வீராவேசமாக பேசிய சௌந்தர், செண்பகத்தை அழைத்துக் கொண்டு, வந்த காரிலேயே கிளம்பி விட்டார்.
தாயையும், தங்கையின் கணவராகிப்போன சௌந்தரையும் அமைதிப்படுத்த முயன்று, தமிழரசு தோற்றுப் போனது தான் மிச்சம்.
‘சரியான காட்டுக்கூட்டம். இவங்ககிட்ட எப்பிடி டி இத்தனை நாளும் தாக்குபிடிச்ச.” காரில் அழுதபடியே தன்னோடு வந்த மனைவியிடம் காய்ந்த சௌந்தர், அந்த காரிலேயே சென்னையை வந்தடைந்தார்.
அங்கிருந்து சென்னைக்கு வரும் நேரத்திற்குள்ளாக, நண்பர்கள் மூலம் வாடகை வீடொன்றையும் பிடித்து விட்ட சௌந்தர், நேரடியாக அங்கு வந்துதான் இறங்கினார்.
அன்றிலிருந்து புதிய வாழ்க்கை வாழத் தொடங்கினார்கள் இருவரும். அதற்கு சௌந்தரின் எம்பிஏ படிப்பு அவர்களுக்கு துணை நின்றது.
ஆம்… முதலாளியாக உலாவந்தவர், மனைவிக்காக தொழிலாளியாக மாறி, ஒரு கம்பெனியில் வேலைக்கு சென்றார்.
தங்களை தள்ளிவைத்தவர்கள் முன்னால் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற முனைப்போடு, சௌந்தர் காரியத்தில் கண்ணாக இருக்க, காலம் அவர்களை திருமண வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.
செண்பகம் தாய்மை அடைந்தார். ஏற்கனவே மனைவியை உள்ளங்கையில் தாங்கிய சௌந்தர், இப்போது கண்ணுக்குள் வைத்து பாதுகாத்தார்.
வீட்டு வேலை செய்ய, தான் ஆஃபீஸ் விட்டு வரும் வரை மனைவியோடு கூட இருக்க, என்று நடுத்தர வயது பெண்மணியை வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.
நல்ல வேலையில் இருந்ததால் பணம் அவருக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை.
மாதங்கள் செல்லச்செல்ல கணவனின் அன்பையும் ஆதரவையும் மீறி, தாயின் அரவணைப்புக்காக ஏங்கத் தொடங்கினார் செண்பகம்.
இளமை முறுக்கில் கணவனோடு சேர்ந்து இரண்டுபக்க உறவுகளையும் தவிர்த்து வந்தவருக்கு, “என் தாயை மனம் தேடுகிறது” என்று கணவனிடம் சொல்ல வெட்கமாக இருக்க, மனதிற்குள் மறைக்க தொடங்கினார்.
மூடி போட்டு மறைத்தாலும் புகை வெளியே வந்து தானே தீரும். அது போல செண்பகமும் தன் ஆசையை அடக்க முடியாமல் கணவரிடம் ஒருநாள் சொல்ல, சொன்ன இடம் தான், டெலிவரிக்காக அவரை சேர்க்கப்பட்ட மருத்துவமனையாகிப் போனது.
மனைவியின் ஆசையை நிறைவேற்ற முயன்றவருக்கும், அது மனைவியின் கடைசி ஆசை என்றும் தெரியாமல் போனது.
“உங்கள் மகளை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். அவள் உங்களை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாள்.”
பஞ்சவர்ணத்திற்கு ரத்தின சுருக்கமாக தகவல் சொல்லி, மருத்துவமனை இருக்குமிடத்தையும் போன் மூலம் சௌந்தர் சொல்ல, மகள் மீது இருந்த அத்தனை கோபங்களையும் உதறிதள்ளிய பஞ்சவர்ணம், மருத்துவமனைக்கு மகனோடு வந்து சேர்ந்திருந்தார்.
