அத்தியாயம் 07
“ஓ… மை காட், இது நானா? என்னாலயே நம்ப முடியலையே!”
மீனாட்சியின் அறையை விட்டு தோழியரோடு வெளியே வந்திருந்த ஷக்தி, அந்த இரண்டாம் கட்டிலிருந்த ஆளுயர பெல்ஜியம் கண்ணாடியில் தன்னைப் பார்த்து ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தாள்.
ஆமாம்… பூ, பொட்டு, நகை என்று அணிந்து, அழகின் மறுஉருவாக, உருமாறி நின்றாள் ஷக்தி.
“நான் மட்டும் பையனா பொறந்திருந்தா, இந்த நிமிஷமே தூக்கிட்டு போய் உன்னை கல்யாணம் பண்ணிருப்பேன் ஷக்தி” முதல்முறையாக தோழியை அந்த உடையில் கண்ட அஸ்வினி கண்ணடித்தபடி சொன்னாள்.
“கவலப்படாத, அதுக்கு தான் உன் அண்ணன் எப்போ எப்போன்னு காத்துட்டு இருக்காரே.” கிண்டலாக முணுமுணுத்தாள் ஊர்மிளா.
“என்னடி சொல்லுற?!” ஆச்சர்யமாக கேட்டாள் அஸ்வினி.
“ஷக்தி உன் அண்ணியாகும் நாள் வெகு தூரமில்லை என்று சொல்லுகிறேன் தோழியே…”
“அப்பிடிங்குற…”
“ஆமாங்குறேன்…”
தோழிகள் இருவரின் கேலியில் முகம் சிவந்து போன ஷக்தி, “ம்ப்ச்… சும்மாயிருங்கடி, அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல” என்று சிணுங்கினாலும், இந்த உடையில் தன்னைக் காணும் போது விஸ்வாவின் முகபாவம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள பேராவல் என்னவோ எழத்தான் செய்தது.
அதை அழகாக தோழியரிடமிருந்து மறைத்து, “அப்படியே நாலஞ்சு செல்ஃபி எடுத்துக்குறேன். அம்மா, அப்பத்தாக்கு எல்லாம், என்னை இந்த ட்ரெஸ்ல பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை” என்றபடியே, அங்கங்கே நின்று ஃபோட்டோக்களாக தன்னை ஃபோனுக்குள் சேமித்து கொண்டாள் ஷக்தி.
“ஏன்டி அஸ்வி? இப்படி கெஸ்டா வர்றவங்களுக்கெல்லாம் உங்கம்மா நகையை அள்ளி அள்ளி போட்டு விடுறாங்களே, இப்படியே நகையோட நாங்க எஸ்ஸாகிட்டா என்ன பண்ணுவாங்களாம்?” விளையாட்டாக கேட்டாள் ஊர்மிளா.
“அப்படி ஒரு நினைப்பிருந்தா, ரப்பரை வச்சு நல்லா அழிச்சிடு ஊர்மி. உன் செயின் டாலர்ல இருக்குற ஜிபிஎஸ், நீ எங்களை விட்டு லேசா நகர்ந்தாலும் காமிச்சி குடுத்துடும். அப்புறம் கொத்தா அள்ளிட்டு வந்து கைமா தான்” கண்களை உருட்டியபடி கூறினாள் அஸ்வினி.
“அம்மாடியோவ்… உங்களைப் போய் பாசக்கார கூட்டம்னு நான் தப்பா நினைச்சுட்டேனே ம்மா” என்ற ஊர்மிளாவின் பேச்சில் தோழியருக்கிடையே சிரிப்பலை எழுந்து அடங்கியது.
எல்லாம் அர்த்தமில்லாத பேச்சுகள் தான். ஆனால் அந்த நிமிடங்களை மறக்கமுடியாத தருணங்களாக மாற்றும் சுவாரஸ்யமான பேச்சுக்கள்.
