விடிந்தும் விடியாத காலைப்பொழுதில், தன் வழக்கமான நடைபயிற்சிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் தமிழரசு. படுக்கையில் எழும்பி அமர்ந்து கொண்டு, வழக்கமில்லாத வழக்கமாக அதிகாலையிலேயே ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தார் கலைவாணி.
“ப்ச்ச்… ஒன்னுமில்லைங்க… ஷக்தி எனக்கு எதுவும் மெசேஜ் வச்சிருக்காளான்னு பாத்தேன்.”
“என்னது? நைட் விடிய விடிய அவகூட பேசி தூங்கவிடாமல் பண்ணுனது போதாதுன்னு, இப்போ… இவ்ளோ காலையிலேயே, உன் பொண்ணு உனக்கு மெசேஜ் வேற வச்சிருக்கணுமா?”
“விடியவிடிய ஒன்னும் பேசலை, பதினோரு மணி வரைக்கும் தான் பேசினோம்.” கணவனின் வார்த்தைகளைத் திருத்திய கலைவாணி, சிறுபுன்னகையோடு, நேற்று மகள் தன் அலைபேசிக்கு அனுப்பிய ஃபோட்டோக்களை பார்வையிட்டபடியே,
“நம்ம ஷக்தி இந்த ட்ரிப்பை ரொம்ப ஹேப்பியா என்ஜாய் பண்ணுறாப்போல, ஃபோட்டோஸ்ல எல்லாம் அம்மணிக்கு எவ்வளவு சிரிப்பு பாத்தீங்களா?” என்று கணவனிடம் கேட்டார்.
“ம்ம்… எவ்வளவு தான் நாம வெளியே கூட்டிட்டு போனாலும், ஃப்ரெண்ட்ஸ் கூட போகும் போது இந்த பிள்ளைங்களோட சந்தோசமே தனிதான். நல்லகாலம் வேண்டாம்ன்னு சொல்லாமல் ஷக்தியை அனுப்பி வச்சோம்” என்றார் தமிழரசு.
“ஹ்ம்ம்… ஆமாங்க, ஆனா, எனக்கு தான் அவ இல்லாமல் கை உடஞ்ச மாதிரியே ஃபீலாகுது.” வார்த்தைகள் கொஞ்சம் பிசிறடித்தது கலைவாணிக்கு.
“இல்லையே நல்லாத்தானே இருக்கு.”
தன் கைளைப்பிடித்து அங்குமிங்கும் அசைத்து பார்த்த கணவரிடம், “விளையாடாதீங்க” என்று முறைத்தார் கலைவாணி.
“பின்ன என்ன ம்மா? ஷக்தி இங்கிருந்து போய் முழுசா ஒருநாள் தான் ஆகுது. அதுக்குள்ள நீ, கை உடஞ்சிடிச்சி, கால் உடஞ்சிடிச்சின்னு புலம்புறியே!”
“ஷக்தி இதுவரைக்கும், நம்மள விட்டுட்டு தனியா வெளியே போய் தங்குனதே இல்லையா? அதான்… அவ ஞாபகமாவே இருக்கு.”
“இல்லைன்னா மட்டும், உன் மகள் ஞாபகம் உனக்கு வராது பாரு?” கிண்டல் தொனியில் சொன்ன தமிழரசு,
“கலை… ஆணோ, பெண்ணோ, ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் தான், பிள்ளைங்க பெத்தவங்க நிழல்ல இருக்க முடியும். அப்புறம், அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை வந்த பிற்பாடு, அது பின்னாடி தான் ஓடுவாங்க, ஓடணும்.”
“அதுலயும் பெண்குழந்தைங்க… சொல்லவே வேண்டாம். அதனால, கண்மூடித்தனமான பாசத்தை பிள்ளைங்க மேல வைக்காத. ஒருவேளை, அதே அன்பை அவங்க நமக்கு, பின்னாடி திருப்பி தரமுடியாத சூழ்நிலை வந்தால், உன்னால தாங்க முடியாது.”
மகளின் மீது மனைவியின் பாசத்தை தெரிந்திருந்த தமிழரசு, நீண்ட நாட்களாக மனைவியிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தவற்றை இப்போது சொல்ல, அரண்டு போனார் கலைவாணி.
