கண்மூடி அந்த சுகானுபவத்தை உள்வாங்கி கொண்டவளின் காதுகளில், “கிளிக்…” என்று தங்கள் வீட்டின் முன் கதவு திறக்கும் சத்தம் மெல்லியதாக கேட்டது.
சட்டென்று அவள் புலன்கள் முழுவீச்சில் விழிப்படைய, ‘இந்நேரத்தில் கதவை திறப்பதென்றால்? விஸ்வா!’ நினைத்து முடிப்பதற்குள், முன்வாசலை நோக்கி ஓடியிருந்தாள் ஷக்தி.
வந்திருந்தது விஸ்வா தான். மனைவியின் அந்த அழுகைக்கு பிறகு, அவனால் காட்டுக்குள் போய்விட முடியுமா என்ன?
நண்பனிடம் விஷயத்தை சொல்லி, முடிக்க வேண்டிய நடைமுறைகளை முடித்து, இருவருமே அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். ஷக்திக்கு சர்ப்ரைஸ் தர நினைத்து, அவளிடம் எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டான் விஸ்வா.
விஸ்வா கதவைத் திறந்து உள்ளே வரவும், ஷக்தி அங்கே ஓட்டமாக ஓடிவந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.
கணவனைக் காணவும், நொடிப்பொழுது கூட தாமதிக்காமல், “விஸ்வா…” என்று அழைத்துக் கொண்டு, பாய்ந்து வந்து அவனை அணைத்திருந்தாள் ஷக்தி.
கடைசியில், மனைவிக்கு ஆச்சர்யம் தரவேண்டும் என்று வந்தவன், மனைவியின் வரவேற்பில் ஆச்சர்யமாகிப் போய் நின்றான்.
பெண்ணவளுக்கு குறையாத ஆர்வத்தோடு, மனைவியை அணைத்துக் கொண்ட விஸ்வா, அவள் தலைகோதி, “கூல் டா…” என்று சொல்லியபடியே உச்சிமுத்தம் ஒன்றையும் வைக்க, ஹால் வெளிச்சத்தால் நிறைந்தது.
ஆம்… ஷக்தியின் தடபுடா என்ற ஓட்டமும், அவளின் அழைப்பும், சற்று நேரத்திற்கு முன்னர் தான் படுக்கைக்கு சென்றிருந்த வீட்டின் மற்ற உறுப்பினர்களையும் எழுப்பிவிட்டிருந்தது.
வந்திருப்பது விஸ்வா என்று புரிந்து கொண்டவர்கள், ‘நேற்று நடந்திருந்த களேபரத்திற்கு பின்னர் வீடு திரும்பியிருந்த விஸ்வாவை, வரவேற்று ஓரிரு வார்த்தைகள் பேசி விடலாம்’ என்ற எண்ணத்தில் ஹாலுக்கு வந்திருந்தார்கள்.
வந்தவர்கள் இருட்டை விரட்ட மின்விளக்கை இயக்க, ஷக்தியிடமிருந்து அப்படியொரு வரவேற்பு விஸ்வாவிற்கு கிடைத்திருக்க கூடும் என்று எதிர்பார்க்காதவர்களின் முகத்தில் சங்கோஜம் வந்திருந்தது.
விஸ்வாவுமே சங்கடத்தோடு மனைவியை லேசாக விலக்கினான். ஆனால், அப்படி எதுவும் எனக்கில்லை என்பது போல கணவனை நெருங்கியே நின்றிருந்தாள் ஷக்தி.
தாங்கள் வந்த நேரம் சரியானதல்ல என்பதை புரிந்து கொண்ட அந்த வீட்டின் பெரியவர்கள், ஓரிரு வார்த்தைகளில் விஸ்வாவின் நலன் குறித்து விசாரித்து விட்டு தங்கள் அறைக்குள் புகுந்து கொள்ள முயன்றார்கள்.
