அத்தியாயம் – 2

“ஹேய் மேகா என்ன ப்ரீஸ் ஆகி நிக்கிற?!” என்று பர்வேஷ் வந்து கேட்க, 

“ஹான்! ஒ.. ஒண்ணுமில்ல பர்வேஷ்…” என்றவளுக்கு இதயத்தின் படபடப்பு இன்னும் அதிகரிக்கவே செய்தது.

மனதோ ‘நிஜமாவே அவந்தானா?!’ என்று கேள்வியை அதிவேகத்தில் கேட்க, மீண்டும் மேகவர்ஷினியின் கண்கள் அங்கேயும் இங்கேயும் என்று அலைபாய, எங்கேயும் அவன் தட்டுப்படவில்லை.

ஓடி ஒளிந்துகொண்டானோ?!

‘ச்சே ச்சே அவன் எதுக்கு ஓடி ஒழியனும். நெஞ்சை நிமித்திட்டு வர்ற ஆள் தானே அவன்…’ என்று மேகா நினைக்க, ஆனாலும் பார்த்தேனே. அவன் போலவே தானே இருந்தது என்று நினைத்தவளுக்கு, திடீரென்று பார்க்காதது போல தோன்ற,

‘ஒருவேளை பிரம்மையோ…’ என்று நினைத்தவளுக்கு ‘இத்தனை வருசமில்லாம இப்போ என்ன பிரம்மையோ, பிரேமையோன்னு…’ என்று அதே மனதே கடிந்துரைக்க,

“ச்சே…” என்று அவளுக்கு அவளே முனுமுனுத்துக்கொள்ள,

“மேகா…” என்று அடிக்குரலில் அழுத்தமாய் அழைத்தாள் சுப்ரியா.

“என்ன ப்ரீ…” என்று மேகா, சுரத்தே இல்லாமல் கேட்க,

“வாட் ஹேப்பன் மச்சி? திடீர்னு டல்லாகிட்ட. என்னாச்சு?” என்று அவர்களின் குழுவில் இருக்கும் மற்றொருவன் சஞ்சய் கேட்க,

“நத்திங் சஞ்சய்…” என்றவள், இங்கே அமர்ந்திருந்தால் இப்படிதான் என்று நினைத்து,

“ஹேய் ப்ரீ இன்னும் நம்ம சந்தியாவ பார்க்கவே இல்லை…” என,

“எஸ்.. நீங்க வந்ததும் அவ ரூமுக்கு வரச் சொன்னா…” என்று பர்வேஷ் சொல்ல,

“அதை எப்போ சொல்றடா நீ…” என்று கடிந்தவள், சுப்ரியாவை அழைத்துக்கொண்டு மணப்பெண்ணான சந்தியாவின் அறைக்குச் சென்றனர்.

சஞ்சய், பர்வேஷ், சுப்ரியா, மேகா, சந்தியா என அனைவரும் ஒரே குழுவில் இருப்பவர்கள். ஏறக்குறைய ஒரே வயதும் கூட. அதனால் வேலை என்பதனை தாண்டி அனைவருக்குள்ளும் ஒரு நட்பும் இருக்கவே செய்தது. சஞ்சய்க்கு கல்லூரி முடிந்ததும், வேலை கிடைத்ததுமே வீட்டினில் திருமணம் செய்து வைத்திருந்தார்கள்.

பர்வேஷிற்கு ஒரு காதலி இருக்க, சுப்ரியாவோ அவர்களது வீட்டின் நிலையில் இப்போது திருமணம் பற்றிய பேச்செல்லாம் இல்லை. ஆனால் மேகவர்ஷினிக்கு அப்படியில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாய் வரன் பார்க்கிறார்கள் தான்.

எதுவும் சரியாய் அமையவில்லை.

அப்படியே அமைந்து வந்தாலும், ஏனோ அவளுக்கு மனதுக்கு பிடிக்கவில்லை.