“அப்போ, கல்யாணத்துக்கு பிறகு ஷக்தி, எங்கிட்ட இதே பாசத்தோடு இருக்க மாட்டான்னு சொல்லுறீங்களா நீங்க?”
“அப்படி சொல்லலை கலை. அவளோட சூழ்நிலை அப்படி அமைஞ்சுதுன்னா, நாம வருத்தப் படக்கூடாதுன்னு சொல்லுறேன்.”
“அதெப்படி வருத்தப்படாம இருக்க முடியும்?” சிறுபிள்ளையாய் கேட்ட மனைவியை, தோளோடணைத்துக் கொண்ட அன்பரசு,
“வேணும்னா, ஷக்திக்கு சப்ஸ்டிடுயூட்டா இன்னொரு பொண்ணை நாம பெத்துக்கலாம். அப்போ உன் கவனம் முழுக்க, சின்ன ஷக்திகிட்ட போயிடும். பெரிய ஷக்தி என்ன பண்ணுனாலும், நீ கண்டுக்கமாட்ட. எப்படி நம்ம ஐடியா?” கண்களைச் சிமிட்டியபடி கேட்டார் தமிழரசு.
“அதானேப் பார்த்தேன். மீசை நரைச்சாலும், கிழவருக்கு ஆசை நரைக்கலைங்குறது இப்பத்தானே புரியுது எனக்கு.” வந்த சிரிப்பை வாய்க்குள்ளே அடக்கிக் கொண்டு பேசினார் கலைவாணி.
“ப்ச்ச்… நடந்ததை மறந்து போகணும்னு நினைச்சாலும், இந்த சிடுமூஞ்சி ஞாபகம் தான் காலங்காத்தால வருது.”
லேசாக வாய்விட்டு அலுத்துக் கொண்டவள், விரிந்து கிடந்த முடியை சேர்த்து அள்ளி பெரிய கிளிப் ஒன்றில் அடக்க, மேல் நோக்கி வளைத்த முடியின் நுனிப்பகுதி, வாழைப்பூவாக தொங்கியது பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது.
அறைக் கதவை சத்தமெழுப்பாமல் மெதுவாக திறந்து வெளியே வந்த ஷக்தி, ட்ராக் பேண்ட், டிசர்ட்டில் இருந்தாள்.
அறைக்கு முன்னாலிருந்த வராண்டாவில் வந்து நின்று சோம்பல் முறித்தபடியே, சுற்றும்முற்றும் பார்த்தாள் ஷக்தி. நீண்டு பரந்திருந்த வீட்டு மாடியின் நான்குபுறமும் அறைகளாக இருந்தது.
அந்த அறைகளை சுற்றிவர இருந்த வராண்டாவில், அங்கொன்றும் இங்கொன்றுமாக எல்ஈடி விளக்குகள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.
‘யப்பா… எவ்ளோ ரூம்ஸ்! குறையாமல் ஒரு இருபதாவது இருக்குமா?’ நினைத்தபடியே மாடியில் இருந்த அறைகளை விரல் விட்டு எண்ணத் தொடங்கினாள் ஷக்தி. அவள் கணிப்புபடியே இருபது இருந்தது.
‘ஹ்ம்ம்…பாக்குறதுக்கு நல்லா தான் இருக்கு. ஆனா மெயின்டெய்ன் பண்ணுறது தான் ரொம்ப கஷ்டம்.’
மனதிற்குள் எண்ணம் ஓட, வராண்டா தடுப்பு சுவரில் கைகளை ஊன்றி கீழே பார்த்தாள். அங்கே தென்பட்ட திறந்தவெளி முற்றம், மெல்லிய கம்பி கிராதியால் மூடப்பட்டிருந்தது.
‘வீட்டை அனுபவிச்சு கட்டியிருக்காங்க ப்பா…’ அந்த அரையிருளிலும் அங்குலம் அங்குலமாக வீட்டைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவளை, “குட்மார்னிங் ஷக்தி” என்று அருகில் கேட்ட பாஸ்கரின் குரல் கலைத்தது.
“ஓடிப்போலாம்… நீயும் வரியா?” என்றான் பாஸ்கர் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு.
“என்ன?” அதிர்ந்து போய் கேட்டாள் ஷக்தி.
“ஜாகிங் போறேன்… கூட வந்தா, நாலுத்தெரு சுத்திக்காட்டுவேன்னு சொன்னேன் ம்மா.” சிரித்தான் பாஸ்கர்.
“ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது பாஸ்.” பதிலுக்கு சிரித்தவள், தோழிகள் உறக்கம் முழிக்கும் வரை தனியே இருப்பதற்கு பதிலாக, பாஸ்கருடன் வெளியே சென்று வரலாம் என்று முடிவெடுத்தவளாக, அவனுடன் நடந்தாள்.
மாடியிலிருந்து இறங்கி வந்தவளின் கண்கள், தானாக அந்த ஃபோட்டோ இருந்த இடத்தை பார்வையிட, இரண்டு ஃபோட்டோவுமே அங்கு இல்லை.
‘இரண்டை, ஒன்னாக்குறேன் பார்னு, தொரை குதிச்சாரே. அதுக்காக கொண்டு போய்ட்டார் போல? ஹும்ம்…’ சலித்துக் கொண்டவள், வீட்டுக்கு முன்னே வந்து, அங்கிருந்த தன் காலணிகளை அணிந்து தயாராகினாள்.
பாஸ்கரோ, அவர்களுக்கு முன்னால் அங்கே வந்து நின்று கொண்டிருந்த விஸ்வஜித்திடம், “போலாமா விஸ்வா” என்றான்.
பாஸ்கரின், “விஸ்வா” என்ற அழைப்பில், விலுக்கென்று நிமிர்ந்த ஷக்தியின் கண்களில், ஜாகிங் செல்ல தயாராகி நின்ற விஸ்வா விழ, “நான் வரலை பாஸ்” என்றாள் அவசரமாக.
ஷக்தியின் வார்த்தைகளில் பாஸ்கர் புரியாமல் அவளைப் பார்த்தான். ஆர்வமாக வந்தவள் தன்னைக் காணவும் தான், பின்வாங்குறாள் என்று புரிந்தது விஸ்வஜித்துக்கு.
தன்னால் அவள் திரும்பி போவதை விரும்பாத விஸ்வா, “நீங்க போங்க பாஸ்கர். நான் முக்கியமான கால் ஒன்னு பண்ணிட்டு வரேன்.”
பொதுவாக சொல்லி விட்டு, ஃபோனை கையில் எடுத்துக் கொண்டு விஸ்வஜித் அங்கிருந்து நகர, போகும் அண்ணனை, வித்தியாசமாக பார்த்தபடியே ஷக்தியோடு நகர்ந்தான் பாஸ்கர்.
வீட்டை விட்டு வெளியே வந்து, அகலமான வீதியில் இறங்கி, இருவரும் மெதுவாக ஒடத் தொடங்கினார்கள். நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட ஊராக இருந்தது மந்தாரம்புதூர்.
ஒருசில இடங்களில் கிராமத்தின் சுவடுகள் இன்னும் மிச்சமிருப்பதை ரசித்து பார்த்துக் கொண்டு வந்த ஷக்தியிடம்,
“நீ விஸ்வாவைப் பாத்த உடனே, ஜாகிங் வரலைன்னு சொல்லுற, ஆனா, அவனை சைட் அடிக்குறதுக்குன்னு ஒரு கூட்டமே ஜாகிங் வருது தெரியுமா?” என்றான் பாஸ்கர்.
“ஹலோ… நான் ஒன்னும் அவரை பார்த்துட்டு, வரலைன்னு சொல்லலை” என்றாள் ஷக்தி.
“சரி…சரி… வீணா டென்ஷன் ஆகாத, நம்பிட்டேன்.” கிண்டலாக சொன்னவனிடம், “உங்களை யாரும் சைட் அடிக்கலையா ப்ரோ?” மெதுவாக கேட்டாள் ஷக்தி.
“எங்க ம்மா? அப்படி ஒரு அதிஷ்டம் என் வாழ்வில் வரவே வராது போல.” வருத்தமாக சொல்லியது போல நடித்த பாஸ்கர், எதிரே வந்த பெண்ணைப் பார்த்து பரபரத்தவனாக,
“ஷக்தி, இப்போ நான் என்ன சொன்னாலும், இல்லைன்னு மறுத்து மட்டும் சொல்லிடாத ப்ளீஸ்…” என்றான் அவசர அவசரமாக.
