அத்தியாயம் 02
“ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ட்டூமச் தான் ப்ரியா.”
சென்னை எக்மோரில் இருந்து மதுரை நோக்கி கிளம்பிய இரயிலின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டு, தன்னை வழியனுப்ப வந்திருந்த தன் குடும்ப உறுப்பினர்கள் கண்ணை விட்டு மறையும் வரை கையசைத்து விட்டு திரும்பிய ஷக்தி ப்ரியாவிடம், சிரித்தபடி கூறினாள் அஸ்வினி.
அவள் அருகிலிருந்த ஊர்மிளாவின் சிரிப்பு, தோழியின் கருத்தில் எனக்கும் உடன்பாடே என்று சொல்லியது.
“ஊருக்கு போற பொண்ணை ஆசையா வழியனுப்ப வந்தது, உங்க ஊர்ல ஒரு குத்தமாய்யா?”
அணிந்திருந்த கருப்பு கலர் முழுநீளக்கை சட்டையை மடித்து விட்டுக்கொண்டு சிரித்தபடி கேட்ட ஷக்திக்கு, தோழிகள் எதனால் தன்னை இப்படி கிண்டல் செய்கிறார்கள் என்று தெரிந்து தான் இருந்தது.
இதோ இருக்கும் மதுரைக்கு அவளை அனுப்பி வைக்க, வீட்டிலிருந்த அத்தனைபேருமே இரயில் நிலையத்திற்கு வந்திருந்ததே ஷக்தியின் தோழிகளின் சிரிப்புக்கு காரணமாகிப் போனது.
காலை ஏழு மணிக்கு ட்ரெயின். பெண்கள் மூவருக்காகவும் இரண்டாம் வகுப்பு இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஸ்டேசனுக்கு வந்த நேரத்திலிருந்து, “போற இடத்தில் பதவிசாக நடந்துகொள்ள வேண்டும்” என்று அப்பத்தா திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்க, அமைதியாக நின்றிருந்த கலைவாணியோ மகளின் கையை தன் கையோடு கோர்த்து கொண்டு விடவேயில்லை.
தமிழரசு, இந்த நேரம் பார்த்து தனக்கு வந்த அலுவலக மீட்டிங்கை, வஞ்சனையில்லாமல் சபித்துக் கொண்டார். இல்லாவிட்டால், “பெண்கள் மூவரையும் தானே மதுரை வரை கொண்டு வந்து விட்டுருப்பேன்” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
“நான் அடிக்கடி இப்படி ட்ரெயின்ல வீட்டுக்கு போறது வழக்கம் தான் அங்கிள், பயப்படாதீங்க. கரெக்ட்டா சாயங்காலம் மூனு, மூனரைக்குள்ள மதுரையை ட்ரைன் ரீச்சாகிடும். அங்கயிருந்து, எங்கவீட்டு கார்ல வீட்டுக்கு போயிடுவோம்” என்றாள் அஸ்வினி.
அஸ்வினியின் சமாதானப்பேச்சை கேட்ட பிறகும் கூட, பெண்களுக்கு பக்கத்து இருக்கையில் மதுரைக்கு செல்வதற்காக உட்கார்ந்திருந்த முதிய தம்பதியரிடம், மூவரையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுமாறு பணிவோடு சொல்லிவிட்டே சென்றிருந்தார் தமிழரசு.
சஞ்சீவ் மட்டும் தான், “எஞ்ஜாய் தி ட்ரிப் ஷக்தி… போட்டோஸ் நிறைய எடுத்து எனக்கு அனுப்பு” என்று மலர்ச்சியோடு சொல்லிச் சென்றிருந்தான்.
“ஏன்டி ப்ரியா… இந்த ஒன் வீக்குக்கு உன்னை பிரியவே உங்க வீடு இந்த பாடுபடுதே, உன்னை கல்யாணம் செய்து ஹஸ்பெண்ட் வீட்டுக்கு அனுப்புன பிறகு என்ன பண்ணுவாங்களாம்?” தன் அரும்பெரும் சந்தேகத்தை கேட்டாள் ஊர்மிளா.
