“சர்வா. ஏன் தங்கம் இப்படி?” என்ற வசுந்தரா மகனின் முதுகை வருடி கொடுத்தார்.
தவறு செய்தால் கேட்கலாம், திருத்தலாம். ஆனால் மகன் செய்யும் எதையும் தவறு என்ற வட்டத்திற்குள் அடக்கி விட முடியாது. வசுந்தராவின் தடுமாற்றத்திற்கு காரணம் இதுவே!
“சரி, என்னவா இருந்தாலும் பொறுமையா பேசு. நமக்காக உன் அத்தைங்க, மாமாங்க நிறைய சப்போர்ட் பண்ணியிருக்காங்க. அதையும் நினைப்புல வைச்சுட்டு பேசு” என்று மகனுக்கு சொல்ல,
“ம்ம்” என்றபடி அவரின் தோள்களில் கைபோட்டு ஹாலுக்கு அழைத்து வந்தான்.
“ஆச்சார்யா. சாப்பிட வா தங்கம். எல்லாம் உனக்கு புடிச்சது தான் செஞ்சிருக்கோம். அக்கா உன் பேவரைட் ரசமலாய் செஞ்சிருக்காங்க, நான் உனக்காக பிஸிபேளாபாத், உருளை கிழங்கு பிரை செஞ்சேன், உன் வருங்காலம் உனக்காக புல்கா, செட்டிநாடு கிரேவி பண்ணியிருக்கா, அப்பறம்” என்று சின்ன அத்தை அடுக்கி கொண்டே போக,
“அத்தை, அத்தை, போதும். நான் நைட் இதெல்லாம் சாப்பிட்டுக்கிறேன், இப்போ எல்லாத்தையும் அப்படியே சூடா பேக் பண்ணி வைச்சிடுங்க” என்று சின்ன அத்தையின் கன்னம் கிள்ளி கொஞ்சினான் பாசக்கார மருமகன்.
“ஏன் தங்கம். பசிக்கலையா உனக்கு? ஜெட் லேக்கா இருக்கா?” என்று பெரிய அத்தை அவன் தோள் வருடி கேட்க,
“அதெல்லாம் ஒன்னுமில்லை அத்தை, நான் ஓகே தான்” என்றான் மருமகன்.
“இதுக்கு தான் நாளைக்கு இதெல்லாம் செஞ்சுக்கலாம்ன்னு சொன்னேன். உன் அத்தைங்க எங்க கேட்கிறாங்க? அண்ணன் மகன் ரொம்ப வருஷம் கழிச்சு ஊருக்கு வர சந்தோஷத்துல அவங்களை கையில பிடிக்க முடியலை” என்று சின்ன மாமா சிரிப்புடன் சொல்ல,
“கூடவே இருக்க நாம கண்ணுக்கு தெரிய மாட்டோம் அப்பா. என்ன பண்ண?” என்று சின்ன மாமாவின் மகன் சலித்து கொண்டான்.
“சரி இதுவும் வேண்டாம். சூடா ரச சாதம் மட்டும் சாப்பிடு” பெரிய அத்தை எடுக்க போக,
“அத்தை நான் சாப்பிட்டேன்” என்றான் மருமகன்.
“சாப்பிட்டியா?” அவர்கள் திகைக்க,
“எங்க சாப்பிட்ட?” பெரிய மாமா சத்தியனிடம் இருந்து கேள்வி வந்தது.
“குருமூர்த்தி? காட். ஏன் சர்வா இப்படி இருக்க நீ? அவன் வீட்ல சாப்பிட்டியா? நம்ம தகுதி தராதரம்”
“அப்பா” சர்வாச்சார்யா குரல் உயர்ந்து ஒலித்தது.
“என் உயிரை காப்பாத்த நீங்க அவர்கிட்ட கேட்டப்போ, தகுதி தராதரம் பத்தி மாமா பேசினாரா?” என்று கேட்டான் சர்வாச்சார்யா.