சந்தியாவிற்கு தோழிகளை பார்த்ததுமே உற்சாகம் தாங்கவில்லை. மணப்பெண் அலங்காரத்தில் அம்சமாய் இருந்தவள் “ஹேய் கைஸ்..!” என்று இருவரையும் லேசாய் அணைத்துக்கொள்ள,

“ஏய் போதும் போதும்.. எங்களை வச்சு ரிகர்சல் பார்க்காத…” என்று கேலி பேசிய சுப்ரியா,

“என்ன சந்து நீ மட்டும் ரூம்ல இருக்க..?” என,

“இத்தனை நேரம் என் கசின்ஸ் எல்லாம் இருந்தாங்கப்பா. இப்போதான் சாப்பிடன்னு போனாங்க..” என்றிட,

“நல்லவேளை ட்ராபிக்ல நீந்தி வர்றதுக்குள்ள நீ மிஸ்ஸஸ் ஆகிருப்பன்னு நினைச்சு வந்தோம்…” என்று அப்போதும் சுப்ரியாவே பேச,

“அதுசரி…” என்ற சந்தியா “ஆமா இவ என்ன இப்படி இருக்கா?!” என்றாள் மேகாவை பார்த்து.

“ஹ்ம்ம் கிளம்பும் போது எல்லாம் நல்லாத்தான் டி வந்தா. என்னவோ திடீர்னு டல்லாகிட்டா…” என்று சொல்ல,

“என்ன மேகி?!” என்றாள் அவளும்.

“ஒண்ணுமில்ல சந்து.. ஒருமாதிரி இருந்தது…” என்றவள், லேசாய் ஜன்னல் பக்கம் வந்து நின்று வெளியே பார்த்தாள்.

ஏசி அறை தான். ஆனால் அது சரியாய் வேலை செய்யவில்லை என்று சந்தியாவின் அம்மா அப்போது தான் ஜன்னல்களை எல்லாம் திறந்து வைத்துவிட்டு சென்றிருக்க, மேகவர்ஷினி மண்டபத்தினுள் வேடிக்கைப் பார்க்கும் விதமாய் இருக்கும் ஜன்னல் பக்கம் வந்து நின்றவள், தோழிகளின் பேச்சை பார்த்து நின்றாள்.

சுப்ரியாவும் சந்தியாவும் பேசிக்கொண்டு இருக்க, சட்டென்று தன்னை யாரோ பார்ப்பது போல இருந்தது அவளுக்கு.

‘ஒருவேளை நிஜமாவே அவன்தானோ…’ என்று நினைத்தவளுக்கு நா வரண்டது போல இருக்க, உள்ளத்து குறுகுறுப்பு தாளமுடியாமல், திரும்பி ஜன்னல் பக்கம் மீண்டும் பார்க்க, அவன் தான் நின்றிருந்தான்.

அவனே தான்..

ஆகாஷ் அமிர்தமணி…

அதுவும் அவளைப் பார்த்துத்தான் நின்று இருந்தான்.

“ஒரு மின்சார பார்வையின் வேகம்…” என்று கல்யாண மண்டபத்தில் பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க, நிச்சயமாய் மேகவர்ஷினிக்கு அந்த நேரத்து கனத்தை தாங்க முடியவில்லை.

என்னதான் விதவிதமாய் பாட்டுக்கள் புதிது புதிதாய் வந்தாலும், பாடல் ஒலிபரப்பு செய்பவர்கள் இப்போதும் கூட எண்பது, தொன்னூறுகளில் வந்த பாடல்களைத்தான் அதிகம் இசைக்கச் செய்கிறார்கள். அப்படித்தான் இப்போதும் ரஹ்மானின் இசை மண்டபத்தை நிறைத்திருக்க, மேகாவோ எப்போதோ விரும்பிக் கேட்கும் பாடல் என்றாலும், இப்போது அவளுக்கு அதீத படபடப்பு.

அவனெங்கே இங்கே?!

