என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -7

அத்தியாயம் -7(1)

அவந்திகா, மணிகண்டன் இருவரது திருமண நாள். குறை ஏதும் சொல்ல முடியாத படி நல்ல படியாகவே எல்லா ஏற்பாடுகளும் இருந்தன.

“வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்கேன்பா, ரிலாக்ஸ் பண்ணிக்க நானும் விதுரனும் நாலு நாள் கொடைக்கானல் போலாம்னு இருக்கோம்” என பொய் சொல்லி, திண்டுக்கல் வந்து விட்டான் அசோக்.

“என்னடா நிரஞ்சனாவோட ஜாலி ட்ரிப் போகாம இவனோட ரிலாக்ஸ் ட்ரிப்’பா?” என விதுரனை கிண்டல் செய்தான் சமரன்.

“இவன் கூட சமாதானம் ஆகியிருக்கவே கூடாதுடா, போனா போகுதுன்னு பேசினா இங்க அழைச்சிட்டு வந்திட்டான். போகுது போ நான் என் மருமகனோட என்ஜாய் பண்ணிக்கிறேன்” என்ற விதுரன் தங்கை மகனோடு ஐக்கியமாகி விட்டான்.

அத்தைக்கு அதிகம் சிரமம் தராமல் வீட்டு ஆணாக எல்லா வெளி வேலைகளையும் அசோக்தான் பார்த்துக் கொண்டான். புடவை, நகை பிரச்சனை பற்றி ஸ்ருதியிடம் கூறி அவளையே சமாளிக்க சொல்லியிருந்தான்.

“வெளில ஏன் கடன் வாங்கணும்னு அசோக் செஞ்சிருக்கான். உங்களுக்கு விருப்பம் இல்லைனா அனன்யா வேலைக்கு போக ஆரம்பிச்சதும் முடியறப்போ அதுக்குண்டான பணத்தை கொடுத்திடுங்க. புடவைக்கெல்லாம் குறை சொல்லக்கூடாது, நீங்க கூடத்தான் அவனுக்கு ட்ரெஸ் எடுத்து கொடுத்தீங்க, அவன் வாங்கிக்கல?” என பேசி பாக்யாவையும் அனன்யாவையும் சரி கட்டி விட்டாள் ஸ்ருதி.

அப்போதும் அசோக் எடுத்து கொடுத்த புடவையை கட்டிக் கொள்ளும் எண்ணத்தில் இல்லை அனன்யா. அசோக் மனம் புண்படும் என இதமாக சொல்லி அதையும் கேட்காததால் கொஞ்சம் திட்டி என மகளை ஒத்துக் கொள்ள வைத்திருந்தார் பாக்யா.

 அசோக்கிடம் தேவைக்கு பேசினாலும் இன்னும் அந்த ஒதுக்கம் அனன்யாவிடம் இருக்கிறதுதான். திருமணம் முடியட்டும் என்னதான் உன் பிரச்சனை என கேட்டு விட வேண்டியதுதான் என நினைத்திருந்தான் அசோக்.

அவந்திகாவுக்கு பிளவுஸ் தைப்பது, மேக் அப், சிகையலங்காரம் என அனைத்திற்கும் ஸ்ருதிதான் ஆலோசனை. மணப் பெண்ணுக்கு மேக் அப் எதுவும் ஒத்துக் கொள்ளவில்லை. ஆகவே பார்லர் ஆள் வைக்காமல் தானே நன்றாக செய்து தருகிறேன் என பொறுப்பெடுத்தக் கொண்டாள் ஸ்ருதி.

அடிக்கடி பாக்யாவின் வீட்டிற்கு போக வர என இருந்தாள் ஸ்ருதி. அவளின் கவனம் எல்லாம் அசோக், அனன்யா இருவரையும் கண்காணிப்பதில்தான் இருந்தது. அனன்யாவுக்கு இவன் மீது ஈடுபாடு இருக்கிறது என்பதை உறுதி செய்து விட்டாள். ஆனாலும் அவள் சொல்வதை நம்ப மறுத்தான் சமரன்.

“இல்லாதது ஏதாவது சொல்லி தேவையில்லாம பிரச்சனை ஆகிட போகுது ஸ்ருதி, அப்படி இருந்தா அந்த பொண்ணு சொல்லிக்காதா? உன்னை விட பெரியாள் அந்த பொண்ணு” என்றவனை முறைத்தாள்.

“ஹப்பா கோவத்தை பாரு! தைரியத்துல சொல்றேன். லவ்னா சொல்ல தயங்குற டைப் இல்லை அந்த பொண்ணு. நீ சும்மான்னு இரு” என கண்டிப்போடு சொல்லி விட்டான்.

