“அந்த அழகு ஃபோட்டோவைப் பாக்க, அவ்வளவு ஆசையா உனக்கு? இருடா… இருடா … காட்டுறேன்” என்றபடியே ஃபோன் திரையில் ஃபோட்டோவைக் கொண்டு வந்து காட்டிய விஸ்வா, “பாத்துட்டியா? இப்போ சொல்லு, யாரு பார்டர் லைனைத் தாண்டுனது?” என்று கிண்டலாகக் கேட்டான்.
ஃபோட்டோவைப் பார்த்து தான் சஞ்சீவுக்கு, அது தெரியவேண்டுமா என்ன?
விஸ்வாவின் கழுத்தை கட்டிக்கொண்டு, காலை அவன்மீது தூக்கிப் போட்டபடி தூங்கிக் கொண்டிருந்த தன் புகைப்படத்தைப் பார்த்த சஞ்சீவிற்கு, மானம் கப்பலேறி தூரதேசம் போனது போலிருக்க, “ஃபோட்டோவை டெலிட் பண்ணிடுங்க” என்றான் வேகமாக.
“இப்படி மொட்டையா சொல்லாம, டெலிட் பண்ணிடுங்க மாமான்னு… ப்ளீஸ் பண்ணிச் சொல்லு, பண்ணுறேன்.” வேண்டுமென்றே கெத்து காட்டினான் விஸ்வா.
“அது முடியாது.” விரைப்பாகச் சொன்னான் சஞ்சீவ்.
“அப்போ இந்த ஃபோட்டோ தான், இன்னைக்கு என்னோட ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மச்சான்” என்றபடியே விஸ்வா ஃபோனில் ஸ்டேட்டஸ் வைக்கும் முயற்சியில் இறங்கினான்.
“ஹ்ம்ம்… டெலிட் பண்ணிடுங்க மாமா.” சட்டென்று இறங்கிவர மனமின்றி, சஞ்சீவ் லேசாக முணுமுணுத்தான்.
“எனக்கு கேக்கல, சத்தமா சொல்லுங்க, மச்சான்.” வேண்டுமென்றே சஞ்சீவை விஸ்வா சீண்ட, அதேபோல செய்த சஞ்சீவ், “இப்பவே டெலிட் செய்துடுங்க மாமா” என்றான் விவரமாக.
“இதை வச்சு உன்னை, இன்னும் என்னல்லாம் செய்ய வைக்கணும், இப்போ போய் யாராவது இதை டெலிட் பண்ணுவாங்களா?” என்ற விஸ்வா, “அப்பிடியே வெளிய ஒரு வாக் போய்ட்டு வருவோம், வா” என்றும் அழைக்க, நேர்ந்து விட்ட ஆடாக, அவன் பின்னால் வேறுவழியில்லாமல் சென்றான் சஞ்சீவ்.
அன்று மட்டுமல்லாமல் பின்வந்த நாட்களிலும், அது தொடர, முதல்நாள் போலில்லாமல் விருப்பத்தோடே செல்ல ஆரம்பித்தான் சஞ்சீவ்.
ஆம்… அத்தனை ரசனைக்குரியவனாக இருந்தான் விஸ்வா.
தன் வயதுக்கேற்றார் போல, ரசனைகளுக்கு தகுந்தாற்போல் போல பேசிய விஸ்வாவை அத்தனை பிடித்து போயிற்று சஞ்சீவிற்கு.
மொத்தத்தில் பேசிப்பேசியே சஞ்சீவை தன்பக்கம் இழுத்து விட்டான் விஸ்வா.
போதாததற்கு, ஃப்ளாட்டில் உள்ள அவன் வயது சிறுவர்கள், “யாருடா அந்த ஹேண்ட்ஸம் அண்ணா” என்று கேட்டு வைக்க, “எங்க மாமா” என்று சொல்ல, அத்தனை பெருமையாக இருந்தது சஞ்சீவுக்கு.
இப்போதெல்லாம், விஸ்வா மறந்தாலும், தினமும் இருள் பிரியாத அந்த அதிகாலை வேளையில் வெளியே செல்ல சஞ்சீவ் மறப்பதில்லை.
நேற்றும் ஒரு ஃபோட்டோ ஷுட்டுக்கு போய்விட்டு, நள்ளிரவில் வந்து, விஸ்வா தூங்கியிருக்க, வெளியே செல்வதற்காகத் தான் அழைத்து கொண்டிருக்கிறான் சஞ்சீவ்.
