ஏற்கனவே அவசரப்பட்டு தாலியைக்கட்டி அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பவன், இப்போதும் அவசரப்பட்டு ஷக்தியை அழுந்த முத்தமிட்டான். அவன் முரட்டு மீசை முடிகள் குத்தி கண்விழித்த ஷக்தி, உறக்க கலக்கத்தில் தன்னருகே தெரிந்த கணவனின் முகத்தைப் பார்த்து லேசாக சிரித்து வேறு வைத்தாள்.
அவ்வளவு தான்… உச்சிகுளிர்ந்து போன விஸ்வா, “உடம்புக்கு இப்போ எப்பிடி இருக்கு ஷக்தி?” என்றான், உள்ளத்து காதலை எல்லாம் ஒட்டுமொத்தமாக தன் குரலில் கொண்டு வந்து.
“ஏன்? நல்லாருக்குன்னு சொன்னா, என் சம்மதம் இல்லாமல் தாலியை கட்டியது மாதிரி, குடும்பமும் நடத்திடலாம்னு நினைக்கிறீங்களோ?”
நொடிப்பொழுதில் தூக்க கலக்கத்திலிருந்து கலைந்திருந்தவளுக்கு, கணவனின் செயலில் கண்மண் தெரியாத அளவு கோபம் பொங்கிவர, வார்த்தைக்குப் பதில் தீக்கங்குகளை விஸ்வாவின் மீது அள்ளித்தட்டினாள்.
தன்னைப் புரிந்து கொள்ள மறுத்து விதண்டாவாதமாகப் பேசுபவளின் பேச்சில், விஸ்வாவுக்கு சுர்ரென்று கோபம் உச்சிக்கு ஏற, “இதுவரைக்கும் அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்ல. ஆனா, அப்படி செய்தா தான் என்னன்னு, இப்போ தோணுது” என்று கூறி ஷக்தியைப் பதறவைத்தான்.
பின்னர் என்ன நினைத்தானோ, அமைதியாக, “செத்தபாம்பை திரும்பத் திரும்ப அடிச்சி என்னடி பண்ணப்போற? ஏற்கெனவே நான் செய்தது தப்புன்னு உங்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டனே. இன்னும் என்ன வேணும் உனக்கு? இப்படி வார்த்தையால என்னைக் கொல்லுறதுக்குப் பதில், உன் ஆத்திரம் தீர நேராவே என்னை அடிச்சிடு.”
சொல்லியபடியே, மனைவியின் கைகளைப் பற்றி தன் முகத்தில் பட் பட்டென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்தவன், சந்தடிசாக்கில் அவளின் உள்ளங்கையில் முத்தமிட்டு, “இந்த தண்டனைக் கூட நல்லாதான் இருக்கு” என்று மந்தகாசமாக புன்னகையும் புரிந்தான்.
அவனின் செயல், திகுதிகுவென எரியும் நெருப்பில், இன்னும் கொஞ்சம் நன்றாக எரிந்து கொள் என்று எண்ணெய்யை ஊற்றியது போலிருக்க, தன் கைகளை அவனிடமிருந்து முயன்று விலக்கிக்கொண்ட ஷக்தி, “இப்படியெல்லாம் பேச உங்களுக்கு அசிங்கமா இல்லையா?” என்றாள் முகத்தைச் சுழித்து.
“இல்லையே… என் காதல் தேவதைகிட்ட அப்படி எதுவும் எனக்கு இல்லையே” பளிச்சென்று சிரித்தபடி காதல் வசனம் பேசினான் விஸ்வா.
“ம்ஹூம்…கா…தல்… நீங்க என்னை காதலிச்சதாலத் தான் கல்யாணம் செய்துகிட்டீங்கன்னு, இன்னமும் நம்புறதுக்கு நான் ஒன்னும் முட்டாளில்லை. உங்க காரியத்தை சாதிக்க தூண்டில் புழுவா, காதல் ங்குற வார்த்தையை யூஸ் பண்ணிகிட்டீங்கன்னு எனக்கு நல்லாவேத் தெரியும்.”
