அத்தியாயம் 15.

ஹைதராபாத்தில் தங்களது வீட்டு ஹாலில், நியூஸ் பேப்பரும் கையுமாக உட்கார்ந்திருந்த கணவரிடம், “நம்ம ஷக்திக்கு சிக்கன்பாக்ஸ் போட்டுருக்குதாங்க. அண்ணி ஃபோன் பண்ணிச் சொன்னாங்க” என்றார் வீட்டுக்குள்ளிருந்து வந்த கௌரி.

மனைவியின் வார்த்தைக்கு பதிலேதும் சொல்லாமல், கண்களை செய்தித்தாளிலும், சிந்தனையை வேறு ஏதோ யோசனையிலும் சௌந்தர் பதித்திருக்க, கணவரின் தோளைப் பற்றி லேசாக உலுக்கிய கௌரி, “என்னங்க… நான் சொல்லுறது கேக்குதா?” என்றார்.

“ஹாங்… என்னம்மா?” கனவிலிருந்து விழித்தெழுந்தது போல கேட்டார் சௌந்தர்.

கணவரின் கைகளிலிருந்த நியூஸ் பேப்பரை வாங்கி மடித்து, தள்ளிவைத்த கௌரி, மறுபடியும் தான் ஏற்கனவே சொன்ன தகவலைக் கூறினார்.

“ம்ம்… தெரியும் ம்மா. மீனாட்சி எனக்கும் ஃபோன் பண்ணி சொன்னா” என்றார் சௌந்தர் கவலையான குரலில்.

ஆம், ஷக்தியை தங்களோடு அழைத்து வரச் சென்னை சென்றதையும், அவள் வர மறுத்ததையும், அதைத் தொடர்ந்த தங்கள் மகனின் முடிவையும், நேற்றே தங்கை ஃபோன் செய்து கதைக் கதையாக சொல்லியிருத்ததில் சௌந்தருக்கு வந்திருந்த சந்தோஷம், அதே தங்கை, இன்று காலை ஷக்திக்கு உடம்புக்கு சரியில்லை என்று சொன்ன தகவலில் பறந்து போயிருந்தது.

இதுநாள்வரை தனக்கொரு குழந்தை இருந்தும், இல்லை என்ற மனநிலையில் இருந்த சௌந்தருக்கு, தன் மகளைக் கண்டுகொண்ட பிறகு இயல்பாக வரும் பிள்ளைப் பாசத்தை, எந்த அணை போட்டும் தடுக்க முடியவில்லை.

அதிலும் ஷக்திக்கு உடல்நிலை சரியில்லை என்ற விஷயம் தெரிந்த நேரத்திலிருந்து, காற்றெனப் பறந்து சென்று, மகளைப் பார்த்துவிட வேண்டும் என்று சௌந்தருக்கு மனம் துடிக்கிறது.

ஆனால் மருமகனோ, “இங்கிருந்து யாரும் ஷக்தியை பார்க்க வரவேண்டாம்” என்று கண்டிப்பாக உத்தரவே போட்டிருக்கிறானாம்.

காரணம் வேறொன்றுமில்லையாம். அவனின் மனைவி உடல்நலம் சரியில்லாத இந்த நேரத்தில், மனம் அமைதியாக உணர வேண்டுமாம். இவர்களைப் பார்த்தால் தேவையில்லாமல் மனதைப் போட்டு குழப்பிக் கொள்வாளாம். அதனால் யாருமே இப்போது சென்னை பக்கமே தலைவைத்து படுக்கக்கூடாதாம்.

மகள் மீதான மருமகனின் அக்கறையில், மனம் ஆனந்தம் கொள்ளத்தான் செய்தது சௌந்தருக்கு.

ஆனாலும், ஒரு தகப்பனாக, உடல்நலம் சரியில்லாத தன் மகளை, உரிமையாக சென்று பார்க்க முடியாத அளவுக்கு, தன் கால்கள் தளைகளால் கட்டப்பட்டிருப்பதை கண்டு மனம் வெதும்பி போனார் மனிதர்.