கல்யாண வேலைகள் எல்லாம் பார்த்து விட்டு இரவு உறங்க சமரனின் வீட்டுக்குத்தான் வருவான் அசோக். விதுரனோடு அறையை பகிர்ந்து கொள்வான்.

 மறைமுகமாக அனன்யா உன்னை விரும்புகிறாள் போலும் என அசோக்கிடம் கூறிப் பார்த்தாள்தான் ஸ்ருதி. அவனுக்கு அவள் கேட்க வருவது புரிந்தாலும் பிடி கொடுத்து பேசவில்லை. எதுவும் தெரியாமல் என்னவென சொல்வான்? ஆனால் அவனை பற்றி அவனது மனம் பற்றி ஆராய்ந்தான்.

அனன்யா பற்றி அவனது நினைப்பு என்ன என்பதற்கு ‘காதல்’ என்ற பதில் அவனிடம் இல்லை. அவளுக்கு எப்படி என்பதற்கும் உறுதியான பதில் தெரியவில்லை. ஆகவே தற்காலிகமாக அனன்யாவின் போக்கு பற்றி அறிந்து கொள்வதை தள்ளி வைத்தான்.

மணப் பெண்ணுக்கு அலங்காரம் செய்து முடித்த ஸ்ருதி, அனன்யாவுக்கும் கண்கள் உறுத்தாத படி ஒப்பனை செய்து விட்டாள். அவளது புடவையின் பார்டருக்கு ஏற்றது போல கழுத்துக்கு அணிவித்து விட்டவள் நெற்றியில் இளஞ்சிவப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டி விட்டாள்.

“இப்படிலாம் அழகான பொண்ணுங்க நடமாடினா பசங்க பாவம் இல்லியா?” என யாரோ ஒரு பெண் கேட்டு விட்டு செல்ல, சிரித்த ஸ்ருதி கண் மை எடுத்து அனன்யாவின் கன்னத்தோரம் திருஷ்டி பொட்டு வைத்து விட்டாள்.

“ஐயோ அக்கா! அவங்க உங்களை சொல்லியிருப்பாங்க, இதெல்லாம் வேணாம் க்கா” என அலறினாள் அனன்யா.

“ப்ச்… உன்னையும் சேர்த்துதான் சொல்லியிருக்காங்க. ரொம்ப குட்டியாதான் வச்சு விட்ருக்கேன், அழைச்சிடாத. நான் போய் ஜிவினை பார்த்திட்டு வர்றேன்” என சொல்லி சென்று விட்டாள்.

கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்ட அனன்யா திருஷ்டி பொட்டை அழிக்க போக, “உன்னை காணோம்னு அத்தை தேடுறாங்க” என வந்து நின்றான் அசோக்.

என்ன செய்ய போனோம் என்பதையே மறந்து விட்டாள் அனன்யா.

அத்தை வாங்கிக் கொடுத்த வேஷ்டி சட்டையில் அவளது மனதை அப்படியே பறித்தான் அசோக். அவனும் ஒரு நொடி திகைப்பாகத்தான் அவளை பார்த்தான். ஆனால் அவளை போல அவனிடம் தயக்கம் இல்லை.

“யூ லுக் ஸ்டன்னிங் அனன்யா!” என பாராட்டு பத்திரம் வாசித்து, “சீக்கிரம் வா” என சொல்லி சென்று விட்டான். “அடங்கு அடங்கு” என சொல்லி மகிழ்ந்து போயிருந்த மனதை அடக்கிக் கொண்டே அவளும் வெளியேறி விட்டாள்.

இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்த அசோக்கை யாருமறியாமல் அவ்வப்போது பார்த்த வண்ணம் இருந்தாள் அனன்யா. அவள் அப்படித்தான் யாரும் கவனிக்கவில்லை என நினைத்திருந்தாள். ஆனால் அவளை கண்டு கொண்ட ஸ்ருதி கணவனையும் பார்க்க சொன்னாள்.

சமரன் முறைக்க, “பெரிய போலீஸ்தானே? குற்றம் செய்றவன் கண்ண வச்சே கண்டுபுடிப்பேன்னு பீத்திக்குவதானே? இப்ப அவளை நல்லா பாரு, லவ் இல்லைனு சொல்லு இப்போ” என்றாள்.

“அவுட் ஆஃப் த சிலபஸ்” என அவளிடம் நக்கலாக சொன்னாலும், அனன்யாவை அவனுமே கவனிக்க செய்தான்.

திருமணத்திற்கு வந்த விதுரன் தாலி கட்டி முடியவுமே கிளம்பி விட்டான். மற்ற சடங்கு சம்பிராதயங்கள் முடிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். தன் கல்லூரி நண்பர்கள் அவந்திகாவின் தோழிகள் ஆகியோரை மதிய உணவுக்கு அனுப்பி வைத்துக்கொண்டிருந்த அனன்யா ஸ்ருதியிடம் வந்தாள்.

