கடந்து செல் காதலுடன்! 5

அரசு பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்புடன் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தார் சிவப்பிரகாசம்.

மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று உள்ளே அழைத்து செல்ல, “சார். போன்” என்று அவரின் உதவியாளர் நீட்டினார்.

சிவபிரகாசத்தின் தந்தை, “என்ன சொன்னாலும் கேட்டுக்கோ. நமக்கு சின்னவன்  மட்டுமே முக்கியம்” என்றார்.

“புரியுதுங்கப்பா” என்று சிவப்பிரகாசம் போனை கொடுத்து, அந்த பிரமாண்ட ஹாலுக்குள் பிரவேசித்தார்.

எதிர்பார்த்த முக்கிய தலைகள் அங்கிருந்ததில் சிவப்பிரகாசம், “ஹலோ சார்” என்று கைகுலுக்கி கொண்டார்.

குடிக்க என்று கொடுக்க மறுக்காமல் எடுத்து கொண்ட சிவப்பிரகாசம், நிதானமாக பருகினார். பொதுவான பேச்சுக்கும் தெளிவாக பதிலளித்தார்.

“நான் கூட நடக்கறதை எல்லாம் வைச்சு இவர்கிட்ட ரொம்ப எதிர்பார்த்துட்டேன். சும்மா சொல்ல கூடாது. அசராமா நிக்கிறாங்க” என்று எதிரில் இருந்தவர் முணுமுணுக்க,

“உனக்கு சிவபிரகாசத்தை மட்டும் தான் தெரியும். எனக்கு இரண்டு தலைமுறையா அந்த குடும்பத்தை தெரியும். பலதை பார்த்துட்டாங்க. இதையும் பார்ப்பாங்க” என்றார் அருகில் இருந்தவர்.

“சார் இப்போ நடந்துட்டு இருக்கிறது அவர் பையன் உயிர் பிரச்சனை. இதுக்கு கூடவா பதற மாட்டாங்க” என,

“பதறலைன்னு நமக்கு தெரியுமா? வெளியுலகத்துக்கு அவங்க இப்படி தான். எதையும் கண்டுபிடிக்க முடியாது”

“உண்மை தான் சார். இவ்வளவு அமளி துமளி அவங்களுக்குள்ள நடந்தும், ஊர் உலகத்துக்கு ஒன்னும் தெரியலையே”

“இவர் நம்ம நாட்லே பேர் சொல்ல கூடிய பணக்காரர், இவர் மனைவி வசுந்தரா மேடம் உச்ச நீதிமன்ற நீதிபதி. பணம், பவர் இரண்டும் கையில் இருக்கு. இதை கூட பண்ணலைன்னா எப்படி?”

“ஆமா தான் சார்.  இனி என்ன நடக்க போகுதுன்னு பார்ப்போம்” என்று அவர்கள் பேச்சை முடித்து கொண்டனர்.

“சொல்லுங்க சிவப்பிரகாசம்” என்று முக்கிய பேச்சுக்குள் அடியெடுத்து வைத்தனர்.

“என் சின்ன  மகன். அவனுக்கு தான் ஓர் சின்ன பிரச்சனை” என்று நடந்ததை சொன்னவர்,

“உங்களுக்கு அந்த ஆட்களோட நல்ல பழக்கம் இருக்கு. எங்க சார்பா அவங்ககிட்ட பேசணும்” என்றார்.

“ம்ம். சின்ன பிரச்சனையா? என்ன சொல்லுங்க சார் உங்க பேச்சு வார்த்தையே வேற ரகம் தான்” என்ற நாட்டின் முக்கிய அதிகார புள்ளி,

“நம்ம பார்ட்டி மூலமா பேசி பார்க்கலாம். ஆனா விஷயம் சுமுகமா முடியும்ன்னு உறுதியா சொல்ல முடியாது சார்” என்று புள்ளி வைத்தார்.

“நீங்க பேசி பாருங்க சார். சுமுகமா இல்லேன்னாலும் முடிவு கட்டாயம் கிடைச்சுடும்”  சிவப்பிரகாசம் வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து சொன்னார்.

“உங்க மகன் பண்ணது தேவையில்லாத வேலை மிஸ்டர் சிவப்பிரகாசம். எங்க, என்ன நடந்தா இவருக்கு என்ன? ரைடிங் போனா அதை மட்டும் தான் பார்க்கணும்” என்றார் மற்றவர்.