அதிலும், தகப்பன் என்று தெரிந்த பின்னும், மகள் தன்னை தள்ளி நிறுத்துவது உயிர் வேதனையாக இருந்தது அவருக்கு.

‘இப்போதைய பாசமும், வேகமும், அன்றல்லவா எனக்கு இருந்திருக்க வேண்டும்?’ தன்னைத்தானே நொந்து கொண்டார் சௌந்தர்.

‘அன்பு இருந்திருந்தால், ஏழுகடல், ஏழு மலை, தடையாக இருந்திருந்தால் கூட, அதையெல்லாம் துச்சமாகத் தாண்டி, எனக்காக வந்திருப்பீங்கன்னு என்மகள் சொன்னாளே, அது எவ்வளவு சத்தியமான வார்த்தை.’

‘அந்த தமிழரசுவால் என் மகளுக்காக, அவள் மீது வைத்திருந்த பாசத்திற்காக, சொந்த ஊர், உற்றார், உறவினர், சொத்துபத்து என்று அத்தனையையும் துச்சமென மதித்து ஊரைவிட்டே போக முடிந்தது என்றால், ஏன், என்னால் என் மகளுக்காக என் தயக்கத்தை உதறிவிட்டு வெளியே வரமுடியவில்லை?’

 ‘பிறந்த குழந்தையை பெண் துணையின்றி வளர்கத் தான் தைரியமில்லை, வளர்த்தவர்களிடம் சென்று, என் குழந்தையை வளர்த்து என்னிடமே கொடுத்துவிடுங்கள் என்று சொல்லவுமா தைரியமில்லாமல் போனது?’

‘இல்லை, வெற்றுக் காகிதமாக இருந்த என் பிள்ளை மனதில், நான் உன் தகப்பன் என்று பதியவைக்கவுமா எனக்கு நேரமில்லாமல் போனது?’

‘கௌரி வந்ததும், என் பொறுப்பை அவள் தோளில் இறக்கி வைக்க முடிவு செய்து, அவளை அழைத்து கொண்டு தமிழரசுவிடம் ஓடினேனே, அப்படியானால் நான் சுயநலவாதியா?’

‘இப்போதும் என் மகளை சரியாக அணுகத் தெரியாமல், அவள் வாழ்க்கையை பிரச்சினையில் தள்ளிவிட்டிருக்கேனே, நானெல்லாம் ஒரு நல்ல தகப்பனா?’

குழப்பம்… குழப்பம்… மனமெங்கும் எல்லையில்லாத குழப்பம் சூழ்ந்து நின்றது சௌந்தருக்கு.

தான் சொன்ன தகவலுக்கு பதில் சொல்லிவிட்டு, மறுபடியும் மௌனமாக சிந்தனையில் ஆழ்ந்து போன கணவனைக் கவலையாகப் பார்த்தார் கௌரி.

  தன் கணவனின் சிந்தனை முழுவதும் இப்போது மகளிடம் தான் இருக்குமென்று அனுமானித்தவராக, “சீக்கிரம் ஷக்திக்கு குணமாகிடும் ங்க, கவலப்படாதீங்க” என்று அவரை ஆறுதல்படுத்தினார்.

“ம்ம்…” என்று தலையாட்டிய சௌந்தர், சிறிது நேர அமைதிக்குப் பிறகு, “நான் தப்பானவனா கௌரி?” என்றார் மனைவியின் கைகளைப் பற்றி தன் அருகே அமர வைத்தபடியே.

அன்றைய மகளின் பேச்சுக்குப் பிறகு, அடிக்கடி தன் மனதில் எழும் இந்தக் கேள்வியை மனைவியிடம் கேட்டேவிட்டார் சௌந்தர்.

