குருமூர்த்தி அடுத்த நாள் அதிகாலையில் தான் கண்விழித்தார். சம்யுக்தா தந்தைக்கு அருகிலே இருந்தவள், அவரின் அசைவில் “அப்பா” என்றவளின் கண்களில் தன்னை போல் கண்ணீர் சூழ்ந்துவிட்டது.
அவளின் உற்றவர்கள் இருவரும் அவளை முழு இரவும் தனியாக தவிக்க விட்டார்களே!
குருமூர்த்தி அவளுக்கு எத்தகைய தந்தை என்பதை அவள் உணர்ந்து கொண்டது இந்த ஓர் நாளில் தான்!
குழந்தையில் அவரை பிரிகையில் அவள் உணர்ந்த அப்பா வேறு! அவர் திரும்பி வந்த போது அவள் உணர்ந்த அப்பா வேறு! இந்த நொடி அவள் உணரும் அப்பா வேறு!
குருமூர்த்தி எனும் மனிதன் இல்லையென்றால் அவள் என்ன ஆவாள் என்பதை வலிக்க, வலிக்க நேற்று முழுதும் கற்றிருந்தாள்!
அவரை பிரிந்து இருந்த அத்தனை வருடங்களில் கூட, நேற்று போல் அவள் எந்நாளும் குருமூர்த்தியை தேடியதில்லை.
எப்பொழுது விடியும். இந்த இருள் எனக்கு வேண்டாம். அவளை சுற்றியிருந்த இருள், அவளையே சூழ்ந்துவிட்டதாக பெண் பயந்திருந்தாள்.
யாரேனும் ஒருவர் அவளுக்கு அருகில் இருந்தாலும் இந்தளவு பரிதவித்திருக்க மாட்டாள். ஆனால் இருவரும் இல்லை. இருவரும் ஆபத்தை தொட்டு வந்திருக்கிறார்கள்.
உடனே மருத்துவர் வந்து பரிசோதித்து செல்ல, “நைட் முழுக்க அப்படியென்ன தூக்கம் உங்களுக்கு?” என்று கேட்டான் குணா.
“டேய்”
“ம்ப்ச். எனக்கென்ன? உங்க பொண்ணு தான் பயந்துட்டாங்க. டாக்டரை வேற எத்தனை டைம் கூட்டிட்டு வரது? நைட் புல்லா நீங்க தூங்கினதை நாங்க வேடிக்கை பார்த்தது தான் மிச்சம். இப்போ நான் தூங்க போறேன். என்னவா இருந்தாலும் நீங்களே பார்த்துக்கோங்க. என்னை தொந்தரவு பண்ண கூடாது” என்று அப்பா, மகளிடம் அதிகாரமாக சொல்லி சென்றான்.
“என்னம்மா? பயமுறுத்திட்டேனா?” குருமூர்த்தி மகளின் கரங்களை ஆதரவாக வருடி கொடுத்தார்.
“ம்ம். ரொம்ப” என்று சம்யுக்தா தலையசைக்க, மகளின் கண்ணீரில் பலவீனபட்ட தந்தை,
“என் பொண்ணை அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன்” என்றவர் கண்கள் கரிக்க, சுதாரித்து கொண்டவர்,
“க்கும். குணா மட்டும் தான் உதவிக்கு இருந்தானா? நம்மாளுங்க யாரும் வரலை?” என்று கேட்டார்.
“லிங்கம் மாமா வந்தார். இப்போ பக்கத்துல இருக்க ஹோட்டல்ல தான் தங்கிட்டு இருக்கார்” என்றாள் சம்யுக்தா.
“மணி பேசினானா? என் போன் எங்க?” என்று கேட்டு, மாசிலாமணிக்கு அழைத்தார்.
முதல் ரிங்கிலே எடுத்த மணி, “பாப்பா என்னாச்சு? அண்ணா எப்படி இருக்கார்?” என்று படபடத்தார்.
“மணி” என்று குருமூர்த்தி அழைக்க,
“அண்ணா” என்று கலங்கி போனார் மாசிலாமணி.
“நான் நல்லா இருக்கேன்டா”
“காயம் அதிகம்ன்னு சொன்னாங்க. உண்மையை சொல்லுண்ணா. நீ ஓகே தானே?”