“நான் ஹஸ் வீட்டுக்கு போறதுக்கு பதிலா, அவரை எங்க வீட்டுக்கு கூப்டுக்குவோம். தட்ஸ் இட்…” கண்களைச் சிமிட்டியபடி சட்டென்று ஷக்தி சொல்ல, லேசான வெட்கத்தோடு வெடித்து சிரித்தார்கள் அஸ்வினியும் ஊர்மிளாவும்.
கட்டுப்பாடுகள் விதிக்க அருகில் பெற்றோர் இல்லாத சூழ்நிலை, இளமை தந்த தைரியம், தோழிகள் மூவரும் ஒன்றாக செய்யும் முதல் பயணம் தந்த உற்சாகம், இவையெல்லாம் சேர்ந்து அந்த யுவதிகளை உற்சாக ஊற்றாக மாற்றியிருந்தது.
அருகிலிருந்த மூத்த தம்பதியருக்கு இளம்பெண்களின் தயக்கமில்லாத இந்த பேச்சுகள் வியப்பைத்தர, மெதுவாக பெண்களோடு பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்கள்.
பெண்களுக்கும் பெரியவர்களின் பேச்சு சுவாரஸ்யமாக இருக்கவே, விரும்பியே அவர்களோடு பேசிக்கொண்டு வந்தார்கள்.
சற்றுநேரத்தில் ஷக்தியின் கைபேசி அழைத்தது. இருக்கையிலிருந்து எழும்பி தன் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்த ஃபோனை கையிலெடுத்த ஷக்தி, “அம்மா…” என்று முணுமுணுத்தவாறே அதை காதுக்கு கொடுத்தாள். பார்த்துக்கொண்டிருந்த தோழிகளின் உதடுகளில் ஊமைச்சிரிப்பு அள்ளிக்கொண்டு போனது.
ஆமாம்… தங்கள் வயதுடைய பெண்ணை, ஒரு குடும்பமே குழந்தையாகத் தாங்க, சிரிப்பு தான் வந்தது அவர்களுக்கு.
“ஹ்ம்ம்… ரொம்ப மஜாவா இருக்கு மம்மிஜி…” என்று அன்னையின் முதல் கேள்விக்கு உற்சாகமாக பதில் சொல்லிய ஷக்தி,
“ம்ம்… எந்த ஊருல்ல வண்டி போயிட்டு இருக்குன்னு எனக்கு தெரியலையே ம்மா” என்று யோசனையோடு முகம் சுருக்கியபடியே தோழிகளைப் பார்க்க, அவர்கள் சொல்லிய ஊரின் பெயரை அன்னைக்கு சொன்னாள்.
அடுத்து, “ம்ஹூம்ம்… இனிமேல் தான் சாப்பிடணும்” என்று சொல்ல, அங்கிருந்து என்ன கேள்வி வந்திருக்கும் என்று புரிந்து கொண்ட தோழிகள், அவளை கலாய்ப்பதற்காக ஷக்தி பேசிமுடிக்கும் தருணத்திற்காக காத்திருந்தார்கள்.
அவளோ, இன்னும் பல ‘ஹ்ம்ம்… ம்ஹூம்… அச்சா… டீகே’ போன்ற வார்த்தைகளை உதிர்த்து விட்டே பேச்சை முடித்து, தோழிகளைப் பார்த்து சிரித்தாள்.
“தெய்வமே… இவ்வளவுக்கு பிறகும் நீ சிரிச்சிட்டே இருக்குறியே, உன் மனதைரியத்தை நாங்க பாராட்டுறோம் தெய்வமே” என்ற தோழிகளின் வார்த்தையில் வாய்விட்டு சிரித்த ஷக்தி, மூவருக்கும் சேர்த்து அம்மா கொடுத்து விட்டிருந்த காலை உணவை கடை பரப்பினாள்.
