குமரன் வீட்டிற்குள் நுழையும் போதே, ஆரம்பித்து விட்டார் கோதாவரி.
“என்ன நினைச்சுட்டு இருக்க குமரா? வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் ஆகுது. ஒரு போன் பண்ணி தகவல் சொல்றதும் இல்லை. நாங்களா போன் பண்ணினா, சரியா பேசுறதும் இல்லை. வர வர உன் போக்கு சரியில்லை..” என்று எப்போதும் போல் ஆரம்பித்தார்.
‘இருக்கிற பிரச்சனையில் இவங்க வேற?’ என்று மனதிற்குள் நினைத்தவனுக்கு கோபம் வந்தது.
“வேலையிடத்துல அவனுக்கு என்ன பிரச்சனையோ? அவன் என்ன சின்னப் பையனா? அவனுக்குத் தெரியாதா?” என்று மகனுக்காக பரிந்துரைக்கு வந்தார் சங்கரன்.
“நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. நான் உங்ககிட்ட பேசலை. அவன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். இவனுக்காகத் தான சொந்த ஊரு, வீடு எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வந்து உட்கார்ந்திருக்கோம். ஆனா கொஞ்சமாவது மதிக்கிறானா..?” என்று விடாமல் பொரிந்தார்.
குமாரனால் அதற்கு மேல் கோபத்தை கட்டுப் படுத்த முடியவில்லை.
“நான் ஒன்னும் உங்களை இங்க கூப்பிடலை. நீங்களா வந்து இருந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை..” என்றான் பட்டென்று.
உடனே கோதாவரியின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.
“எப்படி பேசுறான் பார்த்திங்களா..? பெத்த மகன் தனியா கஷ்ட்டப்படுவானேன்னு இங்க வந்து அவனுக்கு சமைச்சு போட்டுட்டு இருந்தா, இப்படித்தான் பேசுவான். நாம உடனே கிளம்பலாம். இவன் என்னமோ பண்ணட்டும். இனி ஒரு நிமிஷம் நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்…” என்றார் கோதாவரி.
“இப்ப குமரன் என்ன சொல்லிட்டான்னு இப்படி பேசிட்டு இருக்க கோதாவரி. போய் அவனுக்கு சாப்பாடு எடுத்து வை முதல்ல. பசியோட வந்திருப்பான்..” என்றார்.
“எனக்கு பசியில்லை. எனக்கு எதுவும் வேண்டாம். நான் கொஞ்ச நேரம் தூங்கனும். என்னை யாரும் தொந்தரவு பண்ணாதிங்க..” என்று ரோபோ மாதிரி தகவல் சொன்னவன், நேராக அறைக்குள் சென்று கதவை ஓங்கி அறைந்து சாற்றினான்.
யூனிபார்மை கூட கழட்டாமல் மெத்தையில் விழுந்தவனுக்கு ஆயாசமாய் வந்தது. சுற்றி இருந்த அனைத்தின் மீதும், அனைவரின் மீதும் வெறுப்பாய் வந்தது. வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் கடக்க முடியாமல் கடந்து கொண்டிருந்தான்.
நெருஞ்சியாய் குத்திக் கொண்டிருந்த நினைவுகளும், வார்த்தைகளால் வதைத்துக் கொண்டிருக்கும் தாயும், இடைவிடாத, ஓய்வில்லாத வேலையும் அவனை பைத்தியமாக மாற்றவே முயற்சி செய்து கொண்டிருந்தன. ஆனால் குமரன் எதற்கும் அசையாமல், எதையும் வெளியே கட்டிக் கொள்ளாமல் வலம் வந்து கொண்டிருந்தான்.
கண்களை மூடியவனின் நினைவுகள் முழுவதும் அன்று வந்த தீராநதியைத் தான் சுற்றியிருந்தன.
“நதி,நதி” என்று ஓலமிட்டவனின் மனதிற்குள், இன்று கம்பீரமாய் வந்து இறங்கிய நதி தான் தெரிந்தாள். எவ்வளவு முயன்றும் அவள் முகம் அவன் மனக்கண்ணை விட்டு அகல மறுத்தது.