“உன்கிட்ட நல்லாத்தானே பேசிட்டிருக்கேன். ஏதோ கொஞ்சம் காயம் அவ்வளவு தான். நீ பயந்துக்காத”
“பயந்துக்காதவா? இப்போ சொல்ற நீ? நேத்து எல்லாம் நாங்க பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்”
“மணி”
“ஏன்’ண்ணா? நாங்க எல்லாம் இருக்கிறதா வேணாமா? உஷாரா இருக்க மாட்டியா நீ? அப்படியென்ன அஜாக்கிரதை. அவனுங்களை பொளக்கிறது விட்டு நீ போய் ஹாஸ்பிடல்ல படுத்துகிட்ட?” என்று மணி கோபத்துடன் கேட்டார்.
“விடுடா. ஏதோ தவறி போச்சு. நமக்கென்ன இது புதுசா? நீ விஷயத்துக்கு வா? அவனை என்ன பண்ணீங்க?” என்று கேட்டார்.
“ண்ணா. பெருசா ஏதேதோ நடந்து போச்சு” என்று மணி எல்லாம் சொல்லி முடித்து,
“தீரஜ் தம்பியை விட சொல்லி போன் பண்ணாங்க. நான் முடியாது, எங்க அண்ணா சொன்னாதான் விடுவேன்னு சொல்லிட்டேன்” என்று மாசிலாமணி சொன்னவர்,
“நீ சொல்லுண்ணா. இவனை விட்டுடலாமா?” என்று கேட்டார்.
“நான் சொல்ற வரைக்கும் அவனை விடாத மணி” என்றார் குருமூர்த்தி.
“இதான் எங்கண்ணன். நீ சொல்லுண்ணா. அவங்களை செஞ்சிடலாம்” என்று மணி குதூகலத்துடன் போனை வைத்தார்.
சம்யுக்தா மருத்துவரை சந்தித்து, தந்தைக்கு உணவு வாங்கி வர சென்றிருக்க, குணா அறைக்குள் வந்தவன், குருமூர்த்தி போன் பேசி முடிக்கும் வரை காத்திருந்தான்.
“என்ன குணா?” என்று மூர்த்தி கேட்க,
“நேத்து உங்க பொண்ணை அடிச்சுட்டாங்க” என்று, அவன் பக்கம் இருந்து அவன் எல்லாம் சொல்லி முடிக்க, சம்யுக்தா அறைக்கதவை திறந்தவள், குருமூர்த்தியிடம் தென்பட்ட கோவத்தில் வாசலிலே நின்றுவிட்டாள்.
“மேடம் வழி ப்ளீஸ்” என்று குணா கேட்க,
அப்பாகிட்ட பத்தவைச்சுட்டானா? சம்யுக்தா அவனை முறைத்து அறைக்குள் சென்றாள்.
நேற்று அவள் செய்த முட்டாள் தனம் அனைத்திற்கும் தந்தையிடம் விளக்கம் கொடுக்க வேண்டும்!
குருமூர்த்தி மகளிடம் எதுவும் கேட்கவில்லை. சம்யுக்தா தயங்கி அவரின் பக்கத்தில் அமர்ந்தவள், “சாரிப்பா. நான் இதை பண்ணியிருக்க கூடாது” என்றாள்.
“உனக்கும், அவருக்கும் எப்படி பழக்கம்?” குருமூர்த்தி கேள்வி நறுக்கென வந்தது.
“அப்பா” என்று சம்யுக்தா திகைத்தாள்.
சர்வாச்சார்யாவிற்கான மகளின் பரிதவிப்பு, கண்ணீர், ரத்தம் சிந்தியவனை நெஞ்சுக்குள் பொதித்து கொண்டது, அவனும் மிகவும் உரிமையாக மகளின் நெஞ்சுக்குள் புதைந்து கொண்டது, அவளிடம் ஏதோ முனகி கொண்டே இருந்தது எல்லாம் குருமூர்த்திக்கு மறந்து போயிருக்குமா என்ன?
