இரண்டு மணி நேரமாக நடந்த பேச்சு வார்த்தையில், எந்த முடிவும் எட்டப்படவில்லை. தீராநதிக்கு தீராத தலைவலி வந்தது தான் மிச்சம் என்றானது. இப்படித்தான் நடக்கும் என்று தெரிந்ததாலோ என்னவோ குமரனிடம் பெரிதாக மாற்றம் ஒன்றும் தென்படவில்லை. அவளுக்கு அருகில் அமர்ந்திருந்தவனுக்கு அவள் உடல் சூட்டின் உஷ்ணம் தெரியவர, அவளை யோசனையுடன் பார்த்தான்.
அருகில் இருந்த காவலரிடம் குனிந்து மெதுவாக எதையோ சொல்ல, எழுந்து சென்ற அவர், திரும்பி வரும்போது அவர் கையில் சூடான காபியும் காய்ச்சல் மாத்திரையும் இருந்தது.
அதை அவர் அவளிடம் கொடுக்க, யோசனையுடன் பார்த்தவள், எந்த பிகுவும் பண்ணாமல் மாத்திரையை போட்டுக் கொண்டாள். அந்த காபியும் அப்போது அவளுக்குத் தேவையாய் இருந்தது.
இன்னும் கூட்டத்தின் சலசலப்பு அடங்கிய பாடில்லை. ஆர்டிஓ பேசிக் கொண்டிருந்தார். அவரும் ஒரு கட்டத்தில் டென்ஷனாகி தலையில் கைவைக்க,
“இப்போ முடிவா என்னதான் சொல்ல வர்றீங்க?” என்றாள் நதி.
“இந்த வேலையை உடனே நிறுத்த சொல்லுங்க மேடம். அவங்க அபகரிச்ச இடத்தை இந்த ஊருக்கே திருப்பி தந்துட சொல்லுங்க. இங்க சோலார் பேணல் போடக் கூடாது” என்றனர் ஊர் முக்கியஸ்தர்கள்.
“புரியாம பேசாதிங்க. இது பொது இடம் இல்லை, நீங்க கேட்ட உடனே குடுக்குறதுக்கு. இது, இந்த பிராஜெக்ட்ல சம்பந்தப்பட்ட கம்பெனியோட சொந்த இடம். அதுல போய் நீங்க பிரச்சனை பண்ண முடியாது. அதுமட்டுமில்லாம இது கவர்மென்ட் பிராஜெக்ட். இதுல இதுக்குமேல எங்களால தலையிட முடியாது. அவங்ககிட்ட எல்லா பேப்பர்சும் சரியா இருக்கு. அதே மாதிரி உங்ககிட்ட ஏதாவது வலுவான ஆதாரம் இருந்தா கொடுங்க. அதை விட்டுட்டு வாய் பேச்சாவெல்லாம் இவ்வளவு பெரிய பிராஜெக்டை நிறுத்த முடியாது.” என்றாள் உறுதியாக.
“நீங்க இப்படித்தான் சொல்லுவிங்கன்னு எங்களுக்கு நல்லா தெரியுமே மேடம். எல்லாரையும் காசு குடுத்து விலைக்கு வாங்கத் தெரிஞ்சவங்களுக்கு, உங்களை வாங்குறது ஒன்னும் அவ்வளவு கஷ்ட்டமான விஷயம் கிடையாது. ஆனா, எங்களை மீறி எப்படி வேலையை ஆரம்பிக்கிறாங்கன்னு நாங்களும் பார்க்கிறோம்..” என்று அவர்களும் விதண்டாவாதமாய் முடித்தனர்.
அவர்களின் பேச்சைக் கேட்ட நதிக்கு, எங்காவது போய் சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல் வந்தது.
“உங்களோட கோரிக்கையை மட்டும் சொல்லுங்க. நான் அவங்ககிட்ட சொல்றேன். அதை விட்டுட்டு இந்த பிராஜெக்டை இடைஞ்சல் பண்ணனும்ன்னு நினைச்சா, கண்டிப்பா எல்லாரையும் அரெஸ்ட் பண்ண வேண்டி வரும்.” என்றாள் சிறு கண்டிப்பு கலந்த தொனியில்.
“நீங்க என்ன செய்யணுமோ செஞ்சு பாருங்க மேடம். ஆனா, நாங்க பண்றதை பண்ணிட்டு தான் இருப்போம்..” என்றவர்கள், கலைந்து சென்று விட்டனர்.
“பார்த்திங்களா தீராநதி, நாம இத்தனை பேர் சொல்லியும் கேட்காம இவங்க எப்படி பேசிட்டு போறாங்கன்னு. இந்த பிராஜெக்ட் ஆரம்பிச்சு பாதி வேலை முடிஞ்சிருச்சு. இப்ப வந்து நிறுத்துங்கன்னு சொன்னா எப்படி முடியும்? அவனோட சொந்த நிலத்துல பண்ற பிராஜெக்டை நாம் எப்படி நிறுத்த முடியும்?” என்று புலம்பியவர்,
“இன்ஸ்பெக்டர் குமரன், உங்களை வேடிக்கை பார்க்க இங்க வர சொல்லலை. யார் யார் ஆப்போசிட்டா களம் இறங்குறாங்களோ அவங்க மேல ஆக்சன் எடுங்க..” என்றார் ஆர்டிஓ.