விரக்தி நிறைந்த குரலில் சொல்லியபடியே, கட்டிலிலிருந்து ஷக்தி இறங்க முயன்றாள். அவளைத் தடுத்து, கட்டிலில் அமரவைத்த விஸ்வா, மனைவியின் அருகில் நெருங்கி அமர்ந்து, அவள் கைகளிரண்டையும் தன் கைகளால் பற்றியபடியே, “ஷக்தி, நான் சொல்லுறதை நீ நம்பணும்” என்று சொல்லி, பெண்ணவளின் கண்களை ஆழ்ந்து பார்த்தான்.
அவன் பார்வையை சந்திக்க மறுத்து எதிரே இருந்த சுவரை வெறித்தாள் ஷக்தி.
தன்னை பார்க்க மறுக்கும் மனைவியின் முகத்தை லேசாக தன்பக்கமாக திருப்பியவன், சுயவிளக்கம் போல பேச ஆரம்பித்தான்.
“எங்க மாமா, எல்லா விஷயத்தையும் சொல்லி, உன்னைக் கல்யாணம் பண்ண எங்கிட்ட கேட்டார் தான். ஆனா, அதுக்கு முன்னாடியே எம்மனசு உங்கிட்ட காதல்ல விழுந்துடிச்சி ஷக்தி. மாமா அப்படி கேட்டதும், நம்ம காதல் இவ்வளவு ஈசியா நிறைவேறப் போகுதான்னு ஒரு சந்தோஷம்தான் எனக்கு வந்தது. மற்றபடி, உன்னை, உனக்காக, நமக்குள்ள இருந்த காதலுக்காக மட்டும் தான் கல்யாணம் பண்ணுனேன்.” விஸ்வாவின் பேச்சில், மனைவியிடம் தன்னைப் புரிய வைத்துவிடும் வேகமிருந்தது.
“காதலா? நம்ம ரெண்டு பேருக்கும் மத்தியில அப்படி ஒன்னு இருந்ததா என்ன? அப்படி உண்மையாவே இருந்திருந்தா, எல்லா விஷயத்தையும் எங்கிட்ட நீங்க ஷேர் பண்ணியிருப்பீங்க. எங்க அம்மா ஹாஸ்பிடல்ல இருக்கும் போது, என்னை நீங்க கேர் பண்ணியிருப்பீங்க. ஆனா அப்படி எதுவும் செய்யாம, உங்க காரியத்தை முடிக்கிறதுல தானே கண்ணாயிருந்தீங்க.” விரக்தி நிறைந்த குரலில் சொன்னாள் ஷக்தி.
“உங்கிட்ட ஷேர் பண்ணக்கூடாதுன்னு எல்லாம் இல்ல ஷக்தி. உண்மை தெரிஞ்சா, ஒருவேளை நீங்க சென்னையிலிருந்து கிளம்பிடுவீங்களோன்னு ஒரு சின்ன பயம். அன்னைக்கு கல்யாணம் நடக்கலைன்னா, என்னைக்குமே இந்த கல்யாணம் நடக்காதோன்னு, சிறுபிள்ளைத்தனமான எண்ணம். இதெல்லாம் தான், என்னை உங்கிட்ட அப்படி நடந்துக்க வச்சது.”
“ஆனா, நிழலைப் பார்த்து பூதம்னு நினைச்சு நான் பயந்துருக்கேன்னு இப்போ தான் புரியவே செய்யுது ஷக்தி.” சொல்லிவிட்டு, கண்களை மூடி ஆழ்ந்து மூச்செடுத்த விஸ்வா,
“நான் செய்தது எல்லாமே, என் ஷக்தி எனக்கு வேணுங்குற ஒரே எண்ணத்துல ங்குறது உனக்கு புரியுதா ஷக்தி?” என்றான் இறைஞ்சுதலாக மனைவியின் முகத்தைப் பார்த்து.