“சர்வா அது வேற. நீ இப்போ பண்ணிட்டிருக்கிறது வேற” சின்ன மாமா சொல்ல,
“முதல்ல நீங்க எல்லாம் போய் சாப்பிடுங்க, நாம பொறுமையா பேசலாம்” என்ற சர்வாச்சார்யா எல்லாரையும் டேபிளுக்கு அழைத்து சென்று, தானே அவர்கள் எல்லோருக்கும் முதலில் இனிப்பை வைத்தான்.
“ஏண்டா பஞ்சாயத்தை ஆரம்பிச்சுட்டு சோறு எப்படிடா உள்ள இறங்கும்” என்று சர்வாச்சார்யா காதை கடித்தான் பெரிய மாமாவின் மகன் கார்த்திக்.
“பஞ்சாயத்து பேச தெம்பு வேணும்ன்னு தான் சோறு போடுறது. ஒழுங்கா எனக்கு தளபதியா என் பக்கத்துல வந்து நிக்கிற” என்று அவனை மிரட்டினான் நாயகன்.
“நான் தான் உங்க வீட்டு மருமகன், ஞாபகம் இருக்கு தானே?” என்று அவன் கெத்தாக கேட்க,
“அது நீ நடந்துக்கிறதை பொறுத்து தான். ஒரு வயசு சின்னவனா இருந்தாலும் பரவாயில்லை சுஹாவை நான் கட்டிக்கிறேன்னு உன் தம்பி கேட்கிறான், எப்படி வசதி?” என்றான் இவன் மிரட்டலாக.
“பரதேசி அப்படியா கேட்டான்” என்று எதிரில் சாப்பிட்டு கொண்டிருந்த தம்பி காலை டேபிளுக்கு அடியில் மிதித்து வைத்தான் கார்த்திக்.
“ஆஹ். கார்த்திக் எருமை நீதானே. ஏண்டா மிதிச்ச?” தம்பிக்காரன் சண்டைக்கு எழுந்து நிற்க,
“நைட் ரூமுக்கு வா காரணம் சொல்றேன்” என்று அண்ணன்காரன் பல்லை கடித்தான்.
ஆண் பிள்ளைகள் அறைக்குள் தான் அடித்து கொள்வார்கள். வெளியே வந்துவிட்டால் சிறுபிள்ளை தனங்கள் அறவே கூடாது என்பது தான் அவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு.
“குருமூர்த்தி ஒரு ரௌடி, பணத்துக்காக அடிதடி பண்ணவன், கொலை கேஸுக்காக ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன், அவனோட நீ பழக்கம் வைச்சுகிறது சரியா வராது சர்வா” சத்தியன் எடுத்ததும் சொல்லிவிட்டார்.
இத்தனை வருடங்கள் வெளிநாட்டில் வாழ்ந்தவன். குருமூர்த்தி உடன் போனில் கூட தொடர்பு இல்லை என்பது குடும்பத்தினருக்கு தெரியும்.
‘அவங்களோட ரொம்ப பழகிடலை. ஹாஸ்பிடல்ல வைச்சு அந்த பொண்ணு கூட பேசுறது அவளை கூப்பிட்டு விடறது எல்லாம் பார்த்து பயந்துட்டோம். பரவாயில்லை. நம்ம புள்ள சரியாதான் இருக்கு’ என்று குடும்பத்தினர் மகிழ்ச்சி கொண்டிருந்தனர்.
அதை உடைத்துவிட்டான். வந்த நாளிலே உங்கள் எண்ணங்களுக்கு நான் அப்பாற்பட்டவன் என்று காட்டிவிட்டான் சர்வாச்சார்யா.
வீட்டினரால் அதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை. சொசைட்டியில் குருமூர்த்தி யார், அவரின் அடையாளம் என்னவாக இருக்கிறது என்பதை சர்வாச்சார்யாவிற்கு புரிய வைக்க முயல்கின்றனர்.
புரிந்து கொள்வானா? ம்ஹூம். வசுந்தரா தம்பதி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
“அவரோட பழக கூடாது மாமா. ஆனா அவரை பகைச்சுக்க மட்டும் செய்யலாமா?” என்று கேட்டான் சர்வாச்சார்யா.
