மனைவியின் வார்த்தைகளை சட்டைசெய்யாத விஸ்வா, “அம்மா ஏதோ குழப்பத்துல பேசிட்டாங்க ஆன்டி. அவங்க சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்று கலைவாணியிடம் மனதாரச் சொன்னான்.

அனைவரும் மதிய உணவு உண்ணும் வரை அமைதியாக இருந்த விஸ்வா, உண்டு முடித்து தனியே அமர்ந்திருந்த அம்மாவின் அருகில் வந்து அமர்ந்து, “ஆக… நீங்களும் ஒரு சாதாரண மனுஷிதான் ங்குறதை ப்ரூப் பண்ணிட்டீங்க, இல்லம்மா” என்றான் நிதானமாக.

மகனின் கேள்வியில் லேசாக தடுமாறிய மீனாட்சி, “இல்லடா, அது…” என்று இழுக்க,

“ஏன் ம்மா, ஆன்டிகிட்ட அப்படி பேசுனீங்க?” என்றான் விஸ்வா அமைதியாக.

யாரோ ஒருவருக்காக தன் மகன் தன்னிடமே விசாரணை செய்வது பிடிக்காத மீனாட்சி, “அவங்க கிட்ட என்ன, உங்கிட்டயே கேக்குறேன்டா. இன்னும் எத்தனை நாளைக்கு தான், நீ இங்கயே இருப்ப?” என்றார் கோபமாக.

“ஏன்? பெண்டாட்டி வீட்டுல, புருஷன் இருக்குறது அவ்வளவு பெரிய கொலை குத்தமா என்ன?” அழுத்தமாக கேட்டான் விஸ்வா.

“விஸ்வா… எப்படிடா உன்னால இப்படி பேச முடியுது? என்னால நம்ம சொந்தங்களுக்கு மத்தியில தலை நிமிர்ந்து நடக்க முடியலைடா. சீக்கிரம் உம்பொண்டாட்டியைக் கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வந்துருடா.” இப்போது கெஞ்சலாக வந்தது மீனாட்சியின் வார்த்தைகள்.

தன் அன்னையின் மனநிலையைக் கண்டு அயர்ந்து போன விஸ்வா, அவரின் விரல்களைப் பிடித்து மென்மையாக நீவி விட்டபடியே, “அப்பா டெல்லியில இருந்தப்போ, உங்களுக்கு அந்த க்ளைமேட் ஒத்துக்காத போதும் கூட, அவரை தனியா விட்டுட்டு வர மனசில்லாம நீங்க அங்கேயே இருந்தீங்களே ம்மா, ஞாபகம் இருக்கா? அதுக்கும், இப்போ நான் இங்கே இருக்குறதுக்கும் பெரிசா வித்தியாசம் இல்லைன்னு எனக்கு தோணுது. உங்களுக்கு எப்படி ம்மா தோணுது?” என்று கேட்டான்.

“என் துணைக்காக நான் இங்கு இருக்கிறேன், அதில் என்ன தவறு இருக்கிறது?” என்ற மகனின் விளக்கத்தில் மீனாட்சி வாயடைத்துப் போனார்.

“ஷக்தி எங்க இருக்குறாளோ, அங்க நான் இருக்கணும்னு நினைச்சது, முழுக்க முழுக்க என்னோட முடிவு. அதைப்பத்தி பேசணும்னா, நீங்க எங்கிட்ட மட்டும் தான் பேசணும்மா, பிளீஸ்…” என்று முடித்தான் விஸ்வா.

தாயும் மகனும் தனிமையில் ஏதோ பேசுகிறார்கள் என்றே அவர்கள் அமர்ந்திருந்த தோரணை மற்றவர்களை நினைக்க வைத்தது. கலைவாணிக்கும் ஷக்திக்கும் மட்டுமே அவர்களின் பேச்சு, கண்டிப்பாக சற்றுமுன் நடந்த நிகழ்வை பற்றியதாகத் தான் இருக்கும் என்று எண்ணத் தோன்றியது.

சாயங்காலம் கிளம்பி சென்ற விஸ்வாவின் குடும்பத்தார்கள், வெகு சீக்கிரத்தில் ஷக்தியை தங்கள் வீட்டில் எதிர்பார்ப்பதாக கூறிச் சென்றார்கள்.