“உண்மையான அன்பு, தடைகள் எத்தனை இருந்தாலும் அதைத்தாண்டி வெளியே வரும்னு, அன்னைக்கு நீ தானே சொன்ன ஷக்தி? ஆனா, நீ சொன்ன மாதிரி, நான் என் அன்பை வெளிப்படுத்தினா மட்டும் உனக்கு கோபம் வருது. இப்போ நான் என்ன தான் செய்யுறது?” கொஞ்சலாக விஸ்வாவிடமிருந்து வந்தது கேள்வி.
“நீங்க என்ன வேணா செஞ்சுக்கோங்க, எனக்கு அதைப்பற்றி கவலையேயில்லை.” அசட்டையாகச் சொல்லியபடி அறையின் வாசலை நோக்கி ஷக்தி நகர,
“எங்க போற ஷக்தி?” என்றான் விஸ்வா அவசரமாக.
“நீங்க வந்தபிறகும் இந்த ரூம்ல தங்குறதுக்கு நான் என்ன முட்டாளா?” கோபமாகச் சொல்லியபடி வாசலை நோக்கி ஷக்தி முன்னேறினாள்.
“இந்த வீட்டுல நாளையிலிருந்து என்னை நடைபிணமா பாக்கணும்னு நீ நினைச்சா, இப்போ ரூமை விட்டு வெளியே போ.”
‘சற்றுமுன் கொஞ்சல் வார்த்தைகள் இவன் வாயிலிருந்து தான் வெளிவந்ததா?’ என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு இப்போது மாறிப்போய் இருந்தது விஸ்வாவின் குரல்.
விஸ்வாவின் வார்த்தைகளில் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நின்றவள், “ஆ… ஊன்னா… இப்படி சொல்லிச் சொல்லி பொண்ணுங்களை கட்டிப்போடுறதே இந்த ஆம்பிள்ளைங்களுக்கு பொழப்பா போச்சு.”
தப்தப்பென்று கால்களை தரையில் அடித்து நடந்து வந்தவள், பொத்தென்று கட்டிலில் கவிழ்ந்து விழுந்து, இன்னும் என்னவெல்லாமோ முணுமுணுத்தபடியே இருக்க, கட்டிலில் அவள் அருகில் படுத்தவனின் முகம் சிந்தனை வசப்பட்டிருந்தது.
மறுநாள் காலை ஷக்தி அறையிலிருந்து வெளியே வந்த சிறிது நேரத்தில், விஸ்வாவும் அறையை விட்டு வெளியே வந்தான். பார்த்திருந்த பஞ்சவர்ணமும் கலைவாணியும் புன்னகை முகமாக மாறிப்போனார்கள்.
பின்னே… பூனைக்கு மணியைக் கட்டுவது யார் என்று தவித்தவர்கள் அல்லவா இருவரும்.
“இனி உன் கணவனோடு உன் அறையைப் பகிர்ந்து கொள்” என்று ஷக்தியிடம் எப்படி சொல்வது என்று, சில நாட்களாகவே இருவருக்கும் யோசனை தான்.
இன்று இயல்பாகவே அது நடந்துவிட, அதை லாவகமாக பிடித்துக் கொண்டார்கள். ஆம்… அதன் பிறகு வந்த நாட்களில், ஷக்தியை தங்களோடு தங்க அனுமதிக்கவேயில்லை அவர்கள்.
சஞ்சீவும் இதெல்லாம் புரியாத அளவிற்கு சிறுபிள்ளை இல்லை போலும். அதனால், பெரிதாக தன் மாமனைத் தொந்தரவு செய்யவில்லை அவன். ஆனால், மலர்ந்தும் மலராத அந்த காலைப் பொழுதுகளை, எப்பொழுதும் போல, தனக்கும் மாமனுக்குமான ஸ்பெஷல் பொழுதுகளாக்கிக் கொண்டான்.
அதன்பின்னர் வந்த நாட்களில் கலைவாணியும், பஞ்சவர்ணமும் விஸ்வாவிற்கு தேவையானவற்றை ஷக்தியின் மூலமாகவே நிறைவேற்றினார்கள்.