ஆனால், திடீரென்று பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலில், குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே, செண்பகத்தின் உயிர்ப்பறவை யாருக்காகவும் காத்திருக்காமல் பறந்தே விட்டது.
எப்போதுமே பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு தானே. எத்தனை தான் மருத்துவ வசதி முன்னேறியிருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆயிரத்தில் ஒன்று இப்படி நடந்து விடுகிறது தானே.
அந்த ஆயிரத்தில் ஒன்று செண்பகமாகிப் போனது தான் உட்சபட்ச சோகமாகிப் போனது.
தங்கள் உலகிற்கு வரப்போகும் சிறிய உயிரை வரவேற்க ஆவலாக இருந்த சௌந்தரை, பெரிய உயிர் உனக்கினி இல்லை என்ற தகவல் நிலைகுலைய வைத்தது.
யாருமே எதிர்பார்க்காத சூழ்நிலை. அதை எப்படி கையாள்வது என்று கூட தெரியாமல் அனைவரும் உறைந்து போய் நிற்க, குழந்தையை டவலில் சுற்றி, அங்கிருந்த பஞ்சவர்ணத்தின் கையில் கொடுத்தார்கள்.
பெண்குழந்தை… ஏதோ தன் மகளே மறுபிறவி எடுத்து தன் கைகளுக்குள் வந்ததுபோல, தன்னோடு சேர்த்து பொதிந்து கொண்டு பஞ்சவர்ணம் வெடித்து அழுதார்.
“கல்யாணம் செய்து என் தங்கச்சியை கொன்னுட்டியேடா பாவி” என்று சௌந்தரை அடிக்கவே பாய்ந்து விட்டார் தமிழரசு.
தமிழரசுவின் வார்த்தைகள் சரியாக, சௌந்தரின் இதயத்தைத் தைத்தது. கூடவே, ‘அப்படித்தானோ?’ என்ற கேள்வி அவர் மனதை அரிக்கத் தொடங்கியது.
ஆனால் என்ன முயன்றும் மனைவியின் உடலை மட்டும் தமிழரசுவிடம் ஒப்படைக்க மறுத்து, தன் சொந்த ஊரான திருமங்கலத்திற்கே கொண்டு சென்றார்.
வேறுவழியில்லாமல் தமிழரசுவும் பஞ்சவர்ணமும் குழந்தையோடு அங்கே சென்றார்கள்.
உயிரோடு இருக்கும் போது, நீ வேண்டாம் என்று செண்பகத்தை சாதாரணமாக உதற முடிந்தவர்களால், உயிர் அற்ற அந்த உடலை அத்தனை எளிதாக உதற முடியவில்லை.
அங்கே திருமங்கலத்தில், சௌந்தரின் அம்மாவுக்கு, மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்ததால், வேலைக்காரர்கள் தவிர வீட்டில் யாருமில்லை.
தங்கை மீனாட்சியோ, இராணுவத்தில் பணிபுரிந்த கணவனோடு டெல்லியில் இருந்தார். அப்போது அஸ்வினி அவர் வயிற்றில் நிறைமாத குழந்தை.
யாரையும் எதிர்பார்க்காமல் மனைவியின் நல்லடக்கத்தை சௌந்தர் முடித்தார். அதன் பிறகு நிமிடமும் தாமதிக்காமல் குழந்தையோடு கிளம்பினார்கள் பஞ்சவர்ணமும், தழிழரசுவும்.
மனைவியின் உயிரற்ற உடம்பிற்கு உரிமைப் போராட்டம் நடத்திய சௌந்தர், தனக்கு உரிமையான குழந்தையை பஞ்சவர்ணம் கொண்டு செல்லும் போது, பேசாது வாய்மூடி மௌனியாக இருந்தார்.
ஒருவேளை, வீட்டில் பெண்கள் இருந்திருந்தால், குழந்தையைப் பற்றி ஏதும் பேசியிருப்பார்களோ என்னவோ?
