அத்தியாயம் 19

“ஷக்தி… தூங்காம என்ன பண்ணிட்டு இருக்குற நீ?”

நள்ளிரவில் திடீரென்று தூக்கம் கலைந்த விஸ்வா, தன்னருகே தூங்கிக் கொண்டிருந்த மனைவி, எழும்பி உட்கார்ந்திருப்பதை பார்த்ததும் ஆச்சர்யத்தோடு கேட்டான்.

“தூக்கம் வரல விஸ்வா.”

“படும்மா… தூக்கம் வரும்” கையால் வாயை மூடி, நாசூக்காக கொட்டாவியை விட்டபடியே, மனைவியை தூங்க அழைத்தான் விஸ்வா.

“நான் தப்பு பண்ணுறேனா விஸ்வா?” கணவன் சொன்னதைச் செய்யாமல் கேள்வி கேட்டாள் ஷக்தி.

அமைதியாக இருக்கும் தேன்கூட்டின் மீது கல்லெறிந்தால் என்னவாகும்? அப்படித்தான், மீனாட்சியின் வார்த்தைகளால் கலகலத்துப் போய்கிடந்தது ஷக்தியின் மனது.

தூங்குவதற்கு முன் பலதடவை தன்னிடம் கேட்ட கேள்வியை, நள்ளிரவில் எழும்பி உட்கார்ந்து கொண்டு ஷக்தி கேட்பதிலேயே, அவளின் மனக்குழப்பத்தை புரிந்து கொண்டான் விஸ்வா.

 ஷக்தியை மென்மையாக இழுத்து தன் மார்பின் மீது போட்டுக்கொண்டு, “அவரவர் நியாயம், அவரவருக்கு ஷக்தி. உன்னோட பாயிண்ட் ஆஃப் வியூல பார்த்தா, நீ செய்யுறது தப்பேயில்ல” என்று சொன்னான்.

“அப்போ, அடுத்தவங்க பார்வையில நான் செய்யுறது தப்பா தோணலாம்ல விஸ்வா?”

ஷக்தியின் இந்த கேள்வியில் அவளின் மனஅழுத்தத்தின் அளவைப் புரிந்துகொண்ட விஸ்வா, தன் வார்த்தைகளும் அவளைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, பதில் சொல்ல வார்த்தைகளைத் தேடினான்.

“என்னையே, எனக்கு பிடிக்கலை விஸ்வா. என்னைப்பற்றி நினைக்கும் போது, எனக்கே அசிங்கமா இருக்கு” என்றாள் ஷக்தி அடிபட்ட குரலில்.

ஓரளவிற்கு சூழ்நிலைகளை தைரியமாக கையாளும், ஷக்தியின் இந்த பேச்சு, விஸ்வாவை அதிர்ச்சியில் தள்ள, “ஏன்டா இப்படி பேசுற?” என்றான் மனைவியின் தலையை ஆதூரமாக தடவியபடியே.

“என்னால அப்பான்னு கூப்பிட முடியாதவங்களோட இரத்தம் உன் உடம்புல ஓடுதே. இது ஒன்னே போதாதா விஸ்வா, நான் கில்ட்டியா ஃபீல் பண்ண?”

பெற்ற பிள்ளையை பிறந்த அன்றே விட்டுக்கொடுத்து விட்டு, இப்போது வந்து உரிமை கொண்டாடும் மாமன் மீதும், அவருக்காக ஷக்தியிடம் நியாயம் பேசும் அம்மா மீதும் கட்டுக்கடங்காத கோபம் வந்தது விஸ்வாவுக்கு.

“நம்ம பிறப்புக்கு காரணமானவங்க மட்டும் தான், நம்ம பெற்றோரா இருக்க முடியும்னு யாரு சொன்னா ஷக்தி?” வார்த்தைகளை லாவகமாக கையாண்டான் விஸ்வா.

“உங்க அம்மா உட்பட எல்லாரும் சொல்லுறாங்களே?”

“இதுவரை, உன்வாழ்க்கையில் இல்லாதவங்க வார்த்தைக்கு, அத்தனை முக்கியத்துவம் குடுப்பியா ஷக்தி நீ? அவங்க முட்டாள்தனமா ஏதோ சொல்லுறாங்கன்னா, அதைவிட முட்டாள்தனமா ரீஆக்ட் பண்ணுவியா நீ?”