சிரித்தபடியே தோழியரோடு ஹாலுக்குள் நுழைந்த ஷக்தியின் கண்கள், அவசரமாக விஸ்வஜித்தை தேட, அவள் விழிகளில் முதலில் விழுந்ததோ சௌந்தர்.
‘தன்னைக் கண்டதும், ஆர்வமாக பார்க்கும் அந்த மனிதரின் கண்களில் வந்து போகும் உணர்ச்சிகளின் பெயர் என்ன?’ படிக்க முயன்று தோற்றுப் போனாள் ஷக்தி.
பாவாடை தாவணி அணிந்து வந்து நின்ற ஷக்தியைக் கண்ட நொடியில், சௌந்தரின் உள்ளத்தின் அடி ஆழத்தில் புதைந்திருந்த முதல் மனைவி செண்பகத்தின் உருவம், விஸ்வரூபம் எடுத்து கண் முன்னே வந்து நின்றது.
தன் உள்ளத்தில் இருக்கும் மனைவியின் சாயலை எதிரில் நிற்கும் மகளின் உருவத்தில் கண்டவருக்கு, எத்தனை முயன்றும் தன் உணர்வுகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாமல் போனது.
எங்கே தன் கட்டுப்பாடுகளை உடைத்து, “என் பொண்ணுகுட்டி அம்மா…” என்று கதறிவிடுவோமோ என்ற பயத்தில், எழுந்து உள்ளறைக்கு வேகமாக நடந்தார்.
ஆமாம்… சௌந்தருக்கும் அவர் முதல் மனைவி செண்பகத்திற்கும் பிறந்த பெண் தான் ஷக்தி ப்ரியா.
சௌந்தரின் மனநிலையை புரிந்து கொண்ட அவரின் தங்கை மீனாட்சி அவர் பின்னால் சென்றார். “என்னோட முட்டாள்தனத்தால எப்பேர்ப்பட்ட சொர்க்கத்தை நான் இழந்துட்டு நிக்குறேன்னு இப்போ புரியுது ம்மா.”
“என் கண்ணுக்கு முன்னாடி எம்பொண்ணு நின்னும் கூட, இது என் பிள்ளைன்னு சொல்லமுடியாத அளவுக்கு, என் கையை என்னோட செயலே கட்டிப்போட்டுடிச்சே.” அடக்கமுடியாமல் தங்கையிடம் தழுதழுத்தார் சௌந்தர்.
“அண்ணா, தயவு செய்து உங்களை வருத்திக்காதீங்க. இப்போ இங்க தானே ஷக்தி இருக்குறா. என்ன நடந்ததுன்னு தெளிவா அவகிட்ட எடுத்து சொல்லி, நீங்க தான் அவளோட அப்பான்னு சொல்லுவோம், அவ புரிஞ்சுப்பா” என்றார் மீனாட்சி.
“எப்படிம்மா? அந்த தமிழரசுவும், கலைவாணியும் இதுதான் உன்னோட அப்பா, அம்மான்னு எங்களைச் சொல்லிக் குடுத்து வளக்காமல், அவங்களையே தாயும் தகப்பனுமா ஷக்தி மனசுல பதியவச்சு வளத்துருக்காங்க. இப்போ போய் நான் தான் உன் அப்பா, இது தான் உன் அம்மான்னு சொன்னா ஷக்தி தான் நம்புவாளா?”
“இல்ல, எம்பிள்ளையோட மூனு வயசுல, நான் போய் அவளை எங்கூட அனுப்ப சொல்லி கேட்டதுக்கு, முடியாதுன்னு சொல்லி எங்கண்ணை விட்டே மறைஞ்சு போனவங்க, இப்போ, இந்த இருபத்தோரு வயசுல, இந்தா வச்சிக்கோங்கன்னு அவளைத் தூக்கித் தான் எங்கிட்ட குடுத்துருவாங்களா?”
உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டிருந்த அண்ணனை, கண்ணிமைக்காது மீனாட்சி பார்த்தபடியே நிற்க, சௌந்தரோ இடைவிடாது பேசிக்கொண்டிருந்தார்.
“அதனாலத் தான், அவங்களுக்கு நான் இந்த குடும்பத்துல உள்ளவன் ங்குற விஷயம் தெரியாமல், இந்த கல்யாணத்தை முடிச்சிடணும்னு சொல்லுறேன்.”
“அப்படி மட்டும் நடந்துட்டா, எம்பொண்ணு என்னை அப்பான்னு ஒத்துக்கலைன்னாலும், என் கண்முன்ன, என் தங்கச்சியோட மருமகளா, அவ வீட்டுல இருக்குறாங்குற நிம்மதியோட நான் இருப்பேன்.”
“போதாததுக்கு, யாரோட குறுக்கீடும் இல்லாமல் எம்பிள்ளையை நினைச்ச நேரமெல்லாம் வந்து பாத்துக்குவேன்.”
“ஆனா, விஷயம் மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சா, இது எதுவுமே நடக்காமல் போக வாய்ப்பிருக்கு.” தளர்ந்து போனக் குரலில் சொன்னார் சௌந்தர்.
“அப்படியெல்லாம் மனசை விட்டுறாதீங்க ண்ணா. அப்புறம் சொந்தம்னு சொல்லிட்டு நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம். பாத்துக்கலாம், எல்லாம் நல்லதாவே நடக்கும், பொறுமையா நம்பிக்கையோட இருங்க. இப்போ, முகத்தை கழுவிட்டு சீக்கிரம் வாங்கண்ணா, கோவிலுக்கு போய்ட்டு வந்துடலாம்” என்றார் மீனாட்சி.
சற்றுநேரத்தில் முகம் கழுவிக் கொண்டு வெளியே வந்த சௌந்தரை ஆராய்ச்சியாக பார்த்த ஷக்தியின் பார்வையில், அவரின் செவ்வரியோடிய விழிகள் தவறாமல் விழுந்தது.
‘அழுதாரா என்ன? அப்படி அழும்படி இவர்களுக்கெல்லாம் என்ன பிரச்சினை இருந்து விடப் போகிறது?’ என்றே எண்ணத் தோன்றியது ஷக்திக்கு.
அவரைப் பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே, அவரைப்பற்றி அதிகப்படியாக ஆராய்ந்து கொண்டிருந்தாள் ஷக்தி.
ஒரு பத்து நிமிட பயணத்தில், அந்த சிவன் கோவிலுக்கு மூன்று கார்களில் வந்திறங்கியிருந்தார்கள் மகாலிங்கம் ஐயா குடும்பத்தார்கள்.
இதுவரை உடுத்தி பழகியிராத பாவாடை கால்களைத் தட்ட, மெல்ல, மெல்ல நடைபயின்ற ஷக்தியின் கைகளைப் பற்றி, தன்னோடு அண்ணனின் காரில் ஏற்றியிருந்தார் மீனாட்சி.
ஷக்தி வந்து காரில் ஏறவும், தெய்வம் வந்து கொலுவேறியத் தேரைப் போல சௌந்தர் காரை பாவிக்க, அவளுக்கு தான், வேண்டாத வீட்டுக்கு விருந்தாளியாக போனது போல இருந்தது.
அடுத்த பத்து நிமிடத்தில் கோவிலில் போய் இறங்கவும், விட்டு விடுதலையாகி தோழிகளோடு கலந்து கொண்டாள் ஷக்தி.
கோயில் பெரியதாக இருக்கவில்லை. ஆனால் மிகவும் பழமையானதாக இருந்தது. சுவாமியை தரிசனம் செய்து பொங்கலிட தயாரானார்கள் பெண்கள்.