அவளை கண்டுகொண்டானா?!

உலகம் இத்தனை சின்னதா என்று தோன்றியது அவளுக்கு.

நகர்வேணா என்பது போலவே தான் நின்று இருந்தான் ஆகாஷ்.

அதே நெடு நெடு உயரம் தான். ஆனால் அந்த உயரத்திற்கு ஏற்ற உடல் வாகுடன், மிடுக்காய், கொஞ்சம் தோரணையாய் நின்று இருந்தான். பின்னே அந்த பதின்ம வயதில் இருக்கும்போதே அவனிடம் அந்த தோரணை ஒட்டிக்கொண்டு இருக்கும். ஒருவேளை அவனது இயல்பே அப்படித்தானோ என்னவோ. அடர்ந்த கேசம், பார்த்ததுமே தோன்றியது ஜெல் போட்டு வாரியிருக்கிறான் என்று.

அவனது உடை, உடல்மொழி எல்லாமே அவனது வசதியை இப்போது பறைசாற்ற ‘அப்பாக்கிட்ட இருந்த சொத்தை எல்லாம் பிடுங்கிட்டானோ…’ என்று நினைத்தாள் அந்த நேரத்திலும்.

‘செஞ்சாலும் செஞ்சிருப்பான்…’ என்று நினைத்தவளின் பார்வையோ அவன் மீது படிந்து படிந்து மீள, இதோ இப்போது முழு ஆண்மகனாய், அவனைக் காண்கையில் மேகவர்ஷினிக்கு மயக்கமே வராத குறைதான்.

“செம்ம ஹேண்ட்சம்…” என்று அவளது ரசிக மனது தலைதூக்க,

கடந்து வந்தாகிவிட்டது என்று மறந்திருந்த ஒன்று, இப்போது நிஜமாய் கண்ணெதிரே வந்து நிற்க, அவளுக்கு இயல்பாய் இருக்கவே முடியவில்லை.

பதினைந்து வயதில் இருந்த மேகவர்ஷினிக்கு, அப்போது வைணவி வீட்டிற்கு தற்காலிகமாய் வந்திருந்த ஆகாஷ் மீது ஒரு ஈர்ப்பு. அது எப்படி வந்தது என்றே அவளுக்கும் தெரியவில்லை. முதல் பார்வையில் அவனை ‘இன்டீசன்ட் பெல்லோ…’ என்று எண்ணியவளுக்கு, அடுத்தடுத்த நாட்களில் அவன் அழகானாய் தெரிந்தான்.

நிஜமாகவே ஆகாஷ் அழகன் தான்.. அதிலும் அந்த வயதில் இருக்கும் அந்த துறுதுறுப்பு அவனை இன்னும் வசீகரனாய் மேகவர்ஷினி கண்களுக்கு காட்டியது. அந்த வயதிற்கே வரக்கூடிய ஒன்றுதான்.

ஒருசில மாதங்கள் ஆகாஷ் அங்கே தான் இருந்தான்.  அவனது பெயர் கூட வைணவி சொல்லித்தான் தெரியும்.

“எங்கண்ணன் டி.. ரொம்ப நல்ல டைப்.. இந்த பெரியப்பாக்கு ஏன் தான் புத்தி இப்படி போகுதோ தெரியலை..” என்று அவளே ஒருநாள் பேச,

“ஏன் என்னவாம்?!” என்றாள் மேகவர்ஷினி பெரிதாய் ஒன்றுமில்லை என்பதுபோல.

“பின்ன வீட்ல பஞ்சாயத்து வச்சு பேசினாங்க. பெரியப்பாக்கு பெரியம்மாவோட வாழவே இஷ்டமில்லையாம்.. அவருக்கு வேற ஒரு லேடியை தான் பிடிச்சிருக்காம்…” என,

“அடப்பாவி…” என்று ஆர்வமாய் கதை கேட்டாள் மேகா.

