தங்கள் வாழ்த்துகளை ஷக்திக்கு சொல்லி, உறவினர்கள் விடைபெற, சௌந்தர் சாவகாசமாக மனைவியோடு அங்கேயே உட்கார்ந்திருந்தார்.

வெளியே பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், சதா அவருள்ளே ஏதோ யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அவரது கண்கள் சொல்லியது.

ஷக்தியை சிறிது நேரம் ஓய்வெடுத்து கொள்ளும்படி கல்யாணி அம்மா சொல்ல, மனைவியை அழைத்துக்கொண்டு தங்களறைக்கு வந்து சேர்ந்தான் விஸ்வா.

அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்த ஷக்தி, கணவன் போட்ட வளையலை பிடித்து பார்த்தபடியே, “எனக்கு தெரியாமல் இதை எப்போ விஸ்வா வாங்குனீங்க?” என்றாள் ஆர்வமாக

“நேற்று ராத்திரி முழுசும், நானும் எம்மச்சானும் எதுக்காக ஊரைச் சுத்தினோம்னு நினைச்ச செல்லம்?”

“அட… அவனுக்கும் தெரியுமா? ஆனா எங்கிட்ட சொல்லவேயில்ல தெரியுமா? சரியான ஃப்ராடு பசங்க ரெண்டு பேரும்.”

செல்லமாக சிணுங்கியவள், சௌந்தர் போட்ட வளையல்களை சுட்டிக்காட்டி, “இதை எல்லாம் கழட்டிரட்டுமா ப்பா? எனக்கு இதை போட்டுட்டு இருக்க என்னவோ மாதிரி இருக்கு” என்று கேட்டாள்.

‘அதானே, உன் அமைதியைப் பார்த்து நான் கூட ஏமாந்து போய்ட்டனே…’ என்று, மனதுக்குள் புலம்பிக் கொண்ட விஸ்வா,

 “இன்னும் கொஞ்ச நேரம் போட்டுக்கோ ஷக்தி. எப்படியும் ஏர்போர்ட் போகுறதுக்கு முன்னாடி, கழட்ட தான் செய்யணும். இல்லைன்னா தங்கத்தை கடத்துடுறோம்னு, கஸ்டம்ஸ்ல நம்மளை பிடிச்சு வச்சாலும் வச்சுக்குவாங்க.” வளையல்கள் நிறைந்திருந்த மனைவியின் இருகைகளையும் பற்றி குலுக்கியபடியே சொன்னான்.

கணவனின் கேலியில் சிரித்த ஷக்தி,”விஸ்வா… உங்க மாமா எனக்கு வளையலை போட்டுவிட்டப்போ, அவர் கை நடுங்குனதை கவனிச்சீங்களா? அதேபோல அவர் கண்ணை உத்து பாத்தீங்களா? ரொம்ப சிவந்து போய் இருந்தது. ஒருவேளை அழுதிருப்பாங்களோ?” என்று கேட்டாள்.

சௌந்தரைப் பற்றி முதன்முதலாக கொஞ்சம் அதிகமாக ஷக்தி பேசுகிறாள் என்றாலும், ‘உங்க மாமா’ என்ற அழைப்பிலேயே மனைவியின் மனது புரிந்தது. இருந்தாலும், “தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்னு இதைத்தான் சொல்லுவாங்களோ ஷக்தி?” என்று மனைவியிடமே கேட்டான் விஸ்வா.

கணவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசித்து கொண்டிருந்தவளை, காப்பாற்றுவது போல அவளின் கைபேசி அழைத்தது.

எடுத்து பார்த்தவள், “அஸ்வி…” என்றபடியே அவளோடு பேச ஆரம்பித்தாள். தன் கேள்வியிலிருந்து அவள் தப்பித்த விதத்திலேயே, தகப்பனுக்கும் மகளுக்குமிடையே எதையும் கொண்டு இட்டு நிரப்ப முடியாத இடைவெளியொன்றை காலம் உருவாக்கி வைத்திருப்பது தெளிவாக புரிந்தது விஸ்வாவுக்கு.