இதுவரை இப்படியெல்லாம் நேரடியாக கண்டிராத ஷக்தி, ஆவலே வடிவாக ஒவ்வொன்றையும் அந்த வீட்டு பெண்களோடு செய்ய ஆரம்பித்தாள். அத்தனையையும் தன் ஹேண்டி கேமராவில் வீடியோவாக்கி கொண்டிருந்தான் விஸ்வா.
“இது என்ன, புதுசா வீடியோல்லாம் ஷுட் பண்ற விஸ்வா?”
இதுவரையிலும் இப்படியெல்லாம் வீட்டு நிகழ்வுகளை வீடியோ எடுத்திராத விஸ்வாவிடம் பாஸ்கர் கேட்க,
“அது… சௌந்தர் மாமால்லாம் வந்துருக்காங்கல்ல, அதான்.” பூசி மெழுகினான் விஷ்வா.
“ஷக்தி இருப்பதால் தான் கவர் செய்து கொண்டிருக்கிறேன்” என்ற உண்மையை அவனால் சொல்லவா முடியும்?
ஆனால், அந்த தயக்கம் ஏதும் பாஸ்கருக்கு இல்லை போலும், “இல்லையே… மாமனை விட்டுட்டு, மஞ்சக்காட்டு மைனாவை மட்டுமே, உன் கேமரா கவர் பண்ணுற மாதிரில்ல என் கண்ணுக்கு தெரியுது.”
ஷக்தி அணிந்திருந்த உடையின் கலரை வைத்து, பாஸ்கர் அவளை மஞ்சக்காட்டு மைனாவாக்கினான்.
“தெரியுதுல்ல, அப்போ மூடிட்டு போடா.” அதற்கு மேலும் மறைக்க விருப்பப்படாமல் சிரித்தபடியே விஸ்வா போட்டுடைத்தான்.
“ப்ரோ… ஆனாலும் நீங்க செம ஃபாஸ்ட் ப்ரோ. ஹ்ம்ம்… நடத்துங்க, நடத்துங்க.” சிரித்தபடியே நகர்ந்தான் பாஸ்கர்.
மும்முரமாக பொங்கல் விட்டுக்கொண்டிருந்த பெண்களுக்கு, உதவியாளரைப் போல சுழன்று வந்து கொண்டிருந்த ஷக்தியின் உள்ளுணர்வு ஏதோ சொல்ல, நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கே, விஸ்வாவின் கண்கள், கேமரா மூலம் தன்னையே தொடர்ந்து கொண்டிருப்பதை நொடியில் புரிந்து கொண்டவள், சுற்றும் முற்றும் பார்த்தாள்.
தங்களை யாரும் கவனிக்கவில்லை என உறுதிப்படுத்திக்கொண்டு, தன் ஆள்காட்டி விரலை உயர்த்தி, சிரித்தபடியே அவனுக்கு பத்திரம் காட்டினாள். அதையும் தன் கேமராவுக்குள் அழகாக அடக்கிக் கொண்டான் விஸ்வஜித்.
கோவிலில் பொங்கல் விட்டு, சாமி கும்பிட்டு என்று எல்லாவற்றையும் நிறைவாக செய்து முடித்தவர்கள், தாமதம் இல்லாமல் வீட்டுக்கு வந்து, அங்கேயும் பொங்கல் விட்டு முடித்திருந்தார்கள்.
வீட்டு பூஜையறையிலும் படையல், வழிபாடு போன்ற இன்னபிற சம்பிரதாயங்களை முடித்தவர்கள், ஆளுக்கொரு கிண்ணத்தில் சக்கரை பொங்கலோடு ஆங்காங்கே அமர்ந்தார்கள்.
“ஆன்டி, எங்கம்மா வைக்கிற மாதிரியே, செம டேஸ்டா இருக்கு பொங்கல்.” ரசித்து உண்டபடி மீனாட்சியிடம் சொன்ன ஷக்தி,
“ஆனா, இப்படி விறகடுப்புல வைக்குற சான்ஸ் தான் அம்மாவுக்கு கிடையாது. கேஸ் ஸ்டவ்ல வீட்டுக்குள்ள வச்சிதான் பண்ணுவாங்க” என்றாள்.
