குருமூர்த்தி கண்கள் அந்த திரையை பார்த்தே இருந்தது.
மகள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்திருக்க, அவன் மிதமான புன்னகையுடன் எம்பையரை திறந்து வைக்கிறான்.
அவனின் ஒற்றை கரம் சம்யுக்தாவை தன் நெஞ்சுக்குள் சுருட்டி கொள்கிறது.
விளக்கம் கொடுத்து தான் புரிய வைக்க வேண்டுமா? தேவையில்லை என்றது புகைப்படங்கள்.
அன்று மாலையே ஆகிவிட்டது. புகைப்படங்கள், வீடியோக்கள் அதன் சுழற்சியை இன்னமும் நிறுத்தவில்லை.
சொல்ல போனால் பகிர்தல் எண்ணிக்கை கூடி கொண்டே தான் செல்கிறது.
சர்வாச்சார்யா யார் என்பதில் ஆரம்பித்து, சம்யுக்தா யாரின் மகள் என்பதில் தான் தடைபட்டு நிற்கிறது!
“அண்ணா” என்று மாசிலாமணி திரும்ப வந்தவர்,
“காபி, டீ ஏதும் குடிங்கண்ணா?” என்று கேட்டு நின்றார்.
குருமூர்த்தியின் அமைதி பலரின் நிம்மதியை பறித்துவிட்டது.
சர்வாச்சார்யா வந்தான்! சம்யுக்தாவை கைவளைவில் நிறுத்தி எம்பையரை திறந்தான். அவளுடன் சேர்ந்து விளக்கேற்றினான். அமைக்கப்பட்ட மேடையில் சில வார்த்தைகள் பேசினான். திருப்தியாக விருந்தை உண்டான். கிளம்பி சென்றுவிட்டான்.
குருமூர்த்தி அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவனும் அவரிடம் பேசவில்லை.
முக்கிய விருந்தினர்கள் எல்லாம் கிளம்பவும், குருமூர்த்தியும் கிளம்பிவிட்டார்.
“ப்பா” என்ற மகளிடம்,
“பங்கஷனை நல்ல படியா முடிச்சுட்டு செட்டில் பண்ணிடு” என்றார் தந்தை.
“ப்பா. நான்” என்ற மகளின் உச்சி தலையை வருடியவர், அறைக்குள் வந்து அடைந்து கொண்டார்.
மணியும், குணாவும் அவரை தேடி வந்து கொண்டே தான் இருக்கின்றார்கள். குருமூர்த்தி வெளியே வருவேனா என்கிறார்.
ஒருவேளை சம்யுக்தா தந்தையை தேடி சென்றிருந்தால் வந்திருப்பாரோ என்னவோ?
மணி கூட, “நீ போ பாப்பா. அண்ணாகிட்ட பேசு. எதாவது சந்தேகம் கேட்கிற மாதிரியாவது போ பாப்பா” என்று சொன்னார்.
சம்யுக்தா மறுத்துவிட்டாள். “அப்பா அவரே வருவார் அங்கிள். நான் அவரை தொந்தரவு செய்ய மாட்டேன்” என்றாள்.
“உன் ஆளுக்கு என்ன அப்படி ஒரு தைரியம்? மீடியா, அத்தனை ஆளுங்க முன்னாடி தான் இப்படி பண்ணுவாரா?” என்று குணா அங்கலாய்த்து கொண்டான்.
விருந்தாளிகள் எம்பையர் பற்றி பேசியதை விட, இவர்கள் மூவரை பற்றி தான் அதிகம் பேசினர்.
சம்யுக்தா பின்னாலே அலையும் கண்கள், ரகசிய பேச்சுக்கள், அவளை விட குணா, மணியை தான் குமுற வைத்தது.
குருமூர்த்தி மேல் உள்ள பயமோ, இல்லை சர்வாச்சார்யா உயரமோ அந்தளவு தைரியத்தை யாருக்கும் கொடுக்கவில்லை.