“ம்ம்… போலாமா?” என்றபடியே, காலைநேர ஓட்டத்திற்கு பொருத்தமான உடையை அணிந்து, அறையை விட்டு வெளியே வந்த விஸ்வாவின் கால்கள், டைனிங் செயரில் காஃபியும் கையுமாக அமர்ந்திருந்த மனைவியைக் காணவும் தன்னியல்பாக அவள் பக்கமாக சென்று நின்றது.
இந்த ஒரு மாதத்தில், இன்று தான் கணவன் வீட்டிலிருக்கும் போது வெளியே அமர்ந்திருக்கிறாள் ஷக்தி.
வீட்டிலிருப்பவர்களுக்கும், ஷக்தி விஸ்வாவோடு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறாள் என்று தெரிந்தும், ஏதும் சொல்லமுடியாத நிலையிலேயே இருந்தார்கள்.
இப்போதுதான் பூரணமாக குணமாகிக் கொண்டுவந்த ஷக்தியின் உடல்நிலையின் காரணமாக, யாராலும் அவளை கடிந்து கொள்ளவும் முடியவில்லை.
அதுவுமில்லாமல், ஒன்றைச் செய் என்று கட்டாயப்படுத்தினால், விருப்பத்திற்கு பதில் வெறுப்பு தான் வரும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது.
மனைவியின் அருகில் வந்த விஸ்வா, அவளை நன்றாக பார்க்க வசதியாக, அவள் எதிரில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து, “எப்படி இருக்குற ஷக்தி?” என்றான் ஆழ்ந்த குரலில்.
“ஹ்ம்ம்… இருக்கேன்.” மெல்லிய குரலில் பதில் வந்துவிட்டது ஷக்தியிடமிருந்து. அதற்கே, வானத்துக்கும் பூமிக்குமாக ஆனந்தத்தில் குதித்தது விஸ்வாவின் மனது.
இந்த ஒருமாத காலமாக, திரைமறைவிலிருந்து என்றாலும் விஸ்வாவின் நடவடிக்கைகளை உள்வாங்கி கொண்டுதானே இருக்கிறாள் ஷக்தி.
எந்தவித அலட்டலும் இல்லாமல், தன் குடும்பத்தோடு இயல்பாக பழகிய விஸ்வா, ஷக்தியின் மனதை லேசாக அசைத்துப் பார்க்கிறான்.
விஸ்வா டைனிங் டேபிளில் அமரவும், அவனுக்கும், ஒரு கப்பில் டீயை கொண்டு வந்து கலைவாணி கொடுத்தார். அதைக் குடித்தபடியே, ஆதியோடு அந்தமாக மனைவியை பார்வையிட்டது விஸ்வாவின் கண்கள்.
முகத்தில் தழும்புகள், முழுவதுமாக மறைந்திருக்கவில்லை. ஆனால், அந்த தழும்பு கூட மனைவிக்கு கூடுதல் அழகைத் தந்தது போலிருந்தது அந்த கணவனுக்கு.
கணவனின் பார்வைகள், அவஸ்தையைக் கூட்ட, எழும்பி சென்றுவிடலாமா? என்ற எண்ணத்தில் இருந்தவளிடம், “ஷக்தி, நீ தான் நல்லாயிட்ட ல்ல, எங்க கூட ஜாகிங் வர்றியா? மாமா கூடப் போனா செம ஜாலியா இருக்கும்” என்று அழைத்தான் சஞ்சீவ்.
அவனோடு சென்றால் ஜாலியாக இருக்கும் என்று அவள் அறிந்த விஷயம் தானே.
தம்பியின் கேள்விக்கு பதில் சொல்லுவதற்காக, கையிலிருந்த டீ கப்பை கீழே வைத்தவள், “என் சோட்டுபையன் இப்பல்லாம் ரொம்ப மாறிட்டானே?” என்றாள் இருபொருள் வரும்படி.
“அப்பா கூட வாக்கிங் போகாதவன், மாமா கூட ஜாகிங் போறனே, அதைச் சொல்லுறியா?” சிரித்தபடி கேட்ட சஞ்சீவ், “அப்பா ஓல்ட், அவர்கூட போனா, நமக்கும் வயசான மாதிரியே ஃபீலாகும். அதே, மாமா கூட போனா, சும்மா எனர்ஜிட்டிக்கா இருக்குதுல்ல” என்று தமக்கையின் காதில் கிசுகிசுத்தான்.