மாமாக்கள் மற்றவர் முகம் காண, “எம்பையர் அப்ரூவல் கேன்சல் பண்ண ஆர்டர் ரெடியாகிட்டு இருக்கு. என்ன மாமா?” என்று அவன் மேலும் கேட்க,
“நாங்க அதை தொடங்கலை” என்றார் சின்ன மாமா.
“கேன்சல் பண்ண சொல்லி அதிகாரிக்கிட்ட பேசினது கூட நீங்க இல்லையா மாமா”
“சர்வா, ரியாலிட்டி இதுதான். ஒரு ரௌடி, நம்மகிட்ட பணம் வாங்கி, அடிதடி பண்ணிட்டு இருந்தவன், இன்னைக்கு நம்ம கண்ணு முன்னாடியே வளர்ந்தா விட்டுடுவாங்களா?” என்று சத்தியன் கேட்டார்.
“அண்ணா சொல்றது உண்மை ராஜா. ரியல் எஸ்டேட் புலிங்க, கார்ப்பரேட் கில்லாடிங்க சிலர் அவர்கிட்ட லேண்ட் கேட்டிருக்காங்க. கொடுக்க மாட்டேன்னு சொல்லி எம்பையர் பில்ட் பண்ணிட்டார். குருமூர்த்தி பிஸ்னஸ் உலகத்துக்குள்ள் அடியெடுத்து வைக்கிறதை யாரும் அக்சப்ட் பண்ணிக்க மாட்டேங்கிறாங்க” என்று சின்ன மாமா சொன்னார்.
“அது அவங்க பாடு, நாம ஏன் அதுல தலையிடறோம் மாமா?” என்று சர்வா கேட்க,
“அப்புறம் நீ ஏன் அவருக்கு பின்னாடி இருந்து சப்போர்ட் பண்ணிட்டு இருக்க?” என்று சத்தியன் கேட்டார்.
வீட்டினர் அதிர்ந்தனர். “சண்முகம் மட்டுமே சப்போர்ட் பண்ணி குருமூர்த்தி கட்டிடம் எழுப்பியிருக்க முடியாது, விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன். நீ தான் பணத்தை கொடுத்திருக்க, எல்லா பவர் சென்டர்கிட்டேயும் பேசியிருக்க” சத்தியன் மேலும் சொல்ல,
“நான் இல்லைன்னு எப்போ சொன்னேன் மாமா?” என்று தோள்களை ஏற்றி இறக்கினான் சர்வாச்சார்யா.
“நீ அவருக்கு உதவி பண்ண நினைச்சிருப்ப. பரவாயில்லை விடு. இனி எதுவா இருந்தாலும் குருமூர்த்தி பார்த்துக்கட்டும், நாங்களும் ஒதுங்கிடுறோம்” என்றார் சத்தியன்.
“ஹாஹா. அப்ரூவல் கேன்சல் பண்ண சொல்லிட்டு ஒதுங்குவீங்களா? சரி ஓகே மாமா. அப்போ அப்ரூவல் கொடுக்க சொல்லிட்டு நானும் ஒதுங்கிடுறேன்” என்றான் நாயகன்.
“சர்வா” இரு மாமாக்கள் இடம் இருந்தும் ஓர் கண்டிப்பு.
“தங்கம் என்ன இது? அந்த ரௌடிக்காக நீ நம்ம மாமாங்ககிட்ட இப்படி நடந்துப்பியா? தப்பு ஆச்சார்யா” என்று பெரிய அத்தை சொல்ல,
“அத்தை. உங்க மருமகன் ஒருத்தருக்கு செய்றான்னு தெரிஞ்சும் மாமாங்க அதை கலைச்சுவிட முயற்சி பண்றது மட்டும் சரியா?” என்று கேட்டான்.
“அவங்க நம்ம நல்லதுக்காக தான் பண்ணுவாங்க” சின்ன அத்தை சொல்ல,
“ஒருத்தரை அழிக்கிறது நமக்கு நல்லதா?” என்று கேட்டான் மருமகன்.
