அத்தியாயம் 08

கோவில்பட்டிக்கு அருகில் உள்ள கிராமம் மலையான்குளம். பெயரில் மட்டுமே குளத்தைக் கொண்ட ஊர்.

அப்படியே குளம் இருந்திருந்தாலும், பாசனத்திற்கு தண்ணீர் அதில் இருந்திருக்குமா? என்பது கேள்விக்குறி தான். அத்தனை வறண்ட வானிலையைக் கொண்ட ஊர்.

வானம் பார்த்த பூமியில், விவசாயம் எப்போதுமே கைகொடுக்காத தொழிலாகத் தான் அந்த ஊர் மக்களுக்கு இருந்து வந்திருக்கிறது.

அதனால் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலும், சிறிய அளவில் பட்டாசு தொழிற்சாலையுமே அந்த ஊர் மக்களின் பொருளாதாரத் தேவையை நிறைவேற்றும் அடிப்படை தொழிலாக இருந்தது.

அந்த ஊரை சொந்த ஊராக கொண்டவர்கள் தான், பஞ்சவர்ணம், ரங்கசாமி தம்பதியர்.

 தமிழரசு, செண்பகம் இருவரும் அவர்களுடைய குலக்கொழுந்துகள்.

பெரிய படிப்பறிவோ, குடும்ப பின்னணியோ இல்லாத ரங்கசாமி தம்பதியர், தீப்பெட்டி தொழிற்சாலைக்கு தினக்கூலிகளாகச் சென்றே தங்கள் குடும்பத்தை நடத்தினார்கள்.

ஆனால் தொழிற்சாலைக்கு வேலைக்கு வரும் மற்றவர்கள் போலல்லாது, தங்கள் பிள்ளைகளை கனவுகளோடு பள்ளிக்கு அனுப்பினார்கள்.

அதிலும் பஞ்சவர்ணம் தன்னோடு வேலைக்கு வரும் பெண்கள், தங்கள் பிள்ளைகளையும் வேலைக்கு அழைத்து வரும் போதெல்லாம், “நம்ம பொழைப்பு தான் இப்படி ஆகிப்போச்சு, நம்ம பிள்ளைங்களாவது அவங்க வாழ்க்கையில் நல்லாயிருக்கணும். அதுக்கு, அவங்களை படிக்க வைங்க” என்று சிறு பிரசங்கமே நடத்துவார்.

ஆனால், எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான். யாரும் கண்டுகொள்வதில்லை. அதற்காக பஞ்சவர்ணம் தன் கருத்தைச் சொல்லுவதை நிறுத்துவதும் இல்லை.

நாட்களும் அதன் போக்கில் நகர, உழைத்து உழைத்து குருவியாய் சேமித்த காசில், தம்பதியர் சொந்தமாக ஒரு சின்ன தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை ஆரம்பித்தார்கள்.

எல்லாம் நன்றாகப் போய் கொண்டிருக்கிறது என்று நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்த காலத்தில், ஓர் நாள் இரவு ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக, அந்த சின்ன யூனிட் தீயின் கொடூர நாக்குக்கு இரையாகிப் போயிற்று.

அவ்வளவு தான்… தன் இத்தனை வருட உழைப்பையும் நெருப்பு வாரிச் சுருட்டிக் கொண்டு போய்விட்டதை தாங்க முடியாத ரங்கசாமி, படுத்தவர், படுத்தவர் தான். மறுநாள் காலை எழும்பவேயில்லை.

தங்கள் மொத்த சேமிப்பையும், கணவரையும் ஒருசேர இழந்த பஞ்சவர்ணம் நிலைகுலைந்து போனார். ஆனால் நம்பிக்கை இழந்து போகவில்லை.

அப்பாவின் மறைவின் போது பள்ளி இறுதி படிப்பைக் கூட முடிக்காத தமிழரசு, பொறுப்பான மகனாக, தான் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவதாக சொன்ன பிறகும்,

“வேண்டாம்யா, இந்த கரியில கிடந்து புரளுற பொழப்பு உனக்கு வேண்டாம்யா. அது எங்களோட போகட்டும். நீ எனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சா, படிச்சு நல்ல உசந்த வேலைக்கு போயிடு ராசா” என்று சொல்லி தடுத்து விட்டார் பஞ்சவர்ணம்.