“இந்த உலகத்துல எல்லாருமே நூறு சதவீதம் நல்லவங்களா இருந்துட முடியாதுங்க. ஏதாவது ஒரு இடத்திலயாவது தங்களையும் மீறி எல்லாரும் தவறியிருக்கத்தான் செய்வாங்க. அதனாலயே அவங்க தப்பானவங்க கிடையாது.”

கணவன் மனம் வருந்துவது பொறுக்காமல் அவரை சமாதானப்படுத்துவது போல கூறிய கௌரி, “நடந்ததை எதையுமே நம்மால மாத்தமுடியாதுங்க, ஆனா, இனி நடக்க இருக்குறதை நம்மால சரியா செய்ய முடியும்” என்றார் கணவனின் கைகளை தட்டிக்கொடுத்தபடியே.

“ஷக்தி என்னை அப்பான்னு ஏத்துக்கவே மாட்டாளா கௌரி?” ஏதோ மனைவிக்கு அந்த கேள்விக்கு விடை தெரியும் என்பது போல ஏக்கத்தோடு கேட்டார் சௌந்தர்.

“கண்டிப்பா ஷக்தியோட மனசு ஒருநாள் உங்களை அப்பாவா ஏத்துக்கும். ஆனா, அந்த நாளுக்காக நாம காத்திருக்குறதை தவிர, வேற வழியே இல்லைங்க.”

 அமைதியாக கௌரி சொல்ல, அதை ஆமோதிப்பது போல கேட்டுக்கொண்டிருந்தார் சௌந்தர்.

******************************

தமிழரசுவின் வீடு இயல்புக்கு வர கிட்டத்தட்ட ஒருமாத காலமாகி இருந்தது.

 ஷக்திக்கு, அம்மைமுத்து முகம் தவிர உடம்பு முழுவதும், வஞ்சமே இல்லாமல் கொஞ்சம் அதிகமாகவே அள்ளி வைத்திருந்தது.

அதற்காக முகத்தில் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் உடம்பில் இருந்ததை ஒப்பிட்டு பார்க்கும் போது, அங்கங்கே ஒன்றிரெண்டு முத்துக்களே முகத்தில்.

ஆரம்ப நாட்களில், காய்ச்சல் மற்றும் உடல் வேதனையால் துவண்டு போகாமலிருக்க, மருத்துவர் பரிந்துரை செய்திருந்த மருந்துகள் ஷக்திக்கு உதவியது.

பஞ்சவர்ணமும், கலைவாணியும் ஷக்தியை கண்ணின்மணி போல கவனித்து பார்த்து கொண்டார்கள்.

அதிலும் கலைவாணி எந்நேரமும் மகளிடமே குடியிருந்தார் என்று தான் சொல்லவேண்டும்.

யாரும் வரவேண்டாமென்று விஸ்வா சொல்லியதையும் மீறி, பாஸ்கர் மூலம் காரில், தங்கள் தோட்டத்து இளநீரையும் நுங்கையும் கொண்டு வந்து இறக்கியிருந்தார்கள் விஸ்வாவின் பெற்றோர்கள்.

கூடவே விஸ்வாவின் துணிமணிகளும் ஒட்டிக்கொண்டு வந்து சேர்ந்திருந்தன.

“எதுக்கு தம்பி அங்கயிருந்து மெனக்கெட்டு இதையெல்லாம் கொண்டு வந்தீங்க?” என்று பாஸ்கரிடம், தமிழரசு கேட்டிருந்தாலும், அத்தனையும் ஷக்திக்கு ரொம்பவே உபயோகப்பட்டது.

ஆம்… அந்த இளநீரும், நுங்குமே சிலநாட்கள் முழுநேர உணவாகிப்போனது ஷக்திக்கு.

மிகவும் கொடுமையான நாட்கள் அவை. வெறும் தரையில் மெல்லிய வெள்ளைத் துணி விரித்து, அதில் தான் படுக்கை ஷக்திக்கு.