வேலை நிமித்தம் கணவனோடு லண்டனில் இருக்கும் தன் தங்கையோடு முகமெல்லாம் சிரிப்பாக பேசிக் கொண்டிருந்த ஷக்தியை பார்த்தவன், ‘எக்காலத்திலும் தன் மாமனை புரிய வைக்கிறேன் என்று சொல்லி மனைவியின் மனதை ரணமாக்கி விடக்கூடாது’ என்றும் முடிவு செய்து கொண்டான்.

எனவே, விட்ட பேச்சை தொடரும் எண்ணமின்றி அவன் அமைதியாக இருந்தான். அஸ்வியோடு பேசி முடித்தவளும், அப்படியொரு பேச்சு தங்களுக்குள் நடைபெறாதது போலவே காட்டிக்கொண்டு, கணவனுக்கருகில் படுத்து, “கால் ரொம்ப வலிக்குது விஸ்வா. என்னவோ கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா ஃபீலாகுது” என்று சொன்னாள்.

“இன்னைக்கு ரொம்ப நேரம் உக்காந்துட்டல்ல ஷக்தி. அதனால கூட கால் வலிக்கலாம். கொஞ்சம் ஹாட் வாட்டர்ல உடம்பு கழுவிட்டு படு, நல்லாயிருக்கும்” என்றவன், பாத்ரூமிற்கு சென்று ஹீட்டரை போட்டு விட்டு வந்து, மனைவியின் கையைப்பிடித்து எழுப்பி பாத்ரூமில் கொண்டுபோய் விட்டான். இப்போது இன்னும் முகத்தை சுருக்கினாள் ஷக்தி.

“என்னடா செய்யுது?” பதறியபடி கேட்டான் விஸ்வா.

“ஒன்னுமில்லை விஸ்வா. குளிச்சிட்டு வந்து கொஞ்சம் படுத்து எழும்புனா, எல்லாம் சரியாகிடும்னு நினைக்கிறேன்” என்று சொல்லியபடி குளியலறைக்குள் நுழைந்து கொண்டவளுக்கு, தன் உடம்பில் வித்தியாசமான மாற்றங்களும், அதைத் தொடர்ந்து வலியும் எழுவது புரிந்தது.

 வேகமாக தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, வெளியே வந்தவள், “எனக்கு… எனக்கு லேபர் பெயின் வந்தது போலவே இருக்கு விஸ்வா. என்னால முடியல…” பல்லைக் கடித்து கொண்டு கணவனின் தோள் சாய்ந்தாள்.

“என்ன சொல்லுற ஷக்தி? டாக்டர் கொடுத்த டியூ டேட்டுக்கு இன்னும் ட்வென்டி டேய்ஸ்ஸுக்கு மேல இருக்கே ம்மா.”

பதட்டத்தோடே சொல்லியவன், ஒற்றைக்கையால் மனைவியை அணைத்து கொண்டு, ஃபோன் மூலம் மனைவியின் நிலையை அன்னைக்கு தெரிவிக்க, நிமிட நேரத்தில் வீட்டில் பரபரப்பு பற்றிக்கொண்டது.

விஷயம் தெரிந்ததும் கலைவாணியும், “டாக்டர் சொன்ன நாளுக்கு இன்னும் இருபது நாளுக்கு மேல இருக்கே!” என்று மருமகன் சொன்னதையே சொல்லி பதறினார்.

 “பதறாத கலை, முதல்ல இது பிரசவ வலிதானான்னு நிச்சயம் பண்ணிக்குவோம். ஒருவேளை ஷக்தி நாள்கணக்கு சொன்னதுல கூட ஏதாவது முன்ன பின்ன ஆகியிருக்கலாம்.” பஞ்சவர்ணம் மருமகளை ஆறுதல்படுத்த, மனைவியை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு கீழே வந்திருந்தான் விஸ்வா.

வலியின் அளவு கூடியிருப்பதை ஷக்தியின் முகத்திலிருந்தே கண்டுகொண்டவர்கள், தாமதிக்காமல் பக்கத்திலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து, ஷக்தியைக் காரில் ஏற்றினார்கள்.

நடக்கும் அத்தனையையும் உச்சபட்ச அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டு நின்றிருந்த சௌந்தர், கார் கண்களிலிருந்து மறையவும் அடியற்ற மரம் போல கண்களிரண்டும் நிலைகுத்தியபடி தரையில் சாய்ந்தார். அவருடைய கையும், காலும் நிலையின்றி இழுத்து, இழுத்து வெட்ட ஆரம்பித்தது.

