“உதய்” என்று புகைப்படத்தில் இருந்தவனின் முகத்தை வருடியவளுக்கு, நினைவு அவனை முதன் முதலில் பார்த்த தினத்திற்கு சென்றது.
மூன்று வருடங்களுக்கு முன்பு,
கோயம்புத்தூரில் ஒரு ப்ரைவேட் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் தீராநதி.
அன்று எப்போதும் போல் வேலையில் இருந்தவளை அழைத்தார் சாரதா.
“என்னமா? இந்த டைம்ல கால் பண்ணயிருக்கிங்க? எதுவும் ப்ராப்ளம் இல்லையே?” என்றாள் பதட்டத்துடன். எப்போதும் அந்த நேரத்தில் அவர் அழைத்ததில்லை.
“பதறாத நதி, அதெல்லாம் ஒண்ணுமில்லை. இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்துடு நதி. உன்னை பொண்ணுப் பார்க்க வர்றாங்க” என்றார் சாரதா.
“என்னம்மா திடீர்ன்னு இப்ப சொல்றிங்க? அதான் ஏற்கனவே அன்னைக்கு ரெண்டு பேர் வந்துட்டு போனாங்களே?” என்றாள் கேள்வியாய்.
“பையனோட அம்மா அப்பா பார்த்தா போதுமா? பையன் பார்க்க வேண்டாமா? நீ பையனைப் பார்க்க வேண்டாமா?கேள்வியா கேட்காம சீக்கிரம் வந்துடு நதி” என்றவர் மேற்கொண்டு அவளை கேள்வி கேட்க விடவில்லை.
யோசனையுடன் போனை வைத்தவளைப் பார்த்து,
“என்னாச்சு நதி? அம்மா என்ன சொன்னாங்க?” என்றாள் ப்ரியா. நதியின் தோழி.
“நான் சொன்னேன்ல பிரியா, அன்னைக்கு வந்துட்டு போனவங்க மறுபடியும் பொண்ணு பார்க்க வர்றாங்களாம். அதான் அம்மா கொஞ்சம் முன்னமே பர்மிஷன் போட்டுட்டு வர சொல்றாங்க” என்றாள்.
“ஹேய் சூப்பர். இதையேன்டி இவ்வளவு டல்லா சொல்ற? ஏற்கனவே மாப்பிள்ளை ஜாதகத்தோட போட்டோவும் குடுத்திருந்தாங்க. நீதான் இன்னும் போட்டோவை பார்க்கவே இல்லையே. பேசாம நேர்லயே பார்த்துடு இன்னைக்கு” என்றாள் பிரியா.
ஆம்..! மாப்பிள்ளையின் போட்டோவும் ஜாதகமும் ஏற்கனவே வீட்டில் தான் இருந்தது. தன்னிடம் காட்டிய போது கூட அதைப் பார்க்க மறுத்துவிட்டாள் நதி.
“போட்டோ பாருக்கா, மாப்பிள்ளை செம்மையா இருக்கார்” என்று மகதி கூட அவளை வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.
“நான் எதா இருந்தாலும் நேர்லயே பார்த்துக்கிறேன்” என்று முடித்திருந்தாள்.
“இன்னும் என்னடி பிரச்சனை? எதுக்கு இப்படி பிரம்மை பிடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்க?” என்றாள் ப்ரியா.
“பிரச்சனை எல்லாம் ஒண்ணுமில்லை. இருந்த சேவிங்ஸ் எல்லாம் வச்சு இப்பத்தான் சொந்தமா ஒரு அளவான வீட்டை கட்டியிருக்கோம். அப்பா டிட்டையர்மென்ட் பணம் கொஞ்சம் இருக்கு. இப்போ திடீர்ன்னு மேரேஜ் அது இதுன்னு செலவு பண்ணனும். மகதியும், நரேனும் இப்பத்தான் டென்த் படிச்சுட்டு இருக்காங்க. அப்பா செலவுக்கு என்ன பண்ணுவார்ன்னு யோசிக்கிறேன்” என்றார் நதி.
“இதையெல்லாம் அம்மாவும் அப்பாவும் யோசிக்காமையா இருந்திருப்பாங்க. உனக்கு தெரிஞ்ச எல்லா விஷயமும் அவங்களுக்கும் தெரியும். அதனால ரொம்ப வொர்ரி பண்றதை விட்டுட்டு உனக்கான நாள் இன்னைக்கு. அதை என்ஜாய் பண்ணு. நானும் வேணும்ன்னா வரவா?” என்றாள் கிண்டலாய்.
“ஜஸ்ட் பொண்ணு தாண்டி பார்க்க வர்றாங்க. பையனுக்கு என்னைப் பிடிக்கணும். எனக்கு பையனைப் பிடிக்கணும். இப்படி நிறைய இருக்கு” என்று சொல்லி சிரித்தவளைப் பார்த்த பிரியா,
வீட்டின் நிலை பற்றிய ஆயிரம் கவலைகள் இருந்தாலும், மனதிற்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு நதிக்கும் இருக்கத்தான் செய்தது. கல்லூரி நாட்களில் கூட காதல் அவளுக்கு இருந்ததில்லை. அவளின் பின் சுற்றியவர்களின் எண்ணிக்கை ஏராளம். ஏனோ, குடும்ப சூழ்நிலையைக் கருதி அவளின் ஆர்வம் படிப்பின் மீது மட்டும் தான் இருந்தது. அப்போதெல்லாம் குறுகுறுக்காத இதயம் இப்போது மட்டும் இப்படி படபடவென்று அடிப்பதற்கான காரணம் தான் தெரியவில்லை அவளுக்கு.
ஒருவழியாக அரைநாள் பர்மிஷன் எடுத்துக் கொண்டவள் வீடு வந்து சேர்ந்திருந்தாள்.
“நதி நீ போய் குளிச்சுட்டு இந்த சுடிதாரை மாத்திட்டு புடவை கட்டிக்கோ” என்றார் சாரதா.
“ம்மா! இந்த சுடியே நல்லா தான் இருக்கு. பொண்ணு பார்க்க வந்தா புடவை தான் கட்டனுமா என்ன?” என்றாள் நதி.
“அப்படி கேளுக்கா?” என்றாள் மகதி.
“நீங்க ரெண்டு பெரும் இன்னைக்கு ஸ்கூல் போகலையா?” என்றாள் அதட்டலுடன்.
“அக்கா இன்னைக்கு கவர்மென்ட் ஹாலிடே” என்று பல்லைக் கடித்தாள் மகதி.
“ஆமாம்ல” என்று தலையைத் தட்டிக் கொண்டவள்,
“சாரிடி” என்றபடி கிளம்பச் சென்றாள்.
சாரதா எடுத்து வைத்திருந்த புடவையைக் கண்டு அதிர்ந்தவள்,
“அம்மா” என்று கத்தியிருந்தாள்.
“என்ன நதி?” என்றபடி வந்தார் சாரதா.
“இப்ப எதுக்கு பட்டுப் புடவையை எடுத்து வச்சிருக்கிங்க?” என்றாள் கேள்வியாய்.
“அது, மாப்பிள்ளைக்கு போட்டோல பார்த்தே உன்னை ரொம்ப பிடிச்சிருச்சாம். நேர்ல உனக்கும் பிடிச்சுட்டா, இன்னைக்கே பூ வச்சு உறுதி பண்ணிடலாம்னு சொல்லியிருக்காங்க. சிம்பிளா இருந்தா நல்லா இருக்காதுல்ல. அதான், இந்த புடவையை எடுத்து வச்சேன்” என்றார்.