கடந்து செல் காதலுடன்! 4

எதிர்பார்த்ததை விட மிகவும்  தாமதம் ஆனதில், குருமூர்த்தி வேகமாக வீட்டிற்குள் வந்தார்.

“பாட்டி வேற நிறைய முறை கூப்பிட்டிருக்காங்க. என்ன ஆச்சுன்னு தெரியலையே. நீ எதுக்கும் டாக்டரை வர சொல்லிடு” என்று மணிக்கு சொன்ன குருமூர்த்தி,

ஹாலுக்கு வந்த நேரம் மகளின் அறை கதவு திறந்திருந்ததை கவனித்து, உடனே அங்கு சென்று பார்க்க மகள் இல்லை.

மனிதர் இதயம் சட்டென அதிர, “ண்ணா. டாக்டரை வர சொல்லிட்டேன்” என்று மணி வெளியே இருந்து சொன்னவர்,

“பாப்பா இல்லைங்களாண்ணா. ஒருவேளை அந்த பையன்கிட்ட இருப்பாங்கண்ணா” என்றார்.

பாட்டி தனியாக என்ன செய்ய முடியும்? இவளிடம் உதவி கேட்டிருப்பார் என்ற எண்ணத்தில் நடையே ஓட்டமாக ரகசிய அறைக்கு வந்தவர், அங்கு மகளை கண்டதும் நன்றாக சுவாசித்தார்.

அவனுக்கு அருகில் என் மகள்! “என்ன நடக்குது இங்க?” என்று குருமூர்த்தி கேட்க,

அவரின் கோவத்தில், “ப்பா” என்ற சம்யுக்தா உடல் அதிர்ந்து போனது.

“நான், நான் தான் கூப்பிட்டேன்ப்பா” என்று கற்பகம் பாட்டி அவசரமாக சம்யுக்தா பக்கத்தில் வந்து நின்றார்.

“அந்த பையனுக்கு தூக்கி போட ஆரம்பிச்சிடுச்சு. உங்க போனும் எடுக்கலை, டாக்டர் யாரை கூப்பிடன்னு தெரியாம தான் சம்யுக்தாவை கூப்பிட்டேன்” என்றார் பாட்டி விளக்கமாக.

“இப்போ எப்படி இருக்கான்?” என்று மாசிலாமணி கேட்க,

“நீர் ஆகாரம் கொடுத்துட்டோம் தம்பி, இப்போ நல்லா இருக்க மாதிரி தான் இருக்கு” என்றார் பாட்டி.

குருமூர்த்தி நொடி அவனை கண்டு திரும்ப மகளிடமே பார்வையை பதித்தார்.

“பாட்டி பயந்துட்டாங்கப்பா. அதனால தான். சாரிப்பா” என்றாள் மகள்.

“ரூமுக்கு போ” என்று குருமூர்த்தி சொல்ல, சம்யுக்தா அடுத்த நிமிடம் அவள் அறையில் நின்றாள்.

மருத்துவரும் வந்துவிட, அவனை சோதித்து குருமூர்த்தியிடம் பேசிவிட்டு  கிளம்பினார்.

“இப்போ சாப்பிட்டது சந்தோசம் தான். நாளைக்கும் சாப்பிடுவாரா?” என்று மணி கேட்க,

“மயக்கத்துல கூட மாட்டேன்னு தான் தலையசைச்சது தம்பி” என்றார் பாட்டி.

குருமூர்த்தி எதுவும் பேசாததில், “சம்யுக்தாவை கூப்பிட்டது தப்பு தான்ப்பா. ஆனா புள்ள உனக்காக தான் முதல்ல யோசிச்சது. அப்பா பாதுகாப்புல இருக்காங்க. ஏதாச்சும் ஆனா அப்பா தான் பதில் சொல்லணும்ன்னு சொன்னாப்பா” என்றார் கற்பகம் பாட்டி.

குருமூர்த்தியிடம் ஓர் வெளிச்சம். வார்த்தைகளின்றி தலையசைக்க, அதுவே கற்பகம் பாட்டிக்கு நிம்மதியை கொடுத்தது.