தன் அம்மாவின் வார்த்தைகளைத் தொடர்ந்து ஷக்தி செய்ய முயன்ற செயல் விஸ்வாவிற்கு ஒத்துக்கொள்ள முடியாததாக இருக்க, அதற்காக அவளை இப்போது அதட்டினான்.

“நீங்க என்னோட சூழ்நிலையில் இருந்து பாருங்க விஸ்வா, அப்போ தான் தெரியும் உங்களுக்கு என்னோட வலி.” லேசாக விசும்பல் வந்தது ஷக்தியிடமிருந்து.

“என்னால உன் உணர்வுகளை நல்லாவே புரிஞ்சுக்க முடியுது ஷக்தி. அது போல, எல்லாரும் உன்னை சீக்கிரமே புரிஞ்சுப்பாங்க. அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இரு ஷக்தி, ப்ளீஸ்…” மனைவியின் முதுகை தடவியபடியே சொன்னான் விஸ்வா.

“ம்ப்ச்… எனக்கந்த நம்பிக்கை கொறஞ்சிடிச்சி விஸ்வா. இல்லைன்னா, நான் அன்னைக்கு எம்மனசை… என்னோட உணர்வுகளை அவ்வளவு தெளிவா எல்லாருக்கும் சொன்ன பிறகும், இப்படி செய்வாங்களா?” ஷக்தியின் குரலில் டன்கணக்கில் ஆற்றாமை பொங்கி வழிந்தது.

“உண்மையில், எங்க மாமா ரொம்ப நல்ல மனுஷன் ஷக்தி. இதுக்கு மேல கண்டிப்பா உன்னை கஷ்டப் படுத்தமாட்டாருன்னு தான் எனக்கு தோனுது. அம்மாவும் அப்படி தான். ரொம்ப நல்லவங்க. என்ன, அண்ணன் பாசத்துல கொஞ்சம் அப்பப்ப குதிக்குறாங்க. இன்னைக்கு உன் முட்டாள்தனமான செயலைப் பார்த்து அரண்டு போயிட்டாங்க. அதனால, இனிமே அவங்களும் அமைதியா இருக்க வாய்ப்புகள் அதிகம்ன்னு தான் எனக்கு தோணுது.”

“நீங்க தான் இப்படி சொல்லிக்கணும். எனக்கென்னவோ நம்பிக்கை இல்ல” கணவனின் வார்த்தைகளை மறுத்து பேசிய ஷக்தி,

“இப்பல்லாம், இந்த வீட்டை பாக்கணும் ங்கிற ஆசையில, அஸ்வி கூட ஏன்டா இங்க வந்தோம்னே அடிக்கடி நினைக்க தோணுது விஸ்வா. நான் இங்க வந்ததால தான எல்லாருக்கும் என்னை தெரிய வந்திச்சி. இல்லைன்னா, என் குடும்பத்தோட நிம்மதியா நான் இருந்திருப்பேன்ல” என்றாள் வேதனையாக.

“அங்க சுத்தி, இங்க சுத்தி, என்னோட அடிமடியிலேயே கைவைக்கப் பாக்குறியே மா நீ.” ஷக்தியை இறுக்கி அணைத்தபடியே கூறினான் விஸ்வா.

“ஏன்? என்னாச்சு?” என்றாள் ஷக்தி புரியாதவளாக.

“நீ இங்க வரலைன்னா, நான் உன்னை எப்படி பாத்துருப்பேன்? நம்ம கல்யாணம் தான் எப்படி நடந்திருக்கும்?” மனைவியின் கன்னத்தோடு தன் கன்னத்தை இழைத்தபடியே கூறினான் விஸ்வா.

“ஆஹா… என்னை விட்டா உங்களுக்கு பொண்ணே கிடைக்காத மாதிரி பேசாதீங்க சார். இன்னைக்கு கூட ஒரு பொண்ணு, நீ முந்தி கிட்ட… இல்லைன்னா நான் எங்கத்தானை கல்யாணம் பண்ணியிருப்பேன்னு, எங்கிட்ட அழாத குறையா சொல்லிச்சி தெரியுமா?” குரலில் லேசாக உற்சாகம் மீண்டிருக்க, கிண்டலாகச் சொன்னாள் ஷக்தி.