“ம்ம் பெரியம்மாவும், எனக்கு என் மகன் இருக்கான் போதும்னு சொல்லிட்டாங்க…” என,

“சூப்பார் டி…” என்றாள் மேகவர்ஷினி.

“ஆனா அண்ணன் தான். பெரியப்பா பேர்ல இப்போ இருக்க எல்லாமே பெரியம்மா பேர்ல மாத்தி குடுத்துட்டு, யார்கூட வேணா வாழப் போகட்டும்னு சொல்லிட்டு இருக்கு…” என,

“சரியான பாயின்ட் தானே டி…” என்றாள் மேகாவும்.

“சரிதான்.. ஆனா பெரியப்பாவுக்கு கவர்ன்மென்ட் வேலை.. நிறைய லேண்ட் எல்லாம் வாங்கி போட்டு இருக்கார் போல. எல்லாத்தையும் குடுத்துட்டா என்ன செய்றதுன்னு யோசனை…” என்று வைணவி பேச,

“உங்க பெரியப்பாக்கு எத்தனை வயசு…” என்றாள் மேகா.

“அம்பது இருக்கும்…”

“ஹ்ம்ம்… இந்த வயசுல இன்னொரு வாழ்க்கை சூஸ்  பண்ணிருக்கார். அது அவர் இஷ்டம். ஆனா உன் அண்ணன் சொல்றதுல தப்பில்லை.. இவர் திடீர்னு இன்னொரு வாழ்க்கை தேடி போயிட்டா, பின்ன இவங்க ரெண்டு பேரும் என்ன செய்வாங்க?!” என்று மேகவர்ஷினி கேட்க,

“ஆனா பெரியம்மா எதுவுமே வேண்டாம்னு சொல்றாங்களே…” என்றாள் வைணவி.

“ஓ! அவங்களுக்கு வேண்டாம்னா விடு. உங்க அண்ணனுக்கு அப்பாவோடதுல ரைட்ஸ் இருக்கு தானே. அவருக்கு வேணும்னா கொடுத்து தான் ஆகணும்…”   என்று இருவரும் டியூசன் விட்டு வருகையில் தான் இந்த பேச்சினை பேசிக்கொண்டே வந்தனர்.

அந்த பேச்செல்லாம் இப்போது நினைவில் வந்து தொலைத்தது. அப்போதே கொஞ்சம் முரடன். இப்போது எப்படியோ என்று எண்ணியவள், ஜன்னல் புறமாய் அவனைப் பார்த்தவளின் பார்வை, ஒருநொடி அதிர்ந்து, விழிகள் விரித்து, பின் படபவேன அடித்து, பின் தயங்கி என்று  படாதபாடு பட்டுவிட, வேகமாய் அங்கிருந்து நகர்ந்து தோழிகளோடு வந்து அமர்ந்துகொண்டாள் மேகா.

சந்தியாவோ “ஏசி வொர்க் ஆகலை டி. உனக்கு ஏசி இல்லாம இருக்க முடியாது…” என்று மேகவர்ஷினியைப் பார்த்து சொல்ல,

“இட்ஸ் ஓகே டி…” என்றவள்

“நா.. நான் கிளம்பட்டுமா!” என்றாள் சந்தியாவைப் பார்த்து.

“ஹேய் என்ன?!” என்று இரு பெண்களுமே அதிர்ந்து கேட்க,

“இல்ல.. ப்ளீஸ்.. எனக்கு என்னவோ பண்ணுது.. நா.. நான் கிளம்புறேனே…” என்றிட,

“உடம்புக்கு என்ன பண்ணுது மேகி…” என்று சுப்ரியாவும் கேட்க, அவளோ என்னவென்று சொல்வது என்று தெரியாமல் விழித்து இருந்தாள்.