“மம்மி ஜி… உங்க ஹஸ்ஸை இந்த சோட்டுபையன் ஓல்ட் ன்னு சொல்லுறான்.” கிச்சனில் நிற்கும் அன்னைக்கு கேட்கும் விதம், சத்தமாக ஷக்தி சொன்னாள். அதை எதிர்பார்க்காத சஞ்சீவ் அவசரமாக தமக்கையின் வாயைப் பொத்த முயல, அங்கே அழகானதொரு தள்ளுமுள்ளு நிகழ்ந்தது.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட விஸ்வா, தன் டீ கப்பை ஷக்தியின் பக்கத்தில் வைத்துவிட்டு, அவளுடையதை எடுத்து ஆனந்தமாக குடிக்க ஆரம்பித்து விட்டான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு, கலகலப்பாக கேட்ட மகளின் சத்தத்தில், சந்தோசமாகிப் போன கலைவாணி, “அவனைப் பிடிச்சு வை ஷக்தி மா, இதோ… நான் வரேன்” என்று அங்கிருந்தபடியே குரல் கொடுத்தார்.
“வாங்க மாமா, அம்மா வர்றதுக்கு முன்னாடி நாம எஸ்ஸாகிடலாம்.” பரபரப்பாக சொல்லிய சஞ்சீவ், விஸ்வாவை யோசனையாகப் பார்த்து,
“மாமா… இது ஷக்தியோட டீ கப். நீங்க ரெட் கலர் தானே வச்சிருந்தீங்க, அவளோடது ப்ளூ கலர்” என்று சத்தமாகச் சொல்லியவன், “அய்யே… நீங்க குடிக்கிறது எச்சில் டீ” என்றும் முகம் சுழித்தான்.
கப்பில் நடந்த இந்த மாறாட்டம் தெரியாமல் டீயை எடுத்து குடித்துவிட்ட ஷக்தி, தம்பி கூறிய தகவலில் கப்பை அடையாளம் கண்டு, விஸ்வாவை முறைத்து பார்த்தாள்.
அதை கண்டுகொள்ளாத விஸ்வாவின் மனது, ‘இது எச்சில் இல்லை, அமிர்தம்… தேவாமிர்த்தம்… இதெல்லாம் தெரியணும்னா உனக்கும் கல்யாணம் ஆகணும் சோட்டுபையா’ என்று மனைவியின் பாணியில் மைத்துனனை அழைத்து முணுமுணுத்துக் கொண்டது.
மேலும் இரண்டு நாட்கள் கழித்து, வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள் ஷக்தி.
மதுரையில், விஸ்வாவின் ஸ்டுடியோவிற்கு வந்து ஆர்டர் கொடுத்தவர்கள், “கண்டிப்பாக தங்களுக்கு விஸ்வா தான் ஃபோட்டோ எடுக்க வரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டதால், அவனும் மதுரைக்கு சென்றிருந்தான்.
ஆம்.. மதுரையில் அவனுடைய ஸ்டுடியோவில் ஏற்கனவே தன்னோடு வேலை பார்த்த நபரோடு, இன்னும் ஒருவரை புதிதாக பணியில் அமர்த்தியிருந்தான் விஸ்வா.
விஸ்வா அங்கில்லாத இந்த ஒருமாதமும், அவர்கள் இருவரும் தான் வரும் ஆர்டர்களுக்கு புகைப்படம் எடுத்து தந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படியிருந்தும், விஸ்வா தான், தங்கள் இல்லத் திருமணத்தை புகைப்படமாக பதிவுசெய்து தரவேண்டும் என்று ஒரு வாடிக்கையாளர் கேட்க, மறுக்காமல் சென்றிருந்தான் விஸ்வா.
இப்போது இருநாட்களாக தன்னிடம் கண்ணாமூச்சி ஆடாத மனைவியிடம், தான் மதுரைக்கு போகும் விஷயத்தை விஸ்வா சொல்ல, பதிலேதும் சொல்லாமல், பெண்ணவளின் இதழ்கள் ஏளனச் சிரிப்பில் வளைந்தது.
‘இப்படித்தான், உனக்காக நீ இருக்குமிடத்திலேயே இருப்பேனென்று ஜம்பம் அடிப்பீங்கடா. ஆனா கொஞ்ச நாள் கூட உங்களால தாக்குபிடிக்க முடியாது. ஏதாவது ஒன்னை சாக்கா வச்சு, பறந்து போய்டுவீங்கன்னு எங்களுக்கு தெரியாதா, என்ன?’ என்ற தகவலைச் சொல்லியது அந்த சிரிப்பு.