பேசப்படவேண்டிய இடத்தில் பேசப்படாத வார்த்தைகள், எந்த பலனும் தருவதில்லை என்பதை புரிந்து கொள்ளும் காலமும் வரத்தான் செய்தது சௌந்தருக்கு.
கைக்குழந்தையுடன் வந்த பஞ்சவர்ணம், முதலில் தீப்பெட்டி தொழிற்சாலையை லீசுக்கு கொடுத்தார். நாளெல்லாம் பேத்தியோடே தன் பொழுதைக் கழித்தவர், இனி தன் வாழ்க்கையின் சக்தியே அந்த குழந்தை தான் என்பது போல ஷக்தி ப்ரியா என்று பெயரையும் வைத்தார்.
காலம் யாருக்கும் காத்திருக்காமல் அதன் போக்கில் உருண்டோடியது. ஷக்தி ப்ரியா தன் பொக்கைவாய் சிரிப்பால் தாய், மகன் இருவர் வாழ்விலும் ஆனந்த யாழை மீட்ட ஆரம்பித்தாள்.
குழந்தைக்கு ஏழு மாதம் இருக்கும் போது ஒரு நாள், “கையில இருக்குற பிள்ளையை வளத்து ஆளாக்குனா போதாதா, கல்யாணம் எல்லாம் பண்ணனுமா என்ன?”
நண்பனோடு பேசிக்கொண்டிருந்த தமிழரசுவின் வார்த்தைகளில் உஷாராகி, அவருக்கு திருமணத்திற்கு பெண் தேட ஆரம்பித்தார் பஞ்சவர்ணம்.
விஷயம் தெரிந்து, முதலில் திருமணத்தை மறுத்த தமிழரசு, அன்னையின் பிடிவாதத்தால், “ஷக்தி நம்ம கூட தான் எப்பவும் இருப்பா, இந்த விஷயத்தை சொல்லியே பெண் தேடுங்க” என்று சம்மதம் கொடுத்தார்.
குழந்தையை இவர்கள் தங்களோடு கொண்டு வந்த இத்தனை நாட்களில், ஒருமுறை கூட சௌந்தர் நேரில் குழந்தையைப் பார்க்க வரவேயில்லை.
அட…போனில் கூட ஒரு விசாரிப்பில்லை. சௌந்தரின் நடவடிக்கையே தமிழரசுவை அப்படி பேசவைத்தது.
தமிழரசுவின் நிபந்தனை பெண்ணைப் பெற்ற பல பெற்றவர்களுக்கு உவப்பானதாக இல்லாமல் போகவே, அவரது திருமணமும் தள்ளிக்கொண்டே சென்றது.
கடைசியில் கலைவாணியைப் பெற்றவர் தமிழரசுவிற்கு பெண்தர முன்வர, திருமணமும் முடிந்தது.
கலைவாணியோ, தன் தகப்பனின் இரண்டாவது மனைவியின் கைகளுக்குள் அகப்பட்டு, பெரும் கொடுமைகளை அனுபவித்த பெண்.
அவருக்கு தன்னைப்போலவே தாயை இழந்த ஷக்தியைக் காணும் போது, தான் தாயில்லாமல் அனுபவித்த கஷ்டங்கள் எதுவும், அந்த பிஞ்சை அண்ட விடாமல் வளர்த்து ஆளாக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தான் முதலில் தோன்றியது.
அதற்கு தோதாக பதினோரு மாதமான குழந்தை ஷக்தியும், தன்னை முதன்முறையாக தூக்கிய கலைவாணியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, தன் பொக்கைவாய் திறந்து மழலையில் “அம்மா” என்றழைக்க, அதன்பின் நிஜமான அம்மாவாகவே மாறிப்போனார் கலைவாணி.
ஆம்… எப்படி, எதனால் என்றெல்லாம் தெரியாது, அந்த குழந்தைக்கும் கலைவாணிக்கிடையிலும் அப்படி ஒரு பிணைப்பு சாத்தியமாகி இருந்தது.