ஆனால் சஞ்சீவோ, ஆர்வமிகுதியில் மாமனிடம் மொத்த கதையையும் அப்போதே கேட்டுவிடுவது போல பேச ஆரம்பிக்க, சலிக்காமல் பதில் சொல்ல ஆரம்பித்தான் விஸ்வா. ஆனால் ஷக்தியின் முகம் தான் தவிப்பை தத்தெடுக்க ஆரம்பித்தது.
மகளின் தவிப்பான முகத்தைக் கண்டு, அதன் காரணத்தை புரிந்து கொண்ட கலைவாணி, “சஞ்சீவ், மாமா மொதல்ல ரெப்ஃப்ரஷ் ஆகி ரெஸ்ட் எடுக்கட்டும். அப்புறமா, நாளைக்கு காலைல நீ எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கோ” என்று சொல்ல, விஸ்வாவை அங்கிருந்து நகர அனுமதித்தான் சஞ்சீவ்.
கணவனோடு தங்கள் அறைக்குள் வந்த ஷக்தி, “நேற்று பயந்துட்டேன் தெரியுமா? இனிமே இப்படி எல்லாம் காட்டுக்குள்ள போகக்கூடாது.”
சலுகையான குரலில் சொல்லியபடியே அவனை இறுக அணைத்தவள், அந்த திண்ணிய மார்பில் சாய்ந்து, நேற்றைய நினைவில் லேசாக விம்மினாள். கைகளோ கணவனின் மார்பை தடவிவிட்டுக் கொண்டிருந்தது.
“பொண்டாட்டி கிட்டயிருந்து, இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும்னு தெரிஞ்சா, அடிக்கடி இந்த மாதிரி ட்ரிப் போலாம் போலயே.” ஷக்தியின் முகத்தை நிமிர்த்தி, அவள் கண்ணீரை தன் ஒற்றை விரலால் தட்டிவிட்டு உல்லாசமாக சிரித்தான் விஸ்வா.
“ம்ம்… போவீங்க… போவீங்க…” என்று நொடித்துக் கொண்டவள், “இனிமேல் அப்படி போறதா இருந்தா, என்னையும் கூட கூட்டிட்டு தான் போகணும்” என்றாள், என்ன பேசுகிறோம் என்று புரியாமலே.
“அப்பிடி போனா அதுக்கு பேரு ஷுட்டிங் இல்ல டி, டேட்டிங்.” மனைவியின் காதுகளில் தன் உதடு உரச கிசுகிசுத்த விஸ்வா, “அன்னைக்கு நான் காட்டுக்கு போறேன்னு சொன்னதும், மேடம் ஸ்பெஷலா ஒண்ணு ஆஃபர் பண்ணுனீங்களே, அது இன்னைக்கு கிடைக்குமா?” என்றான் ஆர்வமாக.
வெட்கம் விட்டு, தன் காதுகளில் கணவன் கிசுகிசுத்த விஷயத்தில் கிறுகிறுத்துப் போன ஷக்தி, தயக்கமேதுமின்றி, “கிடைக்கும்” என்னும் விதமாக கணவனின் மார்பில் சாய்ந்தபடியே தலையசைத்தாள்.
உலகையே வென்றுவிட்ட உவப்பில், மனைவியின் கன்னத்தில் அவசர முத்தம் ஒன்றை வைத்த விஷ்வா, “இதோ… ஒரு நிமிஷத்துல குளியல் போட்டுட்டு வந்துடுறேன்” என்றவன், “இல்ல… வந்துடுறோம்” என்றபடியே, மனைவியை தன் கைகளில் அள்ளிக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
குளியலறையிலிருந்து வெளியே வரும்போது, இருவரிடமிருந்தும் வெட்கம் விடைபெற்று சென்றிருந்தது. மஞ்சத்தில் தங்கள் கொடுக்கல், வாங்கல் மூலம், இத்தனை நாட்கள் புரட்டிப் பார்க்காத தங்கள் வாழ்க்கை கணக்கை புரட்டிப் பார்த்து, அதன் கூடுதல், குறையை நேர்செய்து கொண்டார்கள்.