“சார், அவங்களுக்கு புரிய வைக்க வேண்டியது நம்ம கடமை. இந்த ப்ராஜெக்ட்ல புறம்போக்கு இடம் நூறு ஏக்கரும் இருக்கு. பக்கத்துல அவங்க விவசாய நிலமும் இருக்கு. இதனால அவங்க விவசாயம் பாதிக்கப்படுமோன்னு பயப்படுறாங்க. அவங்களோட பயமும், கோபமும் ஞாயமானது. அதுக்கு அவங்க கோரிக்கைள் என்னென்னனு கேட்கணும். அவங்களோட கோரிக்கைளை நிறைவேத்தாம, வேலையை ஆரம்பிச்சா, கண்டிப்பா பிரச்சனை பெரிசாகும். இது சம்பந்தமா உங்க ஹையர் அபீசியல்ஸ் கிட்ட பேசிட்டு என்ன பண்றதுன்னு யோசிங்க. இது சம்பந்தமான கேஸ் ரிப்போர்ட்டை என்னோட ஹையர் அபீசியல்ஸ்க்கு நான் ப்ராப்பரா சென்ட் பண்ணிட்டேன்” என்றான் குமரன்.
“எனக்கு போஸ்ட்டிங் நீங்க குடுக்கலை சார். நீங்க என்னோட ஹையர் அபீசியலும் கிடையாது. லேண்ட் இஷ்யூஸ் எல்லாம் ரெவன்யு டிப்பார்ட்மென்ட் உங்களோட பொறுப்பு. அது உங்களுக்கும் நல்லா தெரியும். சட்ட ரீதியா எந்த பிரச்சனை வந்தாலும் நாங்க பார்த்துக்குவோம். இவ்வளவு நேரம் ஆர்டிஓ, தாசில்தார் நீங்க பேசியே கேட்காத மக்கள், நான் பேசியா கேட்க போறாங்க. அதுவும் நானெல்லாம் சாதாரண ஒரு இன்ஸ்பெக்டர் சார்..” என்றான் கொஞ்சம் நக்கல் கலந்த குரலில்.
அவன் அப்படி பேசிய அடுத்த நிமிடம் சட்டென்று அவனைத் திரும்பி பார்த்தாள் நதி. அவள் பார்ப்பாள் என்று முன்கூட்டியே அறிந்திருந்தான் போலும். அவனும் சளைக்காமல் அவளை நேர் பார்வை பார்த்தான்.
தீராநதியின் முகத்தில் இருந்த கோபமும்,, கண்களில் இருந்த வெறுமையும் அவள் நிலையை சொல்லாமல் சொல்லியது.
எந்த முடிவும் எடுக்கப்படாமல் அந்த கூட்டம் முடிந்து விட, தீராநதிக்கு எரிச்சலாக வந்தது.உடம்பு வேறு அவளை படுத்தி எடுக்க, காரணமேயில்லாமல் கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.
“எப்ப கிளம்பனும்ன்னு நான் முடிவு பண்ணிக்கிறேன். நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க சார்..” என்றாள் கடுப்புடன்.
“இதுவும் என்னோட வேலைதான் மேடம். இந்த கேஸ் முடியற வரைக்கும் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லி எங்களுக்கு உத்தரவு மேடம்” என்றான் மீண்டும் அந்த மேடமில் அழுத்தம் கொடுத்து.
“யாரோட பாதுகாப்பும் எனக்குத் தேவையில்லை. நான் பாதுகாப்பு வேணும்ன்னு கேட்கவேயில்லையே..?” என்றாள் கேள்வியாக.
“அது எனக்குத் தெரியாது மேடம். மேலிடத்து உத்தரவு, நாங்க அதை கடைபிடிச்சு தான் ஆகணும்” என்றான் உறுதியாக.
“ம்ம்ம்..!” என்றவள் எழும் போது உடலில் தெம்பு இல்லாததால் தலைசுற்றி விழப் போக,
“ஹேய்,நதி பார்த்து..” என்ற குமரன் பதறியபடி அவளை தாங்கிப் பிடித்திருந்தான். அவ்வளவு தான், அடுத்த நிமிடம் அவன் கையிலிருந்து சட்டென்று விலகி விட்டாள் தீராநதி. கால்கள் தள்ளாடினாலும், உடல் உள்ளுக்குள் நடுக்கம் கண்டாலும், நிமிர்வாகவே அவனைப் பார்த்தாள்.
“எனக்கென்ன வேண்டுதலா? பாவமேன்னு பிடிச்சேன். வேற எந்த எண்ணமும் எனக்கு இல்லை” என்றான், அவளுக்கு குறையாத கோபத்துடன்.
அவனை வெற்றுப் பார்வை பார்த்த தீராநதி,
“பிடிக்கிற நேரத்துலையே பிடிக்கலை. இப்ப தாங்கி என்ன ஆகப் போகுது” என்றாள் மனதிற்குள்.
“இந்த ஜென்மத்துக்கு உன்னையெல்லாம் திருத்த முடியாது..” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் குமரன்.
அவள் காரில் ஏறி செல்லும் வரை, அவள் செல்லும் பக்கம் பார்வையை செலுத்தாமல் இருந்தவன், அவள் சென்ற பிறகு தான் நிம்மதியாய் மூச்சு விட்டான்.
“மேடம் உங்களுக்கு தெரிஞ்சவங்களா சார்?” என்றார் அருகில் இருந்த காவலர்.
“ஆம்..” என்று தலையை மட்டும் தான் ஆட்ட முடிந்தது குமரனால்.
“நான் வீட்டுக்குப் போயிட்டு வந்திடுறேன். எஸ்.ஐ வந்தா ஸ்டேஷனை பார்த்துக்க சொல்லுங்க..” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான் குமரன். சென்று கொண்டிருக்கும் போதே, மனம் முழுவதும் ஆயிரம் சிந்தனைகளும், கேள்விகளும் தோன்றத்தான் செய்தது. ஆனால் அதற்கான விடையைத் தேட அவன் விருப்பப்படவில்லை. ஒருவேளை இது தான் விடை என்று அவன் கணித்திருந்தானோ என்னவோ?