“இது எப்போ நடந்தது?” ஆவலாக கேட்டான் விஸ்வா.

அது நடந்த நேரம் ஞாபகத்துக்கு வரவும், மீண்டும் சோகமெனும் கூட்டுக்குள் முடங்க முயன்றாள் ஷக்தி.

மெல்லிய விடிவிளக்கின் வெளிச்சத்தில், மனைவியின் முகபாவங்களை அவதானித்துக் கொண்டிருந்த விஸ்வாவுக்கு, பழையபடி மனைவி நத்தையென சோகத்திற்குள் சுருண்டு கொள்ள முயல்வது புரிந்தது.

 அவளின் மனநிலையை மாற்றும் பொருட்டு, “கொஞ்ச நேரம் நாம வெளிய போய்ட்டு வருவோமா ஷக்தி?” என்றான் மனைவியிடம்.

“இப்பவா? இந்த நடுராத்திரியிலயா?” சட்டென்று முகத்திலிருந்த சோகமேகம் கலைய, கணவனின் மார்பிலிருந்து லேசாக தலையை உயர்த்தி ஆச்சர்யமாக கேட்டாள் ஷக்தி.

“எங்க மதுரையை என்னம்மா நினைச்சுகிட்ட நீ? இது தூங்கா நகரம் ங்குறது உனக்கு தெரியாதா என்ன?” மனைவியின் நெற்றியோடு தன் நெற்றியை மோதியபடியே பெருமையடித்தான் விஸ்வா.

“கேள்விபட்டுருக்கேன், ஆனா இராத்திரி நேரம் பரபரப்பா இருக்கும் மதுரையை நான் பாத்ததில்ல” என்று, அழகாக உதடு பிதுக்கினாள் ஷக்தி.

அந்த உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டு, “இதுவரைக்கும் பார்க்காட்டா என்ன? இப்போ பாத்துடுவோம், வா…” என்று உற்சாகமாக அழைத்தான் விஸ்வா.

“அதெப்படி இப்போ வெளியப் போகமுடியும்? வீட்டுல உள்ளவங்க ஏதாவது சொல்லமாட்டாங்களா?” யோசனையோடு கேட்டாள் ஷக்தி.

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ சீக்கிரம் கிளம்பு.” விஸ்வா சொல்ல, அணிந்திருந்த ட்ராக் பான்ட், டி சர்ட்டிலிருந்து, காட்டன் சுடிதாருக்கு மாறிக்கொண்டவள், முகம்கழுவி கூந்தலையும் திருத்தி ரெடியாகினாள்.

 விஸ்வாவும் தயாராகிவர, மாடியிலிருந்த தங்களின் அறையை விட்டு இருவரும் வெளியே வந்தனர்.

“எப்படி விஸ்வா நாம போகப்போறோம்? நாம வெளியே போனதும் உள்ளயிருந்து, கதவை பூட்ட யாராவது வேணுமே?”

“பேசாம நீ என் முதுகில் ஏறிக்கோ. நான் ஒரு கயிற்றை கட்டி, இந்தப் பக்கமா இறங்கிடுறேன். அப்போ வேற யாரோட உதவியும் நமக்கு தேவையில்ல” என்று சொல்லி, மனைவியின் முறைப்பையும் பரிசாக பெற்ற விஸ்வா, ஃபோனில் பாஸ்கரை அழைத்தான். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இவர்கள் முன் வந்து நின்றான் இளவல்.

பாஸ்கரிடம், தாங்கள் வெளியே செல்லும் விஷயத்தை விஸ்வா சொல்ல, “பைக்ல அப்படியே ஒரு ரவுண்ட் போயிட்டு, நம்ம முத்து அண்ணா கடையில நல்லா சாப்பிட்டுட்டு வாங்க” என்றான்.

“சரி…” என்று தலையாட்டிக் கொண்டான் விஸ்வா. மாடியிலிருந்து, அந்த பெரிய வீட்டின் தலைவாசலை வந்தடையவே மூவருக்கும் சிலநிமிட நடை தேவைப்பட்டிருந்தது.