அதன் பிறகு வந்த நாட்களில், கசடுகள் யாவும் நீங்கி, தங்கள் வாழ்க்கைப் பாதையில் இணையாக, அழகாகவே கைவீசி நடக்கத் தொடங்கியிருந்தனர் தம்பதியினர்.
நாட்கள் அதன் போக்கில் நகர, ஷக்தி விஸ்வா திருமணம் முடிந்து கிட்டதட்ட ஆறு மாதங்கள் ஆகியிருந்தது.
அதாவது, விஸ்வா சென்னைக்கு வந்து முழுதாக மூன்று மாதங்கள் முடிவடையப் போகிறது. தன் தொழில் தொடர்பாக, எப்போதும் போல சென்னைக்கும் மதுரைக்குமாக, எந்தவித சுணக்கமும் இன்றி பறந்து கொண்டிருந்தான் விஸ்வா.
அதைச் சுட்டிக்காட்டி பஞ்சவர்ணம் பேத்தியிடம், ஏதாவது காரசாரமாக பேசினால் கூட, “விடுங்க பாட்டி, கூடிய சீக்கிரம் இங்கயே ஸ்டூடியோவை தொடங்கிடுறேன். அப்போ என் அலைச்சல் குறைஞ்சிடும்ல” என்பான் அமைதியாக.
இப்போதெல்லாம் ‘கணவனின் எதிர்பார்ப்பில்லாத அன்பிற்கு தான் நியாயம் செய்கிறேனா?’ என்ற எண்ணம் ஷக்தியின் மனதில் அடிக்கடி எழுகிறது.
‘நான் ஏன், இப்படி விஸ்வாவின் வீட்டுக்கு செல்ல மறுக்கிறேன்?’ தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்ள ஆரம்பித்திருந்த ஷக்தி, “என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்னு, ஆசையே இல்லையா விஸ்வா உங்களுக்கு?” என்று கணவனிடம் கேட்டும் வைத்தாள்.
“ஏன் இல்லாம? ஆனா, நம்ம வீட்டுக்கு நீ இஷ்டப்பட்டு வரணும்” என்று அவன் மனதை மறைக்காமல் சொன்னான் விஸ்வா.
தங்கள் திருமணம் நடந்தமுறை, அதைத்தொடர்ந்து தெரிய வந்த உண்மைகள், அதனால் தனக்கு வந்த கோபம், தான் எடுத்த முடிவு என்று ஒவ்வொன்றையும் யோசித்து பார்த்த ஷக்திக்கு, கடந்து போயிருந்த காலம் தன் கோபம் அத்தனையையும் காற்றோடு காற்றாக கரைத்து, தன்னை இலகுவான மனநிலைக்கு தள்ளியிருந்ததை உணரமுடிந்தது.
அதே காலம், தமிழரசு, கலைவாணியைத் தவிர வேறு யாரையும், தன்னால் தன் பெற்றோர் ஸ்தானத்தில் வைத்து பார்க்க முடியாது என்ற மிகப் பெரிய உண்மையையும் ஷக்திக்கு உணர்த்தியிருந்தது.
‘காலாவதியாகிப்போன கோபத்திற்காக, புகுந்த வீட்டுக்குப் போகாமல் இருப்பது, திருமணம் என்னும் பந்தத்திற்கே செய்யும் அவமரியாதை’ என்பதை புரிந்து கொண்ட ஷக்தியை, விஸ்வாவின் அப்பத்தா கல்யாணி அம்மா, ஒருநாள் ஃபோனில் அழைத்தார்.
சம்பிரதாய பேச்சுகளுக்கு பிறகு, “புருஷன், பெஞ்சாதிக்குள்ள இருக்கிற மனஸ்தாபம் கண்டிப்பா ஒருநாள் மாறும். ஆனா, அவங்க தவற விட்ட பொழுதுகள், திரும்ப வராது. அதனால வர்ற தைப் பொங்கலுக்கு, எம்பேரனோட நம்ம வீட்டுக்கு நீ கட்டாயம் வரணும்” என்று ஷக்திக்கு அழைப்பு விடுத்தார்.