அவர்கள் கிளம்பி செல்லவும் ஷக்தியுமே அமைதியாக யோசனையில் ஆழ்ந்து போனாள்.

திருமணம் ஆனதும் பெண், ஆணின் வீட்டுக்கு வாழச் செல்லும் சமுதாய அமைப்பில் இருந்து கொண்டு, விஸ்வா தன் வீட்டில் வந்து இருப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்று அவளுக்குமேப் புரியத்தான் செய்தது.

இருந்தாலும்,’யாரும் அவரை இங்கே வந்து இருங்கன்னு, தலைவாழை இலைபோட்டு கூப்பிட்டாங்களா என்ன?’ என்றும் மனம் கோபத்தில் முரண்டியது.

எது எப்படியோ, அதன் பிறகு வந்த நாட்களில், விஸ்வா உடனான அணுகுமுறையில் கொஞ்சம் நிதானம் வந்திருந்தது ஷக்தியிடம்.

ஆம், முன்போல் ஒரு அசட்டையோ, ஒதுக்கமோ, அவனிடம் இல்லை ஷக்திக்கு.

மனைவியின் இந்த மாறுதல்களை விழிவிரித்து விஸ்வா பார்த்தானேயொழிய, வேறெதுவும் சொல்லவும் இல்லை, கேட்கவும் இல்லை.

மேலும் ஒருவாரம் அதன் போக்கில் நகர்ந்தது. அன்றும் ஒரு ஃபோட்டோ ஷுட்டுக்கு போய்விட்டு நள்ளிரவு தாண்டி வந்து படுத்திருந்த விஸ்வா, காலையில் எழும்ப மனமின்றி சோம்பலாக படுக்கையில் கிடந்தான். அந்நேரம் ஹாலில் தமிழரசுவின் குரல் கோபத்தில் ஒலித்தது இவன் காதுகளில் மெல்லியதாக வந்து விழுந்தது.

பெரும்பாலும் கோபம் என்பதே என்னவென்று தெரியாத தமிழரசுவின் கோபக்குரலைக் கேட்கவும், என்னவென்று அறிய காதுகளைத் தீட்டினான் விஸ்வா. அவன் காதுகளில் விழுந்த வார்த்தைகளிலிருந்து, சஞ்சீவ் மதிப்பெண்கள் குறைந்ததாலேயே வாங்கிக்கட்டிக் கொண்டு இருக்கிறான் என்று புரிந்தது.

‘மகனை அவர் கண்டிக்கும் போது, தான் குறுக்கே போய் நிற்பது தவறு’ என்று நினைத்தவன், எழுந்து காலைக்கடன்களை எல்லாம் முடித்து, மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தான்.

அதற்கிடையில் தமிழரசு தன் அர்ச்சனையை முடித்து விட்டு வெளியே சென்றிருந்தார். வீட்டில் உள்ள மற்றவர்களும் அறிவுரை சொல்லும் தங்கள் பணியை செவ்வனே முடித்து ஓய்ந்து போயிருந்தார்கள்.

ஹாலில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த சஞ்சீவ் அருகில் வந்து உட்கார்ந்த விஸ்வா, “என்னடா மச்சான், எப்போ பார்த்தாலும் புக்கும் கையுமா தான் உட்கார்ந்திருக்க. அப்படி இருந்தும் படிக்கலைன்னா, ஸ்கூல்ல உனக்கு பிரச்சினை எதுவும் இருக்கா, என்ன?”

 சஞ்சீவ் எழுதிக்கொண்டிருந்த நோட்டை சட்டென்று எடுத்து அதை புரட்டிக்கொண்டே கேட்டவன், முன்பக்கத்தில் இருந்த யாரோ ஒரு மாணவனின் பெயரைப் பார்த்து, சின்ன அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தான்.

“நீ டென்த் தானே படிக்கிற? அப்புறம் எதுக்கு ட்வெல்த் ஸ்டாண்டர்ட் ரெக்கார்டர் நோட் எழுதுற? சொல்லு.”