 வீட்டின் இரண்டாம் கட்டிலும், ஹால் முழுவதுமாக நிறைந்திருந்த பிரம்மாண்டமான தூண்கள், அரையிருட்டில் ஷக்தியை மிரட்டியது. அதை வாய்விட்டு சொல்லியவள், “பயமாயிருக்கு…” என்று விஸ்வாவை ஒட்டிக்கொண்டு நடக்க, சிரித்தார்கள் சகோதரர்கள்.

விஸ்வாவிடம் தன் பைக்சாவியை கொடுத்து, வீட்டின் கதவை திறந்து விட்ட பாஸ்கர், “திரும்பி வந்ததும் ஃபோன் பண்ணு விஸ்வா. நானே வந்து கதவை திறந்து விடுறேன்” என்று சொல்லியே இவர்களை அனுப்பி வைத்தான்.

ஒளிவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த மதுரை நகரின் சாலையில், பைக்கில் பறந்து கொண்டிருந்த கணவனின் பின்னால், அவன் தோள்களை தன் கைகளால் பற்றியபடி இருபுறமும் கால்களை போட்டு அமர்ந்திருந்தாள் ஷக்தி.

இரவு நேரத்து குளிர்ந்த காற்று முகத்தில் வந்து சுகமாக மோத, முதன்முறையாக விஸ்வாவின் பின்னால் அமர்ந்து இதே மதுரையின் சாலையில், தன்னுடைய ஜாக்கெட்டை ஆல்டர் செய்வதற்காக டெய்லர் ஷாப்புக்கு பயணம் செய்தது ஞாபகம் வந்தது ஷக்திக்கு.

கூடவே, அன்று ஒருவருக்கொருவர் தங்கள் பிணக்கு நீங்கி, சாரி சொல்லிக் கொண்டதெல்லாம் ஞாபகத்துக்கு வர, கணவனை நெருங்கி அமர்ந்து, அவன் வயிற்றை தன் கைகளால் கட்டிக்கொண்டாள்.

“அம்மாடியோவ்… இந்த ஹீரோயின்ஸ் எல்லாம் வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குதுன்னு சொல்லுவாங்களே, அப்படிதான் நீ என்னை கட்டிப்பிடிச்சதும் எனக்கும் பறக்குது. இப்படியே இது கன்டினீயூ ஆச்சுதுன்னா, அப்படியே வீட்டுக்கு வண்டியைத் திருப்பிட வேண்டியது தான்.”

கிண்டலாகச் சொல்லி மனைவியை சிவக்க வைத்த விஸ்வா, முதலில் பூ மார்கெட் பக்கமாக வண்டியை செலுத்தினான். ஆச்சர்யமாக பார்த்த ஷக்திக்கு, ‘உண்மையிலேயே இது பகலா இல்லை, இரவா?’ என்ற எண்ணம் தோன்றியது என்னவோ நிஜம்.

அந்தளவுக்கு, சுறுசுறுப்பான ஆண்களாலும், பெண்களாலும் நிறைந்திருந்தது அந்த பூ மார்கெட்.

அடுத்து, விஸ்வா அழைத்து சென்ற காய்கறி மார்கெட்டும், பூ மார்க்கெட்டுக்கு குறையாத கூட்டத்தோடும், பரபரப்போடும் இருந்தது. எதற்காக இந்த நகரை தூங்கா நகரம் என்று சொல்கிறார்கள் என்று இப்போது புரிந்தது ஷக்திக்கு.

கிட்டத்தட்ட ஒருமணிநேரம் அங்குமிங்கும் பைக்கில் அலைந்து நகரைச் சுற்றிய விஸ்வா, கடைசியில் வந்து நின்ற இடம், பாஸ்கர் சொன்ன முத்து அண்ணனின் உணவகம்.

உணவகம் என்றால் ஆஹா… ஓஹோ… என்று பெரிய கட்டிடத்தில் அலங்காரங்களுக்கு நடுவில் அமைந்திருந்தது அல்ல. ஒரு சாதாரண ரோட்டோர கடை. எளிதாக சொல்ல வேண்டும் என்றால் கையேந்தி பவன்.

ஆனால் உணவின் சுவையிலும் தரத்திலும் பெரிய ஹோட்டல்களுக்கு சற்றும் குறைந்ததில்லை. அதனாலேயே கிடைக்கும் நேரங்களில் விஸ்வாவும் பாஸ்கரும் இப்படி நள்ளிரவுகளில் இங்கு வந்து உண்ணுவது வழக்கம்.