பாஸ்கரின் இந்த திடீர் பரபரப்பை புரியாமல் ஷக்தி பார்க்க, அவர்களுக்கு எதிரே சீரான வேகத்தில் ஓடிவந்து கொண்டிருந்த ஒரு இளம்பெண், இவர்கள் எதிரே நின்று, கண்களால் விஸ்வாவைத் தேடியபடியே, “ஹாய் பாஸ்கர், உங்க அண்ணா எங்க?” என்றாள் ஆர்வமாக.
“இன்னைக்கு விஸ்வா வரலை.”
பாஸ்கரின் பதிலில் மொத்த உற்சாகமும் வடிந்து போன அந்த பெண், தன் நகக்கண்ணில் கூட நாகரீகம் தெறித்தபடி, பாஸ்கருக்கு அருகே நின்று கொண்டிருந்த ஷக்தியைப் பார்த்து, “இவங்க யாரு, புதுசா தெரியுது?” என்றாள் யோசனையோடு.
“இது விஸ்வாவோட அத்தப் பொண்ணு. இவங்களைத் தான் அண்ணா மேரேஜ் பண்ணிக்க போறான்” என்று பாஸ்கர் அளந்து விட்டான்.
சட்டென்று முகத்தில் சோகம் அப்பிக்கொள்ள, “உண்மையாவா?” என்றது அந்த பெண்.
“எங்க ஆயா மேல சத்தியமா” என்றபடியே அந்த பெண்ணின் தலையில் பாஸ்கர் கைவைத்தான்.
அதை உண்மையென்று நம்பிய அந்த பெண்ணும், ஷக்தியை திரும்பித் திரும்பி பார்த்தபடியே சோகத்தோடு அங்கிருந்து நகர்ந்தாள்.
“டேய்… ஏன்டா இப்படி பண்ணுன? பாவம்ல அந்த பொண்ணு?” பாஸ்கர் மீது புதிதாக தோன்றியிருந்த கூடுதல் நட்புணர்வில், ஒருமைக்கு தாவிய ஷக்தி, சட்சட்டென்று அவன் கைகளில் அடித்தாள்.
ஆம்… நட்போடு, எளிதாக அணுகக் கூடியவனாக இருந்த பாஸ்கரை ரொம்பவே பிடித்தது ஷக்திக்கு.
கூடவே, ‘இவனைப்போல அந்த விஸ்வாவும் இருந்தால் தான் என்ன? எப்போ பார்த்தாலும் மூஞ்சியில் முள்ளை கட்டிவச்சிட்டு எதுக்கு திரியுறான்?” என்ற எண்ணமும் மனதில் ஓடியது.
“அடப் போம்மா… நானும் விஸ்வாவும் ஜாகிங் வரும் போது, வளைச்சு வளைச்சு அவன மட்டுமே சைட் அடிச்சு, எத்தனை நாள் என் வயிற்றெரிச்சலை இந்த ஷீலா கொட்டியிருப்பா தெரியுமா? அதான், ஒரு வாலிபனோட வயிற்றெரிச்சல் என்ன செய்யும்னு சின்ன சாம்பிள் காட்டினேன்.”
அலட்டாமல் சொன்ன, பாஸ்கரின் பதிலில், “அடப்பாவி…” என்று வாயைப் பிளந்த ஷக்தி, “ஒரு வேளை உங்க அண்ணா அந்த பொண்ணை லவ் பண்ணுனா?” என்றாள் சந்தேகமாக.
கேள்வி கேட்டவளின் இதயம், பதிலுக்காக ஆர்வத்தோடு காத்திருக்க, “ஏற்கனவே லவ்ஸ் இருக்கும் போது, யாராவது திரும்பவும் சைட் அடிப்பாங்களா, என்ன?” வெடிகுண்டை கொளுத்திப் போட்டான் பாஸ்கர்.
“என்னது? ஏற்கனவே உங்க அண்ணாவுக்கு காதல் இருக்கா?” ஏனோ கொஞ்சம் அதிர்ந்து தான் வந்தது ஷக்தியின் வார்த்தைகள்.