“அப்பாகிட்ட சொல்லிடுமா. பங்க்ஷன் நல்லா போச்சு, எந்த கேட்டரிங், சாப்பாடு அருமை, எம்பையர் பிரம்மாண்டமா இருக்கு, அசத்திட்டீங்க, வாழ்த்துக்கள்” என்பது போன்ற பேச்சுகளுடன் தான் விடைபெற்று கொண்டனர்.
சம்யுக்தா மிதமான புன்னகையுடன் எல்லாருக்கும் பரிசு பொருட்களை கொடுத்தனுப்பினாள்.
சண்முகம் குடும்பம் இவளிடம் வந்த நேரம் மட்டும், பெண்ணிடம் ஓர் அசவுகரியமான உணர்வு.
முகத்தில் காட்ட கூடாது என்று அவள் நினைத்தாலும், ஒதுங்கிய உடல் மொழி அவளை வெளிப்படுத்தி தான் விட்டது.
ரோஹனின் முகம் கசங்கி போக, சண்முகம் மகனின் கைப்பற்றி தட்டி கொடுத்தார்.
சண்முகத்தின் மனைவி, அவரின் மகள் சம்யுக்தாவின் கைப்பற்றி ஏதேதோ பேசினார்கள். பெண்ணும் பதில் சொன்னாள். ஆனால் சரியான பதிலை சொல்கிறாளா என்று கேட்டால் பெண்ணுக்கு தெரியாது.
லிங்கம் தான் அவர்களை இறுதி வரை நின்று உபசரித்து அனுப்ப, ரோஹன் மட்டும் தேங்கி நின்றான்.
“சொல்லுங்க சீனியர்” என்று இயல்பாக கேட்டாள் சம்யுக்தா.
ரோஹன் உறைந்த தருணம் அது!
ராஜாவா வருகிறேன் என்று கேட்டதற்கே கோவத்தில் சிவந்து போனவள், வார்த்தைகளை கத்தியாக்கி அவனை நோக்கி வீசியவள், இன்று சாதாரணமாக பேசுகிறாள்.
அவளின் கோவம் கூட, சர்வாச்சார்யா ஒருவனே அவளுக்கு ராஜா. வேறு ஒருவர் அந்த வார்த்தையை கூட சொல்ல கூடாது என்பதால் தானா?
“உங்க யார் மேலயும் எனக்கு கோவம் இல்லை சீனியர்”
ரோஹனிடம் ஒரு கசந்த புன்னகை. இதற்கான அர்த்தம் வேறாக அல்லவா இருந்திருக்கிறது.
சகமனிதனாக கூட என்னை ஏற்காதவளிடம் தான், நான் காதல் என்று பேசியிருக்கிறேன்!
“ஸாரி. என்னை மன்னிச்சுடு” என்றான் ரோஹன்.
“சீனியர்” சம்யுக்தா கேள்வியாக பார்க்க,
“உன் இழப்போட மதிப்பை நான் இப்போதான் உணர செய்றேன்” ரோஹன் மனதை மறையாமல் சொன்னான்.
சம்யுக்தா முகத்தில் ஓர் வெளிச்சபுன்னகை.
“ஒரு நாள் நீங்க நிச்சயம் புரிஞ்சுப்பீங்கன்னு எனக்கு தெரியும் சீனியர்” என்றாள் பெண்.
என் தாத்தாவால், சம்யுக்தா இழந்தது பெரிதிலும் பெரிதல்லவா?
தினம், தினம் அந்த இழப்பின் துக்கத்துடன் வாழும் ஒரு பெண்ணிடம் தான் நான் காதல் என்று உளறியிருக்கிறேன்.
“சீனியர். நான் ஏன் அவரோட கோயம்பத்தூர் போனேன்னு உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டாள் சம்யுக்தா.
ரோஹன் தான் உள்ளுக்குள் கொஞ்சம், கொஞ்சமாக உடைந்து கொண்டிருக்கிறானே!