அணிந்திருந்த உடைகளும் தளர்வான மெல்லிய பருத்தி ஆடைகளே. அந்த நிலையில் யாரையும் பார்க்க ஷக்தி விருப்பப்படாததால், கலைவாணி, பஞ்சவர்ணம் தவிர யாருக்கும் ஷக்தியிருந்த அறையினுள் அனுமதி இல்லை.

மனைவியை பார்க்க வேண்டும் என்று விஸ்வாவிற்கு உள்ளுக்குள் துடித்தாலும், அவளின் மன உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஒதுங்கியே இருந்தான்.

பார்சல் சர்வீஸில் வந்த விஸ்வாவின் பைக்கும், விஸ்வா சென்னைக்கு வந்த இரண்டாம் நாள் கிடைத்திருக்க, அன்றிலிருந்து நண்பனின் ஸ்டுடியோவிற்கு செல்ல ஆரம்பித்திருந்தான் விஸ்வா.

தன் நோயைக் காரணம் காட்டி, ஷக்தி தான் விஸ்வாவிடமிருந்து ஒதுங்கினாளேத் தவிர, பஞ்சவர்ணம், கலைவாணியிடம் நல்லதொரு நட்பு உருவாகியிருந்தது விஸ்வாவுக்கு.

அந்த நட்பு, ஷக்தியைத் தவிர, தங்களுக்கு வேறு குழந்தை வேண்டாம் என்று கலைவாணி செய்த செயலை விஸ்வாவிடம், பஞ்சவர்ணத்தை சொல்ல வைக்க, பிரம்மித்து போன விஸ்வாவுக்கு, தமிழரசு தம்பதியர் மீது இன்னும் கூடுதல் மரியாதை உண்டானது.

தமிழரசு, தன் வீட்டு பெண்களைப் போல கலகலவென்று விஸ்வாவிடம் பேசாவிட்டாலும், அவருமே மருமகனைத் தாங்கதான் செய்தார்.

“நான் இந்த உடம்பில், இத்தனை நாட்கள் என் ஆதிக்கத்தை செலுத்தி கொண்டிருந்தேன்” என்ற அடையாளத்தை ஷக்தியின் உடம்பில் தழும்புகளாக அம்மைநோய் விட்டுச் சென்றிருக்க, பதினோரு நாட்கள் கழித்து முறைப்படி தலைக்கு குளித்து, அந்த அறைக்குள் மட்டுமே நடமாடிக் கொண்டிருந்தாள் ஷக்தி.

 தழும்புகள் எல்லாம் ஓரளவிற்கு மறைந்த பிறகே வேலைக்கு சென்றால் போதும் என்று முடிவெடுத்து கொண்டதால், அறையிலேயே தான் அம்மணியின் வாசம்.

  விஸ்வா இல்லாவிட்டால் ஒருவேளை அறையை விட்டு வெளியே வந்திருப்பாளாக இருக்கும்.

ஷக்தி நோயிலிருந்து விடுபட்டு எழும்ப, கலைவாணி முத்து கண்டு படுத்து விட்டார். ஆனால் ஷக்தி அளவுக்கு அதிகம் இல்லை.

நண்பனோடு ஃபோட்டோ ஷுட் போய்விட்டு, சில நேரங்களில் நள்ளிரவில் வரும் விஸ்வாவிற்கு, பெரும்பாலும் கதவு திறந்து விடுவது கலைவாணி தான்.

 அவருக்கே உடல்நிலை சரியில்லாமல் போக, வேலை முடிந்து எந்நேரம் திரும்பி வீட்டுக்கு வந்தாலும், காத்திருப்பின்றி வீட்டுக்குள் வருவதற்காக, வீட்டின் இன்னொரு சாவியை விஸ்வாவிடம் கொடுத்து வைத்தார் தமிழரசு.

இப்போது, எந்நேரம் வந்தாலும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் தானே கதவை திறந்து வருகிறான் விஸ்வா.

