சம்யுக்தா தெளிந்த முகத்துடன் பயிற்சிக்கு வர, நம் நாயகனை மட்டும் காணவில்லை.
“கூட்டிட்டு வரட்டாண்ணா” என்று மணி கேட்க,
“டாக்டரை வர சொல்லியிருந்தேன். வந்துட்டாரா பாரு” என்றார் குருமூர்த்தி.
மருத்துவர் வந்துவிட்டார் என்று தகவல் வர, மணி அவருடன் சென்று சர்வாச்சார்யாவை பரிசோதித்து அவன் கைக்கட்டை பிரித்தனர்.
“இவ்வளவு காலையில தான் இதையெல்லாம் செய்வீங்களா?” என்று தூக்கம் கெட்ட கடுப்பில் கேட்டான் சர்வாச்சார்யா.
“பயிற்சிக்கு நேரம் ஆச்சு” என்று மணி சொல்ல,
என்ன நினைத்தானோ உடனே பயிற்சி இடத்துக்கு வந்தவன், “இப்போ சண்டைக்கு வாங்க” என்று மாசிலாமணியிடம் சிலம்பத்தை தூக்கி போட்டான் சண்டைக்காரன்!
“அதுப்பை பாரேன்” என்று மணி திரும்பி குருமூர்த்தியை பார்க்க, விடுடா என்றார் அவர் கண்ணசைவில்.
“என்ன? ம்ம். எடுங்க” என்று சிலம்பத்தை அவர் முகத்துக்கு நேரே சுற்றினான். நேற்று வாங்கிய அடியை கொடுத்துவிட வேண்டும்!
சம்யுக்தா அவன் செயலில் கடுப்பானவள், “ஸ்ஸ்ஸ். என்ன பண்றீங்க? அவர்கிட்ட உங்களால எப்போவும் ஜெயிக்க முடியாது. கொஞ்சம் அமைதியா இருங்க” என்று அவனை அடக்கினாள்.
“நீ எப்படி அந்த முடிவுக்கு வரலாம். நான் கண்டிப்பா இவரை ஜெயிப்பேன்” என்று நெஞ்சை நிமிர்த்தினான்.
“மாஸ்டரை நாம ஜெயிக்க நினைக்கிறது சரியா முதல்ல?” என்று சம்யுக்தா அவனுக்கு புரிய வைக்க முயல,
“மாஸ்டர் ஸ்டூடண்ட்டை அடிக்கிறது மட்டும் சரியா?” என்று இவன் கேட்டான்.
“விதண்டாவாதம் பண்ண கூடாது. நாம ஸ்டூடன்ட். அவங்க நமக்கு குரு, அவங்களுக்கு நாம மரியாதை தான் கொடுக்கணுமே தவிர சண்டைக்கு நிக்க கூடாது. அதை முதல்ல ஞாபகம் வைச்சுக்கோங்க” என்று சம்யுக்தா கண்டிக்க,
“அடேங்கப்பா எனக்கு மட்டும் தான் இந்த ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பியா நீ? உன் மணி அங்கிளுக்கு இதெல்லாம் சொல்ல மாட்டியா?” என்று விடாமல் கேட்டான்.
“பாப்பா. நீங்க விடுங்க” என்று மணி சொல்ல,
“பாப்பா நீ பேசு. அதென்ன இவர் விடு சொல்றது?” என்றான்.
“பாப்பா சொல்லாதீங்க” என்று சம்யுக்தா பல்லை கடிக்க,
“அவர் மட்டும் சொல்றார்” என்றான் அவன் கண்களை சுருக்கி.
“அவர் சின்ன பிள்ளையில் இருந்து அப்படித்தான் கூப்பிடுவார்” என்று சம்யுக்தா பயிற்சிக்கு செல்ல,
இவனும் பின்னாலே சென்று அவள் பயிற்சி எடுப்பதையே தானும் எடுத்தபடி, “இப்போவும் நீ சின்ன பொண்ணு தான்” என்றான்.
“நல்லா இருக்கே இது” என்று மிதப்பாக புருவம் தூக்கியவன், “இன்னொரு முறை ஸாரி சொல்லு கேட்போம்” என்றான்.
சம்யுக்தா முகத்தை திருப்பி கொள்ள, சர்வாச்சார்யா மெலிதாக புன்னகைத்தான்.
அந்த நேரம் குருமூர்த்தியின் போன் ஒலித்தது. லிங்கம் தான் அழைத்திருக்க பேசி வைத்த குருமூர்த்தி, “சீக்கிரமே நீங்க வீட்டுக்கு போயிடலாம். உங்க பிரச்சனை முடிய போகுது” என்று சர்வாச்சார்யாவிடம் சொன்னார் குருமூர்த்தி.
“இன்னைக்கு என்ன கிழமை?” என்று சட்டென கேட்டான் சர்வாச்சார்யா.
அப்பா என்ன சொல்றார், இவர் என்ன கேட்கிறார் பாரேன்! சம்யுக்தா அவனை அடிக்கண்ணால் முறைக்க,
“கேட்கிறதுக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் முறை” என்றான் அவன்.
சம்யுக்தா சட்டென தன் முறைப்பை மாற்றி, அன்றய கிழமையை சொன்னாள்.
“ஓஹ்” அவன் எண்ணங்கள் வேறெங்கோ சென்றுவிட்டது.
“அப்படியென்ன யோசனை?” அவன் சுருங்கிய நெற்றியை பார்த்தபடி சம்யுக்தா கல்லூரி கிளம்ப சென்றாள்.
குருமூர்த்திக்கும் ஒரு வேலை சொல்லியிருந்தார் லிங்கம். “மணி நாம கிளம்பணும்” என்றார் குருமூர்த்தி.
சர்வாச்சார்யா அமைதியாக அவன் அறைக்கு திரும்ப, “இவருக்கு என்னாச்சு? சந்தோஷமே படலை” என்று கேட்டார் மணி.
“நாம அப்பறமா அதை பத்தி கேட்போம்” என்று குருமூர்த்தி உடனே லிங்கம் ஒப்படைத்த வேலையில் இறங்கினார்.
அன்றய இரவில் சம்யுக்தா ரகசிய அறைக்கதவை தட்டினான் சர்வாச்சார்யா. கட்டை கழட்டியாச்சே, அப்புறம் என்ன? சம்யுக்தா தானே சென்று கதவை திறந்தவள், “என்ன புதுசா? தடுக்குன்னு தானே திறந்துட்டு வருவீங்க” என்று கேட்க,
“பதில் சொன்னா டென்க்ஷன் ஆகிடுவ. வேண்டாம்” என்றான் நல்ல பிள்ளையாக.
“நான் டென்ஷன் ஆகணும்ன்னே வேலை பார்க்கிற ஆள் நீங்க? இப்போ மட்டும் என்ன?”
“இனி தட்ட மாட்டேன் போதுமா?”
“இப்போ ஏன் தட்டுனீங்க?”
“நேத்து நைட் தான் நீ வயசு பொண்ணுன்னு எனக்கு புரிஞ்சது. அதான்”