்யுக்தா.

“என்ன கண்ணு இந்த நேரத்தில?” என்று பாட்டி கேட்க, அவருக்கு விஷயத்தை சொன்னபடி தயாராக சென்றாள் சம்யுக்தா.

புடவை அணிந்து கொண்டவள், அதற்கு தக்கன மிதமான அலங்காரம், ஆபரணத்துடன் கண்ணாடியை பார்த்து திருப்தி பட்டு கொண்டாள்.

உயர்தர லெனின் புடவையை, இரண்டாக மடித்து முந்தி எடுத்து கொண்டவள், ஹீல்ஸ் அணிந்தபடி காருக்கு வந்தாள்.

மிகப்பெரிய நட்சத்திர விடுதியில் சம்யுக்தா கார் நுழைந்தது.

அவளின் உதவியாளர்கள் இருவர் வந்து காத்திருக்க, அவர்களுடன் கலந்தாய்வு நடக்கும் ஹாலுக்கு சென்றாள் சம்யுக்தா.

அறிமுகமான சிலரிடம் பேசியபடி அவளுக்கான இடத்தில் அமர்ந்தாள் பெண்.

உபசரிக்க கொடுக்கப்பட்டதில் தண்ணீர் மட்டும் எடுத்து கொண்டவள், சரியான நேரத்தில் வந்திருக்க, கலந்தாய்வும் ஆரம்பமானது.

சர்வாச்சார்யா குரூப் ஆப் கம்பெனி சார்பில் பலர் வந்திருக்க, சிவப்பிரகாசம் காணவில்லை.

சம்யுக்தா கண்கள் மேலாக அவரை தேடியது. இதுக்கு அப்புறம் வருவார் போல.

சம்யுக்தா முறையும் வர, ப்ரசெண்டேஷன் கொடுக்க சென்றார் உதவியாளர்.

“நீங்க ஏன்? சம்யுக்தா மேடமே கொடுக்கட்டும். ப்ளீஸ் மேம் வாங்க” என்றார் ஒருவர் மேடையில் இருந்தபடி.

உதவியாளர்கள் தான் அதிகம் கொடுத்ததை கவனித்திருந்த சம்யுக்தா, நொடி மூச்சிழுத்து விட்டு கொண்டாள்.

“மேம்” என்று திரும்ப அழைப்பு.

சம்யுக்தா அவளின் ஹைஹீல்ஸ் சத்தமிட, மேடைக்கு ஏறியவள், மெலிதான புன்னகையுடன் அறிமுகத்தை முடித்து, ப்ரேசெண்டேஷனுக்கு சென்றுவிட்டாள்.

இடையே சந்தேகம் கேட்க முற்பட்டார்கள் இருவர். சம்யுக்தா நிறுத்தாமல் ப்ரேசெண்டேஷனை முடித்துவிட்டாள்.

முன்பு MNC யில் வேலை பார்த்த அனுபவம் இப்போது அவளுக்கு அதிகளவில் கை கொடுக்கிறது.

“இப்போ நாங்க சந்தேகம் கேட்கலாமா மேம்” என்று ஒருவர் புன்னகையுடன் கேட்டார். நிச்சயம் அதில் வஞ்சம் இருந்தது.

சர்வாச்சார்யா, குருமூர்த்தியின் எதிரிகள் இவளுக்கும் எதிரியாகி போனார்கள்.

இந்த இருவர் போட்டியிட்டு தோற்றிருந்த ப்ராஜெட்டை தான் இப்போது சர்வாச்சார்யா வெற்றிகரமாக செய்து முடிக்க போகிறான். இது போதாதா?

“எஸ். நீங்க இப்போ கேட்கலாம்” என்று சம்யுக்தா மேடை நடுவில் நின்றவளின் பார்வை வட்டத்தில் விழுந்தான் ஆகாஷ்.

இவர் வந்துட்டார். அப்போ சிவபிராகசம் சார் வர மாட்டார் போல. அவரிடம் சில ஆலோசனைகளை கேட்க நினைத்திருந்தாள்.

சம்யுக்தாவிடம் கேட்க அந்த  இருவருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தது. இடையில் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று கீழிறக்கி காட்டவும் முயற்சி நடந்தது.

மற்ற சிலர் நியாயமான சந்தேகங்களை கேட்டதுடன், சம்யுக்தாவிற்கு சில ஆலோசனைகளையும் சொன்னார்கள்.

சம்யுக்தா நியாயமானதை உடனே ஏற்று கொண்டு, நன்றி கூறி விடைபெற நினைக்க, இவர்கள் நிறுத்தவதாக இல்லை.

“நீங்க நிறைய தப்பா சொல்லியிருக்கீங்க. அதுக்கு விளக்கம் கொடுங்க” என்று விடாமல் கேட்க,

“எதை நீங்க தப்புன்னு சொல்றீங்க சார்?” என்று கேட்டது சர்வாச்சார்யாவின் உதவியாளர்.