தன் சோகத்தை ஒதுக்கி வைத்து, பிள்ளைகளுக்காக மறுபடியும் வெளியே வேலைக்கு சென்றார் அந்த பெண்மணி.

பிள்ளைகளில் ஆண், பெண் என்ற பாகுபாடு அந்த கிராமத்து மனுஷியிடம் இல்லவேயில்லை. படிப்பைப் பற்றி மகனுக்கு என்ன சொன்னாரோ, அதே தான் மகள் செண்பகத்திற்கும் சொன்னார்.

வீட்டு நிலவரம் உணர்ந்து பிள்ளைகளும் பொறுப்பாக படித்தார்கள். தமிழரசு விடுமுறை தினங்களில் வேலைக்கு சென்று தாய்க்கு உதவியாக இருந்தார்.

இந்த விஷயத்தில் எவ்வளவு தான் அம்மா சொன்னாலும் கண்டுகொள்ளவே மாட்டார்.

 எரிந்து போன யூனிட்டுக்கு கிடைத்த இன்ஸ்ஸூரன்ஸ் பணத்தோடு, மகளிர் தொழில் முனைவோருக்காக கிடைத்த கடன் உதவித் தொகையையும் சேர்த்து, மறுபடியும் தீப்பெட்டி தயார் செய்யும் சிறிய யூனிட்டை விரைவிலேயே தொடங்கியும் விட்டார் பஞ்சவர்ணம்.

நாட்கள் அதன் போக்கில் இறக்கைக் கட்டிக்கொண்டு பறக்க, தமிழரசு வணிகவியலில் தனது மேற்படிப்பையும், செண்பகம் தன் பள்ளி இறுதி படிப்பையும் முடித்திருந்தார்கள்.

அடுத்து கல்லூரியில் செண்பகத்தை சேர்க்க வேண்டும் என்ற சூழ்நிலையில், மகளின் விருப்பப்படியே மதுரையில் பிரபலமான கல்லூரி ஒன்றில், ஆங்கில இலக்கியப் பிரிவில் சேர்த்து விட்டிருந்தார்கள்.

தங்கள் ஊரிலிருந்து கிட்டதட்ட நூறு கிலோமீட்டர் தொலைவிலிருந்த மதுரைக்கு, தினமும் வீட்டிலிருந்து சென்று வருவது சாத்தியமில்லாததால், ஹாஸ்டலில் தங்கியிருந்தார் செண்பகம்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் அர்த்தமில்லாத விமர்சனத்திற்கு நடுவே தான் அத்தனையும் நடந்தது.

ஆம்…’பெண்பிள்ளைகளை படிக்கவைப்பதே தேவையில்லாத வேலை, அவளை படிக்க வைக்க செலவழிக்கும் காசில், ஒருவன் கையில் பிடித்து கொடுத்து விடலாம்’ என்ற எண்ணம் கொண்ட அப்பாவி கிராமத்து மனிதர்கள் நிறைந்த ஊரில், படிப்புக்கென்று வெளியூரில் தங்கிய செண்பகத்தின் செயல் விமர்சிக்கப்பட்டது.

என்ன செய்வது? கல்யாணம் செய்து பிள்ளை பெற்றுக்கொள்வது ஒன்றே, பெண்ணாய் பிறந்தவளின் தலையாய கடமை என்ற எண்ணத்தில், காலங்காலமாக ஊறிப்போன மக்களின் மனநிலை அப்படித்தான் இருக்கும்.

இதெற்கெல்லாம் அஞ்சாத பஞ்சவர்ணத்தின் பதில் வேறாகத்தான் இருந்தது.

“ஒரு பெண்பிள்ளையை படிக்கவைக்கிறது ஒரு தலைமுறையையே படிக்க வைக்குறதுக்கு சமம். அதனால என்னைப் போல நீங்களும் உங்க பிள்ளைகளைப் படிக்க வைங்க” என்று தொலைநோக்கு சிந்தனையோடு சொல்லுவார்.

கூடவே, ‘இப்படி பேசுறவங்க முன்னாடி எம்புள்ள படிச்சு ஒரு டீச்சர் வேலையில உக்காரணும், அதப்பாத்து இந்த ஊரே மூக்கு மேல விரலை வச்சு அசந்து போகணும்’ என்று ஆசையையும் வளர்த்துக் கொண்டார்.