“ஓ… ஏன் ஷக்தி, உங்க சொந்த ஊரு கோவில்பட்டி பக்கம்னு அஸ்வி சொன்னா. அது கிராமம் தானே ம்மா. அங்க கூட உங்கம்மா விறகடுப்புல பண்ணுனதில்லையா?”
ஓரளவிற்கு தெரிந்த கதையாக இருந்தாலும், ஷக்தியின் வாய்மூலம் கேட்பதற்காக மீனாட்சி அவளிடம் பேச்சுகொடுக்க, மற்றவர்கள் அவள் பேச்சை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்கள்.
“ஹ்ம்ம்… ஆமா ஆன்டி. ஆனா, என்னோட மூனு வயசுலயே அப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சு, நாங்க அந்த ஊரைவிட்டே போயிட்டோம். அப்புறம் அப்பாவுக்கு திரும்ப திரும்ப நார்த்லயே போஸ்டிங் விழ, அங்க சொந்தமா வீடு வாங்குறதுக்காக, இங்க இருந்த வீட்டை வித்துட்டதா அப்பத்தா சொல்லுவாங்க. நாங்களும் இங்க வீடு எதுவும் இல்லாததால ஊருக்கு வர்றதே இல்ல.”
“ஓ… அப்போ உங்க அம்மா, அப்பா கூட பிறந்தவங்க யாருமே இங்க இல்லையா? அப்பிடியிருந்திருந்தா கூட, இப்படி நீங்க ஊரை கிளீன்கட் செய்ய முடியாதே.”
“நீங்க சொல்லுறது கரெக்ட் தான் ஆன்டி. அம்மாவோட கூட பிறந்தவங்க இல்லை, அவங்க ஸ்டெப்மதர்க்கு பிள்ளைங்க இருக்குறதா சொல்லுவாங்க. ஆனா, அவங்க கூட அம்மாவுக்கு நல்ல ரிலேஷன்ஷிப் இல்ல. அப்புறம் எங்க அப்பா, அப்பத்தாவுக்கு ஒரே பையன் தான். அவங்க கூட பிறந்தது யாரும் கிடையாது.”
“என் அப்பாவுடன் பிறந்தது யாருமே கிடையாது.” ஷக்தியின் இந்த வார்த்தையில் தன்னைப் போல் மீனாட்சி, சௌந்தரைப் பார்க்க வேதனையோடு கண்களை மூடிக்கொண்டார் மனிதர்.
அன்றைய, தன்னுடைய தயக்கமும், வீணான பயமும், இன்று தன்னை எப்படி ஒரு சூழ்நிலையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்று அவருக்கு தெள்ளத்தெளிவாக புரிந்தது.
தன் தவறை சரிசெய்து, எப்படியாவது மகளை தன் கைகளுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று சௌந்தர் கணக்கு போட ஆரம்பித்தார்.
விஸ்வஜித்தோ, நாணயத்திற்கு இரண்டு பக்கம் உண்டென்பது புரியாமல், மகளைப் பிரித்து தன் மாமனை தவிக்க விட்ட தமிழரசுவையும், கலைவாணியையும், தானும் தவிக்கவிட வேண்டும் என்று வன்மம் வளர்த்தான்.
சர்க்கரைப் பொங்கலை உண்டு முடித்து மாடிக்கு வந்த ஷக்தி, காலையில் தான் எடுத்த ஃபோட்டோக்களை வாட்ஸ்அப்பில் அம்மாவிற்கு அனுப்பிய அடுத்த ஐந்து வினாடிக்குள், அவற்றை பார்த்ததற்கான ப்ளூ டிக் விழுந்ததோடு, சில நிமிடங்களிலேயே வீடியோக்காலில் அழைத்தும் விட்டார் கலைவாணி.