கலைவாணிக்கும் அம்மை விலகி, தலைக்கு குளித்து என்று, அந்த வீடு இயல்புக்கு வர, கிட்டத்தட்ட ஒருமாத காலமாகிவிட்டது.

இந்த ஒரு மாத காலமும் சஞ்சீவ் தான், விஸ்வாவோடு அறையில் இருக்கிறான். ஆனால் முதல்நாள் இருந்தது போல கடுவன் பூனையாக முகத்தை வைத்துக் கொண்டல்ல…

“மாமா… நான் எப்பவோ புறப்பட்டு ரூமை விட்டு வெளியே வந்தாச்சு, நீங்க இன்னுமா ரெடியாகலை?”

தங்கள் ரூம் வாசலில் நின்று கொண்டு சஞ்சீவ் கத்த, “அவசரத்துக்கு இங்க கூட போகவிடமாட்டியா டா” என்று கேட்டு கொண்டே பாத்ரூம் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் விஸ்வா.

ஹஹ… விஸ்வாவை வாயார மாமா என்றழைத்தது சாட்ஷாத் நம் சஞ்சீவ் தான். முதலில் விஸ்வாவின் கட்டளைக்காக மாமா என்று அழைத்தவன், இப்போது விரும்பியேச் சொல்கிறான்.

அன்று, விஸ்வா மீது ஒய்யாரமாக கையையும் காலையும் தூக்கிப் போட்டுக்கொண்டு தூங்கிய சஞ்சீவ், கண்விழிக்கும் வரை படுக்கையிலிருந்து எழும்பாமல் தானும் படுத்திருந்தான் விஸ்வா.

புன்னகையோடு தூக்கம் விழித்த சஞ்சீவுக்கு, தான் யார் மீது கையையும் காலையும் போட்டுக் கொண்டு தூங்கியிருக்கிறோம் என்பது புரியவும், நெருப்பைத் தொட்டது போலத் துள்ளிக்குதித்து விலகினான்.

படுக்கைக்கு நடுவே அவன் வைத்திருந்த தலையணைகள் அங்கங்கே சிதறி அவனைப் பார்த்து கேலியாகச் சிரிப்பது போலிருக்க, பக்கத்தில் இருந்த விஸ்வாவோ, உண்மையாகவே சஞ்சீவைப் பார்த்து கேலியாக சிரித்து, புருவத்தை ஏற்றியிறக்கினான்.

“நீ… நீங்க என் சைட்ல வந்து ஏன் படுத்தீங்க? அதான் இப்படி…” என்று முழுவதும் முடிக்காமல், பழியை விஸ்வாவின் மீது தூக்கிப் போட்டான் சஞ்சீவ்.

“யாரு? நான் உன் பக்கம் வந்தேனா?”

“ஆமா.”

“யப்பா சாமி… பொய்யைச் சொன்னாலும் கொஞ்சம் பொருந்தச் சொல்லணும் டா” என்றவன், “இல்ல, நீதான் என்பக்கம் வந்தன்னு ப்ரூஃப் பண்ணுனா என்னடா பண்ணுவ?” என்றான் சவாலாக.

“மொதல்ல ப்ரூஃப் பண்ணுங்க, அப்புறம் பாத்துக்கலாம்.”

‘இவன் என்ன செய்துவிட போகிறான்?’ என்ற எண்ணத்தில் கெத்தாக சஞ்சீவ் சொல்ல, தன்னருகே இருந்த ஃபோனை எடுத்து, சஞ்சீவின் முன்னால் அப்படியும் இப்படியுமாக ஆட்டினான் விஸ்வா.

விஸ்வாவின் செயலிலேயே அவன் செய்து வைத்திருப்பது சஞ்சீவுக்கு புரிந்து விட, அதிர்ந்து போனவன், “ஃபோட்டோ எடுத்து வச்சிருக்கீங்களா?” என்று கேட்டுக்கொண்டே விஸ்வாவின் கைகளிலிருந்து ஃபோனை பிடுங்க முயற்சி செய்தான்.