சம்யுக்தா அவனுக்கான ஆபத்தில் தன்னை தானே அல்லவா வெளிப்படுத்தி இருந்தாள். குருமூர்த்தி அங்கிருக்கிறார் என்ற நினைப்பெல்லாம் அவளுக்கு அப்போது எங்கிருந்தது?
குருமூர்த்தி கேட்ட இந்த நிமிடம் தான் சம்யுக்தா, நேற்று தான் அவர் முன் செய்ததை உணரவும் செய்தாள்.
மன்னிப்பு எல்லாம் குருமூர்த்திக்கு அப்பாற்பட்ட விஷயம்! முதலில் ஏன் மறைத்தாய் என்று அவர் கேட்டால் அதற்கே அவளிடம் பதில் இல்லை.
‘உங்ககிட்ட இருந்து நான் ஒன்னு மறைச்சிருக்கேன். எனக்கான ரகசிய சந்தோசம் அது’ சொல்ல முடியுமா? இந்த பதிலை தந்தையிடம் சொல்வது மிகவும் சிறுபிள்ளை தனம் அல்லவா!
அன்று அவளுக்கு சரியாக இருந்தது இன்று மிகவும் தவறாக தெரிகிறது.
“அப்பா” என்று திணறிய மகள், அவரை நேருக்கு நேர் பார்க்கமால், எங்கோ பார்த்தபடி, “என் ரூம்ல இருந்து அந்த ரகசிய அறைக்கு போறதுக்கு வழி இருக்கு” என்று வேகமாக எல்லாம் சொல்ல ஆரம்பித்தாள்.
குருமூர்த்தியின் கோவம் அவரின் இறுகிய கைகளில் தெரிவது வேறு சம்யுக்தாவின் இதய துடிப்பை எகிற வைத்தது.
சர்வாச்சார்யா அவளின் அறைக்கு வந்து சென்றான் என்ற நொடி, பக்கத்தில் இருந்த பாட்டில் எங்கோ பறந்து சென்று விழுந்தது.
சம்யுக்தா அதிர்ந்து பேச்சை நிறுத்த, “சொல்லி முடி” என்றார் தந்தை கட்டளையாக.
அப்பா பார்வையில நான் கீழிறங்கி இருப்பேன்! சம்யுக்தா தலை தானே தாழ்ந்து போக, வழிந்த கண்ணீரை துடைத்தபடி தொடர்ந்து சொன்னாள்.
“இவ்வளவு தானா? இல்லை வேற எதையும் மறைச்சிருக்கியா?” குருமூர்த்தியின் சந்தேக கேள்வியில் மகளுக்கு அப்படியே இங்கிருந்து கீழே குதித்து விட்டால் என்ன என்றே தோன்றிவிட்டது.
“எல்லாம் சொல்லிட்டேன்ப்பா” என்றாள் மகள் விசும்பியபடி.
குருமூர்த்தியிடம் அமைதி. என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. அவரை நிமிர்ந்து பார்க்கவே மகளுக்கு அச்சமாக இருந்தது.
நிமிடங்கள் நீடித்த கனத்த அமைதியை லிங்கம் வந்து தான் கலைக்க வேண்டி இருந்தது.
“மூர்த்தி” என்று அவர் குருமூர்த்தியின் கையை பற்றி கொள்ள, சம்யுக்தா தந்தை பார்வையில் இருக்க முடியாமல் வெளியே வந்துவிட்டாள்.
“அந்த பையனுக்கு நினைவு வந்திடுச்சாம்” என்றான் குணா.
சம்யுக்தா அந்த நிலையிலும் அவனுக்காக மகிழவே செய்தாள். அவன் நன்றாகிட வேண்டும் என்று இரவெல்லாம் அவனுக்கும் சேர்ந்து தானே தவித்தாள்.
கண்களை மூடி சாய்ந்திருந்த பெண்ணின் உச்சி தலையை யாரோ வருட, சம்யுக்தா அப்பாவா என்று ஆர்வமாக கண் திறந்து பார்த்தாள்.
வசுந்தரா நின்றிருக்க, “மேடம்” என்றபடி எழுந்து நின்றாள்.
“நைட் எல்லாம் தூங்கலையா நீ?” என்று அவளின் கைப்பற்றி கேட்டார்.