“ஹாஸ்பிட்டல் எதுவும் போகனுமா?” என்று சந்தியா  கேட்க, அதேநேரம் சந்தியாவின் அம்மா உள்ளே வந்தவர் இவர்களை பார்த்து புன்னகைத்துவிட்டு

“மேடைக்கு கூட்டிட்டு வாங்கம்மா…” என்றுவிட்டு போக,

வேகமாய் மேகவர்ஷினி “ப்ரீ நீ கூட்டிட்டு போ டி.. நா.. நான் இங்கேயே இருக்கேன்.. ஒருமாதிரி இருக்கு…” என்று சொல்ல,

“ஓகே மச்சி.. ரொம்ப முடியலைன்னா கூப்பிடு…” என்றவள் சுப்ரியாவை அழைத்துக்கொண்டு செல்ல எழ, அதற்குள் சந்தியாவின் உறவு பெண்கள் இருவர் வந்துவிட்டனர்.

அடுத்து சுப்ரியாவும் “மேகா வா நம்ம போய் ஹால்ல உக்கார்ந்துக்கலாம்…” என்று அழைக்க,

“இல்ல டி நான் வரல.. நீ போ.. நான் ரூம்ல இருக்கேன்…” என்ற மேகவர்ஷினியை கண்கள் இடுக்கிப் பார்த்தவள் “உனக்கு நிஜமா என்னதான் டி ஆச்சு.. உடம்புக்கு ஒண்ணுமில்லன்னு பார்த்தாலே தெரியுது…” என்று கடிய,

அடுத்து பர்வேஷ் அழைத்துவிட்டான் “மாப்பிள்ளை பொண்ணும் ஸ்டேஜுக்கு வந்துட்டாங்க. இன்னும் நீங்க ரெண்டு பேரும் ரூம்ல என்ன பண்றீங்க?” என்று கேட்டு.

“இதோ வர்றோம் டா…” என்றவள்,

“நீ முன்னாடி போ ப்ரீ.. நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்…” என்று சொல்ல, சுப்ரியாவும் சரியென்று வெளியே வந்துவிட்டாள்.

ஆகாஷ் அப்போதும் அதே இடத்தினில் தான் நின்று இருந்தான். இதழில் ஒரு சிறு புன்னகை புதிதாய் முளைத்து இருந்தது. சந்தன நிற வேஷ்டி சட்டையில் இருந்தவன் முகத்தினில் புதிதாய் ஒரு மலர்ச்சி.

அவன் எதிர்பாராத மலர்ச்சி..

சொல்லப்போனால் அவனுக்குமே மேகவர்ஷினியை இன்று காண்போம் என்று தெரியாது.

பதின்ம வயதில் வரும் ஈர்ப்பு.. பப்பி லவ்.. கிரஸ்… என்று எப்படிவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். அப்படித்தான் இருவருமே இதோ இப்போது வரைக்கும் கூட  நினைத்துகொண்டு இருந்தனர்.

ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததுமே தோன்றிய அந்த உணர்வு.

வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஓடிய அந்த உருவமில்லா ஒரு உருண்டைக்கு பெயர் என்னவென்று அந்த கிரிமினல் லாயருக்குத் தெரியவில்லையா என்று நமக்குத் தெரியவில்லை.

எஸ்! ஆகாஷ் அமிர்தமணி..

அமிர்தமணி என்பது அவனது அப்பாவின் பெயர் அல்ல. அப்பாவிற்கு இன்னொரு பெண்ணோடு தான் இனி வாழ்வு என்றதுமே, ஆகாஷ் வைத்தியநாதன் என்பதனை அனைத்து வகையிலும் மாற்றி ஆகாஷ் அமிர்தமணி என்று அவனின் அம்மாவின் பெயரை பின் சேர்த்துக்கொண்டான்.

அனைத்திலும் பிடிவாதக்காரன்.

அவனுக்கு விருப்பமான படிப்பைத் தான் எடுத்திருந்தான். வக்கீல் தொழில் தான் அவனது வாழ்க்கை என்று முடிவு செய்து அதற்குத்தான் படிக்கவும் செய்தான்.