“அது… நாலஞ்சு ட்வெல்த் படிக்கிற பசங்க, இப்பிடி எழுதி கேட்டு மிரட்டுறாங்க மாமா. செய்து குடுக்கலைன்னா கேங்கா சேர்ந்துட்டு ரெஸ்ட் ரூம் போகும் போது அடிப்போம்னு மிரட்டுறாங்க.”

அழுத்தமாகக் கேள்வி கேட்ட மாமாவிடம், அக்கம் பக்கம் பார்த்தபடியே மெல்லியக்குரலில் உண்மையைச் சொல்லிவிட்டான் சஞ்சீவ்.

பக்கத்து இருக்கையில் காதுக்கு ஹெட்ஃபோனைக் கொடுத்து, பாடல் கேட்டுக்கொண்டிருந்த பாவனையில் உட்கார்ந்திருந்த ஷக்திக்குமே, தம்பியின் பதில் அதிர்ச்சியாக இருந்தது.

கூடவே, தாங்கள் எல்லோரும் நன்றாகப் படிக்கச்சொல்லி தம்பிக்கு டன் கணக்கில் அறிவுரை சொல்லியிருக்க, “ஸ்கூல்ல உனக்கெதுவும் பிரச்சினை இருக்கா?” என்று கேட்ட தன் கணவனின் அணுகுமுறையில், சிறு வியப்பு தோன்றியது.

அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையை, கேட்காதது போல கேட்க தயாரானாள் ஷக்தி.

“அதானே பாத்தேன். இல்லைன்னா எம்மச்சான் படிப்புல சோடை போறவன் இல்லையே.” சஞ்சீவை சிலாகித்து கொண்ட விஸ்வா, “அவங்க வொர்க்கை நீ பார்த்தா, உன் பாடத்தை யாருடா படிப்பா?” என்றும் கேட்டான்.

“அதான் மாமா எனக்கும் கவலையா இருக்கு. அப்பாகிட்ட சொன்னா, விஷயம் பெருசாகிடுமோன்னு பயமாவும் இருக்கு.”

 மெல்லிய குரலில் கிசுகிசுவென்று சொல்லிய சஞ்சீவ், சுற்றும்முற்றும் பார்த்து, காதுக்கு ஹெட்ஃபோன் போட்டுக்கொண்டிருக்கும் அக்காவைத் தவிர யாரும் அருகில் இல்லை என்று உறுதிபடுத்திக் கொண்டு,

“எனக்காக ஸ்கூலுக்கு வந்து, அந்த பசங்களை லேசா மிரட்டுறீங்களா மாமா?” என்று மாமனை உதவிக்கும் அழைத்தான்.

“உனக்காக எங்க வேணாலும் வருவேன்டா மச்சான்” என்று முதலில் சஞ்சீவ்க்கு நம்பிக்கை கொடுத்த விஸ்வா, “ஆனா, நான் வந்து ஹேண்டில் பண்ணுற அளவுக்கு, இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது. நீயே இதை அழகா ஹேண்டில் பண்ணிக்கலாம்” என்றான் கூலாக.

“நானா?” என்று வாயைப் பிளந்தான் சஞ்சீவ்.

“ஹ்ம்ம்… நீ தான்” என்றான் விஸ்வா.

“எப்புடி மாமா? எனக்கு அந்த பசங்களை பார்த்தாலே பயமா இருக்குமே?” என்றான் சஞ்சீவ்.

“இந்த உன்னோட பயத்தை தான் அவங்க யூஸ் பண்ணிக்குறாங்க சஞ்சீவ். மொதல்ல நீ, அவங்களைப் பார்த்து பயப்படுறதை விடு. அவங்க ஏதோ ஏலியன் இல்லை. அவங்களும் உன்னை மாதிரியே அந்த ஸ்கூல்ல ஒரு ஸ்டூடண்ட், அவ்வளவு தான். தைரியமா அவங்களைப் பார்த்து, என்னால உன் வேலையைப் பார்க்க முடியாதுன்னு சொல்லு. ரொம்ப பண்ணுனா ஹெச் எம் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுவேன்னு சொல்லு.”