“ஹ்ம்ம்… எங்க விஸ்வா கேமராவின் காதலன். அப்போ கேமரா அவன் காதலி தானே?” தன் அரும்பெரும் கண்டுபிடிப்பை பாஸ்கர் சொல்ல, நேற்றே அவன் தங்கை வாயிலாக விஸ்வாவின் தொழில், அதில் அவன் ஆர்வம் எல்லாம் தெரிந்திருந்தவளுக்கு,
‘ஐயா, தன்னோட ஃபீல்டுல பெரிய அப்பாடக்கர் தான் போல, அதான் நேத்து அவ்வளவு ஈசியா ஃபோட்டோ ரெடி செய்து மாட்டுறேன்னு சொல்லியிருக்கிறான்’ என்ற எண்ணமே மனதில் எழுந்தது.
பாஸ்கரின் விளையாட்டு பேச்சுகளால், விஸ்வா மீது லேசாக இளகியிருந்த ஷக்தியின் மனம், மறுபடியும் கொம்பேறிமூக்கனாக மாறி, உச்சாணிக் கொம்பில் ஏறி அமர்ந்து கொண்ட வேளையில், தன் வேகமான ஓட்டத்தால் அவர்களை வந்தடைந்திருந்தான் விஸ்வா.
ஆம், தன்னைக் கண்டதும் தயங்கிய ஷக்தியை பாஸ்கரோடு அனுப்புதற்காகவே, முக்கியமான கால் செய்ய வேண்டுமென்று ஒதுங்கியவனை, உண்மையாகவே தொழில் முறையில் நண்பன் ஒருவன் பேச்சில் பிடித்துக் கொள்ள, நேரமாகிப்போனது.
இருப்பினும் அவர்கள் இருவரோடும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலில், வேகமான ஓட்டத்தில் வந்து சேர்ந்திருந்தான்.
“எங்க ஊரெல்லாம் எப்படி இருக்கு?” என்று புன்னகையோடு கேட்க, ஓடிவந்ததன் பலனாக அவனது மார்புக்கூடு மேலும் கீழுமாக ஏறியிறங்கி கொண்டிருந்தது.
அவனின் இந்த புதிய அவதாரத்தில் லேசாக திகைத்துப்போய், பதிலாக தலையை ஆட்டிய ஷக்திக்கு, ‘அந்த ஷீலா எல்லாவற்றையும் இவனிடம் சொல்லியிருப்பாளோ?’ என்ற சந்தேகம் எழ, விஸ்வாவின் முகத்தை கூர்ந்து பார்த்தாள்.
அங்கு மின்னிய ரகசியச் சிரிப்பு, எனக்கு எல்லா விஷயமும் தெரியும் என்று கட்டியம் கூற, “ஐயோ…” என்றாகிப்போனது ஷக்திக்கு.
உண்மையில் அந்த ஷீலா, தனக்கு எதிரே ஓடிவந்து கொண்டிருந்த விஸ்வாவை நிறுத்தி, நடந்தவற்றை, இல்லையில்லை… அதைவிட கொஞ்சம் அதிகமாகவே சொல்லியிருந்தாள்.
ஆமாம்… பாஸ்கர் சொல்லிய விஷயத்தை சொல்லி, “உன் தம்பியும் அந்த பொண்ணும் சொல்லுது, உண்மையா?” என்று கண்ணைக் கசக்க, யோசிக்காமல், “ஆமாம்” என்று விஸ்வா சொல்லி வந்திருந்தது எல்லாம் தனி கதை.
‘ஓவர்நைட்ல ஒபாமா ஆனமாதிரி, ஒரேநாள் நைட்ல இந்த முசுடு, புன்னகை மன்னனா மாறிப்போறதை எல்லாம், என்னால தாங்க முடியாது சாமி.’ மனதுக்குள் புலம்பிக் கொண்டவள், அதற்கு மேலும் அங்கிருக்க மனமின்றி, “உடனே வீட்டுக்கு போகவேண்டும்” என்றாள் பாஸ்கரிடம்.
உண்மையில், நேற்று முதன்முறையாக கண்ட பெண்ணிடம் தான் நடந்து கொண்டது கொஞ்சம் அதிகப்படி, என்று தோன்றியதால், ‘இனிமேல் ஷக்தி வீட்டிலிருக்கும் வரை, அவளிடம் பேச்சு கொடுக்காமல் ஒதுங்கி இருக்க வேண்டும்’ என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தான் விஸ்வா.
ஆனால், அவன் முடிவையும் தாண்டி, காந்தம் போல் ஒரு உணர்வு அந்த பெண்ணை நோக்கி தன்னை இழுப்பதை தடுக்க முடியவில்லை விஸ்வஜித்தால்.