‘சிவில் போலாமே டா…’ என்று உறவினர்கள் சொன்னபோது கூட,

“அய்யோ! அதுல இன்ட்ரஸ்ட் இல்லை.. கிரிமினல் லாயர் தான் என்னோட விருப்பம்…” என்றவன்.

இதோ இன்று சென்னையின் மிக பிரபலமான கிரிமினல் லாயரின் அபிமானத்திற்குரிய சீடன். கடந்த ஒரு வருடமாய் தான் தனியாகவும் வழக்குகளை எடுத்துப் பார்க்கத் தொடங்கி இருந்தான்.

சந்தியா வேறாரும் இல்லை. வைணவி எப்படி ஆகாஷிற்கு தங்கை முறையோ, அதுபோலவே தான் சந்தியாவும். வைணவிக்கு ஒன்றுவிட்ட சகோதரி சந்தியா.

இதெல்லாம் யாருக்குத் தெரியும்.

இதோ இப்போதும் கூட மேகவர்ஷினிக்கு தெரியாதே இந்த உறவு முறை. அவனைக் கண்டதும் ஒளிந்துகொண்டு வந்து அமர்ந்து இருக்கிறாளே.

“ம்ம்ச்…” என்று உச்சுக்கொட்டியவள் “நான் எதுக்கு இத்தனை டென்சன் ஆகுறேன்?!” என்று அவளை அவளே கேட்டுக்கொண்டாள்.

“அதானே… நான் ஏன் இத்தனை டென்சன் ஆகணும். எப்பவோ பார்த்தது.. இப்போ என்னை அவனுக்கு சரியா நியாபகம் கூட இருக்காது. பார்த்தது போல இருக்கேன்னு வேணும்னா இப்போ பார்த்து இருக்கலாம்.. ச்சே.. காலம் எத்தனை மாறிடுச்சு.. இதுக்கு போய் இப்படி நடுங்கிட்டு இருக்க..“ என்று அவளுக்கு அவளே சொல்லியவள்

“அவனவன் ஏழெட்டு லவ் பண்ணிட்டே ஹாயா சுத்துறான். இது ஜஸ்ட் ஒரு அட்ராக்ஷன் அப்போ.. அவ்வளோ தான்.. அதை போய் இத்தனை வருசமா இல்லாம இப்போ பெருசா நினைக்கணுமா? அவனுக்கு கல்யாணம் கூட ஆகிருக்கலாம். இல்ல கமிட்டடா கூட இருக்கலாம். உனக்கு இதெல்லாம் ஒண்ணுமே இல்லை.. பேசினா பேசு.. இல்லையா போயிட்டே இருப்போம்.. இதுக்கு போய் இத்தனை அலட்டல்…” என்று தன் போக்கில் சிந்திக்க,

மீண்டும் பர்வேஷ் அழைத்து “மேகி ஆர் யூ ஓகே?!” என்று அக்கறையாய் வினவ,

“எஸ் பர்வேஷ். ஐம் ஓகே.. இதோ வர்றேன்…” என்றவளும் அறைவிட்டு வெளிவந்து, இவர்களோடு சேர்ந்து மேடையை பார்த்தவாறு அமர்ந்துகொண்டாள்.

மனதிற்குள் ஆயிரம் எடுத்துச் சொல்லியும், பார்வை என்னவோ அவன் எங்கிருக்கிறான் என்பதனை தேட, இதோ கல்யாண மேடையில் மணமகன் கழுத்தில் மச்சான் முறைக்கான ஒரு தங்கச் சங்கிலியைப் அணிவித்துக்கொண்டு இருந்தான் ஆகாஷ்.

“ஹேய் மச்சி…” என்று சுப்ரியா மேகாவின் தோள் சுரண்ட,

“ம்ம்…” என்றாள் மேகா.