சம்யுக்தா தலை அசைக்க, “வா. உன் அப்பாவை பார்த்துட்டு வருவோம்” என்றழைக்க, பெண் எப்படி மறுக்க?
அமைதியாக அவரின் பின்னே அறைக்குள் செல்ல, “எப்படி பீல் பண்றீங்க? ஓகேவா?” என்று குருமூர்த்தியிடம் நலம் விசாரித்தார் வசுந்தரா.
“ம்ம்” என்ற குருமூர்த்தி கண்கள், வசுந்தரா பிடியில் இருந்த மகளின் கையில் பதிந்தது.
வசுந்தரா ஏதோ கேட்க, குருமூர்த்தி அதற்கு பதில் சொல்லி கொண்டிருந்தார்.
“தீரஜ் தம்பியை விட சொல்லி மணிகிட்ட பேசுப்பா. அவன் நாங்க சொன்னா கேட்கலை” என்றார் லிங்கம்.
“அவனை விட முடியாது” குருமூர்த்தி பட்டென சொன்னார்.
“ஏன்?” வசுந்தரா, லிங்கம் இருவரிடம் இருந்து கேள்வி பாய்ந்து வந்தது.
“எல்லாம் சரியாகி வருது மூர்த்தி. அவனை விடுறதா பேசியிருக்கோம்” என்று லிங்கம் சொன்னார்.
“என் பொண்ணை அடிச்சது யாரு?” என்று கேட்டார் குருமூர்த்தி.
வசுந்தராவிற்கு புரிந்து போனது. “எனக்காக அதை அப்படியே விட முடியுமா?” என்று நம்பிக்கை இல்லாமல் தான் கேட்டார்.
“முடியாது” குருமூர்த்தி மறுத்துவிட்டார்.
“தீரஜ் தானே அவன் பேர். என்னை மீட் பண்ண கேட்டான் இல்லை. மீட் பண்ணலாம். நேரம் கேட்டு சொல்லுங்க” என்று லிங்கத்திடம் சொன்னார் குருமூர்த்தி.
“மூர்த்தி. வேணாம்டா. முடிஞ்சதை திரும்ப ஆரம்பிக்க வேணாம்” லிங்கம் சொல்ல,
“முடிஞ்சதுன்னு நான் சொன்னேனா? எல்லாம் என் பொண்ணை என்ன நினைச்சீங்க?” சட்டென கத்தினார் குருமூர்த்தி.
மகள் விசும்பிவிட்டாள். “சம்யுக்தா” தந்தை ஓர் அதட்டலிட்டார்.
“இல்லைப்பா” சம்யுக்தா உடனே கண்களை துடைத்து கொண்டாள்.
“உங்க மகன் எப்படி இருக்கான்?” கேட்க கூடாது என்று நினைத்தாலும் கேட்டிருந்தார் குருமூர்த்தி.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நினைவு வந்துச்சு. திரும்ப சின்ன மயக்கத்துல இருக்கான்” என்றார் வசுந்தரா.
“ம்ஹ்ம்” கோவமாக சொன்னார்.
ராஸ்கல் என் பொண்ணு ரூமுக்கு போவானா அவன்! நல்லாகி வரட்டும். அவன் கை, காலை உடைக்கிறேன்! தந்தைக்கு கொதித்து கொண்டு வந்தது.
“நான் என்ன செய்ய முடியும்ன்னு பார்க்கிறேன்” என்றார் வசுந்தரா.
சம்யுக்தாவை அடித்ததற்கு மன்னிப்பு கேட்க வைக்கலாம், ஆனால் சிவபிரகாசத்தின் தங்கை கேட்பாரா?
“கேட்டுத்தான் ஆக வேண்டும்” என்பதை அடுத்த சில நிமிடங்களில் உணர வைத்தார் குருமூர்த்தி.
“நான் குருமூர்த்தி பொண்ணுகிட்ட பேசணும்?” என்று போன் செய்த தீரஜ் குரலில் ஏதோ சரியில்லை.
“குருமூர்த்திகிட்ட கேட்கிறேன்” என்று லிங்கம் சொல்ல,
“நான் ஹாஸ்பிடல் வரேன்” என்று தீரஜ் வைத்துவிட்டான்.