“ஜிவினை நான் வச்சுக்கிறேன் க்கா, நீங்களும் ஸாரும் சாப்பிட்டு வந்திடுங்க” என்றாள்.

“போலாம், நீ கொஞ்சம் உட்கார், ரெஸ்ட்டே இல்லை உனக்கு” என சொல்லி தன்னுருகில் அமர வைத்துக் கொண்டாள் ஸ்ருதி.

மகனை வாங்கிக் கொண்ட சமரன் மண்டபத்தில் நடப்பவற்றை வேடிக்கை போல பார்த்திருந்தான். பெண்கள் இருவரும் பேசிக் கொள்வது காதில் விழுந்தாலும் அசுவாரஸ்யமாகத்தான் இருந்தான்.

“அடுத்து அசோக் கல்யாணம்தான், பொண்ணெல்லாம் பார்த்தாச்சு. அடுத்த வாரம் எங்கேஜ்மெண்ட் இருக்கலாம். அடுத்த மாசமே கல்யாணம் வச்சிடுவாங்க” என சொல்லிக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.

சமரனின் விழிகள் பெரிதாகி பின் சாதாரணம் ஆகின. எந்த உணர்வையும் காட்டாமல் மனைவியை பார்த்தான்.

“என்ன சமர், அசோக்குக்கு நல்ல பொருத்தம் இல்லை அந்த பொண்ணு?” என கணவனையும் பேச்சுக்குள் இழுத்தாள் ஸ்ருதி.

சமரன் பதில் சொல்வதற்குள், “என் ஃபிரெண்ட் கூப்பிடுறா க்கா, இப்போ வந்திடுறேன்” என சொல்லி அவசரமாக எழுந்து சென்று விட்டாள் அனன்யா.

“அசோக்குக்கு எந்த பொண்ண பார்த்திருக்காங்க ஸ்ருதி, ஏன் பொய் பேசுற?” என கடிந்து கொண்டான் சமர்.

“அசோக்குக்கு பார்க்கிற வரன் எதுவும் சரியா அமைய மாட்டேங்குது. அவனும் தானா எதையும் அமைச்சுக்க மாட்டான். அனன்யா அசோக்கை விரும்புறான்னா அவளை விட நல்ல பொண்ணு அவனுக்கு கிடைக்க மாட்டா. ஆனா மாமா ஏதேதோ பேசி… ப்ச்… இந்த அசோக் இருக்கானே… ஹ்ம்ம்… என்னத்த சொல்ல, அதான் நானே ஏதாவது செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள்.

அவள் என்ன சொல்ல வருகிறாள் என சமரனுக்கு சுத்தமாக எதுவும் புரியவில்லை. ‘இரு புருவங்களையும் உயர்த்தி என்னடி சொல்ல வருகிறாய்?’ என்பது போல பார்த்தான்.

“உன் லவ்க்கே ஒன்னும் மெனெக்கெடல நீ, இந்த சப்ஜெக்ட்ல நீ அசோக்லாம் வீக்’கா இருக்கீங்க” என்றவள் சற்று தள்ளி நின்றிருந்த அசோக்கை கை காட்டி தன்னிடம் அழைத்தாள்.

அசோக் வரவும், “பையன் வீட்ல பொண்ணோட தங்கச்சிக்கு ஏதோ முறை செய்யணுமாம், இந்த நேரம் பார்த்து எங்க போனான்னு தெரியலை அனன்யா. சீக்கிரம் போய் கூட்டிட்டு வா” என்றாள்.

“பொண்ணோட தங்கச்சிக்கு என்ன முறை? என்கிட்ட யாரும் எதுவும் சொல்லையே” என அசோக் சொல்ல, மனைவியை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான் சமர்.

“முறைன்னா முறை! போ, அவளை கூட்டிட்டு வா” என் கட்டளை போல அவள் சொல்ல, “இவ அதிகாரம் ரொம்ப ஓவரா போகுதுடா, பார்த்து இருந்துக்க சொல்லு” என நண்பனிடம் சொல்லிக் கொண்டே அனன்யாவை தேடிக் கொண்டு சென்றான் அசோக்.

“ம்ம்… இப்போ என்ன பெருசா நடக்க போகுது?” என கிண்டலாக கேட்டான் சமர்.

தோள்களை குலுக்கி உதடுகள் பிதுக்கியவள், “என்ன நடக்கும்னு எனக்கும் தெரியாது, ஆனா ஏதாவது நடக்கும்” என்றாள்.