தங்களுக்குள் இன்னமும் மனஸ்தாபம் சரியாகவில்லை, என்பது போல பேசிய கல்யாணி அம்மாவின் பேச்சில், ஏதோ அவர்களை ஏமாற்றுவது போல ஷக்திக்கு தோன்ற, “கண்டிப்பா வருவோம் பாட்டி ம்மா” என்று அவசரமாக உறுதி கொடுத்தாள் ஷக்தி.
அப்படியே தான் அழைத்ததையும், ஷக்தியின் பதிலையும் பஞ்சவர்ணத்திடம் சொல்லியே தன் பேச்சை முடித்தார் கல்யாணி அம்மா.
ஷக்தியின் முடிவில் திருவிழா கோலம் கொண்டது வீடு. புகுந்த வீட்டுக்கு பொங்கலுக்காக செல்லவிருக்கும் தங்கள் பெண்ணிற்காக பார்த்துப் பார்த்து எல்லா சீர்வரிசைப் பொருட்களையும் வாங்க ஆரம்பித்து விட்டார்கள் பஞ்சவர்ணமும் கலைவாணியும்.
சஞ்சீவ், “அங்கயே இருந்துடுவியா ஷக்தி? திரும்ப இங்க வரமாட்டியா?” என்றான் கலக்கத்தோடு.
“பொங்கல் முடியவும் திரும்ப இங்கயே வந்துருவோம் டா.” தம்பிக்கு சொன்னாலும், ‘அங்கே போனபிறகு இங்கே திரும்பி வரவிடுவார்களா?’ என்ற கலக்கம் ஷக்திக்கும் இருக்கத்தான் செய்தது.
கூடவே, எல்லாவற்றையும் கணவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையும் இத்தனை நாளில் வந்திருந்தது. எனவே உற்சாகமாகவே கணவனோடு மதுரைக்கு கிளம்ப திட்டமிட்டாள் ஷக்தி.
பொங்கலுக்கு இருநாட்களுக்கு முன்னர், விஸ்வாவும் ஷக்தியும் விமானத்தில் கிளம்பினார்கள்.
மறுநாள் சீர்வரிசை பொருட்களோடு வீட்டிலிருப்பவர்கள் கிளம்புவதாக ஏற்பாடு.
மதுரை விமானநிலையத்தில் வந்திறங்கிய தம்பதியரை, பாஸ்கர் தான் அழைத்துப் போக காரோடு வந்திருந்தான்.
காரில் அமர்ந்து பாஸ்கரோடு, கலகலத்துக் கொண்டு வந்த ஷக்தி, அவன் காரை தங்களுடைய வீட்டில் நிறுத்தாமல் இன்னொரு வீட்டுக்கு முன் நிறுத்தவும், “இது நம்ம வீடு இல்லையே பாஸ்?” என்றாள் கேள்வியாக.
“இதுவும் நம்ம வீடு தான், உள்ள வா ம்மா.” பாஸ்கருக்கு முன் பதில் சொல்லியபடி காரின் கதவைத் திறந்து ஷக்தியின் கையைப்பிடித்து இறக்கிய பெண்மணி, நடக்கயிருப்பதை ஓரளவு யூகித்தபடி ஷக்தியின் அருகே உட்கார்ந்திருந்த விஸ்வாவைப் பார்த்து, “நீயும் இறங்கு விஸ்வா” என்று சொல்ல, அமைதியாக இறங்கினான் விஸ்வா.
அந்த பெண்மணி வேறுயாருமல்ல. விஸ்வா, பாஸ்கரின் அத்தை துர்கா தான்.
காரிலிருந்து இறங்கிய ஷக்தி குழப்பத்தோடு விஸ்வாவைப் பார்க்க, “என்ன நடக்கப் போகுதுன்னு என்னால கெஸ் பண்ணமுடியுது ஷக்தி. ஆனா, இப்படி நடக்கும்னு எனக்கு முன்னாடியே தெரியாது” என்றான் அவசரமாக.