ஷக்தி அவர்கள் சொல்லுவதை செய்ய மறுத்தால், “நம்மளை நம்பி நம்ம வீட்டுக்கு வந்துருக்கவங்களை, நல்ல விதமா கவனிக்க வேண்டாமா ஷக்தி?” என்று அதட்டிப் பேசியே செய்ய வைத்தார்கள்.
சுற்றம் சூழ தம்பதியர் இப்படி இருந்தார்கள் என்றால், தங்களுக்கான தனிமையில் ஒருவருக்கொருவர் அமைதியையே தத்தெடுத்து கொண்டார்கள்.
விஸ்வா கூட தத்துபித்தென்று காதல் பேசாமல் அமைதியாக இருந்தான்.
மேலும் ஒருவாரம் நகர்ந்திருக்க, ஒருவிடுமுறை தினத்தில் ஷக்தியைப் பார்ப்பதற்காக, மதுரையிலிருந்து விஸ்வாவின் தாத்தா, அப்பத்தா தவிர அனைவரும் வந்திருந்தார்கள்.
சௌந்தரும், கௌரியும் கூட அவர்களோடு வந்திருந்தார்கள்.
அவர்கள் வருவதைக் குறித்த தகவலை விஸ்வாவிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தார்கள். அதைப்பற்றி அவன் எல்லோரும் கூடியிருந்த நேரம் சொல்ல, ஒற்றை ஆளாக, வருபவர்களுக்கு விருந்து தயாரிக்க ரெடியானார் கலைவாணி.
ஆனால், “நீங்களே இப்பதான் சரியாகி இருக்கீங்க ஆன்டி, அதனால உங்களை கஷடப்படுத்திக்க வேணாம். நாம வெளிய ஏற்பாடு பண்ணிக்கலாம்” என்று விஸ்வா அவரைத் தடுத்து விட்டான்.
தமிழரசுவுக்கும் அந்த யோசனையே சரியாகப்பட்டதால், அருகிலிருந்த நல்ல ஹோட்டலில் மதிய உணவிற்கு ஆர்டர் கொடுத்து கொண்டார்கள்.
மறுநாள் காலை பதினோரு மணியளவில் விஸ்வாவின் குடும்பத்தார்கள் வந்திறங்க, களைகட்டியது அந்த வீடு. ஆம்… இத்தனை வருட வாழ்க்கையில் ஒரே நேரத்தில் இத்தனை விருந்தினர்களை கண்டதே இல்லை தமிழரசுவின் வீடு.
வீட்டின் பெரியவர்கள், வந்தவர்களை நல்ல முறையில் உபசரித்து உறவாடினார்கள்.
ஷக்தி கூட, கடந்த முறை விஸ்வா தன் பெற்றோரோடு வந்திருக்கும் போது நடந்து கொண்டது போலில்லாமல், வந்தவர்களின் நலன் விசாரிப்புகளுக்கு எல்லாம், இம்முறை பொறுமையாக பதில் சொன்னாள்.
அவ்வளவு ஏன்? சௌந்தர் அவள் உடல்நிலையைக் குறித்து கேட்டதற்கு கூட அமைதியாக பதில் வந்தது பெண்ணிடமிருந்து.
அதைப் பார்த்து கொண்டிருந்த அத்தனை பேருக்கும் ஆச்சர்யமாக இருந்தது என்றால், விஸ்வாவுக்கு அப்பாடி என்று ஆசுவாசமாக இருந்தது.
ஆமாம்… ‘வந்திருப்பவர்களிடம் ஏதும் ஏடாகூடமாக மனைவி பேசிவிடுவாளோ?’ என்று இவன் பயந்திருக்க, அப்படி நடந்து கொள்ளாமல் பொறுமையாக ஷக்தி நடந்து கொண்டால் சந்தோஷமாகத்தானே இருக்கும்.