எதிரும் புதிருமாக மொத்தம் ஆறுபேர் இருக்க வேண்டிய இருக்கையில் ஐந்து பேர் மட்டுமே உட்கார்ந்திருந்தார்கள். முதிய தம்பதியரின் அருகே காலியாக இருந்த இடத்தில் ஷக்தி உட்கார்ந்து கொண்டு தோழிகளுக்கு உண்ண கொடுத்தவள், பெரியவர்களையும் உண்ண அழைத்தாள்.
மறுத்த அப்பெரியவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை உண்டு முடித்தார்கள்.
சாப்பிட்டு முடித்து, மறுபடியும் பெரியவர்கள் பக்கத்தில் தோழிகளுக்கு எதிர்புறமாக உட்கார்ந்து ஷக்தி பேசிக்கொண்டு வர, அந்தாக்ஷரி விளையாடலாம் என்றாள் அஸ்வினி.
பெரியவர்களும் இளையவர்களோடு ஆர்வமாக கூட்டு சேர்ந்து கொள்ள, களைகட்டியது விளையாட்டு. அதுவும் ஷக்தி பாடும் போதெல்லாம் பழைய பாடல்களையேப் பாடினாள்.
“என்னவோ மும்பைவாலான்னு சொன்ன? ஆனா பாட்டெல்லாம் உங்க பாட்டி காலத்து பாட்டா பாடுறியே?” என்று அதற்கும் தோழிகள் அவளை கிண்டல் செய்தார்கள்.
“அது… அப்பத்தா கூடவே சேர்ந்து பாட்டு கேட்டுக் கேட்டு, பழைய பாட்டெல்லாம் மனப்பாடமாகிப் போச்சு.” வெள்ளந்தியாக சிரித்தாள் ஷக்தி.
இவர்களுக்கு அடுத்தாற்போல், எதிரெதிராக இருந்த ஜன்னலோர ஒற்றை இருக்கைகளில், கடந்த ஸ்டேஷனில் ஏறி உட்கார்ந்த நேரத்திலிருந்து இவர்களையே சுவாரஸ்யமாக பார்த்து கொண்டு வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவன், “நாங்களும் உங்ககூட ஜாயின் பண்ணிக்கலாமா?” என்று கேட்டவாறே, சட்டென்று ஷக்தியின் அருகில் நெருக்கியடித்து உட்கார்ந்தான்.
அவனை நிமிர்ந்து பார்த்த ஷக்தி, லேசாக நகர்ந்து உட்கார்ந்தபடியே, “ஷ்யூர் தோஸ்த்” என்றாள். மற்றொருவனோ, எதிர்பக்கம் உட்கார்ந்திருந்த அஸ்வினியின் பக்கத்தில் உட்கார்ந்தான்.
இளைஞர்களின் எதிர்பாராத இந்த செயலில், அஸ்வினியும், ஊர்மிளாவும் லேசாக பதறிப்போனார்கள். ஆனால் ஷக்தி இயல்பாக உட்கார்ந்திருக்கவும், இவர்களும் தங்கள் தயக்கம் உதறி விளையாட ஆரம்பிக்க, சற்று நேரத்திலேயே அந்த இளைஞர்கள் தங்கள் திருவிளையாடலை ஆரம்பித்து விட்டார்கள்.
தாங்கள் பாடவேண்டிய முறை வரும்போதெல்லாம் இரட்டை அர்த்த பாடல்களைப் பாடியதோடு, “சூப்பர் பாட்டுல்ல?” என்று பெண்களைப் பார்த்து கண்சிமிட்டியபடி கேட்டு, நமுட்டு சிரிப்பையும் வீசினார்கள்.
அந்த இளைஞர்கள் நடந்துகொண்ட முறையிலிருந்து விளையாட்டு விபரீதமாக போவதை உணர்ந்து கொண்டார்கள் முதிய தம்பதியினர்.
எனவே, அவர்களை அங்கிருந்து அகற்றும் பொருட்டு, தங்களுக்கு சோர்வாக இருப்பதால் இத்தோடு விளையாட்டை நிறுத்திக் கொள்ளலாமென்றும், தாங்கள் படுக்க விரும்புவதால் இளைஞர்களை அவர்கள் இடத்துக்கு செல்லுமாறும் சொல்ல, விளையாட்டு நின்றதேயொழிய, இடத்தை காலிசெய்யவில்லை அந்த காவாலிகள்.