இப்படி நடக்குமென்று தெரிந்து தானே, காலையில் கோவிலுக்கு போகும் போது ஃபோட்டோவை அனுப்பாமல், நிதானமாக ஷக்தி அனுப்பியது.
மாடி வராண்டா தூணில் சாய்ந்து நின்றபடி வீடியோ காலை அனுமதித்த ஷக்தியின் உருவத்தை, அங்கிருந்தே கண்களில் நிரப்பிக்கொண்ட கலைவாணி, “ரொம்ப… ரொம்ப அழகா இருக்குற கண்ணம்மா” என்று ஆசையாகச் சொல்லியவர்,
“நான் எத்தனையோ தடவை பாவாடை தாவணி போட்டுக்கோன்னு சொல்லும் போதெல்லாம் போடாம, யாரோ ஒருத்தங்க சொல்லி போட்டுருக்கல்ல ஷக்தி” என்று குறைபட்டார்.
“பொறாம… என் மம்மிஜி க்கு கூட இதெல்லாம் வருமா?” கிண்டலடித்தாள் ஷக்தி.
“அப்படியெல்லாம் இல்ல…” என்று தொடங்கிய கலைவாணி, “ஆமா ஷக்தி, என் பொண்ணைத் தாவணி போட்டு முதன்முதலா நான் பாக்காம, வேறயாரோ பாத்துட்டாங்கன்னு தெரியும் போது, ஒருவகையான பொறாமை தான் எனக்கு வருது. நான் ஆசை ஆசையா நகை செய்து உனக்கு போட்டு பாக்கணும்னு காத்திருக்கும் போது, என்னை முந்திகிட்டு, யாரோ ஒருத்தங்க உனக்கு நகை போட்டு அழகு பாத்துட்டாங்கன்னு தெரியும் போது, எனக்கு கோபமா வருது” என்றார் மனதை மறைக்காமல்.
“விடுங்க மம்மிஜி. ஊருக்கு வந்ததும் நீங்க புதுசா எடுத்து குடுங்க, நான் போட்டு உங்களுக்கு காட்டுறேன், ஓகே யா?” அன்னையை சமாதானப்படுத்தினாள் ஷக்தி.
“ம்ம்…” சுரத்தே இல்லாமல் கலைவாணி சம்மதிக்க, போன் தந்தைக்கு கைமாறியது.
தமிழரசுவின் கைக்கு போன் செல்லவும், வீடியோ காலை துண்டித்து, சாதாரண காலுக்கு வந்தவர், “உனக்கு இந்த ட்ரெஸ் ரொம்ப நல்லாருக்கு குட்டிம்மா” என்றார்.
அந்த குரலில் இருந்த மாறுபாட்டை உணர்ந்து கொண்ட ஷக்தி, “ஏன் ப்பா? என்னாச்சு?” என்றாள் உடனடியாக.
“இல்லடா, ஒன்னும் இல்ல.” சமாளித்தவரின் கைகளிலிருந்து கைபேசி இப்போது அப்பத்தா பஞ்சவர்ணத்தின் கைகளுக்கு சென்றிருந்தது.
“ஹலோ… ஷக்தி, உன்னை இந்த ட்ரெஸ்ல பாக்கும் போது அப்படியே, சின்னவயசுல என் பொ…” வாயை விட்டவரை முந்திக்கொண்ட ஷக்தி,
“அப்படியே சின்னவயசுல உங்களை பார்த்தது மாதிரியே இருக்குறனா அப்பத்தா?” என்று சிரித்தாள்.
“ஆமாடி செல்லம்… ஆமாடி” என்று சமாளித்தவர், சுதாரித்துக்கொண்டு, “இந்த காலத்துல யாருடி ஆத்தா, இவ்வளவு நகையை உன்னை நம்பி போட்டு விட்டது? அவுகள நான் பாக்கணும்” என்றார்.