சிறிது நேரத்தில் ஷக்தி, அஸ்வினி, பாஸ்கர், அவனின் தங்கை யாழினி, சஞ்சீவ் என்று இளையவர்கள் பட்டாளம் கூட்டணி சேர, கலகலத்தது வீடு.
நண்பகல் பன்னிரெண்டரைக்கு போல இவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவு வர, இயல்பாக விஸ்வா எழும்பி சென்று, உணவைக் கொண்டு வந்தவர்களிடம் அதை எங்கே வைக்க வேண்டும் என்று சொன்னான். வந்தவர்களும் அப்படியே செய்துவிட்டு சென்றார்கள்.
சிறிது நேரத்தில் பால் வேண்டும் என்று கலைவாணி கேட்க, வாங்கி வரக்கிளம்பிய தமிழரசுவைத் தடுத்துவிட்டு, தானே கிளம்பினான் விஸ்வா.
இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த விஸ்வாவின் அம்மா மீனாட்சிக்கு, ஒருவிதமான ஆற்றாமை வந்து உள்ளத்தில் உட்கார்ந்து கொண்டது.
அதுவும் கலைவாணியும், பஞ்சவர்ணமும் மகனை விஸ்வா என்று இயல்பாக அழைத்து பேசியது, சஞ்சீவ், நொடிக்கொரு முறை மகனிடம் மாமா… மாமா… என்று சொந்தம் கொண்டாடியது, இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது, மீனாட்சிக்கு மகன் மீதான உரிமை உணர்வு வேகமாக தலைதூக்கியது.
தன் கைப்பொம்மையை யாரோடும் பகிர்ந்து கொள்ள விரும்பாத குழந்தையின் மனநிலையில் இருந்த மீனாட்சி, சமையலறையில் நின்ற கலைவாணியிடம் சென்று, “உங்க வீட்டுக்காரர் ஷக்தியை கன்வின்ஸ் செய்து எங்க வீட்டுக்கு அனுப்ப கொஞ்சநாள் டைம் கொடுங்கன்னு கேட்டார். ஆனா இவ்வளவு நாளாகியும் ஷக்தியை உங்களால கன்வின்ஸ் செய்ய முடியலையா? இல்ல, உங்களுக்கே அவளை எங்க வீட்டுக்கு அனுப்பி வைக்க மனசில்லையா?” என்று வில்லங்கமாகக் கேட்டார்.
ஆம்... ஆகச்சிறந்த அம்மாக்களுக்குள்ளும் கூட, ஒரு மாமியார் தனம் மறைந்திருக்கும் என்ற உண்மைக்கு, ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாகிப் போனார் மீனாட்சி.
மீனாட்சியின் கேள்வியில் சமைந்து போனது, சமையலறையில் நின்ற கலைவாணி மட்டுமல்ல, தண்ணீர் குடிக்கவேண்டி வந்த ஷக்தியும், பால் வாங்கிக் கொண்டு அங்கே வந்த விஸ்வாவும் தான்.
ஆளுக்கு முந்திக்கொண்டு மீனாட்சிக்கு பதில் சொல்ல ஷக்தி முயல, சட்டென்று அவளைப் பற்றி, எதுவும் சொல்லி விடாதே என்று தடுத்து விட்டார் கலைவாணி.
மகனையும் மருமகளையும் அப்போது அங்கே எதிர்பாராத மீனாட்சி, சற்றே வெலவெலத்துப் போனாலும், ‘நான் என்ன, இல்லாததையா கேட்டுவிட்டேன்?’ என்ற பாவனையில் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
ஏதோ தவறு செய்தவன் விஸ்வா என்பது போல, அவனைப் பார்வையால் எரித்த ஷக்தி, “எல்லாம் இவரால வந்தது. இங்க வந்து, இப்படி இவர் உங்காந்ததாலத் தானே, அவங்க இப்படி எல்லாம் உங்களை பேசிட்டு போறாங்க ம்மா” என்று குதிக்க ஆரம்பித்தாள்.