‘இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை?’ என்ற மனநிலையில் பெண்கள் இருக்கும் போது, ஷக்தியின் அருகில் இருந்தவன், ஏதோ சொல்லி சத்தம் போட்டு சிரித்தபடியே, இயல்பாக அவளின் தோள்களைச் சுற்றி தன் கையைப் போட்டான்.
“ப்ளடி ஸ்கவுண்ட்ரல்… பக்கத்துல உக்கார அலவ் பண்ணுனா, எம்மேல கையையும் போடலாம்னு நினைச்சிட்டியா?” என்று உறுமிய ஷக்தியின் கைகள், பளாரென்று அந்த இளைஞனின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.
அவ்வளவு தான்… அவமானத்தால் சிலிர்த்துக் கொண்ட அந்த இளைஞன், சட்டென்று ஷக்தியின் கையைப் பற்றி எழுப்பினான். பின்னர், அதே கையை முறுக்கி, அவளின் முதுகுக்கு பின்னே கொண்டு சென்றவன்,
“எங்களை அட்ராக்ட் பண்ணுறதுக்காக இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு, இப்போ மட்டும் எதுக்குடி துள்ளுற? தோள்ல கை போட்டதுக்கே என் கன்னத்துல கைவச்சியே, இப்போ நான் செய்யப்போறதுக்கு எதுல கைவைப்ப?”
அசிங்கமாக சிரித்தபடி அவள் உதடுகளை நோக்கி முன்னேற, அந்த வஞ்சனை நிறைந்த முகத்தில் ஓங்கி ஒரு குத்து விழுந்தது.
ஆம்… காலத்துக்கும் மறக்க முடியாத அளவுக்கு விழுந்தது.
தன்னிடம் சிக்கிக்கொண்டவளோ, அங்குமிங்கும் தலையை ஆட்டி, தன் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்க, தன்னை இத்தனை வேகமாக தாக்கியது யாரென்று அந்த இளைஞன் நிமிர்ந்து பார்த்தான்.
அவனுக்கு முன்னால் வானுக்கும் மண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுத்து நின்றான் வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன்.
தோழியை அந்த முரடனின் கைகளிலிருந்து மீட்டுவிட முயற்சி செய்து கொண்டிருந்த அஸ்வினி, அந்த நெடுமாலைக் கண்டு, “அண்ணா…” என்றழைத்து நிம்மதி பெருமூச்சுவிட, அந்த அண்ணனாகப்பட்டவனோ தங்கையைத் தீப்பார்வை பார்த்தான்.
அவன் விஸ்வஜித். அஸ்வினியின் உடன்பிறந்த சகோதரன். விஷுவல் ஆர்ட்ஸ் அண்ட் போட்டோகிராபியில் பட்டம் முடித்து, புகைப்பட கலைஞனாக வெற்றிகரமாக மதுரையில் தன் தொழிலை நடத்தி வருகிறான்.
இங்கே சென்னையில் தன்னோடு படித்த நண்பனின் திருமணத்தில், அவனின் அழைப்பின் பெயரில் ஃபோட்டோ எடுத்து கொடுத்துவிட்டு திரும்பிக் கொண்டிருக்கிறான்.
சென்னை எக்மோர் ஸ்டேஷனில் தங்கை ட்ரெயினில் ஏறும் போதே, அதே கம்பார்ட்மெண்டின் இறுதியில் அமர்ந்திருந்தவன், தங்கையோடு உடன் வந்தவர்களால் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முயலாமல், அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
ஆனால் கவனம் முழுவதும் தங்கையிடமே இருக்க, பிரச்சினையானதும் ஆஜராகி விட்டான்.