“நாட்டுல நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். நீங்க கூட பிஸ்னஸ்க்காக சிலதை பண்ணியிருப்பீங்க. சம்மந்தம் இல்லாத ஆளுங்க ஒதுங்கி தான் போகணும். இல்லை நான் கேட்பேன்னு ஹீரோயிசம் காட்டினா பயம் காட்டத்தான் செய்வாங்க. உங்க பையனோட ப்ரெண்ட் பத்தி நாங்களும் கேள்விப்பட்டோம். வருத்தமா தான் இருக்கு. என்ன செய்ய” என்றார் இன்னொருவர்.

சிவப்பிரகாசம் முன்பே சில சந்தேகங்களை கொண்டிருந்தார். இப்போது அது உண்மை தான் என்பதை உணர்ந்து கொண்டவர், “நீங்க சொல்றது உண்மை தான் சார். எப்போ என்ன செய்யணும்ன்னு என் மகனுக்கு தெரியலை. இனி தெரிஞ்சுப்பான்” என்றார்.

“சொல்லி கொடுங்க மிஸ்டர் சிவப்பிரகாசம். பணத்துல பிறந்துட்டா மட்டும் போதாது. அனுபவிக்க அவர் இருக்கணும் இல்லை” என,

“என் மகன் இருப்பான் சார். பணம் எல்லாத்தையும் சாதிக்கும். அதிகாரம் தான் கை மாறிட்டே இருக்கும். உங்களுக்கு தான் இது தெரியுமே”  என்று தோள்களை அலட்சியமாக குலுக்கி கொன்டார் சிவப்பிரகாசம்.

எதிரில் இருந்தவர்கள் முகம் பார்த்து கொண்டதுடன், “நாங்க உடனே இதுக்கான வேலையில இறங்கிடுறோம். பேசும் போது நீங்களும் இருக்க விருப்பட்டா”

“இல்லை. தேவையில்லை. நீங்களே பேசுங்க” என்று சிவப்பிரகாசம் முடித்துவிட்டார்.

“சார். மீட்டிங் போகணும்” என்று உதவியாளர் அந்த சூழ்நிலைகேற்று சொல்ல, சிவப்பிரகாசம் விடைபெற்று கொண்டார்.

“என்ன சொல்றாங்க சிவப்பிரகாசம்” என்று அவரின் தந்தை மகனுக்காக காத்திருந்து கேட்க,

சிவப்பிரகாசம் கொதிக்கும் நெஞ்சை உடல் நலனில்லாத தந்தைகாக அடக்கி கொண்டபடி, “நீங்க சொன்னீங்கன்னு தான் இவங்ககிட்ட போனேன்ப்பா. பெருசா அடி போட பிளான் பண்றாங்க” என்றார் சாதாரணமாக.

“சிவப்பிரகாசம். தொழில் செய்றவங்களை  பகைச்சுக்கிட்டு இந்த பார்ட்டி என்ன பண்ணிட முடியும்? நாம ஒன்னும் சும்மா கேட்கலை. அவ்வளவு கொடுத்திருக்கோம், இதுக்கும் வாங்க தான் போறாங்க. செய்யட்டும் விடு” என்று பெரியவர் சிரமப்பட்டு பேசினார். வயதாகிறதே!

“ப்பா. நாம சரியான வழியில தான் போயிட்டு இருக்கோம். இடையில இவங்களை உள்ள கொண்டு வந்தது எனக்கு பிடிக்கலை”

“எனக்கும் தான் பிடிக்கலை. ஆனா விஷயம் பெருசு. இந்த பார்ட்டி இல்லாம செஞ்சா நமக்கு குடைச்சல் கொடுப்பாங்க. யார் கண்டா உள்ள நுழைஞ்சு கெடுத்தும் விடுவாங்க” என்று அவரின் அனுபவத்தில் சொன்னார்.

“சார்” என்று அவரின் உதவியாளர் அனுமதி வேண்டி வந்தவர், ” பார்ட்டிக்கு நூறு கோடி டொனேஷன் கேட்கிறாங்க” என்றார்.

சிவப்பிரகாசம் கடுப்பில் நிற்க, “இது ஆரம்பம் தான். இன்னும் கேட்பாங்க. கொடுத்து விடு” என்றார் பெரியவர்.