தன்னை அம்மாவென்று அழைத்த ஷக்திக்கு, கணவர் தமிழரசுவை அப்பா என்று சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார் கலைவாணி.
தன் செயலை யோசனையோடு பார்த்த மாமியாரிடம், “அம்மா இல்லைங்குறதை விட, அப்பா இருந்தும் தனக்கு இல்லைங்குற விஷயம் ஷக்திக்கு தெரியவரும் போது, ரொம்ப கஷ்டமா இருக்கும் த்த” என்று சொன்னார்.
“திடீர்னு பெத்தவன் வந்து நின்னா?”
“அது நடக்கும் போது பாத்துக்கலாம் த்த” என்று சொன்ன கலைவாணிக்கு, ஷக்தியின் மூன்று வயதில் வந்து நின்ற சௌந்தர், அதுவும் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மனைவியோடு, தன் மகளைக் கேட்டு வந்து நின்ற சௌந்தரைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது.
ஆம்… மனைவி செண்பகத்தின் இறுதிக் காரியங்களை முடித்துவிட்டு கிளம்பி, கால்போன போக்கில் மனம்போல நாடோடி வாழ்க்கை வாழ ஆரம்பித்திருந்த சௌந்தரை,
“அம்மா இறக்கும் தருவாயில் இருக்கிறார். ஒரு மகனாக வந்து உன் கடமையை செய்து விட்டு போ” என்று தகப்பனிடமிருந்து வந்திருந்த தகவல், மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் வீட்டுக்கு இழுத்து வந்திருந்தது.
வந்தவரின் கையில், என் கடைசி ஆசை என்று கூறி, அவருக்காகவே காத்திருந்த தன் தம்பி மகள் கௌரியை ஒப்படைத்த சௌந்தரின் அம்மா, தன் கடமை முடிந்தது என்பது போல கண்ணை மூடிவிட்டார்.
சௌந்தரோ அன்னையின் செயலில் முதலில் திகைத்தாலும், அவரின் காரியங்கள் அத்தனையையும் முடித்த கையோடு, மனைவியை அழைத்து கொண்டு தமிழரசுவின் வீட்டில் வந்து நின்றார்.
சும்மா ஒன்றும் வரவில்லை. தன் குழந்தையை கேட்டு வந்து நின்றார்.
அன்று மருத்துவமனையில் ரோஜா பூவிற்கு கை, கால் முளைத்ததை போலிருந்த குழந்தையைப் பார்த்த தகப்பனுக்கு, ‘தனியனாக எப்படி இந்த குழந்தையை வளர்க்க முடியும்?’ என்ற பயம் தான், பாசத்தைவிட முன் வந்து நின்றது.
அதை நேரடியாக பஞ்சவர்ணத்திடம் சொல்லியிருக்கலாம், நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகளை வந்து பார்த்து, நான் உன் தகப்பன் என்ற உணர்வை குழந்தைக்கு ஊட்டியிருந்திருக்கலாம்.
அதையெல்லாம் செய்யத் தவறிவிட்டு, தன்வாழ்வில் இன்னொரு பெண் வந்ததும், தன் பயம் உதறி மகளுக்காக வந்து நின்றார்.
சௌந்தர் வரும் போது, கலைவாணி ஷக்தியோடு முன்னறையில் உட்கார்ந்திருந்தார். பஞ்சவர்ணம் வீட்டில் இல்லை.
வந்தவர், தமிழரசுவை விசாரிக்கவும், அவரை வரவேற்று வீட்டுக்குள் அழைத்தபடியே, அறையினுள் ஏதோ செய்து கொண்டிருந்த கணவனை கலைவாணி அழைத்தார். வேற்று மனிதர்களைக் கண்ட ஷக்தி, “ம்மா…” என்று சிணுக்கியவாறே அவருடன் ஒட்டிக்கொண்டாள்.
தாய் அறியாத சூலா? தகப்பன் அறியாத பிள்ளையா?