“ம்ம்… போலாம், அதோ, அந்த ஷாப்ல ஃப்ரெஷ் ஜுஸ் கிடைக்கும், குடிச்சிட்டு போலாம்.” கண்ணால் தன்னை அழைத்து, கடையை நோக்கி நடந்த விஸ்வாவை, பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தவளை,
“இன்னும் கொஞ்சம் நேரமானா, மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா ஃப்ரெஷ்ஷா குடிச்சிருக்கலாம். ஆனா, இதுவும் நல்லாயிருக்கும், வா ஷக்தி” என்று அழைத்து சென்றான் பாஸ்கர்.
முழுதாக ஒன்றரை மணிநேரத்தை வெளியே செலவழித்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் ஷக்தி,
பழச்சாறு குடித்த கடையில் விஸ்வாவிடமிருந்து தனக்கு கிடைத்த உபசரிப்பில் தலை கிறுகிறுத்து போயிருந்தவளுக்கு, ‘நேற்று தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட விஸ்வா நிஜமா? இல்லை, இப்போது அத்தனை கரிசனமாக நடந்து கொள்ளும் விஸ்வா நிஜமா?’ என்று குழப்பமே மேலோங்கி நின்றது.
காலைநேர உணவிற்கு பிறகு அஸ்வினியின் துணையோடு வீடு முழுக்க சுற்றிப்பார்த்திருந்த ஷக்தி, தோழியரோடு மறுபடியும் ஹாலில் மையம் கொண்டிருந்தாள்.
இப்போது அழகான காட்டன் சுடிதார் ஷக்தி அணிந்திருக்க, பாட்டியிடமிருந்து மெச்சுதலான பார்வையும், பேரனிடமிருந்து ரசனையான பார்வையும் கிடைத்திருந்தது.
“அங்க, பெரியவங்கல்லாம் இருக்குறதா சொல்லுற, எதுக்கும் சுடிதாரும் எடுத்து வச்சுக்கோ ஷக்தி” என்ற அம்மாவின் வார்த்தைகளை கேட்டுக்கொண்டது நல்லாதாப் போச்சு என்று நினைத்துக் கொண்டாள் ஷக்தி. ஆனால், பழக்கமில்லாத அந்த துப்பட்டா தான் பெண்ணவளை படுத்தி எடுத்தது.
இப்போது இன்னும் தெளிவாக ஹாலின் ஒவ்வொரு இடத்தையும் பார்க்கத் தொடங்கிய ஷக்தி, முன்வாசல் நிலைக்கு முன்னால் வந்து நின்றுகொண்டு, அதில் செதுக்கி இருந்த ஒரு சிறிய சிற்பத்தோடு சேர்த்து தன்னை ஃபோட்டோ எடுக்க சொல்லி தோழியரை வதைத்து கொண்டிருந்தாள்.
அந்த சிற்பத்தில் தேருக்குள் இருந்து எட்டிப்பார்த்தபடி இருந்த இளவரசியின் முகம் தெளிவாக தெரியவில்லை என்று, திரும்ப திரும்ப எடுக்க சொல்லிக் கொண்டிருந்தாள்.
அஸ்வினியும், ஊர்மிளாவும் வெவ்வேறு கோணங்களில் ஷக்தியின் ஃபோனை வைத்து எடுக்க முயன்றும், அது முடியாமல் போனது.
அங்கு நடந்து கொண்டிருந்த கூத்தை கவனித்துக் கொண்டிருந்த விஸ்வா, தன் தங்கையின் கையிலிருந்த ஷக்தியின் ஃபோனை வாங்கி திருப்பித் திருப்பி பார்த்தபடியே,
“இந்த ஃபோனுல உங்களுக்கு சூப்பர் கிளாரிட்டி பிக்சர் கேட்குது, ம்ம்…” என்று இழுத்தான்.
விஸ்வா கைக்கு தன் ஃபோன் போகவும் அதிர்ந்து போன ஷக்தி, அவன் வார்த்தைகளில் இன்னும் கொந்தளித்தவளாக,
“அஸ்வி… அது எங்கப்பா, நான் காலேஜ்ல சேரும் போது முதன்முதலா வாங்கி தந்த ஃபோன், அதப்பத்தி தேவையில்லாமல் யாரும், எதுவும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிவை” என்று வேகமாக இரைந்தாள்.