“எனக்கு என் பேரன் சீக்கிரம் வீடு வந்து சேரணும். பணத்தை பத்தி எல்லாம் யோசிக்க முடியாது” என்று மகனிடம் சொல்ல,

“உங்க பேரன் நம்ம பேச்சு கேட்டிருந்தா ஏன் இந்த பாடு சொல்லுங்கப்பா. இவனையும் எங்கேயோ வைச்சுக்கிட்டு, அந்த கோகுல் பையனையும் பறிகொடுத்துட்டு, முடியலைப்பா. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த போராட்டம்ன்னு தெரியலை” என்று தளர்ந்து போனார் சிவப்பிரகாசம்.

“சின்ன பையன். உலகம் தெரியலை. இனி சொல் பேச்சு கேட்பான் விடு” என,

“யாரு அவன்? எனக்கு என்னமோ நம்பிக்கையே இல்லை” என்றார் மகனை முழுதும் தெரிந்தவராக.

“யாரோ ஒருத்தருக்காக அவ்வளவு தூரம் போனவன், கோகுலை செஞ்சதுக்கு என்ன பண்ண காத்திருக்கானோ தெரியலை” என்றார் சிவப்பிரகாசம்.

“எனக்குமே ரத்தம் கொதிக்குது தான் சிவப்பிரகாசம். பாவம் கோகுல் தங்கமான பையன்” என்றார் பெரியவர்.

“கோகுல் வீட்டுக்கு திரும்ப போக முடியலை. பெத்தவங்க முகத்தை என்னன்னு பார்த்து ஆறுதல் சொல்லப்பா? கோகுலோட அம்மா கோவமா இருக்காங்க. வசுந்தராகிட்ட முகம் கொடுத்து பேச காணோம். உங்க பேரன் வந்ததும் முதல்ல அவங்ககிட்ட தான் போய் நிக்க போறான்” என்றார் சிவப்பிரகாசம்.

“சமாளிச்சுப்பான். வசுந்தரா பேரனை பார்த்துக்குவா” என்றவர், “சின்னவன்  இப்போ எங்க இருக்கான்?” என்று மகனிடம் கேட்டார்.

“வசுந்தராக்கு மட்டும் தான் தெரியும்ப்பா.” என்றார் சிவப்பிரகாசம்.

“அவனை நல்லா பார்த்துக்க சொல்லி மட்டும் சொல்லு. ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டான். சவுகரியமா வைச்சுக்க சொல்லு” என,

சிவப்பிரகாசமும் இதைத்தான் மனைவியிடம் சொல்லி கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் பார்வைகளும், பதிலில்லா மௌனமும் மகன் சவுகரியமாக இல்லை என்பதை தான் உணர்த்துகிறது.

தந்தையின் எண்ணத்திற்கேற்ப, அவரின் மகன் அங்கு தலை கீழாக நின்றிருந்தான்.

அவனின் கண்கள் குருமூர்த்தியின் பாதத்தில் பதிந்திருக்க, வேர்வை வழிந்து அவனை ஒருவழியாக்கி கொண்டிருந்தது.

பயிற்சி நேரத்தில் குருமூர்த்தி மிகுந்த கண்டிப்புடன் இருப்பார் என்று தெரிந்தும் இவன் அங்கு தவறவே செய்கிறான். இதோ இப்போதும் சுருள் வாள் வீச்சு பயிற்சியில், தவறாக செய்து காயம் வாங்கியிருப்பான்.

மாசிலாமணி சமாளித்ததால், இவன் தப்பித்தான். இதை சொல் பேச்சு கேளாமை என்பதா இல்லை கவனக்குறைவு என்பதா?

எதுவா இருந்தாலும் தவறு தான் என்று தண்டனை கொடுத்துவிட்டார்.

சிரமப்படுகிறான் என்று தெரிந்தும் மேலும் சில நிமிடங்கள் அவனை அப்படியே விட்ட குருமூர்த்தி, “ரிலாக்ஸ்” என்றார்.

‘நீ என்ன சொல்றது போ’ என்று அவன் கடினப்பட்டு அப்படியே இருக்க, “தம்பி. போதும்ப்பா” என்று மாசிலாமணி அவனுக்கருகில் குனிந்து சொன்னார்.

கேட்க வேண்டுமே? குருமூர்த்தியை கடுப்பாக்கி விட்டு, மாசிலாமணியை கெஞ்சவிட்டு தான் எழுந்தவன், “நாளைக்கும் இதே தப்பை தான் பண்ணுவேன். அதுக்கும் சேர்த்து தான் இது” என்றான் தெனாவட்டாக.