தெரியலை என்று தலை அசைத்தான்.
“அவரோட வலியை நான் உணர்ந்தேன்” என்றாள் சம்யுக்தா.
‘என் வலியை நீ உணரல! சகலத்தையும் உணர்ந்து கொள்வது தானே காதல்!’
புரிதல், விளக்கம் கொடுத்தல் வேறு.
காதல் கொண்டவர்களுக்காக தானே கரைவது வேறல்லவா?
ரோஹன் முற்றும், முழுதாக உடைந்தான். அவன் கண்களில் கண்ணீர் சூழ்ந்துவிட்டது.
காதலா? இல்லை குற்ற உணர்ச்சியா? எதுவாக இருந்தால் என்ன? அவனே புரிந்து கொள்ளட்டும்!
“தம்பி. அப்பா கூப்பிடுறார்” என்று லிங்கம் வந்தவர்,
“என்னாச்சு தம்பி? உங்க தொழில் பத்தி கவலை படுறீங்களா? சரி பண்ணிடலாம். ஒன்னும் ஆகாது. தைரியமா இருங்க” என்று ரோஹனின் தோள் தட்டி கொடுத்தார் லிங்கம்,
சர்வசாதாரணமாக சம்யுக்தாவின் முகத்தை பார்த்து காதல் சொன்ன ரோஹனுக்கு, விடை பெறும் நேரம் அவளின் முகத்தை பார்க்கும் துணிவு இல்லை.
லிங்கத்திடம் மட்டும் தலையசைத்து கிளம்பிவிட்டான்.
“பாவம். நல்லா போய்ட்டு இருந்த தொழில், ஒரே நாளில மொத்தமா கீழே இறங்கிடுச்சு” என்றார் லிங்கம்.
“என்ன சொல்றீங்க அய்யா? ஒரு நாள்லவா?” என்று சம்யுக்தா கேட்க,
“அதுதான் எங்களுக்கும் அதிர்ச்சியா இருக்கு. அவரோட பாட்னர்கள் ஒரே நாள்ல சொல்லி வைச்ச மாதிரி, பங்குகளை அடிமட்ட விலைக்கு வித்திருக்காங்க. போதா குறைக்கு எடுத்த ப்ரொஜெக்ட் அத்தனையிலும் குளறுபடி. இன்வெஸ்ட் பண்ணவங்க காசை எடுத்து வைக்க சொல்லி கெடு கொடுத்திருக்காங்க. ஷேர்ஸ் எல்லாம் கண்டமேனிக்கு இறங்கிட்டு இருக்கு. தம்பியும் நிமிர்த்திடலாம்ன்னு போராடிட்டு இருக்காரு. ஒன்னும் கைகூடி வரலை” என்றார் லிங்கம்.
“இது எப்போ நடந்தது அய்யா?”
“எம்பையருக்கு வந்திருந்தாரு இல்லை. அன்னையில இருந்து தான் எல்லாம் ஆரம்பிச்சது”
“ஓஹ்”
“பணத்தை பத்தி அவங்களுக்கு கவலையிலை. ரோஹன் தம்பி அடையாளம் அந்த தொழில். கஷ்டப்பட்டு மேல கொண்டு வந்திருக்கார். ஸ்டெடியா போயிட்டிருந்த தொழில், திடீர்ன்னு மொத்தமா சரியுற நிலைமைக்கு வந்ததை தான் அவங்களால ஏத்துக்க முடியலை. யாரோட கை இதுக்கு பின்னாடி இருக்குன்னு விசாரிச்சுட்டு இருக்காங்க” என்றார் லிங்கம்.
சம்யுக்தாவிற்குள் ஏனோ ஒருவன் முகம் தான் மின்னி கொண்டிருந்தது.
அவரா மட்டும் இருந்திட கூடாது!
எம்பையரிலே மூன்று வேளை உணவும் ஏற்பாடு செய்ய பட்டிருக்க, குணா தான் மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தான்.