“உன்னோட தைரியத்தைப் பார்த்தே தன்னால பம்மிடுவாங்க. அப்படியும் அடங்கலையா, அப்போ கண்டிப்பா இந்த மாமா வரேன். எப்பவுமே பிரச்சினையைக் கண்டு பயந்து, அடுத்தவங்க முதுகுக்கு பின்னாடி மறைஞ்சுக்க பாக்குறதுக்கு பதில், நாமளே துணிஞ்சு களத்துல இறங்கணும் மை மேன்” என்று சொல்ல, தைரியமாக தலையை ஆட்டினான் சஞ்சீவ்.

கணவனின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஷக்திக்கும், அவளையறியாமலேயே உதடுகளில் புன்னகையொன்று உதயமாகியது.

அதைக் கண்டு கொண்ட விஸ்வாவிற்கு, ஹெட்போஃனை ஆஃப் மோடில் போட்டுவிட்டு, தாங்கள் பேசியது அத்தனையையும் கேட்ட ஷக்தியின் கள்ளத்தனம் புரிய, வேண்டுமென்றே, “ஷக்தி…” என்றழைத்தான் வேகமாக.

“என்ன விஸ்வா?” போட்டிருக்கும் வேஷம் மறந்து பளிச்சென்று பதில் வந்தது அம்மணியிடமிருந்து.

அதை பார்த்து கொண்டிருந்த சஞ்சீவ், ‘என்னடா நடக்குது இங்க?’ என்ற ரீதியில் முழித்தான்.

“அடேய் மச்சான், நாம ரெண்டு பேரும் பேசியதை எல்லாம், ஹெட்ஃபோன் போட்ட சாக்குல, உன் அக்கா கேட்டுட்டா டா” என்று போட்டு கொடுத்தான் விஸ்வா.

“யூ கல்ப்ரிட்…நாங்க பேசியதை எல்லாம் நீ கேட்டுட்டியா? உன்ன…” ஷக்தியின் மீது விளையாட்டாக பாய்ந்த சஞ்சீவ், “அப்பா கிட்ட சொல்லிடாத ஷக்தி, நானே இந்த விஷயத்தை சால்வ் பண்ணிட்டு படிக்க ஆரம்பிச்சுடுறேன்” என்றும் சொல்ல, தலையாட்டிக் கொண்டாள்.

ஆனால் தனிமையில் விஸ்வாவிடம் “எனக்கு பயமாயிருக்கு. அந்த பசங்களால சஞ்சீவுக்கு எதுவும் பிரச்சினை வராதுல்ல விஸ்வா?” என்றாள் கலக்கத்தோடு.

“ஹேய்… நீ ட்வெல்த் பசங்களை ஏதோ வில்லன் ரேஞ்சுக்கு பார்க்காத ம்மா. அவங்க ஏதோ சூப்பர் சீனியர் மென்டாலிட்டில செய்ய சொல்லியிருப்பாங்க. இவன் போல்டா நின்னா, பேசாம போயிடுவாங்க” என்று தைரியம் சொன்னான்.

அதுபோலவே மறுநாள் பள்ளியிலிருந்து வந்த சஞ்சீவ் வாயெல்லாம் பல்லாகவே வந்தான். விஸ்வாவும் அன்று அதிசயமாக சீக்கிரமே வர, சாப்பிட்டு முடித்து தனியாக ஹாலில் விஸ்வாவோடு வந்து அமர்ந்தவன், “மாமா நான் போட்டபோடுல அந்த பசங்க அரண்டுட்டாங்க தெரியுமா?” என்றான் உற்சாகமாக.

“அதெப்பிடி டா? சொல்லு… சொல்லு…” இயல்பாக விஸ்வாவுக்கு அருகில் வந்து அமர்ந்திருந்த ஷக்தி ஆர்வம் தாளாமல் கேட்டாள்.

“முடியாதுன்னு தைரியமா சொல்லிட்டு, இதுக்கு மேலயும் என்னைத் தொந்தரவு பண்ணுனீங்கன்னா, எங்க மாமா ஐபிஎஸ்ஸா இருக்காங்க, அவங்களை கூட்டிட்டு வந்து உங்களை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்னு, அந்த பசங்களைப் பயம் காட்டிட்டேன்ல.”