“நான் அவங்க போட்டோ பிறகு அனுப்புறேன் அப்பத்தா” என்று ஷக்தி சொல்ல, இப்போது கைபேசி ஷக்தியின் தம்பி சஞ்சீவிடம் சென்றது. அவனோ போனை வாங்கவும், அடக்க முடியாமல் சிரித்தான்.
“டேய்… சொல்லிட்டு சிரிடா.”
“ஹஹ… ஷக்தி, எல்லாரும் இந்த காஸ்ட்டியூம்ல உன்னைப் பார்த்து எக்ஸ்ஸைட் ஆகுறாங்க. ஆனா, எனக்கென்னவோ உன்னை இந்த ட்ரெஸ்ல பாக்கும் போது, அசல் ஊர்காட்டு பொண்ணு மாதிரியே தெரியுது டி.”
சிரிப்புக்கு நடுவே சொல்லியவன், மறுபடியும் வெடிச்சிரிப்பு சிரிக்க ஆரம்பிக்க, அங்கே கைபேசியிலேயே இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக் கொள்ளாத குறையாக மல்லுக்கு நின்றார்கள்.
ஒருவழியாக, வழக்கம் போல பெற்றவர்களின் சமரசத்திற்கு பிறகு இருவரும் சமாதானமாகி பேச்சை முடித்துக் கொண்டார்கள். சிரித்தபடியே விழிகளை உயர்த்தியவளின் முன்னால், பக்கத்து தூணில் சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு இவளையே பார்த்தபடி நின்றிருந்தான் விஸ்வஜித்.
இவ்வளவு நேரமும் பெற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்ததால் வந்த இதமோ, இல்லை அவனிடம் மயங்கி நின்ற மனமோ, ஏதோ ஒன்று, எந்த வித தயக்கமும் இன்றி ஷக்தியை, “என்ன?” என்று தன் புருவங்களை உயர்த்தி விஸ்வஜித்திடம் கேட்க வைத்தது.
அவனோ, “உன் குடும்பம்னா உனக்கு ரொம்ப இஷ்டமோ?” என்றான் ஒருமாதிரியான குரலில்.
“ஏன்? உங்களுக்கு உங்க குடுமபத்தை பிடிக்காதா?” அவனின் குரலிலேயே ஷக்தி பதில்கேள்வி கேட்டாள்.
‘ஆஹா… ஜித்தா! உங்க ரிலேஷன்ஷிப் தொடங்குறதுக்கு முன்னாடியே, உன்பேச்சு அதுக்கு என்ட்கார்டு போட வச்சிடும் போல டா. கொஞ்சம் அடக்கி வாசி’ என்று விஸ்வஜித்தின் மனது, அவனை உஷார்படுத்தியது.
தன் சறுக்கலை, தன் வசீகரப் புன்னகையால் மறைத்தவன், “என்னப்பற்றி என்ன நினைக்கிற ஷக்தி” என்றான் ஆழ்ந்த குரலில்.
அவன் எண்ணம் புரிந்தாலும், பிடிகொடுக்காத தோரணையில், “உங்களப் பத்தி நான் என்ன நினைக்க?” யோசித்த பாவனையில் லேசாக இழுத்தவள்,
“ஹாங்… நீங்க ஒரு நல்ல ஃபோட்டோகிராஃபர். போட்டோ எல்லாம் அவ்வளவு அழகா எடுத்துருந்தீங்க” என்றாள் சிரிப்பை அடக்கிய குரலில்.
“அவ்வளவு தானா?”
“ஹ்ம்ம்… வேற என்ன நினைக்கனும்னு, நினைக்குறீங்க நீங்க?” கண்களில் சிரிப்பை அடக்கி கேட்டவளின் பாவனையில், அவள் கேலி புரிந்தது.