ஷக்தியின் வார்த்தைகளை காதில் வாங்கிக் கொண்டே, அவள் ஃபோனை தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்த விஸ்வா, சென்னைக்கு தன்னோடு கொண்டு சென்றுவிட்டு ஸ்டுடியோவிற்கு திரும்ப கொண்டு போவதற்காக, அங்கு வைத்திருந்த தன் விலையுயர்ந்த கேமராவை எடுத்து, அதன் மூலம் ஷக்தியை கோணம் பார்க்க ஆரம்பித்தான்.
திடீரென்று, இப்படி கேமரா கண் கொண்டு விஸ்வா தன்னைப் பார்ப்பதை எதிர்பாராத ஷக்தி, “நீங்களும் எங்கூட வந்து நில்லுங்களேன் டி” என்று கூச்சத்தோடு தோழியரை துணைக்கழைத்தாள்.
“ஷ்ஷ்… ஆடாம நில்லு” என்றான், அதற்குள் முழு கேமராமேனாக மாறியிருந்த விஸ்வா. வேறுவழியில்லாமல் ரிங்மாஸ்டருக்கு கட்டுப்பட்ட சிங்கமாக, அவன் சொல்லியபடியெல்லாம் ஆடினாள் ஷக்தி.
ஒருவழியாக புகைப்படங்களை எடுத்து முடித்தவனிடம், ஆர்வம் தாளாமல் ஓடி வந்த ஷக்தி, எடுத்த புகைபடங்களின் பிரிவ்யூ பார்த்தாள். அவள் எதிர்பார்த்ததை விட துல்லியமாக வந்திருந்தன புகைப்படங்கள்.
அவ்வளவு தான்… சந்தோஷத்தில் விஸ்வாவின் முகம் பார்த்து, “தன்யவாத் ஜி” என்றவள், தன் ஃபோனைக் கூட வாங்க மறந்தவளாக, சற்று தள்ளியிருந்த திவான் கட்டில் ஊஞ்சலில் தோழியரோடு சென்று அமர்ந்து கொண்டாள்.
தன் காலால் உந்தி தள்ளி ஊஞ்சலை ஆட்டிய ஊர்மிளா, “என்னடி? வெள்ளக் காக்கா இன்னைக்கு மல்லாக்க பறக்குது?” என்று கிசுகிசுத்தாள்.
“வெள்ளக் காக்கா ன்னு சொன்னேன் ம்மா. அப்படின்னா கொக்குன்னு அர்த்தம்.” அஸ்வினியிடம் தன் வார்த்தைகளுக்கு புதிய அர்த்தம் ஊர்மிளா சொல்ல, அந்த இடமே கலகலப்பாக மாறியது.
“வாங்கண்ணா, வாங்க அண்ணி.” அஸ்வினி அம்மாவின் உற்சாகமான வரவேற்பில், பெண்கள் மூவரும் தங்கள் விளையாட்டை கைவிட்டவர்களாக, வாசலைப் பார்த்தார்கள்.
அங்கே, மீனாட்சியின் அண்ணன் சௌந்தர், தனது மனைவி கௌரியோடு வீட்டினுள் வந்து கொண்டிருந்தார்.
ஆம்… நேற்று புகைப்படத்தில் ஷக்தி பார்த்த அதே தம்பதிகள்.
அவர்களைக் காணவும், அஸ்வினி தோழிகளிடமிருந்து நகர்ந்து, மாமனிடம் சென்று நலன் விசாரிக்க ஆரம்பித்தாள்.
“நீ, எப்போ ஹாஸ்டல்ல இருந்து வந்த அஸ்வி, நல்லாயிருக்கியா?” என்று பதிலுக்கு நலன் விசாரிக்க ஆரம்பித்த தன் அண்ணனிடம்,
“அவ நேற்றே வந்துட்டா ண்ணா. கூடவே இரண்டு ஃப்ரெண்ட்ஸ்ஸும் வந்துருக்காங்க” என்றார் மீனாட்சி.
ஆர்வமாக சொல்லிய தன் தங்கையின் விழிகளைப் பின்பற்றி, ஊஞ்சலை நோக்கி தன் பார்வையை வீசிய சௌந்தரின் உயிர், அங்கு இருந்த ஷக்தியைக் கண்டு ஒரு நிமிடம் உறைந்தே போனது…