ஷக்தியோடு, விஸ்வா, மீனாட்சி, கலைவாணி, பஞ்சவர்ணம், தமிழரசு என்று அத்தனை பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கௌரி, “நான் தேவையான திங்க்ஸ் எடுத்துட்டு பின்னாடியே வந்துடுறேன்” என்று சொல்லி வீட்டுக்குள்ளே வந்தவர், கணவனின் நிலையைக் கண்டு அலறினார்.

இத்தனை நாட்களில் இப்படி ஒன்று கணவனுக்கு ஏற்பட்டு பார்த்திராத கௌரியின் கண்களில்‌ பயம் குடிகொண்டது.

அவரைத் தொடர்ந்து வீட்டுக்குள் வந்த, விஸ்வாவின் சித்தப்பா பசுபதி, அண்ணனின் மைத்துனனை அள்ளிக்கொண்டு, ஷக்தியை அழைத்து சென்றிருக்கும் அதே மருத்துவமனைக்கே காரைச் செலுத்தினார்.

இவர்கள் சௌந்தரோடு அங்கே போய் சேரும் போது, ஷக்திக்கு இது லேபர் பெயின் தான் என்று சொல்லி, அவளை லேபர் வார்டுக்குள் அழைத்து சென்றிருந்தார்கள்.

பசுபதி, மருத்துவமனையில் இருந்த தன் அண்ணனுக்கு ஏற்கனவே தகவலை தெரிவித்திருந்தார். அவர் விஷயத்தை யாரிடமும் சொல்லாமல், மருத்துவர்களோடு காத்திருந்தார்.

சௌந்தரை மருத்துவமனைக்கு கொண்டு வரவும் தங்கள் பொறுப்பில் எடுத்து கொண்ட மருத்துவக் குழு, அவருக்கு முதலுதவியை தாமதமின்றி ஆரம்பித்தார்கள்.

மருத்துவ உதவி சரியான நேரத்தில் கிடைக்கவும், சௌந்தரின் உடல்நிலை சீரானது. “அதீத மன உளைச்சல் தான் சௌந்தரின் இந்த நிலைக்கு காரணம்” என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

ஆமாம்… சௌந்தருக்கு இது, இன்று, நேற்று வந்த மன உளைச்சல் அல்ல. பிரசவத்திற்காக மனைவியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு கனவுகளோடு காத்திருந்த கணவன், மறுபடியும் தன் மனைவியை உயிரோடு பார்க்கமுடியாத காலத்தில் ஆரம்பித்த மன உளைச்சல்.

ஷக்தி தாய்மையடைந்த விஷயத்தை கேள்விப்பட்டு சந்தோஷம் கொண்டாலும், நாளாக, நாளாக மனைவி செண்பகத்தின் நினைவு வந்து ‘மகளுக்கும் அப்படி எதுவும் நிகழ்ந்து விடுமோ?’ என்று நாளும் பொழுதும் இடைவிடாது எண்ணி எண்ணி கலங்கியதால் வந்த மன உளைச்சல்.

அதற்கு தோதாக ஷக்திக்கும் குறிப்பிட்ட நாளுக்கு முன்னே பிரசவவலி வந்துவிடவே, அவரை யோசிக்கவே விடாமல் மூளை மரத்தது போலாக, அடியோடு வீழ்ந்து விட்டார் சௌந்தர்.

ஷக்திக்கு பெரிய அளவில் கஷ்டத்தை கொடுக்காமல், அவளின் பெண்ணரசி இப்பூவுலகை தரிசிக்க, இவ்வளவு நேரமும் கலக்கத்தோடு நின்றிருந்த குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உற்சாகம் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.

அதன் பிறகு தான், சௌந்தரின் நிலைமையையும், அங்கே சிகிச்சைக்காக சேர்த்திருப்பதையும் கூறினார் விஸ்வாவின் அப்பா சதாசிவம்.

கூடவே, “மன உளைச்சல் அதிகமானதால இப்படி ஆகிடிச்சுன்னு டாக்டர்ஸ் சொல்லுறாங்க” என்றும் தகவல் சொல்ல, அவரின் மன உளைச்சலுக்கு காரணம் எதுவாக இருக்கும் என்று தெரியாதவர்களா அங்கிருப்பவர்கள்?