“செம ஆளுல…” என்று சுப்ரியா சொல்ல, அவள் யாரைச் சொல்கிறாள் என்பது சொல்லாமலே மேகாவிற்கு புரிய,

இருந்தும் “யாரைச் சொல்ற?” என்றாள்.

“ஏய்! அதான் டி.. அந்த சாண்டல் கலர் வேஷ்டி சட்டை…” என்று அவள் சொல்லவுமே, அப்பட்டமாய் முறைத்தாள் மேகவர்ஷினி.

“என்ன டி?!” என்று சுப்ரியா பாவமாய் கேட்க, பதிலேதும் சொல்லாமல் மீண்டும் மேடையைப் பார்க்க, மேகாவின் மனதோ இப்போது வேறு யோசித்தது.

மணமகன் கழுத்தில் மச்சான் முறைக்கு இவன் சங்கிலி போடுகிறான் என்றால், ஒருவேளை வைணவியும் இங்கே வந்திருக்கலாம் இல்லையா. அவளும் இவர்களின் உறவினள் தானே..

அப்படி யோசித்து அவளது ஸ்நேகிதியைத் தேட, அந்தோ பரிதாபம் வைணவி அவளது கண்களில் தட்டுபடவே இல்லை. வந்திருந்தால் தானே.

‘ச்சே எத்தனை வருஷம் ஆச்சு அவளோட பேசி…’ என்று இப்போதும் அந்த ஏக்கம் மேகவர்ஷினிக்கு எட்டிப்பார்க்க,

சஞ்சய் “இவங்க நிறைய சடங்கு எல்லாம் செய்வாங்களாம். சோ சந்தியா அப்பா, நம்மளை சாப்பிட்டிட்டு வரச் சொல்றாங்க…” என்று சொல்ல, அனைவருக்குமே பசி தான்.

நிஜமும் அதுதான். ஒன்பது – பத்தரை முஹூர்த்தம். இன்னும் யாரும் காலை உணவு உண்ணவில்லை. வந்திருந்த ஆட்களில் பாதிபேர் பந்தியில் இருக்க,

பர்வேஷ் “உனக்கு நல்ல பசின்னு நினைக்கிறேன்.. அதான் டல்லா இருக்க.. வா சாப்பிடுவோம்.. வந்து பார்ப்போம்…” என்று அழைக்க,

சுப்ரியாவும் “ஆமா டி சாப்பிட்டு வருவோம்…” என, அனைவரும் உண்ணச் செல்ல, அங்கேயோ சமையல் ஆட்களே அழைத்து வந்திருந்தவர்கள் தான் அழகாய் பரிமாறிக்கொண்டு இருந்தனர்.

ஆனாலும் வீட்டு ஆட்கள் சிலரும் ஆங்காங்கே நிற்க, இவர்களுக்கென்று ஒரு வரிசை காலியாய் இருந்தது போல. அனைவரும் சென்று அமர்ந்துகொள்ள, முதலில் இனிப்பு வைக்கவேண்டும் என்று கேசரி வரிசையாய் அனைவரின் இலையிலும் வைக்கப்பட, அதை யார் வைத்துக்கொண்டு வருகிறார்கள் என்பது புரியவுமே மேகவர்ஷினி பார்வையை தழைத்துக் கொண்டாள்.

ஆனால் சுப்ரியாவோ “சார்.. இந்த இலைக்கு வைக்காம போறீங்க…” என்று சொல்லி, மேகாவின் இலையைக் காட்ட,

கேசரி வாலியை வைத்திருந்தவனோ, பார்வையை தாழ்த்தி அமர்ந்திருந்த மேகவர்ஷினியைப் பார்த்தவன் “அவங்க அது சாப்பிடமாட்டாங்க…” என்று சொல்லிச் செல்ல, அவன் பதிலைக் கேட்டவர்கள் எல்லாம் அதிர்ந்தே மேகாவின் முகம் பார்க்க,

அவளோ ‘ஷ்..!’ என்று கண்களை இறுக மூடித் திறந்தாள்.