“அழிக்க எல்லாம் யாரும் நினைக்கலை. அவருக்கு ஜஸ்ட் ஒரு புல்ஸ்டாப் வைக்கிறோம். அவ்வளவு தான்” சத்தியன் சாதாரணமாக சொல்ல, சர்வாச்சார்யா கோவம் அவன் முகம் சிவப்பில் தெரிந்தது.
குருமூர்த்தி எம்பையரை கட்ட எந்தளவு பாடுபட்டார் என்று இவனுக்கு தெரியும்.
சில இடங்களை விற்று, பல கோடிகளை கடன் வாங்கி இருக்கிறார் மனிதர்.
இந்த ப்ராஜெக்ட் முடிந்தால் கிட்டத்தட்ட அவர் முடிந்துவிடுவார், மூழ்கிவிடுவார்!
அதைத்தான் இவர்கள் அத்தனை பேரும் எதிர்பார்க்கிறார்கள் என்று புரிந்ததாலே கோவம் வெடித்து கொண்டு வருகிறது.
மிகவும் கட்டுப்படுத்தி கொண்டவன், அவர்கள் முன்னே போன் எடுத்தான். “எம்பையர் அப்ரூவல் கேன்சல் ஆக கூடாது. அதுக்கு என்ன பண்ணனும்?” என்று கேட்டான்.
“சார் கேன்சல் பண்ண சொல்லி இவ்வளவு பணம் கொடுத்திருக்காங்க”
“அதுக்கு மூணு மடங்கா இன்னும் அரை மணி நேரத்துல உங்களுக்கு வந்திடும். அப்ரூவல் ஸ்ட்ராங்கா இருக்கணும்” என்று வைத்தான்.
“சர்வா” என்று பெரிய மாமா, சின்ன மாமா, அத்தைகள் குரல் கொடுக்க,
“அப்பா. பணம் பொதுவுல இருந்து போகணும்” என்றான் நாயகன்.
“நீ தப்பு பண்ற சர்வா” சத்யன் எச்சரிக்க,
“குருமூர்த்திக்கு நீ இவ்வளவு பண்ற? ஆனா அவன் இன்னும் நம்ம யாரையும் எம்பையர் ஓப்பனிங்குக்கு கூப்பிடலை” சின்ன மாமா சீண்டலாக சொல்ல,
“கூப்பிடுறதும், கூப்பிடாததும் அவர் இஷ்டம்” என்றான் நாயகன்.
“செய்வேன். இன்னும் கூட செய்வேன் மாமா” என்றான் சர்வாச்சார்யா.
“ஏன்? அப்படியென்ன அவனுக்கு செய்யணும்ன்னு? உன் உயிரை காப்பாத்த எவ்வளவு பணம் வேணும்ன்னாலும் கொடு. ஆனா நீ அவனை விட்டுடனும். அவனுக்காக நீ நிக்க கூடாது”
“எனக்கு குண்டடி பட்டிருக்கு. என்னை ஒரு கையில பிடிச்சுக்கிட்டு, இன்னொரு கையால சண்டை போட்டுட்டு இருந்தார். அப்போ ஒருத்தன் என்னை அவர்கிட்ட இருந்து பிரிக்க முடியாம என்னை பிடிச்சுட்டு இருந்த அவர் கை தோளிலே வெட்டிட்டான்”
“வலியில அவர் என்னை உதறியிருக்கணும் தானே. செய்யலை. ரத்தம் சொட்ட, சொட்ட நடுங்கின கையோட என் கையை பிடிச்சார். கடைசி வரை! நான் அவரை விட்டுடணும், நான் அவருக்கு நிக்க கூடாது! அப்படித்தானே மாமா?” என்று கேட்டான் சர்வாச்சார்யா.
“சர்வா”
“என்கிட்ட என்ன வேணும்ன்னாலும் கேளுங்க மாமா. கொடுக்கிறேன். ஆனா அவங்களை விடச்சொல்லி மட்டும் கேட்காதீங்க. விட மாட்டேன்! என் உடம்புல மூச்சு இருக்கிற வரை அவங்களை நான் விட மாட்டேன்” என்று முடித்துவிட்டான் சர்வாச்சார்யா.