‘இந்த எண்ணத்திற்கு வார்த்தையால் அல்லாமல், செயலால் பதில் சொல்ல வேண்டும்’ என்று முடிவு செய்து கொண்டு கிளம்பிச் சென்ற விஸ்வா, மறுநாள் சாயங்காலம் வேலை முடிய, அங்கிருந்து கிளம்பி நள்ளிரவில் சென்னைக்கு வந்து சேர்ந்து விட்டான்.
தன்னோடே பயணிக்கும் வீட்டு சாவி கொண்டு கதவைத் திறந்து உள்ளே வந்தவன், ‘நாளைக்கு காலையில் என்னைப் பார்க்கும் போது, அம்மணியின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?’ என்று எண்ணமிட்டபடியே தன் அறைக்குள் நுழைந்தான். அங்கே கட்டிலில் ஒற்றை ரோஜாவாக நித்திரை செய்து கொண்டிருந்த ஷக்தியைக் கண்டு, அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று வந்தான் விஸ்வா.
ஆம்… தன் மாமா ஊரில் இல்லாததால், அப்பத்தாவோடு கதை பேசியபடியே படுத்திருந்த சஞ்சீவ் தூங்கிவிட, மதுரைக்கு சென்ற விஸ்வா, இப்போதெல்லாம் திரும்பி வரப்போவதில்லை என்ற எண்ணத்தில், இங்கே வந்து படுத்திருந்தாள் ஷக்தி.
‘தான் அவளுக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று இரவோடிரவாக ஓடிவந்தால், அவளல்லவா தனக்கு ஆனந்த அதிர்ச்சியை தந்துவிட்டாள்!’
உல்லாசமாக எண்ணிக்கொண்ட விஸ்வா, சத்தமெழுப்பாமல் அறைக்கதவை மூடிவிட்டு, மனைவிக்கு அருகே கட்டிலில் அமர்ந்தான்.
திருமணமாகி கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு, தனிமையில் காணக்கிடைத்த மனைவியின் பூ முகத்தை கண்களாலேயே தாகம் தீர பருகினான் விஸ்வா.
கைகளிலும் கன்னத்திலும் இருக்கும் அம்மை தழும்புகள், அவள் அந்நாட்களில் அனுபவித்திருக்கும் வேதனையைக் கணவனுக்கு சொல்ல, அதைத் தொட்டு தடவிப் பார்க்க கைகள் பரபரத்தது அவனுக்கு.
‘அப்படி அவன் செய்து மனைவி முழித்து விட்டால், அந்த இடமே ரணகளமாகிப் போக வாய்ப்புகள் அதிகம்’ என்று புரிந்ததால், அமைதியாக மனைவியின் அருகே படுத்துக்கொண்டான் விஸ்வா.
மனைவியின் முகத்தோடு முகம் நெருங்கி, அவள் மூச்சுக்காற்று வாங்கி சுவாசித்தவனுள் இருந்த காதலன் பலமாக முழித்துக் கொள்ள, ‘பாத்துக்கலாம்’ என்ற தைரியத்தில், ஷக்தியின் கையை எடுத்து தன் தோளைச்சுற்றி போட்டுக்கொண்டான்.
கணவனின் தொடுகையில் லேசாக அசைந்த ஷக்தி, “அப்பத்தா…” என்று சிணுங்கியபடியே விஸ்வாவோடு இன்னும் நெருங்க, உன்மத்தம் கொண்டவன் போல பெண்ணவளின் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான்.
“லவ் யூ அப்பத்தா.” உறக்கத்தில் முணுமுணுத்தபடியே, காளையவன் கன்னத்தில் பெண்ணவளும் பதில் முத்தம் வைத்தாள்.
அந்த ஒற்றை முத்தத்தில் ஜிவ்வென்று வானத்தில் பறந்தவனின் மனது, “டேய்… தூங்கிட்டு இருக்கிற பொண்ணை என்னடா பண்ணுற?” என்று அதட்டியது.
“அவ எம்பொண்டாட்டி… நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன், உன் வேலையைப் பாத்துட்டு நீ போய்ட்டே இரு.” வெட்டி நியாயம் பேசினான் விஸ்வா.
“அப்படியா ராசா? நீ இப்போ செய்யுறதை எல்லாம், உன் போண்டா… டீ முழிச்சிட்டு இருக்கும் போது செய். அப்போ தெரியும் சங்கதி.” மனம் நையாண்டி பேசியது.
‘அதையும் பாத்துடலாம்’ என்ற எண்ணத்தில், மனைவியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் விஸ்வஜித்.