கணவனின் வார்த்தைகள் ஷக்திக்கு ஒருவித ஆர்வத்தை உண்டுபண்ணியது. ‘அப்படி என்னதான் இங்கே நடக்கப்போகிறது?’ என்பதை தெரிந்து கொள்ள ஷக்தி ஆர்வமாக, “இதை கட்டிட்டு வாடா” என்று, பட்டுவேஷ்டி சட்டையை அண்ணன் மகன் கையில் கொடுத்தார் துர்கா.
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை, ஷக்தியால் இப்போது யூகம் செய்யமுடிந்தது. ‘ஏன் நான் போட்டுருக்க ட்ரெஸ்ஸோடு இவங்க வீட்டுக்கு போகக் கூடாதாம்மா?’
விறுவிறுவென்று கோபம் ஏற, கணவனை திரும்பி பார்த்தாள் ஷக்தி. அவனோ, பக்கத்தில் இருந்த அறையினுள் வேகவேகமாக நுழைந்து கொண்டான்.
“நீ வாம்மா, நாமளும் பட்டு சாரி கட்டிக்கலாம்.” மறுக்கவே முடியாத குரலில் ஷக்தியை அழைத்து சென்ற துர்கா,
“நீ போட்டுருக்குற ட்ரெஸ்ஸே நல்லா தான் டா இருக்கு. அடுத்தடுத்து நம்ம வீட்டுக்கு வரும் போது இப்படி ட்ரெஸ் பண்ணு. யாரும் உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க. இப்போ கல்யாணம் முடிஞ்சு முதன்முதலா, ஜோடியா நம்ம வீட்டுக்கு போறீங்க. அதான், இப்படி பட்டு உடுத்தி வரணும்னு அம்மா ஆசைப்படுறாங்க” என்று இந்த ஏற்பாட்டுக்கான காரணத்தை ஷக்தியிடம் சொல்லி, மாம்பழக்கலரில் மெரூன்கலர் பார்டர் வைத்த அசல்பட்டை ஷக்தியை உடுத்தவைத்தார்.
அவளின் தலைமுடியைப் பின்னி பூ வைத்து, புதுப்பெண்ணாக அலங்கரித்த துர்கா, நகைகளை அணியவர, “இல்ல… வீட்டுக்கு போனதும் சாரி கட்டி ஜ்வெல்ஸ் போட்டுக்கோன்னு, அம்மாவே கொடுத்துவிட்டாங்க.”
துர்கா கொடுத்த நகைகளை மறுத்து, தனது அன்னை கையோடு கொடுத்து விட்டிருந்த நகைகளை, தன் கைப்பையிலிருந்து எடுத்து அணிந்து கொண்டாள் ஷக்தி.
எல்லாம் முடித்து, கண்ணாடியில் தன்னைப் பார்த்த ஷக்திக்கே, தன்னை நிரம்பவும் பிடித்திருந்தது.
அறையை விட்டு வெளியே வந்தவளின் மீது விஸ்வாவின் ஆர்வப்பார்வை விழ, தன்னையறியாமல் வெட்கப்பூ பூத்தது அந்த பெண்மை.
கணவனோடு ஜோடியாக, அப்படி ஒரு ஒப்பனையில் நிற்பது கூட ஒருவிதமான இதத்தை நெஞ்சத்திற்கு அள்ளித்தர, ஏகாந்தமான மனநிலையிலேயே விஸ்வாவின் வீட்டுக்கு அவனோடு வந்திறங்கினாள் ஷக்தி.
மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து சென்று, தங்கள் குலத்தை செழிக்க வைக்க வந்த பெண் செய்யவேண்டிய அத்தனை செய்முறைகளையும் செய்ய வைத்து என்று, எல்லாம் நல்லபடியாக தான் போய்க்கொண்டிருந்தது, தன் உறவு ஜனங்களோடு சௌந்தர் காரில் வந்து இறங்கும் வரை…