இவ்வளவு அவசரமாக குருமூர்த்தி கிளம்பி செல்ல காரணமே இந்த நல்லவன் தான். அவனின் வார்த்தைகள் தான் காரணம்!

“உன்னை போல தான் அவர்” என்று முதலாளி சொன்ன நேரம் கூட அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

ஆனால் அவன் இவரின் வழியிலே பேச, குருமூர்த்தி கிளம்பிவிட்டார்.

அதிகாலையிலே கிளம்பி அவரின் பழைய முதலாளி                                                                                                          வீட்டில் இருந்தார்

இவர் வந்ததை முதலாளி சிறிதும் விரும்பவில்லை. “ஏன் வந்த மூர்த்தி? என்கிட்ட கேட்டுட்டு தானே நீ கிளம்பியிருக்கணும்” என்று கோவமும் பட்டார் லிங்கம்.

“எங்களையும் கண்காணிக்கிறாங்க மூர்த்தி” என்று அவரின் வலதுகை சொல்ல, குருமூர்த்தி இதையெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை.

“போன்ல நீங்க எதையும் சொல்ல விருப்பப்படலைன்னு புரிஞ்சது. அதனால தான்” குருமூர்த்தி சொல்ல,

“ரொம்ப வெறிபிடிச்சி தேடிட்டு இருக்காங்க மூர்த்தி, கையில சிக்கின நிமிஷம் அவரை முடிச்சிடுவாங்க” என்றார் லிங்கம்.

“அவரோட ப்ரெண்ட்” என்று குருமூர்த்தி கேட்க,

“ம்ம். இவரால தான் அந்த பையன் உசுரு போயிடுச்சு. சின்ன வயசுல இருந்து சிநேகம். இவர் கண்ணு முன்னாடியே எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு.” என்றார் பெருமூச்சுடன்.

குருமூர்த்தி புரிந்தது எனும் விதமாக தலையசைக்க, “அந்த பையன் வீட்டுக்கு ஒரே பையன் போல. மிடில் கிளாஸ் குடும்பம். என்ன பண்ண முடியும்? சொல் பேச்சு கேட்கலை. இவர் உறுதியா நிக்க, இவருக்கு வைச்ச குறியில அந்த பையன் சிக்கிட்டான்” என்றார் லிங்கம்.

“இப்போவும், இவ்வளவு நடந்தும் சொல் பேச்சு கேட்க மாட்டேங்கிறார். பையனை கண்ட்ரோல் பண்றது கஷ்டம்” குருமூர்த்தி சொல்ல,

“பண்ணித்தான் ஆகணும் மூர்த்தி” என்றார் லிங்கம்.

“பாதுகாக்க முடியும். ஆனா நீங்க எதிர்பார்க்கிறதை எல்லாம் செய்ய முடியும்ன்னு எனக்கு தோணலை” குருமூர்த்தி சொல்ல, லிங்கம் அவரையே பார்த்திருந்தார்.

“ஏதும் தப்பா சொல்லிட்டேனா?” குருமூர்த்தி அவர் பார்வையில் கேட்க,

“அவர் யார் மகன்னு சொல்லிடுறேன் மூர்த்தி. அப்புறம் உன் இஷ்டம்” என்ற லிங்கம், “வசுந்தரா” என்றார்.

குருமூர்த்தி கண்களை இறுக்கமாக மூடிவிட்டார்.  இருள் சூழ்ந்த அவர் உலகில் பல பல காட்சிகள் மின்னி மறைந்தது.

சம்யுக்தா! அவரின் மகளுடன் இன்று குருமூர்த்தி வாழ காரணமாக இருந்தவர்.

அவரை முன் மாதிரியாக வைத்தே மகளை வளர்க்கும் குருமூர்த்தி, வசுந்தராவின் மகனை மட்டும் எப்படி விடுவார்?

சில நிமிடமே நின்றவர், சிவந்த கண்களை திறந்து “நான் பார்த்துகிறேன்” என்றார்.