“அடேய் மச்சான்… நான் கோடு போட்டா, நீ, ரோடே போட்டுருக்கியே! கில்லாடி தான் டா நீயி.” சஞ்சீவின் பதிலில், விஸ்வா வெடித்து சிரிக்க, அவனோடு சேர்ந்து சிரித்தார்கள் ஷக்தியும், சஞ்சீவும்.

இளையவர்களின் சிரிப்பு சத்தம் வீட்டின் பெரியவர்களையும் ஈர்த்தது. அதுவும் ஷக்தி, விஸ்வா அருகில் உட்கார்ந்து கொண்டு மனம் விட்டு சிரிப்பதைக் கண்டவர்களுக்கு, விஸ்வா மீதான ஷக்தியின் கோபம், நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதைக் கண்டு ஆனந்தமாக இருந்தது.

அதன் பிறகு வந்த நாட்களில், இளையவர்கள் மூவரும் தினமும் கூடியிருந்து, சிறிது நேரமாவது பேசுவது ஒரு வழக்கமானது அந்த வீட்டில்.

 மட்டுமன்றி, தங்களுக்கான தனிமையான நேரத்தில் கூட, தன் மனஸ்தாபம் மறந்து விஸ்வாவோடு இயல்பாக பேச ஆரம்பித்திருந்தாள் ஷக்தி

நாளும் பொழுதும் நல்லபடியாகவே கழிய, விஸ்வாவும் தன் தொழில் சம்மந்தமாக சென்னைக்கும் மதுரைக்குமாக அலைந்து கொண்டிருந்தான்.

ஆனால், ஒருநாள், ஒரு பொழுது கூட அதைப்பற்றி ஷக்தியிடம், அவன் அலுத்துக் கொள்ளவேயில்லை.

மேலும் மாதம் ஒன்று கழிந்திருக்க, எல்லோரும் வீட்டில் ஒன்றாக இருக்கும் நேரத்தில், தன் நீண்டநாள் கனவான வைல்ட் லைஃப் ஃபோட்டோ கிராஃபிக்காக கேரளாவில், அரசு அனுமதி பெற்ற காட்டுக்குள் போகப் போவதாக விஸ்வா சொன்னான்.

விஸ்வாவின் முடிவைக் கேட்ட பெரியவர்களின் பேச்சு, “எது செய்தாலும் கவனமா இருக்கணும் விஸ்வா. உங்க அம்மா, அப்பாகிட்ட சொல்லியாச்சா?” இப்படியே இருந்தது.

சஞ்சீவோ, “காட்டுக்கா போறீங்க? அப்போ சிங்கத்து கூட செல்ஃபி எடுத்துட்டு வாங்க மாமா” என்று சொல்லாத குறை தான். அந்த அளவுக்கு ஆர்ப்பரித்தான்.

ஆனால், ஷக்திக்கோ கணவனின் முடிவு பயங்கர அதிருப்தியைக் கொடுத்தது.

அதை மறைக்காமல், தங்கள் அறைக்குள் வந்தவனிடம் சொல்ல, “இல்ல ஷக்தி, நல்ல கைட் அமைஞ்சிருக்கு. சோ… நான் போகத்தான் போறேன்” என்றான் விஸ்வா உறுதியாக.

அவன் உறுதியில் பதறிப்போனவள், சட்டென்று கணவனை லேசாக அணைத்து, “இல்ல… எனக்காக நீங்க போக வேண்டாம்” என்று சொல்லியபடியே, அவன் முகமெங்கும் முத்தத்தால் முத்திரை பதிக்க ஆரம்பித்தாள்.

“நீ என்ன பண்ணிட்டு இருக்குறன்னு, தெரிஞ்சு தான் செய்யுறியா ஷக்தி?” என்றான் விஸ்வா குறும்பான குரலில்.

“ஏன் தெரியாம?” அசட்டையாக பதில் சொல்லியவள், “நீங்க போகக் கூடாது” என்று மீண்டும் ராகமிழுக்க ஆரம்பித்திருந்தாள்.

கெஞ்சலில் இருந்து, இப்போது கட்டளையாக மாறியிருந்தது ஷக்தியின் வார்த்தைகள்…