கலைவாணியும் தமிழரசுவும், அன்றைய தங்களின் முடிவுதான் அத்தனை பிரச்சினைகளுக்கும் ஆரம்பபுள்ளியோ, என்று தவித்துப் போனார்கள்.

தம்பதியரின் முகமாறுதலிலேயே அவர்களுடைய மனதைப் படித்த சதாசிவம், “இப்படித்தான் நடக்கணும்னு, காலம் எழுதி வச்ச கணக்கு இது. அப்படி செய்திருக்கலாமோ? இல்லை இப்படி செய்திருக்கலாமோன்னு நம்மால நினைச்சு தான் பார்க்க முடியுமேயொழிய, நடந்த எதையும் நம்மால மாற்ற முடியாது. அதனால ஏதாவது யோசிச்சு உங்களை நீங்களே வருத்திக்காதீங்க” என்றார்.

அதற்கு மேல் தமிழரசு தம்பதியரை சிந்திக்க விடாமல், பேத்திக்காக செய்ய வேண்டிய கடமைகள் இழுத்துக் கொண்டது.

“சரியான அவசரகுடுக்கை உங்க பேத்தி. அதான் சீக்கிரம் உங்களையெல்லாம் பார்க்க வந்துட்டா.” சிரித்துக் கொண்டே சொன்ன டாக்டர், “குழந்தை முழுவளர்ச்சியோட இருக்கிறா. அதனால இன்ங்குபேட்டர்ல எல்லாம் வைக்க வேண்டிய தேவையில்லை” என்று குழந்தையை கொண்டு வந்து கொடுத்தார்.

ஷக்தியை முதலில் கையேந்திய பஞ்சவர்ணமே, அவளின் மகளையும் முதன்முதலில் தன் கைகளில் வாங்கிக் கொண்டார்.

அதற்குமேல் தன்னைத் தவிர வேறு எதையும் சிந்திக்க விடாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டது குழந்தை.

சுகப்பிரசவம் என்பதால், சிலமணி நேரங்களிலேயே ஷக்தியை சாதாரண வார்டுக்கு மாற்றிவிட்டார்கள்.

குடும்பமாக அனைவரும் ஒரு அறையிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் கௌரியும் சௌந்தரும் இல்லாதிருக்கவே, தன் படுக்கையருகே நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டு, தன்னையே பார்த்தபடி இருந்த கணவனிடம், “உங்க மாமா எங்க விஸ்வா?” என்று கேட்டாள் ஷக்தி.

“அது… “ என்ன சொல்வதென்று தெரியாமல் விஸ்வா தடுமாறினான்.

“ஏன்? அவருக்கு ஏதாவது பிரச்சினையா? நான் ஹாஸ்பிடல் கிளம்பும்போதே அவரோட முகத்தை பார்த்தேன். ரொம்ப டென்ஷனா இருந்த மாதிரி இருந்தது. சொல்லுங்க விஸ்வா? ஏதாவது பிரச்சினையா?” மறுபடியும் ஷக்தி கேட்க, மறைக்க முடியாமல் விஸ்வா, அத்தனையையும் சொல்லிவிட்டான்.

விஸ்வா சொன்ன அனைத்தையும் கேட்டவள், ஏதும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள். எதற்காக அழுகிறோம் என்று தெரியாமலேயே அவள் கண்களிரண்டும் அழுதன.

அந்நேரத்தில், டாக்டரின் அனுமதியோடு, மனைவி பின்தொடர அங்கே வந்த சௌந்தர், “என்னாச்சு ஷக்தி ம்மா? நல்லாயிருக்கத்தானே?” என்று கேட்டபடியே அவள் கண்ணீரை துடைத்து விட்டார்.

“ம்ம்…” என்று தலையாட்டியவளின் கண்களிலிருந்து பொங்குமாக் கடலாக இன்னும் இன்னும் பொங்கியது கண்ணீர்.

அதை துடைத்து விட்டபடி, தன்னருகே உணர்ச்சி பிழம்பாக மாறி நின்ற மனிதரை, ‘அப்பா..’ என்று அழைக்க நினைத்தாலும், அந்த வார்த்தை மட்டும் ஏனோ நாக்குக்கு வசப்பட மறுத்தது ஷக்திக்கு.