“அதனால தான் உன்கிட்ட அனுப்பினேன்” என்றார் லிங்கம்.

குருமூர்த்திக்கு இப்போது தான் பல விஷயம் புரிந்தது. ஏன் போனில் கூட அந்த பெயரை சொல்லவில்லை என்பதும் தெளிவாக புரிந்தது.

“நம்மளை பாலோ பண்ணி யாரோ பின்னாடி வராங்க” மாசிலாமணி கவனித்து சொல்ல,

குருமூர்த்தி அவரின் எண்ணங்களை விட்டு வெளியே வந்தவர், அதே ஊருக்குள் சுத்த ஆரம்பித்தார்.

நேராக வீட்டிற்கு வரவில்லை. கற்பகம் பாட்டி போன் செய்த போதும் எடுக்கவில்லை.

“கண்டிப்பா நம்ம போனையும் டிராக் பண்ண ஆரம்பிச்சிருப்பாங்க, எடுக்காத” என்று மாசிலாமணியிடமும் சொன்னவர், இரண்டு போனையும் அணைத்துவிட்டு அவரின் பழைய வீட்டிற்கு சென்றார்.

தொடர்ந்து வந்தவர்களின் சந்தேகம் விலகும் வரை அவர்கள் அங்கிருந்து செல்ல மாட்டார்கள் என்று புரிந்து, நிதானமாக காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

“ண்ணா அவங்க கார் கிளம்பிடிச்சு. நாம கிளம்பலாம்” என்று மாசிலாமணி வர, உடனே அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள்.

“நம்மளை முழுசா எல்லாம் விட்டிருக்க மாட்டாங்க மணி. கண்டிப்பா பாலோ பண்ணுவாங்க. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்” என்று மூர்த்தி சொல்ல,

“புரிஞ்சதுண்ணா. ரொம்ப கவனமா பார்த்துகிறேன்” என்றார் மணி.

அதே பதைபதைப்புடன் வீட்டிற்கு வர மகளோ அவள் அறையில் இல்லை. ரகசிய அறைக்குள் இருக்கிறாள். தந்தைக்கான பதற்றம் என்ன செய்ய?

குருமூர்த்தி இன்னமும் தெளியாத முகத்துடன் கட்டிலுக்கு அருகில் வந்தார்.

இப்போதும் இவன் பெயர் தெரியாது. ஆனால் பழைய நினைவு ஒன்று இவரின் நெற்றி சுருக்கத்தை குறைத்தது. கண்கள் அவனை அளவிட்டது.

மீள முடியாத சுழலுக்குள் சிக்கிவிட்டேன்!  குருமூர்த்தி உணர்ந்து கொண்டார்.

என் இரு கைகளுக்குள் இருவர் கரங்கள். ஒன்றில் அவரின் மகள் சம்யுக்தாவின் கரம்!  மற்றொன்றில் இவன் கரம்!

இருவரையும் கடைசி மூச்சுள்ள வரை பாதுகாப்பேன்!

நிச்சயம் இனி எதுவும் மாறப்போவதில்லை. என் உயிர் இருக்கும் வரை மாற்றவும் விட மாட்டேன்!

இந்த அடங்காதவன் நினைத்தாலும் அவன் நினைக்கும் வழிக்கு அவனை செல்ல விட மாட்டேன்!

போதும்! நான் அனுபவித்த வரை போதும்!

இவனும் அந்த இருண்ட பக்கங்களில் சிக்கி கொள்ள கூடாது!

பழிக்கு பழி முடிவல்ல! தொடக்கம்!

இவன் தொடக்கத்தை நான் தடுத்து நிறுத்த தான் வேண்டும்!

சம்யுக்தாவின் தந்தைக்கு இதில் ஈடுபாடு இல்லை. ஆனால் குருமூர்த்தி எனும் தனி மனிதருக்கு கண்கள் பளபளத்தது.

மாசிலாமணியிடம் பாதுகாப்பை அதிகரிக்க சொன்னவர், அடுத்து என்ன என்று திட்டமிட ஆரம்பித்துவிட்டார்.