பெண்களுக்கு, இப்படி ஒரு திடீர் ஆதரவை எதிர்பாராத அந்த இளைஞர்கள் வெலவெலத்துப் போய் நிற்க, இன்னும் நான்கைந்து உதைகளை நன்றாக கொடுத்து, அடுத்த ஸ்டேஷனிலேயே, அவர்களை உடமையோடு வம்படியாக இறக்கிவிட்டிருந்தான் விஸ்வஜித்.
அங்கிருந்த பெரும்பான்மையானவர்கள், விஸ்வஜித்துக்கு ஆதரவாக நிற்க, வேறுவழியில்லாமல் இறங்கியிருந்தார்கள் அந்த இளைஞர்கள்.
ஸ்டேஷனிலிருந்து ட்ரெயின் கிளம்பவும், தன் கைகளை ஒன்றோடொன்று தட்டியபடியே தங்கையின் அருகில் வந்து உட்கார்ந்த விஸ்வா, “இவங்கல்லாம் யாரு?” என்று கண்களால் ஷக்தியையும், ஊர்மிளாவையும் சுட்டிக் காட்டி கேட்டான்.
அந்த இக்கட்டான சூழ்நிலையில் தமையனைக் கண்டதும் சந்தோஷம் பாதி, பயம் மீதியாக உட்கார்ந்திருந்த அஸ்வினி, உமிழ்நீரை லேசாக விழுங்கியபடியே,
“இரண்டு பேரும் என்னோட ஃப்ரெண்ட்ஸ், நம்ம வீட்டுக்கு தான் கூட்டிட்டு போறேன் ண்ணா…” என்றாள் மெதுவாக.
தங்கை மீது பாசம் இருந்தாலும் அதை எளிதாக வெளிப்படுத்திக் கொள்பவன் அல்ல விஸ்வா. ஒரு கட்டுப்பாடு நிறைந்த மிலிட்டரி ஆஃபீஸர் போன்ற தோரணையே எப்போதும் அவனிடம். அதனால் அண்ணன் என்றால் கொஞ்சம் பயம் தான் அஸ்வினிக்கு.
தங்கையின் பதிலில் ஊர்மிளா பக்கம் விழிகளை நகர்த்தியவனின் முகத்தில் தோன்றிய திருப்தி, ஷக்தியை பார்வையிட்டவனிடம் இல்லாமல் போனது.
“இத்தனை வருஷத்துல எத்தனையோ நாள் மதுரைக்கும் சென்னைக்கும் தனியா ட்ராவல் பண்ணியிருக்குற. ஆனா, என்னைக்காவது இப்பிடி ஒரு இன்சிடென்ட் நடந்திருக்குதா அஸ்வி?”
விஸ்வாவின் கேள்வி தங்கைக்கானதாக இருக்க, பார்வை ஷக்தியின் மீது அழுத்தமாக பதிந்திருந்தது.
அவனின் பார்வையே நடந்தவற்றுக்கு ஷக்தி தான் காரணம் என்று சொல்லாமல் சொல்ல, ஒருவகையான சங்கடத்திற்கு உள்ளான அஸ்வினி, வேறுவழியில்லாமல், “இல்லை” என்று தலையை ஆட்டினாள்.
நடை, உடை, பாவனையில் எப்போதுமே பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய விஸ்வஜித்துக்கு, ஷக்தியின் உடையும், எந்த பாகுபாடுமின்றி அவள் அந்த இளைஞர்களிடம் சகஜமாக பழகிய விதமும் பிடிக்காமல் போயிருந்தது.
‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் தானே. முதலிலேயே அந்த இளைஞர்களை தள்ளி நிறுத்தியிருந்திருந்தால், இந்த பிரச்சினை உண்டா?’, என்ற கோபம் அவனுக்கு. அந்த மொத்த கோபத்தையும் அவளிடம் காட்ட முடியாமல், தங்கையிடம் காட்டத் தொடங்கினான்.
“பப்ளிக் ப்ளேஸ்ல இருக்குற இடம் தெரியாமல், அமைதியா இருக்கணும்னு உனக்கு தெரியாதா? இல்ல… கூட வந்தவங்களால எல்லாம் மறந்து போச்சா?” அதட்டும் குரலில் தங்கையிடம் கேட்டவனின் பார்வை என்னவோ, மறுபடியும் மறுபடியும், ஷக்தியை குற்றம் சாட்டியபடியே இருந்தது.