செண்பகமும் இளநிலை பட்டம் முடித்து, அதே பிரிவில் முதுநிலை படிக்க ஆசைப்பட, ஆர்வத்தோடு படிக்க வைத்தார் பஞ்சவர்ணம்.

அந்த நேரத்தில் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலியில் ஒரு வங்கியில் வேலை பார்க்க ஆரம்பித்திருந்தார் தமிழரசு.

விடுமுறை நாட்களில் விடுதியிலிருந்து வீட்டுக்கு வரும் செண்பகத்தின் நாகரீகமான தோற்றமும், நாசூக்கான பேச்சும், சில பெற்றவர்களின் மனதில் தங்கள் பெண் பிள்ளைகளையும் படிக்கவைத்தால் என்ன என்ற ஆசையைத் தூண்டியது.

இப்படியே சென்று கொண்டிருந்த நாட்களில் தான், மதுரையில் ஒரு வங்கியில் சௌந்தர், செண்பகம் சந்திப்பு நிகழ்ந்தது.

ஒருநாள், வங்கியிலிருந்து ஒரு பெரும் தொகையை எடுத்துக்கொண்டு, தன்னுடைய காரை நோக்கி நடந்தார் சௌந்தர்.

அவரை எதிர்பார்த்து இருசக்கர வாகனத்தில் காத்துக் கொண்டு நின்றிருந்த இருவரில் ஒருவன், சௌந்தரின் கையிலிருந்த பணப்பையைத் தட்டிப் பறிக்க முயல, மற்றொருவனோ வண்டியை வேகமாக அங்கிருந்து கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தான்.

சௌந்தரின் பின்னால் வங்கியிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த செண்பகம், நொடியில் நடக்கப்போவதை கணித்து, சௌந்தரின் கையைப் பற்றி தன்னை நோக்கி வேகமாக இழுத்தாள்.

இழுத்த இழுப்பில் நிலைதடுமாறி சௌந்தர் செண்பகத்தின் மீது விழ, அங்கே பணம் களவு போவது தடுக்கப்பட்டு, மனம் களவு போனது.

தனக்காக வீட்டில் தாய்மாமன் மகள் கௌரி காத்துக் கொண்டிருக்க, அவரிடம் லயிக்காத சௌந்தரின் மனது, செண்பகத்திடம் காதலாய் கட்டுண்டு கிடந்தது.

அதன் பிறகு வந்த நாட்களில் இருவரின் காதலும் வளர்பிறை நிலவாக வளர்ந்து, முழுநிலவாக பிரகாசித்தது.

இது எதுவும் தெரியாமலேயே, நித்த நோயாளியான சௌந்தரின் அம்மாவின் உடல்நிலையை முன்னிட்டு, கௌரியோடு அவரின் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்கள் சௌந்தரின் வீட்டினர்.

வேறு வழியே இல்லாமல், தங்கள் காதலை பெற்றவர்களிடம் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு சௌந்தர் தள்ளப்பட, தன் மனதையும், காதலையும் மறைக்காமல் பெற்றவரிடம் சொல்லிவிட்டார் சௌந்தர்.

அவ்வளவு தான்… அங்கே ஒரு ப்ரளயமே வெடித்தது. வீட்டில் மாமன் மகள் அவருக்காக காத்திருக்க, அவரின் மனம் புல்மேயப் போய்விட்டது என்று விமர்சனம் செய்யப்பட்டது.

கௌரியை திருமணம் செய்யவில்லை என்றால் சொத்து எதுவும் உனக்கில்லை என்று கூட மிரட்டப்பட்டார் சௌந்தர்.

அனைத்தையும் துச்சமென கடந்த சௌந்தர், செண்பகத்திடம், “இப்போதே திருமணம் செய்து கொள்வோம்” என்று வந்து நிற்க, “அம்மா, அண்ணனுக்கு தெரியாமல் முடியாது” என்று மறுத்தார் செண்பகம்.

தங்கள் காதல் விஷயத்தை, தான் வீட்டில் சொல்லிவிட்டதையும், அதற்கு கிடைத்த மறுப்பையும் சொல்லியவர், “உன் வீட்டில் சொன்னால் மட்டும், நம் காதலை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்க போவதில்லை. மாறாக உன்னை கல்லூரிக்கு அனுப்பாமல் வேண்டுமென்றால் இருக்கலாம்” என்றார்.