எல்லார் பார்வையும் பின்னால் திரும்ப சர்வாச்சார்யா வேக நடையுடன் ஹாலுக்குள்  வந்து கொண்டிருந்தான்.

சம்யுக்தா முகத்தை சாதாரணமாக வைத்து புன்னகையை மிச்சம் வைக்க முயல்கிறாள்.

“மேம். இவங்க சந்தேகத்தை நாங்க பார்த்துகிறோம். ப்ளீஸ்” என்று சர்வாச்சார்யாவின் உதவியாளர் மேடையேற,

சம்யுக்தா நன்றியுடன் மேடையை விட்டு கீழிறங்கினாள்.

சர்வாச்சார்யாவிற்கு பூங்கொத்து கொடுத்து  வரவேற்று கொண்டிருந்தார்கள்.

சம்யுக்தா அவனை கடந்து அவளின் இருக்கைக்கு சென்றாள்.

எத்தனை மாதங்கள் இருக்கும் இவனை பார்த்து?

ஆறேழு மாதங்கள் ஆகிவிட்டது.

முன்பை போல, உடனே கண்ணில் இருந்து மறைந்து விட்டான்.

ஏன்? ஏன் இப்படி தவிக்க விடுறான்? சம்யுக்தா கண்கள் நீரால் சூழ்ந்து கொண்டது.

அவனிடம் சென்று இந்த கேள்வியை கேட்க முடியாது. கேட்பதற்கான உரிமையை இழந்தவர்கள் இவர்கள் தான்.

அன்று குருமூர்த்தியின் அணைப்பை விலக்கிவிட்டவன், மாயமாகிவிட்டான்.

இன்று திரும்ப கண்ணில் படுகிறான் தான். ஆனால்?

சம்யுக்தா தண்ணீர் எடுத்து முழு பாட்டிலையும் காலி செய்தாள்.

“மேம். நாம கிளம்புறதுன்னா கிளம்பலாம்” என்று உதவியாளர் கேட்க,

சம்யுக்தா கண்கள் தன்னை போல் நாயகன் பக்கம் சென்றது.

இவளை  நோக்கி தான் வந்து கொண்டிருக்கிறான்.

வட்ட மேசையை சுற்றி இவளை வெகுவாக நெருங்கிவிட்டவனை  விழிகள் விரித்து பார்த்தாள் சம்யுக்தா.

அவளின் இதய துடிப்பை எகிற வைத்து, அவளின் பக்கத்து இருக்கையிலே அமர்ந்தான் நாயகன்.

குப்பென அவன் வாசம்! மூச்சை இழுத்துவிட்டாள் சம்யுக்தா.

“சார், சார் இங்க ஏன்? முன்னாடி டேபிள்ல” என்று ஆட்கள் அவனிடம் பதறி கொண்டு வர, ராகவ் அவர்களை எதிர்க்கொண்டு பதில் சொல்லி அனுப்பினான்.

ஆகாஷ் அடுத்து இவர்கள் மேசைக்கு வந்தான்.

சம்யுக்தாவின் உதவியாளர்கள் தன்னை போல் வேறு ஒரு டேபிளுக்கு சென்றுவிட, ராகவ் இவர்கள் மூவருடன் அமர்ந்தான்.

“மாமா” என்று ஆகாஷ் ஏதோ பேசி கொண்டிருக்க, தலையசைத்து பதில் சொல்லி கொண்டிருந்தான் சர்வாச்சார்யா.

எங்கும், எப்போதும் இவன் எங்களை விட்டு கொடுத்ததே இல்லை. ஆனால் நாங்கள்? பெண்ணுக்கு முதல் முறை உறுத்தியது.

“ராகவ். அவங்க டார்கெட் பண்றதை என்னை தான். சோ மேடம் இனிமேல் இது போல ஆளுங்களுக்கு பதில் சொல்ல கூடாதுன்னு சொல்லிடு” என்றான் சர்வாச்சார்யா.

பதில் சொல்ல முடியாது போடான்னு மேடையை விட்டா இறங்க முடியும்? சம்யுக்தா கேள்வி.

“என்னை வைச்சு நடக்கிறதால தான் நான் இங்க வந்திருக்கேன் ராகவ். சிலதை என்னால தடுக்க முடியும். எல்லா நேரமும் இப்படி முடியாது” என்று நாயகன் சொல்ல,

“ஏன் எங்க போயிடுவாராம்?” சம்யுக்தா பட்டென கேட்டுவிட்டு, பின் உதட்டை கடித்து கொண்டாள்.

“என்னை கேள்வி கேட்கிற உரிமை இங்க யாருக்கும் இல்லை ராகவ். அவங்க எல்லையில் இருக்க சொல்லு” நல்லவனிடம் இருந்து பதில் அம்பாக சீறி  வந்தது.

சம்யுக்தா முகம் சிவந்து, மூக்கு விடைத்து போனது.

நாயகனிடம் இருந்து முதல் முறையாக நிராகரிப்பை எதிர்கொள்கிறாள் பெண்.