மகளின் தடுமாற்றங்களையும், பரிதவிப்பையும் பார்த்து கொண்டு நின்ற சௌந்தருக்கு, ‘அப்பா’ என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல. உயிரோடும், உணர்வோடும் கலந்துவிடும் உறவு என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது. அதற்கு மேலும் மகளை வதைக்க விரும்பாது, தன் பார்வையை கலைவாணியின் கைகளிலிருந்த பேத்தியின் மீது ஆவலாக பதித்தார்.

அவர் பார்வையில் குழந்தையோடு உட்கார்ந்திருந்த கலைவாணி எழும்பி, “வாங்கிக்கோங்க ண்ணா” என்று குழந்தையை நீட்டினார்.

 ஒரு வினாடி, ஒரே ஒரு வினாடி யோசித்த சௌந்தர், “இதுவரை இதுமாதிரி குட்டி பேபீஸை தூக்குனதே கிடையாது ம்மா. எப்படி தூக்கணும்னு சொல்லிக் குடுங்க” என்றபடியே கைகளை நீட்டினார்.

அங்கிருந்த மற்றுமொரு படுக்கையில் அவரை அமரச் சொல்லி, வாகாக குழந்தையை வைத்துக் கொள்ளும் முறையை சொல்லிக்கொடுத்து, அவர் கைகளில் குழந்தையைக் கொடுத்த கலைவாணி, கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தார் என்றால் அது மிகையல்ல.

தன் இரு உள்ளங்கைகளுக்குள், மகளின் மறுபிம்பமாக தூங்கி கொண்டிருக்கும் அந்த குட்டி உருவத்தைக் கண்ட சௌந்தர், ‘இழந்த தன் சொர்க்கம் மறுபடியும் தன் கைகளுக்குள் வந்துவிட்டது’ என்று எண்ணி சிலிர்த்தார்.

‘சொல்லப்பட வேண்டிய நேரத்தில் சொல்லப்படாத வார்த்தைகள் எப்போதுமே பயனற்றவை’ என்ற பெரிய பாடத்தை காலம் அவருக்கு கற்றுக் கொடுத்திருக்க, இன்னும் ஒருமுறை தன்வாழ்வில் அந்த பாடத்தை படிக்க விரும்பாதவறாக, “தாத்தா டா பாப்பு… நான் உன் தாத்தா டா செல்லக்குட்டி, எங்க… தாத்தா சொல்லுங்க பாப்போம்.”

விட்டால் அப்பொழுதே குழந்தையை தாத்தா என்று சொல்ல வைத்துவிடுபவர் போல திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தவரின் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிய, ஒருசொட்டு கண்ணீர் அந்த பிஞ்சு பாதத்தில் பட்டுத்தெறித்தது.

தூக்கத்தில் வந்து தேவதை விளையாட்டு காட்டியதோ என்னவோ, அவர் கைகளில் இருந்த குழந்தை தன் பட்டிதழ் விரித்து சிரித்தது.

சௌந்தரின் செயலை ஒரு புன்னகையோடு அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, அவர் பக்கத்தில் வந்தமர்ந்த சஞ்சீவ்,

“பாப்பா சிரிக்குறா பாருங்க சௌந்தர் ப்பா… இப்பிடி நீங்க கண்ணுல தண்ணி வச்சிட்டு இருந்தா, எப்படி அவ முகம் உங்களுக்கு தெளிவா தெரியும்?” என்று கேட்டபடியே தன் கையிலிருந்த கைக்குட்டையால் அவர் கண்ணீரைத் துடைத்தான்.

தான் ஓரிடத்திலிருந்து அப்பா என்ற வார்த்தையைக் கேட்பதற்காக தவமிருந்தால், அதன் பிரதிபலிப்பு இன்னொரு இடத்திலிருந்து வருவதை நினைத்து சிரிப்பு வர, தன் வயது மறந்து ஆறுதலாக இளையவனின் தோள்களில் லேசாக சாய்ந்தார் சௌந்தர்.

அவர்கள் இருவரையும் மென்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ஷக்தி.

‘சௌந்தரை அப்பா என்று ஷக்தி அழைப்பாளா?’ இந்த கேள்விக்கான பதிலை காலத்தின் கைகளில் கொடுத்து நாம் விடைபெற்றுக் கொள்வோம் தோழமைகளே.