அவ்வளவு தான், குலுக்கிய கொக்கோகோலாவாக பொங்கி எழுந்துவிட்ட ஷக்தி, “பப்ளிக் ப்ளேஸ்ல எப்படி நடக்கணும்னு எங்களுக்கு ட்யூஷன் எடுக்குறதை விட்டுட்டு, கொஞ்சம் உங்க இனத்துக்கும் சொல்லிக் கொடுத்தா, உங்களுக்கு புண்ணியமாப் போகும் சார்” என்றாள் நக்கலாக.
“அதெல்லாம் எங்க பசங்களுக்கு, எங்க, எப்படி நடக்கணும்னு நல்லாவேத் தெரியும்.” அமர்த்தலாக சொல்லிய விஸ்வா,
“ஆனா, உன்னை மாதிரி பொண்ணுங்க தான் சமயத்துல இங்கிதமில்லாமல், இப்போ நீ செஞ்சு வச்சது மாதிரி, எதையாவது செய்து பிரச்சினையை இழுத்து வைப்பீங்க” என்றான் குற்றம்சாட்டும் குரலில்.
“இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க? முன்னப்பின்ன தெரியாத பொண்ணு தோள்ல கையப் போடுறதும், அவளை வா, போ ன்னு உங்களை மாதிரி மரியாதையில்லாமல் பேசுறதும் தான், உங்க இங்கிதம்னு சொல்லப் போறீங்களா?” சண்டைக்கோழியாக சிலிர்த்துக் கொண்டாள் ஷக்தி.
தங்கையின் தோழி என்றதும், தங்கையின் வயதே தான் இருக்கும் என்ற எண்ணத்தில், அவளை இயல்பாக விஸ்வா ஒருமையில் அழைத்து பேச, கோபத்தின் உச்சியிலிருந்த ஷக்தி, அதையும் குறை சொன்னாள். ஆனால், அதைக் கண்டுகொள்ளாத விஸ்வா,
“நீ அடிச்சதை தப்புன்னு நான் சொல்லலை, ஆனா, அதோட பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் சட்டுன்னு கைநீட்டியது தான் தப்புன்னு சொல்லுறேன். ஒருவேளை உதவிக்கு அந்த இடத்தில நான் வரலைன்னா உன்னோட நிலமை என்னவாகியிருக்கும். அதையும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு” என்றான் கோபத்தோடு.
“ஹலோ… ஹலோ… நீங்க வந்து தான் என்னை அந்த தடியன்கிட்டயிருந்து காப்பாத்துனதா நினைச்சுக்காதீங்க. எனக்கு கராத்தே எல்லாம் தெரியும். நீங்க வராட்டாலும் கூட, அவங்கிட்ட இருந்து என்னை நான் சேவ் பண்ணியிருப்பேன்.”
“கிழிச்ச… உன் கராத்தே பெர்ஃபார்மன்ஸைத் தான் நாங்க பாத்தோம்ல.”
கண்களில் நம்பிக்கையோடு சொன்னவளின் வார்த்தைகளை இடைவெட்டி, நையாண்டி செய்த விஸ்வா மீது எக்குத்தப்பாக கோபம் வந்தது ஷக்திக்கு.
“ஏதோ பெரிய ஹீரோ மாதிரி உங்களை நினைச்சுட்டு, பிரச்சினை தொடங்குறதுக்கு முன்னாடியே உள்ளவந்து குதிச்சா, நான் எப்படி என்னோட பெர்ஃபார்மன்ஸை காட்டமுடியும்?” என்றாள் எரிச்சலோடு.