விஸ்வாவை காணவும், அந்த முத்து அண்ணன், “வாங்க தம்பி, ஏன் இப்போல்லாம் உங்களை அடிக்கடி காணமுடியுறதில்ல?” என்ற விசாரணையோடு வரவேற்றார்.

“அந்த குறையைத் தீர்த்து வைக்க தான், ஃவைப்பை கூட்டிட்டு வந்துட்டேன் ண்ணே…” அவரோடு இயல்பாக பேசினான் விஸ்வா.

வியாபார ஸ்தலங்களில் இருந்த கூட்டத்துக்கு இணையாக, ஆங்காங்கே இருந்த உணவகங்களிலும் இருந்த கூட்டத்தை கண்டு வியந்தவளாய் வந்த ஷக்திக்கும், ஒரு வரவேற்பைக் கொடுத்த முத்து அண்ணன், “என்ன தம்பி சாப்பிடுறீங்க?” என்றார்.

“மொதல்ல, சூடா என்ன இருக்குன்னு சொல்லுங்க ண்ணே” என்றபடியே மனைவியோடு, அங்கு போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தான் விஸ்வா.

“உங்களுக்கு எது வேணும்னு சொல்லுங்க தம்பி, அதை சூடா தந்துடுவோம்.” தேர்ந்த வியாபாரியாக மாறி அவர் பேச, கடையை சுற்றி உட்கார்ந்து கொண்டும், நின்று கொண்டும் சாப்பிட்டு கொண்டிருந்த கூட்டம் எதனால் என்று புரிந்தது ஷக்திக்கு.

“மொதல்ல இட்லில இருந்து ஆரம்பிப்போமா ஷக்தி?” மனைவியிடம் கேட்டு அவள் தலையசைக்கவும், ஒரு சில்வர் பாத்திரத்திற்கு மேல் வைத்து தரப்பட்ட இலையில் மூன்று வகை சட்னி, சாம்பாரோடு பரிமாறப்பட்ட இட்லியின் மென்மை, மதுரைக்கு மணம் சேர்க்கும் மல்லிகைக்கு இணையாக இருந்ததென்னவோ நிஜம்.

இட்லியில் தொடங்கிய சாப்பாடு, ஆப்பம், சப்பாத்தி, கொத்து பரோட்டா, ஆனியன் ஊத்தப்பம் என்று நீள, ‘தானா கடோத்கஜன் போல, இல்லையில்லை கடோத்கஜி போல சாப்பிட்டது?’ என்று அதிசயமாக இருந்தது ஷக்திக்கு.

 “இதற்கு மேல் சாப்பிட்டால் வயிறே வெடித்துவிடும்” என்று ஷக்தி சொன்ன பிறகு தான் அவளை விட்டான் விஸ்வா.

கடைசியில் சூடாக இரண்டு பாதாம் பால்களை அவன் வாங்க, முறைத்தவளை, “வா… அப்படியே காலாற நடந்துட்டே குடிக்கலாம்” என்று விஸ்வா அழைத்து செல்ல, அது கூட நன்றாகத் தான் இருந்தது ஷக்திக்கு.

கணவனின் அருகே மகிழ்வோடு நடந்து கொண்டிருந்த ஷக்தி, இந்த அழகான அனுபவத்தை தந்தவனிடம் “தேங்ஸ் விஸ்வா” என்று சொன்னாள்.

“உனக்கே நீ தேங்ஸ் சொல்லுவியா ஷக்தி?” என்று விஸ்வா கேட்டு, அவளைப் புன்னகைக்க வைத்த நேரம், அவர்களுக்கருகில், “ஜல்… ஜல்…” என்ற சலங்கை ஒலி கேட்டது. திரும்பி பார்த்தாள் ஷக்தி.

அங்கே… சற்று தள்ளி, ஆளுயரத்துக்கு ஒரு காளை, கழுத்தில் கட்டப்பட்டிருந்த வெண்கலத்தாலான சலங்கை குலுங்க கம்பீரமாக, அதன் உரிமையாளரோடு நடந்து போய் கொண்டிருந்தது.