‘கல்லூரிக்கு போகவில்லை என்றால் சௌந்தரைப் பார்ப்பது எப்படி?’ குழம்பிப் போன செண்பகத்தின் ஆசை கொண்ட மனது, முடிவில் சௌந்தரின் திட்டத்துக்கு சம்மதித்தது.

 ஒரு சுபயோக சுபதினத்தில் நண்பர்கள் புடைசூழ, சௌந்தர், செண்பகம் திருமணம் ரெஜிஸ்ட்டர் ஆஃபிஸில் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு, சௌந்தர் முதலில் தங்கள் வீட்டுக்கு மனைவி செண்பகத்தோடு போனார். அவர்களை வீட்டுக்குள் நுழையக்கூட விடவில்லை சௌந்தரின் அப்பா.

எதிர்பார்த்தது தானே என்று, அதைப்பற்றி கவலைப்படாத சௌந்தர், மனைவியோடு அவள் வீட்டுக்கு வாடகைக் காரொன்றில் வந்திறங்க, திகைத்துப் போனார் பஞ்சவர்ணம்.

ஆம்… கல்லூரியில் படிக்க அனுப்பிய மகள் மாலையும் கழுத்துமாக மணாளனோடு வந்து நின்றால் அதிர்ச்சியாகத் தானே இருக்கும்.

அதுவும் பஞ்சவர்ணத்தைப் போல ஒரு அம்மாவுக்கு, தன் மகளின் செயல் ஆயிரம் மடங்கு அதிர்ச்சியாக இருந்தது.

 அவளைப்பற்றி, தான் என்னவெல்லாமோ கனவு கண்டுகொண்டிருக்க, சொல்லாமல் கொள்ளாமல் செண்பகம் இப்படி கல்யாணத்தை செய்து கொண்டு வந்ததை, மகள் தனக்கிழைத்த நம்பிக்கை துரோகமாகவே நினைத்தார் பஞ்சவர்ணம்.

தான், பெண்ணை படிக்க வையுங்கள் என்று அறிவுரை சொன்ன அத்தனை பேரும், தன் முன்னால் கைகொட்டி சிரிப்பது போல தோன்றியது பஞ்சவர்ணத்திற்கு.

உண்மையில், அதுதான் நடக்கவும் செய்தது. மாலையும் கழுத்துமாக, வீட்டு வாசலில் வந்திறங்கிய செண்பகத்தைப் பார்த்து, அக்கம் பக்கத்தினர் கூடிவிட்டதுமில்லாமல்,

“ம்ஹூம்… இப்படி தானாவே மாப்பிள்ளை பிடிச்சுக்குறதுக்காகத் தான், பொட்டப்பிள்ளையை படிக்க வைக்க சொன்னியா பஞ்சவர்ணம்? நீயும் எங்களைப் போல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல், தீக்குச்சி அடுக்க உம்மவளையும் அனுப்பியிருந்தியனா, இப்போ இப்படி ஒரு காரியத்தை பண்ணிருக்க மாட்டால்ல” என்று நையாண்டி பேசினர்.

பஞ்சவர்ணத்தின் நெஞ்சில் கனன்ற கோபம், ஏமாற்றம் அத்தனையையும், இத்தகைய பேச்சுக்கள் இன்னும் அதிகமாக விசிறிவிட்டது.

“இன்னைலயிருந்து உனக்கும் எங்களுக்குமான உறவு அத்துப்போச்சி, இனி நீ யாரோ, நாங்க யாரோ. இதையும் மீறி வீட்டுக்குள்ள காலெடுத்து வச்சியன்னா, காலை முறிச்சிடுவேன்.”

தன் ஒட்டுமொத்த கோபத்தையும் பஞ்சவர்ணம் தன் வார்த்தைகளில் கொட்டினார். இதுவரைக்கும் இப்படி ஒரு சூழ்நிலைக்கு பழக்கப்படாத சௌந்தருக்கு அது அசிங்கமாக இருந்தது.

“நீங்க என்ன சொல்லுறது? நான் சொல்லுறேன், நீங்க யாருமே எங்களுக்கு வேண்டாம். உங்க துணையில்லாம நாங்க வாழ்ந்து காட்டுறோமா இல்லையான்னு பாருங்க.”