பதிலுக்கு பதில் பேசியபடியே இருந்த ஷக்தியை மேலும் கீழுமாக பார்வையிட்ட விஸ்வா, “சரியான அரைவேக்காடு. என்ன சொன்னாலும் கூடக்கூட பேசத் தெரியுதேயொழிய, ஏதாவது மண்டையில ஏறுதா பாரேன்” என்று முணுமுணுத்தபடியே,
“என்ன தான் பொண்ணுங்க, பசங்க மாதிரி ட்ரெஸ் பண்ணிகிட்டாலும், பசங்க ஆகமுடியாது, அதை மனசுல வச்சுக்கிட்டு எல்லா இடத்திலும் நடந்துக்கோ” என்று சலித்தபடியே சொன்னான்.
அவன் பார்வையில் தன் சட்டையை லேசாக இழுத்து விட்டுக்கொண்ட ஷக்தி, தங்களை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் விழித்துக்கொண்டு நின்ற அஸ்வினியிடம்,
“உங்க வீட்டைப் பற்றி எல்லாம் சொன்ன நீ, இப்பிடி பொண்ணுங்களை மதிக்கத் தெரியாத அண்ணன் ஒருத்தன் வீட்டுல இருக்கான்னு சொல்லியிருந்தா, நான் கிளம்பி வந்துருக்கவே மாட்டேன்ல அஸ்வி” என்று குறைபட்டுக் கொண்டவள்,
“இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை, இதோ இப்பவே செயினை பிடிச்சி இழுத்து, வண்டியை நிறுத்தி நான் இறங்கிக்குறேன்” என்றாள் முடிவாக.
“அதானே… நீ அரைவேக்காடு தான்னு கன்ஃபார்ம் பண்ணியே ஆவேன்னு ஒத்தகால்ல நின்னா, நான் என்ன பண்ணமுடியும்?” மெல்லிய சிரிப்போடு முணுமுணுத்தான் விஸ்வா.
“கம் அகென்… என்ன சொன்னீங்க?” என்று முறைத்தாள் ஷக்தி.
“இல்ல… இந்த இடத்துல ட்ரெயினை நிறுத்தி, ஆத்துல எந்த பக்கம் குதிச்சி, எந்த பக்கமா கரையேறப் போறன்னு கேட்டேன்.”
முற்றுமுழுதாக கிண்டலில் குளித்திருந்த விஸ்வாவின் வார்த்தைகளில், ஜன்னல் வழியே வெளிப்புறத்தை பார்வையிட்டாள் ஷக்தி. பரந்து விரிந்திருந்த ஏதோ ஒரு ஆற்றின் மேல் போடப்பட்டிருந்த தண்டவாளத்தின் மீது, தாளலயத்தோடு சென்று கொண்டிருந்தது தொடர்வண்டி.
“ம்ப்ச்” சலித்துக்கொண்டே இருக்கையில் சாய்ந்த ஷக்தி, தன்னைப் பார்த்து கிண்டலாக சிரித்துக் கொண்டிருந்த விஸ்வாவைப் பார்த்து எரிச்சலோடு, “புத்த்தூ…” என்று முணுமுணுத்தாள்.
தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து சற்றே முன்னோக்கி வந்த விஸ்வா, “என்ன சொன்ன? என்ன சொன்ன?” என்றான் பரபரப்பாக.
தான் ஹிந்தியில் ‘முட்டாள்’ என்று சொல்லிய வார்த்தை அவனுக்கு புரியவில்லை என்றதும், ஒருவித உற்சாகம் ஷக்தியின் உடம்பில் ஒட்டிக்கொள்ள, “நான் பேசுறது ஒவ்வொன்னுக்கும் உங்களுக்கு விளக்கம் தரணுமா என்ன?” என்றாள் கொஞ்சம் திமிராக.
“நீ பேசுறது என்னைப் பற்றியா இருந்தா கண்டிப்பா விளக்கம் தந்துதான் ஆகணும்.” கண்களில் பிடிவாதத்தோடு ஷக்தியை பார்த்தபடி விஸ்வா உட்கார்ந்திருந்தான்.
சாதாரணமாக, பெண்கள் என்றாலே விலகிப்போகும் அண்ணன், இன்று அறிமுகம் இல்லாத பெண்ணோடு மல்லுக்கு நிற்பதை, ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அஸ்வினி…