பட்டென்று கண்களைத் திறந்தவன், தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான். கண்கள் கலங்கி, அவனறியாமல் கண்ணீர் இரண்டு துளிகள் வெளியே வரவும் தான் சுதாரித்தான். கண்களை வேகமாய் துடைத்தவன்,
“நான் எதுக்கு கண்கலங்கனும்? மாட்டேன், அவளுக்காக நான் ஏன் கண்ணீர் விடணும்? நெவர்” என்று உறுதி எடுத்தவனாய், உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.
“இப்பத்தான் வந்த? மறுபடியும் கிளம்பினா என்ன அர்த்தம் குமரா? இப்போ எங்க கிளம்பிட்ட?” என்றார் கோதாவரி.
“எனக்கு வெளிய ஆயிரம் வேலை இருக்கும்மா. அதையெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது.” என்றான் பட்டென்று.
“ஒரு அம்மாகிட்ட பேசுற மாதிரியா பேசுற குமரா? ஏதோ விரோதிகிட்ட பேசுற மாதிரி பேசுற. என் மூத்த பையன் கல்யாண் மாதிரி வருமா? எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா உடனே உருகிடுவான் பிள்ளை..” என்றார் கோதாவரி.
அவரின் பேச்சை கேட்டு பல்லைக் கடித்தான் குமரன். வாக்குவாதம் செய்யும் மனநிலையில் அவன் இல்லை என்பதால் அமைதியாக வெளியேறி விட்டான்.
“நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை கோதாவரி. வந்த பையனுக்கு ஒரு டம்ளர் காபி குடுத்தியா நீ? அதை விட்டுட்டு தேவையில்லாத பேச்சை மட்டும் தான் பேசுற..” என்றார் சிவசங்கர்.
“எப்ப பாரு என்னையே குறை சொல்லாம, அவனை கொஞ்சம் அதட்டி வைங்க.” என்ற கோதாவரியை என்ன செய்வதென்றே சங்கரனுக்கும் புரியவில்லை.
கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட சங்கரன்- கோதாவரிக்கு மூன்று பிள்ளைகள். முதல் மகன் கல்யாண் அவனின் மனைவி யுவராணி.அவர்களுக்கு ஆணும், பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள். கோயம்புத்தூரில் தனியார் கம்பெனியில் மேனேஜராக பணி புரிகிறான். அவனுக்குப் பிறகு பிறந்தவள் தீபா. குமரனின் அக்கா. அவளுக்கும் கண்ணனுடன் திருமணம் முடிந்து இரண்டு ஆண் குழந்தைகள். அவளும் கோயம்புத்தூரில் தான் குடும்பத்துடன் இருக்கிறாள். மூன்றாவது உதய குமரன். போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிகிறான்.
அலுவலகத்தில் தனது அறையில் சோர்வுடன் அமர்ந்திருந்தாள் தீரா நதி. அந்த சோலார் பேணல் சம்பந்தமான நிலக் கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தவளுக்கு, குமரன் கூறியது போல் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனை எளிதில் முடியாது என்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது.
அவனை நினைத்த உடனே மற்ற பிரச்சனைகள் பின்னுக்கு செல்ல, அவனே பிரதானமாய் முன் வந்து நின்றான். கோப்புகளை மூடி வைத்தவளுக்கு அவனின் நினைவுகளை மூடி வைக்க முடியவில்லை. அவனைப் பார்த்து, அவனுடன் பேசி இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகப் போகிறது. கரூரில் இருப்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அவன் பிரமோஷனில் இன்ஸ்பெக்டர் ஆனது கூட அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
‘நீ மட்டும் எல்லா விஷயத்தையும் அவன் கிட்ட சொல்லிட்டா இருந்த?’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு அவளிடம் பதிலும் இல்லை.
அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளின் அலைபேசி ஒலிக்க, சாரதா தான் அழைத்துக் கொண்டிருந்தார்.
“சொல்லுங்கம்மா”
“நதி இப்போ காய்ச்சல் எப்படி இருக்கு?” என்றார் சாரதா.
“அப்படியே தான்மா இருக்கு. நான் வரும் போது ஹாஸ்பிட்டல் போயிட்டு வரேன்” என்றாள்.
“அம்மா எனக்கு ஒண்ணுமில்லை. சாதாரண காய்ச்சல், அவ்வளவு தான். நீங்க பதறாதிங்க” என்றாள் சோர்வாய்.
“உன் குரலே சரியில்லை நதி. பேசாம லீவ் சொல்லிட்டு வந்துடு” என்றார்.
“இன்னும் கொஞ்ச நேரம் தான்மா. நான் ஹாஸ்பிட்டல் போயிட்டு வரேன்” என்று போனை வைத்தவளுக்கு ஆயாசமாய் வந்தது.
சாரதா எப்போதும் அப்படித்தான். அவருக்கு நதி என்றால் அளப்பரிய பாசம். சிறு வயதிலிருந்தே அதீத பொறுப்புடன் இருப்பாள் நதி. வீண் பிடிவாதம் கிடையாது. எதையும் தனக்கு என்று ஆசைப்பட்டு கேட்க மாட்டாள். குடும்ப சூழ்நிலை தெரிந்து வளர்ந்த பெண் என்பதால் அவள் வீட்டில் அனைவருக்கும் அவள் முக்கியமானவள். அவளின் தந்தை வரதன், தன் உடன் பிறந்த தம்பி தங்கைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாய் செய்தவர், அதன் பலனாய் பெற்ற பிள்ளைகளுக்கு ஒன்றையும் சேர்த்து வைக்க முடியாதவராய் நிலைகுலைந்து நின்ற நேரம்,படித்து முடித்த கையோடு கேம்பஸில் தேர்வாகி உடனே வேலைக்கும் சென்றிருந்தாள் நதி.
அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அவளின் கனவு. அதற்காகவே வேலை பார்த்துக் கொண்டே முழுமூச்சாய் படித்துக் கொண்டிருந்தவள், இதோ அவளின் கனவையும் அடைந்துவிட்டாள்.
ஆனால் இதற்கு இடைப்பட்ட காலங்களில் அவளே எதிர்பாராத பல விஷயங்கள் அவள் வாழ்வில் நடந்து முடிந்திருந்தது.
யோசனைகளுடனே ஹாஸ்பிட்டல் சென்றவளை பிடித்துக் கொண்டார் அந்த மருத்துவர்.
“என்னம்மா நீங்க? இவ்வளவு பீவர் இருக்கு? என்ன பண்ணிங்க? உடனே ஹாஸ்பிட்டல் வரணும்னு உங்களுக்குத் தெரியாதா?பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க? இவ்வளவு கேர்லசா இருக்கீங்க?” என்று அவர் பாட்டுக்கு பேசத் துவங்க,
‘பாராசிட்டமால் போட்டேன் டாக்டர்” என்றவளை முறைத்தார் அந்த பெண் மருத்துவர்.
“எதுக்கும் பிளட் டெஸ்ட் எடுத்துட்டு வாங்க” என்றவர், அவளின் சோர்ந்த முகத்தை பார்த்துவிட்டு,
“ரொம்ப அனீமிக்கா இருக்கீங்க. கூட யார் வந்திருக்கா?” என்றார் டாக்டர்.
“நான் மட்டும் தான் வந்திருக்கேன் டாக்டர். ஐ வில் மேனேஜ்” என்றவள், பிளட் டெஸ்ட் எடுக்க சென்றாள். சிறிது நேரம் காத்திருந்து ரிப்போர்ட்டையும் வாங்கிக் கொண்டு வந்தாள் நதி.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மேம். ஒரு பேஷன்ட் பார்த்துட்டு இருக்காங்க” என்று நர்ஸ் சொல்ல, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.