சட்டென்று அருகில் வந்து, அவள் முகவாயைப் பற்றி, அந்த பூ முகத்தை தன்னை நோக்கி உயர்த்திய விஸ்வா, “இப்ப சொல்லு, என்னப்பற்றி என்ன நினைக்கிற?” என்றான் ஆளை விழுங்கும் குரலில்.
எதிர்பாராத இந்த நெருக்கத்தில் தடுமாறிய ஷக்தி, தன் கைகளால் அவன் மார்பை தள்ளியபடியே, “என்னென்னவோ நினைக்கிறேன். ஆனா அதெல்லாம் இப்ப சொல்லமுடியாது ஜி” என்று கிள்ளைமொழி பேசியவள், விஸ்வாவின் கைகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல், பக்கத்திலிருந்த தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
******************
நேரம் இரவு பத்து மணி.
தங்கள் படுக்கையறையில் இருந்த தமிழரசு, மனைவி கலைவாணியிடம், “இன்னைக்கு ஷக்தியை பாவாடை தாவணில பாத்ததுல இருந்து செண்பகத்தோட ஞாபகமாவே இருக்கு கலை. பாரேன்… எப்படி அச்சுஅசலா அவளைப் போலவே இருக்குறா ஷக்தி. உனக்கு ஏதாவது அப்படி தோணிச்சா கலை?” என்று கேட்டார்.
“இல்லைங்க, நான் அவங்களை நேர்ல பாத்தது இல்லையே, அதனால எனக்கு அப்படி எதுவும் தோணலை. ஆனா, அத்தை உணர்ச்சிவசப்பட்டு ஷக்திகிட்ட வார்த்தையை விடப்பாத்தாங்க. நல்லகாலம், லேசா அவங்களை நான் தட்டவும் சுதாரிச்சிட்டாங்க.”
“ஆனா, இன்னைக்கு முழுக்க அவங்க முகம் சோர்ந்து போய் தான் இருந்துச்சி. சஞ்சீவ் இருந்ததால அதப்பற்றி எதுவும் எங்கிட்ட பேசலை. இப்போ அவன் தூங்கியிருப்பான், ஆனா, அவங்க என்ன செய்யுறாங்களோ தெரியலை?”
கலைவாணியின் கூற்றை நிரூபிப்பது போல, பக்கத்து அறையில் பேரனோடு படுத்திருந்த பஞ்சவர்ணம், தூங்காமல் புரண்டு புரண்டு படுத்தபடியிருந்தார்.
பக்கத்தில் படுத்திருந்த பேரன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பதை உறுதிபடுத்திக் கொண்டவர், கட்டிலில் இருந்து இறங்கி, அறையிலிருந்த கணவரின் புகைப்படத்தை கையிலெடுத்தார்.
அதை ஒரு நிமிடம் பார்த்து, ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளியிட்டவர், அந்த கையடக்க புகைப்படத்தின் சட்டத்தை விலக்க, கணவனின் புகைப்படத்திற்கு பின் ஒரு இளம்பெண்ணின் புகைப்படம் இருந்தது.
அறையின் மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் அதை உற்றுநோக்கியவர், “செண்பா… இன்னைக்கு பாவாடை தாவணியில உம்பொண்ணு, அச்சுஅசலா உன்னைப் போலவே இருந்தாடி, நான் அசந்து போய்ட்டேன்” என்று அந்த புகைபடத்திலிருந்த பெண்ணோடு பேசியவர்,
“இந்த உலகத்துல, ‘அம்மம்மா’ ன்னு கூப்பிட்டு வளர வேண்டிய பொண்ணு, அப்பத்தான்னு கூப்பிட்டு வளருற கொடுமை, என்னைத் தவிர வேற யாருக்கும் வரவேண்டாம்” என்று சொல்லி, குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.
புகைப்படத்திலிருந்த செண்பா என்ற செண்பகம், அதே வாடாத புன்னகையோடு தன் தாயை பார்த்தபடி இருந்தார்…