முதல் பார்வையிலேயே ஷக்தியை தன் குழந்தை என்று உணர்ந்து கொள்ள முடிந்தது சௌந்தரால்.
கலைவாணியை அம்மா என்று மகள் அழைத்ததை பொறுத்துக்கொண்ட மனிதரால், உள்ளே இருந்து வந்த தமிழரசுவை அப்பா என்று அழைத்து கட்டிக் கொண்டதை மட்டும் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
‘உடையவன் நானிருக்க, என் பிள்ளையை இன்னொருவர் உரிமை கொண்டாடுவதா?’ என்ற எண்ணம் மனிதரிடம் அந்த நொடியில் தோன்ற, உரிமையோடு பிள்ளையைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டார்.
வந்திருந்தவரைக் கண்டதும் விறைத்துப்போன கணவனின் உடல்மொழியைக் கண்ட கலைவாணி, கேள்வியாக கணவரைப் பார்க்க, பதிலேதும் சொல்லாமல் நின்றார் தமிழரசு.
“நான் சௌந்தர், இது என் மனைவி கௌரி. இப்போ நான் யார்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். இவ்வளவு நாளும் எம்பிள்ளையை வளத்ததுக்கு நன்றி. இனி எம்பிள்ளை எங்கிட்டயே வளரட்டும்.”
கலைவாணியிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட சௌந்தர், தான் வந்த காரியத்தையும் கூறினார்.
அவ்வளவு தான்… பதறிப்போனார் கலைவாணி. அதற்கு மேலான பதட்டத்தோடும், லேசான அழுகையோடும் சௌந்தரின் கைகளிலிருந்து இறங்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் ஷக்தி.
“பயப்படாத கண்ணா… நான் வேற யாருமில்ல, உன் அப்பா டா.” தழுதழுத்தவாரே மகளிடம் சௌந்தர் சொல்ல,
அடுத்த நொடி தன் பிஞ்சுக் கரங்களால் சப்பென்று அவர் முகத்தில் அறைந்திருந்த ஷக்தி, “நீ என் அப்பா இல்ல” என்று மழலைத் தமிழில் தெளிவாக சொல்லி, தமிழரசுவை நோக்கி கையை நீட்டி, “அப்பா…” என்று உச்சஸ்தாயியில் அழ ஆரம்பித்தாள்.
ஷக்தியின் அழுகையில், இவ்வளவு நேரமும் உறைந்து போய் நின்றிருந்த தமிழரசு என்னும் சிலைக்கு உயிர் வந்தது.
அதற்கு மேலும் தன் மகளை தவிக்கவிடாமல், சௌந்தரின் கைகளிலிருந்து பிரித்தெடுத்து, மனைவியிடம் கொடுத்தார் தமிழரசு. கலைவாணியின் கண்களிலோ, “யாருக்காகவும் என் மகளை விட்டுதர முடியாது” என்ற தகவல் இருந்தது.
அதை சரியாக படித்த தமிழரசு, “என் தங்கச்சி இடத்துல இன்னொருத்தரை கொண்டுவர முடிஞ்ச உங்களால, ஷக்திக்கு பதிலா இன்னொரு குழந்தையையும் பெத்துக்க முடியுமே? அப்புறம் எதுக்கு இங்க வந்து நிக்குறீங்க? கிளம்புங்க” என்று உறுதியாகச் சொன்னார்.
“நீ என் அப்பா இல்லை” என்ற மழலைக் குரலிலேயே மரித்துப் போயிருந்த சௌந்தர், மறுபேச்சின்றி கிளம்பியிருந்தார்.
‘இப்போது அமைதியாக கிளம்பி போனவர், மறுபடியும் கண்டிப்பாக திரும்ப வருவார்’ என்ற எண்ணம் தோன்ற, ஏற்கனவே பணி இடமாறுதல் உறுதியாகி இருந்த தமிழரசோடு, ஒரு நாலைந்து நாட்களிலேயே, அந்த குடும்பமே ஊரை விட்டு கிளம்பியிருந்தது…