“அப்பாக்கு கொண்டு போய் கொடுத்துட்டு வாங்க” என்று சம்யுக்தா மதிய உணவை பேக் செய்து கொடுத்தாள்.
மாலை நேரமும், பலகாரத்துடன், குடிக்கவும் கொடுத்தனுப்பினாள்.
“அண்ணா காலையில கெஸ்ட் கூட கொஞ்சம் சாப்பிட்டது தான். அதுக்கு அப்புறம் டீ, காபி கூட குடிக்கலை. எல்லாம் அப்படியே தான் இருக்கு.” என்று மாசிலாமணி சொன்னார்.
சாப்பிடலையா? சம்யுக்தா அதற்கு மேல் தள்ளி இருக்க முடியாமல், குருமூர்த்தி இருக்கும் அலுவலக அறைக்கு சென்றாள்.
மனிதர் அறைக்குள் நடந்து கொண்டிருக்க, “ப்பா. டீ குடிக்கலாமா?” என்று கேட்டபடி பிளாஸ்க்கில் இருந்ததை கப்பில் ஊற்றி நீட்டினாள்.
குருமூர்த்தி மறுத்து நடக்க, திரும்ப அவர் வழியில் நின்று நீட்டி கொண்டே இருந்தாள் சம்யுக்தா.
தீவிர சிந்தனையில் சுளித்திருந்த அவரின் புருவங்கள், மகளின் செயலில், கோவத்தை காட்டியது.
“ப்பா. எனக்கு டையர்டா இருக்கு. டீ கண்டிப்பா குடிக்கணும். ப்ளீஸ்” என்று மகள் சொல்ல,
குருமூர்த்திக்கு மகளின் சோர்ந்த முகம் டீயை வாங்க வைத்தது.
“எல்லாம் முடிஞ்சுதா?” என்று குருமூர்த்தி கேட்க,
சம்யுக்தா கண்கள் அங்கிருக்கும் சிசிடிவி திரையை தொட்டு வந்தது. தந்தை என்னை நிச்சயம் கவனித்து தான் இருந்திருப்பார்.
“முடிஞ்சதுப்பா. கெஸ்ட் உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க. நிறைய பேர் அப்ரிஷியேட் பண்ணாங்க” என்று முக்கியமான சிலரின் பேச்சுக்களை தந்தையிடம் முழுதும் சொன்னாள்.
“அந்தாள் கொஞ்சம் விஷம். அவன்கிட்ட பார்த்து தான் பேசணும். இவர் நல்ல மனுஷன். எனக்கு சில உதவியும் பண்ணியிருக்கார்” என்று குருமூர்த்தியும் சிலரை குறிப்பிட்டு மகளிடம் சொன்னார்.
சம்யுக்தா கேட்டு கொள்ள, “சண்முகம் மகனுக்கு என்னவாம்?” என்று கேட்டார் குருமூர்த்தி.
“அவர் புரிஞ்சுக்கிட்டார்ப்பா” என்றாள் மகள் சுருக்கமாக.
“நல்லது. அவன் தொழில்ல ஏதோ பிரச்சனைன்னு கேள்விப்பட்டேன்”
“ஆமாப்பா. லிங்கம் அய்யா என்கிட்ட சொன்னார்” சம்யுக்தா எல்லாம் சொல்ல,
“ம்ம்” என்ற குருமூர்த்திக்கும் அடங்காதவன் மேல் தான் சந்தேகம்.
நான் அவனிடம் சண்டையிட்டு கொண்டிருக்க, படுத்திருந்தவன் புன்னகைத்தானே!
அவன் புன்னகைத்தது பெரிது இல்லை தான். ஆனால் அந்த புன்னகையில் இருக்கும் கோவம் உறுத்துகிறது.
அப்பாவும், மகளும் சில நொடிகள் அவன் எண்ணத்தில் தொலைந்து போய்விட்டனர்.